நேரிய நீதித்துறை

 Image result for nihal jayawickrama

கலாநிதி நிகால் ஜயவிக்கிரமா 
நேரிய நீதித்துறையும் பொறுப்பேற்கும் கடப்பாடும்
"நேரிய நீதித்துறைக்கான போராட்டம்: ஆசிய அனுபவம் புகட்டும் பாடங்கள்" குறித்த இந்த அமர்வில் எனக்குத் தெரிந்த ஒரு நாட்டில் நான் புலனைச் செலுத்த விரும்புகிறேன். இங்கு எமது ஆய்வுக்கு உட்படும் நாடாகவும், எமது நாட்டத்தை ஈர்க்கும் நாடாகவும் விளங்குவது இலங்கை. பிரித்தானியரால் கட்டியாளப்பட்ட இந்த நாடு 1948ல் சுதந்திரம் பெற்ற பின்னர் அறவே வேறுபட்ட இரண்டு ஆட்சி வகைகளைப் பரீட்சித்துப் பார்த்துள்ளது: (1) நாடாளுமன்ற மக்களாட்சி (2) நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாட்சி.
நாடாளுமன்ற மக்களாட்சி: 1948 முதல் 30 ஆண்டுகளாக தேர்தல்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு பொறுப்புக்கூறும் அமைச்சரவையால் நிறைவேற்று அதிகாரம் கையாளப்பட்டு வந்தது. அந்த அமைச்சரவை பிரதம மந்திரியின் தலைமையில் இயங்கியது. பிரதம மந்திரிமீது நாடாளுமன்றம் எவ்வளவு காலத்துக்கு நம்பிக்கை வைத்திருக்கிறதோ அவ்வளவு காலத்துக்கே அவர் பதவி வகிப்பார். பிரதம மந்திரி சட்டத்துக்கும் நீதிமன்றங்களின் நியாயாதிக்கத்துக்கும் கட்டுப்பட்டவராக விளங்கினார். பிரதம மந்திரியின் மதியுரைப்படியே அரசியல்யாப்புவாரியான அரசுத் தலைவர் மேல்நீதிமன்ற நீதிபதிகளை நியமித்து வந்தார். பிரதம மந்திரி எப்பொழுதும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துசாவிய பின்னரே தமது மதியுரையை நல்குவார். அக்காலகட்டத்தில் நேர்நெறி காக்கும் வலியதொரு மரபு நீதித்துறையின் ஒவ்வொரு மட்டத்திலும் அதற்குத் துணைநின்றது. மாபெரும் அரசியல், சமூக மாற்றம் ஏற்பட்டும் கூட, தகுதியும் நேர்மையும் தீவிர சுதந்திரமும் படைத்த நீதித்துறை சட்டப்படி சரிநிகர் நீதி காக்கும் கடப்பாட்டை என்றென்றும் சிரமேற்கொண்டு வந்தது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாட்சி: அடுத்த 36 ஆண்டுகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியால் நிறைவேற்று அதிகாரம் கையாளப்பட்டுள்ளது. ஜனாதிபதியே அரசுத் தலைவர், நிருவாகத் தலைவர், அரசாங்கத்தின் தலைவர், அமைச்சரவையின் தலைவர், ஆயுதப் படைகளின் அதிபதி. அவர் ஆறாண்டுக்காலப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் மீளவும் எத்தனை தடவைகள் தேர்தலில் நிற்க விரும்புகிறாரோ அத்தனை தடவைகள் நிற்கலாம். அவரைப் பதவிநீக்கல் அரிது. அவர் நாடாளுமன்றத்தில் அமர்வதில்லை. ஜனாதிபதி என்ற வகையிலோ, தனியாள் என்ற வகையிலோ அவர் இழைக்கும் அல்லது இழைக்கத்தவறும் எதையும் குறித்து எந்த நீதிமன்றத்திலும் வழக்குத்தொடுக்க முடியாது. அவர் தனெண்ணப்படி உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும், மேன்முறையீட்டு மன்ற நீதிபதிகளையும், சட்டத்துறை அதிபதியையும், நீதிச் சேவை ஆணையத்தின் உறுப்பினர்களையும் நியமிப்பவர். அவர் தலைமையில் இயங்கும் அரசியற் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால், சட்டம் இயற்றும் படிமுறையும் அவருடைய கட்டுப்பாட்டுக்கு உட்பட்டுவிடும். ஜனாதிபதி பெரிதும் வரம்புகடந்த அதிகாரம் துய்ப்பவர். மக்களாட்சி நிலவும் வேறெந்த நாட்டிலும் ஓர் அரசுத் தலைவர் கொண்டுள்ள அதிகாரத்தை விடவும் பரந்துபட்ட அதிகாரம் படைத்தவர். இலங்கைக் குடியரசில் தயவென்னும் ஆற்றின் அதியுச்ச ஊற்றிடம் ஜனாதிபதியே. மூன்று தசாப்தகால ஜனாதிபதியாட்சியின் பின்னர், குறிப்பாக நீதித்துறையின் உச்சப் படிநிலையில், நேர்நெறி என்பது பெரிதும் அற்றுப்போய்விட்டது.  
நீதித்துறை: அறவே வேறுபட்ட மேற்படி ஆட்சிமுறைகள் இரண்டும் நீதித்துறையில் ஏற்படுத்திய தாக்கத்தை இனி நான் விளக்கியுரைக்க விரும்புகிறேன். அரை நூற்றாண்டுக்கு முன்னர், நான் ஒரு சட்டவாளராக அங்கீகரிக்கப்பட்டபொழுது, சட்டபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு ஆயுதப்படைகள், காவல்துறை என்பவற்றின் முதுநிலை அதிகாரிகள் சதிசெய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. சதிமுயற்சி கருவறுக்கப்பட்டது. சதிபதிகள் என்று சந்தேகிக்கப்பட்டோர் கைதுசெய்யப்பட்டார்கள். அதிர்ச்சியில் உறைந்த அரசாங்கம் சந்தேகநபர்களை விசாரணைசெய்வதற்கு விசேட ஏற்பாடுகளைப் புகுத்தும் சட்டம் ஒன்றைப் பின்னோக்கிச் செல்லுபடியாகும் வண்ணம் நிறைவேற்றியது.  அவற்றுள் ஓர் ஏற்பாட்டின்படி சந்தேகநபர்களை யூரர்களின்றி விசாரணைசெய்வதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மூவரை நியமிக்கும் அதிகாரம் நீதி அமைச்சருக்கு அளிக்கப்பட்டது. நீதி அமைச்சரால் அமர்த்தப்பட்ட மூன்று நீதிபதிகளின் முன்னிலையில் யூரரில்லா விசாரணை தொடங்கவே, "நீர் குற்றவாளியா, அல்லவா?" என்னும் வினாவுக்கு விடையளிக்க சந்தேகநபர்கள் மறுப்புத் தெரிவித்தார்கள். நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் அரசியல்யாப்பை மீறியே நீதி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது அவர்கள் வாதம்.
அடிப்படை உரிமைகள் பற்றிய அத்தியாயம் எதையும் அரசியல்யாப்பு கொண்டிருக்கவில்லை. அதிகாரப் பிரிவீடு குறித்த திட்டவட்டமான ஏற்பாட்டையும் அது கொண்டிருக்கவில்லை. எனினும் நீதிமன்றில் நாட்கணக்காக நிகழ்ந்த வாதத்தை அடுத்து, நீதித்துறை கையாளும் அதிகாரத்துடன் அல்லது அதன் சாராம்சத்துடன், நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரமும் குலைக்கமுடியாவாறு பின்னிப் பிணைந்துள்ளதால், அதுவும் நீதித்துறையின் அதிகாரத்தில் ஒரு பகுதியே என்று நீதிமன்றம் ஏகமனதாக முடிவெடுத்தது. அதற்கிணங்க, தாங்கள் அமைச்சரால் நியமிக்கப்பட்டவர்கள் என்ற காரணத்தாலேயே மேற்படி விசாரணையை மேற்கொள்ளும் நியாயாதிக்கம் தமக்குக் கிடையாது என்று அமைச்சரால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் மூவரும் முடிவெடுத்தனர்! அரசியல்யாப்புக்கு அமைவாகவே நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் நீதி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கொள்ளப்பட்டாலும் கூட, அத்தகைய நியமனம், "நீதி நிலைநாட்டப்படவும் வேண்டும், நீதி நிலைநாட்டப்படுவதாகப் புலப்படவும் வேண்டும்" என்னும் தலையாய நெறியை மீறுவதாய் அமையும்; ஆதலால் நாட்டின் பொது நீதிபரிபாலனத்தில் நிலையூன்றிய அந்த நீதிநெறிக்கு வழிவிடும் நிர்ப்பந்தம் தமக்கு உண்டு என்றும் அவர்கள் முடிவெடுத்தனர்.
அந்த முடிபுக்கு எதிராக அரசாங்கம் மேன்மூறையீடு செய்யவில்லை. நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் மீண்டும் தலைமை நீதியரசருக்கே அளிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மூன்று நீதிபதிகளும் ஓய்வுபெறும் வயதுவரை பதவி வகித்தார்கள். ஒன்பது ஆண்டுகள் கழித்து அவர்களுள் ஒருவர் அதே பிரதம மந்திரியால் விதந்துரைக்கப்பட்டு, ஓய்விலிருந்து மீட்கப்பட்டு, கோமறை மன்ற நீதிக்குழுவுக்குப் பதிலாக அமைக்கப்பட்ட இறுதி மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
50 ஆண்டுகள் கழித்து, 2012ம் ஆண்டில் ஜனாதிபதியின் தம்பி (பொருளாதார விருத்தி அமைச்சர்) சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அச்சட்டமூலம் அரசியல்யாப்புக்கு மாறானது என்று தலைமை நீதியரசரின் தலைமையில் கூடிய மூன்று நீதிபதிகள் கொண்ட நீதிமன்றில் ஒரு வாதம் முன்வைக்கப்பட்டது. ஒன்பது மாகாண மன்றங்களும் அச்சட்டமூலத்தை அங்கீகரிக்கும் வரை நாடாளுமன்றம் அதை நிறைவேற்ற முடியாது என்று நீதிமன்றம் தீர்மானித்தது. இன்னும் அமைக்கப்படாதிருந்த ஒரு மாகாண மன்றம் (வட மாகாண மன்றம்) அதை அங்கீகரிக்கத் தவறியபடியால், அச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பானமை கொண்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், அத்துடன் நாடளாவிய ஒப்பங்கோடல் வாயிலாகவும் அது அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அதே நீதிமன்று தீர்மானித்தது. அதே நாள் தலைமை நீதியரசரைப் பதவிநீக்கும் தீர்மானம் ஒன்றை அரசாங்க நாடாளுமன்றக் குழு சபாநாயகரிடம் சமர்ப்பித்தது. சபாநாயகர் ஜனாதிபதியின் தமையன். அத்தீர்மானத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரித்து நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவென ஏழு அமைச்சர்களையும், நான்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் கொண்ட தெரிவுக்குழு ஒன்றை அவர் நியமித்தார்.  
தலைமை நீதியரசர் தெரிவுக் குழுவின்முன் தோறியபொழுது, அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க அவருக்கு அவகாசம் மறுக்கப்பட்டது. அவரிடம் குற்றச்சாட்டுகள் பற்றிய மேலதிக விபரங்களோ, சாட்சிகளின் அல்லது ஆவணங்களின் பட்டியலோ கொடுப்பதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. தலைமை நீதியரசரையும் அவருடைய சட்டவாளர்களையும் தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் ஆபாச மொழிபேசி அவமதித்தார்கள். தலைமை நீதியரசர் விசாரணைக் குழுவை விட்டு வெளியேறினார். இயற்கை நீதிநெறிகளை விசாரணைக் குழு சூடுசொரணையின்றிப் புறக்கணிப்பதாகத் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நால்வரும் வெளியேறினார்கள். அடுத்த நாள் ஏழு அரசாங்க உறுப்பினர்களும் சாட்சிகளை வரவழைத்து, அவர்களின் சாட்சியத்தைப் பதிவிட்டு, 12 மணித்தியாலங்கள் கழித்து 25 பக்க அறிக்கை ஒன்றைத் தயாரித்து, தலைமை நீதியரசர் துர்நடத்தையில் ஈடுபட்ட குற்றவாளி என்ற முடிபை அதில் பொறித்தார்கள். அவரைப் பதவிநீக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பதவிநீக்கும் கட்டளை ஜனாதிபதியால் விடுக்கப்பட்டது. தெரிவிக்குழுவின் முன்னிலையில் நடத்தப்பட்ட விசாரணை அதன் தொடக்கத்திலிருந்தே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்று தீர்மானித்தும் கூட, தெரிவுக் குழுவின் முடிபை நீக்கும் வண்ணம் பதிவேட்டுவினாப் பேராணை ஒன்றை மேன்முறையீட்டு நீதிமன்று விடுத்தும் கூட, அமைச்சரவையின் சட்ட மதியுரைஞர் தலைமை நீதியரசராக நியமிக்கப்பட்டார்.
இலங்கையில் நீதித்துறை அடைந்த வீழ்ச்சியின் அடியாழத்தை மேற்படி நிகழ்வுகள் உணர்த்துவதாகவே நான் கருதுகிறேன். ஜனாதிபதியின் நிருவாகம் புகுத்தப்பட்ட அன்றே அப்படிமுறை தொடங்கியது. அடங்கியொடுங்கி, வணங்கியிணங்கி, அடிபணியும் நீதித்துறை ஒன்றை உருவாக்குவதில் அடுத்தடுத்துப் பதவியேற்ற ஜனாதிபதிகள் தத்தமது பங்கைச் செலுத்தவே, அப்படிமுறை சூடு பிடித்தது. ஜனாதிபதியின் அதிகாரத்தால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளான துறைகளை இனி நான் சுருக்கி உரைக்கப் போகிறேன்.
நியமனப்  படிமுறையைத்  துர்ப்பிரயோகம்  செய்தல்: நாடாளுமன்ற ஆட்சிமுறையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் வேளைகளில் நீதிமரபு வழிவந்த தரப்பினரைச் சேர்ந்தவர்களையே பிரதம மந்திரி விதந்துரைத்து வந்தார். அத்தகைய தரப்புகளுள் நீதிச் சேவையாளர்கள், சட்டத்துறை அதிபதியின் திணைக்கள சட்டவாளர்கள், தனியார் சட்டவாளர்கள் அடங்குவர். முதுமுறை, தகுதி என்னும் நெறிகள் இரண்டையும் கொண்டே அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். நாட்டின் கீழ்நீதிமன்றுகளில் ஆகக்குறைந்தது 25 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்தை அல்லது சட்டத்துறை அதிபதியின் திணைக்களத்தில் சட்டவாளராக விளங்கிய பட்டறிவை உச்ச நீதிமன்ற நீதிபதி நீதித்துறைக்கு ஈந்தார். தலைமைச் சட்டவாளர்கள் நீதித்துறையில் நிரந்தரப் பதவி வகிக்கும் மரபு ஓங்கியதில்லை. எனினும் எப்பொழுதும் நிகழ்வது போல் அதற்குப் புறநடைகளும் புலப்பட்டதுண்டு. அதேவேளை நியமன நடைமுறை துலக்கமாகவும், வெளிப்படையாகவும் இடம்பெற்றது. அது செவ்வனே இடம்பெற்றதாகவும்  கொள்ளப்பட்டது.
ஜனாதிபதி ஆட்சிமுறை புகுத்தப்பட்ட பிறகு, மேற்படி படிமுறையில் ஒரு திடீர்த் திருப்பம் எனும்படியாக அதற்கு முதலாவது அடி கொடுத்தவர் நாட்டின் முதலாவது ஜனாதிபதியே. முதுமுறை, பட்டறிவு, வயது எதையும் பொருட்படுத்தாமல் எட்டு நீதிபதிகளைத் தவிர்த்து, நான்கு நீதிபதிகளைக் கீழ்நீதிமன்றுக்கு இறக்கி, உச்ச நீதிமன்றை அவர் மீட்டியமைத்தார். "அரசியல் ஏற்புடைமை" என்னும் விளக்கமற்ற பிரமாணம் அரசின் நடவடிக்கையைத் தீர்மானிக்கும் காரணியாக மாறியது. அடுத்த அடி கொடுத்தார் இன்னொரு ஜனாதிபதி. என்றுமே சட்டவாளராகப் பணியாற்றாத அல்லது நீதித்துறையில் அல்லது சட்டத்துறையில் பதவி வகிக்காத இளவயதினர் ஒருவரை, 37 வயது நிரம்பிய ஒருவரை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரையும் விட வயதுகுறைந்த ஒருவரை, கீழ்நீதிமன்ற நீதிபதிகளை விடவும் வயதுகுறைந்தவர் எனத்தக்க ஒருவரை அவர் நியமித்தார். தகைமை உடையவர்களே சட்டக் கல்லூரிக்கு அனுமதிக்கபடுவர். எனினும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகக்குறைந்த தகைமையின்றி சட்டக் கல்லூரிக்கு அனுமதிக்கப்படுவதுண்டு. அத்தகைய வாய்ப்பினைப் பயன்படுத்தி சட்டக் கல்லூரிக்கு அனுமதிபெற்ற தற்போதைய ஜனாதிபதி தனிப்பட்ட விசுவாசத்துக்கும், நட்புக்கும் ஆட்பட்டு தனது சட்டக் கல்லூரித் தோழர்களுக்கே பெரிதும் நியமனம் வழங்கி வருவதாகத் தெரிகிறது.
"அரசியல் ஏற்புடைமை" என்னும் பிரமாணத்தைப் பிரயோகித்தே தலைமை நீதியரசரும் நியமிக்கப்பட்டார். முதலாவது ஜனாதிபதி தனது சொந்த சட்ட மதியுரைஞர் ஒருவரை, கீழ்நீதிமன்ற சட்டவாளர் ஒருவரை, முன்னொருபொழுதும் நீதித்துறையில் பதவி வகிக்காத ஒருவரை நியமித்தார். அரசியலரங்கில் உணர்ச்சியைக் கிளப்பக்கூடிய வழக்கு ஒன்றில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய மிகமூத்த நீதிபதியையும் அவர் பொருட்படுத்தவில்லை. தனது அரசாங்கத்தின் அரசியல் நலன்களுக்கு ஒவ்வாதவர் என்று கருத்தப்படும் நீதிபதி எவரையும் அவர் பதவியுயர்த்த விரும்பவில்லை என்பது தெளிவு. இன்னொரு ஜனாதிபதி உச்ச நீதிமன்றின் மிக இளைய நீதிபதியை தனது சட்டத்துறை அதிபதியாக நியமித்தார். தற்போதைய ஜனாதிபதி (மகிந்த ராஜபக்சா) "ஏணியும் பாம்பும்" விளையாடி மகிழ்ந்து வருபவர். மிகமூத்த நீதிபதியைப் புறக்கணித்துவிட்டு, அவருக்கு இழப்பீடு வழங்குமுகமாக அதே நீதிபதியின் கணவரைப் பெரியதோர் அரசாங்க தாபனத்தின் தலைவராக, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமித்தார். முன்னொருபொழுதும் உச்ச நீதிமன்ற நீதிபதியின் வாழ்க்கைத்துணை எவரும் அரசியலைப் பயன்படுத்தி நன்கொடை பெற்றதில்லை. முன்னர் புறக்கணிக்கப்பட்ட நீதிபதியை ஈராண்டுகள் கழித்து தலைமை நீதியரசராக அவர் நியமித்தார். அதே நீதிபதியின் கணவரை இன்னோர் அரச தாபனத்தின் தலைவராக, தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக நியமித்தார். ஜனாதிபதியே நிதி அமைச்சர் என்ற வகையில் இவ்விரு தாபனங்களும் அவருடைய நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குபவை.
நீதிபதிகளின் பதவிக்காலத்தில் தலையீடு: நாடாளுமன்ற ஆட்சி நிலவிய முப்பது ஆண்டுக் காலப்பகுதியில் எந்த நீதிபதியையும் பதவிநீக்க என்றுமே முயற்சி எடுக்கப்படவில்லை. ஜனாதிபதி ஆட்சி வந்தபிறகு நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களின் முன்னிலையில் தோன்றும்படி நீதிபதிகளுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டு,  அவர்களை ஏன் பதவிநீக்கக் கூடாது என்பதற்கு காரணம் காட்டும்படி அவர்களிடமே வினவப்பட்டது. ஜனாதிபதி நியமித்த விசாரணை ஆணையம் ஒன்றில் பணியாற்றிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவர் துர்நடத்தை காரணமாக ஆணையாளராகச் செயற்படும் தகைமையற்றவர் என்று உச்ச நீதிமன்று முடிவெடுத்தபொழுது முதல் தடவையாக அப்படி நடந்தது. எவருடைய நடத்தையுடன் தொடர்புடைய விடயம் அந்த ஆணையத்தின் விசாரணைக்கு உட்படிருந்ததோ அவருடன் அந்த நீதிபதி பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டமையே மேற்படி துர்நடத்தை. உச்ச நீதிமன்று முறையற்ற கணிப்புகளால் உந்தப்பட்டு தீர்ப்பளித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார் தகைமைநீக்கப்பட்ட ஆணையர். நீதி அமைச்சரின் தலைமையில் அமைந்த தெரிவுக்குழுவின் முன்னிலையில் தோன்றும்படி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டு, அவர்கள் விசாரிக்கப்பட்டார்கள். அரசாங்கத்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட அந்தக் குழுவிடம், தனது அரசியல் விசுவாசம் யார்பக்கம் என்பதை உணர்த்தவேண்டும் என்று எண்ணிய இருவருள் ஒருவர் படுகேவலமான முறையில், மானங்கெட்ட முறையில் நடந்துகொண்டார். அப்பழுக்கற்ற சுயேச்சையும் நேர்நெறியும் கொண்டவர் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றவரும் அரசுக்குச் சார்பாக அவர் அளித்த தீர்ப்புகள் பலவற்றை எடுத்துக்காட்டி அவர் அரசாங்கத்துக்கு எதிரானவர் என்று எவரும் ஐயப்படாவாறு பார்க்க வேண்டியதாயிற்று. அப்புறம் தகைமைநீக்கத்துக்கு உள்ளான நீதிபதியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என்று தெரிவுக்குழு முடிவுசெய்தது.
இன்னொரு தடவையும் அப்படி நடந்தது: ஜனாதிபதியின் முன்னாள் சட்ட மதியுரைஞர் (பின்னாள் தலைமை நீதியரசர்) மதியிழந்து ஆற்றிய உரை ஒன்றில் அரசியற் சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து ஜனாதிபதியைக் குறைகூறும் வண்ணம் கருத்துரைத்தார். உடனடியாகவே அரசாங்கம் பதில்நடவடிக்கை எடுத்தது. அவரைப் பதவிவிலக்கும் தீர்மானம் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஓர் அமைச்சரின் தலைமையில் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. அது 14 தடவைகள் கூடியபிறகு தலைமை நீதியரசர் ஓய்வு பெறவேண்டிய வயதை எட்டவே தெரிவுக்குழு அதன் அமர்வுகளை முடித்துக்கொண்டது. "அந்த உரை, நிரூபிக்கப்பட்ட துர்நடத்தை ஆகாது" என்று தெரிவுக்குழு அறிவித்தது. நீதித்துறையில் முன்-அனுபவமற்ற ஒரு சட்டவாளரை, நீதித்துறையில் உச்சப்பதவிக்கு உயர்த்தப்பட்ட ஒருவரை, தனக்கு கொடை கொடுத்தவரையே பிறகு குறைகூறத் தலைப்பட்ட ஒருவரை அவமானப்படுத்தும் நோக்குடனேயே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மூன்றாவது தடவை ஓர் அவல நகைச்சுவையின் அம்சங்கள் அனைத்தும் வெளிப்பட்டன. அரசியல்யாப்பில் செய்யப்பட்ட ஒரு திருத்தத்தின் விளைவாக, இலங்கையின் ஆள்புலத்தினுள் ஒரு புறம்பான அரசு அமைக்கப்படுவதை ஆதரித்து வாதாடுவதில்லை என்று அரசாங்க உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒரு மாதத்துக்குள் புதிதாகச் சத்தியம்செய்ய வேண்டியிருந்தது. அவ்வாறு சத்தியம்செய்யத் தவறும் உத்தியோகத்தர்கள் பதவியிழக்க நேரும். அந்த ஆண்டு ஆகஸ்ட் 8ம் திகதி மேற்படி திருத்தம் நடைமுறைக்கு வந்தது. நீதிபதிகள் அனைவரும் சத்தியம் செய்விக்கும் தகுதி வாய்ந்தவர்கள் என்பதால், ஒருவர் முன்னிலையில் ஒருவராக அவர்கள் புதுக்கச் சத்தியம் செய்தனர். ஆகஸ்ட் 9ம் திகதி நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த தலைமை நீதியரசர், ஜனாதிபதியே நீதிபதிகளுக்கு சத்தியம் செய்விக்க வேண்டும் என்பதைக் கண்டுபிடித்தார். உடனடியாக நீதிமன்று ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய நாள் நடுநிசியில் ஒருமாத அவகாசம் முடிவடையும் என்று தாங்கள் கருதுவதால், அன்று மாலையே ஜனாதிபதியின் முன்னிலையில் தாங்கள் சத்தியம்செய்ய விரும்புவதாக நீதிபதிகள் அவருக்கு எழுதியனுப்பினார்கள். ஒருமாத அவகாசம் ஏற்கெனவே முடிவடைந்துவிட்டது என்று ஜனாதிபதியின் தரப்பினர் அவரிடம் தெரிவித்தபடியால், நீதிபதிகளின் வேண்டுகோளை அவர் நிராகரித்தார். நீதிபதிகள் பதவியிழந்துவிட்டதாக அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அவர்களுடைய நீதிமன்றக் கூடங்கள் பூட்டப்பட்டு, குறுக்குச்சட்டம் இடப்பட்டது. ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் நீதிமன்ற வளவில் நிறுத்தப்பட்டு, நீதிபதிகள் உட்புகாவாறு தடுக்கப்பட்டார்கள். சில நீதிபதிகள் மாற்றப்படலாம், நீதிமன்றம் "புனரமைக்கப்படலாம்" என்று அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள செய்தித்தாள்களில் பரவலாக ஊகங்கள் அடிபட்டன. ஈற்றில் ஜனாதிபதியே நீதிபதிகள் அனைவருக்கும் புதிய நியமனக் கடிதங்கள் வழங்கி, அவர்களுக்கு உரியமுறைப்படி சத்தியம் செய்வித்து வைக்கவே ஒரு கிழமையாக அதிர்ச்சியூட்டிய நிலைவரம் ஒருவாறு முடிவுக்கு வந்தது.
நீதித்துறையின் அதிகாரத்துக்கு அவமதிப்பு: அரசியல்யாப்புக்கமைய விதிவிலக்குத் துய்த்த  ஜனாதிபதிகள் தமக்கு நிறைவுதராவாறு தீர்ப்புவழங்கிய நீதித்துறையை அவமதிக்கத் தொடங்கினார்கள். சில தீர்ப்புகள் புறக்கணிக்கப்பட்டன. குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. அதற்கு அடியெடுத்துக் கொடுத்தவர் முதலாவது ஜனாதிபதியே. தன்னை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் அடிப்படை உரிமைகளை மீறிய குற்றவாளிகள் என்னும் தீர்ப்புக்கு உள்ளான காவல்துறை அதிகாரிகளுக்கு வெகுமதியளிக்கும் வழமையை அவரே உருவாக்கினார். எடுத்துக்காட்டாக, நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் சட்டமூலம் ஒன்றுக்கு எதிராகப் பிரசாரம்செய்த குருமாரின் கூட்டம் ஒன்றினுள் காவல்துறை அதிகாரிகளின் அணி ஒன்று புகுந்தது. அவர்கள் கூட்டத்தில் பங்குபற்றியோரைத் தாக்கி, பிரசுரங்களைப் பறிமுதல்செய்து, ஆட்களைக் கலைத்தார்கள். அங்கு பேச்சுச் சுதந்திர உரிமை மீறப்பட்டதாகத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்று, கூட்டத்தைக் கூட்டியவருக்கு இழப்பீடும், செலவுத்தொகையும் செலுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.  அப்படியிருக்க, காவல்துறையினரின் அணிக்குத் தலைமைவகித்த உதவிக் கண்காணிப்பாளருக்கு உடனடியாகவே பதவியுயர்வு அளிக்கப்பட்டது. இழப்பீடும், செலவுத்தொகையும் அரச நிதியத்திலிருந்து செலுத்தப்பட்டன. இது அரிதாக நடந்த ஒன்றல்ல. நடந்த பலவற்றுள் ஒன்று.
தனது பணி ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்த சர்வதேய சட்டவல்லுநர் ஆணையத்தின் பிரதிநிதி ஒருவர் ஜனாதிபதியைச் சந்தித்தார். காவல்துறை அதிகாரிகளுக்கு பதவியுயர்வு அளித்ததும், அரச நிதியத்திலிருந்து இழப்பீடு, செலவுத்தொகை செலுத்தியதும் தனது சொந்த முடிபுகளே என்பதை அவரிடம் ஜனாதிபதி தயக்கமின்றி ஒப்புக்கொண்டார். காவல்துறையினரின் தெம்பினைப் பேணுவதற்கு அவை அவசியம் என்று தெரிவித்தார். தனது கொள்கைகள் சிலவற்றுக்கு உச்ச நீதிமன்று தடங்கல் விளைவிக்கிறது என்றும், உச்ச நீதிமன்றத்தை எவரும் கட்டுப்படுத்தாவிட்டால், அது மிகுந்த தொல்லைகளை விளைவிக்கக் கூடும் என்றும் தெரிவித்தார்.
நிருவாகபீடத்துடன் உறவாடல்: நீதிபதி ஆற்றும் பணியை "குருத்துவம் போன்றது" என்று வர்ணித்தார் பிரித்தானியாவின் முன்னாள் நீதிவேந்தர் எயில்சம் பிரபு (Lord Hailsham). 20ம் நூற்றாண்டின் இடைநடுப்பகுதியில் பல ஆண்டுகளாக ஒரு நீதிபதியின் வீட்டில் வாழ்ந்தவன் என்ற வகையில், இலங்கையில் அப்பொழுது ஒரு நீதிபதியிடம் காணப்பட்ட வாழ்வியல் நோக்கை நான் அருகிருந்து அவதானித்தவன். இயல்பில் தாராண்மை மிகுந்ததாயினும், பண்புகள் பலவற்றில் அது குருத்துவம் மிகுந்ததாகவே காணப்பட்டது. சுற்றிச்சூழ்ந்த சமூகத்திலிருந்தும், பள்ளிக் கூட்டாளிகளிடமிருந்தும், சட்டத்துறைஞர்களாக விளங்கும் முன்னாள் சகபாடிகளிடமிருந்தும் நீதிபதிகள் ஒதுங்கியதில்லை. அதேவேளை அவர்கள் அரசியல்வாதிகளை வீட்டுக்கு வரவழைத்து அல்லது அவர்களின் வீட்டுக்குச் சென்று ஊடாடியது அரிது. தற்பொழுது நீதிபதிகள் தமது நீதிமன்ற நியமனத்தைக் கொண்டாடுவதற்கு அல்லது தமது மகனின் அல்லது மகளின் திருமணம் போன்ற குடும்ப நிகழ்வுகளைச் சிறப்பிப்பதற்கு   ஜனாதிபதியையோ, பிரதம மந்திரியையோ, ஏனைய அமைச்சர்களையோ வீட்டுக்கு வரவழைப்பது வழமையாகிவிட்டது. அத்தகைய நிகழ்வுகளின் ஒளிப்படங்கள் செய்தித்தாள்களிலும், இணையத்திலும் வெளியிடப்படுகின்றன. தலைமை நீதியரசர் மற்றும் இரு நீதிபதிகள் முன்னிலையில் ஜனாதிபதியின் மகன் சட்டத்தரணியாகச் சத்தியம் செய்தபொழுது மூன்று நீதிபதிகளும் தமது நீதியுடையுடன் நீதிபீடத்தைவிட்டு இறங்கிவந்து புதிய சட்டத்தரணியுடனும், அவருடைய பெற்றோருடனும், அங்கு வந்திருந்த அமைச்சர்களுடனும் கூடிநின்று பல ஒளிப்படங்களுக்கு முகம்கொடுத்தார்கள்.  அதே நாள், அதே சடங்கில் சத்தியம்செய்த நூற்றுக் கணக்கான  மற்றவர்களுக்கு அதே சலுகை அளிக்கப்படவில்லை.
அண்மையில் இன்றைய தலைமை நீதியரசர் தலைநகரிலிருந்து தென்கோடிக்குப் பயணித்து ஜனாதிபதியின் சொந்த வீட்டில் அவருடனும், அவருடைய குடும்பத்தவருடனும் சேர்ந்து சிங்களப் புத்தாண்டு கொண்டாடி, சடங்குகளில் பங்குபற்றினார். பெரிதும் குடும்பவட்டத்துக்குரிய அந்த நிகழ்வில் தலைமை நீதியரசர் உட்பட அவற்றில் பங்குபற்றியோர் அனைவரும் "வெண்ணாடை அணிந்து தென்திசை நோக்கி" ஆளுக்காள் தளிசை ஊட்டி, மற்றும் பிற சங்கதிகளில் ஈடுபட்டதைக் காட்டும் ஒளிப்படங்கள் வெளியிடப்பட்டன. இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தனது பரிவாரங்களுடன் (பல அமைச்சர்களுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், அதிகாரிகளுடன்) உத்தியோகபூர்வமாக இத்தாலிக்குச் சென்றபொழுது தலைமை நீதியரசரும் அவர்களுடன் சேர்ந்துகொண்டார். தலைமை நீதியரசர் ஓர் அரசியல் தலைவருடன் வெளிநாடு சென்றது இதுவே முதல் தடவை.
தயவும் கைமாறும்: ஜனாதிபதி காட்டும் தயவில் பொருளுதவியும் அடங்கும். கொழும்பின் விலைமதிப்புமிகுந்த புறநகரில் நீதிபதிகள் தமக்கு சொந்த வீடு கட்டுவதற்கு அரச காணியை மலிவுவிலைக்கு வழங்கினார் ஒரு ஜனாதிபதி. முன்னைய ஆண்டுகளிலிருந்து செல்லுபடியாகும் வண்ணம் மேல்நீதிமன்ற நீதிபதிகளுக்கு பாரிய சம்பள அதிகரிப்பு வழங்கினார் இன்னொரு ஜனாதிபதி. நீதிபதிகள் தீர்வை செலுத்தாமல் ஊர்திகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதிப் பத்திரம் வழங்கினார் தற்போதைய ஜனாதிபதி. நீதிபதிகள் விரும்பினால் அனுமதிப் பத்திரங்களை விற்பதற்கும் அவர் அனுமதி அளித்தார். நீதிபதிகள் அந்நிய செலாவணி உழைப்பதற்கும் அவர் ஓர் உபாயம் வகுத்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளும் அவ்வப்பொழுது பிஜிதீவுக்குச் சென்று நீதிபதிகளாகப் பணியாற்றுவதற்கு ஏதுவாக அவர் பிஜிதீவின் படையாட்சியாளருடன் பேசிப்பறைந்து அவர்களுக்கு விடுமுறை அளித்தார். பிஜியில் படையினரின் சதி இடம்பெற்றதால் அது பொதுநலவாயத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த வேளையில், பிஜியில் பணியாற்றிய வேறு பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் பதவிதுறந்திருந்த வேளையில் மேற்படி யாத்திரை தொடங்கியது. உச்ச நீதிமன்றிலும் மேன்முறையீட்டு நீதிமன்றிலும் பெருவாரியான வழக்குகள் தேங்கிக் கிடக்கையில் ஜனாதிபதி வழங்கிய சலுகையைப்  பயன்படுத்தி நீதிபதிகள் பலரும் பிஜிதீவுக்கு யாத்திரை செய்தார்கள். 
பல நாடுகளில் நீதிபதிகள் ஓய்வுபெற்ற பின்னர் அவர்களை வேலைக்கமர்த்தும் நடைமுறை முற்றிலும் தடுக்கப்படாவிட்டாலும், அங்கீகரிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கைநிறைய ஓய்வூதியம் அளிக்கும் ஏற்பாடே போதும் என்று கருதப்படுகிறது. நீதித்துறையைப் பற்றியும் தொடர்ந்து பணியாற்றும் ஏனைய நீதிபதிகள் பற்றியும் மக்கள் கொள்ளும் எண்ணத்தில் முன்னாள் நீதிபதியின் நடத்தை பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஓய்வுபெற்ற நீதிபதிகளின் தலைமையில் இயங்கிய இலஞ்சத்தடுப்பு ஆணையம், மனித உரிமை ஆணையம் இரண்டும் மக்கள் எள்ளிநகையாடும் வண்ணம் அவற்றின் அரசியற் பக்கச்சார்பை வெளிப்படுத்தின. முன்னொருபொழுதும் இல்லாவாறு தற்போதைய ஜனாதிபதி வழங்கிய ஒரு நியமனமே உச்ச நீதிமன்றின் நேர்நெறியையும், நம்பகத்தையும் பாரதூரமான முறையில் நீர்த்துப்போக வைத்தது. தலைமை நீதியரசர் ஓய்வுபெற்று ஓரிரு கிழமைகளுக்குள் ஜனாதிபதியின் மதியுரைஞராக நியமிக்கப்பட்டார். தமது ஓய்வை அடுத்து அந்த நியமனத்தை தலைமை நீதியரசர் நாடினாரா, அல்லது ஜனாதிபதியே அவரை நியமிக்க முன்வந்தாரா, எதற்காக முன்வந்தார் என்பது தெரியவில்லை. தலைமை நீதியரசர் என்னும் பதவியில் இருந்துகொண்டு அரசியலரங்கில் உணர்ச்சியைக் கிளப்பும் வழக்குகளை விசாரிக்கும் தருணத்தில் அவரது மீள்நியமனம் பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றனவா என்பதும் தெரியவில்லை. தலைமை நீதியரசரின் நிதானத்தைக் குறித்து மட்டுமல்ல, அண்மையில் அவர் அளித்த தீர்ப்புகளின் நெறிமுறையைக் குறித்தும் பாரதூரமான கேள்விகளை இது கிளப்பியது. நீதித்துறையில் ஊழல் என்னும் பேயையும் அது புகுத்தியது. ஒரு நீதிபதி, அதுவும் ஒரு தலைமை நீதியரசர், உச்ச நீதிமன்றிலிருந்து அரசாங்கத்தின் கருவாகிய நிறைவேற்றுதுறைக் கிளையில் பணியாற்றவென, ஒரு மாபெரும் பாய்ச்சலில் ஜனாதிபதியின் செயலகத்தை அடைய முடிவெடுக்கும் பொழுது,  அபாய எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கவே வேண்டும்.
ஜனாதிபதி வழங்கிய பொருளுதவிக்கு தலைமை நீதியரசர்களும், நீதிபதிகளும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் கைமாறு புரிந்துள்ளார்கள். தமது புரவலர்கள் அல்லது புரவலர்களாக ஓங்கக்கூடியோர் விரும்பும் தீர்ப்புகளையும், சட்டதிட்ப அபிப்பிராயங்களையும் அவர்கள் நல்கியுள்ளர்கள். எடுத்துக்காட்டாக ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர்மீது சுமத்தப்பட்ட மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணையை இடைநிறுத்தியமை, அவர் போட்டியிட்டு வெல்வதற்கு ஏதுவாகவே. இரண்டாவது தடவை தேர்தலில் வென்ற ஜனாதிபதி ஒருவர் தனது இரண்டாவது தவணை தொடங்கும் திகதியைப் பின்போடுவதற்கும், அதன்மூலம் மேலதிகமாக 10 மாத "நீடிப்பு" ஈட்டுவதற்கும் ஏதுவாக இன்னொரு தலைமை நீதியரசர் அவருக்கு சட்டதிட்ப அபிப்பிராயம் நல்கியுள்ளார். இலங்கையின் ஆட்சித்துறையில் தீர்க்கமான மாற்றங்களை ஏற்படுத்திய 93 பக்க சட்டமூலம் ஒன்றின் அரசியல்யாப்புவாரியான சட்டதிட்பம் பற்றி 24 மணித்தியாலங்களுக்குள் ஒரு தீர்மானத்தை எழுதியுள்ளார் ஒரு நீதிபதி. ஒரு ஜனாதிபதி தனது பதவிக்காக திரும்பத் திரும்ப எத்தனை தடவைகள் தேர்தலை நாட விரும்புகிறாரோ அத்தனை தடவைகள் நாடுவதற்கும், பற்பல சுதந்திர ஆணையங்களை ஒழிப்பதற்கும் ஏதுவாகவே அந்த நீதிபதி அப்படிச் செய்தார்.
முடிவுரை: இலங்கையின் பட்டறிவிலிருந்து நாம் கற்கும் பாடங்கள் எவை? இலங்கையின் நீதித்துறை பங்களூர் நெறிகளை (Bangalore Principles) அடிப்படையாக வைத்து நீதியியல் நடத்தை விதிக்கோவை எதையும் கைக்கொண்டதில்லை. கைக்கொண்டிருந்தால், நிலைமை வேறுவிதமாய் அமைந்திருக்குமா? நிறைவேற்று ஜனாதிபதி தோன்றமுன்னர் அரசின் அல்லது அதன் முகவர்களின் ஆடம்பரத்தால், ஆரவாரத்தால், வல்லமையால், அதிகாரத்தால் இலங்கையின் நீதித்துறை இடர்ப்பட்டதரிது. அப்பொழுது நீதித்துறையின் சுதந்திரம் பற்றிய அடிப்படை நெறிகளை ஐ. நா. இன்னும் வகுத்திடவில்லை. அப்பொழுது சர்வதேய நீதியியல் நடத்தை விதிக்கோவை எதுவும் இன்னும் கருத்தில் கொள்ளப்பட்டதில்லை. எனினும் அக்கால நீதிபதிகள் தமது ஒரேயொரு வழிகாட்டியை அடியொற்றி ஒழுகினார்கள் - நீதிகாக்கும் சத்தியத்தை அடியொற்றி ஒழுகினார்கள். அக்கால அரசாங்கம், மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாய்த்த வேளையிலும் கூட, ஏதேனும் ஒரு வழக்கில் மிகுந்த அக்கறை கொண்ட வேளையிலும் கூட, நீதித்துறையை அணுகியதில்லை. ஆனால் அதனைத் தொடர்ந்து எழுந்த 37 ஆண்டுக்கால ஜனாதிபதியாட்சியில் நீதித்துறையின், குறிப்பாக உச்ச நீதிமன்றின் சுதந்திரமும், நேர்நெறியும் நம்பவே முடியாவாறு ஆழ்ந்து தாழ்ந்துவிட்டது. இக்காலப்பகுதியில் ஜனாதிபதியின் நிருவாகபீடத்துக்கு மிகவும் பணிவிணக்கம் கொண்ட பண்பாடு எமது நீதித்துறையில் தழைத்துச் செழித்துள்ளது. நிருவாகபீடம் வலியுறுத்தும் விடயங்கள் அனைத்துக்கும் நீதித்துறை இன்று அடிபணிந்து வருகிறது.
எதிரிடையான அரசியற் சூழ்நிலைக்குப் பழக்கப்பட்ட நீதித்துறை, அதற்குள் செளகரியம் துய்ப்பதாகத் தென்படும் நீதித்துறை, அதன் சுதந்திரத்தையும் நேர்நெறியையும் நிலைநிறுத்துவதற்கு வெறுமனே பங்களூர் நெறிகள்  மாத்திரம் கைகொடுக்கப் போவதில்லை. ஒருசில ஆண்டுகளுக்கு முன்னர் கெனியாவின் முன்னாள் தலைமை நீதியரசர் நீதித்துறை மாநாடு ஒன்றில் தன்னை "விலைபோகும் தலைசிறந்த நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றின் தலைவர்" என்று அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு கொஞ்சக் காலம் கழித்து அந்த நாட்டில் மக்களாட்சிக்கான அரசியல்யாப்பு  புகுத்தப்பட்டபொழுது, தலைமை நீதியரசரின் பதவிக்காலம் குறுக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் முதல் கீழ் நீதிமன்றம் வரை பணியாற்றும் நீதிபதிகள் அனைவரையும் உயரிய சர்வதேய சட்டவல்லுநர்களைக் கொண்ட ஆணையம் ஒன்று பரிசீலித்த பின்னரே நீதித்துறையில் அவர்களின் மீள்நியமனம் உறுதிப்படுத்தப்பட்டது. இலங்கையில் நீதித்துறை, குறிப்பாக உச்ச நீதித்துறை பிரதானமாக எந்த மக்களுக்குப் பணியாற்றவெனத் தோற்றுவிக்கப்பட்டதோ அந்த மக்கள் அதை மீண்டும் நம்ப வேண்டுமாயின், கெனியா கடைப்பிடித்த அதே படிமுறையை இலங்கையும் கடைப்பிடிக்கலாம்.
Dr. Nihal Jayawickrama, Presentation at Conference on Judicial Integrity and AccountabilityManilaDecember 2014தமிழ்: மணி வேலுப்பிள்ளை

No comments:

Post a Comment