1971 ஏப்பிரில் 5 கிளர்ச்சி

50 ஆண்டுகளுக்குப் பிறகு

இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் கற்றுக்கொள்ளாத வரலாற்றுப் பாடம்


லயனல் பொபகே


இன்று உலக நாடுகள் பலவற்றில் குடியாட்சி என்னும் பெயரில் எதேச்சாதிகாரமானது போலிக் குடியாட்சி புரிந்து, மெய்யான குடியாட்சியைக் கருவறுத்து வருகிறது. மக்கள் விருப்பம் என்னும் போர்வையில் மனித உரிமைகளும், குடியாட்சி உரிமைகளும் பறிக்கப்பட்டு வருகின்றன. இலஞ்சமும், ஊழலும், சூழல் அழிப்பும் புற்றீசல் போல் பெருகி வருகின்றன. குடித்துறை நிருவாகம், படைத்துறை நிருவாகமாக மாற்றப்பட்டு வருகிறது. 

நிறைவேற்று ஜனாதிபதியின் முடிபுகளுக்கு முத்திரை குத்தும் மன்றமாக இலங்கை நாடாளுமன்றம் 1978ல் மாற்றப்பட்டது. முத்திரை குத்தும் அலுவல் கூட, அண்மையில் நிறைவேற்றப்பட்ட 20வது திருத்தத்துக்குப் பிறகு, தேவைப்படாத ஒன்றாகவே தெரிகிறது. 

இந்த இட்டுமுட்டுக்குள் நாம் புகுந்தது எங்ஙனம்? 1971ல் நிகழ்ந்த கிளர்ச்சியை எடுத்துக்காட்டாக வைத்து மேற்படி வினாவுக்கான விடையை இங்கு நாம் சுருக்கி உரைப்போம்: 


பாரபட்சம் காட்டும் அரசியல்

சுதந்திர இலங்கையின் வரலாறு முழுவதும், எமது பெரிய கட்சிகள் இரண்டும், தேர்தலில் வென்று, நாடாளுமன்றத்தில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி வைத்திருக்கும் நோக்குடன் பிறருக்கும், பிறரது தனித்துவத்துக்கும்  எதிராகப் பாரபட்சம் காட்டும் அரசியலைப் பயன்படுத்தி வந்துள்ளன. பிரித்தானியர் இலங்கையைக் கட்டியாண்ட காலத்தில் சலுகை அனுபவித்த அதே மேட்டிமைக் குழுமங்கள், தாம் அபகரித்த சலுகைகளைக் கட்டிக்காப்பதற்கு, இனவேற்றுமை நன்கு கைகொடுக்கும் என்பதைக் கண்டுகொண்டன. 

தாழ்ந்த சமூக பொருளாதார பின்னணி கொண்ட சிங்கள, தமிழ் இளைஞர்கள் தமது கையறுநிலைக்கு எதிராக மூன்று தடவைகள் கிளர்ச்சி செய்துள்ளனர். முரண்பாடுகளுக்கு இட்டுச்சென்ற சமூக, பொருளாதார அரசியல், பண்பாட்டுக் காரணங்களை எல்லா அரசாங்கங்களும் ஒன்றில் தட்டிக்கழித்து வந்துள்ள்ளன அல்லது கவனத்தில் கொள்ளத் தவறியுள்ளன. பெரும்பாலும் எல்லா அரசாங்கங்களுமே பெரிதும் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தியே நாட்டை ஆண்டு வந்துள்ளன. 

அரசாங்கங்கள் கடைப்பிடித்த பாரபட்சமான கொள்கைகளே மோதல்களுக்கு இட்டுச்சென்ற முக்கிய காரணங்கள்;  அக்கொள்கைகளின் தாக்கம் அத்தகையது; தமது திறமைகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லாமை, அல்லது அத்தகைய வாய்ப்புகளை ஆட்சியாளர் உண்டாக்கத் தவறியமை சிங்கள, தமிழ் இளைஞர்களை மோதலுக்கு இட்டுச் சென்றது. அவ்வாறு மோதிய இளைஞர்கள் அடக்கி ஒடுக்கப்படவே அவர்கள் மேன்மேலும் மோதலுக்குத் தள்ளப்பட்டார்கள். 


யாழ் இளைஞர் பேரவை

பிரித்தானியர் இலங்கையைக் கட்டியாண்ட காலத்தில், யாழ் இளைஞர் பேரவை சுதந்திரத்துக்காகப் போராடுவதை விடுத்து, அரசியல்யாப்புச் சீர்திருத்தங்களுக்கான ஆர்ப்பாட்டங்களை ஏகாதிபத்தியத்துக்கு எதிரான கோரிக்கைகளாக - சுதந்திரத்துக்கான கோரிக்கைகளாக - மாற்றும் முயற்சியை முன்னெடுத்தது.  பேரவையினர் வடக்கில் ஒரு திட்பமான சக்தியாக விளங்கும்வரை தமிழின தேசிய எழுச்சியை அவர்களால் பின்தள்ளவும், தாமதப்படுத்தவும் முடிந்தது.  எனினும், சிங்கள, தமிழ் தேசிய பேரலை ஓங்கவே பேரவையினர் பின்னடைய நேர்ந்தது. 


சோல்பரி அரசியல்யாப்பு

அதிகாரப் பரவலாக்கத்துடன் கூடிய நிருவாகம் நடந்துவந்த இலங்கையில் 1947ம் ஆண்டு சோல்பரி அரசியல்யாப்பின்படி ஓர் ஒற்றையாட்சி அரச கட்டுக்கோப்பு புகுத்தப்பட்டது.  அது ஒரு மேல்நாட்டு அரசியல்யாப்புக் கட்டமைப்பாகும்.  பிறகு அதே சோல்பரி அரசியல்யாப்பினைப் பயன்படுத்தியே சிறுபான்மையோரின் குடியாட்சி உரிமைகள் நசுக்கப்பட்டன. 


மலையகத் தமிழர்

1948ல் இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின்படி 10 இலட்சம் மலையக தமிழ்த் தொழிலாளரின் குடியியல் உரிமைகள் ஒழிக்கப்பட்டன. 1949ல் இயற்றப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின்படி அவர்களது குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டன. அத்துடன் துவங்கியதே, தமிழ் மக்களின் சட்டபூர்வமான உரிமைகளைப் பறிக்கும் படிமுறை.  

1930ல் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இலங்கை சமசமாசக் கட்சியின் தொழிற் சங்கத்தில் இணைந்திருந்தனர். தமிழ்த் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை சிங்கள பெரும்பான்மை அரசு பறித்துவிடும் என்று தமிழ் மக்கள் அஞ்சினர். அதன் பிறகு இனவாரியாக அமைக்கப்பட்ட தொழிற் சங்கங்களில் அவர்கள் உள்வாங்கப்பட்டனர். அவ்வாறுதான் இடதுசாரிகளுடன் அவர்கள் பூண்டிருந்த உறவு தகர்ந்தது. அப்பொழுது தமிழர் பெரும்பான்மையோராக வாழ்ந்த புலங்களில் சிங்களவரைக் குடியேற்றும் அலுவல் துவங்கியது. அதுமுதல் இனவாத அரசியல் உறுதிபட மேலோங்கி வந்துள்ளது. 

சுதந்திரத்தின் பின்னர் வேளாண்மைப் பொருட்களின் விலைகள் வீழ்ச்சி அடைந்தன. குடித்தொகை பெருகியது. நலன்புரி அரச கட்டமைப்பு விரிவடைந்தது. அத்தகைய சூழ்நிலையில் மக்களின் வேட்கைகளை நிறைவேற்றுவதற்கான தீர்வுகளை அரசாங்கத்தால் முன்வைக்க முடியவில்லை. ஆதலால் மக்களிடையே அரசாங்கத்துக்கு எதிர்ப்பு வலுத்தது. அது இடதுசாரிகளுக்கு சாதகமான அரசியற் சூழ்நிலையை உருவாக்கியது.


பண்டாரநாயக்கா

அப்பொழுது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிப் பிணக்கினால், அதிலிருந்து வெளியேறிய பண்டாரநாயக்கா, இலங்கைச் சுதந்திரக் கட்சியை அமைத்தார். பெரும்பான்மைச் சிங்களவரின் ஆதரவை ஈட்டுமுகமாக, ஐந்து சமூகத் தரப்புகள் அடங்கிய வன்படை ஒன்றை உருவாக்கி, சிங்கள மக்களின் உள்ளக்குறைகளை மாத்திரம் தீர்க்க அவர் வாக்குறுதி அளித்தார்:


(1) சங்கம் (பிக்குகள்)

(2) வெத (நாட்டு வைத்தியர்கள்)

(3) குரு (ஆசிரியர்கள்)

(4) கொவி (கமக்காரர்)

(5) கம்கறு (தொழிலாளர்)


தனிச் சிங்களச் சட்டம்

1956ல் தனிச் சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு அரசாங்க சேவையில் சிங்களம் தெரியாதவர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டது. கொழும்பு காலிமுகத் திடலில் தமிழ்த் தலைவர்கள் அமைதிவழியில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின் மீது காடையர்களைக் கொண்டு தாக்குதல் தொடுக்கப்பட்டது. 

தமிழருக்கு எதிரான முதலாவது கலவரத்தில் ஏறத்தாழ 150 பேர் கொல்லப்பட்டனர். 1958 கலவரத்தில் ஏறக்குறைய 300 பேர், பெரும்பாலும் தமிழர் கொல்லப்பட்டனர். பிரச்சனையைத் தீர்க்கவென 1958ல் செய்யப்பட்ட பண்டா-செல்வா ஒப்பந்தம், சிங்கள தீவிரவாதிகளின் நெருக்குதலினால் ஒருதலைப்பட்சமாக கிழித்தெறியப்பட்டது.  

அது தமிழ் மக்கள் ஓர் இணைப்பாட்சி அரச கட்டுக்கோப்பினைக் கோரும் நிலைக்கு இட்டுச்சென்றது. தனிச் சிங்களச் சட்டம் இலங்கையின் அரசியல்யாப்புக்கு அமைவுடையதா என்பதைக் குறித்து பிரித்தானிய கோமறை மன்றுக்கு மேன்முறையீடு செய்யும் உரிமை 1962ல் அகற்றப்பட்டது. நீதியை நிலைநிறுத்துவதற்கான ஒரேயொரு சட்டவாக்கப் பொறிமுறையாகக் கொள்ளப்பட்ட மூதவை 1971ல் ஒழிக்கப்பட்டது.  

சோல்பரி யாப்பில் சிறுபான்மையோருக்கு பாதுகாப்பு வழங்கிய 29ம் உறுப்புரை 1972ல் இயற்றப்பட்ட யாப்பினால் ஒழிக்கப்பட்டது. புதிய யாப்பில் அடிப்படை உரிமைகள் பொறிக்கப்பட்டன. எனினும் அடிப்படை உரிமைகளை மீறும் வண்ணம் ஆட்சிமொழி, அரச மத  ஏற்பாடுகள் நிலைகொண்டன. 

அரசியலையும், வதந்திகளையும் அடிப்படையாகக் கொண்டு 1963ல் தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறை தொடர்ந்தது. பிரச்சனையைத் தீர்க்கவென 1965ல் செய்யப்பட்ட டட்லி-செல்வா ஒப்பந்தம், மீண்டும் சிங்கள தீவிரவாதிகளின் நெருக்குதலினால் ஒருதலைப்பட்சமாக கிழித்தெறியப்பட்டது. அதனால் தமிழ் மக்கள் பெரிதும் விசனமடைந்தனர். அது பிரிவினை இயக்கத்துக்கு வித்திட்டது. 


பிரிவினை

1975ல் காங்கேசன்துறை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற செல்வநாயகம் தனியரசு கோரவே, தமிழரின் போராட்டத்தில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.   1976ல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி வட்டுக்கோட்டையில் வைத்து தனியரசு கோரி விடுத்த தீர்மானம் தேசிய அரசியலில் தீவிர மாற்றத்தை ஏற்படுத்தியது. 


இனப் படுகொலைகள்

1974ம், 1978ம், 1981ம், 1983ம் ஆண்டுகளில் தமிழ் மக்கள் இடைவிடாது கொடிய சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். 1983 ஆடிப் படுகொலையை இங்கு சுட்டியுரைக்க வேண்டியுள்ளது. கொழும்பில் தமிழர்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் பின்னர் மற்றப் பகுதிகளுக்குப் பரவின. அப்படிமுறையில் அரசாங்கம் சம்பந்தப்பட்டிருந்தது.  

ஆடிப் படுகொலையின் விளைவாக ஆயிரக் கணக்கானோர் மாண்டனர். ஓர் இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடிழந்தனர். ஆயிரக் கணக்கான வீடுகளும், கடைகளும் கொளுத்தப்பட்டன. இக்கொடிய படுகொலையினால் விளைந்த சேதம் 30 கோடி ரூபா என்று அறிவிக்கப்பட்டது. தமது தாயகமான வடக்கு-கிழக்கிலேயே தமிழர் பலரும் அகதிகள் ஆயினர். எனவே, தமிழ் மக்கள் வாக்கை விடுத்து துவக்கை நாடியதில் யப்பில்லை. 


பிளவு

துறைபோன தமிழர் பலரும் வெளிநாடு சென்றனர். நாட்டில் அதுவரை ஒரு குறுணி இயக்கமாய் இருந்த தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் ஆயிரக் கணக்கானோர் இணைந்து கொண்டார்கள்.  ஆடிப் படுகொலையை அடுத்து தமிழ் இயக்கங்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே நீடித்த போர் மூண்டது. 

அதுவரை ஐக்கியப்பட்டிருந்த இலங்கைத் தேசிய சங்கங்கள் இப்பொழுது தமிழ், சிங்கள சங்கங்களாகப் பிளவுண்டன. அதற்கான காரணங்கள்: (1) ஆடிப் படுகொலையின் ஊடாகத் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை மேற்படி ஐக்கிய சங்கங்களின் அங்கத்தவர்கள் சிலர் புரிந்துணர்ந்து கொள்ளவில்லை;  (2) வெளிநாட்டு இராசதந்திரத் தலையீடுகள்; (3) சில தரப்புகளின் அரசியற் பக்கச்சாய்வு. 


புலிகள்

ஒற்றையாட்சி அரசை ஆதரிக்காத உறுப்பினர்களை வெளியேற்றும் சட்டம் நிறைவேற்றப்பட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் ஒழிக்கப்பட்டது. தமது குடியாட்சி உரிமை பறிக்கப்பட்ட பிறகு தமிழ் மக்கள், தமிழ் இயக்கங்களுடன் மேலும் நெருக்கமாயினர். புலிகள் இயக்கம் பெரிதும் வன்முறையில் ஈடுபட்டு  1980களின் இறுதியில் வடக்கு-கிழக்கில் பிரதான இயக்கமாய் மாறியது. மற்ற இயக்கங்கள் புலிகளுடனோ, அரச படைகளுடனோ ஒட்டிக்கொண்டன. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தமிழர் பலரும் புலிகள்மீது பற்றுறுதி கொண்டனர்.  புலிகளை பலவீனப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளினால் ஈற்றில் புலிகளே வலுவடைந்தனர்.

பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் கொலையுண்டு போவதற்கு  உள்நாட்டுப் போர் வழிவகுத்தது. சில ஊர்கள் அறவே அழித்தொழிக்கப்பட்டன. பல்லாயிரக் கணக்கானோர் அகதிகள் ஆயினர். வடக்கிலும் தெற்கிலும் ஆயிரக் கணக்கான விதவைகளும், அநாதைகளும், உடலும் உள்ளமும் புண்பட்ட இலட்சக் கணக்கான மாற்றுத் திறனாளர்களும் இற்றைவரை வாய்ப்பிறப்பின்றி வருந்து வருகிறார்கள். 

2009ல் போர் முடிவடைந்த பொழுது இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை பற்றி இற்றைவரை விவாதிக்கப்பட்டு வருகிறது. 1948 முதல் சரிநிகர் உரிமைகளுக்காக, 1960களில் இணைப்பாட்சிக்காக, 1970களில் தனியரசுக்காகப் போராடிய தமிழ் மக்களின் கோரிக்கைகளையும், குமுறல்களையும் அடக்கி ஒடுக்குவதற்காகவே இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது. எனினும் அவர்களின் அரசியற் கோரிக்கைகளை ஒடுக்குவதில் இற்றைவரை அரசாங்கம் தோல்வியே கண்டுள்ளது. 

(1) தமிழ் மக்களுக்கும் புலிகளுக்கும் எதிராக ஆட்சியாளரும், அரசாங்கத்துக்கும் போட்டி இயக்கங்களுக்கும் எதிராகப் புலிகளும் கொடிய வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டமை; (2) அரசாங்கமும், புலிகளும் அடிப்படை உரிமைகளை மீறியமை; (3) வேலைநிறுத்தங்களையும் அமைதி ஆர்ப்பாட்டங்களையும் அடக்கியமை;  (4) கொடூரமான முறையில் மக்கள் கொல்லப்பட்டதையும், காணாமல் போக்கடிக்கப்பட்டதையும் சரிவரப் புலன்விசாரிக்கத் தவறியமை; (5) நியாயமான கோரிக்கைகளை ஒடுக்குவதற்கு சட்டங்களைக் கருவறுத்தமை பற்றியெல்லாம் இங்கு விளக்கியுரைக்க போதிய அவகாசம் இல்லை.  


மக்கள் விடுதலை முன்னணிநாளை (2021-04-05) 1971 ஏப்பிரில் கிளர்ச்சியின் 50வது ஆண்டு நாள். மக்கள் விடுதலை முன்னணி (ஜே. வி. பி.) பல்கலைக்கழக மாணவர்களையும், பாடசாலை மாணவர்களையும், வேலைவாய்ப்பற்ற சிங்கள பெளத்த இளைஞர்களையும் கொண்டிருந்தது. 1970களில் சீர்குலைந்த சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலைவரத்தை அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர்கள் அந்த நிலைவரத்தினால் தாக்குண்டவர்கள். 1971, 1988, 1989ம் ஆண்டுகளில் நிகழ்ந்த கிளர்ச்சிகள் பற்றி பெருவாரியாக எழுதப்பட்டுள்ளதால், அவை இங்கு சுருக்க்கி உரைக்கப்பட்டுள்ளன. 


1970ல் சுதந்திரக் கட்சியின் தலைமையில் அமைந்த கூட்டமைப்பு தேர்தலில் வென்று ஆட்சி அமைக்க ஜே. வி. பி. ஆதரவு கொடுத்தது. எனினும் இளைஞர்கள் நாடிய சமூக மாற்றங்களை கூட்டரசாங்கம் புகுத்தப் போவதில்லை என்பது அதன் முதலாவது  வரவு-செலவுத் திட்டத்திலிருந்தே தெரியவந்தது. ஆதலால், நாம் எதிர்பார்த்த மாற்றத்தைக் கொணர்வதற்கே நாம் தலையிட்டோம். அப்படிமுறையே 1971 ஏப்பிரில் கிளர்ச்சியாய் ஓங்கியது. அதில் குறைகளும் தவறுகளும் இழைக்கப்பட்டதுண்டு.  எனினும், எமது போராட்டத்தை அடிப்படையில் உந்தியவை: (1) சர்வதேய நிலைவரம், (2) அக்காலகட்டத்தில் நாம் அடக்கி ஒடுக்கப்பட்ட விதம் ஆகிய இரண்டுமே.  தென்னிலங்கை இளந் தலைமுறை

இலங்கையின் பொருளாதாரமும் சமூகக் கட்டமைப்பும் நிலப்பிரபுத்துவத்தின் எச்சமிச்சங்களுடன் கூடிய  முதலாளித்துவ முறையில் அமைந்தது.  1948ன் பின்னர் வாக்களிக்கும் வயது வரம்பு குறைக்கப்பட்டது. ஏற்கெனவே கன்னங்கராவினால் இலவசக் கல்வி புகுத்தப்பட்டிருந்தது. மத்திய கல்லூரிகள் அமைக்கப்பட்டன. அப்புறம் சிங்களம் ஆட்சிமொழி ஆக்கப்பட்டது. கிராமத்து இளைஞர்கள் கல்வி கற்கும் வாய்ப்புகள் பெருகின. அதேவேளை மேட்டுக் குடியினர்க்கே ஆங்கிலக் கல்வி கற்க வாய்ப்புக் கிட்டியது. 

தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு வேண்டிய ஆங்கில அறிவை கீழ்க் குடியினரால் ஈட்டிக்கொள்ள முடியவில்லை. 1960களின் இறுதியில் கலைப் பட்டதாரிகள் மட்டுமல்ல, மருத்துவப் பட்டதாரிகளும்  வேலையில்லா நிலைவரத்தை எதிர்கொண்டனர். ஏற்ற தகைமைகள் அல்லது வேண்டிய அரசியல் தொடர்புகள் இல்லாமையால் வேலைகள் பெறுவதில் சிரமங்கள் ஏற்பட்டன. ஏற்ற தகைமகள் இல்லாமல் வெளிநாடுகளுக்கும் போக வாய்ப்பில்லை. 

இந்த இளந் தலைமுறையை ஆட்சியதிகாரத்தின் நெம்புகோல்களிலிருந்து விலக்கி வைத்திருப்பதும், அரசியல் முடிபுகள் எடுப்பதில் பங்குபற்றாவாறு ஒதுக்கி வைப்பதும் அக்காலகட்டத்தின் தன்மைகளாய் இருந்தன.  சில பட்டதாரிகளின் பெற்றோர் தமது ஒரேயொரு வீட்டை ஈடுவைத்து தமது பிள்ளைகளை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியிருந்தனர்.  

வேலைவாய்ப்பின்மை, காணித் தட்டுப்பாடு, தண்ணீர்ப் பற்றாக்குறை, மொழிவாரியான பாரபட்சம், வாழ்க்கைச் செலவுப் பிரச்சனைகளால் முதிய தலைமுறை வருந்தியதுண்டு. ஆனால், தமது அவலத்துக்கான காரணங்களைப் புரிந்துகொள்ளும் திறனை, அவர்களது மரபுநிலைப்பாடும், இன - மத - மொழி சார்ந்த பக்கச்சார்புகளும் மழுங்கடித்துவிட்டன. எனினும் அவர்களது பிள்ளைகள் தமது அவலத்தை தணிப்பதில் நாட்டம் கொண்டு, தமது பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணத் துணிவு கொண்டனர்.  

1956ல் நடைமுறைப்படுத்தப்பட்ட நிகழ்முறையின் தவிர்க்கவியலாத விளைவு எனும்படியாக, கிராமவாசிகளுள் மாபெருந் தொகையினர் சிங்கள, பாளி, வடமொழி, கலைத் துறைகளை மாத்திரமே பயில வேண்டியிருந்தது.   

அக்காலகட்டத்தில் நிலவிய தேசிய, சர்வதேசிய சூழ்நிலையில் மாற்று இடதுசாரிக் குழுமங்கள் அனைத்தும் ஆயுதப் போராட்டத்திலேயே மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தன. 1960ல் ஆசிய, ஆபிரிக்க, ஐரோப்பிய, வட அமெரிக்க, மத்திய அமெரிக்க, தென் அமெரிக்க நாடுகள் 51ல் அமெரிக்க சார்பு சர்வாதிகார ஆட்சிகள் நிலைநிறுத்தப்பட்டிருந்ததை நாம் கவனிக்க வேண்டும். அத்தகைய சர்வாதிகாரத்தின் கொலைவெறி இந்தோனேசியாவில் தெட்டத் தெளிவாகப் புலப்பட்டது. 

இலங்கையில் 1971 ஏப்பிரில் கிளர்ச்சியின் விளைவாக 63 படையினரும், 41 குடியினரும் கொல்லப்பட்டதாகவும், 305 பேர் காயப்பட்டதாகவும், 21 இலட்சம் ரூபா சேதம் ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. ஜே. வி. பி. யைச் சேர்ந்த ஏறத்தாழ 5,400 பேரும், 10,000 முதல் 12,000 வரையான பொதுமக்களும் தமது உயிரைத் தியாகம் செய்ய நேர்ந்தது. 

பெருந் தொகையானோர் மோதலில் கொல்லப்படவில்லை. கைதுசெய்யப்பட்ட பின்னர் சித்திரவதை செய்யப்பட்டே அவர்கள் கொல்லப்பட்டார்கள். பெரிதும் தோழியர் அனைவருமே வன்புணர்வுக்கும், பாலியல் சித்திரவதைக்கும் உள்ளாக்கப்பட்டார்கள்.  அந்தக் காலப்பகுதியில்தான் போர்விதி மீறலும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களும்  இடம்பெறத் துவங்கின. 


ஐக்கிய தேசியக் கட்சியின் சதி

1983 ஆடிப் படுகொலை என்பது ஜே. வி. பி.யை அழிக்க மேற்கொள்ளப்பட்ட சதியின் ஓர் அங்கமாகும். பொதுவுடைமைக் கட்சியும், நவ சமசமாசக் கட்சியும், ஜே. வி. பி.யும் இனக்கலவரத்தின் மூலம் பலவந்தமாக ஆட்சியைக் கைப்பற்றச் சதிசெய்ததாக, இனக்கலவரத்தை நிகழ்த்திய அதே ஐக்கிய தேசியக் கட்சி அரசே போலிக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது.  

நான் உட்பட 21 பேர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கொஞ்சக்காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தோம்.  அரசாங்கம் சுமத்திய அபத்தமான குற்றச்சாட்டுகள் குறித்து மெய்விவரங்களின் அடிப்படையில் வினாத் தொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தோழி சித்திரா முன்வைத்த ஆட்கொணர்வு மனுவை அடுத்து தடுத்து வைக்கப்பட்ட அனிவரும் குற்றச்சாட்டுகள் எவையுமின்றி விடுதலை செய்யப்பட்டோம்.  

 ஜே. வி. பி. தடைசெய்யப்பட முன்னர் தோழர் ரோகண விஜேவீரா உட்பட்ட தலைவர்கள் பெரும்பாலானோர் தலைமறைவாகி, தமது அரசியலை ஒளிவுமறைவாக நடத்தினர். ஜே. வி. பி.க்கும் ஆடிப் படுகொலைக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. தோழர் ரோகண உட்பட, தலைமறைந்து ஆயுத அரசியலில் ஈடுபட்ட தலைவர்களுள் பெரும்பாலும் அனைவருமே 1989 கார்த்திகை மாத இறுதிக்குள் கொல்லப்பட்டுவிட்டார்கள். அந்த மோதலின்போது மாத்திரம் ஆட்சியாளரால் பருமட்டாக 60,000 பேர் கொல்லப்பட்டார்கள். 


முஸ்லீங்கள்

முஸ்லீங்களுக்கு எதிரான பாரபட்சம் கடந்த தசாப்தத்தில் துவங்கியதாக நினைக்கிறேன். அவர்களது வீடுகள், கடைகள், மசூதிகள் மீதான தாக்குதல்கள் அண்மைக் காலத்தில் பரவலாக இடம்பெற்றுள்ளன.  நாடு முழுவதும் அவர்களுக்கு எதிரான உணர்வுகளை ஊடகங்கள் சில ஊட்டி வருகின்றன. இஸ்லாமிய பழமைநெறிவாதிகள் சிலர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் சம்பந்தப்பட்டமை தெளிவாகத் தெரிகிறது. எனினும், அவர்களை வழிநடத்தியது யார் என்பது இதுவரை தெரிய வரவில்லை. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்படி ஹெஜஸ் ஹெஸ்பொல்லா போன்ற சட்டவாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும்  அது ஓர் அரசியல் பழிவாங்கல் என்றே பலரும் நம்புகிறார்கள். 

அறிவியல் அடிப்படை எதுவுமின்றி, முஸ்லீம் சமூகத்துடன் கலந்துசாவாமல், கொள்ளைநோயினால் மாண்டவர்கள் என்று ஐயுறப்படுவோரின் உடல்களை எரியூட்டும்படி பணித்ததையிட்டு, அச்சமூகம் மிகவும் விசனம் அடைந்துள்ளது. எரியூட்டுவதற்கு வேண்டிய ஆவணங்களில் ஒப்பமிடாமல் தமது எதிர்ப்பை வெளியிட்டோர் பலர் இருக்கிறார்கள். அவர்களது மறுப்புகளையும், மருத்துவ சான்றினையும் செவிமடுக்காமலேயே, அவர்கள் முன்வைத்த அடிப்படை உரிமை விண்ணப்பங்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்று நிராகரித்துள்ளது. இதை முஸ்லீங்களுக்கு எதிரான பாரபட்சமாகவே குடியியற் சமூகம் நோக்குகிறது. 


தமிழர்

ஆயுத மோதலின் இறுதிக் கட்டத்தில் வடபுல மக்கள் அடைந்த வேதனையைப் புலப்படுத்தும் நினைவுச் சின்னத்தை, மோதல் முடிவடைந்து 11 ஆண்டுகளுக்குப் பிறகு தகர்க்க வேண்டிய தேவை இல்லை. நெடுங்கால அடிப்படையில் முற்றுமுழுதான அதிகாரத்தை ஈட்டிக்கொள்ளும் நோக்குடன் இனத்துவ பக்கச்சாய்வையும், பேரினவாதத்தையும் பயன்படுத்தும் முயற்சியையே அத்தகைய நடவடிக்கைகள் புலப்படுத்துகின்றன.  தாம் இழந்தவர்களை நினைவுகூரும் உரிமை வடக்கு, கிழக்கு மக்களுக்கு ஏன் இருக்கக்  கூடாது? 

1948 முதல் நந்திக்கடல் வரை எமது நாட்டில் மோதல்களும், கலவரங்களும், படுகொலைகளும், உள்நாட்டுப் போரும் இடம்பெற்றுள்ளன. மக்களின் உரிமைகளை நிராகரிக்கையில், சமூக அமைதி குலைந்து, மோதல்கள் ஓங்குகின்றன. ஆர்ப்பாட்டங்களை தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தாக நோக்கி அடக்கி ஒடுக்குவது, எதிர்காலத்தில் மோதல்கள் எழ வழிவகுக்கும் என்பதை வரலாறு சுட்டிக்காட்டியுள்ளது. மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு உரிமைகளை உறுதிப்படுத்துவதன் மூலமே அமைதியை நிலைநாட்ட முடியும் என்பதை வரலாறு திரும்பத் திரும்ப, தெட்டத்தெளிவாகச்  சுட்டிக்காட்டியுள்ளது.


மக்கள்

மக்களுடன் கலந்துசாவி எடுக்கும் முடிபுகளின்படி அவர்களது பிரச்சனைகளைக் குறித்து நடவடிக்கை எடுப்பதன் மூலம், குடிமக்கள் என்ற வகையில் தமது கடமைகளை ஆற்ற அவர்களை அனுமதிக்கலாம் அல்லவா? 

குடியாட்சி முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் ஓர் அரசாங்கத்துக்கு, இனத்துவ சார்பையோ அரசியற் சார்பையோ பொருட்படுத்தாமல், எல்லாச் சமூகங்களுக்குமாக நாட்டை ஆளும் பொறுப்புண்டு. இதுவரை என்றுமே கற்கப்படாத பாடங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிகமுக்கிய பாடம் இதுவே: சிங்கள, தமிழ், முஸ்லீம், சுதேச, மற்றும் பிற இனக்குழுமங்கள் எதிர்நோக்கும் திட்டவட்டமான பிரச்சனைகளைக் கண்டறிந்து, அவர்களது மனித உரிமைகளையும், குடியாட்சி உரிமைகளையும், பேணிக் கட்டிக்காத்துச் செயற்பட வேண்டும்.  

____________________________________________________________________________________

Lionel Bopage, 50 Years To April 71 Uprising, Colombo Telegraph, 2021-04-05,

translated by Mani Velupillai, 2021-04-09). 

https://www.colombotelegraph.com/index.php/50-years-to-april-71-uprising-historical-lesson-sri-lanka-never-learnt-since-its-independence

____________________________________________________________________________________

கலாநிதி இந்திரவன்ச டி சில்வா

தகைசால் பேராசிரியர், ஐக்கிய அமெரிக்கா 


வடக்கு, கிழக்கிற்கு உட்பட்ட மாவட்டங்களில் தாம் போட்டியிட்ட ஒவ்வொரு தேர்தலிலும் தோல்வியடைந்து அவமானப்பட்டமை, ஜே. வி. பி. யினர் மீது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. துவக்கத்திலிருந்தே தமது இனவாதக் கருத்துகளுக்கு, இந்திய விசாலிப்புக்கு எதிரான நிலைப்பாடு என்று சொல்லி இனிப்பூட்ட முயன்றதை வைத்து,  ஜே. வி. பி. யினரின் குருதி நாளத்தில் ஓடும் இனவாதத்தை வடக்கு, கிழக்குவாழ் சிறுபான்மை மக்கள் கண்டறிந்து கொண்டதாகவே தென்படுகிறது. 

____________________________________________________________________________________

No comments:

Post a Comment