மலையகத்தில் அடிமைத்தளை


தொமொயா ஒபொகடா

தற்கால அடிமைத்தளை பற்றிய

ஐ. நா. சிறப்பு அறிக்கையாளர்

2021-12-03


சிறுபான்மை இனக்குழுமங்கள்


இலங்கையில் அடிமைத்தளையின் தற்கால வடிவங்கள் எனக்குப் புலப்பட்டன. குறிப்பாக மலையகத் தமிழர்களிடையே அவற்றை நான் கண்ணுற்றேன். அவற்றுக்கு ஓர் இனக்குழுமப் பரிமாணம் உண்டு என்பதையும் நான் கண்டுகொண்டேன்.


அவர்கள் 200 ஆண்டுகளுக்கு முன்னர் பெருந்தோட்டங்களில் வேலைசெய்வதற்காக இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள். அவர்களது தோற்றுவாய் இந்தியா என்பதனால், பற்பல பாகுபாடுகளை அவர்கள் தொடர்ந்தும் எதிர்கொண்டு  வருகின்றார்கள். 




லயம்


மலையக பெருந்தோட்டத் துறையில் ஊழியம்புரியும் தமிழர் பாகுபாட்டுக்கும், அடிமைவாழ்வுக்கும், சுரண்டலுக்கும், துர்ப்பிரயோகத்துக்கும் உள்ளாகி வருகின்றார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சனை, அவர்களால் காணி உடைமை அடைய முடியாமை ஆகும். ஆதலால் கட்டியாண்டோர் கட்டிவைத்த லயங்களில் அவர்கள் காலந்தள்ள வேண்டியுள்ளது. 


நான் கண்டி மாவட்டத்துக்கு பயணித்தபோது, மேற்படி லயங்களுக்குச் சென்றிருந்தேன். அங்கெல்லாம் அவர்கள் இழிவுக்குள்ளாகி வாழும் நிலை என் உள்ளத்தைப் பெரிதும் உறுத்துகின்றது. 12 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்ட சின்னஞ்சிறு அறையில் 5 முதல் 10 பேர் வரை வசிக்கின்றனர்; சாளரமோ தகுந்த சமையலறையோ கிடையாது; ஒருசில கழிப்பறைகளே உள்ளன; ஒரு கழிப்பறையை பல குடும்பங்கள் பயன்படுத்துகின்றன; சில லயங்களில் குழாய்நீர் வசதி இல்லை; மின்சார வசதி இல்லை… என்பதை எல்லாம் கண்டறிந்தேன். இந்திய அரசின் ஒத்துழைப்புடன் சில மாற்றுவீடுகள் கட்டப்படுவது எனக்குத் தெரியும். அதேவேளை லயங்களில் மக்கள் இன்னமும் தாழ்வுக்கும் இழிவுக்கும் உள்ளாகி வாழ்வது கண்டு நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன்.


மொழி


மலையக மக்களுக்கு மொழிப் பிரச்சனையும் உண்டு என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்களமும் தமிழும் இலங்கையின் ஆட்சிமொழிகள். எனினும் காவல்துறை அதிகாரிகள் சிங்களம் மட்டுமே பேசுபவர்கள். முறைப்பாடுகளை சிங்களத்தில் முன்வைக்கும்படி மக்களை அவர்கள் பலவந்தப் படுத்துகின்றனர். ஆதலால் துர்ப்பிரயோக முறைப்பாடுகளை முன்வைக்க முடியாமல் மக்கள் அல்லாடுகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இத்தகைய பிரச்சனை உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடிமைத்தளையின் தற்கால வடிவங்களுக்கும் மற்றும் பிற உரிமை-மீறல்களுக்கும் உரிய பரிகாரத்தையும் நீதியையும் தமக்குப் புரியும் மொழியில் நாடுவதற்குப் போதிய அறிவு தொழிலாளர் பலருக்கு கிடையாது. ஆதலால் சுரண்டலுக்கும் துர்ப்பிரயோகத்துக்கும் உள்ளானவர்கள் தமக்கு நேர்ந்தவற்றை அறிவிப்பதில் நாட்டம் குன்றியுள்ளதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது.


சாதி


இன்னொரு பிரச்சனையையும் இங்கு நான் கிளப்ப விரும்புகின்றேன். இலங்கையில் சாதிப்பாகுபாடு நிலவுவதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக வட மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பலரால் வேளாண்மைக்கு உகந்த காணியைப் பெற்றுக்கொள்ள முடிவதில்லை. தண்ணீர் வசதி கிடையாது. ஓரளவுக்கே பாசன வசதி உண்டு. வேலைத்தலங்களில் ஆதிக்க சாதிமான்களும் அரச அதிகாரிகளும் அவர்களை இழித்தும் பழித்தும் தொந்தரவு செய்வதாகவும் என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு பதவியுயர்வுக்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று கூறப்படுகின்றது. அவர்கள் வன்முறைக்கு உள்ளாகி வருவதும்  தெரியவந்துள்ளது. சாதிப்பிரச்சனை அடக்கிவாசிக்கப்படுவதாகவும், அதைக் குறித்து அதிகாரிகளும், சமூகங்களும் தகுந்த நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகவும் என்னிடம் தெரிவிக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட சாதியினர் பாகுபாட்டுக்கும், துர்ப்பிரயோகத்துக்கும் உள்ளாவதால், அவர்களுக்கு தரமான வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. ஆதலால் அவர்கள் அடிமைத்தளையின் தற்கால வடிவங்களுக்கு உள்ளாகும் ஆபத்து மேலோங்கி வருகிறது. இது என்னைத் துணுக்குற வைக்கிறது.    


ஓங்கும் படைமயமாக்கம்,  மங்கும் சமூக சுதந்திரம் 


தேயிலைத் தோட்டங்கள், ஆடைத் தொழிற்சாலைகள் போன்ற தனியார் வணிகத்துறைப் பதவிகளில் திரும்பத் திரும்ப ஓய்வுபெற்ற படையதிகாரிகள் அமர்த்தப்படுவதாக பற்பல தரப்பினர் என்னிடம் தெரிவித்துள்ளனர். அதன் மூலம் தொழிலாளரை அச்சுறுத்தி, வலுவான முறையில் கட்டுப்படுத்தும்  கட்டுக்கோப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. பொதுமக்களின் பிரதிநிதிகளும், மனித உரிமைக் காப்பாளர்களும், தொழிற்சங்க உறுப்பினர்களும் மிரட்டப்பட்டு, தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுவதையும், கொள்ளைநோய் தொடர்பான கட்டுப்பாடுகளினால் பொதுமக்களின் சுதந்திரமும், கூடிப்பேசும் சுதந்திரமும் குறுக்கப்பட்டு, சமூகத்தின் துடினமும், தொழிற்சங்கங்களின் தொழிற்பாடும் தணிக்கப்படுவதையும் அறிந்து நான் துணுக்குறுகின்றேன்.

_________________________________________________________________________

Tomoyo Obokata, UN expert, Contemporary forms of slavery in Sri Lanka, 2021-12-03,

translated by Mani Velupillai, 2021-12-07.

https://srilanka.un.org/en/161511-un-expert-calls-inclusive-society-end-scourge-slavery

No comments:

Post a Comment