சோவியத் ஒன்றியத்துக்கு என்ன நடந்தது?
தனது சோவியத் தாயகத்துக்கு என்ன நடந்தது என்று பேராசிரியர் வலரி சொலொவேய் (Valery Solovei) கடந்த இரு தசாப்தங்களாக சிந்தித்து வந்துள்ளார். மாஸ்கோ அரச சர்வதேய உறவு நிறுவகத்தில் அவர் ஒரு வரலாற்றுப் பேராசிரியர்.
"அது உரோமப் பேரரசின் வீழ்ச்சியைப் போன்றது; அந்த வீழ்ச்சிக்கு இட்டுச்சென்ற நிகழ்வுகளை நான் அவதானித்து வந்தேன்; சிலவற்றில் நான் பங்குபற்றியதும் உண்டு; ஒரு வரலாற்றுத் துறைஞராகிய என்னை இற்றைவரை அது ஈர்த்து வைத்திருக்கிறது” என்று கூறுகிறார் பேராசிரியர்.
பெரும்பாலான பழைய சோவியத் நாட்டவர்களைப் போலவே பேராசிரியர் சொலொவேயும் சோவியத் ஒன்றியத்தின் திடீர் நிலைகுலைவு கண்டு அதிர்ந்து போயிருந்தார். “அதிபர் கோர்பச்சேவின் (Mikhail Gorbachev) கொள்கைகளே நாட்டின் நிலைகுலைவுக்கு களம் அமைத்துக் கொடுத்தன; நலிந்துவந்த பொதுவுடைமை முறைமையைச் சீர்திருத்த முயன்றதன் மூலம், ஈற்றில் அதை அழித்தொழிக்கும் சக்திகளையே அவர் கட்டவிழ்த்து விட்டார்!” என்கிறார் பேராசிரியர்.
யெல்ற்சினை (Boris Yeltsin) அதிகாரம் செலுத்தும் நிலைக்கு உயர்த்தியவர் ஆனானப்பட்ட கோர்பச்சேவே! இருவரும் தோழர்களாகவே ஒருவருக்கொருவர் அறிமுகமானார்கள். அப்பொழுது யெல்ற்சின் ஒரு பிராந்திய பொதுவுடைமைக் கட்சி அதிபராக மட்டுமே விளங்கினார். 1987ல் தனது அரசியற் சீர்திருத்தங்களை மேம்படுத்துவதற்காக யெல்ற்சினை மாஸ்கோவுக்கு வரவழைத்தார் கோர்பச்சேவ்.
"யெல்ற்சின் வீறுகொண்டவர்; ஈர்ப்பு மிகுந்தவர்; அச்சமற்றவர். வீறுகொண்ட யெல்ற்சின் மூலம் கோர்பச்சேவ் பயனடைய விரும்பினார்" என்கிறார் அன்ட்றி கிரச்சேவ் (Andrei Grachev); கோர்பச்சேவின் ஊடகச் செயலாளராகவும், மதியுரைஞராகவும் விளங்கியவர் கிரச்சேவ்.
பொதுவுடைமைக் கட்சியினர் துய்த்த பேறுகளையும், சலுகைகளையும் யெல்ற்சின் வெளிப்படையாகவே கண்டித்தார். பிறகு கட்சியின் மத்தியகுழு அமர்வொன்றில் உரையாற்றிய யெல்ற்சின் மறைமுகமாக கோர்பச்சேவ் மீதும் கண்டனம் தொடுத்தார். கிரச்சேவ் சுட்டிக்காட்டுவது போல், மறைமுகமாக கண்டித்ததன் மூலம் யெல்ற்சின் வரம்பு மீறிவிட்டார்! "இரசிய அல்லது சோவியத் நாட்டின் அதிபதிக்கு ஒருவர் சவால் விடுப்பது மரபாகாது. சவால் விடுப்பவர் அரசியல்வாரியாக மாண்டுமடிதல் திண்ணம்” என்கிறார் கிரச்சேவ்.
“பொதுவுடைமைக் கொள்கைக்கு மாறான வேட்கை மட்டும் யெல்ற்சினை உந்தித்தள்ளவில்லை; அவரது வேட்கை அதற்கும் அப்பாற்பட்டது; அதை நாங்கள் ஆளுமைக் காரணி என்று குறிப்பிடலாம்; ஆளுமைக் காரணி இங்கு மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறது; அதாவது கோர்பச்சேவ் மீது யெல்ற்சின் கொண்ட காழ்ப்பே அவரை உந்தித்தள்ளியது.”
யெல்ற்சினை ஆபிரிக்காவுக்கோ, இலத்தீன் அமெரிக்காவுக்கோ தூதுவராக அனுப்பி வைத்தால், அவர் குடியில் மூழ்கிவிடுவார் என்று கோர்பச்சேவின் மதியுரைஞர்கள் சிலர் அவரிடம் தெரிவித்தார்கள். அதற்கு கோர்பச்சேவ் மறுப்புத் தெரிவித்தார். “அது இயலாத காரியம்; காரணம், தற்பொழுது நாங்கள் இன்னொரு சமுதாயத்தில் வாழுகின்றோம்; இனி நாங்கள் மனிதராக நடக்க வேண்டும்” என்றார் கோர்பச்சேவ். எனினும் தனது முடிபையிட்டு இற்றைவரை கோர்பச்சேவ் மனம்வருந்துவதாகவே தெரிகிறது. "யெல்ற்சினை மட்டுக்கட்டுவதில் நான் தவறிழைத்து விட்டேன்” என்று கோரபச்சேவ் தன்னிடம் தெரிவித்ததாகக் கூறுகிறார் பேராசிரியர் சொலொயேவ்.
யெல்ற்சின் தொடுத்த கண்டனத்தை மீட்டுக்கொள்ள நிர்ப்பந்தித்த கோர்பச்சேவ், அவரைப் பதவியிறக்கவும் தவறவில்லை. எனினும் கோர்பச்சேவ் குடியாட்சி நெறிநின்று புகுத்திய அதே அரசியற் சீர்திருத்தங்களைப் பயன்படுத்தி அரசியலுக்குத் திரும்பினார் யெல்ற்சின்! l991ல் இரசியக் குடியரசின் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி ஈட்டியதன் மூலம் இரசிய வரலாற்றில் மக்களால் தேந்தெடுக்கப்பட்ட முதலாவது தலைவராகும் சாதனையை யெல்ற்சின் நிகழ்த்திக் காட்டினார்.
இன்னமும் உண்மையான ஆட்சியதிகாரம் கோர்பச்சேவின் கையிலும், கட்சியின் கையிலுமே இருந்தது. 1991 ஆவணி மாதம் கட்சியின் கடும்போக்காளர்கள் சதிமுயற்சியில் இறங்கவே, அரசியல் நிலைவரம் அடியோடு மாறியது.
சதிபதிகளை எதிர்கொள்வதில் யெல்ற்சின் காட்டிய தீரம் அவரை ஒரு தேசியத் தலைவராக மாற்றியது. சதிமுயற்சியிலிருந்து குற்றுயிருடன் கடைத்தேறிய கோர்பச்சேவ் தனது அரசியல் வாழ்வுக்கு யெல்ற்சின் மீது தங்கியிருக்க நேர்ந்தது!
“யெல்ற்சின் காலத்தை வீணடிக்காது செயலில் இறங்கினார்; அவருடைய ஆட்கள் கிரிமியாவுக்குச் சென்று, கோர்பச்சேவைக் காப்பாற்றி, ஒரு விமானத்தில் ஏற்றி மாஸ்கோவுக்கு கொண்டுவந்தார்கள்; கோர்பச்சேவ் முற்றிலும் நிலைதடுமாறி மனக்குழப்பம் அடைந்திருந்தார்; விமானத்தில் வைத்தே பொதுவுடைமைக் கட்சியைத் தடைசெய்யும் ஆணையில் அவரை ஒப்பமிட வைப்பதற்கு யெல்ற்சின் தரையிலிருந்தபடியே நெருக்குதல் கொடுத்தார். “அப்படி ஓர் இணக்கத்துக்கு நாங்கள் வரவில்லையே!” என்றார் கோர்பச்சேவ்; அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை; யெல்ற்சின் ஊடகங்களுடன் நடத்திய வெற்றிமாநாட்டுக்கு அத்தகைய நிலையில்தான் அவர்கள் கோர்பச்சேவை கொண்டுசென்றார்கள்” என்று கூறுகிறார் மாஷா லிப்மன் (Masha Lipman, Carnegie Endowment, Moscow).
பொதுவுடைமைக் கட்சியிலிருந்து வெளியேறி, பொதுவுடைமைக் கட்சியைத் தடைசெய்வதன் மூலமாவது நாட்டின் அதிபராகத் தொடர்ந்து பதவி வகிக்கலாம் என்று கோர்பச்சேவ் நம்பியிருந்தார் போலும்! இவை யெல்ற்சினுடன் போட்டிபோட்டு எடுத்த முடிபுகளாகவே தெரிகின்றன. சுயமாகச் சிந்தித்து, நிதானித்து எடுத்த முடிபுகளாகத் தெரியவில்லை. அன்றுதொட்டு இன்றுவரை பொதுவுடைமையாளர்கள் அவரை அடியோடு வெறுப்பதற்கு வேறு முகாந்திரம் தேவையில்லை.
"சதிமுயற்சியை நாங்கள் முறியடித்த பிறகு மிகவும் நயவஞ்சகமான முறையில் கோர்பச்சேவை ஓரங்கட்டினார் யெல்ற்சின்; இடைவிடாது அவருக்கு நெருக்குதல் கொடுத்தார்; ஈற்றில் அவரைத் தீர்த்துக் கட்டினார்” என்று கூறுகிறார் முன்னாள் இரசிய நாடாளுமன்ற சபாநாயகர் ருஸ்லன் கஸ்புலத்தோவ் (Ruslan Khasbulatov). 1991ல் யெல்ற்சினுடன் சேர்ந்து பணியாற்றியவர் கஸ்புலத்தோவ்.
1991 திசம்பர் 3ம் திகதி இறுதிக் கட்டம் அரங்கேறியது. உக்கிரேன் (Ukraine) அதிபர் (Leonid Kravchuk), பெலரஸ் (Belarus) அதிபர் (Stanislav Shushkevich) இருவரையும் பெலரசில் இரகசியமாகச் சந்தித்தார் யெல்ற்சின். அங்கே பெலவெஷா (Belavezha) நகரை அண்டிய காட்டில், குடிவெறியில் ஆடிய வேட்டையுடன் கூடிய சந்திப்பு அது. உக்கிரேன் பிரதமர் (Vitold Fokin) ஒரு காட்டுப்பன்றியைச் சுட்டு வேட்டை ஆடியதாக பெலெரஸ் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
அங்கே சோவியத் யூனியனைக் குலைக்க அவர்கள் உடன்பட்டார்கள். சோவியத் நாட்டின் முக்கால்வாசி இரசியக் குடியரசே; ஆதலால் யெல்ற்சினுக்கே மிகப்பெரிய பங்கு கிடைத்தது. அதற்குப் பதிலாக சுதந்திர அரசுகளின் பொதுநலவாயம் (Commonwealth of Independent States) என்பதை அவர்கள் அறிவித்தார்கள். அதாவது பிரிந்துசெல்லும் அரசுகள் விரும்பினால் அதில் இணைந்து கொள்ளலாம் என்று அறிவித்தார்கள். அது பெலவெஷா உடன்படிக்கை (Belavezha Accords) எனப்பட்டது.
மரியாதையின் நிமித்தம் தகவல் தெரிவிப்பதற்காக பெலரஸ் அதிபர் கோர்பச்சேவுடன் தொடர்புகொண்டார். யெல்ற்சின் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷுடன் தொடர்புகொண்டார். யெல்ற்சின் தன்னுடன் தொடர்புகொள்ளாது புஷ்ஷுடன் தொடர்புகொண்டதை அறிந்ததும் கோர்பச்சேவ் தொடர்பைத் துண்டித்தார். “இந்த நாட்டை அவர்கள் கூறுபோடத் தொடங்கிவிட்டார்கள்” என்று சீறிய கோர்பச்சேவ், அதை “காட்டுவேட்டை உடன்படிக்கை” என்று சாடினார்.
பிறகு யெல்ற்சின் தனது நினைவுத்திரட்டில் எழுதுகிறார்: “நான் என்றுமே தனிப்பட்ட முறையில் கோர்பச்சேவுடன் மல்லுக்கட்ட எண்ணிய தில்லை; ஆனாலும் இதை ஏன் மறைக்க வேண்டும்? எனது நடவடிக்கைகள் பலவற்றுக்கு எங்கள் இருவருக்கும் இடைப்பட்ட பிணக்கே தூண்டுகோலாய் அமைந்தது."
அத்தகைய நடவடிக்கைகளை யெல்ற்சின் எடுத்திருக்கா விட்டால், சோவியத் ஒன்றியம் இன்னும் சற்று நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கும் என்று கருதுகிறார் கிரச்சேவ். “சோவியத் ஒன்றியத்தின் பாரிய உருப்படியாகவும், ஆதிக்க வலுவாகவும் விளங்கிய இரசியாவே சோவியத் ஒன்றியத்துக்கு சவால் விடுப்பதில் தலையாய பங்கு வகித்தது! அப்படி ஒரு படுவிசித்திரமான நிலைவரம் தோன்றியதற்கு, யெல்ற்சினுக்கும் கோர்பச்சேவுக்கும் இடைப்பட்ட ஆளுமை மோதலே திட்டவட்டமான காரணம்” என்கிறார் கிரச்சேவ்.
யெல்ற்சினுக்கு வேறு சிலரும் கைகொடுத்ததுண்டு. சோவியத் அரசு தப்பிப்பிழைக்க வாய்ப்பில்லாது போகலாம் என்று தெரிந்தவுடன் பொதுவுடைமைக் கட்சியின் சந்தர்ப்பவாத பணித்துறைஞர்கள் பலரும் கோர்பச்சேவைக் கைவிட்டு விலகிச் சென்றார்கள் என்று கூறுகிறார் யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த போரிஸ் கபுஸ்தின் (Boris Kapustin, Yale University).
"அதிகாரம் செலுத்திய சிட்டர்கள் சிலர் கோர்பச்சேவைக் கைவிட்டு, யெல்ற்சினுடன் ஒட்டிக்கொண்டமையே அவ்விருவருக்கும் இடையேயான போராட்டத்தின் பெறுபேற்றைத் தீர்மானித்தது என்று நான் நம்புகிறேன்” என்று கூறுகிறார் கபுஸ்தின். யெல்ற்சின் வெற்றிபெற்றமையே போராட்டத்தின் பெறுபேறு. அதிகாரம் செலுத்திய சிட்டர்களால் விளைந்த பெறுபேறு அது!
1991 திசம்பர் 25ம் திகதி கோர்பச்சேவ் சோவியத் நாட்டின் அதிபர் பதவியைத் துறந்தார்; அணுவாயுத இரகசியக் குறியீடுகளுடன் கூடிய பெட்டியை இரசிய அதிபர் யெல்ற்சினிடம் கையளித்தார்; 1991ம் ஆண்டுடன் சேர்ந்து சோவியத் நாடும் முடிவுக்கு வந்தது. “சோவியத் பேரரசு ஒப்பீட்டளவில் அமைதியாகவும், பாரிய குருதியாறு பாயாமலும் மறைந்தமை முற்றிலும் ஓர் அற்புதமே. அதற்கான பெருமை கோர்பச்சேவையே சாரும்” என்கிறார் பேராசிரியர் சொலொயேவ்.
“சோவியத் ஒன்றியத்தின் இறுதி அதிபர் கோர்பச்சேவை இன்று இரசிய மக்கள் பெரிதும் வெறுத்து வருகிறார்கள். என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு முடிதுறந்த மன்னர்; நன்னலத்தை நாடியவர்; அடிக்கடி அவரை நான் எண்ணிப் பார்க்கிறேன்; ஷேக்ஸ்பியரின் லியர் மன்னன் (King Lear) போலவே அவர் எனக்குத் தென்படுகிறார். லியரைப் போலவே கோர்பச்சேவும் தனது அரசை இழந்தவர்” என்பது பேராசிரியரின் கணிப்பு.
கவிழும் கப்பலிலிருந்து எலிகள் பாய்ந்தோடுவது போல், பொதுவுடைமைக் கட்சியின் உயரதிகாரிகள் கோர்பச்சேவைக் கைவிட்டு யெல்ற்சின்-தரப்புக்குத் தாவினார்கள். அதாவது, சோவியத் ஒன்றியம் நிலைகுலைந்ததற்கு பொதுவுடைமைக் கட்சியினரும் செயளவில் உடந்தையாய் இருந்தார்கள்!
கோர்பச்சேவின் சீர்திருத்தங்களை அடுத்து இடம்பெற்ற இரசிய ஆட்சிமன்றத் தேர்தலிலும், பிறகு அடுத்தடுத்து இடம்பெற்ற தேர்தல்களிலும், வாக்கெடுப்புகளிலும் யெல்ற்சின் திரும்பத் திரும்ப வெற்றி பெற்றார். ஆகவே சோவியத் ஒன்றியம் நிலைகுலைந்ததற்கு கோர்பச்சேவ், யெல்ற்சின் மாத்திரமல்ல, சோவியத்/இரசிய மக்களும், தெரிந்தோ தெரியாமலோ, உடந்தையாய் இருந்தார்கள்!
இரசியாவில் இடம்பெற்ற தேர்தல்களிலும், வாக்கெடுப்புகளிலும் யெல்ற்சின் திரும்பத் திரும்ப வெல்லும் வண்ணம் ஊழல் புரியப்பட்டதாக ஆய்வாளர்கள் பலரும் குற்றஞ்சாட்டியுள்ளார்கள். திட்டமிட்டு ஊழல்புரிந்து, திரும்பத் திரும்ப யெல்ற்சினை வெல்லவைத்த புதிய செல்வந்தர்களும், ஊடகத்துறைஞர்களும், அரச நிர்வாகிகளும் மேற்படி நிலைகுலைவுக்குத் துணைநின்று நயமடைந்தார்கள்.
யெல்ற்சின் இல்லையேல் தாங்களும் இல்லை என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அவர்களுள் தற்போதை அதிபர் பூட்டின் தலையாயவர் எனப்படுகிறது. 1999ல் பூட்டினைத் தனது வாரிசாக்கிவிட்டு பதவிதுறந்தார் யெல்ற்சின். பூட்டின் பதவியேற்ற கையோடு யெல்ற்சினுக்கு விசாரணைகளிலிருந்து விலக்களிக்கும் ஆணையில் ஒப்பமிட்டார்!
மேற்குலகம் யெல்ற்சினுக்குத் துணைநின்றது என்பதில் ஐயமில்லை. சோவியத் ஒன்றியமும், அங்கு பொதுவுடைமைக் கட்சியும் மீண்டும் தலைதூக்காவாறு பார்ப்பதற்கு மிகவும் தோதானவர் யெல்ற்சினே என்பதை மேற்குலகம் நன்கறியும். அமெரிக்க-சோவியத் கெடுபிடிப் போரிலிருந்து அமெரிக்காவின் தலைமையில் கடைத்தேறிய நேட்டோவும், மேற்குலகும் யெல்ற்சினுக்கு கைகொடுத்ததில் வியப்பேது?
மேற்படி விவரங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக நோக்கும் எவர்க்கும் ஓர் உண்மை புலப்படக் கூடும்: அதாவது சோவியத் ஒன்றியம் அகவெடிப்புக்கு உள்ளாகியது; அது உள்ளூர ஏற்பட்ட வெடிப்பு, தகர்வு, குலைவு. சோவியத் ஒன்றியம் புறவெடிப்புக்கு உள்ளாகவில்லை; அதாவது வெளியுலகத் தலையீட்டினால் அது நிலைகுலையவில்லை. அதேவேளை அத்தகைய அகவெடிப்பை அகட்டி ஆப்பு வைக்கும் அலுவலை மேற்குலகு மேற்கொள்ளாமல் இருந்திருக்க முடியாது.
“சோவியத் ஒன்றியத்துக்கு என்ன நடந்தது” என்னும் வினாவுக்கு இனி விடையளிப்பது மிகவும் எளிது: கோர்பச்சேவ், யெல்ற்சின் இருவருக்கும் இடையே நிகழ்ந்த அதிகாரப் போராட்டத்துக்கு சோவியத் ஒன்றியம் பலியாகியது.
எனினும் சோவியத் ஒன்றியத்தின் திடீர் மறைவுக்கு உண்மையில் யார் காரணம்? அதற்கு கோர்பச்சேவின் பரமவைரி போரிஸ் யெல்ற்சினே காரணம் என்பது பேராசிரியரின் பதில். வேறு இரசிய ஆய்வாளர்களின் கணிப்பும் அதுவே என்கிறார் பேராசிரியர் சொலொயேவ்.
_____________________________________________________________
மணி வேலுப்பிள்ளை
உசாத்துணை:
Gorbachev, Yeltsin and the Demise of the USSR, Brigid McCarthy, PRI, Public Radio International, 2011-12-26; London Guardian.
No comments:
Post a Comment