வழக்குரை (1)

 

சாக்கிரத்தீஸ் 

(பொ. ஊ. மு. 469-399)

 

 


பிளேட்டோ

(பொ. மு. 427-347)


சாக்கிரத்தீசின் வழக்குரை (1)

(பிளேட்டோவின் பதிவு)


பெரியோர்களே, என்மீது குற்றஞ்சுமத்தியோர் உங்கள் உள்ளத்தில் ஏற்படுத்தியிருக்கக்கூடிய தாக்கத்தை நான் அறியேன். ஆனால் நானோ அவர்களால் ஆட்கொள்ளப்படும் நிலைக்கு உள்ளாகிப்போனேன். அத்துணை நம்பிக்கை ஊட்டும் வாதங்களை அவர்கள் முன்வைத்தார்கள். ஆனாலும் அவர்கள் உதிர்த்த சொல் ஒன்று கூட கொஞ்சமும் உண்மை இல்லை.

 

அவர்களின் தவறான கூற்றுக்களுள் குறிப்பாக ஒன்று என்னை வியக்க வைத்தது. நான் ஒரு திறமையான பேச்சாளன் என்று பொருள்படும் வண்ணம், நான் உங்களை ஏய்க்கா வண்ணம், நீங்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறியது என்னை வியக்க வைத்தது.

 

திறமையான பேச்சாளன் என்பதற்கு உண்மை உரைக்கும் பேச்சாளன் என்று அவர்கள் பொருள் கொண்டிருக்க வேண்டும்; மற்றும்படி, எனக்கு நாவன்மை அறவே கிடையாது என்பது தெரியவரும்பொழுது, அவர்களுடைய கூற்று அடியோடு பொய்த்துவிடும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்; ஆதலால், நான் ஒரு திறமையான பேச்சாளன் என்று அவர்கள் சற்றும் கூசாமல் உங்களிடம் கூறியது, அவர்களின் சிறப்பியல்பான இறுமாப்பை உணர்த்துவதாகவே நான் எண்ணிக் கொண்டேன். திறமையான பேச்சாளன் என்பதற்கு உண்மை உரைக்கும் பேச்சாளன் என்று அவர்கள் பொருள்கொண்டால், நான் ஒரு பேச்சாளன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நான் அவர்களைப் போன்ற ஒரு பேச்சாளன் அல்ல.

 

என்மீது குற்றஞ்சுமத்தியோர் கூறியதில் உண்மை எதுவும் இல்லை, அல்லது உண்மை கொஞ்சமும் இல்லை என்பதே எனது வாதம். பெரியோர்களே, நான் கூறும் முழு உண்மையையும் நீங்கள் காதில் விழுத்த வேண்டும். அதேவேளை அவர்கள் கையாண்டது போன்ற செவ்விய சொற்களுடன், தொடர்களுடன் கூடிய அணிமொழியில் நான் பேசமாட்டேன் என்று உங்களுக்கு உறுதிகூறுகிறேன். எனது குறிக்கோளில் பொதிந்துள்ள நீதியில் எனக்கு நம்பிக்கை உண்டு. அதைவிட வேறெதையும் எனது பேச்சில் நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது. ஆகவே என் உள்ளத்துள் முதன்முதல் எழும் சொற்களில் ஒரு நேர்சீரான பேச்சை நீங்கள் செவிமடுக்கப் போகிறீர்கள்.

 

பெரியோர்களே, என்னைப் போல் ஒரு முதியவர் நாவன்மை படைத்த ஒரு பாடசாலைப் பையனைப் போல் செயற்கை மொழியில் உங்களை விளித்துப் பேசுவது கொஞ்சமும் பொருந்தாது. இந்த மாநகரத்தின் வெட்ட வெளிகளிலும், மற்ற இடங்களிலும் நான் பேசுவதை நீங்கள் பலரும் கேட்டிருப்பீர்கள். அவ்வாறு நான் கையாண்டு பழகிய மொழியில் என் பதில்வாதத்தை நான் முன்வைக்கக் கேட்டால், தயவுசெய்து திடுக்கிட்டுக் குறுக்கிட வேண்டாம் என்று உங்களிடம் உளமார மன்றாடி வேண்டிக் கொள்கிறேன்.

 

முதலில் எனது நிலைப்பாட்டை உங்களுக்கு நான் நினைவுறுத்த விரும்புகிறேன். நீதிமன்ற மொழி எனக்கு அடியோடு தெரியாது. இந்த எழுபது வயதில் முதல் தடவையாக நான் நீதிமன்றில் வெளிப்பட்டுள்ளேன். உண்மையில் நான் ஒரு பிறநாட்டவன் என்றால், என்னை ஊட்டிவளர்த்த முறையிலும் மொழியிலும் நான் பேச முற்பட்டால், நீங்கள் என்னை மன்னிக்கத் தலைப்படுவது இயற்கையே. ஆதலால் தற்போதைய சூழ்நிலையில் இந்த வேண்டுகோளை உங்கள்முன் வைக்கிறேன். நான் பேசும் விதம் நன்றோ மோசமோ, அதைப் பொருட்படுத்த வேண்டாம்; எனது வாதங்கள் செவ்விய வாதங்களா அல்லவா என்ற வினாவில் மட்டுமே புலனைச் செலுத்தவும்; இப்படிக் கேட்பதை மிகவும் நியாயமான ஒரு வேண்டுகோளாகவே நான் கருதுகிறேன். அதுவே நடுவர்களின் தலையாய கடமை. எப்படி உண்மை உரைப்பது வழக்குரைஞரின் கடமையோ, அப்படி.  

 

நடுவர்களே, என்மீது சுமத்தப்பட்ட ஆகப்பழைய போலிக் குற்றச்சாட்டுகளையும், குற்றஞ்சுமத்தியோருள் ஆகப்பழையவர்களையும் முதற்கண் கருத்தில் கொண்ட பின்னர், அடுத்தவற்றையும் அடுத்தவர்களையும் கருத்தில் கொள்வதே தகும். நான் இப்படி வேறுபடுத்தக் காரணம் உண்டு. ஏற்கெனவே பல ஆண்டுகளாகப் பெருந்தொகையானோர் உங்கள் காதில் விழும் வண்ணம் என்மீது குற்றஞ்சுமத்தியுள்ளனர். அவர்களுடைய குற்றச்சாட்டுக்களில் ஒரு சொல்லும் உண்மை இல்லை. புதுக்க என்மீது குற்றஞ்சுமத்தியுள்ள அனைட்டசும், அவரது சகபாடிகளும் பயங்கரமானவர்கள். எனினும் அவர்களை விட  பழையவர்களுக்கே நான் மிகவும் அஞ்சுகிறேன். புதியவர்களை விட பழையவர்கள் மிகவும் பயங்கரமானவர்கள்.

 

உங்களுள் பலர் சிறுவர்களாக இருந்தபொழுது உங்களைப் பிடித்து, உங்கள் உள்ளத்துள் எனக்கெதிரான போலிக் குற்றச்சாட்டுகளை இட்டு நிரப்பியவர்களைக் கருதியே அப்படிக் கூறுகிறேன். "சாக்கிரத்தீஸ் என்றொரு ஞானி இருக்கிறான்; அவன் விண்ணுலகு பற்றிய கோட்பாடுகள் கொண்டவன்; மண்ணுலகத்துக்கு கீழ்ப்பட்ட அனைத்தையும் ஆராய்ந்தவன்; வலுவுற்ற வாதத்தை வலுவற்ற வாதம் வெல்லும்படி செய்பவன்" என்று உங்களிடம் தெரிவித்தவர்களைக் கருதியே அப்படிக் கூறுகிறேன்.  

 

மேற்படி சங்கதிகளை ஆராயும் எவரும் ஒரு நாத்திகராகவே இருக்க வேண்டும் என்று அத்தகைய வதந்திகளைக் கேட்பவர்கள் நினைப்பார்கள். ஆதலால், பெரியோர்களே, வதந்திகள் பரப்பி என்மீது குற்றஞ்சுமத்துவோரே மிகவும் பயங்கரமானவர்கள். உங்களுள் சிலர் சிறுவர்களாகவோ வளரிளம் பருவத்தவர்களாகவோ விளங்கிய காலத்தில், ஏதாவது உங்கள் உள்ளத்துள் மிகவும் பதியத்தக்க வயதில், உங்களை அவர்கள் அணுகியிருக்கிறார்கள். அப்பொழுது எனக்காக வாதாட எவருமே இல்லை. ஆகவே அறவே எதிர்வாதமற்ற வெற்றியை அவர்கள் ஈட்டிக்கொண்டார்கள். 

 

இங்கு மிகவும் விசித்திரமான சங்கதி என்னவென்றால், அவர்களுள் ஒருவர் ஒரு நாடகாசிரியராக விளங்கினாலொழிய, அவர்களின் பெயர்களை அறிந்து உங்களிடம் கூறுவது கூட எனக்குச் சாத்தியப்படாது. என்மீது பொறாமைப்பட்டு, அவதூறுபடுத்த ஆசைப்பட்டு, உங்களை எனக்கெதிராக ஏவிவிட முயன்ற இவர்கள் அனைவரையும், வெறுமனே மற்றவர்கள் கூறியதைக் கேட்டு அப்படியே அடுத்தவர்களிடம் கூறிய சிலரையும் இங்கு விசாரணைக்கு உட்படுத்துவது மிகவும் கடினம். குறுக்கு விசாரணைக்கு அவர்களை இங்கு கொண்டுவருவது அசாத்தியம். எனக்குப் பதில்கூற எவருமே இல்லை. ஆதலால், எனது பதில்வாதத்தை மட்டுமே நான் நிகழ்த்த வேண்டியுள்ளது. கண்ணுக்குப் புலப்படாத ஓர் எதிராளிக்கு எதிராகவே எனது பதில்வாதத்தை நான் நிகழ்த்த வேண்டியுள்ளது.

 

என்மீது குறைகூறுவோர் இரு பிரிவினர் என்று நான் கூறுவதை ஏற்றுக்கொள்ளும்படி உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். என்மீது குற்றஞ்சுமத்திய பழையவர்கள் என்று நான் கூறியோர் ஒருபுறம், புதியவர்கள் மறுபுறம். பழையவர்களின் குற்றச்சாட்டுகளுக்கே எனது பதில்வாதத்தை நான் முதலில் முன்வைக்க வேண்டியுள்ளது என்று நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். என்னதான் கூறினாலும், மிகவும் நீண்ட காலத்துக்கு  முன்னரே, புதியவர்களை விட மிகவும் வன்மையான முறையில்,  பழையவர்கள் என்னைப் பழிதூற்றியதை நீங்கள் செவிமடுத்ததுண்டு.

 

மெத்த நல்லது, பெரியோர்களே, எனது பதில்வாதத்தில் இனி நான் இறங்க வேண்டியுள்ளது. பல்லாண்டுகளாக உங்கள் உள்ளத்துள் பதிந்துள்ள தவறான எண்ணத்தை எனக்கு கிடைத்த குறுகிய நேரத்துள் களைவதற்கு நான் முயல வேண்டியுள்ளது. எனது பதில்வாதத்தின் பெறுபேறாக அது களையப்படுவதையே நான் விரும்புகிறேன். பெரியோர்களே, அது உங்களுக்கும் எனக்கும் நலம்பயக்கும் என்று எண்ணுகிறேன். எனது பதில்வாதத்தில் நான் வெற்றியீட்ட விரும்புகிறேன். ஆனால் அது கடினம் என்று நினைக்கிறேன். எனது முயற்சியின் தன்மையை நான் நன்கு அறிந்தவன். எவ்வாறாயினும், கடவுள் விரும்பியபடி அது நிகழட்டுமே! நானோ சட்டத்துக்கு அடிபணிந்து எனது பதில்வாதத்தை முன்வைக்க வேண்டியுள்ளது.

 

இனி நாங்கள் பின்னோக்கிச் சென்று, என்னை இகழ்ச்சிக்கு இட்டுச்சென்ற குற்றச்சாட்டு என்ன, இப்பொழுது மெலிட்டசை கடுங்குற்றச்சாட்டு வரையத் தூண்டியது என்ன என்பதைக் கருத்தில் கொள்வோம். மெத்த நல்லது, பெரியோர்களே, என்மீது குறைகூறுவோர் எனது குணவியல்பைக் கண்டித்துக் கூறியது என்ன? அவர்களை என்மீது சட்டப்படி குற்றஞ்சுமத்தியோராகப் பாவனைசெய்து, அவர்களுடைய சத்தியக் கடதாசியை நான் இப்படி வாசித்துக் காட்ட வேண்டியுள்ளதாக வைத்துக்கொள்ளலாம்:

 

சாக்கிரத்தீஸ் மண்ணுலகின் கீழேயும், விண்ணுலகின் மேலேயும் உள்ளவற்றை ஆராய்ந்து திரிவுபடுத்திய குற்றத்தையும், வலுவுற்ற வாதத்தை வலுவற்ற வாதம் வெல்லும்படி செய்யும் குற்றத்தையும், தனது எடுத்துக்காட்டைப் பின்பற்றும்படி மற்றவர்களுக்குப் போதித்த குற்றத்தையும் புரிந்தவன்…


அரிஸ்டோபேன்ஸ்


அப்படி அமைந்த ஏதோ ஒரு குற்றச்சாட்டு அது. அரிஸ்டோபேன்ஸ் என்னைக் குறித்து அரங்கேற்றிய நாடகத்தில் நீங்களே அதைப் பார்த்திருக்கிறீர்கள். அந்த நாடகத்தில் சாக்கிரத்தீஸ் என்றொரு பாத்திரம் சுற்றிச் சுழன்று திரிகிறான். தான் காற்றில் நடப்பதாக முழங்கி வருகிறான். எனக்கு அறவே தெரியாதவற்றைப் பற்றி எல்லாம் விழலளந்து குவிக்கிறான்... அப்படிப்பட்ட சங்கதிகளில் எவருக்கும் உண்மையான பாண்டித்தியம் இருப்பதாக வைத்துக்கொண்டால், அத்தகைய அறிவை நான் அவமதிக்கவில்லை. ஏனெனில் மெலிட்டஸ் மேற்கொண்டும் எனக்கெதிராக வழக்குத் தொடுப்பதை நான் விரும்பவில்லை. ஆனால், பெரியோர்களே, எனக்கு அதில் எல்லாம் நாட்டம் இல்லை. அதைவிட முக்கியமாக, உங்களுள் பெரும்பாலானோரை எனது கூற்றுக்குச் சாட்சிகளாக விளங்கும்படி நான் வேண்டிக்கொள்கிறேன்.

 

என்றாவது நான் பேசுவதைக் கேட்டவர்கள் உங்களுக்குள் இருக்கிறார்கள். உங்களுள் பெருந்தொகையானோர் கேட்டிருக்கிறீர்கள். இந்த விடயம் குறித்து உங்கள் அருகில் இருப்பவர்களுக்கு தெளிவுபடுத்தும்படி அனைவரிடமும் வேண்டிக் கொள்கிறேன். என்றாவது அத்தகைய சங்கதிகள் குறித்து சுருக்கமாகவோ விளக்கமாகவோ நான் கலந்துரையாட நீங்கள் கேட்டீர்களா அல்லவா என்பதை ஒருவருக்கொருவர் கூறுங்கள். அவ்வாறே என்னைப் பற்றிப் பரவிய பிற வதந்திகளும் நம்பத்தக்கவை அல்ல என்பதை அதன் பிறகு நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.


 

                   கோர்ஜியாஸ்           புரோடிக்கஸ்       ஹிப்பியாஸ்    

           

இக்குற்றச்சாட்டுகள் எவற்றிலும் எதுவித உண்மையும் இல்லை. நான் ஆட்களுக்கு கற்பித்து, கட்டணம் வசூலிக்க முயல்வதாக எவராவது கூறுவதை நீங்கள் கேட்டிருந்தால், அதிலும் கூட உண்மை இல்லை. ஆனாலும் அதில் உண்மை இருந்திருக்க வேண்டும் என்பதே எனது ஆசை! ஏனெனில் லியோந்தினி நகரத்து கோர்ஜியாஸ் போல், சியோஸ் நகரத்து புரோடிக்கஸ் போல், எலிஸ் நகரத்து ஹிப்பியாஸ் போல் கற்பிக்கும் தகைமை உடையவர் ஒருவர் இருக்கிறார் என்றால், அது ஒரு சிறந்த சங்கதி அல்லவா! இம்மூவருள் எவரும் எந்த மாநகரத்துக்கும் சென்று இளைஞர்களை ஈர்க்கும் வல்லமை படைத்தவர்; தத்தம் மாநகரவாசிகளுடன் பூண்ட பயனற்ற உறவைக் கைவிட்டு தன்னுடன் இணையும்படியும், அப்படி இணையும் சலுகைக்குப் பணம் செலுத்தும்படியும், அத்தகைய பேரத்தைக் குறித்து நன்றி பாராட்டும்படியும் இளைஞர்களைத் தூண்டும் வல்லமை படைத்தவர்.

 

இன்னொரு நிபுணர் பரோஸ் நகரத்தைச் சேர்ந்தவர். அவர் இந்த மாநகரத்துக்கு வந்திருப்பதை நான் கண்டறிந்துள்ளேன். அத்தகைய பேராசான்களுக்கு மற்றவர்கள் செலுத்திய மொத்தக் கட்டணத்தை விட அதிக கட்டணம் செலுத்திய ஒருவரை நான் சந்திக்க நேர்ந்தது. ஹிப்பொனிக்கசின் மகன் கல்லியாஸ் தான் அவர். ஹிப்பொனிக்கசுக்கு இரண்டு பையன்கள்.


ஹிப்பொனிக்கஸ்


ஹிப்போனிக்கசிடம் நான் சொன்னேன்: "உனது பையன்கள் குதிரைக் குட்டிகளாக அல்லது மாட்டுக் கன்றுகளாக இருந்தால், அவர்களது இயற்கைப் பண்புகளைச் செம்மைப்படுத்துவதற்கு ஒரு பயிற்றுநரைக் கண்டறிந்து பணிக்கமர்த்துவதில் எமக்குச் சிரமம் ஏற்படாது. அப்பயிற்றுநர் ஒருவகையான குதிரை வியாபாரியாக அல்லது பண்ணையாளராக இருப்பார். ஆனால் உனது பையன்கள் மனிதப் பிறவிகளாக இருக்கிறபடியால், யாரை அவர்களது போதனாசிரியராக அமர்த்த எண்ணுகிறாய்? மனித, சமுதாயப் பண்புகளைச் செம்மைப்படுத்துவதில் யார் நிபுணர்? உனக்குப் புதல்வர்கள் இருக்கிறபடியால், இந்தக் கேள்வியை நீ கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படி ஒருவர் இருக்கிறாரா, இல்லையா?"

"ஆம், இருக்கிறார்" என்றார் அவர்.

"யார் அவர்? எந்த ஊர்? அவர் விதிக்கும் கட்டணம் எவ்வளவு?" என்று நான் கேட்டேன்.

"பரோஸ் நகரத்து எவெனஸ், சாக்கிரத்தீஸ்! அவரது கட்டணம் ஐந்து மினா" என்றார் அவர்.

 

உண்மையில் எவெனசுக்கு இந்தக் கலையில் பாண்டித்தியம் இருந்தால், மிதமான கட்டணம் பெற்று அதை அவர் போதிப்பவர் என்றால், அவர் பாராட்டப்பட வேண்டியவர் என்றே நான் எண்ணினேன். பெரியோர்களே, உண்மையில் இத்தகைய சங்கதிகள் எனக்குத் தெரியாது. இவற்றை நான் புரிந்துகொண்டிருந்தால், நான் செட்டைகட்டிப் பறந்திருத்தல் திண்ணம். 

________________________________________

தொடர்ச்சி: சாக்கிரத்தீசின் வழக்குரை (2)

தமிழ்: மணி வேலுப்பிள்ளை

No comments:

Post a Comment