இன்றைய உலகில் தமிழர்-தேசியம்

ஒரு மறுசிந்தனை


A person smiling for the camera

AI-generated content may be incorrect.

அஜித் ராஜபக்சா


தமிழர்-சமூகத்துள் ஒரு செயலராக விளங்கும்  ஜூட் பிரகாஷ் எனது நண்பர். ஆஸ்திரேலியாவில், மெல்பேர்ண் மாநகரத்தில், பேராசிரியர் எலியேசர் நினைவாக, அவர் ஆற்றிய உரையின் கூறுகளை அண்மையில் நான் வாசித்தேன். 

 

இன்றைய உலகத்துக்கு தமிழர்-தேசியம் எவ்வளவு தூரம் உகந்தது என்பது குறித்து தனது சிந்தனைகளை அந்த உரையில் அவர் முன்வைத்துள்ளார். அத்துடன் அடையாளம், முன்னேற்றம், அரசியற் போராட்டத்தின் எதிர்காலம் தொடர்பாக முக்கிய வினாக்களை அவர் எழுப்பியுள்ளார். 

 

அவரது உரையின் கூறுகள் இவ்வாறு அமைந்துள்ளன:

 

ஒருகாலத்தில் அடையாளத்தை நிலைநிறுத்தவென எதிர்த்துப் போராடிப் பெருமை படைத்த தமிழர்-தேசியம் இன்றைய உலகத்துக்கு உகந்ததா? 

 

தமிழ் மக்களின் உண்மையான தேவைகளான கல்வி, நலவாழ்வு, பொருள்விருத்தி போன்றவற்றைப் புறக்கணித்து, நாட்பட்ட அறைகூவல்கள், வைரம்பாரித்த கருத்துநிலைப்பாடுகள் மூலம் தமிழர்-தேசிய இயக்கம் அதன் நோக்கத்தை இழந்துள்ளது.

 

தமிழர்-தேசியத்துக்கு நடைமுறை இலக்கோ நம்பிக்கையான தலைமையோ வாய்க்கவில்லை; உட்பிளவுகளும், அகந்தை அரசியலும் அதன் ஒற்றுமையைப் பலவீனப்படுத்தின; வல்லமை எய்தி, பங்குவகித்து, வளம்பெற்று வாழ விழையும் இன்றைய தமிழரின் மாற்று வேட்கைகளைப் புரிந்துகொள்ள தமிழர்-தலைமை தவறியுள்ளது.

 

வடக்கு, கிழக்கில் குடித்தொகை வீழ்ச்சியால், தமிழர்-தேசிய இயக்கத்தின் சமூக, ஆள்புலத் தளம் அரிப்புண்டு வருகின்றது. அதேவேளை, குறிப்பாகப் புலம்பெயர் உலகினுள், புதியதொரு  தமிழர்-தலைமுறை வளர்ந்து வருகின்றது. இனப்பிரிவினையைக் காட்டிலும், அனைவரையும் உட்படுத்தி, அனைவருக்கும் வாய்ப்பளித்து, முன்னேற்றம் காணும் நிலைப்பாட்டுக்கு அது முதன்மை அளித்து வருகின்றது. 

 

சிங்களர்-தேசியம் புதிய அரசியல் அலையில் அள்ளுண்டு ஆதிக்கம் குன்றி வருவதாகத் தெரிகின்றது. அந்த வகையில் தமிழர்-தேசியம் அதன் பரம்பரைப் பகைவரை இழந்து நிற்கின்றது. அமைதி நிலவும் இக்காலத்துக்கு உகந்த முறையில் தமிழர்-தேசியம் தன்னை மீளவரையறுத்துக் கொள்ளவேண்டும்; பொருளாதார அடிப்படை, நெறிதிறம், புறநோக்கு என்பவற்றின் ஊடாக பண்பாட்டுப் பெருமையையும் செயல்நோக்க ஈடுபாட்டையும் ஒருங்கிணைத்து அது புத்தெழுச்சி பெறவேண்டும்.

 

தமிழர்-தேசியம் இன்றைய உலகத்துக்கு உகந்த நிலைப்பாடாக நிலைபெறும் வண்ணம், எதிர்ப்பு அரசியலை விடுத்து, வல்லமை - ஒற்றுமை - முன்னேற்றம் காணும் இயக்கமாக மலரவேண்டும். 

 

ஜூட் பிரகாஷ் ஆற்றிய உரையின் கூறுகள் அவை.

 

புலம்பெயர்ந்து உலகெலாம் பரந்துவாழும் தமிழரை, குறிப்பாக ஆஸ்திரேலியாவாழ் தமிழரை அணிதிரட்டி, தேசியவாத தமிழரிடையே ஓர் அகவிசாரணையைத் தூண்டி, தேசிய இயக்கத்தின் எதிர்கால இலக்கை மீள எண்ணிப் பார்க்கும்படி அவர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் மேற்படி சிந்தனைகளை அவர் முன்வைத்திருக்கலாம். அவரது வாதத்தை மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு, இலங்கையில் சிங்களர்-தேசியமும், தமிழர்- தேசியமும் மலர்ந்த வரலாற்றை நாம் மீள்நோக்கிப் பார்க்க வேண்டும்.


சிங்களர்-தேசியம், தமிழர்-தேசியம் என்பவற்றின் தோற்றுவாய்


நெடுங்காலமாக ஐரோப்பியரால் கட்டியாளப்பட்டதன் விளைவாக எழுந்தவையே சிங்களர்-தேசியமும், தமிழர்-தேசியமும். பிறநாடுகளைக் கட்டியாண்ட வல்லரசுகள் நிலத்தையும், உளத்தையும், அரசியலையும் பிரித்தாளும் கலையில் கைதேர்ந்தவை. அத்தகைய ஏகாதிபத்திய ஆட்சியின் விளைவாக  ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும் வாழ்ந்த சமூகங்கள் ஆழ்ந்து பிளவுண்ட வடுக்கள் இற்றைவரை நீடித்துள்ளன. இலங்கை அதற்கு விதிவிலக்கல்ல. 

 

ஈற்றில் ஏகாதிபத்திய மேட்டிமைக் குழாங்களும், உள்நாட்டு மேட்டிமைக் குழாங்களும் இட்ட தாளத்துக்கு சிங்களர், தமிழர் சமூகங்கள் இரண்டும் ஆடிவந்தன. இவ்வதிகாரக் குழாங்கள் இன உணர்வைப் பயன்படுத்தி, சமூகத்தைப் பிளந்து கட்டியாண்டன.   

 

ஒருகாலத்தில் இடதுசாரி இயக்கமே, குறிப்பாக இலங்கை சமசமாசக் கட்சியே (LSSP-யே) இன, மத வரம்புகளை ஊடறுத்து மக்களை ஒருங்கிணைக்க முயன்றது; இன, மத அடையாளத்தைப் பொருட்படுத்தாமல் தொழிலாளரிடையேயும், உழவரிடையேயும் தோழமையை மேம்படுத்தி, ஒரு நேரிய மாற்றுத்தரப்பாக விளங்கியது.     

 

எனினும், காலப்போக்கில் இடதுசாரி இயக்கம் வீறிழந்து, இலங்கை சுதந்திரக் கட்சி (SLFP) போன்ற சிங்கள தேசிய தரப்புகளுடன் இணைந்து, தனது முழுமுதற் குறிக்கோளை நீர்த்துப்போகச் செய்தது. அதேவேளை கலாநிதி விக்கிமபாகு கருணரத்தினா போன்ற தலைவர்களும் பிறரும் ஒற்றுமை, சமத்துவம், பிரதேச சுயாட்சி என்பவற்றில் விடாப்பிடியாக நம்பிக்கை வைத்திருந்தார்கள்; வன்முறையை நிராகரித்தார்கள்; பாமரமக்கள் பங்குவகிப்பதன் மூலமாகவும், இன்முறைப் போராட்டம் மூலமாகவும் உண்மையான மாற்றத்தைப்  புகுத்தலாம் என்று கருதினார்கள். 


ஜே. வி. பி.யும் விடுதலைப் புலிகளும்: துயரார்ந்த ஒப்புமை


தெற்கில் எழுந்த ஜே. வி. பி., வடக்கில் எழுந்த விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்புகளும் குட்டி முதலாளித்துவ தேசிய இயக்கங்கள். அவற்றின் கருத்தியல் நிலைப்பாடுகளும், சொற்சிலம்பங்களும் வேறுபட்டவை; ஆயினும் அவற்றின் அரசியல் நெறி ஒரே மாதிரியானது: பிற தரப்புகளைச் சகித்துக் கொள்ளாமல், வன்முறையில் ஈடுபட்டு, கருத்துமாறுபாட்டை அவை அடக்கி ஒடுக்கின.  அரசின்மீது மட்டுமல்ல, தமது பாதையைக் கேள்விக்குள்ளாக்கிய இடதுசாரித்துவ, சமவுடைமைத் தரப்புகள்மீதும் அவை குறிவைத்தன. 

 

தெற்கில் ஜே. வி. பி.யின் தீவிரவாதத்தை எதிர்த்த இடதுசாரிச் செயலர்களும், தொழிலாளர்களும், தொழிற்சங்கத் தலைவர்களும் கொல்லப்பட்டார்கள்.  வடக்கில் சட்டவுரைஞர் அண்ணாமலை போன்ற துரொஸ்கியவாதிகளும், மற்றும் பிற இடதுசாரித் தமிழர்களும் விடுதலைப் புலிகளால் வேட்டையாடப்பட்டார்கள். தத்தம் மக்களைக் காப்பதாக இரு இயக்கங்களும் மார்தட்டின; எனினும், குடியாட்சி நெறிப்படி, அனைவரையும் உள்வாங்க மாற்றுவழி காட்டியோரை அழித்தன. ஈற்றில் அவை இரண்டும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் ஆயின. 

 

புலம்பெயர்ந்த தமிழரும் இந்த அழிவுப் போக்குகளைத் தட்டிக்கேட்கத் தவறிவிட்டனர். பலர் அமைதி காத்தார்கள். பிறர் உணர்ச்சியும் பொருள்வளமும் கலந்த தேசியப் பொறியினுள் அகப்பட்டுக் கொண்டார்கள். 2001 செப்டெம்பர் 11ம் திகதி அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலை அடுத்து, ஆயுதக் குழுமங்கள் பற்றிய உலக உணர்வலை எதிர்மாறாகத் திரும்பிய பின்னரும் கூட, ஆயுதக் குழுமங்களை எச்சரிக்கும் அறிகுறிகளைப் புறக்கணித்த விடுதலைப் புலிகள், தமது வன்முறையை முன்னெடுத்துச் சென்றார்கள். 

 

புலம்பெயர்ந்த தமிழர் தமது மனச்சாட்சியின்படி ஓர் அரசியல் நிலைப்பாட்டை எடுக்காமல், பெரிதும் நிதிதிரட்டும் அணியாக மாறினார்கள். போர் முடிவடைந்தபோது, புதிய தலைவர்களைக் கொண்ட தலைமுறை ஒன்று எஞ்சியிருக்கவில்லை. அவர்கள் இலங்கை அரசினால் அல்லது விடுதலைப் புலிகளால் ஒழிக்கப்பட்டுவிட்டனர். அப்புறம் புலம்பெயர்ந்த தமிழர் நம்பிக்கை இழந்து, முன்னகரும் திசை தெரியாமல், பிளவுண்டு போயினர். 


வாய்ப்புகளை இழந்தமை,  கூட்டமைப்புகளைக் காட்டிக்கொடுத்தமை


இலங்கையில் உறவுப் பாலங்கள் கட்டப்பட்டமையும், பிறகு தீவிரவாதிகளால் அவை எரிக்கப்பட்டமையும், அதன் தற்கால வரலாற்றில் நேர்ந்த பேரிடி ஆகும். 1980களில் விஜய குமாரதுங்காவின் தலைமையில் தென்புல இடதுசாரிகளுக்கும், வடபுல முற்போக்காளர்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒத்துழைப்பு, புதியதொரு பாதை தோன்றும் வாய்ப்பினைப் புலப்படுத்தியது. குடியாட்சி, சுயாட்சி, அமைதி எனும் குறிக்கோள்களை நோக்கி எல்லாச் சமூகங்களையும் ஒருங்கிணைக்கும் பொது அரசியல் முன்னணி ஒன்று அவரது அகக்கண்ணுக்குப் புலப்பட்டது. 

 

இடதுசாரிச் சிந்தனையின் தாக்கத்துக்கு உட்பட்ட சில தமிழ்ப் போராளி இயக்கங்கள் மேற்படி முன்முயற்சியை ஆதரித்தன. விஜய குமாரதுங்காவும் தமிழக முதல்வர் எம். ஜி. ஆர். அவர்களும் ஒருவரை ஒருவர் கட்டியணைக்கும் படங்கள் வெளிவந்து, மீளிணக்கமும் பிரதேச தோழமையும் உருவாகி வருவதாக நம்பத்தக்க தருணத்தைக் குறித்து நின்றன. 

 

எனினும், அந்த நம்பிக்கை, இரண்டு தரப்புகளையும் சேர்ந்த கடும்போக்காளர்களிடையே சீற்றத்தையே கிளப்பியது. ஒத்துழைக்கும் எண்ணத்தைச் சகித்துக்கொள்ள முடியாத தேசியவாதிகள் அந்த எண்ணத்தை ஒழித்துக்கட்டினார்கள். அத்துடன் இத்தீவில் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்துக்கும் கிடைத்த மிகச்சிறந்த வாய்ப்புகளையும் ஒழித்துக்கட்டினார்கள். 


தென்புலத் தேசியமும் அதன் புதிய வேடமும்


போர் முடிந்தவுடன் சிங்களர்-தேசியம் மங்கிவிட்டதென நம்புவது வெறும் வெகுளித்தனம். சமய, அரசியல் அமைப்புகளில் ஆழ வேரூன்றியுள்ள சிங்களர்-தேசியம் இன்று புதிய வேடம் பூண்டு நடமாடுகின்றது.  

 

தேசிய மக்கள் சக்தியின் (NPP-யின்) முழுமுதல் தளம் மிகவும்  சிறியது. ஆனால், நாட்டில் ஊழல் பெருகி, பொருளாதாரம் நிலைகுலையவே, ராஜபக்ச-ஆதரவாளர்களின் மாயை அகன்றுவிட்டது; மக்கள் சீறியெழுந்தார்கள். அதனைச்  சாதகமாகப் பயன்படுத்தி, ஊழல்-தடுப்புப் பரப்புரை மூலம் மக்களை வெற்றிகரமாக அணிதிரட்டியே தேசிய மக்கள் சக்தி (NPP) முன்னுக்கு வந்தது. 


ஆயினும், சிங்கள தேசியத் தரப்புகளின் வீழ்ச்சியை இது குறிக்கவில்லை. பெளத்த குருமாரும், வலிமைபடைத்த பண்பாட்டு அமைப்புகளும் சிங்கள தேசியத் தரப்புகளை அரவணைத்து வைத்திருக்கின்றன. மீளவும் அவற்றுக்கு விரைந்து உசுப்பேற்ற முடியும். 

 

இந்த  நீறுபூத்த நெருப்பை அனுர குமர திசநாயக்கா புரிந்துகொண்டுள்ளார். சிங்கள-பெளத்த தேசியத்தைச் சரிவரக் கையாள்வதில் தான் அல்லது சில வேளைகளில் அதற்கு நெகிழ்ந்து கொடுப்பதில் தான் அவரது அரசியல் வாழ்வு தங்கியுள்ளது. 

 

ஜே. வி. பி. தனக்கு தேசிய மக்கள் சக்தி என்று மறுமுத்திரை குத்தியுள்ளது. எனினும் அதிகாரப் பரவலாக்கத்தையும், 13வது திருத்தத்தையும் எதிர்த்து, பொருளாதார விருத்தியால் மாத்திரமே இனத்துவ மனக்குறைகளைத் தீர்க்க முடியுமென வாதித்த வரலாறு அதற்குண்டு. இனப்பிரச்சனையுள் ஆழ்ந்து புதையுண்ட பண்பாட்டு, அரசியற் பரிமாணங்களைப் புறக்கணிக்கும் மதிமயக்கம் இது.   

 

தமிழரின் பாரம்பரிய அரசியலை எண்ணி ஏமாற்றம் அடைந்த சில தமிழர்-குழுமங்கள்  தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு நல்கின.  ஆனால், புதிய பிளாவில் பழைய கள்ளை ஏற்கும் ஆபத்து இதில் இருக்கிறது.  ஜே. வி. பி.யின் வரலாறே அதை தெட்டத்தெளிவாக உணர்த்துகிறது அல்லவா!

 

ஒரு காலத்தில் சிங்களத் தீவிரவாதிகளுடன் சேர்ந்து அதிகாரப் பரவலாக்கத்தை அது எதிர்த்தது; பிறகு ராஜபக்சாவின் போர்முயற்சியை ஆதரித்தது; இப்பொழுது அனைத்துநாட்டு நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை ஆதரிக்கிறது. இது சமவுடைமை நோக்கிய நிலைமாற்றம் அல்ல; மக்களை ஈர்க்கும் அறைகூவல்களுடன் கூடிய சந்தர்ப்பவாத அரசியல்.


புதியதோர் ஊழியில் தமிழர்-தேசியத்தை மறுபடி சிந்தித்துப் பார்த்தல்


போர் முடிந்து ஒரு தசாப்தத்துக்கு மேலாக தமிழர்-தேசியம் ஒரு திருப்புமுனையில் நிற்கின்றது. ஆயுதப் போராட்டம் முடிந்துவிட்டது. ஆனால், சமத்துவத்துக்கும், கண்ணியத்துக்குமான போராட்டம் தொடர்கின்றது. பிரிவினையை உந்தும் ஒரு விசையாக அல்ல, குடியாட்சி நெறிநின்று, அனைவரையும் உள்வாங்கி, முன்னோக்கி நகரும் ஓர் இயக்கமாகத் தமிழர்-தேசியத்தை மீள வரையறுக்கும் பணியே இப்போதுள்ள சவால். 

 

அனைவரையும் உள்வாங்கி, ஒத்துழைக்கும்பொழுது மாத்திரமே தேசியம் இன்னமும் உகந்ததாய் அமையும். ஆதலால், ஒத்துழைப்பு என்பது ஓர் இன்றியமையாத நியதியாக விளங்குகின்ற ஓர் உலகத்துக்கு நெகிழ்ந்து கொடுக்கும் வண்ணம், தனி நிலைப்பாட்டை நிராகரித்து, கலந்துரையாடும் முறைமையை தேசியமானது கடைப்பிடிக்க வேண்டும். அதாவது தமிழரின் அரசியற்களத்தில் ஐயுறவு வேலிகளை விடுத்து, இனத்துவ, பிராந்திய வரம்புகளை ஊடறுத்து, பாலங்களை அமைக்க வேண்டும்.  

 

இடதுசாரித்துவத்தின் வரலாற்றுப் பாடம் இன்றியமையாதது: அதாவது, தேசியத்தினால் விடுதலையளிக்கவும் முடியும், பிளவுபடுத்தவும் முடியும். புறநோக்கை விலக்கி, அகம்நோக்கித் திரும்பும்பொழுது, தேசியமானது அழிவை விளைவிக்க வல்லது. சமத்துவம், தோழமை, வல்லமை ஈட்டும் கருவியாக மாறும்பொழுது, தேசியமானது ஒரு குடியாட்சி இலக்கை நோக்கிப் பணியாற்ற வல்லது.  

 

நாட்டில் ஒரு சமூகம் தனித்து இயங்குவதால், உண்மையான மாற்றம் ஏற்பட முடியாது. ஒரே சுரண்டலையும், வன்கோன்மையையும் எதிர்கொள்ளும் தென்புல முற்போக்குத் தரப்புகளுடன், சிங்கள-முஸ்லீம் தொழிலாளர்களுடன், உழவர்களுடன், இளையோருடன் கூடி தமிழர்-சமூகம் அணிதிரள வேண்டும். குடியாட்சி, பொருளாதார நீதி, சமத்துவம் என்பவற்றுக்கான போராட்டத்தை நாடுமுழுவதும் ஒருசேர முன்னெடுக்க வேண்டும். 

 

இவ்வாறு கூடி அணிதிரள்வது, ஒரு விட்டுக்கொடுப்பு அல்ல; முன்னகர்வதற்கான ஒரே பாதை அதுவே. ஒத்துழைப்பின் மூலம் சகவாழ்வுக்கும், பொதுமக்களின் வளமான வாழ்வுக்குமான இயக்கமாக தமிழர்-தேசியம் மலரமுடியும்; பன்மைத்துவம், சமத்துவம் குடியாட்சி-விழுமியம் ஓங்கிய நாடாக இலங்கையைக் கட்டியெழுப்ப அது துணைநிற்க முடியும்.


விருத்தியடையும் நாடுகளில் தேசியம்

 

விருத்தியடையும் நாடுகளில் தேசியத்தினால் எளிதாகவே பிற்போக்குவாதமாக மாறமுடியும்;  மக்களின் பேரால் செயற்படுவதாக மார்தட்டிக்கொண்டு, தமது ஆதிக்கத்தைப் பேணிக்கொண்டு, ஆளும் உள்நாட்டு மேட்டிமைக் குழாங்களின் கருத்தியல் போர்வையாகத் தேசியத்தினால் மாறமுடியும். 


நாடு சுதந்திரம் பெற்றவுடன், உண்மையான விடுதலை எய்தப்படுவதில்லை. முதலாளித்துவமும், ஏகாதிபத்தியமும் உலக முறைமைகளாகச் செயற்பட்டு வருவதால், விடுதலை என்பது நாட்டின் எல்லைகளைக் கடந்து உலகமயமாகி, உலக நாடுகளின் தோழமையாக, ஐக்கியமாக மலரவேண்டும். பரந்துபட்ட அகநோக்கு இல்லாவிட்டால், வெளியுலகத் தரப்புகளால் புதுக்கக் கட்டியாளப்படும் நிலையில் தங்கியிருந்துகொண்டு, ஒரு புதிய கொடியின் கீழ், அதே சுரண்டல் கட்டமைப்புகளை மறுபிரதிசெய்யும் இக்கட்டுக்குள் தேசியவாத இயக்கங்கள் அகப்பட நேரும். 

 

உலக நிதி நிறுவனங்களையும், வணிகதாபன ஆதிக்கத்தையும், மேல்நாட்டு மேலாதிக்கத்தையும் எதிர்க்கும்பொழுது, தேசியம் என்பது முற்போக்கான நிலைப்பாட்டை எடுக்கின்றது; பேரினவாதத்தை அல்லது இன ஒதுக்கல் கொள்கையை  ஊட்டி வளர்க்கும்பொழுது, அல்லது ஏற்றத்தாழ்வையும் தங்கிவாழ்வையும் நிலைநிறுத்தும் உள்நாட்டு செல்வச் சீமான்ளுடன் கூட்டுச்சேரும்பொழுது, அது பிற்போக்கான நிலைப்பாட்டை எடுக்கின்றது. 


முடிவுரை: பிளவினை விடுத்து, பொதுநோக்கினை நாடல்


சிங்களர்-தேசியமும், தமிழர்-தேசியமும் மாறிமாறி அச்சமும், வஞ்சமும் ஓங்கிய சுழற்சிக்குள் நெடுங்காலமாக அகப்பட்டிருந்தன.  எனினும், கடந்தகாலத்தை எதிர்காலம் பிரதிபலிக்க வேண்டியதில்லை. வடக்கிலும் தெற்கிலும் எழுந்த புதிய தலைமுறையைச் சேர்ந்த அரசியற் சிந்தனையாளர்கள், முன்னைய இடதுசாரிகள் மறந்துபோன பாடங்களை மீளவும் கற்றறிய வேண்டும்: சமத்துவம் மூலம் ஐக்கியம் காணவேண்டும்! குடியாட்சி மூலம் சமத்துவம் காணவேண்டும்!

 

தனிநிலைப்பாட்டை விடுத்து ஒத்துழைப்பின் ஊடாக மறுமலர்ச்சி அடையும்  தமிழர்-தேசியத்தினால் நீதிக்கும், சகவாழ்வுக்குமான விசையாக மாறமுடியும்; ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை வீழ்த்தி சுதந்திரம் ஈட்டமுடியாது என்பதையும், அனைவரின் கண்ணியத்தையும் சமத்துவத்தையும் பாதுகாக்கும் தேசியம் மாத்திரமே முன்னெடுக்கத்தக்கது என்பதையும் இலங்கை மக்கள் அனைவருக்கும் தமிழர்-தேசியத்தினால் நினைவுபடுத்த முடியும்.


Ajith  Rajapaksa, Rethinking Tamil Nationalism in Today’s World, Colombo Telegraph,

2025-10-21, translated by Mani Velupillai, 2025-11-02.

No comments:

Post a Comment