யுக்ரேன் பற்றி
பூட்டின் ஆற்றிய உரை
2022 பெப்ரவரி 21ம் திகதி யுக்ரேனில் “விசேட நடவடிக்கை” எடுக்கும் தறுவாயில் ரஷ்ய அதிபர் பூட்டின் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு அவரது அதிகாரபூர்வமான இணையத்தளத்தில் முழுமையாக இடம்பெற்றுள்ளது: (http://en.kremlin.ru/events/president/news/67828). அவரது கூற்றுகள் சிலவும், அவை பற்றிய குறிப்புகளும் கீழே காணப்படுகின்றன:
கூற்று 1: “நினைவுக்கு எட்டாத காலம்தொட்டு ரஷ்ய நிலம் என வரலாற்றில் அறியப்பட்ட ஆள்புலத்தின் தென்மேற்கில் வாழ்ந்த மக்கள் தங்களை ரஷ்யர்கள் என்றும், வைதீக கிருத்துவர்கள் என்றும் குறிப்பிட்டு வந்தார்கள். 17ம் நூற்றாண்டுக்கு முந்திய கதையும் பிந்திய கதையும் அதுவே. அந்த ஆள்புலத்தில் ஒரு பகுதி 17ம் நூற்றாண்டில் திரும்பவும் ரஷ்ய அரசுடன் இணைந்துகொண்டது.”
குறிப்பு: யுக்ரேனிய ஆள்புலத்தை “ரஷ்ய நிலம்” எனவும், அங்கு வாழ்ந்த மக்கள் தங்களை ரஷ்யர்கள் என்று குறிப்பிட்டனர் எனவும் பூட்டின் தெரிவிக்கிறார். வரலாற்றுத் தரவுகளின்படி யுக்ரேன் எனப்படும் ஆள்புலம் 7ம் நூற்றாண்டில் வேர்விட்டது. 16ம் நூற்றாண்டு வரை மங்கோலியர், லிதுவேனியர், போலாந்தியர்… முதலியோரால் அது துண்டாடப்பட்டு, கட்டியாளப்பட்டது. 17ம் நூற்றாண்டில் யுக்ரேன் திரும்பவும் பங்குபோடப்பட்டு, மேற்புலத்தை ஆஸ்திரிய-ஹங்கேரிய பேரரசும், கீழ்ப்புலத்தை ரஷ்யப் பேரரசும் பற்றிக்கொண்டன. 17ம் நூற்றாண்டில் யுக்ரேனிய ஆள்புலம் ரஷ்யப் பேரரசினால் கைப்பற்றப்பட்டதை, அது “திரும்பவும் ரஷ்ய அரசுடன் இணைந்து கொண்டது” என்று கூறுகிறார் பூட்டின்.
கூற்று 2: “யுக்ரேன் வெறுமனே எமக்கு ஓர் அயல் நாடல்ல. அது எமது சொந்த வரலாற்றிலிருந்தும், பண்பாட்டிலிருந்தும், உள்ளுணர்விலிருந்தும் அகற்ற முடியாத பகுதி.”
குறிப்பு: 1917ல் சோவியத் புரட்சியை அடுத்து, 1918 முதல் 1922 வரை, யுக்ரேன் சுதந்திர நாடாக விளங்கியது. 1922ல் யுக்ரேனிய குடியரசு எனும் பெயருடன் அது சோவியத் ஒன்றியத்தில் ஓர் அங்கமாகியது. 1991ல் சோவியத் ஒன்றியம் நிலைகுலைந்த பிறகு யுக்ரேன் மீண்டும் சுதந்திர நாடாக மாறியது.
கூற்று 3: “இவர்கள் எமது தோழர்கள், ஆருயிர் அன்பர்கள், ஒரு காலத்தில் ஒன்றாகப் பணியாற்றிய சகாக்கள், நண்பர்கள் மட்டுமல்ல. உறவினர்கள், குருதியாலும் குடும்ப உறவினாலும் பின்னிப் பிணைந்தவர்கள்.”
குறிப்பு: அத்தகைய ஒட்டுறவை நினைந்துருகும் ரஷ்ய மக்களுக்கும், யுக்ரேனிய மக்களுக்கும் இன்று நேர்ந்துவரும் கதி என்ன? யுக்ரேன் மீதான “விசேட நடவடிக்கை”யை எதிர்க்கும் ஆயிரக் கணக்கான ரஷ்ய “தோழர்கள்” கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு வருகிறார்கள். யுக்ரேனில் வீடுகளும், உடைமைகளும், கட்டிடங்களும் தரை, கடல், வான் தாக்குதல்களுக்கு உள்ளாகித் தரைமட்டமாகின்றன. ஆயிரக் கணக்கான “ஆருயிர் நண்பர்கள்” கொல்லப்பட்டு வருகிறார்கள். இலட்சக் கணக்கான “குருதி உறவினர்கள்” அகதிகளாய் அயல்நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகிறார்கள்…
கூற்று 4: “தற்கால யுக்ரேன் ரஷ்யாவினால், இன்னும் நுட்பமாகச் சொல்வதாயின், பொதுவுடைமைவாத ரஷ்யாவினால் தோற்றுவிக்கப்பட்டது. 1917ல் புரட்சி நிகழ்ந்த கையோடு அப்படிமுறை துவங்கியது. லெனினும், அவரது தோழர்களும் மிகவும் கொடூரமான முறையில் ரஷ்ய பாரம்பரிய நிலத்தைப் பிரித்து, துண்டாடி அதை ஒப்பேற்றினார்கள். அங்கு வாழ்ந்த பல இலட்சக் கணக்கான மக்களின் எண்ணத்தை எவருமே வினவவில்லை.”
குறிப்பு: ரஷ்யப் பேரரசினால் கட்டியாளப்பட்ட பின்லாந்து, போலாந்து, லற்வியா, எஸ்தோனியா, லிதுவேனியா, யுக்ரேன்… முதலியவை 1917 புரட்சியை அடுத்து சுதந்திரப் பிரகடனம் செய்தன. யுக்ரேனிய வரலாற்றறிஞர் சேர்கி புலோகிவ் இப்படிக் கூறுகிறார்:
“1922 வரை, ஒரு குறுகிய காலத்துக்கு, யுக்ரேன் சுதந்திர நாடாக விளங்கியது. 1922ல் போல்சிவிக் தரப்பினர் ஜேர்மனியுடன் இரபலோ பொருத்தனை எனப்படும் உடன்படிக்கையில் ஒப்பமிட்டனர். அப்பொழுது யுக்ரேனியர்களிடையே ஒரு வினா எழுந்தது: ‘எமக்காக உடன்படிக்கைகளில் ஒப்பமிடும் உரிமை எதையும் எதற்காக ரஷ்ய இணைப்பரசின் பிரதிநிதிகள் கொண்டிருக்கிறார்கள்?’ என்ற வினா எழுந்தது. அதைக் குறித்து ஏதாவது செய்யவேண்டும் என்று அவர்கள் தீர்மானித்தார்கள். எனவே ஒருமித்த அரசு ஒன்றை அமைப்பது குறித்து கலந்துரையாடினார்கள். வெவ்வேறு குடியரசுகள் இணைந்த ஐக்கியத்தை ஏற்படுத்த ஸ்டாலின் எண்ணினார். உலகப் புரட்சியை நாடிய லெனின் அதற்கு மறுப்புத் தெரிவித்து, யுக்ரேனியரின் பக்கமும், ஜோர்ஜியரின் பக்கமும் சாய்ந்து, ‘ஒன்றிய அரசு’ ஒன்றை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்” (Serhii Plokhy, Vladimir Putin’s Revisionist History of Russia and Ukraine, Isaac Chotiner, The New Yorker, 2022-02-23).
அதன்படி “யுக்ரேனிய சமவுடைமைக் குடியரசு” எனும் பெயருடன் யுக்ரேன் சோவியத் ஒன்றியத்துடன் இணைந்தது. பின்லாந்தையும், போலாந்தையும் தவிர, பிரிந்துபோன ஏனைய புலங்களும் சோவியத் ஒன்றியத்துடன் திரும்பவும் இணைந்துகொண்டன.
கூற்று 5: “1954ல் குருசேவ் ஏதோ ஒரு காரணத்துக்காக கிரிமியாவை ரஷ்யாவிலிருந்து பிரித்து யுக்ரேனுக்கு கொடுத்தார். இப்படித்தான் தற்கால யுக்ரேனிய ஆள்புலம் தோற்றுவிக்கப்பட்டது.”
குறிப்பு: யுக்ரேன் சோவியத் ஒன்றியத்தினுள் அங்கம் வகித்தது. எனவே கிரிமியா தொடர்ந்தும் சோவியத் ஒன்றியத்தினுள்தான் இருந்தது. எனினும் 37 ஆண்டுகளுக்குள், அதாவது 1991ல், சோவியத் ஒன்றியம் நிலைகுலையும் என்று குருசேவுக்கு தெரிந்திருந்தால், அவர் “கிரிமியாவை ரஷ்யாவிலிருந்து பிரித்து யுக்ரேனுக்கு” கொடுத்திருக்க நியாயமில்லை.
கூற்று 6: “ஓர் ஐக்கிய அரசினுள் ஒருங்கிணையும் குடியரசுகளுக்கு - நிருவாகப் புலங்களுக்கும் ஆள்புலங்களுக்கும் - சுயாட்சி வழங்கும் யோசனையை 1922ல் ஸ்டாலின் முன்வைத்தார். லெனின் அதற்கு மறுப்புத் தெரிவித்து, சுதந்திரவாதிகள் என்று தாம் குறிப்பிட்ட தேசியவாதிகளுக்கு, சிறப்புரிமைகள் அளிக்கும் யோசனைய முன்வைத்தார். இது அடிப்படையில் ஒரு கூட்டிணைப்பாட்சி யோசனை ஆகும்; அத்துடன் தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமையும், பிரிந்துசெல்லும் உரிமையும் உண்டு எனும் நிலைப்பாடும் ஆகும். இப்படி லெனின் முன்வைத்த யோசனையே 1922ல் சோவியத் சமவுடைமைக் குடியரசுப் பிரகடனத்தில் முதல் தடவையாக உறுதிப்படுத்தப்பட்டது. 1924ல் லெனின் இறந்த பிறகு, அது சோவியத் அரசியல்யாப்பில் பொறிக்கப்பட்டது. உடனடியாக இங்கு பல வினாக்கள் எழுகின்றன: முதலாவதாக, தேசியவாதிகளை சமாதானப்படுத்த வேண்டிய தேவை என்ன? பழைய பேரரசின் எல்லைப்புறங்களில் இடைவிடாது மேலோங்கும் தேசியவாத வேட்கைகளை நிறைவுசெய்ய வேண்டிய தேவை என்ன? புதுக்க, விதிமுறையின்றி, உருவாக்கப்பட்ட நிருவாக அலகுகளுக்கு - ஒன்றிய குடியரசுகளுக்கு - அவற்றுடன் தொடர்பற்ற பாரிய ஆள்புலங்களை வழங்கிய நோக்கம் என்ன? ரஷ்யர்களாக விளங்கிய வரலாறு படைத்த மக்களோடு சேர்த்து மேற்படி ஆள்புலங்கள் அப்படி வழங்கப்பட்டன. வேட்கைமிகுந்த தேசியவாதிகளின் வேட்கைமிகுந்த கனவுகளைக் கடந்துசென்று தாராளமாக நன்கொடைகள் அளிக்கவேண்டிய தேவை என்ன? அவை அனைத்தையும் விஞ்சும் வகையில், ஐக்கியப்படுத்திய அரசிலிருந்து நிபந்தனை எதுவுமின்றி பிரிந்து செல்லும் உரிமையை அக்குடியரசுகளுக்கு அளிக்கவேண்டிய தேவை என்ன?”
குறிப்பு: புரட்சிக்கு முந்திய பழைய ரஷ்யப் பேரரசை ஒரு நேரிய அரசாக லெனின் கருதவில்லை. அக்கம் பக்கத்து ஆள்புலங்களை பழைய பேரரசு அடிப்படித்தி, கட்டியாண்ட வரலாறு அவருக்குத் தெரியும். அவற்றுக்கு சுயநிர்ணய உரிமையும், அவை விரும்பினால் பிரிந்து செல்லும் உரிமையும், சுதந்திர பிரகடனம் செய்யும் உரிமையும் உண்டு என்பது அவர் நிலைப்பாடு அதேவேளை அவை பொதுவுடைமைக் கட்சியில் இணைந்து கொண்டால், ஒரு கூட்டிணைப்பாட்சி அரசை அமைக்கலாம் என்ற யோசனையை அவர் முன்வைத்தார். ஸ்டாலின் முன்வைத்த சுயாட்சி யோசனையை விட லெனின் முன்வைத்த கூட்டிணைப்பாட்சி மிகவும் நெகிழ்வானது. இதையே, “தேசியவாதிகளை சமாதானப்படுத்த…, தேசியவாத வேட்கைகளை நிறைவுசெய்ய…, நன்கொடைகள் அளிக்க…, பிரிந்து செல்லும் உரிமை அளிக்க…” எடுக்கப்பட்ட நடவடிக்கை என்கிறார் பூட்டின். சோவியத் ஒன்றியத்துடன் ஒருங்கிணைந்த குடியரசுகளுக்கு இடையே ஆள்புலங்கள் பரிமாறப்பட்டது முற்றிலும் உண்மையே. அவ்வாறு பரிமாறப்பட்ட ஆள்புலங்கள், சம்பந்தப்பட்ட குடியரசுகளின் ஆள்புலங்கள் என்ற வகையில் தொடர்ந்தும் சோவியத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆள்புலங்களாகவே விளங்கின. 1922 முதல் 1991 வரை 69 ஆண்டுகளுக்குள் சோவியத் ஒன்றியம் நிலைகுலையும் என்று லெனினோ, ஸ்டாலினோ எதிர்பார்த்திருந்தால், ஆள்புலப் பரிமாற்றங்கள் நிகழ்ந்திருக்க நியாயமில்லை. 1917 புரட்சிக்குப் பின்னர் முன்புறம் நோக்கி, புதிய சோவியத் ஒன்றியத்தை கருத்தில் கொண்டு, காய்களை நகர்த்தினார் லெனின். பின்புறம் நோக்கி பழைய ரஷ்யப் பேரரசை கருத்தில் கொண்டு, காய்களை நகர்த்துகிறார் பூட்டின்.
கூற்று 7: “புரட்சியின் பின்னர் போல்சிவிக்குகளின் தலையாய நோக்கம், என்ன விதப்பட்டும், முழுக்க முழுக்க என்ன விதப்பட்டும், ஆட்சியில் நீடிப்பதே. அந்த நோக்கத்துக்காகவே அவர்கள் அனைத்து அலுவல்களையும் புரிந்தார்கள். ஜேர்மன் பேரரசிலும், அதன் நட்புநாடுகளிலும் படைபல, பொருள்வள நிலைவரம் மேம்பட்டிருந்தாலும், முதலாம் உலகப் போர் எப்படி முடிவடையும் என்பது ஏற்கெனவே உறுதியாகிவிட்டது. எனினும் நாட்டை அவமானத்துக்கு உள்ளாக்கும் பிரெஸ்ட்-லிடோவிஸ்க் பொருத்தனையை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்; தேசியவாதிகளின் கோரிக்கைகளையும் வேட்கை களையும் நிறைவேற்றினார்கள்.”
குறிப்பு: 1917 புரட்சியை அடுத்து செம்படையினருக்கும் வெண்படையினருக்கும் இடையே உள்நாட்டுப் போர் மூண்டது. அதில் புலனைச் செலுத்துவது என்றும், தாம் மக்களுக்கு வாக்குறுதி அளித்தது போல, ஏற்கெனவே நடைபெற்றுவந்த முதலாம் உலகப் போரிலிருந்து ரஷ்யாவை விடுவிப்பது என்றும், ஒரே சமயத்தில் இரு முனைகளில் போரிட முடியாது என்றும் லெனின் முடிவெடுத்தார். சுவிற்சலாந்திலிருந்து நடு வல்லரசுகளின் (ஜேர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, ஒற்றோமன் பேரரசு, பல்கேரிய அரசுகளின்) உறுதுணையுடன் தலைமறைவாக, சோதனைக்கு உள்ளாகாமல், தொடருந்து மூலம் ரஷ்யா திரும்பும் தறுவாயில், போரிலிருந்து வெளியேறுவதாக அவ்வரசுகளுக்கும் அவர் வாக்குறுதி அளித்திருந்தார். போர்நிறுத்தம் குறித்து நடு வல்லரசுகளுடன் பிரெஸ்ட்-லிடோவிஸ்க் எனும் (பெரலஸ் நாட்டு) நகரில் பேச்சுவார்த்தை நடந்தது. சோவியத் நாட்டின் கால்வாசி ஆள்புலங்களை தமக்குத் தரவேண்டும் என்று நடு வல்லரசுகள் நிபந்தனை விதித்தன. “அவமானத்துக்கு உள்ளாக்கும்” நடு வல்லரசுகளின் நிபந்தனையை ஏற்க மறுத்த சோவியத் பிரதிநிதி துரொஸ்கி மாஸ்கோ திரும்பி, “போரும் வேண்டாம், சமாதானமும் வேண்டாம்” எனும் நிலைப்பாட்டை லெனினிடம் விதந்துரைத்தார். அதையடுத்து நடு வல்லரசுகள் சோவியத் இரசியாவை நோக்கி மேற்கொண்டு முன்னேறின. வேறுவழியின்றி மீண்டும் சொவியத் தரப்பு பேச்சுவார்த்தைக்குச் சென்றது. 1918 மார்ச் 3ம் திகதி சமாதான ஒப்பந்தம் (பிரெஸ்ட்-லிடோவிஸ்க் பொருத்தனை) செய்யப்பட்டது. அதன்படி ஏறத்தாழ 10 இலட்சம் சதுர மைல் பரப்பளவு கொண்ட ஆள்புலம், 5½ கோடி மக்கள், நிலக்கரி, எண்ணெய், இரும்பு கையிருப்புகள், ஆலைகள்… முதலியவற்றை ரஷ்யா விட்டுக்கொடுக்க நேர்ந்தது. இது “தோல்விப் படுகுழி, அங்கவீனம், அடிமைத்தளை, அவமானம்” என்று லெனினே உளங்கசந்து குமுறினார். பொருத்தனை செய்யநேர்ந்த சூழ்நிலையை சீனாவிலிருந்து எடைதூக்கிப் பார்த்த தோழர் மாவோ சே துங், அதை ஆதரித்து தமது தோழர்களுக்கு விளக்கமளிக்க நேர்ந்தது. 1918 நவமபர் 18ம் திகதி நடு வல்லரசுகளின் தோல்வியுடன் முதலாம் உலகப் போர் முடிவடைந்த கையோடு சோவியத் நாட்டினால் விட்டுக்கொடுக்கப்பட்ட வளங்களும் புலங்களும் முற்றுமுழுதாக மீட்கப்பட்டன.
கூற்று 8: “அரச கட்டுமானம் குறித்து லெனின் வகுத்த நெறி வெறுமனே ஒரு தவறு மட்டுமல்ல, அதை விடவும் மோசமானது. பலரும் சொல்வது போல், 1991ல் சோவியத் யூனியன் நிலைகுலைந்த பிறகு அவரது தவறு தெட்டத்தெளிவாகப் புலப்பட்டது… ஏதோ ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஏதோ கவர்ச்சிக்கு அல்லது ஆதாயத்துக்கு உரியதாய் இருந்த அரசியல் காரணிகளை அரச கட்டுமானத்தின் அடிப்படை நெறிகளாகப் பயன்படுத்த முடியாது, பயன்படுத்தலாகாது.”
குறிப்பு: அதாவது லெனின் முன்வைத்த சுநிர்ணய உரிமையையோ, ஸ்டாலின் முன்வைத்த சுயாட்சியையோ அரச கட்டுமானத்தின் அடிப்படை நெறியாகப் பயன்படுத்த முடியாது, பயன்படுத்தலாகாது! உலகப் புரட்சியையும், சுயநிர்ணய உரிமையையும் நாடிய லெனின் தேசியவாதிகளின் பக்கம் சாய்ந்தார். பழைய ரஷ்யப் பேரரசை நினைந்துருகும் பூட்டின் பேரினவாதிகளின் பக்கம் சாய்கிறார்!
கூற்று 9: “சோவியத் யுக்ரேன் என்பது போல்சிவிக் கொள்கையின் விளைவு; சரிவரச் சொல்வதாயின், அது ‘லெனினது யுக்ரேன்’. யுக்ரேனின் பிரமாவும் சிற்பியும் லெனினே. சுவடிக்கூடத்து ஆவணங்களைக் கொண்டு அது முற்றுமுழுதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொன்பாஸ் புலம் (யுக்ரேனின் கிழக்கில் பெரிதும் இரசிய இனத்தவர்கள் வாழும் புலம்) தொடர்பாக லெனின் மூர்க்கத்தனமான முறையில் அறிவுறுத்தல்களைப் பிறப்பித்தார். உண்மையில் தொன்பாஸ் புலம் யுக்ரேனுக்குள் தள்ளிவிடப்பட்டது. அங்கு ‘நன்றிமிகுந்த மகவு’ தனது பிதாவின் சிலைகளை இன்று கவிழ்த்து வீழ்த்தியுள்ளது. அது பொதுவுடைமைக் கட்டமைப்பினைக் களையும் படிமுறை என்று சொல்கிறார்கள் அவர்கள். நீங்கள் பொதுவுடைமைக் கட்டமைப்பினைக் களைய விரும்புகிறீர்களா? மெத்த நல்லது, அது எமக்கு நன்கு பொருந்துகிறது. சரி, அதை ஏன் அரைவாசியுடன் நிறுத்த வேண்டும்? பொதுவுடைமைக் கட்டமைப்பினை அறவே களையும் படிமுறை யுக்ரேனைப் பொறுத்தவரை எவ்வாறு பொருள்படும் என்பதைக் காட்டுவதற்கு நாம் தயாராகவே இருக்கிறோம்.”
குறிப்பு: மேலே 6ம் கூறில் நாம் கூறியவாறு, சோவியத் ஒன்றியத்துடன் ஒருங்கிணைந்த குடியரசுகளுக்கு இடையே ஆள்புலங்கள் பரிமாறப்பட்டது முற்றிலும் உண்மையே. அவ்வாறு பரிமாறப்பட்ட ஆள்புலங்கள், சம்பந்தப்பட்ட குடியரசுகளின் ஆள்புலங்கள் என்ற வகையில் தொடர்ந்தும் சோவியத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆள்புலங்களகவே விளங்கின. 1922 முதல் 1991 வரை 69 ஆண்டுகளுக்குள் சோவியத் ஒன்றியம் நிலைகுலையும் என்று லெனின் எதிர்பார்த்திருந்தால், ஆள்புலப் பரிமாற்றங்கள் நிகழ்ந்திருக்க நியாயமில்லை.
கூற்று 10: சோவியத் ஒன்றியத்தின் அடிப்படை ஆவணங்களில் ஸ்டாலின் திருத்தம் செய்யவில்லை. சோவியத் ஒன்றியத்துக்கு அடிப்படையாய் விளங்கிய லெனினது நெறிகளை ஸ்டாலின் முறைப்படி மீட்டியமைக்கவில்லை.”
குறிப்பு: ஆனானப்பட்ட ஸ்டாலினாலேயே லெனினது நெறிகளை மாற்ற முடியவில்லை என்றால், வேறு யாரால் முடிந்திருக்கும்?
1922ல் “சோவியத் சமவுடைமைக் குடியரசுகளின் ஒன்றியம்” எனும் பெயர் சூட்டப்பட்டது. 1991ல் போரிஸ் யெல்ற்சின் அதை “ரஷ்ய இணைப்பரசு” என்று மாற்றினார். “ஒன்றியம்,” “இணைப்பரசு” போன்றவை ரஷ்யாவின் பல்வண்மையை உணர்த்தும் சொற்கள். வெறுமனே “ரஷ்யா” என்று பெயர் சூட்டாத காரணம் அதுவே.
யெல்ற்சின்
அசல் ரஷ்யராகிய லெனின் ஒரு ஜோர்ஜியராகிய ஸ்டாலினை தேசிய இனங்களின் ஆணையாளராக அமர்த்தினார். பாதுகாப்பு அமைச்சராக அமர்த்தப்பட்டவரும், செம்படைச் சிற்பியுமாகிய துரொஸ்கி ஒரு யூதர். ஏன், இன்றைய யுக்ரேனிய அதிபர் செலன்ஸ்கி கூட ஒரு யூதரே! ஒரே அரசு , ஒரே மொழி, ஒரே சமயம், ஒரே கட்சி, ஒரே ஆட்சியாளர்… எனும் நிலைப்பாட்டில் இனிமை காணும் பூட்டினுக்கு அத்தகைய பல்வண்மை கசப்பதில் விந்தை இல்லை.
செலன்ஸ்கி
கூற்று 11: “அருவருப்பான கனவுலக நப்பாசைகளுக்கு (1917ல் போல்சிவிக்) புரட்சி உந்துவிசை அளித்தது. வழமையான அரசு எதையுமே அத்தகைய நப்பாசைகள் முற்றிலும் அழிப்பவை. எமது அரசின் மூலாதாரமான, முறைசார்ந்த, சட்டதிட்ட அத்திவாரத்திலிருந்து அவை களையப்படாமல் போனமை ஒரு மாபெரும் அவலமாகும். எமது நாட்டில் ஏற்கெனவே அடிக்கடி நிகழ்ந்தது போல, எதிர்காலத்தை எவருமே எண்ணிப் பார்க்கவில்லை… தேசியவாத நச்சுக்கிருமி இன்னும் எம்மைப் பீடித்துள்ளது. தேசியவாத நோய் பீடிக்காவாறு அரசினைக் கட்டிக்காக்கும் ஆற்றலை அழிக்கவென முன்கூட்டியே புதைக்கப்பட்ட கண்ணிவெடி உறுத்திக்கொண்டிருந்தது. ஏற்கெனவே நான் கூறியது போல, சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்துசெல்லும் உரிமையே அந்தக் கண்ணிவெடி…
குறிப்பு: மேலே 6ல் நாம் கூறியவாறு, புரட்சிக்கு முந்திய பழைய ரஷ்யப் பேரரசை ஒரு நேரிய அரசாக லெனின் கருதவில்லை. அக்கம் பக்கத்து ஆள்புலங்களை பழைய பேரரசு அடிப்படித்தி, கட்டியாண்ட வரலாறு அவருக்குத் தெரியும். அவற்றுக்கு சுயநிர்ணய உரிமையும், அவை விரும்பினால் பிரிந்து செல்லும் உரிமையும், சுதந்திர பிரகடனம் செய்யும் உரிமையும் உண்டு என்பது அவர் நிலைப்பாடு. இதையே தனது உரையில் “கண்ணிவெடி” என்றும், 2021 யூலை 12ம் திகதி எழுதிய கட்டுரையில் (http://en.kremlin.ru/events/president/news/66181) “நேரக்குண்டு” என்றும் பூட்டின் குறிப்பிடுகிறார். சோவியத் தலைமையின் மீது அவர் தொடுக்கும் கண்டனம் அக்கட்டுரையில் அடங்கும் பின்வரும் கூற்றில் உச்சத்தை எட்டுகிறது:
கூற்று 12: “ரஷ்ய மக்களை போல்சிவிக்குகள் தமது சமூக பரிசோதனைகளுக்கான அமுதசுரபியாகப் பயன்படுத்தினார்கள். தேசிய அரசுகளை அழித்தொழிக்கும் உலகப் புரட்சி ஒன்றை அவர்கள் கனவு கண்டார்கள். ஆதலால்தான் தாராளமான முறையில் எல்லைகளை வரைந்து, ஆள்புலங்களைப் பரிசளித்தார்கள். நாட்டைத் துண்டாடிய போல்சிவிக் தலைவர்களின் திட்டவட்டமான எண்ணம் என்ன என்பது இனிமேல் எமக்கு முக்கியமில்லை. சின்னஞ்சிறு விவரங்கள், பின்னணிகள், நியாயங்கள் குறித்து நாம் முரண்படலாம். எனினும் ஒரு விவரம் தெட்டத்தெளிவாகத் தெரிகிறது: ரஷ்யா கொள்ளையடிக்கப்பட்டது; உண்மையிலேயே ரஷ்யா கொள்ளையடிக்கப்பட்டது.”
குறிப்பு: 1921 திசம்பர் 23ம் திகதி பூட்டின் நடத்திய ஊடக மாநாட்டில், “நீங்கள் உவக்கும் தலைவர் யார்?” என்ற வினாவுக்கு, ரஷ்யப் பேரரசர் “மகா பீட்டர்” (1672-1675) என்று விடையளித்தார். ரஷ்யப் பேரரசை அகட்டி, ஓர் ஐரோப்பிய வல்லரசாக்கியவர் பீட்டர். அவர் 1696ல் ஒற்றோமன் பேரரசுடன் போரிட்டு அசோவ் புலத்தையும், 1700 முதல் 1721 வரை சுவீடியப் பேரரசுடன் போரிட்டு பால்டிக் புலத்தையும், 1722 முதல் 1723 வரை பாரசீகப் பேரரசுடன் போரிட்டு கஸ்பியன், காக்கேசஸ் புலங்களையும்… கைப்பற்றினார். அத்தகைய மகா பீட்டரை அதிபர் பூட்டின் நயந்துவக்க நியாயம் இருக்கிறது!
மார்க்சின் அரியதொரு வாக்கு இங்கு கருத்தில் கொள்ளத்தக்கது: “மனிதர்கள் தமது சொந்த வரலாற்றை உருவாக்குகிறார்கள்; ஆனால் தாம் விரும்பிய விதமாக அதனை அவர்கள் உருவாக்குவதில்லை; தாங்கள் தெரிவுசெய்த சூழ்நிலைகளுக்கமைய அதனை அவர்கள் உருவாக்குவதில்லை; நேரெதிரே காணப்படும், அவர்களிடம் தரப்படும், கடந்த காலத்திலிருந்து ஈயப்படும் சூழ்நிலைகளுக்கமையவே தமது வரலாற்றை அவர்கள் உருவாக்குகிறார்கள்.”
___________________________________
மணி வேலுப்பிள்ளை, 2022-03-08.
No comments:
Post a Comment