“இந்தியாவில் இனப்படுகொலை இடம்பெறக்கூடும்!”
இனப்படுகொலை கண்காணிப்பகம் எச்சரிக்கை
“இந்தியாவில் இனப்படுகொலை இடம்பெறக்கூடும்” என்று இனப்படுகொலை கண்காணிப்பகம் (Genocide Watch) எச்சரித்துள்ளது. இனப்படுகொலை என்பது வெறுமனே ஒரு நிகழ்வல்ல என்றும், அது ஒரு படிமுறை என்றும், அப்படிமுறை இந்தியாவில் இடம்பெற்று வருகிறது என்றும் அது தெரிவித்துள்ளது. அத்தகைய படிமுறையில் 10 கட்டங்களை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது:
1. மக்களை இனம்பிரித்தல்: “நாங்கள் / அவர்கள்” என இனம்பிரிப்பதை இது குறிக்கிறது. “நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள், அவர்கள் வந்தேறுகுடிகள்” எனும் முழக்கம் அதை உணர்த்துகிறது.
2. முத்திரைகுத்தல்: “நாங்கள் இந்துக்கள், அவர்கள் முஸ்லீங்கள்” என்று முத்திரைகுத்துவதை இது குறிக்கிறது. “முஸ்லீங்களின் உடையை வைத்தே அவர்களைக் கண்டுபிடிக்கலாம்” என்பது ஒரு தலைவரின் பேர்போன கூற்று!
3. ஏற்றத்தாழ்வு கற்பித்தல்: “நாங்கள் குடிமக்கள். எங்களுக்கே குடியுரிமையும், மனித உரிமையும் உண்டு. அவர்கள் வந்தேறுகுடிகள். அவர்களுக்கு குடியுரிமையோ, மனித உரிமையோ கிடையாது.” அதன்படி காஷ்மீரில் ஏறத்தாழ 70 ஆண்டுகளாக நிலவிய சிறப்புத் தன்னாட்சி உரிமை 2019ல் நீக்கப்பட்டது. ஏனைய சிறுபான்மை மதத்தவர்க்கு குடியுரிமை அளிப்பதற்கும், அதே குடியுரிமையை முஸ்லீங்களுக்கு மறுப்பதற்கும் ஏதுவாக குடியுரிமைச் சட்டம் திருத்தப்பட்டது.
4. விலங்குநிலைக்குத் தாழ்த்தல்: சிறுபான்மையோரை விலங்குகளாகவும், புழுக்களாகவும், பீடைகளாகவும் நடத்துவதை இது குறிக்கிறது. முஸ்லீங்களை “கறையான்கள்” என்றும், "ஊடுருவிகள்" என்றும் ஓர் அமைச்சர் தூற்றியுள்ளார். இந்துக் கும்பல்கள் முஸ்லீங்களை நடுத்தெருவில் ஆடைகளைந்து தாக்கிய செய்தியும், எச்சில் சுவைக்க வைத்த செய்தியும், அவர்களின் பாலுறுப்பில் மிளகாய்த்தூள் கொட்டிய செய்தியும்… வெளிவந்துள்ளன. “இந்தியாவில் முஸ்லீங்களை விட பசுக்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிகிறது!” என்ற வசனம் தனது காதில் விழுந்ததாகத் தெரிவிக்கிறார் சசி தரூர்.
5. கூடித்திட்டமிடல்: ஆட்சியாளரும் குடிப்படையும் கூடி இனப்படுகொலைக்குத் திட்டமிடுவதை இது குறிக்கிறது. ஆதலால் கொலையாளிகள் மீது வழக்குத் தொடுக்கப்படுவதும், அவர்கள் தண்டிக்கப்படுவதும் அரிது.
6. இருமுனைப்படுத்தல்: இன்னார் அல்லது இன்ன குழுமம், கட்சி, ஊடகம், ஆய்வாளர்… எங்கள் தரப்பு; அல்லது எதிர்த்தரப்பு. எங்கள் தரப்பில் எண்ணிறந்தோர் இருக்கிறார்கள். எதிர்த்தரப்பைச் சேர்ந்தவர்கள் ஒருசிலரே. நாங்கள் எங்கள் சமூக ஊடக பட்டாளத்தைப் பயன்படுத்தி அந்த எதிர்த்தரப்பினரை எதிரிகட்டல், மிரட்டல், அவர்களின் கூற்றுகளைத் திரிவுபடுத்தல், தணிக்கைசெய்தல், இருட்டடிப்புச் செய்தல், அவர்களுக்கு “மதச்சார்பற்ற நோயாளிகள் (SICKULARS), ஊடக விபசாரிகள் (PRESSTITUTES), வெளிநாட்டுக் கைக்கூலிகள், தேசத்துரோகிகள், ஒட்டுண்ணிகள்”… என்றெல்லாம் வசைகற்பித்தலை இது குறிக்கிறது.
7. ஆயத்தப்படுத்தல்: வந்தேறுகுடிகளை தீர்த்துக்கட்ட ஆயத்தம் செய்வதை இது குறிக்கும். அதை நியாயப்படுத்துவதற்கு இடக்கரடக்கல்கள் பலவும் கைகொடுக்கும். எடுத்துக்காட்டாக ஜேர்மனியில் “இறுதித்தீர்வு” காண்பதற்கு, அதாவது நச்சுவாயு பாய்ச்சி யூதர்களைக் கொல்வதற்கு முன்னேற்பாடு செய்யப்பட்டது. குடிப்படையைத் திரட்டி, ஊர்திகளில் ஏற்றியிறக்கி, உணவும் ஆயுதமும் வழங்கி “மனிதாபிமான நடவடிக்கை, பாதுகாப்பு நடவடிக்கை, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை…” எடுக்க ஆயத்தம் செய்வதெல்லாம் இதனுள் அடங்கும்.
8. கொடுமைப்படுத்தல்: எதிரிகட்டப்படும் இனத்தவரின் அல்லது சமயத்தவரின் மனித உரிமைகள் மறுக்கப்படுவதை இது குறிக்கும். முஸ்லீங்களை இடம்பெயர்த்தல், சிறையில் அடைத்தல், வதைத்தல், குடும்பங்களைப் பிரித்தல், பிழைப்பைக் கெடுத்தல், சொத்துக்களை அழித்தல், வீடுவளவுகளைக் கொழுத்தல், காணிபூமிகளிலிருந்து விரட்டியடித்தல் அனைத்தும் இதனுள் அடங்கும்.
9. ஒழித்துக்கட்டல்: ஆட்சியாளரும் படையினரும் குடிப்படையும் கூடி இனப்படுகொலை புரிதல்; அதாவது சிறுபான்மை இனத்தவரை அல்லது சமயத்தவரை தாக்கி, வெட்டி, சுட்டுக் கொல்லுதல்; காணாமல் போக்கடித்தல், விரட்டியடித்தல். “20 கோடி முஸ்லீங்களும் பாகிஸ்தானுக்குப் பெயரவேண்டும்; எங்களுள் 100 பேர் அவர்களுள் 20 இலட்சம் பேரைக் கொன்றால், எங்களால் இந்தியாவை ஓர் இந்துநாடாக மாற்ற முடியும்” என்பது இந்து மகா சபையின் முழக்கம்!
10. மறுத்தல்: இனப்படுகொலை புரிந்தவர்களும், அதற்கு உடந்தையாய் இருந்தவர்களும் இனப்படுகொலை புரியப்பட்டதை மறுத்துரைத்தல். அதற்கு ஆட்சியாளரின் அதிகாரபூர்வமான ஊதுகுழல்களும், மைய ஊடகங்களும், மேட்டிமைக் குழாங்களும் துணைநிற்கும். மார்ட்டின் லூதர் கிங் சுட்டிக்காட்டியது போல், “கண்டுங்காணாமல், தட்டிக்கேட்காமல் அமைதிகாப்பதும் ஒத்தாசை புரிவதற்கு நிகரானதே.”
முசோலினி ஹிட்லர்
1914ல் முசோலினியின் தலைமையில் ஓங்கிய பாசிச குடிப்படையின் குறிக்கோள்: இரண்டாம் உரோமப் பேரரசு. 1920ல் ஹிட்லர் தோற்றுவித்த நாஜி குடிப்படயின் குறிக்கோள்: மூன்றாம் ஜேர்மன் பேரரசு. 1925ல் ஹெஜேவர் அமைத்த ஆர். எஸ். எஸ். குடிப்படையின் குறிக்கோள்: இந்துத்துவ இந்தியா. ஒரே நாடு, ஒரே இனம், ஒரே கட்சி, ஒரே அரசு, ஒரே ஆட்சியாளர்… என்பதே குடிப்படையின் ஒரே நிலைப்பாடு.
சவார்க்கர் ஹெஜேவர்
கோல்வால்க்கர் பால தக்கரே
இத்தாலியில் கருஞ்சீருடை அணிந்த குடிப்படை பாசிசத்தை முன்னெடுத்தது போல், ஜேர்மனியில் பழுப்புச் சீருடை அணிந்த குடிப்படை நாஜிசத்தை முன்னெடுத்தது போல், இந்தியாவில் காக்கிச்சீருடை அணிந்த ஆர். ஸ். எஸ். இந்துத்துவத்தை முன்னெடுத்து வருகிறது. இந்தியாவில் காக்கிச் சீருடையும், காவிச் சீருடையும் இரண்டறக் கலந்து மிளிர்கின்றன.
சவார்க்கரை வணங்கும் மோதி
பாசிச குடிப்படை
நாஜி குடிப்படை
ஆர். எஸ். எஸ். குடிப்படை
ஆர். எஸ். எஸ். குடிப்படையில் மோதி
இனப்படுகொலையை ஐ. நா. இப்படி வரையறுத்துள்ளது: "தேசிய, இனத்துவ, பேரின, சமயக் குழுமம் எதையும் முழுமையாகவோ பகுதியாகவோ அழித்தொழிக்கும் எண்ணத்துடன் புரியப்படும் பின்வருவன போன்ற செயல் எதுவும் இனப்படுகொலை ஆகும்: அக்குழுமத்தவர்களைக் கொல்லுதல்; அக்குழுமத்தவருக்கு பாரதூரமான உடலூறு அல்லது உளவூறு விளைவித்தல்; அக்குழுமத்தவருக்கு முற்றிலும் அல்லது ஓரளவு ஆளழிவு ஏற்படுத்தும் நோக்குடன் அவர்களை வேண்டுமென்றே அத்தகைய வாழ்க்கை நிலைமைகளுக்கு உள்ளாக்குதல்; அக்குழுமத்துள் பிறப்புகளைத் தடுக்கும் எண்ணத்துடன் நடவடிக்கை எடுத்தல்; அக்குழுமத்துப் பிள்ளைகளை வலிந்து இன்னொரு குழுமத்துக்குப் பெயர்த்தல்" (இனப்படுகொலைக் குற்றம் தடுத்தல்-தண்டித்தல் ஒப்பந்தம், ஐ.நா.,1948).
1947 முதல் இற்றைவரை இந்தியாவில் பல படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. காஷ்மீரில் அது தொடர்கதை போல் நடந்துள்ளது. 1984ல், தலைநகர் தில்லியில், 2700 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதாக பிரதமர் வாஜ்பாயி தெரிவித்தார். 600 சீக்கியர் மட்டுமே கொல்லப்பட்டனர் என்று காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்ட எண்ணிக்கையை விட அது 4 மடங்கு அதிகம். 2002ல், குஜராத்தில் 790 முஸ்லீங்கள், 254 இந்துக்கள் கொல்லப்பட்டதாகவும், 223 பேர் காணாமல் போனதாகவும், 2,500 பேர் காயப்பட்டதாகவும் நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
சல்மன் ருஷ்டி
இந்தியாவின் இன்றைய நிலையை சல்மன் ருஷ்டி இப்படி விவரிக்கிறார்: “1975 முதல் 1977 வரை நிலவிய அவசரகால கட்டத்தை விடவும் இருண்ட காலகட்டத்துள் இந்தியா இன்று புகுந்து கொண்டதாகவே எனது உள்ளம் கொண்ட ஒருவருக்குத் தென்படுகிறது. பெண்கள் மீது நிகழ்த்தப்படும் கொடூரமான தாக்குதல்கள் பெருகியுள்ளன. அரசின் எதேச்சாதிகாரத் தன்மை அதிகரித்துள்ளது. எதேச்சாதிகாரத்தை எதிர்க்கத் துணிவோர் நியாயமின்றிக் கைதுசெய்யப்படுகிறார்கள். சமய வெறித்தனம் மேலோங்கியுள்ளது. இந்தியாவை ஓர் இந்து தேசிய பெரும்பான்மைவாத அரசாக மாற்ற எண்ணுவோரின் வியாக்கியானத்துக்கு உசிதமான முறையில் வரலாறு மீட்டி எழுதப்படுகிறது. இப்படி எல்லாம் நடந்தும் கூட, அதைவிட மோசம் எனும்படியாக, இப்படி எல்லாம் நடந்தபடியால் ஆட்சிபீடத்துக்கு மக்களின் ஆதரவு பெருகியுள்ளது - இவை எல்லாம் ஓர் ஆற்றாமை உணர்வை ஏற்படுத்துகின்றன (Salman Rushdie, London Guardian, 2021-04-03).
இன்று ருஷ்டிக்கு ஏற்பட்டுள்ள ஆற்றாமை உணர்வு, அன்று அம்பேத்கர் விடுத்த எச்சரிக்கையை நினிவூட்டுகிறது: “கடந்தகாலம் மீண்டும் நிகழ்காலம் ஆகுமா? அந்த எண்ணமே என்னைப் பதைக்க வைக்கிறது. சாதிகளின் உருவிலும், சமயங்களின் உருவிலும் எங்கள் பழைய எதிரிகளை நாங்கள் எதிர்கொள்ளப் போகின்றோம்; அத்துடன் எதிர்மாறான பல்வேறு அரசியல் நெறிகளுடன் கூடிய கட்சிகளையும் நாங்கள் எதிர்கொள்ளப் போகின்றோம்; அதை உணரும்பொழுது என் பதைப்பு அதிகரிக்கிறது. இந்தியர்கள் தமது சமயநெறிக்கு மேலாக நாட்டை மதிப்பார்களா, அல்லது நாட்டுக்கு மேலாகச் சமயநெறியை மதிப்பார்களா? எனக்குத் தெரியாது? ஆனால் ஒன்று மட்டும் உறுதி: எங்கள் கட்சிகள் நாட்டுக்கு மேலாக சமயநெறியை மதித்தால், எங்கள் சுதந்திரம் இரண்டாவது தடவை இக்கட்டுக்கு உள்ளாகும்; என்றென்றும் அதை நாங்கள் இழக்கவும் கூடும். அவ்வாறு நேராவாறு நாங்கள் அனைவரும் உறுதிபடக் கண்காணிக்க வேண்டும். எங்கள் குருதியில் கடைசித் துளி உள்ளவரை எங்கள் சுதந்திரத்தைக் கட்டிக்காக்க நாங்கள் திடசித்தம் கொள்ள வேண்டும்” (Ambedkar, Constituent Assembly, India, 1949-11-25).
_______________________________
மணி வேலுப்பிள்ளை, 2021-01-25.
https://www.genocidewatch.com/single-post/genocide-warning-india
No comments:
Post a Comment