இலங்கைப் பிரச்சனை


நோம் கொம்ஸ்கி


எரிக் பெயிலி


எரிக்: இலங்கையில் கடந்த ஆண்டு தீவிரமடைந்த உள்நாட்டுப் போர் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.


சொம்ஸ்கி: ஆம், அறிந்திருக்கிறேன்.


எரிக்: ஆம், கால் நூற்றாண்டுக்கு மேலாக புலிகள் தனிநாடு கோரி போராடி வருகிறார்கள். எனினும் கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் தோல்விக்கு மேல் தோல்வியை எதிர்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக கடந்த ஆண்டில் தமது தலைநகரமாகிய கிளிநொச்சியையும், முக்கிய தளங்கள் பலவற்றையும் இழந்துள்ளார்கள். நேற்றுக் கூட அவர்களது பெரிய கடற்படைத் தளம் பறிபோய்விட்டது. இலங்கை பற்றியும், பிரிவினைப் பிரச்சனையை அது கையாளும் விதம் பற்றியும் உங்கள் கண்ணோட்டங்களை கொஞ்சம் கூறமுடியுமா?


சொம்ஸ்கி: சரி, ஒரு நம்பிக்கையான கருத்தை முன்வைக்கப் போதியளவு விவரங்களை நான் ஆழமாக அறிந்திருக்கவில்லை என்று கருதுகிறேன். எனினும் தமிழர் உரிமைப் பிரச்சனை ஒன்று உண்டு என்பது தெளிவு. படைபல மோதல் ஒரு முடிவுக்கு வருவது போல் தெரிகிறது. இலங்கை அரசினுள் ஏதோ ஒரு வகையான சுயாட்சியை அல்லது சுயநிர்ணய உரிமையை நாடி விடுக்கப்படும் நியாயமான கோரிக்கைகளை அங்கீகரிக்கும் அரசியல் தீர்வு எதையும் எட்டுவது அவசியம்; அதுவே மனிதாபிமானம்; சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவருக்கும் அதுவே சிறந்தது. அதை எட்டுவதற்கு, நான் அறிந்ததை விட அதிக விபரம் தெரிந்திருக்க வேண்டும். 


எரிக்: தமிழருக்கு தனிநாடு என்பது ஒப்பேறக்கூடிய தெரிவென நீங்கள் கருதுகிறீர்களா? இலங்கையின்  நன்னலங்களுக்கு, அது ஒரே நாடாக அல்லது ஒன்றுபட்ட நாடாக விளங்க வேண்டுமென நீங்கள் கருதுகிறீர்களா? 


சொம்ஸ்கி: உலகில் பெரிதும் ஒரே அரசு என்பது ஒரு தகாத தெரிவாகவே இருக்கிறது. உலக நாடுகள் சில, எடுத்துக்காட்டாக சில ஐரோப்பிய நாடுகள் மிகுந்தளவு இணைப்பாட்சி அமைப்புகளை நோக்கி நகர்கின்றன. இன்று ஸ்பெயின் அரசினுள் கற்றலோனியா மாநிலம் மிகுந்தளவு சுயாட்சி கொண்டுள்ளது. பாஸ்க் புலமும் மிகுந்தளவு சுயாட்சி கொண்டுள்ளது. வேறு பிராந்தியங்களிலும் அதே நிலைமையே காணப்படுகிறது. ஐக்கிய இராச்சியத்தில் இங்கிலாந்தும், வேல்சும், ஸ்கொட்லாந்தும் ஒருவகையான சுயாட்சியையும் சுயநிர்ணய உரிமையையும் நோக்கி நகர்கின்றன. ஐரோப்பா முழுவதும் அத்தகைய நிலைவரமே ஓங்குவதாக நினைக்கிறேன். அவற்றில் சாதக பாதகங்கள் பெருமளவு கலந்துள்ளன. எனினும் மொத்தத்தில் அது நலமான மாற்றம் என்றே கருதுகிறேன். அதாவது, மக்கள் வெவ்வேறு நாட்டங்கள், வெவ்வேறு பண்பாட்டுப் பின்புலங்கள், வெவ்வேறு கரிசனைகள் கொண்டவர்கள். மற்றைய தரப்பினர்க்கு இசைவான முறையில் தத்தம் தனி நலன்களையும் கரிசனைகளையும் நாடுவதற்கு உகந்த தனி ஏற்பாடுகள் அவர்களுக்கு செய்துகொடுக்கப்பட வேண்டும். பல்லின, பல்பண்பாட்டு நாடுகளில், குறிப்பாக புலம் புலமாகப் பிரிந்துள்ள நாடுகளில் எதோ ஒருவகையான இணைப்பாட்சி நல்லதொரு தீர்வாக அமையும் என்று கருதுகிறேன். அது உள்நாட்டுச் சூழ்நிலையை, அங்கு கைகூடக்கூடிய ஏற்பாடுகளைப் பொறுத்தது என்பது உங்களுக்குத் தெரியும். (என்னைப் போன்ற) ஒரு வெளியாள் இத்தகைய விவரங்களை மிகவும் ஆழமாகப் புரிந்துகொள்ளாமல் கருத்துரைத்தலாகாது. 


எரிக்: அது எனக்குப் புரிகிறது. அடுத்த மாதம் அல்லது அடுத்தடுத்த மாதம் புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு விடுவார்கள் என்று பெரும்பாலான படைவலு ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதன் பின்னர் இலங்கை எவ்வாறு மீள்கட்டுமானத்தை மேற்கொள்ளப் போகிறது என்பது பற்றி நான் ஓரளவு கதைக்க விரும்புகிறேன். பல தசாப்தங்களாகப் போராடிய ஆயிரக் கணக்கான கீழ்மட்ட, மேல்மட்டப் புலிகளின் கதி எப்படி அமைய வேண்டுமென நீங்கள் கருதுகிறீர்கள். 


சொம்ஸ்கி: புரிகிறது. சரி, ஒருவகையான பொதுமன்னிப்பு அளிப்பது ஓர் அணுகுமுறையாக, பொதுவான உளக்கருத்தாக அமைய வேண்டும் என்று கருதுகிறேன். மீளிணக்கத்துக்கும் சகவாழ்வுக்கும் முதற்படியாக தண்டிக்கும் அதிகாரமற்ற, ஆனால் புலன்விசாரிக்கும் அதிகாரம் கொண்ட, எல்லாத் தரப்பிலும் இழைக்கப்பட்ட கொடுமைகளையும் குற்றங்களையும் வெளிக்கொணரவல்ல போரோய்வு ஆணையம் ஒன்றை அமைப்பது நலம் பயக்கலாம். 


எரிக்: ஆம், தலைமைப் புலிகள் பலர்மீது படுகொலைகள் புரிந்த (படுகொலைக்கு உத்தரவிட்ட) குற்றச்சாட்டுகள் பலவும் உள்ளன. நான் அறிந்தவரை தற்கொலைக் குண்டையோ தற்கொலைப் பட்டியையோ கண்டுபிடித்தவர்கள் அவர்களே. எனவே போர்க் குற்றங்களும் கொடுமைகளும் இலங்கையில் சூடுபிடிக்கப் போகின்றன.  


சொம்ஸ்கி: ஆம், எல்லாத் தரப்புகளும் பெருவாரியான குற்றங்கள் புரிந்துள்ளன என்பதில் ஐயமில்லை; அவற்றின் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டே ஆகவேண்டும்.  அது இலகுவான அலுவல் அல்ல என்பது உங்களுக்குத் தெரியும். பெருவாரியான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தத்தம் தரப்புகளும் குற்றவாளிகளே என்பதை ஏற்றுக்கொள்வது அவர்களுக்கு கடினமாய் இருக்கும். எனினும் அதை ஏற்றுக்கொள்ளும் படிமுறை நிகழ்வது மிகமுக்கியம்.  தென் ஆபிரிக்கா, எல் சல்வடோர், குவாத்தமாலா போன்ற சில நாடுகளில் அது ஓரளவு வெற்றிபெற்றுள்ளது. பிரச்சனைகளை அது தீர்க்காது. ஆனால் மீளிணக்கத்துக்கும், ஆக்கபூர்வமான சகவாழ்வுக்கும் அது ஓரளவு வழிவகுக்கும்.


எரிக்: சரி, அது எனக்குப் புரிகிறது. நாசிகளை நியுரம்பேர்க்கில் விசாரணைக்கு உள்ளாக்கியது போல் புலித்தலைவர்களை இலங்கையில் விசாரணைக்கு உள்ளாக்குவது நன்மை அளிக்கும் அல்லது தீமை அளிக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்களா? 


சொம்ஸ்கி: உளந்திறந்து சொல்கிறேன். அதையிட்டு நான் ஐயப்படுகிறேன். நியுரம்பேர்க் விசாரணைகள் கருத்தூன்றி நடத்தப்பட்டிருக்க வேண்டுமென்றால், அங்கு அறநெறி அறவே மீறப்பட்டிருத்தலாகாது. வெற்றிபெற்றவர்கள் அல்ல, தோற்கடிக்கப்பட்டவர்களே அங்கு விசாரணை செய்யப்பட்டார்கள் என்பதை மறக்க வேண்டாம். அதாவது, நேசநாடுகள் குற்றம் எதுவும் இழைத்திருந்தால், அது குற்றமல்ல என்ற நெறியே அங்கு கடைப்பிடிக்கப்பட்டது! எடுத்துக்காட்டாக, நகர இலக்குகள் மீதும், குடிமனை இலக்குகள் மீதும் குண்டுபொழிந்த குற்றச்சாட்டுகள் ஜேர்மனிய போர்க் குற்றவாளிகள் மீது சுமத்தப்படவில்லை. காரணம், நாசிகளை விட அதிகமாக நேசநாடுகளே அத்தகைய குண்டுபொழிவுகளை மேற்கொண்டன. நாசி நீர்மூழ்கிக் கப்பல் சேனாபதி சினிற்சு போன்ற போர்க் குற்றவாளிகள் தமது சாட்சிகளாக அமெரிக்க, பிரித்தானிய சேனாபதிகளை வரவழைத்தார்கள். தாங்களும் அத்தகைய குண்டுபொழிவுகளை மேற்கொண்டதாக அவர்கள் சாட்சியமளித்தார்கள். ஆகவே அத்தகைய குண்டுபொழிவுகள் குற்றங்களாகக் கொள்ளப்படவில்லை! அதாவது, அவர்கள் செய்வதே போர்க் குற்றம், நாங்கள் செய்வது போர்க் குற்றமல்ல! எனவே நியுரம்பேர்க் விசாரணைகள் என்பது வெறும் பம்மாத்து. “குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது சுமத்தப்படும் குற்றங்களை நாங்கள் புரிந்திருந்தால், நாங்களும் அதே தண்டனைக்கு உள்ளாக வேண்டும்” என்றார் தலைமை அமெரிக்க வழக்குத்தொடுநர் ரொபேர்ட் ஜாக்சன். ஆனால் அங்கே அப்படி எதுவும் நடக்கவில்லை. எம்மவரால் அதைக் கற்பனை செய்தே பார்த்திருக்க முடியாது. “அப்படி நாம் செய்யவில்லை என்றால், இந்த விசாரணை ஒரு கெலிக்கூத்தாகும்” என்று நீதிபதிகளுக்கு அவர் இடித்துரைத்தார். சரி, அங்கே அப்படி நடக்கவில்லை. அங்கே குற்றத்தீர்ப்புக்கு உள்ளானோர் தற்கால வரலாற்றில் மாபெருங் குற்றவாளிகள் ஆகலாம். எனினும் அங்கு நடந்தது வெறும் கேலிக்கூத்து. எனவே நியுரம்பேர்க் போன்ற விசாரணை ஒருபொழுதும் நலம் பயக்கப் போவதில்லை. அது தோற்கடிக்கப்பட்டவர்கள் மீதான விசாரணையாகவே அமையும். அதனால் மேன்மேலும் வெறுப்பும் சீற்றமும் விளையும். அருவருப்பான சர்ச்சை ஓங்கும். எல்லோரையும் விசாரிக்கும் நேரிய விசரணை ஒன்றைக் கருத்தில் கொள்ளலாம். ஆனால் அது எனக்கு நல்ல யோசனையாகப் படவில்லை. நான் சொன்ன நாடுகளில் அது நல்லபடியாக நடத்தப்படவில்லை. தென் ஆபிரிக்காவிலும், குவாத்தமாலாவிலும், எல் சல்வடோரிலும் பெருவாரியானோர் பயங்கரக் குற்றங்கள் புரிந்தார்கள். அவர்கள் அரச தரப்பினர். அவர்கள் தண்டிக்கப்படவில்லை. மெய்மை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. குற்றங்களை ஒப்புக்கொள்வதற்கும் அல்லது ஆகக்குறைந்தது இனங்காண்பதற்கும் ஒருவிதமாக மன்னிப்புக் கோருவதற்கும் வழிவகுக்கும் ஆணையம் அது. ஆனால் தண்டனை அளிக்கப்படவில்லை. அது ஒரு புத்திசாலித்தனமான நகர்வெனலாம். சகவாழ்வு நிலைபெற வேண்டும் அல்லவா? தண்டிப்பதும் தண்டியாததும் சமூகத்தைப் பொறுத்தது என்பது உங்களுக்குத் தெரியும். இத்தகைய சங்கதிகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை சமூகமே தீர்மானிக்க வேண்டும். எனினும் எதிர்காலத்தையும், மீளிணக்கத்தையும் கருத்தில் கொண்டு, எல்லாத் தரப்புகளுக்கும் பொதுவான உரிமைகளையும், அனவருக்கும் ஒப்பேறவல்ல  சமூக முறைமை எழும் வாய்ப்பையும் அங்கீகரித்து முன்னெச்சரிக்கையுடன் அதை மேற்கொள்ள வேண்டுமென நான் கருதுகிறேன்.


எரிக்: அப்படி என்றால், இரு தரப்புத் தலைவர்களையும் விசாரணைக்கு உட்படுத்தாமல், அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிப்பது இலங்கைக்கு நலம் பயக்குமா?


சொம்ஸ்கி: அது சமூகம் நுண்மையான முறையில் எதிர்கொள்ளவேண்டிய பிரச்சனை அல்லவா? குற்றங்களைக் குறித்து எப்படி நடவடிக்கை எடுப்பது? அதேவேளை இனிமேல் எப்படிக் கூடிவாழ்வது?  அதற்கு விடை காண்பது எளிதல்ல. 

__________________________________________________________________________

Noam Chomsky interviewed by Eric Bailey, Sri Lanka Guardian, February 11, 2009.

https://chomsky.info/20090211/

No comments:

Post a Comment