ஒரு பயணத்தின் முடிவும் புதிய பயணத்தின் துவக்கமும்

 

விக்டர் ஐவன்

பாரபட்சமின்றி அனைவரின் உரிமைகளையும் நிலைநிறுத்தி, அனைவரின் மதிப்பையும் நம்பிக்கையையும் ஈட்டி, சட்ட ஆட்சியை உறுதிப்படுத்தி, ஊழல் புரியாமல், சோடை போகாமல் ஆளும் ஒரு தற்கால அரசை உருவாக்குவது எங்ஙனம் என்னும் வினாவை நாம் கருத்தூன்றி ஆராய வேண்டும்.   

இலங்கையின் பழைய ஊழியும், பழைய முறைமையும் வரலாற்று முடிவுக்கு வந்துவிட்டன என்று கூறலாம். எனினும் எமது சமூகம் மட்டுமல்ல, அதனை வழிநடத்தி, நெறிப்படுத்த வேண்டியோர் என்று கொள்ளப்படும் தலைவர்களும்  கூட இதை இன்னும் புரிந்துகொள்ளவில்லை. 

நாட்டின் பொருளாதாரம் முழுவதும் முற்றிலும் நிலைகுலையும் நிலையில் உள்ளது. அதை சீரமைக்க வேண்டியுள்ளது. அவ்வாறே அரசும், அரசியல் முறைமையும் முற்றிலும் நிலைகுலையும் நிலையில் உள்ளன. சமூக முறைமையின் கதையும் அதுவே.

உயிர்த்த ஞாயிறு பேரிடி இந்த நாட்டை மும்முரமான தீவிரவாதத்துள் தள்ளிவிட்டுள்ளது. இதுவே இலங்கையின் அரசியற் பயணத்தை ஈற்றில் ஒரு வரலாற்று முடிவுக்கு இட்டுச்செல்லலக் கூடியது.  இத்தாக்குதல்கள் சிங்கள, தமிழ்க் கத்தோலிக்கர்களையும், கிறீஸ்தவர்களையும் இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டவை. ஆனாலும் அவற்றால் பெரும் பீதியும் கலக்கமும் அடைந்தோர் சிங்கள பெளத்தர்களே. 

தம்மை இலக்குவைத்து, தம்மைக் கருவறுக்க முஸ்லீங்கள் ஒரு திட்டத்தை முன்னெடுத்து வருவதாகச் சொல்லப்படும் கதைகளை சிங்கள பெளத்தர்கள் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தார்கள். தமக்குக் கலக்கமளித்த அக்கதைகளால் அவர்கள் முஸ்லீம் சமூகத்தின் மீது மிகுந்த அருவருப்பும் வெறுப்பும் கொண்டார்கள். ஏற்கெனவே அவர்களின் உள்ளத்தில் ஆழமாய் வேரூன்றிய முஸ்லீம்-விரோத உணர்வுகள் எல்லாம் திரண்டு ஓர் உருப்படியாக மேலோங்குவதற்கு உயிர்த்த ஞாயிறு பயங்கரம் துணைநின்றது. 

முஸ்லீம்-விரோத உணர்வுகள்

சிங்கள பெளத்த பெரும்பான்மை மக்களிடையே முஸ்லீங்களைக் குறித்து ஊட்டப்பட்ட பீதியே அவர்களை ஒரு  சிங்கள பெளத்த அரசாங்கத்தை அமைக்கும் எண்ணத்தை ஏற்றுக்கொள்ள வைத்தது.  ஆட்சி அலுவல்களில் சிறுபான்மையோர் தலையிட இடங்கொடாத அரசாங்கத்தை அமைக்கும் எண்ணத்தைக் ஏற்றுக்கொள்ள வைத்தது. 

தமிழ் மக்களுடன் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் நீடிக்கும்வரை முஸ்லீங்களை தமது சிறந்த நண்பர்களாக சிங்கள தீவிரவாதிகள் கருதியிருந்தார்கள். பிரபாகரனது ஈழப்போரைத் தோற்கடிப்பதில் வட-கீழ் முஸ்லீங்கள் கணிசமான பங்கு வகித்தது உண்மையே. ஈழ எதிர்ப்புப் போராட்டத்தில் தமது உயிர்களை ஈந்த முக்கிய போராட்ட வீரர்களின் பட்டியலில் முஸ்லீங்கள் பலரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டன.  

பிரபாகரனது ஈழப்போரின் தோல்விக்குப் பிறகு, சிங்கள பெளத்த தீவிரவாதிகளுக்கு, அவர்களது குறிக்கோளுக்கு நியாயம் கற்பிக்க, புதிய எதிரிகள் தேவைப்பட்டார்கள். அவர்கள் கண்டறிந்த புதிய எதிரிகள் முஸ்லீங்களே. 

திரைமறைவில் இயங்கிய ஒரு தரப்பே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நெறிப்படுத்தியதா என்பதை எண்ணிப் பார்க்கும்பொழுது, அதாவது சகரானும், அவரது தோழர்கள் சிலரும் தேசிய உளவுச் சேவையகத்தில் சேர்ந்திருந்ததாக அடிபடும் கதையை எண்ணிப் பார்க்கும்பொழுது பாரதூரமான பிரச்சனைகள் எழுகின்றன. இதுவரை இந்த விடயம் கருத்தூன்றி ஆராயப்பட்டதாகத் தெரியவில்லை.

தேசிய உளவுச் சேவையகம் எதற்காக சகரான் போன்ற ஒரு தீவிரவாதியை சேர்த்து வைத்திருந்தது என்ற வினா இங்கு எழுகின்றது. அவர் தேசிய உளவுச் சேவையகத்தில் சேர்ந்திருந்த காலத்தில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருந்தாரா? அப்படியானால், அதைப்பற்றி தேசிய உளவுச் சேவையகம் அறிய வாய்ப்பில்லாது போனமை எங்ஙனம்? 

சகரானல் அரங்கேற்றப்பட இருந்ததாகக் கொள்ளப்படும் தாக்குதல் நிகழப்போவதாக முன்கூட்டியே இந்திய உளவுச் சேவையகம் எச்சரித்தது தேசிய உளவுச் சேவையகத்தையே. அப்படி என்றால், தேசிய உளவுச் சேவையகத்தில் சேர்ந்திருந்த அதே சகரானைக் கைதுசெய்ய அதே சேவையகம் ஏன் உடன் நடவடிக்கை எடுக்கவில்லை? 

ஆளும் கட்சிகள் தமது குறுகிய அரசியல் இலக்குகளை எய்துவதற்கு தேசிய உளவுச் சேவையகத்தை அல்லது அதன் அதிகாரிகளைப் பயன்படுத்த முடியுமா? மகிந்த ராஜபக்சாவின் ஆட்சியில் புரியப்பட்ட கொடிய குற்றங்கள் சிலவற்றில் முதுநிலை அதிகாரிகள் சிலர் சம்பந்தப்பட்டிருந்ததை, அவற்றைக் குறித்து குற்றவியல் புலனாய்வுத் திணைக்களமும் நீதித்துறையும்  மேற்கொண்ட புலனாய்வுகள் மெய்ப்பித்துள்ளன. அதற்கு மூன்று எடுத்துக்காட்டுகளை இங்கு முன்வைக்கலாம்: (1) லசந்த விக்கிரமசிங்கா படுகொலை, (2) பிரகீத் எகனலிகொடை கடத்தல், காணாமல் போக்கடிப்பு, (3) ரவிராஜ் படுகொலை. சில ஆளும் கட்சித் தலைவர்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக தேசிய உளவுச் சேவையகத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள் புரிந்த படுகொலைகள் என்று இவற்றைக் கொள்ளலாம்.

உளவுச் சேவையகங்களைச் சேர்ந்த அதிகாரிகளின் குழுமம் ஒன்று ஆளும் கட்சியின் சம்பந்தமின்றி தாமாகவே முனைந்து கப்பம் வசூலிக்கும் நோக்குடன் புரிந்த கொடிய குற்றமே 11 இளைஞர்களின் கடத்தலும் காணாமல் போக்கடிப்பும். மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே. வி. பி.யின்) இரண்டாவது கிளர்ச்சியின் பொழுதும் கப்பம் வசூலிக்கும் நோக்குடன் கடத்தல்கள் இடம்பெற்றன. 

பிரச்சனையின் சாரத்தை புரிந்துகொள்ளல் 

அத்தகைய குற்றங்கள் மகிந்த ராஜபக்சாவின் ஆட்சியில் மாத்திரம் நிகழவில்லை என்பதை நாம் புரிந்துகொள்வது முக்கியம். அதற்கு முன்னர்  நிகழ்ந்த குற்றங்களிலும் தேசிய, படைத்துறை உளவுச் சேவையகங்கள் சம்பந்தப்பட்டிருந்தன.    

அதிபர் பிரேமதாசா, லலித் அத்துலத்முதலி இருவரதும் படுகொலைகள் சர்ச்சைக்குரிய இரு மர்மக் கொலைகள் என்றே கொள்ளப்பட வேண்டும். அதிபர் பிரேமதாசா கொல்லப்பட்ட இடம், காவல்துறையின் நியம நடைமுறைக்கு மாறாக, உடனடியாக கழுவித் துடைக்கப்பட்டமை எங்கள் அனைவருக்கும் தெரியும். துப்பறிவாளர்கள் துப்புத் துலக்குவதற்கு ஏதுவாக காவல்துறை அதைச் சுற்றிக்காக்கவில்லை. வன்முறை இடம்பெற்ற காலத்தில் மூன்றந் தரபினர் புரிந்த சில கொலைகளுக்கு ஜே. வி. பி.யை அல்லது புலிகளை அல்லது படையினரைச் சாட்டும் வழக்கம் ஓங்கியதும் எமக்குத் தெரிந்த சங்கதியே. 

வன்முறையுடன் கூடிய மோதல்கள் நீடித்த காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளை நாம் மீளவும் ஆராய வேண்டியுள்ளது என்பதை இந்த நிலைவரம் எமக்கு வலியுறுத்துகிறது. உயிர்த்த ஞாயிறு பேரிடியில் சகரான் சிங்கள, தமிழ்க் கத்தோலிக்கர்களைத் தாக்கினாரே ஒழிய, வெறுமனே சிங்கள பெளத்த மக்களை அல்ல. திரைமறைவில் ஒரு தரப்பு இயங்கியிருந்தால், அது ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அல்லவா வீழ்த்தியிருக்கும்! கத்தோலிக்க தலைவர்கள் மதிநுட்பத்துடன் பிரச்சனையை அணுகியபடியால்,  அத்தாக்குதல் ஒரு கிறீஸ்தவ-முஸ்லீம் கலவரத்தை மூட்டவில்லை. மற்றும்படி, ஒரு பேரழிவு நேர்ந்திருக்கும்  அல்லவா?

இலங்கை எதிர்நோக்கும் நெருக்கடிக்கு வாடிக்கையாக அளிக்கப்படும் விளக்கத்தை இதுவரை நிகழ்ந்த இன, சமய மோதல்கள் தகர்த்துவிட்டதாகவும் கூறலாம். முழு நெருக்கடியும் சிங்கள-தமிழ் மோதல் என்பதே வாடிக்கையான விளக்கம். ஆனால் இனக்குழுமங்கள், சமயங்கள், சாதிகள் அனைத்தும்  பெருமளவு சம்பந்தப்பட்ட இன்னும் சிக்கலான, மிகவும் பாரிய நெருக்கடியே இது என்பது இப்பொழுது தெளிவாகியுள்ளது. ஆகவே தேசிய நெருக்கடிக்கு முன்வைக்கப்பட்ட பழைய தீர்வுகள் இனிமேல் செல்லுபடியாகா.    

சுதந்திரம் தொட்டு எழுபது ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு இனக்குழுமங்களையும் கடுமையாக வதைத்துப் பாய்ந்த இக்காட்டாறு இப்பொழுது அதன் வரலாற்று முடிவிடத்தை வந்தடைந்துள்ளது.  இக்கொடிய ஆற்றுக்கு ஏறத்தாழ 1½ இலட்சம் பேர் பலியாகி இருக்கலாம். அதிரடிக் காயங்களுடனும் அகப்புண்களுடனும் உயிர்தப்பிய பல இலட்சக் கணக்கான மக்களின் உள்ளம் ஒடிந்துபோய் உள்ளமை இப்படிமுறையின் படுமோசமான விளைவாகும்.    

அகப்புண்களை ஆற்றுதல்

இலங்கையின் சமூக முறைமை அழுகி நிலைகுலைய வழிவகுத்த தலையாய காரணியாக இந்நிலைவரத்தைக் கருதலாம். நீண்ட காலமாக ஆற்றப்படாமல் புரையோடிப் போயுள்ள அகப்புண்களை ஆற்றுவதற்கு தாக்கமான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலமே இந்நிலைவரத்தை திட்பமான முறயில்   மாற்றியமைக்க முடியும். 

அதற்கு இலங்கை அரசு தகுந்த கட்டுக்கோப்பு ஒன்றை முன்வைக்காவிட்டால், வழக்கத்துக்கு மாறான அணுகுமுறைகளை பொதுமக்கள் கையாள வேண்டும். பல்வேறு வகையான, பல்வேறு விதமான அணுகுமுறைகளை அவர்கள்  கையாளலாம். நியாயமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்யலாம். அல்லது உரிமைகளை வென்றெடுக்க கூட்டு நடவடிக்கை எடுக்கலாம். 

அண்மையில் தமிழரும் முஸ்லீங்களும் தமது உரிமைகளை நிலைநாட்ட கிழக்கிலிருந்து வடக்குவரை மேற்கொண்ட நடைபயணம் அத்தகைய நடவடிக்கைக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு.  கத்தோலிக்க திருச்சபையினால் ஒழுங்குசெய்யப்பட்ட “கரி ஞாயிறு” அத்தகைய வேறோர் எடுத்துக்காட்டு.  

அத்தகைய நடவடிக்கைகளை ஒரு குறுகிய வட்டத்துள் முடக்குவதை விடுத்து பரந்துபட்ட முறையில் மேற்கொள்வது முக்கியம். அவற்றை மேற்கொள்ளும்பொழுது வன்முறையான, தீவிரமான எண்ணங்களை ஊக்குவிக்கும் செயல்களைத் தவிர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். தனிக்குழும அணுகுமுறையை விடுத்து பல்குழும அணுகுமுறையைக் கைக்கொள்ள வேண்டும். அமைதி காக்க வேண்டும். வெறுப்பிலிருந்தும், சீற்றத்திலிருந்தும் விடுபட வேண்டும். மற்றவர்களின் தவறுகளை மாத்திரமன்றி, தமது தவறுகளையும் உணர்ந்துகொள்ளும் ஆற்றலை வளர்க்க வேண்டும்.  

மக்கள் நேரில் பங்குபற்றி ஆர்ப்பாட்டம் செய்தால் மட்டும் போதாது. புறவயமான, நியாயப்படியான சிந்தனைக்கு இட்டுச்செல்லும் உளவியற் பயிற்சிகளிலும் அவர்கள் ஈடுபட வேண்டும். அதற்கு, வாசிக்கும் பழக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டும். நாட்டில் நடப்பதை புரிந்துகொள்ளும் திறனை விரிவுபடுத்தும் வண்ணம் அவர்கள் வாசிப்பில் ஈடுபட வேண்டும். பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு வேண்டிய அறிவை ஈயும் வெளியீடுகளை வாசித்து, உரிய விடயங்கள் குறித்து  விவாதிக்க வேண்டும். 

சிங்கள, தமிழ்ச் சமூகங்களிடையே சாதியத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அங்கீகாரத்தை முடிவுறுத்த முயற்சி எடுக்கவேண்டும். எல்லா இனத்தவர்களுக்கும், சமயத்தவர்களுக்கும் சரிநிகர் மேன்மையும், சரிநிகர் உரிமைகளும் வழங்கும் கட்டுக்கோப்பினை உருவாக்கும் நிலையை நோக்கி நகரவேண்டும். இந்த இலக்கை எய்துவதற்கு இயன்ற நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும்.  

பாரபட்சமின்றி அனைவரின் உரிமைகளையும் நிலைநிறுத்தி, அனைவரின் மதிப்பையும் நம்பிக்கையையும் ஈட்டி, சட்ட ஆட்சியை உறுதிப்படுத்தி, ஊழல் புரியாமல், சோடை போகாமல் ஆளும் ஒரு தற்கால அரசை உருவாக்குவது எங்ஙனம் என்னும் வினாவை நாம் கருத்தூன்றி ஆராய வேண்டும்.   

____________________________________________________________________________________Victor Ivan, The end of a journey and beginning of a new one, Daily FT, Colombo, 2021-03-12, translated by Mani Velupillai, 2021-03-13.

http://www.ft.lk/columns/The-end-of-a-journey-and-beginning-of-a-new-one/4-714601


No comments:

Post a Comment