ரிச்சார்ட் டி சொய்சா
1958-03-18 1990-02-18
லீல் பதிரனா
கொழும்பில் பிறந்து, வாழ்ந்து, மடிந்த ரிச்சார்ட் டி சொய்சா ஒரு தமிழ் - சிங்கள இலங்கையர். தாய் மனோராணி சரவணமுத்து ஒரு மருத்துவர். தந்தை லூசியன் டி சொய்சா.
பெரிதும் ஆங்கிலம் பேசிய ரிச்சார்ட் டி சொய்சா ஒரு கவிஞர், நடிகர், நாடகர், ஊடகர், ஒலிபரப்பாளர், மனித உரிமைச் செயலர்… ஐ. பி. எஸ். செய்தியகம் (Inter Press Service) போர்த்துக்கேய தலைநகர் லிஸ்பனில் புதுக்கத் திறந்த பணியகத்தின் அதிபராக அவரை அமர்த்தியது. அவர் பதவியேற்கப் புறப்படுவதற்கு ஒரு கிழமை முன்னதாக கொல்லப்பட்டுவிட்டார். அப்பொழுது அவருக்கு 32 வயது.
1989, 90களில், அரசதிபர் பிரேமதாசாவின் ஆட்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் விடுதலை முன்னணி (ஜே. வி. பி.) அங்கத்தவர்களும், ஆதரவாளர்களும் கொல்லப்பட்டார்கள். அப்பொழுது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை ஐ. பி. எஸ். செய்தியகத்தின் ஊடாக ரிச்சார்ட் அம்பலப்படுத்தினார். லக்ஷ்மன் பெரெரா எனும் கலைஞர், பிரேமதாசாவை கேலிசெய்து “யார் அவர்? அவர் என்ன செய்கிறார்?” எனும் நாடகத்தை மேடையேற்றுவதற்கு ரிச்சார்ட் துணைநின்றார். ரிச்சார்ட்டை தொடர்ந்து லக்ஷ்மன் பெரெராவும் காணாமல் போய்விட்டார். அவரும் கொல்லப்பட்டுவிட்டதாகவே சொல்லப்படுகிறது.
1990 பெப்ரவரி 17ம் திகதி நள்ளிரவு ஆயுதம் ஏந்திய குழு ஒன்று ரிச்சார்ட்டின் வீட்டினுள் புகுந்து, பலவந்தமாக அவரை அப்புறப்படுத்தி, ஓர் ஊர்தியில் ஏற்றிச்சென்றது. அடுத்த நாள் காலை, கொழும்பிலிருந்து 12 மைல் தூரத்தில் உள்ள மொரட்டுவையில், லுனாவை கடற்கரையில் அவரது உடல் கரையொதுங்கியது. உயரப் பறந்த ஓர் உலங்கு வானூர்தியிலிருந்து அவரது உடல் கடலில் வீசப்பட்டதாகத் தெரிகிறது. அவர் வதைக்கப்பட்டு, குதறப்பட்டு, மோவாய் உடைக்கப்படடு, தலையிலும் தொண்டையிலும் சுடப்பட்டு, கொல்லப்பட்ட அறிகுறிகள் தென்பட்டன.
தர்மரத்தினம் சிவராம்
தமிழ்நெற் பதிப்பாளர் தர்மரத்தினம் சிவராம் (தராக்கி) ரிச்சார்ட்டின் உடலை அடையாளம் காட்டினார். முன்னர் ஐலன்ட் (The Island) பதிப்பாளர் காமினி வீரக்கோனுக்கு ஓர் ஆய்வாளர் தேவைப்பட்டபொழுது, சிவராமையே ரிச்சார்ட் விதந்துரைத்திருந்தார். பின்னர் 2005 ஏப்ரில் 28ம் திகதி சிவராமும் கொல்லப்பட்டார்.
பிரேமதாசாவின் முதுநிலை பாதுகாப்பு அதிகாரியான ரொனி குணசிங்காவின் தலைமையில் செயற்பட்ட ஆயுதக் குழுவே ரிச்சார்ட்டை கடத்திச்சென்றது. அவர் ஒரு காவல்துறை மேலாளர். அவருக்கு பிரேமதாசாவுடன் நேரடித் தொடர்பு இருந்தது. அடுத்தவர் எல். எஸ். டி. ரஞ்சகொடை, ஓர் உதவிக் காவல்துறை கண்காணிப்பாளர். அத்துடன் கோட்டை காவல்துறையின் பொறுப்பதிகாரி. இன்னொருவர் பி. ஜி. ஜி. தேவசுரேந்திரா, கும்பனித்தெரு காவல்துறையில் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி. வேறொருவர் எம். சரச்சந்திரா, மேற்காவலர்.
அரசதிபர் பிரேமதாசா
அடுத்த நாள் நடந்த இறப்பு விசாரணையில் ரிச்சார்ட்டின் தாய் மனோராணி சரவணமுத்து சாட்சியமளித்தார். கடத்திச் சென்றவர்களுள் இருவரை தன்னால் அடையாளம் காட்டமுடியும் என்று அவர் தெரிவித்தார். மூன்று மாதாங்கள் கழித்து ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ரொனி குணசிங்காவை (குற்றஞ்சாட்டுக்கு உள்ளான முதலாவது அதிகாரியை) அவர் அடையாளம் கண்டுகொண்டார். அது குறித்து தனது சட்டவாளர் பட்டி வீரக்கோன் ஊடாக நீதிவானிடமும், காவல்துறையிடமும் தகவல் தெரிவித்தார். ஆனால் குணசிங்கா கைதுசெய்யப்படவில்லை. அதேவேளை, மனோராணி, வீரக்கோன் இருவருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. 1990 ஏப்ரில் 23ம் திகதி ரிச்சார்ட் பற்றிய ஆய்வுக் கட்டுரையுடன் வெளிவந்த TIME சஞ்சிகையின் பிரதிகள் சுங்கத் திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்டன.
ரிச்சார்ட், தாயார் இருவருடனும் தங்கியிருந்த எ. வி. கருணரத்தினாவும் இறப்பு விசாரணையில் சாட்சியமளித்தார். ஐ. பி. எஸ். செய்தியகத்தின் அஞ்சல் விநியோகியாக அவர் பணியாற்றி வந்தார். மூன்று அறைகள் கொண்ட வீட்டில் ரிச்சார்ட், தாய், கருணரத்தினா மூவரும் ஒவ்வோர் அறையில் தங்கியிருந்தார்கள். கருணரத்தினாவுடன் அவரது மனைவியும் தங்கியிருந்தார். அவரது கண்கண்ட சாட்சியம்:
"1990 பெப்ரவரி 17 இரவு 10 மணியளவில் நான் படுக்கச் சென்றபொழுது ரிச்சாட் வீடுதிரும்பவில்லை. தாய் வீட்டில் இருந்தார். அதிகாலை 2 மணிக்கும் 3 மணிக்கும் இடையில் மணி அடித்துக் கேட்டது. எனது அறையிலிருந்து சாளரம் ஊடாக வெளியே பார்த்தேன். சங்கடத்தின் அருகில் சிலர் நிற்பதைக் கண்டேன். ஒருவர் காவல்துறை சீருடையும், மற்றவர்கள் பொது உடையும் அணிந்திருந்தார்கள். “யார் அது?” என்று கேட்டேன். சீருடை அணிந்தவர் தாங்கள் காவல்துறையினர் என்றும், வீட்டை தேடுதல் போட வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அப்பொழுது ரிச்சார்ட்டின் தாய் தனது அறையிலிருந்து வெளிக்கூடத்துக்கு வந்துவிட்டார். ரிச்சார்ட்டின் மோட்டார் சைக்கிள் வெளியே நின்றது. ஆகவே அவர் வீடுதிரும்பியதை நான் உணர்ந்துகொண்டேன். வந்தவர்களின் அடையாள அட்டைகளை காட்டும்படி ரிச்சாட்டின் தாய் கேட்டார். தாங்கள் காவல்துறையினர் என்றும், ஆகவே காட்ட தேவையில்லை என்றும், அக்கம் பக்கத்து வீடுகளிலும் தேடுதல் போட்டதாகவும் சொன்னார்கள். கதவை திறக்காவிட்டால், சுட்டுவிடுவேன் என்று ஒருவர் அச்சுறுத்தினார். நாயைக் கட்டிப்போட நான் உள்ளே போனேன். நான் திரும்பி வருவதற்குள் மனோராணி சரவணமுத்து கதவை திறந்துவிட்டார்.
எல்லா மின்விளக்குகளும் ஏற்றப்பட்டன. சீருடை அணிந்தவர் கதவடியில் நின்றார். மற்றவர்கள் படிக்கட்டில் ஏறி மேல்மாடிக்கு வந்தார்கள். ஒருவர் முழங்கால் சட்டையும், இளநீல குறுங் கைச்சட்டையும் அணிந்திருந்தார். அவரது முகத்தின் ஒரு பகுதியை தொப்பி மறைத்தது. மற்றவர்கள் சாம்பல்நிறக் காற்சட்டையும், குறுங் கைச்சட்டையும் அணிந்திருந்தார்கள். எல்லோரும் ஆயுதம் ஏந்தியிருந்தனர். ஏறத்தாழ அரை மணித்தியாலமாக படுக்கை அறைகளில் அவர்கள் தேடுதல் போட்டார்கள். முதலில் எனது அறையிலும், அடுத்து தாயின் அறையிலும் தேடுதல் நடத்தி, கடைசியாக மகனின் அறையினுள் புகுந்தார்கள்.
இவ்வளவு நேரமும் ரிச்சார்ட் நித்திரையில் இருந்தார். நான் பின்தொடர்ந்தபொழுது, ஒருவர் என்னெதிரே துவக்கை நீட்டி தடுத்து நிறுத்தினார். “அவர் யார்?” என்று தாயிடம் கேட்டார்கள். அவர் தனது மகன் என்றார். அவரை எழுப்பி, அறைக்கு வெளியே கொண்டுவந்தார்கள். அவர் சாரமும் கண்ணாடியும் மட்டுமே அணிந்திருந்தார். “உம்முடன் ஒரு சங்கதி கதைக்க வேண்டும்; கீழே போவோம்” என்றார் ஒருவர். அப்பொழுது குறுக்கிட்ட அவர் தாய், கீழே போகத் தேவையில்லை. என்றும், இந்த இடத்தில் வைத்தே கதைக்கும்படியும் கேட்டுக்கொண்டார். ரிச்சாட்டும் கீழே இறங்க மறுத்துவிட்டார்.
அப்பொழுது கீழே இறங்கிய உதவிக் காவல்துறை கண்காணிப்பாளர் ரஞ்சகொடை, ரிச்சார்ட்டை கீழே கொண்டுவரும்படி மற்றவர்களிடம் பணித்தார். அவர்கள் ரிச்சார்ட்டை இழுத்தபொழுது, அவர் படிக்கட்டின் கைப்பிடியில் பற்றிக்கொண்டார். ஒரு கட்டத்தில் சாரத்தை மடித்துக்கட்டி, அவர்களை உதைக்க முயன்றார். அவரை கொறகொறவென கீழேயும், அங்கிருந்து தெருவுக்கும் இழுத்துச்சென்றார்கள். நான் சங்கடம் வரை பின்தொடர்ந்தேன்.
ஓர் ஊர்தி யந்திரம் துவக்கப்படுவது காதில் விழுந்தது. அது ஒரும் கடும்பச்சை மிற்சுபிசி பஜெரோ ஜீப்பு. அதன் இலக்கம்: 32 ஶ்ரீ 4748. சங்கடத்திலிருந்து கிட்டத்தட்ட 5 அடி தூரத்தில் நின்றது. ரிச்சாட்டை பின்புறமாக ஜீப்புக்குள் தள்ளி ஏற்றிவிட்டு, தாங்களும் அவருடன் ஏறி அமர்ந்து கொண்டார்கள். ஜீப்பின் இலக்கத்தை எனது உள்ளங்கையில் குறித்துக்கொண்டேன். ரிச்சார்ட்டின் தாய் கீழே வந்து, அப்புறம் அங்கு வந்தவர்களிடமும், வருண கருணதிலகவிடமும், அர்ஜுன ரணவக்கவிடமும் நடந்ததை தெரிவித்துவிட்டு, இரண்டு மூன்று மணித்தியாலம் கழித்து வெலிக்கடை காவல்துறையில் முறையிட்டார். ஜீப்பின் இலக்கத்தையும் தெரிவித்தார்."
கடும்பச்சை மிற்சுபிசி பஜெரோ ஜீப்பு
ரிச்சாட்டுடன் ஒரே வீட்டில் வசித்த எ. வி. கருணரத்தினா ஒரு கண்கண்ட சாட்சி. அன்றிரவு ரிச்சாட்டை கடத்திச்சென்றவர்களை நேர்நின்று பார்த்தபடியால், அவர்களுள் மூவரை தன்னால் அடையாளம் காட்டமுடியும் என்று கொழும்பு மேல்நீதிமன்றில் அவர் தெரிவித்தார்.
கெனத் ஆர்தர் ஹொன்டர் இன்னொரு சாட்சி. குற்றச்சாட்டுக்கு உள்ளான இரண்டாவது அதிகாரியை, அதாவது கும்பனித்தெரு காவல்நிலைய குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரியாகிய தேவசுரேந்திராவின் புகைப்படத்தை அவர் அடையாளம் காட்டினார். “நள்ளிரவில் ஆயுதம் ஏந்திய ஒரு குழுவுடன் எனது வீட்டினுள் புகுந்து, எனது பிள்ளையை துவக்கு முனையில் நிறுத்தி, “ரிச்சார்ட் டி சொய்சா இருக்கும் இடம் எது?” என்று என்னிடம் கேட்டார்” என்று கெ. ஆ. ஹொன்டர் தெரிவித்தார்.
கும்பனித்தெரு காவல் நிலையத்தில் கடமையாற்றிய இளஞ்சேமக் காவலர் எம். ஏ. எம். ஆனந்த குணசிறியின் சாட்சியம்: “ரிச்சாட் கொலை நடப்பதற்கு முதல் நாள் நள்ளிரவு தேவசுரேந்திரா வெள்ளை முழங்கால் சட்டையும், கறுப்பு மேலங்கியும், தொப்பியும் அணிந்து காவல் நிலையத்துக்கு வந்தார். 1990 பெப்ரவரி 17 நான் இரவுக் கடமையில் இருந்தேன். நள்ளிரவு கழித்து தூக்கத்தைப் போக்க வெளியில் சென்றேன். வெளியே நின்றபொழுது 2 ஜீப்புகள் நிலைய வளவினுள் நுழைந்தன. ஒன்றிலிருந்து ஒரு குழுவினர் இறங்கினர். ஒருவர் குற்றச்சாட்டுக்கு உள்ளான தேவசுரேந்திராவைப் போல் தென்பட்டார். நான் அவரின்கீழ் பணியாற்றியதில்லை. ஆனால் அன்றிரவு அவர் அணிந்திருந்த அதே உடையில் அவர் ஒழுங்காக காவல் நிலையத்துக்கு வந்துசெல்வதை நான் கண்டிருக்கிறேன்.”
கோட்டை காவல் நிலைய துணை மேலாளர் எச். டபிள்யு. சுமதிபாலா அளித்த சாட்சியம்: “1990 பெப்ரவரி 17ம் திகதி இரவு நான் கடமையில் இருந்தேன். குற்றச்சாட்டுக்கு உள்ளான முதலாவது அதிகாரியை, அதாவது உதவிக் காவல்துறை கண்காணிப்பாளர் ரஞ்சகொடவை, அவர் கோட்டை காவல் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றியபொழுது சந்தித்திருக்கிறேன். 1990 பெப்ரவரி 18ம் திகதி காவல்துறை தலைமையகத்தில் காவல்துறை ஆணையாளரின் திணைக்கள வாயிலில் நான் கடமையில் இருந்தேன். குற்றஞ்சாட்டப்பட்டவர் அதிகாலை 2 மணிக்கு ஒரு ஜீப்பில் வந்திறங்கி, எனது குறிப்பேட்டில் ஒப்பமிட்டார். பின்னர் குற்றவியல் புலன்விசாரணைத் திணைக்களம் எனது குறிப்பேட்டை பொறுப்பேற்று, நீதிமன்றில் சமர்ப்பித்தது.” குற்றஞ்சாட்டப்பட்டவரின் ஒப்பத்தை சாட்சி அடையாளம் காட்டினார்.
மருத்துவர் மனோராணி சரவணமுத்து
காணாமல் போக்கடிக்கப்பட்ட பிள்ளைகளுக்காக நீதிகோரி முழ்ங்கிய ரிச்சார்ட் டி சொய்சாவின் தாய், மருத்துவர் மனோராணி சரவணமுத்து, அப்பிள்ளைகளது அன்னையரின் சின்னமாக நினைவுகூரப்படுகிறார். அவர் தனது மகனின் இறப்பினைக் கண்டவர். இலங்கை எனும் சமூகமும், சட்ட ஆட்சியும், ஒழுக்கநெறியும் நிலைகுலைந்ததை கண்டவர். இந்த நாட்டின் மேட்டிமைக் குழாத்து குடும்பத்தவரும், பணித்துறைஞருமாகிய மனோராணி, தனது மகனை இழந்த அக்கணத்திலிருந்து, அன்னையருள் ஓர் அன்னையாக மாறி,, வர்க்கவேலி கடந்து, களத்தில் குதித்தார். ஒரு தசாப்தத்துக்கு மேலாக எமது சமூகத்தின் அடிப்படைப் பிரச்சனைகளை எடுத்துரைப்பதில் அவர் காத்திரமான பங்கு வகித்தார். அப்பிரச்சனைகள் தீர்க்கப்படும் வரை அவரது முயற்சிகள் செல்லுபடியாகும். கொடிய பயங்கரம் ஓங்கிய காலத்தில் அவர் நாடுமுழுவதும் பயணித்து, தன்னைப் போல் பிள்ளைகளை இழந்த ஆயிரக்கணக்கான அன்னையருடன் தோழமை பூண்டு, அஞ்சா விறலுடன் பணியாற்றினார். அவர் எத்துணை திறம்பட சொல்லாட வல்லவர் என்பது பின்வரும் மேற்கோளிலிருந்து புலனாகிறது:
"அதை ஏன் செய்கிறர்கள் என அவர்களுக்கு தெரியுமா என்பது எனக்குத் தெரியாது. இன்னாருக்கு இன்றைய நாள் இருள் சூழுமென அவர்களிடம் சொல்லப்பட்டுள்ளதா என்பதும் எனக்குத் தெரியாது. ஏன் இதைச் செய்கிறோம் என்று அவர்கள் தங்களை வினவுவதில்லைப் போலும். நாங்கள் மடக்கிப்பிடித்து கொல்லும்படியாக இந்தப் பேர்வழி எங்களுக்கு என்ன செய்தான்? அது எனக்குத் தெரியாது. ஆனாலும் அவர்கள் வருகிறார்கள். வெறுமை படர்ந்த கண்களுடன் வருகிறார்கள். துவக்குகளுடன் வருகிறார்கள். தங்கள் பணியை நிறைவேற்றியே தீருவோம் எனும் உறுதியுடன் வருகிறார்கள். வந்து கதவு தட்டுகிறார்கள். மணி அடிக்கிறார்கள். எங்களைப் பார்க்கிறார்கள், வெருட்டுகிறார்கள், அச்சுறுத்துகிறார்கள்…
என் மகனைப் பிடிக்க வந்திருக்கிறார்கள் என்று நான் ஒரு கணம் நினைத்திருந்தால், கதவடியேலேயே நான் உயிர் துறந்திருப்பேன். பெண்களே இடிதாங்கிகள் ஆகின்றார்கள். பெண்களே வலிமை படைத்தவர்கள். ஏனெனில், ஒரு பிள்ளையை நாங்கள் இழக்கும்பொழுது, எங்களையே நாங்கள் இழக்கிறோம். எங்கள் கையிலிருந்து எங்கள் பிள்ளையைப் பறிப்பதே மிகவும் பேரதிர்ச்சியூட்டும் அனுபவம். என் மகன் காணாமல் போனான். 48 மணித்தியாலங்கள் கழித்து, குதறப்பட்ட நிலையில், அவன் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதன் பின்னர் எண்ணிறந்த பயமுறுத்தல்கள், மொட்டைக் கடிதங்கள், பயங்கர தொலைபேசி அழைப்புகள் எனக்கு வந்துள்ளன. எனது தொலைபேசி ஒற்றுக்கேட்கப்படுவது உறுதி.
என் மகனின் வழக்கை நான் தொடர விரும்புகிறேன். அதை நிறுத்தும்படி எனது நண்பர் நம்பியரும், சகாக்களும் கேட்டுக் கொண்டுள்ளார்கள். எனினும், போரிடப் புறப்படுவோர் காயங்கள் பற்றி முறையிடக் கூடாது. பல்லாயிரக் கணக்கான குடும்பத்தவர்கள் வன்முறையால் தாக்குண்டிருப்பதை நான் அறிவேன். என்னுடன் பாடுபடும் பெண்களிடம் தமது இழப்புகளை மறந்துவிடும்படி என்றுமே நான் புத்திமதி கூறப்போவதில்லை. முழங்க வேண்டும் என்றே அவர்களிடம் கூறுவேன்.
தமது சகாக்களுக்கு எதிராகப் புலன்விசாரணை செய்யும்படி காவல்துறைக்கு நீதிமன்று உத்தரவிட்டது. எனினும் புலன்விசாரணை முன்னகர்ந்ததாகத் தெரியவில்லை. அது எதிர் பார்க்கத்தக்கதே! நீதிமன்றில் நடந்த ஒரு விசாரணையில், குணசிங்காவுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்குப் போதிய சான்று இல்லை என்று, சட்டத்துறை அதிபதி சுனில் டி சில்வாவின் பிரதிநிதிகள் தெரிவித்தார்கள். குணசிங்கா தொடர்ந்தும் பதவில் அமர்ந்துள்ளார்.
“சம்பந்தப்பட்டவர்களை தடமொற்றிப் பிடிக்க காவல்துறை முயலவில்லை; முழுவதையும் மூடிமறைக்கவே முற்படுகிறார்கள். மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை…” என்று மனோராணி சரவணமுத்துவின் சட்டவாளர் பட்டி வீரக்கோன் சாடினார். ரிச்சார்ட்டை கடத்திக் கொன்றது பற்றி ஒரு சுதந்திர விசாரணை நடத்தக் கோரும் முயற்சிகளும் பலிக்கவில்லை. மாறாக, அவரது தாயினால் அடையாளம் காட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள் அவர்மீது மானநட்ட வழக்கு தொடுத்தார்கள்.
ரிச்சார்ட் கொலை வழக்கு 16 ஆண்டுகள் நீடித்தது. எண்ணிறந்த விசாரணைகள் நடந்தன. பற்பல நீதிபதிகள் விசாரித்தார்கள். கண்கண்ட சாட்சிகள் இருந்தும் கூட, குற்றம்புரிந்தவர்களை விசாரணைக்கு உள்ளாக்கும் வலுவுடன் நீதிவிசாரணை மேற்கொள்ளப்படவில்லை. 2001 பெப்ரவரி 14ம் திகதி ரிச்சாட்டின் தாயார், மருத்துவர் மனோராணி சரவணமுத்து, தனது குறிக்கோள் நிறைவேறாமலேயே இயற்கை எய்தினார்.
ரிச்சார்ட் டி சொய்சாவை கொலைசெய்த குற்றச்சாட்டு 2005ல் உதவிக் காவல்துறை கண்காணிப்பாளர் எல். பி. டி. ரஞ்சகொடை, காவல்துறை பொறுப்பதிகாரி பி.. ஜி. ஜி. தேவசுரேந்திரா, மேற்காவலர் எம். சரச்சந்திரா ஆகிய மூவர் மீதும் சுமத்தப்பட்டது. 2005 நவம்பர் 9ம் திகதி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உரோகினி பெரேராவினால் எல்லாக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். அரச வழக்குத் தொடுநர் முன்வைத்த சான்று “முன்பின் முரணானது, நம்பத்தகாதது” என்று அவர் தெரிவித்தார்.
அதேவேளை, ரிச்சார்ட்டின் கொலைக்குப் பொறுப்பேற்கவேண்டிய குணசிங்கா உட்பட உயரதிகாரிகள் இருவர் 1993 மே 1ம் திகதி அரசதிபர் பிரேமதாசா கொல்லப்பட்ட அதே குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்கள்.
Leel Pathirana, Richard Was Murdered 22 Years Ago: Remembering Richard,
Colombo Telegraph, 2012-02-18,
translated by Mani Velupillai, 2022-02-18.
No comments:
Post a Comment