ரஷ்ய - யுக்ரேனிய வரலாறு

சேர்கி புலோகிவ்

(வரலாற்றியல் பேராசிரியர்)

 

ஐசாக் கொடினர்

(செவ்வியாளர்)

 


இன்று நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய யுக்ரேனிய அடையாளம் எவ்வளவு பழைமை வாய்ந்தது? 

 

அந்த அடையாளத்தில் எந்தக் கூறினைப் பற்றி நீங்கள் வினவுகிறீர்கள் என்பதைப் பொறுத்த சங்கதி அது. யுக்ரேனிய மொழி மிகவும் தொன்மையானது. யுக்ரேனின் சமய வரலாறு 1,000 ஆண்டுகளுக்கு மேற்பட்டது. ஆனால் முதலாவது நவீன அரசியல் கட்டுமானம் 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் துவங்கியது. வேறு பல குழுமங்களின் கதையும் அதுவே. யுக்ரேனின் பிரச்சனை என்னவென்றால், அது இரண்டு பேரரசுகளுக்கு இடையே, அதாவது ரஷ்ய பேரரசுக்கும், ஆஸ்திரிய-ஹங்கேரிய பேரரசுக்கும் இடையே பிளவுண்டிருந்தது. ரஷ்ய பேரரசின் ஐக்கியத்துக்கு ஒரு தனி யுக்ரேன், குறிப்பாக ஒரு தனி யுக்ரேனிய இலக்கிய மொழி ஆபத்து ஏற்படுத்தும் என அப்பேரரசு வேளைக்கே முடிவெடுத்தது. ஆதலால், 1860 முதல் 40 ஆண்டுகளுக்கு மேலாக யுக்ரேனிய மொழி வெளியீடுகள் தடைசெய்யப்பட்டிருந்தன. அதாவது யுக்ரேனிய இலக்கிய மொழியின் விருத்திக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இது தவிர, மேற்படி இரு பேரரசுகளின் நிலைப்பாடுகளினால் முதலாவது உலகப் போருக்கும் (1914-1918), ரஷ்யப் புரட்சிக்கும் (1917) நடுவில் வேறு தேசிய இனங்கள் சுதந்திரம் பெற்றன அல்லது சுதந்திரம் பெற முயன்றன. யுக்ரேன் சுதந்திரம் பெற எடுத்த முயற்சி ஈற்றில் தோற்கடிக்கப்பட்டது.    

 

யுக்ரேனிய அடையாளம், குறிப்பாக யுக்ரேனிய மொழி ஏன் ரஷ்யாவுக்கு அச்சுறுத்தலாய் அமைந்தது? அது சிறுபான்மைக் குழுமங்கள் அல்லது மொழிகள் மீது ஒரு பேரரசுக்கு வழமையாக ஏற்படும் நம்பிக்கையீனத்தின் அல்லது வெறுப்பின் வெளிப்பாடாகுமா?

 

அப்பொழுது ஐரோப்பாவில், குறிப்பாக பிரான்சில் இடம்பெற்ற நிகழ்வுகளை ரஷ்யர்கள் அவதானித்தார்கள். பிரான்சில் வெவ்வேறு மொழிகளிலிருந்து அல்லது கிளைமொழிகளிலிருந்து ஒரு மொழியைத் தோற்றுவிக்கும் எண்ணம் ஓங்கியிருந்தது. அதற்கும் அரசின் ஐக்கியத்துக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகக் கொள்ளப்பட்டது.  அது உலகம் முழுவதும் ஓங்கிய எண்ணம். அத்தகைய எண்ணம் இன்று முனைப்பாக எதிரொலிக்கிறது. அதாவது, ஒரு பாரிய ரஷ்ய அல்லது சிலாவிய தேசிய அரசு என ஒன்று இருக்கிறது; அது வெவ்வேறு குலங்களைக் கொண்டிருக்கக் கூடும்; எனினும் அவை அடிப்படையில் ஒரே தேசிய அரசாய் அமைபவை என்ற எண்ணமே அது. 19ம் நூற்றாண்டிலும், 20ம் நூற்றாண்டின் துவக்கத்திலும் ஓங்கியிருந்த இந்த மாதிரியான எண்ணத்தையே பூட்டின்  கொண்டுள்ளார். இதனைக் கருத்தில் கொண்டே, யுக்ரேனுக்கு ஒரு தேசம் எனும் அருகதை இல்லை என்று அவர் கூறுகிறார். அத்தகைய எண்ணத்துக்கும் தற்போதைய நிகழ்வுக்கும் நேரடித் தொடர்பு தெரிகிறது.

 


“நுட்பமாகச் சொல்வதாயின், மிகவும் சுதந்திர உணர்வு கொண்ட யுக்ரேனிய, ஜோர்ஜிய குடியரசுகள் இரண்டையும் உள்வாங்குவதற்காகவே 1922-1923ல் சோவியத் ஒன்றியம் ஓர் ஒற்றையாட்சி அரசாக அமைக்கப்படாமல், ஒரு போலி இணைப்பாட்சி அரசாக அமைக்கப்பட்டது” என்று அண்மையில் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். அதை இன்னும் விளக்கி உரைக்க முடியுமா? 

 

இரசியப் பேரரசின் பெரும்பகுதியை போல்சிவிக் தரப்பினர் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தார்கள். அதனுள் தாம் உள்ளடக்கிய பல்வேறு சுதந்திர குடியரசுகளை அவர்கள் மாதிரிக்காவது அங்கீகரித்தார்கள். 1922 வரை, ஒரு குறுகிய காலத்துக்கு, யுக்ரேன் ஒரு சுதந்திர நாடாக விளங்கியது. 1922ல் போல்சிவிக் தரப்பினர் ஜேர்மனியுடன் ஓர் உடன்படிக்கையில் (இரபலோ பொருத்தனையில்) ஒப்பமிட்டபொழுது, யுக்ரேனியர்களிடையே ஒரு வினா எழுந்தது: “எமக்காக உடன்படிக்கைகளில் ஒப்பமிடும் உரிமை எதையும் எதற்காக ரஷ்ய இணைப்பரசின் பிரதிநிதிகள் கொண்டிருக்கிறார்கள்?” என்ற வினா எழுந்தது. அதைக் குறித்து ஏதாவது செய்யவேண்டும் என்று அவர்கள் தீர்மானித்தார்கள். எனவே ஒருமித்த அரசு ஒன்றை அமைப்பது குறித்து கலந்துரையாடினார்கள். வெவ்வேறு குடியரசுகள் இணைந்த ஐக்கியத்தை ஏற்படுத்த ஸ்டாலின் எண்ணினார். உலகப் புரட்சியை நாடிய லெனின் அதற்கு மறுப்புத் தெரிவித்து, யுக்ரேனியரின் பக்கமும், ஜோர்ஜியரின் பக்கமும் சாய்ந்து, “ஒன்றிய அரசு” ஒன்றை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

 

 

“ஒன்றிய அரசு” என்பதை இன்னும் முழுமையாக விளக்க முடியுமா? 

 

முறைப்படி சொல்வதாயின், சோவியத் ஒன்றியம் என்பது பெரிய ரஷ்யா முதல் சிறிய எஸ்தோனியா வரை சமத்துவ குடியரசுகள் கொண்ட அமைப்பு. இக்குடியரசுகள் சுதந்திரப் போராட்டங்களில் இறங்கியதுக்கு ஒரு காரணம் உண்டு: இவை ஏற்கெனவே தமது சுதந்திரத்தை முரசறைந்தவை அல்லது சுதந்திரத்துக்காகப் போராடியவை. ஆனால் போல்சிவிக் தரப்பினர் அக்குடியரசுளின் மொழியுரிமைகளுக்கும், சில தேசிய-பண்பாட்டு வேட்கைகளுக்கும் இடங்கொடுத்து, அவற்றை உள்வாங்கிக் கொண்டார்கள்.  

 

லெனின் இறந்து, ஸ்டாலின் ஆட்சி ஏற்ற பிறகு, ரஷ்ய-யுக்ரேனிய உறவு எப்படி மாறியது?

 

லெனின் இறந்த கையோடு அது மாறவில்லை. காரணம், அவரது கொள்கைகளையே ஸ்டாலின் கடைப்பிடித்தார். யுக்ரேனியருக்கும், மற்றவர்களுக்கும், அவர்களது மொழிகளுக்கும், பண்பாடுகளுக்கும் இடங்கொடுக்கும் இயக்கம் ஒன்றை அவர் மேற்கொண்டார். அதன்படி ஜோர்ஜியர்கள், ஆர்மீனியர்கள்... பொதுவுடைமைக் கருத்தையும், பொதுவுடைமைத் திட்டத்தையும் ஏற்றுக்கொள்ளும் வரை ஜோர்ஜிய, ஆர்மீனிய... மொழிகளைப் பயன்படுத்தும் உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டது. 

 

பிறகு 1930-க்குப் பின்னர் ஸ்டாலின் அதை மாற்றத் துவங்கினார். ரஷ்ய மொழி, ரஷ்யப் பண்பாடு இரண்டினதும் குறியீட்டு முக்கியத்துவம் படிப்படியாக மறுமலர்ச்சி அடைந்தது. முன்னைய காலத்தில் அது பேரரசையும், பின்னோக்கிய கண்ணோட்டத்தையும் குறிப்பதாகக் கொள்ளப்பட்டது. அப்பொழுது கூட மற்றைய மொழிகளை அவர்கள் ஒதுக்கித்தள்ளவில்லை. 1932ம், 33ம் ஆண்டுகளில் யுக்ரேனில் ஏற்பட்ட பஞ்சம் பல வழிகளில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அப்பொழுது யுக்ரேனிய தானியம்மீது மட்டுமல்ல, யுக்ரேனிய மொழிமீதும் அவர்கள் கண்வைத்தார்கள்.  

 

யுக்ரேனுக்கு வெளியே, ரஷ்யாவிலும் வேறு புலங்களிலும், யுக்ரேனியர் வாழும் இடங்களில் யுக்ரேனிய மொழியை கற்பிக்க வழங்கிய உதவியை நிறுத்தும்படி 1932ல்  ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி யுக்ரேனிய சோவியத் சமவுடைமைக் குடியரசுக்கு வெளியே யுக்ரேனிய மொழிக் கல்வியும், வெளியீடுகளும் நிறுத்தப்பட்டன. யுக்ரேனுக்கு உள்ளேயும் யுக்ரேனிய பண்பாட்டு அலுவல்களை அறவே கட்டுப்படுத்தும் கொள்கை புகுத்தப்பட்டது. யுக்ரேனிய தேசியம் மேலோங்கும் வாய்ப்பினை தடுப்பதற்காக அவ்வாறு செய்யப்பட்டது. யுக்ரேனிய பொதுவுடைமைக் கட்சியையும், பண்பாட்டுத் துறையையும் சேர்ந்த முக்கிய தலைவர்கள் மீதும் இலக்கு வைக்கப்பட்டது. அவர்களுள் இருவர் 1933ல் தற்கொலை செய்துகொண்டார்கள். யுக்ரேனில் பஞ்சம் மட்டுமல்ல, அதைவிடவும் பாரிய கேடு எனும்படியாக, அங்கு இனப்படுகொலை நிகழ்ந்தது. யுக்ரேனிய இனப்படுகொலை, அங்கு ஏற்பட்ட பஞ்சத்தை மட்டும் பொறுத்த சங்கதி அல்ல; அது யுக்ரேனிய மொழி, பண்பாடு, நிறுவனங்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலைப் பொறுத்த சங்கதியும் கூட என்று இனப்படுகொலை எனும் கருப்பொருளின் பிதா இரவேல் லெம்கின் கூறியிருக்கிறார்.  

 

அதை அடுத்து 60 ஆண்டுகள் கழித்து சோவியத் ஒன்றியம் நிலைகுலந்த பிறகு, சுதந்திர யுக்ரேன் எழுந்ததை காண்கிறோம். 1991ல் இடம்பெற்ற நிகழ்வையும், சுதந்திர யுக்ரேனின் துவக்க ஆண்டுகள் சிலவற்றையும்  எப்படி நீங்கள் மீள்நோக்கி கணிக்கிறீர்கள்?  

 

ரஷ்யப் புரட்சி நிகழ்ந்த 1917ம் ஆண்டுக் காலப்பகுதிக்கும், 1991ம் ஆண்டுக் காலப்பகுதிக்கும் இடையே பாரிய வேறுபாடு உண்டு. யுக்ரேனிய ஆள்புலத்தில் வாழ்ந்த ரஷ்யர், போலாந்தியர் உட்பட சிறுபான்மைக் குழுமங்கள் பலவும் சுதந்திர யுக்ரேனிய குறிக்கோளை ஐயுறவுடன் நோக்கியதுண்டு. எனினும், முதலாவது காலப்பகுதியில் யுக்ரேனிய தேசியக் கருத்தும், யுக்ரேனிய புரட்சியும் அடிப்படையில் இனத்துவம் சார்ந்ததாகவே  அமைந்தது. ஆனால் 1991 வாக்கில் யுக்ரேனிய தேசியக் கருத்து மாறியது. தேசியக் கருத்துக்கும் மொழிக்கும் இடைப்பட்ட தொடர்பு மாறியது.  தேசியக் கருத்துக்கும் பண்பாட்டுக்கும் இடைப்பட்ட தொடர்பு மாறியது. யுக்ரேனியர் எனப்படுவோர் பெரிதும் ஓங்கியெழும் தேசிய சமூகமாக கருதப்பட்டனர். அப்பொழுது தொழில்துறை வளர்ச்சி கண்ட பாரிய மாநகரங்களில் ரஷ்ய மொழி பேசப்பட்டது. 1991 மார்கழியில் 90 விழுக்காடு மக்கள் சுதந்திரத்தை ஆதரித்தார்கள். யுக்ரேனிய பிராந்தியம் ஒவ்வொன்றிலும் பெரும்பாலானோர் சுதந்திரத்தை ஆதரித்தார்கள். இனத்துவமும், மொழியும் இரண்டாம் நிலையில் வைத்தே பொருட்படுத்தப்பட்டன.  

 

கிழக்கு - மேற்கு பிரிவுக்கு அப்பால் எப்படி மக்களிடையே மொழி வேறுபாடுகள் உருவெடுக்கின்றன? 

 

யுக்ரேனிய மொழி, நாட்டுப்புற வரலாறு கொண்டது. 20ம் நூற்றாண்டில் யுக்ரேன் நவீனயமாக்கத்துக்கும், நகரமயமாக்கத்துக்கும் உள்ளாகியது. முன்னாள் உழவர்கள் ரஷ்யமொழி வாயிலாக நகரப் பண்பாட்டுடன் ஒருங்கிணைந்தார்கள். அவர்கள் ரஷ்ய மொழியை பேசினாலும் கூட, யுக்ரேனிய அடையாளத்தை கொண்டிருந்தார்கள். பெருந்தொகையான மக்கள் யுக்ரேனிய மொழியை தமது தாய்மொழியாக கருதினார்கள்.

 

இன்று பெரிய நகரஙகளில் மக்கள் பேசும் மொழியைப் பொறுத்தவரை சற்று எதிர்மாறான நிலை காணப்படுவதாக எண்ணுகிறேன். 

 

அது கடந்த 8 ஆண்டுகளில் ஏற்பட்ட விருத்தி. அதற்கு முன்னரும் ஏதாவது நகர்வு இடம்பெற்றிருக்கக் கூடும். ஆனால் உண்மையில் இது போரின் விளைவாக ஏற்பட்ட விருத்தி. 2014ல் போர் துவங்கியது. நீங்கள் ரஷ்யமொழி பேசும் மக்கள்; பண்பாட்டு ஒடுக்குமுறையிலிருந்தும், மற்றும் பிற ஒடுக்குமுறைகளிலிருந்தும் உங்களைக் காப்பாற்றவே நாங்கள் வந்தோம் என்பது ரஷ்ய தரப்பு வாதம். யுக்ரேனியர்கள் ரஷ்யாவுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பது அதன் உட்கிடை. பாரிய மாநகரங்கள் பலவற்றில் இளந் தலைமுறையினர், குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் உளப்பூர்வமாக யுக்ரேனிய மொழிக்கு மாறிவருகிறார்கள். இரு மொழிகளுடன் வளர்ந்த மக்கள் ஒரு மொழிக்கு மாறுவதில் தடங்கல் குறைவு. ஆகவே யுக்ரேனிய மொழிக்கு மாறி, அல்லது யுக்ரேனிய மொழியை சார்ந்து, யுக்ரேனிய மொழிப் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்புவதில் ஒரு முனைப்பு ஏற்பட்டுள்ளது. 

 


சென்ற கிழமை பூட்டின் ஆற்றிய உரை எமது உரையாடலுடன் எப்படிப் பொருந்துகிறது?  

 

சோவியத் காலத்துக் கொள்கைகளை அவர் நிராகரிக்கிறார் என்ற வகையில் அது நன்கு பொருந்துகிறது என்பதை நீங்கள் காண்பீர்கள். எல்லாவற்றுக்கும் அவர் சோவியத் ஒன்றியத்தை குறைகூறியிருக்கிறார். யுக்ரேனை தோற்றுவித்ததற்கும் கூட சோவியத் ஒன்றியத்தை அவர் குறைகூறியிருக்கிறார். அதாவது 1917ல் புரட்சி ஏற்படுவதற்கு முந்திய நிலைக்கு திரும்பிச் சென்று, ரஷ்யர் யார் என்பதை அவர் வரையறுத்திருக்கிறார். இது ரஷ்யரையும், யுக்ரேனியரையும், பெலரஷ்யரையும் உள்ளடக்கிய ரஷ்ய பேரரச ஆதிக்க தேசியக் கருத்து.  அதன்படி யுக்ரேனியருக்கும், பெலரஷ்யருக்கும் தனி நாட்டவர்களாக விளங்கும் உரிமை கிடையாது. இது 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் யுக்ரேனிய பண்பாடும், கருத்துகளும் விருத்தி அடைவதை தடுத்துநின்ற பேரரச அதிகாரிகளின் நிலைப்பாட்டுக்கு மீளும் சங்கதியாகவே தென்படுகிறது.  

 

ரஷ்ய பேரரச உளப்போக்கு, அதற்கு மட்டுமே உட்பட்ட யுக்ரேனிய அடையாளம் எனும் கருத்து அங்கு பெரும்பான்மை இனக்குழுமத்தை கவராவிட்டாலும், பெரிய இனக்குழுமங்களை எப்படிக் கவர்கிறது?

 

2014ம் ஆண்டு கிரிமியாவில் அக்கருத்து மக்களைக் கவர்ந்தது என்பதில் ஐயமில்லை. அங்கு பெரும்பான்மையோர் ரஷ்ய இனத்தவர்கள். சோவியத் அடையாளத்துடன் பேர்போன தான்பாசிலும் (கிழக்கு யுக்ரேனிலும்) அது மக்களைக் கவர்ந்தது. தனி அடையாளத்தை அவர்கள் ஏற்க மறுத்தார்கள். நாங்கள் யுக்ரேனியர்கள் ஆகலாம்; ஆனால் ஒரு பாரிய ரஷ்ய பங்கிற்கு இங்கு இடமுண்டு எனும் கருத்து அங்கு ஓங்குவதற்கு அவர்களின் நிலைப்பாடு வழிவகுத்தது. 

 

ரஷ்யாவினுள், ஒருவேளை பூட்டினை விரும்பாத மக்களிடையே கூட, யுக்ரேன் பிரச்சனை தொடர்பாக ஓரளவு வீம்பு நிலவுவதாக நீங்கள் கருதுகிறீர்களா? அல்லது ரஷ்யாவினுள் மேலும் பிளவு ஏற்பட்டுள்ளது என்று எண்ணுகிறீர்களா?

 

கிரிமியா ஓர் ரஷ்யப் புலம் எனும் உணர்வு அங்கு மேலோங்கியிருந்தது. ஆதலால் அதை கைப்பற்றிய பிறகு பூட்டினுக்கு ஆதரவு பெருகியது. எஞ்சிய யுக்ரேனைப் பொறுத்தவரை ரஷ்ய மக்களிடையே தெளிவான நிலைப்பாடு இல்லை என்றே எண்ணுகிறேன். கிரிமியாவில் போர் துவங்கிய பிறகு, ரஷ்யரும் யுக்ரேனியரும் ஒருவரை ஒருவர் நோக்கும் விதத்தை வைத்துப் பார்க்கும்பொழுது, ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடைப்பட்ட தூரம் அதிகரித்துள்ளதாகவே தென்படுகிறது. நான் ஒரு சமூகவியலாளர் அல்ல. எனினும் ரஷ்யர் வரையும் யுக்ரேனிய வரலாற்றை ஏற்றுக்கொள்வோர் அருகி வருவதாகவே எனக்குப் புலப்படுகிறது. யுக்ரேனிய தலைநகர் கியிவில்தான் ரஷ்யர் வரையும் வரலாறு துவங்குகிறது. நீங்கள் பள்ளிக்கூடத்துக்கு போய் அதைக் கற்றுக்கொள்ளலாம். பள்ளிக்கூடப் பாடம் அப்படிச் சொல்கிறது. ஆனால் அந்த பள்ளிக்கூட வரலாற்றுத் தொன்மம் உண்மைக்கு மாறானது.

 

யுக்ரேனுடன் போர் தொடுத்ததன் மூலம், இரு புலங்களும் ஒரே நாட்டுக்குரியவை என்று கருதுவதில் தனது மக்கள் கொண்ட நாட்டத்தை பூட்டின் குறைத்திருக்கிறார் எனும் எண்ணத்தை நீங்கள் உணர்த்துவது போல் தெரிகிறது.

 

ஆம், அதுவே என் உள்ளப்பதிவு. ரஷ்யர் காட்டும் எதிர்ப்பும் அதற்கொரு காரணம். பாசிசவாதிகள், மற்றும் பிற சங்கதிகள் பற்றி பூட்டின் கதையளந்தால், அது ஐக்கியத்தை ஏற்படுத்த உதவாது. ஐரோப்பிய சமூகத்துடன் யுக்ரேன் இணைய வேண்டும் என்று கோரி 2013ல் தலைநகர் கீயிவில் அணிதிரண்ட மக்களை, படுதீவிர தேசியவாதிகள் என்று இரசிய பரப்புரை ஊடகங்கள் விபரித்தன. இன்னொரு நாட்டு மக்களை அப்படி விபரித்தால், அது சகோதரத்துவம் மற்றும் ஐக்கியம் பற்றிய சொல்லாடலுக்கு உதவாது.  

 

யுக்ரேன் முழுவதையும் அல்லது அதன் பெரும்பகுதியை ரஷ்யா அடிப்படுத்தினால், எவ்வளவு எதிர்ப்பை அது எதிர்கொள்ளும் என்று நினைக்கிறீர்கள்? யுக்ரேனிய படை முறைப்படி தோற்கடிக்கப்பட்டாலும் கூட, யுக்ரேனை அடக்கி ஒடுக்குவது கடினம் என்று கருதுகிறீர்களா? 

 

ஆம், அப்படித்தான் கருதுகிறேன். அது ஓரளவுக்கு பிராந்தியத்துடன் சம்பந்தப்பட்ட சங்கதி. பூட்டினால் என்றுமே மேற்கு யுக்ரேனுக்கு செல்லமுடியாது போகலாம். நடு யுக்ரேனிலும் மிகவும் வலுவான எதிர்ப்பை எதிர்கொள்ள நேரும் என்று நினைக்கிறேன். இப்போரின் விளைவாக யுக்ரேனிய அடையாளமும், யுக்ரேனியர்கள் தமது யுக்ரேனியப் பண்பாட்டுடன்  கொண்ட உறவும் வலுப்பட்டது மட்டுமல்ல; பெரும்பாலான மக்கள் தமது நாட்டுக்காக ஆயுதம் ஏந்துவதை இப்பொழுது ஒரு படுதீவிர செயலாகக் கொள்ளவில்லை.  ஆயிரக்கணக்கான மக்கள் ஆயுதப்பயிற்சி எடுத்துள்ளார்கள். அவர்கள் போராடப் போகிறார்கள். எப்பொழுது, எப்படிப் போராடுவார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் எதிர்த்து நிற்பார்கள் என்பதில் ஐயமில்லை. 

 

 

யுக்ரேனிய அதிபர் செலென்ஸ்கி மக்களின் பீதியைத் தணித்து, ஜேர்மனிக்குப் பயணித்து, அமைதி பற்றிப் பேசிய விதம் வியக்கத்தக்கது. நிலைமையை அவர் கையாளும் விதத்தை எவ்வாறு நோக்குகிறீர்கள்? 

 

நிலைமையை அவர் கையாளும் விதத்துக்கு ஏதோ ஒரு வகையான மறுப்பு தெரிவிக்கப்பட்டது. என்ன அடிப்படையில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது என்று எனக்கு சரிவரத் தெரியாது. ஆனால் யுக்ரேனிய மக்கள் போரை நாடவுமில்லை, அதற்குத் தயாராகவும் இல்லை. அதற்கு இசைவாகவே அவர் நிலைமையைக் கையாண்டு வந்துள்ளார். அனைவரும் பூட்டின்மீது கவனம் செலுத்தும் இவ்வேளையில், அதிபர் செலென்ஸ்கி எதிர் நடவடிக்கை எடுக்கத் துணியமாட்டார் என்று நம்பப்பட்டது. கடந்த இரு கிழமைகளிலும் அது உண்மை என்ற கருத்து நிலவியது. உயர் மட்டத்தில் மாற்றம் ஏற்பட்ட காரணம் அதுவே. 

___________________________________________________

Vladimir Putin’s Revisionist History of Russia and Ukraine,

Isaac Chotiner, The New Yorker, 2022-02-23

translated by Mani Velupillai, 2022-03-05. 

https://www.newyorker.com/news/q-and-a/vladimir-putins-revisionist-history-of-russia-and-ukraine

No comments:

Post a Comment