வடக்கு-கிழக்கு தமிழர்
தேசிய மக்கள் சக்தி அரசுக்கு வழங்கிய
29% ஆணை என்ன?
வடக்கு-கிழக்கு மக்களுள் 29 விழுக்காட்டினர் தேசிய மக்கள் சக்திக்கு அளித்த வாக்குகளைக் கொண்டு, போரை அடுத்து வடக்கு-கிழக்கு மக்கள் நாடிய விடைகளை புறக்கணிக்க முடியாது.
குசல் பெரேரா
தேசிய மக்கள் சக்தி பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிக்குள், வடக்கு-கிழக்கில் அது ஈட்டிய பேராதரவு, ஒரு தெற்குச் சிங்கள அரசியல் தலைமையின் மிகப்பெரிய சாதனை எனப்படுகிறது.
வடக்கு-கிழக்கு மக்கள் ஒரு சிங்கள அரசியல் தலைமைக்கு பெருவாரியாக வாக்களித்திருப்பது அப்படி ஒன்றும் முதல் தடவை அல்ல இது. 2009 வைகாசி மாதம் போர் முடிவடைகையில் படைநடத்திய தளகர்த்தர் சரத் பொன்சேகாவுக்கு, 2010 ஜனாதிபதி தேர்தலில் தென் சிங்கள மாவட்டங்கள் அனைத்தையும் கோட்டைவிட்ட சரத் பொன்சேகாவுக்கு, வடக்கு-கிழக்கு மக்களுள் 60 விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் வாக்களித்தார்கள். வடக்கு-கிழக்கின் 5 மாவட்டங்களையும் அவர் வெற்றிகொண்டார். (இப்பொழுது நடந்துமுடிந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளது!) தமிழ் வாக்காளர்கள் சரத் பொன்சேகாவை தமது நம்பிக்கைக்குரிய வேட்பாளராக ஏற்றுக்கொண்டார்கள் என்பதல்ல அதன் கருத்து. இராஜபக்சாவை பழிவாங்கும் வாக்களிப்பே அது.
இந்த 2024ம் ஆண்டுத் தேர்தலிலும் பழிவாங்கும் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது. தமது நேரிய, உயரிய வாழ்வினை முன்னெடுக்கும் வாய்ப்பு அறவே மறுக்கப்பட்ட தமிழர் சமூகம், தமது சொந்த அரசியல் தலைவர்களால் புறக்கணிக்கப்பட்ட தமிழர் சமூகம், தமது வாக்கினைப் பெறுவதற்கான அருகதை தமது தலைவர்களுக்கு இல்லை என்பதை, அதே வாக்கினைப் பயன்படுத்தி, அவர்களுக்கு உணர்த்தியுள்ளதை மறுப்பதற்கில்லை.
குறிப்பாக இலங்கை தமிழரசுக் கட்சி 2015 தை முதல், 2019 தை வரை கொழும்பில் ஆழ வேரூன்றி, விக்கிரம்சிங்கா அரசை ஆதரித்துவந்த நிலையில், வடக்கு-கிழக்கு மக்கள் தமது பாரிய பிரச்சனைகளை முன்வைத்து தாமே போராட நேர்ந்தது. நிலையூன்றிய தமிழ் அரசியல் தலைமை உடனிருக்கா நிலையில் கூட, தமிழ் அன்னையரும் மனைவியரும், வலிந்து காணாமல் போக்கடிக்கப்பட்டோரின் விபரங்கோரி 2000 நாட்களாகப் பழிகிடக்கவே, தமிழர் சமூகம் வெகுண்டெழத் துவங்கியது. வடக்கு-கிழக்கில் பாதுகாப்பு படையினரால் அபகரிக்கப்பட்ட காணிகளை போரினால் தாக்குண்ட மக்கள் மீட்கப் போராடி வந்துள்ளார்கள். அங்கே சிங்கள மக்களின் குடியேற்றம் இடம்பெற்று வந்துள்ளது. ஆட்களையும் சமூகத்தையும் ஆட்சியாளர் வேவுபார்த்து வந்துள்ளார்கள். வடக்கு-கிழக்கு முற்றுமுழுதான படைமயமாக்கத்துக்கு உட்பட்டு வந்துள்ளது. அது குடியினர் நிருவாகமாக உருமாற்றப்பட வேண்டும் என்றும், அதன் மூலம் முதன்மையான பிரச்சனைகளும், உள்ளூர் பிரசனைகளும் தீர்க்கப்பட வேண்டும் என்றும் கற்றுக்கொண்ட பாடங்கள்-மீளிணக்க ஆணையம் விதந்துரைத்தும் கூட, அப்படி எதுவும் நடக்கவில்ல.
ஏறத்தாழ 3 ஆண்டுகளுக்கு முன்னர், 2021 திசம்பர் 7ம் திகதி, டெயிலி மிரர் நாளேட்டில், “தமிழ் தேசிய கூட்டமைப்பு அதன் பாழ்வெளியை விட்டு வெளியேறி மக்களை அணுக வேண்டும்” என்ற தலைப்பில் நான் ஒரு கட்டுரை எழுதினேன். “தமிழரசுக் கட்சி கொழும்பை மையப்படுத்தி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் அதிக பற்றும் நம்பிக்கையும் வைத்து அரசியல் புரிகையில், தெளிவான கண்ணோட்டமின்றி, பரந்துபட்ட மக்களின் பங்களிப்புக்கான நடவடிக்கைத் திட்டம் ஏதுமின்றி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிய குழுமங்கள் வடக்கு-கிழக்கில் இடம்பிடித்துக் கொண்டன.
தமிழரின் அரசியலை அவை தகர்த்தமை 2020 ஆவணி தேர்தலில் தெட்டத் தெளிவாகியது. 2015ல் 16ஆக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் இருக்கைகள் 10ஆகக் குறைந்தன. அதன் 5,16,000 வாக்குகள் 3,27,000 ஆகக் குறைந்தன. அது இழந்த 6 இருக்கைகளை நான்கு தமிழ்க் குழுமங்கள் தம்மிடையே பகிர்ந்துகொண்டன. தமிழரசுக் கட்சி அதன் அரசியல் தோல்வியிலிருந்து ஒன்றையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது வருந்தத்தக்கது. 5 ஆண்டுகள் கழிந்த பிறகும் ஒரு யாப்பு வரைவின் பிரதி கூட அதன் கைவசம் இருக்கவில்லை. அதன் அரசியல் பிரசன்னம் பெரிதும் மங்கிவிட்டது.
தமிழரசுக் கட்சியின் தலைமைக்கான உள்மோதல்
2020 ஆவணி தேர்தலில் அடிவாங்கிய பிறகும் கூட தமிழரசுக் கட்சி “மக்களை” அணுகவில்லை. தமிழரசுக் கட்சியின் தலைமைக்கான உள்மோதலில் அவர்கள் அதிக நாட்டம் செலுத்தினார்கள். 2024 தேர்தலில் தமிழரசுக் கட்சிக்குள் எஞ்சியது எவ்வளவு? அவர்களால் 2,57,813 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது. 2 இருக்கைகளை இழந்து 8 இருக்கைகளை மட்டுமே பற்றிக்கொள்ள முடிந்தது. அதாவது 2015ல் ஈட்டிய வாக்குகளுள் அரைவாசியையும், இருக்கைகளுள் அரைவாசியையும் அவர்கள் இழந்துவிட்டார்கள். தமிழரசுக் கட்சியின் மீது ஏற்பட்ட ஏமாற்றம், விரக்தி, சீற்றம் என்பவற்றின் பெறுபேறாகவே இந்தமுறை யாழ்ப்பணத்தில் 11 சுயேச்சைக் குழுமங்களும் 3 புதிய தமிழ் அரசியல் கட்சிகளும் போட்டியிட்டன. ஆளுங்கட்சி ஆகப்போகிறது என எதிர்பார்க்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி உள்ளடங்கிய தேசிய மக்கள் சக்திக்கு யாழ் மாவட்டத்தில் 24.8 விழுக்காடு வாக்குகளும், வன்னியில் 20.4 விழுக்காடு வாக்குகளும் கிடைத்ததற்கும் அதுவே காரணம்.
அப்படி என்றால், மட்டக்களப்பு மாவட்டத் தமிழர்கள் தமிழரசுக் கட்சியுடன் ஒன்றிய காரணம் என்ன? மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதியாக விளங்கும் இராசமாணிக்கம் சாணக்கியன் அங்கு எதிர்ப்புகளிலும் கிளர்ச்சிகளிலும் ஈடுபடும் மக்களுடன் பெரிதும் இணைந்து, காவல்துறையின் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களுக்காக வாதாடி வந்துள்ளபடியால், அங்கு தமிழரசுக் கட்சி தோல்வி அடையவில்லை.
மேற்படி கட்டுரையில் நான் இப்படி எழுதியிருந்தேன்: “2021 மாசி துவக்கத்தில் பொத்துவிலிலிருந்து பொலிகண்டிவரை, கிழக்கை ஊடறுத்து வடக்குவரை 5 நாட்களும் அணிவகுத்துச் சென்ற இளம் அரசியல்வாதி சாணக்கியனுக்கு கூட்டு முயற்சி மூலம் மக்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் புரிந்திருக்கும்.” மட்டக்களப்புவாழ் தமிழ், முஸ்லீம் மக்களுக்கு தமிழரசுக் கட்சி மீது மனத்தாங்கல் இருத்தல் அரிது. வடக்கு-கிழக்கின் ஏனைய மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி ஈட்டிய வாக்குகள், தமிழ் தலைவர்களை பழிவாங்கிய வாக்குகளே.
வடக்கு-கிழக்கில் தேசிய மக்கள் சக்தி ஈட்டிய 29 விழுக்காடு வாக்குகள் மூலம் அதற்கு 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்துள்ளார்கள். அவர்களுள் நால்வர் அம்பாறையிலும், இருவர் திருகோணமலையிலும் வென்ற சிங்களவர்கள். ஒவ்வொரு பிரசையும் “ஓர் இலங்கையர்” என்பதாலும், ஒவ்வொருவரும் சரிநிகராக நடத்தப்படுவார்கள் என்பதாலும் இன-மத பிரிவினைகள் இனிமேல் கிடையாது என்றெல்லாம் தேசிய மக்கள் சக்தியும், சிங்கள பெளத்தர்களும் தொடர்ந்து வலியுறுத்தினாலும் கூட, இந்த பண்பாட்டு வேறுபாட்டை வெறுமனே மறந்துவிட முடியாது.
சிங்கள, தமிழ், முஸ்லீம் பண்பாட்டு அடையாளங்களை விடுத்து, “இலங்கைப் பண்பாடு” என்று இனங்காணக்கூடியதாக எதுவுமே இல்லை. ஒன்றில் இலங்கைத் தமிழர் அல்லது தென்னிந்தியத் தமிழர் என்ற வேறுபடுதான் உண்டு. ஒன்றில் இலங்கை முஸ்லீங்கள் அல்லது பாகிஸ்தானிய அல்லது வங்காளதேச முஸ்லீங்கள் என்ற வேறுபாடுதான் உண்டு.
தமிழரையும், முஸ்லீங்களையும் “இலங்கையர்” என்று விளிப்பதன் மூலம் அவர்களது தமிழ், முஸ்லீம் பண்பாட்டு அடையாளங்களை ஒழிக்க முடியாது. “இலங்கையர்” என்ற அடையாளத்தை வலியுறுத்தி, பண்பாட்டு அடையாளங்களை செயற்கையான முறையில் ஒழிக்கும்பொழுது, பெரும்பானமையோரின் அடையாளமாகிய சிங்கள-பெளத்த அடையாளமே திணிக்கப்படும்.
வெளிப்படையாகப் புலப்படும் ஆதிக்கம்
அன்றாட வாழ்வில் “இன-மத சமத்துவம்” இல்லை என்றால், “ஆதிக்கம்” மிகவும் வெளிப்படையகப் புலப்பட்டே தீரும். குடிசார் விடயங்களில் சிங்கள-பெளத்தர்களின் பிரதிநிதியாக “அரசு” விளங்கும் விதத்தில் சிங்கள-பெளத்த ஆதிக்கம் மிகவும் துலக்கமாகத் தெரிகிறது. குடிசார்-அரசியல் உரிமைகள் தொடர்பான அனைத்துநாட்டு உடனபாட்டுச் சட்டம் எதற்காக இயற்றப்பட்டதோ அதற்கு நேரெதிரான முறையிலேயே அது பயன்படுத்தப்பட்டது.
அசலகா என்ற ஊரில் ஓர் அப்பாவி முஸ்லீம் பெண் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு, நீதிவானால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். அவர் அணிந்திருந்த ஆடையில் பதிக்கப்பட்ட ஒரு பூவேலைப்பாட்டை பெளத்த “சக்கரம்” என்று இனங்காட்டினார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உடனடுத்து சிங்கள-பெளத்த ஆசிரியர்களும், அதிபர்களும், மாகாண நிருவாகிகளும் தம்முடன் நெடுங்காலமாக கூடிப் பணியாற்றும் முஸ்லீங்களை நடத்திய விதத்தில் மேற்படி ஆதிக்கம் புலப்படுகிறது. மருத்துவர் ஷவி ஒரு முஸ்லீம் என்பதற்காக அவர்மீது தொடுக்கப்பட்ட வழக்கு முற்றிலும் இட்டுக்கட்டப்பட்டது என்பது பிற்பாடு மெய்ப்பிக்கப்பட்டது.
வடக்கு-கிழக்கு மக்களுள் 29 விழுக்காட்டினர் தேசிய மக்கள் சக்திக்கு அளித்த வாக்குகளைக் கொண்டு, போரை அடுத்து வடக்கு-கிழக்கு மக்கள் நாடிய விடைகளை புறக்கணிக்க முடியாது. ஜனாதிபதி அனுர குமர திசநாயக்கா புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வை துவக்கிவைத்து ஆற்றிய உரையில் பின்வருமாறு தெரிவித்தார்:
“எமது நாடு இன முரண்பாடுகளினால் பேரிடிகளுக்கு உள்ளாகியது. இந்த மண் குருதியில் மூழ்கியது. எண்ணிறந்த மக்களின் கண்ணீரை ஏந்தி ஆறுகள் பாய்ந்தன. சமூகங்களுக்கு இடையே அவநம்பிக்கையும், ஐயுறவும், சீற்றமும் பீதியைக் கிளப்பும் அளவுக்கு மேலோங்கின. அத்தகைய பேரிடிகளுக்கு உள்ளாகாத வாழ்வினை எமது வருங்காலத் தலைமுறைகளுக்கு ஈயும் தலையாய பொறுப்பு, இந்த நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் என்ற வகையில் எமக்கு உண்டு. அத்தகைய பேரிடிகள் மீண்டும் இடம்பெறாத ஓர் அரசினை அவர்களுக்கு ஈய நாம் கடமைப்பட்டுள்ளோம்.”
அப்படி எல்லாம் அவர் சூளுரைத்தாலும் கூட, வடக்கு-கிழக்கிலிருந்து படைகளை விலக்குவதாகவும், பக்கஞ்சாராத குடிசார் நிருவாகத்தை அங்கு ஏற்படுத்துவதாகவும் அவரோ அவரது கட்சியின் விஞ்ஞாபனமோ உறுதியளிக்கவில்லை.
பலவந்தமாக காணாமல் போக்கடிக்கப்பட்டோரின் குடும்பங்கள் ஆண்டுக் கணக்காக கோரிவந்துள்ளபடி, அவர்களைப் பற்றிய முழு விபரங்களையும் வழங்குவதாக அவர் வாக்குறுதி அளிக்கவில்லை. தமிழரின் காணிகளில் சிங்களவர் குடியேறியதைப் பற்றி அவரோ அவரது கட்சியின் விஞ்ஞாபனமோ குறிப்பிடவில்லை.
“எமது நாட்டைப் பிளவுபடுத்தும் இனவாதக் கொள்கைகள் மீளவும் தலைதூக்க நாம் அனுமதிக்க மாட்டோம் என்று முழுப் பொறுப்புணர்வோடும் நான் உறுதிகூறுகிறேன். அதேபோல தீவிர மதவாதம் வேரூன்ற நாம் அனுமதிக்க மாட்டோம் ” என்று தமது கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி திசநாயக்கா உறுதியளித்தார். எனினும் அரச தயவுடன் தொல்லியல் தலங்களுக்கு பெளத்த முத்திரை குத்துவது பற்றி அவர் இம்மியும் வாய் திறக்கவில்லை.
1987ம் ஆண்டின் இந்திய-இலங்கை உடன்பாட்டை இந்தியா மறந்துவிடுமா?
இவை எல்லாம் உளமார அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் என்று வைத்துக்கொண்டாலும் கூட, மேற்படி சூளுரைத்தபடி செயற்பட மக்கள் தேசிய சக்தி அரசை இந்தியாவினால் அனுமதிக்க முடியுமா? தமிழ்நாட்டின் முழுதளாவிய தமிழ் அரசியலைப் புறக்கணித்து இந்தியாவினால் அதை அனுமதிக்க முடியுமா? பத்துக்கோடி பெறும் கேள்வி அது! 1987ம் ஆண்டின் இந்திய-இலங்கை உடன்பாட்டை இந்தியா மறந்துவிடுமா? ஜனாதிபதி திசநாயக்கா 13அ திருத்தம் பற்றியோ, அது தொடர்பான தமது நிலைப்பாடு பற்றியோ ஒன்றும் பறையாமல் ஆட்சியைத் தொடர இந்தியா அனுமதிக்குமா? தேசிய மக்கள் சக்தியினர் தாம் விரும்பியபடி “அதிகாரப் பரவலாக்கத்தை” முடிவுசெய்ய தமிழரசுக் கட்சியும் மற்றைய தமிழ் அரசியல் கட்சிகளும் விட்டுவிடுமா? தேசிய மக்கள் சக்தியின் வடக்கு-கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண மன்றத் தேர்தல்களில் அமைதி காப்பார்களா? அவர்கள் தேசிய மக்கள் சக்தியுடன் கூடிநின்று, “பிளவுபடும் அரசியல் வேண்டாம்; இலங்கையர் என்ற அடையாளம் ஒன்றே போதும்!” என்று முழங்குவார்களா?
வடக்கு-கிழக்கில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை தமது நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்த வாக்காளர்கள் அந்தக் கட்சியிடம் நாடுவது என்ன என்பது மிகவும் முக்கியமான கேள்வி. ஆக்கிரமிக்கப்பட்ட தமது காணிகளிலிருந்து ஆக்கிரமித்தோரை அவர்கள் வெளியேற்றக் கோருகிறார்களா? பலவந்தமாக காணாமல் போக்கடிக்கப்பட்டோரின் விபரங்களை நாடுகிறார்களா? மேலும் தாமதிக்காமல் மாகாண மன்றத் தேர்தல்களை நடத்தக் கோருகிறார்களா? அல்லது தமது தெற்குவாழ் சிங்களத் தோழர்கள் போல் வேலைவாய்ப்புகளையும், பதவி உயர்வுகளையும், கட்டிட ஒப்பந்தங்களையும், மணல் அகழ அனுமதிச் சீட்டுகளையும், கூட்டுத்தாபன சபைகளுக்கு நியமனங்களையும், உசாவலக உழைப்புகளையும், தூதரகப் பதவிகளையும் நாடுகிறார்களா? அவற்றுடன் அந்த 29 விழுக்காட்டினர் நிறைவுகொள்ளக் கூடும்.
ஆனால் வடக்கு-கிழக்கில் தேசிய மக்கள் சக்திக்கு வாகளிக்காத 71 விழுக்காடு பெரும்பான்மையோர் தமது நெடுங்கால மனக்குறைகளுக்கு ஓர் அரசியல் தீர்வை நாடுவதாகத் தெரிகிறது. தேர்தலை அடுத்து நிலவும் அமைதியைப் பயன்படுத்தி, என்றுமிலாவாறு “மாவீரர் நாள்” சடங்குகளை வெளியரங்கமாக நடத்தி, தமது அரசியற் கோரிக்கைகளை அவர்கள் ஓங்கிப் பறைசாற்றுவதாகத் தெரிகிறது. வடக்கு-கிழக்குவாழ் மக்கள் தமது வாக்குகளை அளித்துவிட்டு வீடுதிரும்புவதாகத் தெரியவில்லை. தமிழ்மக்களின் அத்தகைய அரசியலுக்கு ஜனாதிபதி அனுர குமர திசநாயக்காவும், அவரது தேசிய மக்கள் சக்தியினரும் இடங்கொடுக்கும் விதமே நாம் பொருட்படுத்த வேண்டிய சங்கதி.
___________________________________________________________________________
Kusal Perera, What was 29% of N-E Tamils’ mandate for NPP Government? Financial Times, 2024-11-30.
https://www.ft.lk/columns/What-was-29-of-N-E-Tamils-mandate-for-NPP-Government/4-769911
No comments:
Post a Comment