எமது கடைசி அரசிக்கு நேர்ந்த கதி



ஶ்ரீ வெங்கட ரங்கம்மாள் தேவி


 

அமா எச். வன்னியாராச்சி

எமது கடைசி மன்னனின் அரியணை, கடந்த காலத்தின் வாயில்போல் தேசிய அரும்பொருளக களரியில் இருக்கின்றது. துயரமும் தோல்வியும் தோய்ந்த கண்கவர் அரியணை அது. தோல்வி அடைந்தே தீரவேண்டிய ஓர் அரசின், தோல்வி அடைந்தே தீரவேண்டிய ஓர் அரசனின் அரியணை அது. தனது வாழ்நாள் முழுவதும் சதிவலையில் சிக்குண்ட அரசனின் முடி, அரியணையின் அருகில்  இருக்கின்றது. 

கொழும்பு தேசிய அரும்பொருளகத்தில் தொங்கும் ஶ்ரீ விக்கிரமராஜசிங்க மன்னனின் வரைபடத்துக்கு அருகில், அழகும் கவர்ச்சியும் மிகுந்த தலைமை அரசி ஶ்ரீ வெங்கட ரங்கம்மாள் தேவியின் வரைபடம் தொங்குகின்றது. அரசியின் உடைமைகள் சிலவும் அருகில் காணப்படுகின்றன. அவற்றுள் குருதிக்கறை படிந்த அவரது மேலாடை இதயத்தை உறுத்துகின்றது. அரசனையும் அரசியரையும் கைப்பற்றிய சதிகாரத் துரோகிகள் சிலர் தலைமை அரசியின் தோடுகளை இடுங்கியதாகக் கூறப்படுகிறது. கனத்த தோடுகளை ஈவிரக்கமின்றி அவர்கள் இடுங்கியபொழுது, அரசியரின் காதுகள் காயப்பட்டன. அஞ்சி நடுங்கிய அரசியர் குருதிசிந்தினர். பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள மேலாடையில் குருதிக்கறை படிந்துள்ள காரணம் அதுவே என்று நம்பப்படுகிறது. 

அரசிளம் மனைவியின் ஓவியம் என் இதயத்தை ஈர்த்துள்ளது. அவரது நுண்ணிய விழிகளில் துயரம் கவிந்துள்ளது. இறுகிய உதடுகளில் புன்னகை தவளவுமில்லை, உவகை துலங்கவுமில்லை. ஒருபுறம் சாய்ந்த தலையில் தனிமையின் சாயை புலப்படுகிறது. அரசியின் பெருந்துயர் அவரது கண்கவர் அழகினை மட்டுமல்ல, எனது இதயத்தையும் உறுதிபட ஆட்கொண்டது. அவரது பெயரும், துயர முடிவும் என இதயத்துள் குடிகொண்டன. ஆதலால் அவரைப் பற்றி மேலும் அறிய நான் ஆவல் கொண்டேன். அவர் யார்? எந்த ஊர்? அவருக்கு என்ன நடந்தது? எமது கடைசி அரசி வெங்கட ரங்கம்மாளைச் சந்திக்க நாம் ஒன்றுகூடி மேற்கொள்ளும் பயணம் இது:

ஓவியம்

இன்று நாம் பார்க்கும் ஓவியம் ஆங்கில ஓவியர் வில்லியம் தானியல் (William Daniel 1749 – 1840) என்பவரால் வரையப்பட்டது. பழைய பதிவுகளின்படி அரசி இளமையும் அழகும் வாய்ந்தவர். அரசி என்ற வகையில் நயமும், நேர்த்தியும், நிறைவும் மிகுந்தவர். தனது படம் வரையப்படுவது குறித்து அவர் உள்ளம் பூரித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

பின்புறம் மலைச்சாரல் தெரியும்படியாக ஒரு கதிரையில் அமர்ந்திருக்கும் அரசியார் சேலையும், தோளை மூடி தடித்த போர்வையும், முழுக்கை மேலாடையும், ஒப்பனையிட்ட பற்பல கழுத்து நகைகளும், தோடுகளும் அணிந்திருப்பதாகத் தெரிகிறது. நெற்றிப்பொட்டுடன் கூடிய அரசியின் கூந்தல் வாரிமுடியப்பட்டு, மலர்களால் ஒப்பனை செய்யப்பட்டுள்ளது. 

அவர் யார்?

ஶ்ரீ விக்கிரமராஜசிங்க மன்னனின் பல மனைவியருள் ஶ்ரீ வெங்கட ரங்கம்மாள் தேவி ஒருவர். அவர் தலைமை அரசி எனப்பட்டார். மன்னனுக்கு இன்னும் பல வைப்பாட்டியர் இருந்தனர். 

அவர் எமது இறுதி அரசியாயினும், ஒரு சிங்கள அரசி அல்ல. அவர் ஒரு நாயக்க அரசி. நாயக்க வம்சத்தின் தோற்றுவாய் தெலுங்குதேசம். தெலுங்கு, தமிழ், சிங்கள மொழிகள் பேசிய நாயக்க வம்சம் அது. 16ம், 17ம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டை ஆண்ட தஞ்சாவூர் நாயக்க ஆட்சியாளரும் கண்டி நாயக்க குலத்தவரும் உறவினர்கள் என்று நம்பப்படுகிறது. வரலாற்றுத் தரவுகளின்படி நாயக்கர் எனப்படுவோர் விஜயநகரப் பேரரசினால் அமர்த்தப்பட்ட மாகாண ஆளுநர்கள். 

14ம், 15ம் நூற்றாண்டுகளில் விஜயநகரப் பேரரசு மேலோங்கியதாக வரலாறு கூறுகிறது. 16ம் நூற்றாண்டில் அது நிலைகுலைந்த பிறகு, மாகாண ஆளுநர்களாகிய நாயக்கர்கள் தம்மை ஒரு சுதந்திர அரசாக முரசறைந்து ஆட்சி புரிந்தார்கள். 

நாயக்க வம்சம் இலங்கையில் காலூன்றியது எங்ஙனம்? 

கடைசி சிங்கள மன்னனாகிய ஶ்ரீ வீரபராக்கிரம நரேந்திர சிங்கனின் தலைமை அரசியாகிய பிரமிளா ஒரு மதுரை நாயக்க இளவரசி. மதுரை நாயக்கர்களின் தோற்றுவாய் ஆந்திர, தமிழக தெலுங்கு அரசுகள் என்று தெரிகிறது. 

இலங்கையில் முதன்முதல் காலூன்றிய நாயக்க இளவரசி பிரமிளாவே. சிங்கள மன்னர்கள் தென்னாசிய அரசுகள் பலவற்றின் இளவரசிகளையும், சிங்கள இளவரசிகள்  தென்னாசிய இளவரசர்களையும் மணப்பது வழக்கம். அரச மண உறவுகள் அரச நட்புறவுகளே.  

மதுரையிலிருந்து ஓர் இளவரசியைக் கொண்டுவர நரேந்திர சிங்கன் தூதுவர்களை அனுப்பியபொழுது, புகழ்பெற்ற மதுரை நாயக்க வம்ச வழித்தோன்றல்கள் அவர்களை வரவேற்று, நரனப்ப நாயக்கரின் மகளை மணமகளாக அனுப்பி வைத்தார்கள். இளவரசியுடன் அவரது உற்றார் உறவினர் அனைவரும் கண்டியில் வந்து குடியமர்ந்தார்கள். அந்த நாயக்க வம்சம் இன்று மங்கி மறைந்துவிட்டது.

நரேந்திர சிங்கன் மகவின்றி மாளுந்தறுவாயில் தனது அரசியின் தம்பியை (கண்ணுச்சாமியை) அடுத்த மன்னனாக அமர்த்தினான். அந்த நாயக்க இளவரசனே இலங்கையின் முதலாவது நாயக்க மன்னன். ஶ்ரீ விஜய ராஜசிங்கன் எனும் பெயருடன் அவன் ஆட்சியில் அமர்ந்தான். இலங்கையில் நாயக்க வம்சம் ஆட்சியில் அமர்ந்த வரலாறு இதுவே.   

நான்கு நாயக்க மன்னர்களும் நல்லாட்சியாளர்கள் என்று கொள்ளப்பட்டார்கள். பெளத்த சமயத்துக்கு அவர்கள் பேராதரவு நல்கினார்கள். பாரிய அந்நியப் படையெடுப்புகளிலிருந்து கண்டி அரசினை அவர்களால் காக்க முடிந்தது. கண்டி முதலியார்களின் நயவஞ்சகம் நிகழாதிருந்தால், ஶ்ரீ விக்கிரமராஜசிங்க மன்னனால் கண்டி அரசினைப் பாதுகாத்து, பிரித்தானியரை தோற்கடித்திருக்க முடியும்.

ரங்கம்மாளின் தலைவிதி, 1815-02-18

1815 தைமாதம் பிரித்தானிய ஆளுநன் ரொபேர்ட் பிரெளண்றிக் கண்டி அரசின்மீது போர் தொடுத்தான். அரசன் கண்டியை விட்டு தப்பியோடினான். கண்டி மூப்பர்கள் அரசனைக் காட்டிக்கொடுத்தார்கள். மெத மகாநுவரை எனும் இடத்தில் அரசன் பிரித்தானியரிடம் அகப்பட்டுக்கொண்டான்.  

அரசனைக் கைப்பற்றி வருவதற்கு படையினர் பலர் அனுப்பி வைக்கப்பட்டனர். டயஸ் முதலியின் படையணி மெத மகாநுவரைக்குச் செல்லும் வழியில் டி ஒயிலி, ஏனாதி ஹாடி, ஏனாதி ஹூக், முதுநிலை அதிகாரிகள், முதலியார்கள், யாவா ஆட்கள், சிப்பாய்கள், எகலப்பொலை, மொல்லிகொடை, பிலிமத்தலாவை, எக்னெலிகொடை, மகாவலத்தன்னை, பெருவாரியான குலமுதல்வர்கள் அடங்கிய படையணியைச் சந்தித்தது.  

மெத மகாநுவரைக்கு செல்லும் வழியில் எக்னெலிகொடையும் மற்றும் சிலரும் ஒரு கிராமத்துப் பையனை எதிர்கொண்டார்கள். அவர்களைக் கண்டு அஞ்சிய பையன் தன்னைக் கொல்லவேண்டாம் என்று மன்றாடினான்; அதற்கு கைமாறாக அரசன் ஒளிந்திருக்கும் இடத்தைக் காட்டுவதாகத் தெரிவித்தான். உடனே பையனை ஒரு கயிற்றினால் கட்டிய எக்னெலிகொடை, அரசனின் மறைவிடத்துக்கு இட்டுச்செல்லும்படி பணித்தான். 

பையன் அவர்களை ஒரு வீட்டுவாயிலுக்கு கூட்டிச்சென்றான். அதன் தலைவாயிலை இரு கிராமப்பெண்கள் காத்துநின்றனர். எக்னெலிகொடை கதவில் தட்டினான்.  கதவைத் திறக்கும்படி மன்னனிடம் கூறினான். மன்னன் கதவு திறக்கவில்லை. கதவை உடைத்து திறக்கும்படி எக்னெலிகொடை தனது ஆட்களைப் பணித்தான். கதவு உடைத்து திறக்கப்பட்டது. எக்னெலிகொடையின் ஆட்கள் உள்ளே பாய்ந்து, அரசியர் இருவரும் அணிந்திருந்த ஆடைகள் அனைத்தையும் கிழித்தெறிந்தனர். நகைகளைப் பிடுங்கினர். காதுகளில் தொங்கிய கனத்த தோடுகள் மிருகத்தனமாக இடுங்கப்பட்டதால், அரசியர் குருதிசிந்தினர்.  

அரசனும், அரசியர் இருவரும் மிருகத்தனமாக வீட்டுக்கு வெளியே இழுத்தெறியப்பட்டனர். அரசனை ஒரு பன்றி எனத் திட்டினான் எக்னெலிகொடை. அரசனை ஒரு கயிற்றினால் கட்டவும் அவன் முற்பட்டான். முதலில் அதற்கு மறுப்புத் தெரிவித்த டயஸ் முதலி, பிறகு அரசனைக் கட்ட தனது சால்வையை ஈந்தான்! எக்னெலிகொடை அரசனை இழித்துரைத்த விதம் குறித்து தனது ஆழ்ந்த அருவருப்பையும் துயரத்தையும் டயஸ் முதலி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.  

அஞ்சி, வெட்கி நடுங்கிய அரசியர் இருவரும் டயஸ் முதலியின் இரு கைகளையும் பற்றிக்கொண்டனர். டயஸ் முதலியின் வேண்டுகோளுக்கிணங்க ஏனாதிகள் ஹாடி, ஹூக் இருவரும் ஒரு மணித்தியாலத்துள் அவ்விடம் வந்து, அரச குடும்பத்தவருக்கு உரிய மரியாதை கொடுத்து, கவனித்தனர். அவர்களுக்கு ஆடைகளும், சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டன. பல்லக்குகள் கொண்டுவரப்பட்டன. அரசனுக்குரிய முழு மாட்சியுடனும் மரியாதையுடனும் ஶ்ரீ விக்கிரமராஜசிங்கன் மீண்டும் கண்டிக்கு கொண்டுசெல்லப்பட்டான். கண்டியர் ஒருவரேனும், யாவா ஆள் ஒருவரேனும் இப்பவனியில் உடன்செல்லவில்லை என்றும், பிரித்தானியரும் தென்னிலங்கை மக்களும் மாத்திரமே உடன்சென்றதாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

துயர் சூழ்ந்த நாளை அடுத்து

1815ல் பிரித்தானியரும் கண்டி முதலியார்களும் ஓர் உடன்பாட்டுக்கு வந்தனர். 1815ம் ஆண்டின் கண்டிப் பொருத்தனை எனப்பட்ட அந்த உடன்பாட்டின்படி சிங்கள மன்னனின் இறைமை பிரித்தானியரிடம் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது.  

மறுபுறம் அரசனையும், தாயையும், நான்கு அரசியரையும், குடும்பத்தவரையும் கொஞ்சக் காலம் தெல்தெனியாவில் வைத்திருந்து, பிறகு கொழும்புக்கு அனுப்பி வைத்தார்கள்.  

கொழும்பில்…

கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட அரசனின் உடல்நலத்துக்குப் பொறுப்பாக அமர்த்தப்பட்ட மருத்துவர் ஹென்றி மார்ஷல் இட்ட பதிவின்படி: அரசனின் உயரம் 5 அடி 10 அங்குலம், அகன்று பருத்த உடல், புடைத்த மார்பு, அழகிய தோற்றம், இன்முகம், தாடி… அரசனின் கண்கவர் தோற்றத்தை மருத்துவர் விபரித்துள்ளார்.  

அந்நாட்களில் அரசியர் மிகவும் அஞ்சி மிரண்டதாகவும், உடலும் உள்ளமும் நொந்து வருந்தியதாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

வேலூரில் இறுதிநாட்கள்…

அரசனும் குடும்பத்தவரும் கொழும்பில் 10 மாதங்கள் தங்கிய பின்னர், 1816 ஜனவரி 24ம் திகதி இந்திய நகரான வேலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 1816 பெப்ரவரி 28ம் திகதி அவர்கள் வேலூர் கோட்டையை சென்றடைந்தனர். அவர்கள் இறக்கும்வரை சிறையிருந்த வேலூர் கோட்டை பின்னர் கண்டி மகால் எனப்பட்டது. 

அரச குடும்பம் கண்டியில் வாழ்ந்த அரசவாழ்வை வேலூரில் மேற்கொள்ளும் வண்ணம் ஊக்குவிக்கப்படவில்லை. அவர்களுடன் கூடப்பிறந்த ஆடம்பர வாழ்வும் வாழ்க்கைப் பேறுகளும் அவர்களுக்கு மறுக்கப்பட்டன. தனது பிள்ளைகளுக்கு நகைநட்டுகள் வாங்குவதற்குப் பணம் தேவைப்படுவதால், தனது அரிய ஆடைகள் சிலவற்றை விற்றுக் காசு தரும்படி அரசன் ஒருதடவை கேட்டதுண்டு. 

அரசனுக்கு 4 புதல்வியரும், 1 புதல்வனும் பிறந்ததாகத் தெரிகிறது. எனினும் ரங்கம்மாளின் பிள்ளைகள் யார் என்பது உறுதிபடத் தெரியவில்லை. ரங்கம்மாளின் ஒரே மகனே அரசனின் ஒரே மகன் என்பர் சிலர். வேலூர் கோட்டையில் பிறந்த அப்புதல்வன் 1842ல் இறந்துபோனான். 

1832 ஜனவரி 30ம் திகதி, தனது 52வது வயதில் அரசன் இயற்கை எய்தினான். பாலாற்றங் கரையில் உடலுக்கு எரியூட்டப்பட்டது.  

ரங்கம்மாள் தனது இறுதி நாட்களைக் கழித்த விதம், இறந்த விபரம் சரிவரப் பதிவுசெய்யப்படவில்லை. 

ஶ்ரீ விக்கிரமராஜசிங்கனுக்கு ஒரு கல்லறை அமைக்கப்பட்டது. 1932 ஆடிமாதம் அரசனின் கொள்ளுப்பேரன் விக்கிரம ராஜசிங்கன் அதைப் புதுக்கி அமைத்தான். எமது கடைசி மன்னனுக்கும் குடும்பத்துக்கும் ஒரு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது. அது முத்து மண்டபம் எனப்படுகிறது. இங்கு காணப்படும் கல்லறைகள் ஆறும்  அரசனுக்கும், அரசியருக்கும் உரியவை. நினைவு மண்டபத்தை வேலூர் மாவட்ட சுற்றுலாத் திணைக்களம் நிருவகித்து வருகிறது. 

அரச குடுமபத்தில் பிறந்த அரசி ரங்கம்மாள் தனது இறுதிநாட்களில் உள்ளம் ஒடிந்திருந்தார். எனினும், தனக்கு இவ்வாறு துயரகதி நேர்ந்தே தீரும் எனவோ, தான் நேசித்த கண்டி அரண்மனையைத் துறந்து, நாடுகடந்து வாழ நேர்ந்தே தீரும் எனவோ அவர் என்றாவது எண்ணிப் பார்த்திருப்பாரா? 

தான் ஓவியம் வரைவதற்காக, தன் முன்னிலையில் பேரெழிலுடன் வீற்றிருக்கும் அந்த இளம் அழகரசிக்கு இவ்வாறு துயரகதி நேர்ந்தே தீரும் என்பதை ஓவியர் வில்லியம் தானியல் என்றாவது எண்ணிப் பார்த்திருப்பாரா? 

ஓவியத்தில் தோன்றும் அந்த இளம் அழகரசி இன்னமும் என் இதயத்தில் குடிகொண்டுள்ளார். 

அரசன் ஶ்ரீ விக்கிரமராஜசிங்கன், அரசி வெங்கட ரங்கம்மாள் தேவி

நினைவுச்சின்னம், வேலூர் 


வேலூர் கோட்டை



கண்டி மகால், வேலூர் கோட்டை

________________________________

Our Last Queen: The tragic fate of Venkata Rangammal by Ama H. Vanniarachchy was originally published in Ceylon Today of Oct. 28, 2021: https://ceylontoday.lk/news/our-last-queen and translated by Mani Velupillai with the author’s consent for http://thamilodai.blogspot.com and https://thaiveedu.com 

_____________________________________________________

https://amahvanniarachchy.wordpress.com/author/amaarchaeology

No comments:

Post a Comment