ஶ்ரீ பொன்னம்பலம் அருணாசலம்
பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி
யாப்புத்திருத்தம்: 20
20வது திருத்தம் நிறைவேறும் என்பது பலருக்கும் தெரிந்தே இருந்தது. எனக்கும் தான்! நாடாளுமன்றத்தில் அந்த விவாதம் நடந்துகொண்டிருந்த பொழுது, இந்த நாட்டின் மாபெரும் நூலகத்தில், அதாவது பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில், வேறொரு சங்கதியை நான் வாசித்துக்கொண்டிருந்தேன். அதற்கும் 20வது திருத்தத்துக்கும் அப்படியொரு சம்பந்தமும் கிடையாது. ஶ்ரீமான் பொன்னம்பலம் அருணாசலம் அவர்களின் உரைகளும், எழுத்துக்களும் அடங்கிய திரட்டுநூல் ஒன்றை நான் வாசித்து, குறிப்பெடுத்துக் கொண்டிருந்தேன்.
அருணாசலமும் பல்கலைக்கழகமும்
கல்விப்போதனை பற்றிய அவரது எண்ணங்கள் என்னைப் பெரிதும் கவர்ந்துள்ளன. உண்மையில் அவரே எமது பல்கலைக்கழகத்தின் பிதாமகர் என்று நான் உளமார நம்புகிறேன். 1906ல், எமக்கெனச் சொந்தமாக ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்று அறைகூவி அவர் ஆற்றிய பேர்போன உரையில் அத்தகைய பல்கலைக்கழகம் எப்படி அமையவேண்டும் என்பதை அவர் முற்றுமுழுதாக விளக்கியுரைத்தார். பொன் அருணாசலம் போன்ற அறிவார்ந்தவர்களே பேராதனைப் பல்கலைக்கழகமும், நான் தற்பொழுது பணியாற்றும் சிங்கள பீடமும் அமைக்கப்படுவதற்கு காரணகர்த்தாக்கள். பல்கலைக்கழகம் குறித்து அவர் எழுதிய கட்டுரையில் மற்றும் பிற பீடங்களுடன் தமிழ், சிங்கள பீடங்ளும் அமைக்கப்பட வேண்டும் என்று அவர் வாதாடினார்.
யாப்புச் சீர்திருத்தம்
மேற்படி திரட்டுநூலை வாசிக்கையில், தற்பொழுது விவாதிக்கப்படும் “யாப்புச் சீர்திருத்தம்” பற்றி அவர் எழுதிய பல கட்டுரைகளை நான் கண்ணுற்றேன். தொடர்ந்து வாசித்த வேளையில், அரசியல்வாதிகளாக மாறுவதற்காக பல்க்லைக்கழகத்தை விட்டு வெளியேறிய பேராசிரியர்கள் பலரும் 20வது திருத்தத்தை ஆதரிக்கத் தயாராகி வந்தார்கள். இம்முன்னாள் பேராசிரியர்களை விட, ஒருசில புலமையாளர்களும் பல்லினப் பண்பட்டவர்களும் அதை ஆதரிக்கத் தயாராகி வந்தார்கள்.
ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுகால பிரதிநிதித்துவ குடியாட்சியின் பின்னர், ஒரு தனியாளின் கையில் மட்டுமீறிய அதிகாரத்தை ஒப்படைக்கும் திருத்தத்தை ஆதரிக்க அவர்கள் தயங்கவுமில்லை; அந்த ஆளுக்கு அரச நிருவாகியாகப் பதவி வகித்த பட்டறிவும் இல்லை!
முப்பது ஆண்டுகளாக இந்த நாட்டைச் சீரழித்த அம்சங்கள் அனைத்தும் இந்த யாப்புத் திருத்தத்தில் உண்டு. 1978ம் ஆண்டில் புகுத்தப்பட்ட யாப்பின்படியும், அதன் திருத்தங்களின்படியும் இந்த நாட்டில் எவ்வளவோ குருதி சிந்தப்பட்டது; உயிர்கள் கொல்லப்பட்டன; ஆட்கள் காணாமல் போக்கடிக்கப்பட்டார்கள்; பெருவாரியான ஊழல்கள் புரியப்பட்டன. நாம் செலுத்திய விலையுடனும், எமக்கு நேர்ந்த மனித இழப்புடனும் ஒப்பிடுமிடத்து, நாட்டின் பொருள்வளம் உருப்படியான முறையில் மேம்பட்டதில்லை.
யாப்புச் சீர்திருத்தம் பற்றி பொன் அருணாசலம் எழுதியதை வாசித்தபொழுது, எமது இன்றைய நாடாளுமன்றத்தில் அன்னாரின் உளப்பாங்கு காணப்படவில்லை என்பதை நான் உணர்ந்துகொண்டேன். சான்றிதழின்படியாவது பொன் அருணாசலம் அளவுக்கு கற்றவர்கள், 1918ல் அவர் வெளிப்படுத்திய யாப்புநெறியை இன்று கைக்கொண்டதில்லை. யாப்புச் சீர்திருத்தம் பற்றி இலங்கைத் தேசிய மாநாட்டில் அவர் தலைமையுரையாற்றி, ஒரு நூற்றாண்டு கழிந்த இக்காலகட்டத்தில், நாம் ஒழுக்கம் கெட்ட அரசியல்வாதிகள் அடங்கிய கும்பல் ஒன்றை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி, அன்னார் போன்றோரை இழிவுபடுத்தும் விதமாக யாப்புத் திருத்தத்துக்கு வாக்களிக்க வைத்துள்ளோம்!
முற்போக்குச் சீமான்
பொன் அருணாசலம் பிரித்தானியாவில் கல்வி கற்றவர்; ஶ்ரீமான் பட்டம் பெற்றவர்; பல வகைகளிலும் பிரித்தானியா சார்பானவர். எனினும் அவரை எமது தற்கால நாடாளுமன்ற நம்பிக்கைத் துரோகிகளுடன் ஒப்பிடுமிடத்து, அவரது பழமைபேண் தீவிரவாதம் அல்லது குடியரசுவாதம் புரட்சிகரமானதாகவே தென்படுகிறது. அவர் ஒப்பற்ற புலமையும், நயநாகரிகப் பாங்கும், எழில்மிகு மொழியாட்சியும் வாய்ந்தவர். இன்று நூறாண்டுகள் கழிந்த பின்னரும் கூட, அவரது அணிமொழியினுள் பொதிந்துள்ள உண்மையை நாம் கருத்தூன்றிக் கவனிக்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.
அதிகாரப் பரவலாக்கம்
ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பற்றி அவர் உரையாற்றவில்லை; யாப்புநெறி, ஒழுக்கநெறி பற்றியே அவர் உரையாற்றினார். அது இன்றும் செல்லுபடியாகும் உரை. அவரது வாதம் முழுவதும் அதிகாரத்தைப் பரவலாக்குவதைப் பற்றியே அமைந்துள்ளது. ரொபேட் நொக்சின் (Robert Knox: 1660 முதல் 1680 வரை கண்டியில் சிறைப்பட்டிருந்த பிரித்தானிய மாலுமியின்) பேர்போன கூற்றை அவர் மேற்கோள் காட்டியுள்ளார்: “உழவனை அவனது கலப்பையிலிருந்து விடுவித்து, குளிப்பாட்டுங்கள்; அவன் ஓர் அரசை ஆளும் தகைமை அடைவான்.” அதாவது சிங்கள மக்களுக்கு தமது நாட்டை ஆளும் தகைமை உண்டு; அதற்கான வாய்ப்பு அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அவர் வாதாடினார்.
தமிழரும், சிங்களவரும் நாட்டை ஆளும் அலுவல்களில் பங்குபற்றும் அளவுக்கு கல்வி கற்கவில்லை என்றால், அவர்கள் கல்வி கற்காததற்கு நாட்டைக் கட்டியாள்வோரே பொறுப்பேற்க வேண்டும் என்று பொன் அருணாசலம் முழங்கினார். நாட்டைக் கட்டியாள்வோரே பாரம்பரிய பெளத்த கல்விப் போதனையை ஒழித்தவர்கள் என்றும், ஆகவே பிரித்தானியர் இங்கு பிரதிநிதித்துவ குடியாட்சியைப் புகுத்தும்பொழுது கல்விகற்ற மக்களை உருவாக்குவதற்கு அவர்களே நிதியொதுக்க வேண்டும் என்றும் அவர் வாதாடினார். மக்கள் முன்னின்று செயற்படாவிட்டால், உண்மையான குடியாட்சி நிலவமுடியாது என்று தெரிவித்தார்.
“முடியரசினால் கட்டியாளப்படும் தீமைக்கு உட்பட்ட இத்தீவில் விறல்கொண்ட மக்கள் பிறப்பிக்கப்படுவதில்லை; அமைந்தொழுகும் எழுதுநர்களும், அதிகார யந்திரத்தின் சில்லுகள் எனத்தக்கவர்களுமே பிறப்பிக்கப்படுகிறார்கள். ஆளப்படுவோரின் குணவியல்பை மேம்படுத்தும் விதமாகவே பிரித்தானியரின் ஆட்சி இயங்க வேண்டும் என்பதுதான் பிரித்தானிய அரசறிஞர்களின் தாரக மந்திரம். கட்டியாளும் நிருவாகம் அத்தாரக மந்திரத்தை எவ்வளவு தூரம் கைக்கொள்ளுகிறது?” என்று வினவுகிறார் பொன் அருணாசலம்!
கட்டியாள்வோரிடம் குடியாட்சி குறித்து மிக முக்கியமான கேள்வியை அணிமொழியில் எழுப்புகிறார் பொன் அருணாசலம்: “ஆளப்படுவோருக்கு அதிகாரமளித்து ஊக்குவிக்காமல் உண்மையான குடியாட்சியை நிலைநாட்டுவது எங்ஙனம்?” இன்றைய எமது நாடாளுமன்றத்தில் இந்த வினாவை எழுப்பும் திராணி எத்தனை பேருக்கு உண்டு? மக்களுக்கு அதிகாரம் அளிப்பதை விடுத்து, தனியாளுக்கு அதிகாரமளிக்கும் யாப்புத் திருத்தத்துக்கு ஆதரவாக இவர்கள் வாக்களித்துள்ளார்கள். பொன் அருணாசலம் மேற்கண்டவாறு வினா எழுப்பியகாலத்திலிருந்து இற்றைவரை நாம் கற்றறிந்ததும், பட்டறிந்ததும் அவ்வளவுதான்!
பாரம்பரிய அதிகாரப் பரவலாக்கம்
பழம்பெரும் அதிகாரப் பரவலாக்க கட்டமைப்புகளை பொன் அருணாசலம் தமது உரையில் விபரித்துள்ளார். அதில் கிராமச் சங்கமும், மாவட்ட மன்றமும் அடங்கும். “அமைச்சரவையின் உச்ச மன்றம் அவற்றுக்கு மேற்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட உச்ச நீதியரசராக மன்னர் விளங்கினார். பழம்பெரும் காலம் முதல், 100 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையை ஆண்ட கடைசி மன்னன் வரை மன்னரைத் தேர்ந்தெடுக்கும் முறை நிலவி வந்தது” என்கிறார் பொன் அருணாசலம்.
மேற்படி அதிகாரப் பரவலாக்கம் சுமுகமாக நடைபெற்றதற்கு கல்வெட்டுச் சான்று உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். தாயக வரலாற்றையும், நீண்ட காலமாக மக்களின் பங்களிப்புடன் இங்கு நிலவிய குடியாட்சியையும், அதிகாரப் பரவலாக்கத்தையும் நயந்துவக்கும் அதேவேளை, வசதிபடைத்த ஒருசிலர் நாட்டை ஆள்வதற்கு எதிரான தமது நிலைப்பாட்டையும் அவர் முன்வைத்தார்.
கட்டியாள்கை
“இலங்கையில் ஆட்சிக் கொள்கையையும், நடவடிக்கைகளையும் தீர்மானிப்பதில் பிரித்தானிய வணிகரும், பிரித்தானிய பெருந்தோட்டத் துரைமாரும் மிகுந்த செல்வாக்கு செலுத்துகிறார்கள். ஒரு கழகத்தில் அல்லது விளையாட்டுத் திடலில் உண்டுகுடிக்கும் தருணத்தில் ஏதாவது பேசிப்பறைந்தவுடன், அது ஒரு மாபெரும் வாதப்பிரதிவாதமாய் அல்லது மாதக் கணக்காக நீடிக்கும் பதகளிப்பாய் மாறிவிடுகிறது! சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்கள், அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள், சட்டமன்றத்தின் அதிகாரபூர்வமான பெரும்பான்மையோரைச் சேர்ந்தவர்கள் அனைவரும் பிரித்தானிய வணிகரதும், பிரித்தானிய பெருந்தோட்டத் துரைமாரதும் உற்றார் உறவினர் அல்லவா?”
பிரித்தானிய வணிகரும், பெருந்தோட்டத் துரைமாரும் 70 ஆண்டுகளுக்கு முன்னர் போய்விட்டார்கள். தற்பொழுது ஒரு தனியாளின் உற்றார் உறவினர் ஆட்சி புரிகிறார்கள். வெள்ளையர் கட்டியாண்ட காலத்துக்குப் பிறகும் ஒரு தனியாளின் உற்றார் உறவினர் ஆட்சி புரியும் வழமை இங்கு நிலையூன்றியுள்ளது. அண்மையில் ஒரு குடும்பக் குழுமத்தின் ஆட்சி ஓங்கியுள்ளது.
ஒரு யாப்புச் சீர்திருத்தம் ஒரு தனியாளின் அல்லது ஒரு குடும்பத்தின் ஆட்சியை மேலும் வலுப்படுத்த வகைசெய்யுமாயின், இக்கால அருணாசலங்கள் தம்முன் வைக்கப்படும் சட்டவரைவுகளைச் சட்டமாக்குவதற்கு முன்னர் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாட்டின் அடிப்படைச் சட்டமாகிய யாப்புக்கு வாக்களிக்கும்பொழுது அருணாசலம் போன்றோர் ஈயவல்ல உயிர்மூச்சை நாம் இயன்றவரை உள்வாங்கி, அறநெறிப்படி ஒழுக வேண்டும்.
அடிப்படை ஒழுக்கம் படைத்தவர்களுக்கே அத்தகைய உயிர்மூச்சு கைகூடும். “பல நூற்றாண்டுகால பெளத்த சிந்தனையும், பல தசாப்தகால தாராண்மைக் கல்வியும், பல தசாப்தகால இடதுசாரி அரசியற் பட்டறிவும் உங்களுக்கு அத்தகைய அறநெறியை அளிக்க முடியவில்லை என்றால், உங்கள் நாட்டின் கதி அதோ கதிதான்!” என்று 20வது யாப்புத் திருத்தத்துக்கு 100 ஆண்டுகளுக்கு முன்னர் ஆற்றிய வியத்தகு உரையில் ஶ்ரீமான் பொன் அருணாசலம் கூறுவதாகவே தென்படுகிறது.
________________________________________________________________________________________
Liyanage Amarakeerthi, Twentieth Amendment, Constitutional Morality & Arunachalam, Colombo Telegraph, 2020-10-24, Translated by Mani Velupillai, 2020-10-25.
No comments:
Post a Comment