மீனுடன் மீண்ட கணையாழி
ஹெரொடொட்டஸ்
ஹெரொடொட்டஸ் (Herodotus, BC 484–425) ஒரு மாபெரும் கதைசொல்லி. சில திறனாய்வாளர்கள் ஒரு படி மேலே சென்று, அவர் கதையளப்பவர் என்று சாடியதுண்டு. அதில் உண்மை இல்லாமல் இல்லை. எவ்வாறாயினும், அவர் எழுதிய வரலாறுகள் (The Histories) ஓர் அரிய கருவூலம் ஆகும். அதில் இடம்பெறும் ஒரு பதிவின்படி, எகிப்திய மன்னன் அமாசிஸ் (Amasis, BC 570–526), சாமோஸ் தீவக மன்னன் பொலிகிரேட்டசுக்கு (Polycrates, BC 538-522) எழுதிய மடல்:
“நண்பராகவும், நேசராகவும் விளங்கும் ஒருவர் சிறப்புடன் வாழ்வதை அறிவது இன்பம் தருவதே. அதேவேளை, கடவுளர் காழ்ப்பு மிகுந்தோர் என்பதை நான் அறிவேன். ஆதலால், உங்கள் அசாதாரண நற்பேறுகள் என்னை மகிழ்விக்கவில்லை. எல்லாவற்றிலும் நற்பேறு துய்க்கும் எவரும் ஈற்றில் முற்றிலும் பேரழிவுக்கு உள்ளாகி மடியாததை இற்றவைரை நான் கேள்விப்பட்டதில்லை. ஆதலால் உண்மையில் நான் உளமார விரும்புவது இதுவே:
எனக்கும், நான் நேசிக்கும் ஆட்களுக்கும் ஒரு விடயத்தில் நற்பேறும், வேறொரு விடயத்தில் அவப்பேறும் கிடைக்க வேண்டும். எங்களுக்கு எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கக் கூடாது. நற்பேறும் அவப்பேறும் மாறிமாறிக் கிடைக்கும் வாழ்வே எங்களுக்கு வேண்டும். ஆதலால் நான் சொல்வதைக் கேட்கவும். எனது புத்திமதியைச் செவிமடுத்து, நீங்கள் இடைவிடாது எய்தும் நற்பேறுகள் குறித்து நடவடிக்கை எடுக்கவும்.
உங்கள் சொத்துக்களைப் பார்வையிட்டு, அவற்றுள் பெறுதற்கரியதைத் தேர்ந்தெடுக்கவும். எதை இழந்தால் நீங்கள் மிகவும் மனமுடைவீர்களோ அதையே தேர்ந்தெடுக்கவும். திரும்பவும் ஒரு மானுடப் பிறவியின் கையில் அகப்படாவாறு அதனை எங்கேயாவது வீசிவிடவும். அதன் பிறகும் உங்களுக்கு நற்பேறும் அவப்பேறும் மாறிமாறிக் கிடைக்காமல், தொடர்ந்தும் நற்பேறே கிடைத்து வந்தால், திரும்பவும் நான் கூறிய அதே பரிகாரத்தை நாடவும்.”
மேற்படி மடலை வாசித்த பொலிகிரேட்டஸ், எகிப்திய மன்னன் கூறிய புத்திமதி மிகவும் சிறந்தது என்பதை உணர்ந்து கொண்டான். அதன்படி, தனது வழிவழிச் சொத்துக்களுள் எதனை இழந்தால் அவன் இதயம் மிகவும் ஒடியுமோ அதனைத் தேடினான். ஈற்றில் தான் அணிந்த கணையாழியை, (சாமோஸ் தீவகத்து தியோடறஸ் என்னும் பொன்வினைஞனின் கைவண்மையில்) மரகதம் பதித்த கணையாழியை அவன் தேர்ந்தெடுத்தான்.
அந்தக் கணையாழியையே வீசிவிட வேண்டும் என்று முடிவெடுத்து, ஓர் ஓடத்தில் ஏறி, அதனைச் செலுத்திச் செல்லும்படி தனது படையினரிடம் பணித்தான். ஓடம் சாமோஸ் தீவை விட்டு நெடுந்தூரம் சென்ற பின்னர், படையினர் அனைவரும் பார்த்திருக்க, அவன் தனது கணையாழியைக் கழற்றி கடலில் வீசினான். பிறகு தாயகம் திரும்பி, தன் இழப்பை எண்ணி வருந்தினான்.
நாலைந்து நாட்கள் கழித்து ஒரு கடலாளன் ஒரு பேரழகிய மீனைப் பிடித்தான். அதனை மன்னன் பொலிகிரேட்டசுக்கு பரிசாக வழங்குவதே தகுமெனக் கருதி, அந்த மீனுடன் அரண்மனை வாயிலை அடைந்து, தன்னை இட்டுச்சென்று மன்னன் முன்னிலையில் நிறுத்தும்படி வாயில்காப்போரிடம் அவன் வேண்டிக் கொண்டான். வேண்டுகோளுக்கு இசைவு கிடைத்து, மன்னனிடம் அதனைப் பரிசாக வழங்குந் தறுவாயில் அவன் கூறியது:
“மாட்சிமை தங்கிய மன்னவா, நான் மீன்பிடித்துப் பிழைப்பவன். ஆனாலும், இந்த மீனை நான் பிடித்தபொழுது, அதைச் சந்தைக்கு கொண்டுபோவது சரி என்று எனக்குப் படவில்லை. மாறாக, இதைப் பெற்றுக் கொள்ளும் அருகதை தங்களுக்கே, தங்கள் கோன்மைக்கே உண்டு என்று நான் முடிவெடுத்தேன். ஆதலால் இதை இங்கு கொண்டுவந்தேன். இதோ, இந்த மீனை தங்களுக்குப் பரிசாக அளிக்கிறேன்.”
மேற்படி சிற்றுரையைக் கேட்டு மகிழ்ந்த மன்னன் கூறிய மறுமொழி: “நீ மிகவும் கனிவானவன். உனது கூற்றுக்கும் பரிசுக்கும் நான் இரு மடங்கு நன்றி செலுத்துகின்றேன். எங்களுடன் சேர்ந்து விருந்துண்ண அழைக்கிறேன்.”
கடலாளன் (விருந்துண்டு களித்து), மன்னன் தனக்கு ஈந்த மரியாதையை எண்ணி உள்ளம் பூரித்து, வீட்டுக்குப் புறப்பட்டான். அதன் பிறகு அரண்மனைப் பணிவிடையாளர்கள் அந்த மாபெரும் மீனை வெட்டியபொழுது, அதன் வயிற்றினுள் மன்னனின் கணையாழியைக் கண்டெடுத்தார்கள். அவர்கள் எக்களிப்புடன் அதை எடுத்துச்சென்று மன்னனிடம் கொடுத்து விபரம் தெரிவித்தார்கள். அது கடவுள்செயல் என்றுணர்ந்த பொலிகிரேட்டஸ் தான் செய்தது, தனக்கு நேர்ந்தது முழுவதையும் விபரித்து எகிப்திய மன்னன் அமாசிசுக்கு ஒரு மடல் அனுப்பினான்.
அந்த மடலை வாசித்த அமாசிஸ், ஒருவர் பட்டறிவதற்குரிய விதியிலிருந்து அவரை இன்னொருவர் காப்பாற்றுவது இயலாத காரியம் என்பதை உணர்ந்து கொண்டான். பொலிகிரேட்டஸ் வீசிய உடைமையே அவனிடம் மீண்டபடியால், அவன் தொடர்ந்து, இறுதிவரை, எல்லாவற்றிலும் நற்பேறு துய்க்கப் போவதில்லை என்பது அமாசிசுக்குப் புரிந்தது. ஆதலால், தான் பொலிகிரேட்டசுடன் பூண்ட நட்புறவைத் துண்டித்துக் கொள்வதாக அவனுக்கு அறிவிக்கும்படி சொல்லி ஒரு கட்டியக்காரனை அவன் சாமோசுக்கு அனுப்பி வைத்தான். பொலிகிரேட்டஸ் ஈற்றில் ஓர் அறக்கொடிய அவப்பேறுக்கு இரையாகும்பொழுது, ஒரு நண்பராகவோ நேசராகவோ விளங்கும் ஒருவருக்காக வருந்துவதுபோல், தான் வருந்தக் கூடாது என்பதற்காகவே அவன் அப்படிச் செய்தான்.
இதற்கிடையே, பாரசீக மன்னன் கம்பைசஸ் (Cambyses, கி.மு. 530–523) தனது தஸ்கெலியன் (Daskyleion) புலத்து ஆளுநராக மிற்றொபேற்ஸ் (Mitrobates) என்பவனையும், சாடிஸ் (Sardis) புலத்து ஆளுநராக ஒரைட்டஸ் (Oroites) என்பவனையும் அமர்த்தியிருந்தான். ஒரு நாள் ஒரைட்டசை விளித்து மிற்றொபேற்ஸ் சீறினான்: “உண்மையில் உன்னை ஓர் ஆள் என்று நீ கருதுகிறாயா? சாமோஸ் தீவு உன் புலத்துக்கு அருகில் இருக்கிறது. அதனை அடிப்படுத்துவது மிகவும் எளிது. தீவைச் சேர்ந்த ஒருவன் அதனைக் கட்டி ஆளுகிறான். ஆக 15 காலாட் படையினரின் துணையுடன்தான் அவன் ஆட்சியைப் பிடித்தான். அப்படிப்பட்ட சாமோஸ் தீவை நீ எங்கள் மன்னரின் அரசுடன் இணைக்கத் தவறிவிட்டாயே!”
இந்த வசை ஒரைட்டசை, பொலிகிரேட்டசுக்கு எதிராக வெகுண்டெழ வைத்தது. அவன் மைக்னீசியா என்ற இடத்தில் நிலைகொண்டு, பொலிகிரேட்டசுக்கு அனுப்பிய சேதி: “நீங்கள் பெருந் திட்டங்கள் தீட்டுவதாகவும், உங்கள் ஆசைகளை நிறைவேற்றப் பணம் தேவைப்படுவதாகவும் நான் அறிகிறேன். நீங்கள் எனது புத்திமதியின்படி நடந்தால், நீங்கள் சரியான பாதையிலும் செல்வீர்கள், என்னையும் காப்பாற்றுவீர்கள். மன்னன் கம்பைசஸ் என்னைக் கொல்லத் திட்டம் தீட்டுவதைப் புலப்படுத்தும் அறிக்கைகள் என்னை வந்தடைந்துள்ளன. ஆதலால், இங்கிருந்து என்னையும், என் பணத்தையும் ஏற்றிசெல்ல ஏற்பாடு செய்யும்படி உங்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். என் பணத்துள் கொஞ்சத்தை நீங்கள் வைத்துக்கொண்டு, எஞ்சியதை நான் வைத்திருக்க நீங்கள் அனுமதி அளிக்கலாம். இப்பணத்தைக் கொண்டு நீங்கள் கிரேக்கம் முழுவதுக்கும் ஆட்சியாளன் ஆகமுடியும். நான் சொல்வதை நீங்கள் நம்பாவிட்டால், உங்களுக்கு மிகவும் நம்பிக்கையான ஆளை இங்கு அனுப்பி வைக்கவும். நான் மெய்ப்பித்துக் காட்டுவேன்.”
சேதி அறிந்து மகிழ்ந்த பொலிகிரேட்டஸ் தனது செயலாளனை மைக்னீசியாவுக்கு அனுப்பி வைத்தான். அவன் வருவதை அறிந்த ஒரைட்டஸ் எட்டுப் பேழைகளில் கழுத்துவரை கற்களையும், அவற்றின்மேல் பொன்னையும் இட்டு நிரப்பி வைத்திருந்தான். செயலாளன் பேழைகளைப் பார்வையிட்டு, பொலிகிரேட்டசுக்கு தகவல் தெரிவித்தான்.
நிறைந்த மனதுடன் பொலிகிரேட்டஸ் மைக்னீசியாவுக்குச் சென்று ஒரைட்டசைச் சந்திக்க ஆயத்தம் செய்தான். கெட்ட கனவு கண்ட அவன் மகள் அவனைத் தடுத்து நின்றாள். அவன் கலத்தில் ஏறுந் தறுவாயில் திரும்பவும் அவனைத் தடுத்துநின்று, சகுனப்பிழையான சொற்களை உதிர்த்த மகளிடம், “நான் பத்திரமாய் திரும்பி வந்தால், நீ மணம் முடிக்காது கன்னியாகவே காலம் தள்ளநேரும்” என்று எச்சரித்தான்.
“உங்கள் எச்சரிக்கை பலிக்கவேண்டும் என்றே நான் பிரார்த்திக்கிறேன். எனது பிதாவை இழப்பதைவிட, ஒரு கன்னியாகக் காலம் தள்ளுவதையே நான் அதிகம் விரும்புகிறேன்” என்று விடைகொடுத்தாள் மகள்.
மைக்னீசியா சென்றடைந்த பொலிகிரேட்டஸ் மிருகத்தனமாகவும், அருவருக்கத்தக்க முறையிலும் கொல்லப்பட்ட விதத்தை இங்கு எடுத்துரைக்க முடியாது. எவ்வாறாயினும், எகிப்திய மன்னன் அமாசிஸ் ஆரூடம் கூறியவாறு, பொலிகிரேட்டசின் பேறுகள், சொத்துக்கள் அனைத்தும் அழிந்தொழிந்தன (Herodotus, The Histories, Edited by Robert B. Strassler, Pantheon Books, New York, 2007, p.225). ஹெரொடொட்டஸ் தணிக்கைசெய்த விபரம்: பொலிகிரேட்டஸ் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டு, உடல் நாட்கணக்காக ஒரு கம்பத்தில் தொங்கவிடப்பட்டது!
ஹெரொடொட்டசின் பதிவுத்திரட்டில் மீனுடன் மீண்ட கணையாழி ஓர் அவப்பேறுக்கு இட்டுச்செல்கிறது. நற்பேறு, வாழ்நாள் முழுவதும் நிலைக்காது. இதுவரை துய்த்தது போதும் என்று சொல்லி ஒதுங்கவேண்டிய காலம் என்றோ கழிந்துவிட்டது. காலம் தாழ்த்திக் கழுவாய் தேடுவதில் பயனில்லை என்பதே அதன் படிப்பினை போலும்.
ஹெரொடொட்டசுக்கு ஏறத்தாழ 1,000 ஆண்டுகள் பிற்பட்டவர் காளிதாசர் (அவர் கி.பி. 4ம் நூற்றாண்டுக்கும் 5ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்ததாகத் தெரிகிறது). காளிதாசரின் சகுந்தலை நாடகத்தின் 6ம் காட்சியில் மீனுடன் மீண்ட கணையாழி ஒரு நேரெதிர்மாறான திருப்பத்துக்கு – ஒரு நற்பேறுக்கு – வழிவகுக்கிறது:
மன்னன் துஷ்யந்தனின் மைத்துனர் (தலைமைக் காவலர்) வேறிரு காவலர்களுடன் ஒருவனைக் கைதுசெய்து கொண்டுவருகிறார். கைதியின் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டுள்ளன.
காவலர்கள் (கைதியைத் தாக்கியபடி): உண்மையைச் சொல்லடா, திருட்டுப் பயலே! இந்தக் கணையாழியை நீ எங்கே களவாடினாய்? இதில் பதிக்கப்பட்டுள்ள கற்களைப் பார்... மன்னரின் இலச்சினை பதிக்கப்பட்டுள்ளது... புறமணப்பிறவி!
கைதி (பயந்து நடுங்கி): ஐயோ, காவலர்களே, எனக்கு அடிக்க வேண்டாம்! அப்படி ஒரு காரியத்தை நான் ஒருபொழுதும் செய்ய மாட்டேன்!
முதலாவது காவலர் (கேலியாக): ஐயோ, என்னை மன்னிக்கவும் ஐயா! இந்த உண்மையை நான் கவனிக்கத் தவறியது எங்கனம்? தாங்கள் ஓர் அந்தணர் அன்றோ! இது மன்னவர் தங்களுக்கு ஈந்த கொடை அன்றோ!
கைதி: நான் சொல்வதைக் கேட்பீர்களா? நான் ஒரு வறிய கடலாளன். இந்திர வனத்து நெய்தல் திணையில் மீன்பிடித்துப் பிழைக்க முயல்பவன்…
இரண்டாவது காவலர்: திருட்டுப்பயலே, உன் சாதியை நாங்கள் கேட்டோமா?
தலைமைக் காவலர்: சூசகா, அவன் ஆதியோடு அந்தமாய் கதையைச் சொல்லட்டும். குறுக்கிட்டபடி இருக்க வேண்டாம்!
காவலர்கள்: அப்படியே ஆகட்டும், ஐயா! (கைதியிடம்) வாயைத் திறந்து பேசடா!
கைதி: நான் தூண்டில், வலை கொண்டு மீன் பிடித்து, என் குடும்பத்தைக் காப்பவன்.
தலைமைக் காவலர்: எவ்வளவு பரிசுத்தமான உத்தியோகம்!
கைதி: அப்படி எல்லாம் நீங்கள் சொல்லக் கூடாது, ஐயா! (பாடுகிறான்):
பிறர் என்னைப் பழிக்கலாம், எனினும்,
இது என் கடமை:
“நீ ஒரு கழிசடை –
நீ பலியிடும் விலங்குமீது
உனக்கு இரக்கம் இல்லை” என்று
குருவிடம் எவரும் கூறமாட்டாரே!
தலைமைக் காவலர்: நடந்ததைச் சொல்லடா!
கைதி: ஒருநாள் ஒரு கயல்மீனை நான் வெட்டிக்கொண்டிருந்தேன். அதன் வயிற்றினுள் இந்த அழகிய கணையாழி கிடந்தது. நீங்கள் எப்படிச் செய்வீர்களோ அப்படித்தான் நானும் செய்தேன் – அதை நல்ல விலைக்கு விற்க நான் பேரம் பேசிக்கொண்டிருந்தேன். அப்புறம் நான் கைது செய்யப்பட்டதுதான் எனக்குத் தெரியும். என்னைத் தீர்த்துக் கட்டுங்கள் அல்லது விடுதலை செய்யுங்கள்! என்னை நீங்கள் என்ன செய்தாலும், இதுதான் உண்மை!
தலைமைக் காவலர்: சனுகா, இவன் மேனியிலிருந்து வெளிப்படும் நெடியை வைத்துச் சொல்லுகிறேன், இவன் ஒரு மீனவன் என்பதில் ஐயமில்லை. ஆனாலும், இந்தக் கணையாழி எப்படி இவனுக்குக் கிடைத்தது என்பதுதான் இன்னமும் எங்களுக்குப் புரியவில்லை. ஆகவே, இவனை நேரே அரண்மனைக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன்.
காவலர்கள்: ஆகட்டும், ஐயா! (கைதியிடம்) எழுந்து நடவடா, முடிச்சுமாறி!
(அவர்கள் நடந்து செல்கிறார்கள்).
தலைமைக் காவலர்: சூசகா, அரண்மனை வாயிலில் இவனை மறித்து வைத்திரு! நான் மன்னரிடம் போய், கணையாழியின் வரலாற்றைச் சொல்லி, கையோடு திரும்பி வந்து தகவல் தெரிவிக்கிறேன்.
காவலர்கள்: நல்ல செய்தியோடு திரும்பி வாருங்கள், ஐயா!
(தலைமைக் காவலர் வெளியேறுகிறார்).
முதலாவது காவலர்: சனுகா, ஐயா போனது போனது தான்!
இரண்டாவது காவலர்: உண்மை தான்! ஆனால் முன்கூட்டியே ஏற்பாடு செய்யாமல் அரண்மனைக்குள் நாங்கள் அடி எடுத்து வைக்கக் கூடாது!
முதலாவது காவலர்: சனுகா, இந்த திருட்டுப்பயலுக்கு ஒரு தூக்குமாலை இடுவதற்கே என் கைகள் உன்னுகின்றன.
(கைதியைச் சுட்டிக்காட்டுகிறான்).
கைதி: இது அடுக்காது – எதுவித காரணமுமின்றி ஒருவனைக் கொல்வது பற்றி நீங்கள் கதைக்கக் கூடாது.
இரண்டாவது காவலர் (அப்பால் பார்த்தபடி): இதோ ஐயா திரும்பி வருகிறார். அவர் மன்னரின் ஆணையுடன் வருவதாகத் தெரிகிறது. கூட்டாளி, இனி பிணந்தின்னிக் கழுகுகள்தான் உன் கூட்டாளிகள்! காலனுடன் கூடிவரும் நாய்களின் தாடையை நீ வைத்த கண் வாங்காமல் பார்ப்பதுபோல் தெரிகிறதே!
தலைமைக் காவலர் (வெளிப்பட்டு): சூசகா, மீனவனை விடுதலை செய்! இவன் கணையாழி பற்றிச் சொல்லிய கதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முதலாவது காவலர்: அப்படியே ஆகட்டும், ஐயா! இவன் யமலோகத்தை ஊடறுத்து நடந்து போய்விட்டானே!
(கைதியை விடுதல் செய்கிறான்).
கைதி (தலைமைக் காவலரைப் பணிந்து): எனது உத்தியோகம் பற்றி இப்பொழுது என்ன நினைக்கிறீர்கள், ஐயா!
தலைமைக் காவலர்: கணையாழிக்கு நிகரான பணத்தை உனக்குக் கொடுக்கும்படி என்னிடம் பணிக்கப்பட்டுள்ளது.
(பணம் கொடுக்கப்படுகிறது).
கைதி (பணிந்து): தங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டவன், ஐயா!
முதலாவது காவலர்: இதையே நான் தயவென்று சொல்வேன் – கழுவாயிலிருந்து தூக்கி நேரே யானையின் மீது அமர்த்தப்படுவதையே நான் தயவென்று சொல்வேன்!
இரண்டாவது காவலர்: ஐயா, மன்னருக்கு அது மிகவும் பெறுமதி வாய்ந்த கணையாழி போல் தெரிகிறதே?
தலைமைக் காவலர்: கணையாழியின் பெறுமதி பற்றி மன்னர் கவலைப்படுவதாகத் தெரியவிலை. வழமையில் அவர் நிதானம் தப்புவதில்லை. ஆனால் அந்தக் கணையாழியை அவர் கண்டதும் எதையோ நினைவுகூர்ந்த மாதிரி, தான் அன்புசெலுத்திய ஒருவரை நினைவுகூர்ந்த மாதிரி, கொஞ்ச நேரம் அவர் மிகவும் பதகளிப்புக்கு உள்ளானார்.
முதலாவது காவலர்: அந்த வகையில் நீங்கள் மன்னருக்கு ஓர் அரும் பணி ஆற்றியுள்ளீர்கள் என்பது உறுதி, ஐயா!
இரண்டாவது காவலர்: அத்துடன் இந்த மீனவ மன்னனுக்கும் பேருதவி புரிந்திருக்கிறீர்கள்!
(கடலாளனைப் பொறாமையுடன் பார்க்கிரன்).
கைதி: சரி, காவலர்களே! அரைவாசி உங்களுக்கு – நீங்கள் கொஞ்சம் அதிகமாகவே குடித்துத் தள்ளலாம்!
இரண்டாவது காவலர்: அது நியாயம் தானே!
தலைமைக் காவலர்: நீ உண்மையில் ஒரு மீனவப் பிரபு! நீ எனது சிறந்த நண்பனாக இருக்கத் தக்கவன்! எனவே நேரே நாங்கள் குதத்துக்குப் போவோம் – போய் ஓரிரு மதுப்புட்டிகளுடன் எங்கள் உறவைக் கொண்டாடுவோம்! (Kalidasa, The Recognition of Sakuntala, Translated by W. J. Johnson, Oxford, 2001, p. 70-72).
பி.கு: மீனுடன் மீண்ட கணையாழி பற்றிய வேறு பதிவுகள்:
Talmud - Jewish Law (A.D.200-500)
Benefits of Bismillah - Islamic source
Joseph Jacobs – British writer (1854-1916)
__________________________________
மணி வேலுப்பிள்ளை, 2011-11-20.
No comments:
Post a Comment