மொழியினால் அமைந்த வீடு

 ‘மொழியினால் அமைந்த வீட்டிலேயே மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள்’ (Russell R.W.Smith). மொழியின் மூலப் பொருட்களாய் அமையும் ‘சொற்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. மக்களின் ஒட்டுறவில் அவை குறுக்கிடுகின்றன. சொற்களில் புதையுண்டிருக்கும் பொருளை விடுத்து சொற்களிலும், எம்மை ஈர்த்து, தீண்டி, உறுத்தும் அவற்றின் ஆற்றலிலும் நாம் அதிகம் புலனைச் செலுத்துகிறோம்’ (Pico Iyer). ‘நாம் பாஷையை விடுத்து பரிபாஷையை மொழிகிறோம். நெறிகளை விடுத்து அறைகூவல்களை மதிக்கிறோம். நேரிய சிந்தனைகளை விடுத்து கூரிய சிந்தனைகளை ஏற்கிறோம்’ (Eric Bentley).


‘வார்த்தைகளை வைத்துக்கொண்டு ஜனங்களைப் பயங்காட்டுவது ரொம்ப லேசு’ (புதுமைப்பித்தன்). ‘மனிதர் புலியைக் கொன்றால், அது வேட்டை. புலி மனிதரைக் கொன்றால், அது பயங்கரம்!’ (Bernard Shaw). ‘நீங்கள் கடவுளிடம் ஏதாவது வேண்டிக்கொண்டதாகச் சொன்னால், நீங்கள் கடவுளை வழிபட்டிருக்கிறீர்கள் என்று கருத்து. கடவுள் உங்களிடம் ஏதாவது வேண்டிக்கொண்டதாகச் சொன்னால், உங்களுக்குச் சித்தப் பிரமை பிடித்திருக்கிறது என்று கருத்து!’ (Thomas Szasz). ‘நீர் ஒரு புனிதர் என்றால், மற்றவர்கள் உம்மைப் பொருட்படுத்துவதில்லை என்று கருத்து’ (Dorothy Day).    


‘நாங்கள் பேசுவது ஒரே மொழி அல்ல. சுதந்திரம், மனிதாபிமானம், மக்களாட்சி, விடுதலை போன்ற பதங்களுக்கு நாங்கள் கொள்ளும் கருத்துகளுக்கு நேரெதிர்மாறான கருத்துகளையே அவர்கள் கொள்ளுகிறார்கள். இந்த மொழித் திருட்டையும் துஷ்பிரயோகத்தையும் கண்டு நான் கொதிப்படைகிறேன்’ (Paul William Roberts).


George Orwell எழுதிய Nineteen Eighty-Four என்ற அங்கத நாவலில் Newspeak  என்று ஒரு மொழி பேசப்படுகிறது. அது Ingsoc என்ற சிந்தனைக்கு உகந்த மொழி என்று சொல்லப்பட்டுள்ளது. ஏனைய சிந்தனைகளைக்கு அது இடம்கொடாது. அதில் அந்தச் சிந்தனைக்குச் சாதகமான புதிய சொற்களே உள்ளன. பாதகமான பழைய சொற்கள் இல்லை. மாண்பு, நீதி, அறம், சர்வதேசியம், மக்களாட்சி, விஞ்ஞானம்,  போன்ற சொற்கள் அதில் இல்லை. அந்த மொழி சிந்தனையை வளர்ப்பதற்கல்ல, ஒடுக்குவதற்கே பயன்படுத்தப்படுகிறது. சில எடுத்துக்காட்டுகள்:            

      

                  joycamp  (அடிமை முகாம்)

                  prolfeed  (பிரசாரம்)

                  Minipax  (போர் அமைச்சு)   (Ministry of Peace)  

                  goodthink (நெறிநிற்றல்)

                  crimethink (நெறிபிறழ்தல்)


1949ல் வெளிவந்த மேற்படி நூலில் ஆட்சியாளர்களின் அறைகூவல்கள் சில காணப்படுகின்றன:


                    போரே சமாதானம்

                    அடிமைத்தனமே சுதந்திரம்

                    அறியாமையே பலம்   


George Orwell தமது Animal Farm, Nineteen Eighty-Four ஆகிய இரு அங்கத நாவல்களிலும் (ஸ்டாலின் புரிந்த) சர்வாதிகாரத்தையே எள்ளி நகையாடியதாகச் சொல்லப்படுகிறது. சர்வாதிகாரத்தின் கீழ் இடக்கரடக்கல் மேலோங்குவதை அவர் சிந்தை கவரும் வண்ணம் எடுத்துக்காட்டியுள்ளார். மக்களாட்சியிலும் இடக்கரடக்கல் மேலோங்கும், ஏன் உச்சக் கட்டத்தையே எட்டும் என்பதை அவர் கற்பனை பண்ணியே பார்த்திருக்க மாட்டார். இன்று எல்லா ‘ஆட்சியாளரும் படையினரும் இலக்கணத்தை நகைப்புக்கிடமாக்கி நயவஞ்சகமான  இடக்கரடக்கல்களைக் கையாண்டு வருகிறார்கள்’ (Russell Smith) சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:


இடக்கரடக்கல்

_____________________________________________________________________


இடக்கர்                                                               அடக்கல்

______________________________________________________________________

தாக்குதல்                                                             நடவடிக்கை

Attack                                                                      Operation

______________________________________________________________________

படையெடுப்பு                                                     முன்கூட்டியே தாக்குதல்

Invasion                                                                   Pre-emptive attack

______________________________________________________________________

ஆக்கிரமிப்பு                                                       விடுதலை

Aggression                                                              Liberation

______________________________________________________________________

முன்னேறுவதற்கு முன்னர்                             தரையை மென்மைப்படுத்தல்

இடம்பெறும் குண்டுவீச்சு                               Softening the ground

______________________________________________________________________

குடிமக்களின் உயிர்,                                        பக்கவாட்டுச் சேதங்கள்

உடைமை இழப்புகள்                                       Collateral damage

______________________________________________________________________

இலக்குவைத்துக் கொல்லுதல்                       தேர்ந்தெடுத்துத் தாக்குதல்

Targeted killings                                                      Surgical strike

______________________________________________________________________

படுகொலை                                                        உருக்குலைத்தல்

Massacre                                                                Degradation

______________________________________________________________________

கொஞ்சம் கொஞ்சமாகக்                               அராவிக் கொட்டுதல்       

கொன்று தீர்த்தல்                                              Attrition    

______________________________________________________________________


‘போருக்கு முதலில் பலியாவது உண்மையே’ (Truth is the first casualty of war)  என்பது ஒரு பெயர்போன கூற்று (Hiram Johnson). இதனை வேறொரு விதமாகவும் குறிப்பிடலாம்: பிரசாரத்துக்கு முதலில் பலியாவது மொழியே (Language is the first casualty of propaganda). ‘ஊடகங்கள் எதனை விரும்புகின்றனவோ அதுவே உண்மையாகிவிடும். மூன்று கிழமைகளில் உலகம் அதனை ஒப்புக்கொண்டுவிடும்’ (Oswald Spengler). ‘மக்கள் ஒரு சிறிய உண்மையைவிட ஒரு பெரிய பொய்யையே அதிகம் விரும்புகிறார்கள்’  (ஹிட்லர்).


மக்களின் கருத்துச் சுதந்திரம் என்பது மக்களின் கருத்தை உருவாக்கும் துறை  ஆகிறது. மக்களின் கருத்தை உருவாக்குவதற்கு ஓர் ஊடகம் தேவைப்படுகிறது. ஊடகம் நடத்துவதற்குப் பணம் தேவைப்படுகிறது. அந்த வகையில் ஊடக சுதந்திரம் என்பது ஊடக உடைமையாலேயே தீர்மானிக்கப்படுகிறது. ஊடகம் என்பது உடைமையின் ஊதுகுழல் (ஓதுகுழல்) ஆகிறது. ‘ஊதுவோருக்கு  பணத்தை எண்ணிக் கொடுப்பவரே பண்ணையும் குறித்துக் கொடுக்கிறார்’ (He who pays the piper calls the tune - Oswald Spengler). ஊடகங்கள் சமூகத்தை ஆட்டிப் படைக்கின்றன. அவற்றின் நிலைப்பாடுகளை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அவை ‘எண்ணங்களை உற்பத்திசெய்து பிழைக்கின்றன’ ((Industrialization of thought -  Harun Farocki).     


ஜனாதிபதி புஷ் (2003 மார்ச் 6-ம் திகதி) இட்ட போர் முழக்கத்துக்கு அடுத்த நாள் வெளிவந்த The Globe and Mail (Toronto) பத்திரிகை அதனை Bush readies world for war (புஷ் உலகத்தைப் போருக்கு ஆயத்தப்படுத்துகிறார்) என்று சொல்லித் தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தது. அமெரிக்க ஆட்சியாளருக்கு ஆதரவாக வாசகர்களை அணிதிரட்டும் நோக்குடனேயே அது அப்படிக் குறிப்பிட்டது. அடுத்த நாள் அதே பத்திரிகையில் வெளிவந்த ஒரு கடிதத்தில் Bush readies war for world (புஷ் உலகத்தைக் கைப்பற்றும் போருக்கு ஆயத்தமாகிறார்) என்று Patrick Venditi என்ற வாசகர் அதற்கு மறுத்தான் கொடுத்திருந்தார்!


‘படுகேவலமான காரியத்தை மிகவும் இதமான முறையில் செய்வதும் சொல்வதுமே சாணக்கியம்’ (Isaac Goldberg). அந்த வகையில் ஈராக் மீது படையெடுப்பதற்கு முன்னர் அமெரிக்க ஆட்சியாளரும் செய்திமான்களும் தமது அகராதியில் இரண்டு சொல்தொடர்களை வலிந்து புகுத்தியதில் ஒரு நியாயம் இருக்கிறது.   


(1)        Regime change (ஆட்சி மாற்றம்)

(2)        Weapons of mass destruction (பேரழிவு விளைவிக்கும் ஆயுதங்கள்)


ஆட்சிப் புரட்டு, ஆட்சிக் கவிழ்ப்பு போன்ற வாடிக்கையான சொல்தொடர்களைக் கையாண்டால் அப்படிச் செய்வது தப்பு என்பதை அந்தச் சொல்தொடர்களே மக்களுக்குக் காட்டிக் கொடுத்துவிடும் அல்லவா! ஆட்சி மாற்றம் என்றால் அது இட மாற்றம், நேர மாற்றம் போன்ற ஒரு வழமையான, நியாயமான மாற்றம் போலவே தென்படும். 


அணு ஆயதங்கள், நச்சுவாயு ஆயதங்கள், இரசாயன ஆயதங்கள் என்று பச்சையாகக் குறிப்பிட்டால் எவருக்கும் விளங்கும். மாபெரும் அமெரிக்க வல்லரசு, இஸ்ரவேல் உட்பட அனைத்து வல்லரசுகளிடமும் அவை மண்டிக் கிடக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அப்படிப் பச்சையாகக் குறிப்பிடுவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. தனியே ஈராக்கிற்கு எதிராக மட்டுமல்ல, அத்தகைய வல்லரசுகள் அனைத்துக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கும்படி விவரம் தெரியாதவர்கள் அசட்டுத்தனமாக முழக்கமிட்டால் எங்கே பேய் முட்டுவது? ஆதலால்தான் அமெரிக்க ஆட்சியாளரும் ஊடகங்களும் ஈராக் வைத்திருக்கும் பேரழிவு விளைவிக்கும் ஆயதங்கள் பற்றி மொட்டையாகச் சொல்லி மழுப்பி வந்தன. அதாவது பேரழிவு விளைவிக்கும் ஆயதங்கள் என்றால் இப்போதைக்கு ஈராக்கிலும், அடுத்து ஈரானிலும், அப்புறம் வட கொறியாவிலும்... உள்ள ஆயதங்கள் என்று பொருள்! யப்பானில் இலட்சக் கணக்கான மக்களைப் பலிகொண்ட அமெரிக்க அணுக் குண்டுகள் போன்றவை வெறும் சிற்றழிவு விளைவிக்கும் ஆயதங்கள் என்க!


அமெரிக்க, பிரித்தானியப் படைகள் ஈராக் மீது மேற்கொண்ட படையெடுப்புக்கு இட்ட குறியீட்டுப் பெயர் ஈராக்கிய சுதந்திர நடவடிக்கை (Operation Iraqi freedom)! ஜனாதிபதி புஷ், பிரதமர் பிளயர் இருவரும் இதனை ஈராக்கின் விடுதலை என்றும் குறிப்பிட்டார்கள். இது இலங்கை உட்பட வேறு பல நாடுகளில் இசைக்கப்பட்ட பழைய பல்லவியே. 1987ல் இலங்கைப் படையினர் வடமராட்சியைக் கைப்பற்றுவதற்குத் தொடுத்த போருக்கு இட்ட குறியீட்டுப் பெயர்: விடுதலை நடவடிக்கை (Operation Liberation). 1949ம் ஆண்டு George Orwell சுட்டிக்காட்டிய போரே சமாதானம் என்ற அறைகூவல்  46 ஆண்டுகள் கழித்து (1995ம் ஆண்டு) இலங்கையில் சமாதனத்துக்கான போர் என்ற அறைகூவலாய் ஓங்கியது! அடிமைத்தனமே சுதந்திரம் என்ற அறைகூவல் தற்பொழுது ஈராக்கிய சுதந்திர நடவடிக்கை (Operation Iraqi Freedom)  என்ற அறைகூவலாய் ஒலித்திருக்கிறது!


‘நாங்கள் உங்கள் எதிரிகள் அல்லர். உங்கள் நாட்டைக் கைப்பற்றும் நோக்கம் எமக்குக் கிடையாது. உங்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுப்பதற்காகவே நாங்கள் உங்கள் நாட்டுக்கு வருகிறோம்!’ இது ஜனாதிபதி புஷ் அல்லது பிரதமர் பிளயர் அல்லது சேனாதிபதி தொமி பிறாங்ஸ் (Tommy Franks) விடுத்த அறிவித்தல் போலவே தென்படும். உண்மையில் இது 86 ஆண்டுகளுக்கு முன்னர் (1917-ல்) இதே ஈராக் மீது படையெடுத்த பிரித்தானிய சேனாதிபதி F.S.Maude விடுத்த அறிவித்தல்!


இந்தப் படையெடுப்பை நாள் முழுவதும் ஒளிபரப்பிய ஊடகங்களின் முகப்பில் பொறிக்கப்பட்ட வாசகங்கள் அவற்றின் நிலைப்பாடுகளைத் துல்லியமாகப் புலப்படுத்தின (சாய்வெழுத்திலுள்ள ஆங்கில வேற்றுமை உருபுகளைக் கவனிக்கவும்):


ABC (USA)        War with Iraq       (ஈராக்குடன் நிகழும் போர்)

BBC (UK)           Iraq War              (ஈராக் போர்)

CBC (Canada)    Attack on Iraq     (ஈராக் மீதான தாக்குதல்)

CNN (USA)        War in Iraq          (ஈராக்கில் நிகழும் போர்)

NBC (USA)        America at war    (போரில் அமெரிக்கா)


BBC உட்பட எந்த ஊடகமும் இதை ஒரு படையெடுப்பு என்று பச்சையாகப் பொறிக்கத் துணியவில்லை. வியற் நாம் போர், கொறியப் போர், மத்திய கிழக்குப் போர் போன்று இந்தப் போரை BBC ஈராக் போர் என்றே பொறித்தது. ஈராக்குடன் நிகழும் போர் என்ற ABC-யின் வாசகத்தில், அது ஈராக்குடன் புரியப்படும் போர் என்பதும், அதனை ஈராக் தொடுக்கவில்லை என்பதும் தெரிகிறது. CNN ஈராக்கில் நிகழும் போர் என்று பொறித்து (அதன் ஸ்பானிய மொழிச் சேவையிலும் அவ்வாறே, அதாவது Guerra de Iraq  என்று பொறித்து)  அது ஒரு படையெடுப்பு அல்ல என்றும், இயல்பாகவே மூண்ட ஒரு போருக்கு ஈராக் களமாகியது என்றும் காட்ட முனைந்தது. அமெரிக்கா போரில் ஈடுபட்டுள்ளதை ஒப்புக்கொள்ளும் NBC ஏனைய ஊடகங்கள் செய்தது போன்று படையெடுப்புக்கு உள்ளாகியிருக்கும் ஈராக்கை அதன் முகப்பு வாசகத்தில்  சேர்க்கவில்லை. CBC மாத்திரமே ஈராக் மீதான தாக்குதல் என்று உள்ளதை உள்ளபடி உரைத்துள்ளது. செய்தி அறம் பேணுவதைப் பொறுத்தவரை மேற்படி ஊடகங்களைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்: CBC, BBC, ABC, NBC, CNN. கனடிய தேசிய நாளேடுகாளான The Globe and Mail, National Post,  Toronto Star   மூன்றும் CNN-ஐ பின்பற்றி War in Iraq என்றே குறிப்பிட்டன.    


போர் கொடியவர்களின் கைகளிலும் வெகுளிகளின் கண்களிலும் வேடிக்கையாவதை George Orwell மேற்படி நூலில் படம்பிடித்துக் காட்டியுள்ளார்: ஓர் அகதிக் கப்பல் மீது குண்டு வீசப்படுகிறது. நீந்திக் கரைசேர முயலும் ஒருவனை ஓர் உலங்கு வானூர்தியிலிருந்து சுட்டுத் தள்ளுகிறார்கள். அவனுடைய உடலைக் குண்டுகள் துளைக்கின்றன. துளைகளுள் தண்ணீர் நுழைகின்றது. அவனைச் சூழ்ந்த கடல் சிவக்கின்றது. துளையுண்ட உடலில் தண்ணீர் புகுந்த பாரத்தில் அது கொதிக்கின்ற கடலில் அமிழ்கின்றது. அதனைத் திரையில் காணும் பார்வையாளர்கள் சிரித்து மகிழ்ந்து ஆரவாரம் செய்கிறார்கள்... மேலே உலங்கு வானூர்தி வலம் வருகிறது. கீழே ஓர் உயிர் காப்புப் படகு மிதக்கின்றது. படகு முழுவதும் குழந்தைகள். ஒரு தாயின் கையில் மூன்று வயதுக் குழந்தை. அஞ்சி நடுங்கும் குழந்தை தாயின் மார்பை அகழ்ந்து, அதனுள் தலையைப் புதைத்து வீலிடுகின்றது. பயந்து வெடவெடக்கும் தாய் தனது கைகளால் குண்டுகளைத் தடுக்கும் நப்பாசையுடன் கூனிக் குறுகிக் குழந்தையை அரவணைக்கின்றாள். உலங்கு வானூர்தியிலிருந்து ஓர் 20 கிலோ குண்டு வீசப்படுகின்றது. உயிர் காப்புப் படகு ஒரு விறகுக் கட்டை போல் வெடித்துச் சிதறி எரிகின்றது. ஒரு குழந்தையின் கை மேலே பறக்கின்றது. அதே உலங்கு வானூர்தியிலிருந்து படம்பிடித்துக் காட்டப்பட்ட அந்தக் கையைக் கண்டு வியந்து கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள் பார்வையாளர்கள்! 


Good Morning America என்ற திரைப்படத்தைத் தயாரிப்பதற்கான அரங்கை வடிவமைத்தவரே கட்டார் (Qatar) நாட்டின் தலைநகர் டோஹாவில் (Dohar) அமெரிக்கப் படையினரின் தகவல் அரங்கை ($250,000 செலவில்) வடிவமைத்தவர்! ஆகவே அமெரிக்க ஒளியூடகங்கள் இந்தப் படையெடுப்பை ஒரு திரைப்படத் தொடர்போல் ஒளிபரப்பியமை சாலவும் பொருந்தும். பட்டம் பதவி பெற்றவர்களின் உறுதுணையுடன் காய்தல் உவத்தலோடு கருத்துரைகள் வேறு! ஒரு கட்டத்தில் 2000 இறாத்தல் எடை கொண்ட குண்டுகள் வீசப்படும் என்று சேனாதிபதி தொமி பிறாங்ஸ் உடனுறையும் செய்தியாளர்களுக்கு (embedded journalists) வாக்குறுதியளித்தார். சதாம் உசேன் தங்கியிருக்கும் மையம் தெரியாதபடியால், அவற்றை வீசுவதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் உடனுறைந்த செய்தியாளர்கள் பொறுமையிழந்தார்களாம்!


அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் Donald Rumsfeld பக்தாத் மீது தாம் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலை கருணைமிகுந்த குண்டுபொழிவு (Humane bombardment) என்று வர்ணித்தார்! Marcus Gee என்ற (The Globe and Mail நாளேட்டின்) அரசியல் ஆய்வாளர் அதனை கருணைமிகுந்த போர் (Humane war) என்று சொல்லி உருகினார். அதே நாளேட்டில்  William Houston என்ற வேறோர் ஆய்வாளர் அதனை ஒரு கண்கவர் போர் (A lovely war) என்று விளம்பினார். The National Post நாளேட்டு விமர்சகர் David Warren அதனை வியத்தகு போர் (A fabulous war) என்று மெச்சினார். தாக்குதல் ஆரம்பித்த சேதியை CNN நிலைய ஒலிபரப்பாளர் Aaron Brown ஆயுதக் களைவு (Disarmament) ஆரம்பித்துவிட்டது என்று அறிவித்தார். உடனுறைந்த 600 செய்தியாளர்களுள் ஒருவராகிய Walter Rodgers முன்வைத்த செய்தி அறிக்கைகளை Aaron Brown மிகவும் நேர்த்தியானவை (Terrific) என்று வாழ்த்தினார். அதற்கு Walter Rodgers இங்கு நான் பெரிய வேடிக்கையைக் கண்டுகளித்து வருகிறேன் (I’m having great fun) என்று சொல்லிப் பூரித்தார். அப்புறம் அத்தகைய செய்தியாளர்கள் ஆற்றிய தொண்டுக்குக் கைமாறாக ஜனாதிபதி புஷ் அவர்களை விருந்தோம்பி மகிழ்ந்தார்! 


மாபெரும் வல்லரசு ஈராக்கில் புரிந்த கொடுமையை CNN போன்ற அமெரிக்க ஊடகங்கள் வியக்கத்தக்க வேடிக்கைகளாகவே சித்தரித்தன. அந்த வகையில் ஒரு மேலைத்தேய தமிழ் வானொலி நிலைய ஒலிபரப்பாளர் மேற்படி படையெடுப்பை ‘அமெரிக்க - ஈராக் யுத்தம்’ என்றும், அதனை அவர் வேடிக்கை பார்த்தார் என்றும் தெரிவித்தார். உடனடியாக அவருடைய உள்ளத்துள் ஏதோ ஒன்று உறுத்தவே, ஒரு சொல்லை இடையில் செருகி, அதனைக் கவலையோடு பார்த்ததாக நீட்டினார். அவர் கவலையோடு வேடிக்கை பார்த்தார் போலும்! அப்புறம் உரையாடல் தொடங்கியது. இரண்டு, மூன்று பேர் கலந்துகொண்டார்கள். ஒலிபரப்பாளர் அவர்களை ஆய்வாளர்கள் என்று அறிமுகப்படுத்தினார். அந்த ஆய்வாளர்களுள் எவரும் ஒலிபரப்பாளரின் கூற்றை ஆட்சேபிக்கவில்லை! அது அமெரிக்க - ஈராக் யுத்தம் அல்ல, அமெரிக்க-பிரித்தானிய ஆட்சியாளர் ஈராக் மீது மேற்கொண்ட படையெடுப்பு என்பது அவர்களுக்கு உறுத்தவே இல்லை. அந்தக் கொடுமையை அவர்களும் பிறரும் வேடிக்கை பார்த்தார்கள் என்பதே உண்மை. அதனை வேடிக்கை பார்த்தவர், மேற்படி அமெரிக்க ஒளியூடகங்களுக்கு இரையாகிய ஒரு வெகுளி. அதனைக் கவலையோடு பார்த்ததாகச் சொல்வதெல்லாம் வெறும் புரளி.


அந்த வேடிக்கைகளுள் ஒன்று, அமெரிக்கப் படையினரின் கருணைமிகுந்த குண்டுபொழிவில் அலி இஸ்மாயில் அப்பாஸ் என்ற 12 வயதுச் சிறுவன் தனது பெற்றோரையும் சகோதரனையும் தனது கைகள் இரண்டையும் இழந்தான். Mark Hylen  என்ற அமெரிக்கப் படையினன் இன்னொரு வேடிக்கையை, அதாவது அவன் ஓர் ஈராக்கிய சிப்பாயைக் கொன்ற விதத்தை (ஈராக்கில் தான் எடுத்த முதலாவது பலியை) இப்படி விபரித்தான்: எனக்கு முதலில் கொஞ்சம் தயக்கமாய்த்தான் இருந்தது. பிறகு போனால் போகட்டும் என்று சொல்லிப் போட்டு அவனுக்கு வள்ளிசாக ஒரு துளை போட்டேன். அவன் செத்துப் போனான். ஆக்கினை தீர்ந்தது (The Globe and Mail, Toronto). ஓர் அணி ஏவுநர் (unit commander) விபரித்த பிறிதொரு வேடிக்கை: சதாம் உசேனுக்காகப் போராடத் துணிந்தவர்களின் கண்களை ஈக்கள் மொய்க்கத் தொடங்கியதும் நாங்கள் முகாமுக்குத் திரும்பிவிட்டோம்... நல்ல நாள்... நல்ல வேட்டை... (The New York Times).


அமெரிக்க ஆட்சியாளர் தமது படையெடுப்பை ஒரு வேடிக்கையாக மட்டுமன்றி ஒரு (சீட்டு) விளையாட்டாகவும் கருதினார்கள். ஈராக்கைக் கைப்பற்றிய கையோடு அவர்கள் ஒரு சீட்டாட்டத்தை ஆரம்பித்தார்கள். அதற்கு 55 சீட்டுகள் பாவிக்கப்பட்டன. அவற்றில் சதாம் உசேன், தாறிக் அசீஸ் உட்பட 55 பேரின் முகங்கள் பொறிக்கப்பட்டன. அப்படி 5 இலட்சம் சீட்டுக் கட்டுகள் விநியோகிக்கப்பட்டன. அவர்கள் சரணடைய வேண்டும் அல்லது காட்டிக் கொடுக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது ஈராக்கிய ஆட்சியாளர் சரணடைவது அல்லது காட்டிக் கொடுக்கப்படுவது அமெரிக்க ஆட்சியாளருக்கு ஒரு (சீட்டு) விளையாட்டு! 


அத்தகைய வேடிக்கைகளின் விளைவாகப் பாக்தாத் மாநகரம் பற்றி எரிந்தது. அது கண்டு அமெரிக்காவில் ஒருசிலர் விம்மி அழுதார்கள். அவர்களைத் தடுத்தாட்கொண்ட Rumsfeld பாக்தாத் பற்றி எரியவில்லை. ஈராக்கிய அரசே பற்றி எரிகிறது (Baghdad is not ablaze, the Iraqi regime is ablaze) என்று இடித்துரைத்தார்!  அவர் மொழியைக் குழிதோண்டிப் புதைப்பதைப் பாருங்கள்: Reports that say that something hasn’t happened are always interesting to me, because as we know, there are known knowns; there are things we know we know. We also know there are known unknowns; that is to say we know there are some things we don’t know. But there are also unknown unknowns-the ones we don’t know we don’t know (London Guardian). ஏதாவது புரிகிறதா?


பாக்தாத் பற்றி எரிந்தாலும், இற்று விழவில்லை. ஆதலால் அமெரிக்க ஆட்சியாளர் தமது போர் விரகை மாற்றினார்கள். Peter Arnett அந்தப் பகிரங்க ரகசியத்தை ஈராக்கிய தொலைக்காட்சியில் தோன்றி அம்பலப்படுத்தினார். அந்தக் குற்றத்துக்காக NBC, National Geographic இரண்டும் அவருடைய கணக்கைத் தீர்த்து விரட்டியடித்தன! உடனடியாக அவரைப் பணிக்கமர்த்திய Daily Mirror (UK) உண்மையை எடுத்துரைத்ததற்காக அமெரிக்கரால் வெளியேற்றப்பட்டவர், அதனைத் தொடர்ந்து எடுத்துரைப்பதற்காக எம்மால் வரவழைக்கப்பட்டவர் (Fired by America for telling the truth, hired by us to carry on telling it) என்று அறிவித்தது.


நான் அமெரிக்காவுக்கு எதிரான ஆளுமல்ல, ஈராக்கிற்கு ஆதாரவான ஆளுமல்ல. நான் சமாதானத்துக்கு ஆதரவான் ஆள் என்று தனது நிலைப்பாட்டை இரத்தினச் சுருக்கமாக எடுத்துரைத்தார் மடோனா (Madonna). அவருடைய மெச்சத்தக்க நிலைப்பாட்டை கூறியது கூறும் கோழைத்தனம் (craven tautology) என்று தூற்றினார் Lynn Crosbie என்ற விமர்சகர்! (The Globe and Mail, Toronto,  2003/04/05). Geraldo Rivera பாலைவனத்து மணலில் ஒரு கோட்டைக் கிழித்து விளக்கமளித்த கையோடு FOX அவருடைய சீட்டைக் கிழித்து வீட்டுக்கு அனுப்பியது.


அமெரிக்கப் படையினர் பாக்தாத்தைக் கைப்பற்றிய பொழுது செய்தி ஊடகங்கள் எல்லாம் பாக்தாத்தின் வீழ்ச்சி பற்றி விலாவாரியாகச் செய்திகள் வெளியிட்டன. அது பாக்தாத்தின் வீழ்ச்சி அல்ல என்று எவரும் வாதாடவில்லை. 1995ல் இலங்கை அரச படையினர் யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைப்பற்றியபொழுது உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் பலவும் யாழ்ப்பாணத்தின் வீழ்ச்சி பற்றி விரிவாக எடுத்துரைத்தன. அதனைக் கண்டு வெகுண்டெழுந்த ‘உடுப்பிட்டிச் சிங்கம்’ மு.சிவசிதம்பரம் அது ‘யாழ்ப்பாணத்தின் வீழ்ச்சி அல்ல’ என்று கர்ச்சித்தார். விடுதலைப் புலிகளின் தோல்வியை ‘யாழ்ப்பாணத்தின் வீழ்ச்சியாகக் கொள்ள முடியாது என்று முழங்கினார். அதேவேளை மறு தரப்பினரோ அரச படையினரின் வெற்றியை யாழ்ப்பாணத்தின் எழுச்சியாகக் கொண்டாடினார்கள். அது கண்டு அவர் வெகுண்டெழவுமில்லை, கர்ச்சிக்கவுமில்;லை. இதிலிருந்து தெரிவதென்ன? ‘கருத்துக்கள் முரண்பாட்டைத் தோற்றுவிக்கா, முரண்பாடே கருத்துக்களைத் தோற்றுவிக்கும்’  (மார்க்ஸ்).


‘மக்களின் சிந்தனையைக் கட்டுப்படுத்துவோர் சர்வாதிகாரிகளே’ என்றார் Robert H.Jackson. சர்வாதிகாரிகள் மாத்திரமல்ல, ஆட்சியாளர் அனைவருமே மக்களின் சிந்தனையைக் கட்டுப்படுத்தி வருகிறார்கள். சுயநலமிகளால் நடத்தப்படும் ஊடகங்கள் அத்தகைய ஆட்சியாளருக்கு முண்டு கொடுத்து வருகின்றன. சுயநலம் கருதிச் செயற்படும் செய்திமான்கள், புத்திமான்கள், விமர்சகர்கள் யாவரும் மக்களின் சிந்தனையைக் கட்டுப்படுத்துவதில் ஆட்சியாளர்களுக்கு உடந்தையாய் விளங்கி வருகிறார்கள். அவர்களைக் கருத்தில் கொண்டே தன்நெஞ்சு அறிவது பொய்யற்க  என்றார் வள்ளுவர் (293). அவர் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்திய வேறொரு விடயம் எமது தலைப்புக்கு மிகவும் பொருத்தமானது:


            சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

            வெல்லும்சொல் இன்மை அறிந்து (645).


இந்தக் குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய உரையைவிட Flaubert எழுதிய உரை சாலச் சிறந்தது. அவர் எழுதிய ஒரு கடிதத்தில் அது காணப்படுகிறது. அதனைப் பெற்றுக்கொண்டவர் Maupassant: ‘நீ சொல்ல விரும்புவதை எடுத்துரைப்பதற்கு ஒரேயொரு சொல்லே இருக்கிறது. அதற்கு உயிர் கொடுப்பதற்கு ஒரேயொரு வினையே இருக்கிறது. அதனை விசேடிப்பதற்கு ஒரேயொரு பெயரடையே இருக்கிறது. அந்தச் சொல்லை, அந்த வினையை, அந்தப் பெயரடையை நீ தேடிப்பிடிக்க வேண்டும். அதற்கு ஒத்தசொல்லை இட்டுக்கட்டக் கூடாது. உனது கெட்டித்தனத்தையும் கைவண்ணத்தையும் காட்டிச் சமாளிக்கக்கூடாது.’   

  

உள்ளதை உள்ளபடி உரைப்பதற்கு மொழி ஒருபொழுதும் தடையாய் இருக்கப் போவதில்லை. உள்ளதை உள்ளபடி உரைக்க முற்படாதவர்களுக்கே மொழி தடங்கல் விளைவிக்கும். ஆதலால்தான் ஆட்சியாளரும் அரசியல்வாதிகளும் விமர்சகர்களும், அவர்களுக்கு உடந்தையாய் விளங்கும் செய்திமான்களும் மொழியைத் திரித்து வருகிறார்கள். மொழித் திரிபுவாதிகள் கட்டியெழுப்பிய வீட்டிலேயே பரந்துபட்ட பாமர மக்கள் வாடகைக் குடிகளாய் வாழ்ந்து வருகிறார்கள்.  

______________________________________________________________________

மணி வேலுப்பிள்ளை

No comments:

Post a Comment