ஐ.நா. உரை


மலாலா

2013-07-13 

அருளும் கருணையும் பொழியும் கடவுள் சாட்சியாக நான் ஆற்றும் உரை:

ஐ. நா. தலைமைச் செயலாளர் மாண்புமிகு பான் கி-மூன் அவர்களே,
ஐ. நா. பொது அவைத் தலைவர் மதிப்பிற்குரிய உவுக் ஜெரெமிக் அவர்களே,
ஐ. நா. உலக கல்வித் தூதர் மாண்புமிகு கோர்டன் பிரவுன் அவர்களே,  
மதிப்பிற்குரிய பெரியோர்களேஎன் அன்புச் சகோதர சகோதரிகளே, 

இன்றுபல நாட்களுக்குப் பிறகு திரும்பவும் உங்களுடன் உரையாடுவதை ஒரு பெருமையாகவே நான் கருதுகிறேன். இத்தகைய பெருமக்களுடன் கூடி உரையாடுவது எனது வாழ்வில் ஒரு மகத்தான தருணமாகும்.
எனது உரையை எங்கே தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை. நான் என்ன சொல்லப் போகிறேன் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. எனினும்முதற்கண் கடவுளுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். அவர் முன்னிலையில் நாங்கள் அனைவரும் சரிநிகரானவர்கள். நான் வெகுவிரைவில் குணமடைந்துபுதுவாழ்வுபெறப் பிரார்த்தித்த உங்கள் அனைவருக்கும் நான் நன்றி செலுத்துகிறேன். இத்துணை அன்பை மக்கள் என்மீது சொரிந்துள்ளார்கள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக் கணக்கான நல்வாழ்த்து அட்டைகளும் அன்பளிப்புகளும் என்னை வந்தடைந்துள்ளன. அதற்காக உங்கள் அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். தமது அப்பழுக்கற்ற சொற்களால் என்னை ஊக்குவித்த சிறியோருக்கு நான் நன்றி கூறுகிறேன். தமது பிரார்த்தனைகளால் எனக்கு வலுவூட்டிய பெரியோருக்கு நான் நன்றி கூறுகிறேன்.
பாகிஸ்தானிலும் பிரித்தானியாவிலும் உள்ள மருத்துவமனைகளில் நான் உடல்தேறவும்என் உடல்வலு மீளவும் உறுதுணைபுரிந்த எனது தாதியர்கள்மருத்துவர்கள்உத்தியோகத்தர்கள் அனைவருக்கும்ஐக்கிய அறபு அமீரக அரசுக்கும் இத்தால் நான் நன்றி செலுத்துகிறேன். ஐ.நா. செயலாளர்-நாயகம் திரு. பான் கி-மூன் அவர்களின் உலகளாவிய கல்விசார் முன்முயற்சிக்கும்ஐ.நா. சிறப்புத் தூதர் திரு. கோர்டன் பிரவுன் அவர்கள் ஆற்றிவரும் அரும்பணிக்கும்  நான் முழு ஆதரவு தெரிவிக்கிறேன். தமது தலைமைத்துவப் பணியை அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். நாங்கள் செயற்படும் வண்ணம் எங்கள் அனைவரையும் தொடர்ந்து ஊக்குவிக்கும் அவர்கள் இருவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்.
அன்பான சகோதர - சகோதரிகளேஒரு விடயத்தை உங்கள் உள்ளத்தில் பதித்துக் கொள்ளுங்கள்: இந்த மலாலா நாள்எனது நாள் அல்ல. தமது உரிமைகளுக்காக முழக்கமிட்ட மாதர்சிறுவர்சிறுமியர் அனைவரதும் நாள் இது.  நூற்றுக்கணக்கான மனித உரிமை வினைஞர்களும்சமூகப் பணியாளர்களும் மனித உரிமைகளுக்காக மட்டும் வாதாடவில்லை. கல்விஅமைதிசமத்துவம் சார்ந்த தமது குறிக்கோள்களை எய்துவதற்காகவும் அவர்கள் போராடி வருகிறார்கள். ஆயிரக்கணக்கானோர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளார்கள்.  இலட்சக்கணக்கானோர் குதறப் பட்டுள்ளார்கள். அவர்களுள் ஒருத்தியே நான். 
இதோ நான் நிற்கிறேன் - பலருள் ஒரு சிறுமியாக.
நான் பேசுவது–எனக்காக அல்லசிறுவர்சிறுமியர்
அனைவருக்குமாக.
நான் உரத்துக் குரலெழுப்புவது – கத்துவதற்காக அல்லகுரலெழுப்ப முடியாதவர்களின் குரலை ஒலிக்க வைப்பதற்காக;
தமது உரிமைகளுக்காகப் போராடி வந்துள்ள அவர்களுக்காக;
அமைதிவாழ்வு வாழ்வதற்கான அவர்களின் உரிமைக்காக;
கண்ணியமாக நடத்தப்படுவதற்கான அவர்களின் உரிமைக்காக;
சமவாய்ப்பு அடைவதற்கான  அவர்களின் உரிமைக்காக;
கல்வி புகட்டப்படுவதற்கான அவர்களின் உரிமைக்காக. 
அன்பு நண்பர் நண்பியரே2012 அக்டோபர் 9ம் திகதி தலிபான் எனது இடதுபக்க நெற்றியில் துப்பாக்கியால் சுட்டது. எனது நண்பர்நண்பியரையும் அவர்கள் சுட்டார்கள். துப்பாக்கிக் குண்டுகள் எங்கள் குரல்வளையை ஒடுக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அவர்கள் தோற்றுப் போய்விட்டார்கள். அதன் பிறகுஅக்குரல்வளையிலிருந்து ஆயிரமாயிரம் குரல்கள் எழுந்தன. எங்கள் இலக்குகளை தங்களால் மாற்றமுடியும் என்றும்எங்கள் வேட்கைகளை தங்களால் ஒடுக்கமுடியும் என்றும் பயங்கரவாதிகள் நினைத்தார்கள்.  எனினும் எனது வாழ்வில் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை. மாறாகஎனது பலவீனமே ஒழிந்ததுஎனது அச்சமே ஒழிந்ததுஎனது அவநம்பிக்கையே ஒழிந்தது.  எனக்கு வலுவும்வலிமையும்விறலும் பிறந்தன. அதே மலாலா தான் நான்! எனது வேட்கைகள் அதே வேட்கைகளே! எனது நம்பிக்கைகள் அதே நம்பிக்கைகளே! எனது கனவுகள் அதே கனவுகளே!
அன்பான சகோதர சகோதரிகளேநான் எவருக்கும் எதிரானவள் அல்ல. தலிபானுக்கு எதிராக எனது சொந்த வஞ்சத்தை தீர்த்துக்கொள்ளும் நோக்குடனும் இங்கு நான் உரையாற்ற வரவில்லை. பிள்ளைகள் அனைவருக்கும் கல்விகற்கும் உரிமை உண்டு என்பதை வலியுறுத்தி உரையாற்றுவதற்காகவே இங்கு நான் வந்திருக்கிறேன். தீவிரவாதிகள் அனைவரதும் புதல்வர் புதல்வியர்க்குகுறிப்பாக தலிபான்கள் அனைவரதும் புதல்வர் புதல்வியர்க்கு கல்வியறிவு வேண்டும்  என்பதே எனது கோரிக்கை.
என்னைச் சுட்ட தலிபானியரை நான் வெறுக்கவே இல்லை. எனது கையில் ஒரு துப்பாக்கி இருந்தாலும் கூடஅவர் என் முன்னிலையில் நின்றாலும் கூடஅவரை நான் சுடப்போவதில்லை. கருணாமூர்த்தியாம் முகமது நபியேசு நாதர்புத்தபிரான் ஆகியோரிடம் நான் கற்றறிந்த கருணை இதுவே. மார்ட்டின் லூதர் கிங்நெல்சன் மன்டேலாமுகமது அலி ஜின்னா ஆகியோரிடமிருந்து நான் ஈட்டிக் கொண்ட மாற்றம் என்னும் கொடை இதுவே. காந்தி அடிகள்பாச்சா கான்அன்னை தெரேசா ஆகியோரிடம் நான் கற்றறிந்த அகிம்சைநெறி இதுவே. எனது தாய்தந்தையரிடம் நான் கற்றறிந்த மன்னிக்கும் பண்பு இதுவே. அமைதிகாத்துஅனைவரையும் நேசி! இதையே என் அகம் எனக்குச் சொல்லித் தருகிறது.
அன்பான சகோதர சகோதரிகளேநாங்கள் இருளை எதிர்கொள்ளும் பொழுது ஒளியின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்கிறோம். எங்களுக்கு வாய்ப்பூட்டு போடப்படும்பொழுது எங்கள் குரலின் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந்துகொள்கிறோம். அதே போலவே வடக்கு பாகிஸ்தானிய சுவட் மாவட்டத்தில் துப்பாக்கிகளைக் கண்டபொழுது எழுத்தறிவின் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந்துகொண்டோம்.
"வாளிலும் வலியது எழுதுகோல்" என்னும் முதுமொழி மெய்யானதே. தீவிரவாதிகள் நூல்களையும் எழுதுகோல்களையும் கண்டு அஞ்சுகிறார்கள். கல்வியின் வலிமை அவர்களை அச்சுறுத்துகிறது. அவர்கள் பெண்களைக் கண்டு அஞ்சுகிறார்கள். அவர்கள் பெண்களின் குரல்வலிமையைக் கண்டு அஞ்சுகிறார்கள். ஆதலால்தான் அண்மையில் குவெட்டா மாநகரத்தில் அப்பாவி மருத்துவ மாணவிகள் 14 பேரை அவர்கள் சுட்டுக்கொன்றார்கள். கைபர் பக்துங்வா மாநிலத்திலும்நடுவண் அரசினால் நிருவகிக்கப்படும் தொல்குடிப்புலத்திலும் பல ஆசிரியைகளையும்இளம்பிள்ளைவாத நோயாளர்களைப் பராமரித்த பணியாளர்களையும் அவர்கள் சுட்டுக்கொன்றார்கள். பள்ளிக்கூடங்களை அன்றாடம் அவர்கள் தகர்த்தெறிந்து வருகிறார்கள். காரணம்: அவர்கள் மாற்றத்தைக் கண்டுஎங்கள் சமூகத்தில் நாங்கள் ஏற்படுத்தப்போகும் சமத்துவத்தைக் கண்டு  அஞ்சினார்கள்அஞ்சுகிறார்கள்.
எங்கள் பள்ளிக்கூடத்தில் ஒரு சிறுவனிடம் ஓர் ஊடகர் "தலிபான் ஏன் கல்வியை எதிர்க்கிறது?" என்று கேட்டது எனக்கு நினைவுக்கு வருகிறது. அச்சிறுவன் மிகவும் எளிய விடை ஒன்று பகர்ந்தான். தனது புத்தகத்தைக் காட்டி, "இந்தப் புத்தகத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பது தலிபானியர் எவர்க்கும் தெரியாது" என்று அவன் பதிலிறுத்தான். கடவுள் ஒரு சின்னஞ்சிறிய பிறவிகடவுள் ஒரு பழைமைபேணும் பிறவிபெண்கள் பள்ளிக்கூடம் சென்றவுடன்கடவுள் அவர்களை நரகத்துக்கு அனுப்பி வைப்பார்... என்று அவர்கள் நினைக்கிறார்கள்.  பயங்கரவாதிகள் இஸ்லாத்தின் பெயரையும்பஷ்துன் சமூகத்தையும் தவறாகப் பயன்படுத்தி வருகிறார்கள்தமது சொந்த நலன்களுக்குப் பயன்படுத்தி வருகிறார்கள். பாகிஸ்தான் என்பது அமைதியை நாடும் மக்களாட்சி நாடு. தமது புதல்வர்புதல்வியருக்கு கல்வியறிவு வேண்டும் என்பதே பஷ்துன் மக்களின் விருப்பம். அமைதிமனிதாபிமானம்சகோதரத்துவம் நாடும் மதம் இஸ்லாம். பிள்ளைகள் அனைவருக்கும் கல்விகற்கும் உரிமை உண்டு என்று மட்டும் இஸ்லாம் கூறவில்லைகற்பது அவர்களின் கடமையும் பொறுப்பும் ஆகும் என்றும் அது கூறுகிறது.
மாண்புமிகு தலைமைச் செயலாளர் அவர்களேகற்க வேண்டுமேல்அமைதி வேண்டும். உலகின் பல பாகங்களில்குறிப்பாக பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் நிகழும் போர்களும் பிணக்குகளும்பிள்ளைகள் பள்ளிசெல்வதைத் தடுத்து வருகின்றன. இப்போர்களால் நாங்கள் மிகவும் நலிந்து சலித்துப் போயிருக்கிறோம்.  உலகின் பல பாகங்களில் பெண்களும் பிள்ளைகளும் பல விதங்களில் நலிந்து வருந்தி வருகிறார்கள். இந்தியாவில் ஏழை அப்பாவிப் பிள்ளைகள் ஊழியம் புரிந்து நலிந்து வருகிறார்கள். நைஜீரியாவில் பள்ளிக்கூடங்கள் பலவும் அழிக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் பல தசாப்தங்களாக தீவிரவாதத் தடைகளினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சின்னஞ்சிறுமியர் வீடுவளவுகளில் ஊழியம் புரிய வேண்டியுள்ளதுஅவர்கள் இளவயதில் மணம் முடிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். வறுமைஅறியாமைஅநீதிஇனவாதம்அடிப்படை உரிமை மறுப்பு என்பனவே ஆண்களும் பெண்களும் எதிர்நோக்கும் தலையாய பிரச்சனைகள்.
அன்பர்களேமாதரும் சிறுமியருமே இன்று அதிகம் வருந்தி வருகிறார்கள். ஆதலால்தான் மாதரின் உரிமைகளிலும்சிறுமியரின் கல்வியிலும் இங்கு நான் புலைனைச் செலுத்துகிறேன். பெண்களின் உரிமைகளுக்காக வாதாடும்படி சமூகப்பணி ஆற்றிய பெண்கள் ஆண்களை வேண்டிய காலம் அது. எங்களின் உரிமைகளுக்காக நாங்களே வாதாடும் காலம் இது. பெண்களின் உரிமைகளுக்காக முழங்க வேண்டாம் என்று ஆண்களிடம் நான் கூறவில்லை. தங்களுக்காகப் போராடுவதற்கான பெண்களின் சுதந்திரத்திலேயே இங்கு நான் புலைனைச் செலுத்துகிறேன்.
அன்பான சகோதர சகோதரிகளேநாங்கள் ஓங்கி முழங்கவேண்டிய தருணம் இது. உலகத் தலைவர்களே:
 உங்கள் தந்திரோபாயக் கொள்கைகளை அமைதிக்கும் செழிப்புக்கும் உசிதமாக மாற்றியமைத்துக் கொள்ளும்படி உங்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். 
அமைதிப் பேரங்கள் அனைத்திலும் பெண்களின் உரிமைகளையும் சிறுவர்களின் உரிமைகளையும் பாதுகாக்கும்படி உங்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பெண்களின் கண்ணியத்தையும் உரிமைகளையும் மீறும் பேரம் எதுவும் ஏற்கத்தக்கதல்ல.
உலகம் முழுவதும் வாழும் பிள்ளைகள் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்விப் போதனையை நிலைநிறுத்தும்படி உலக அரசுகளிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராகப் போராடும்படியும்கொடுமைக்கும் கொடூரத்துக்கும் உள்ளாகாவாறு பிள்ளைகளைப் பாதுகாக்கும்படியும் உலக அரசுகளிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
வளரும் நாடுகளில் சிறுமியர் கல்விபயிலும் வாய்ப்புகளைப் பெருக்கத் துணைநிற்கும்படி வளர்ந்த நாடுகளிடம்  நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
சகிப்புணர்வு பேணும்படி – சாதிசமயம்சாகைபால்மை அடிப்படையில் பாரபட்சம் காட்டுவதை நிராகரிக்கும்படிபெண்கள் சிறக்கும் வண்ணம் அவர்களுடைய சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் நிலைநிறுத்தும்படி உலக சமூகங்கள் அனைத்திடமும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். எங்களுள் அரைவாசிப் பேரைத் தடுத்து நிறுத்திவிட்டு நாங்கள் அனைவரும் வெல்ல முடியாது. 
நெஞ்சுரம் கொள்ளும்படி – தங்களுக்குள் உறையும் வலிமையைக் கையாளும்படிதங்கள் இயல்திறன் முழுவதையும் எய்திக்கொள்ளும்படி உலகம் முழுவதும் வாழும் எங்கள் சகோதரிகளிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.   
அன்பான சகோதர சகோதரிகளேபிள்ளைகள் அனைவரதும் எதிர்காலத்தைச் சிறக்க வைப்பதற்குஎமக்குப் பள்ளிக்கூடங்கள் தேவை. அனைவருக்கும் அமைதியும் கல்வியும் கிடைக்க வகைசெய்யும் இலக்கை நோக்கி எங்கள் பயணத்தை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம். எங்களை எவராலும் தடுத்துநிறுத்த முடியாது. எங்கள் உரிமைகளுக்காக நாங்கள் வாதாடுவோம். எங்கள் முழக்கத்தின் மூலம் நாங்கள் மாற்றத்தைப் புகுத்துவோம். எங்கள் சொல்வலுவிலும் சொல்வன்மைமையிலும் நாங்கள் நம்பிக்கை கொள்வோம். எங்கள் சொற்களால் உலகை மாற்ற முடியும்.
கல்வி என்னும் குறிக்கோளுக்காக நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்துள்ளோம். ஆதலால் எங்கள் குறிக்கோளை எய்துவதற்குஅறிவாயுதம் கொண்டு எங்களை வலுப்படுத்துவோம். ஒற்றுமைஒருங்கிணைவு கொண்டு எங்களைத் தற்காத்துக் கொள்வோம்.
அன்பான சகோதர சகோதரிகளேபல இலட்சக் கணக்கான மக்கள் வறுமைக்கும்அநீதிக்கும்அறியாமைக்கும் உட்பட்டு வருந்துவதை நாங்கள் மறந்துவிடக் கூடாது. பல இலட்சக் கணக்கான பிள்ளைகள் பள்ளிக்கூடம் செல்வதில்லை என்பதை நாங்கள் மறந்துவிடக் கூடாது. எங்கள் சகோதரசகோதரிகள் வளமும் அமைதியும் மிகுந்த எதிர்காலத்தை எதிர்பர்த்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் மறந்துவிடக் கூடாது.
ஆகவே ஏழ்மைஎழுத்தறிவின்மைபயங்கரவாதம் என்பவற்றுக்கு எதிராக நாங்கள் ஓர் உலகப் போர் தொடுப்போம். அதற்கு எங்கள் நூல்களையும் எழுதுகோல்களையும் ஆயுதங்களாகப் பயன்படுத்துவோம். அவையே எங்கள் மாபெரும் வல்லாயுதங்கள்.
ஒரு பிள்ளையால்ஓர் ஆசிரியரால்ஓர் எழுதுகோலினால்ஒரு நூலினால் உலகை மாற்ற முடியும்.  
கல்வி ஒன்றே தீர்வு. கல்விக்கு முதன்மை அளிப்போமாக!
____________________________________________________________________________________________________
Malala Yousafzai's Speech to the UN, 2013-07-13, தமிழ்: மணி வேலுப்பிள்ளை

No comments:

Post a Comment