மோதியின் இந்தியா
இந்து தேசியவாதமும்
இனத்துவ குடியாட்சியின் எழுச்சியும்
கிரிஸ்தோவ யவர்லோ
நூலாசிரியர்
அனன்யா வாச்பேயி
கட்டுரையாளர்
1990 முதல் இந்திய அரசியலில் மேலோங்கிய அலை ஒவ்வொன்றையும் பற்றி பிரஞ்சு அரசியல் அறிஞர் கிரிஸ்தோவ யவர்லோ அவ்வப்பொழுது எழுதி வந்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் இந்திய அரசியல் அரங்கில் மேலோங்கிய அலைகள் குறித்து பிரஞ்சிலும், ஆங்கிலத்திலும் 30 நூல்கள் வரை அவர் எழுதியும், பதிப்பித்தும் உள்ளார்.
அலைகள்
(1) இந்து தேசியவாதம் எழுச்சியுற்றமை (2) சாதி அரசியல் பொங்கி எழுந்தமை, தலித் மற்றும் பிற பிற்பட்ட வகுப்பினர் அணிதிரண்டமை, அம்பேத்கர் மீது நாட்டம் ஏற்பட்டமை, மண்டல் ஆணையத்தின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை (3) சிறுபான்மையோரின், குறிப்பாக முஸ்லீங்களின் நிலைவரம் (4) பாகிஸ்தானிய அரசின் போக்கும், இந்திய-பாகிஸ்தானிய பிணக்கு நிலையூன்றியமையும் (5) பொருளாதாரக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமை, உலகமயமாக்கம் என்பவற்றின் விளைவாக இந்திய மத்திய வகுப்பு விரிவடைந்தமை (6) சந்தைச் சீர்திருத்தத்தை அடுத்து இந்திய வணிகம் பெருகியமை (7) உத்தர பிரதேச, மராட்டிய, குஜராத் மாநிலங்களில் தோன்றிய சங் பரிவாரும் அதன் கருத்தியலும் வலுப்பெற்று இந்துத்துவம் எனும் கழலையாக மாறி நாடு முழுவதையும் பீடித்தமை…
அயோத்தி, அமதாபாத், மும்பாய், வாரணாசி, நாக்பூர், தில்லி, லக்னோ, பெங்களூர் முதல் நாகலாந்து மலையகம், நக்சல் காடுகள் ஈறாக இலாகூர், கராச்சி வரை இடம்பெற்ற அரசியல், சமய, சாதிய நிகழ்வுகள் அனைத்தையும் கிரிஸ்தோவ யவர்லோ பதிவிட்டு, ஆய்விட்டு வந்துள்ளார். நரேந்திர மோதியின் ஆட்சியில் இந்திய அரசு அடைந்த பாரிய மாற்றத்தை அவர் முற்றுமுழுதாக ஆராய்ந்துள்ளார். கிரிஸ்தோவ யவர்லோ இடும் முழக்கம் எமது செவிப்பறையில் மோதுகிறது: இந்தியா மாறிவிட்டது. அது மீளா மாற்றம் அடைந்துவிட்டது போல் தெரிகிறது. தாராண்மைவாத மதச்சார்பற்ற நாடாக விளங்கிய இந்திய 10 ஆண்டுகளுக்குள் பெரும்பான்மைவாத “இனத்துவக் குடியாட்சி” நாடாக மாறிவிட்டது!
குறிக்கோள்கள் மீது விழுந்த அதிரடிகள்
2013 பிற்கூறில் மோதி தனது வேட்புமனுவை முன்வைத்தது முதல் இந்திய குடியரசின் குறிக்கோள்கள் மீது தொடர்ந்து விழுந்துவரும் அதிரடிகளை கிரிஸ்தோவ யவர்லோ தடமொற்றி வந்துள்ளார். (1) முஸ்லீங்களும், தலித்துகளும் அடாவடியாகக் கொல்லப்பட்டுள்ளார்கள். (2) தட்டிக்கேட்கும் அறிவார்ந்தோர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். (3) புலமையாளர்கள் மீது இலக்கு வைத்து புரளிகள் கிளப்பிவிடப்பட்டுள்ளன. (4) தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். (5) திரைப்படத் தாரகைகள் தொந்தரவுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளார்கள். (6) ஊடகங்களும், பல்கலைக்கழகங்களும், நீதிமன்றுகளும் கருவறுக்கப்பட்டுள்ளன. (7) எதிர்க்கட்சிகள் ஒடுக்கப்பட்டுள்ளன. (8) பொருளாதாரம் அழிக்கப்பட்டுள்ளது. (9) சிறுபான்மையோர் கொடுமைபடுத்தப்பட்டுள்ளனர். (10) அடிப்படை உரிமைகள் வெட்டிக் குறைக்கப்பட்டுள்ளன. (11) அரச நிர்வாகத் துறைக்கு சுங்கம் வைக்கப்பட்டுள்ளது. (12) அரசு சாரா அமைப்புகள் மீது இலக்கு வைக்கப்பட்டுள்ளது. (13) சமூக அமைப்புகளுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது. (14) வரலாறு திரித்துரைக்கப்பட்டுள்ளது…
சமூக ஊடகங்களின் இடத்தை காழ்ப்புரையும், பரப்புரையும், போலிச்செய்தியும் கவர்ந்துகொண்டுள்ளன. நாடாளுமன்ற முறைமையை ஆளுங்கட்சி எதிர்த்தும், பழித்தும் வந்துள்ளது. மாற்றுக் கருத்துடையோர் கேடுகெட்டவர்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். தான்தோன்றித்தனம் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய அரண்படை நிலைகொண்டுள்ளது. அரசியல்யாப்புக்கு ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. உண்மை உதறித்தள்ளப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் எழுதுவதற்கு கிரிஸ்தோவ யவர்லோவுக்கு 700 பக்கங்கள் தேவைப்பட்ட காரணம் அவற்றின் கண்கண்ட சாட்சிகளாக விளங்கும் எங்களுக்குப் புரியவே செய்கிறது.
மேற்படி நூல் செப்பநுட்பமாக ஆக்கப்பட்ட ஓர் ஆவணம். இந்தியக் குடியாட்சி விரைந்து நிலைகுலைந்த விதத்தை வருங்காலத் தலைமுறை புரிந்துகொள்ளத் திண்டாடும் வேளையில், இந்த அரிய பதிவேடு அவர்களுக்கு கைகொடுக்கும். சரிநிகர் குடியுரிமை, வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை, தவணை தப்பாத தேர்தல், பிரதிநிதித்துவ அரசாங்கம், சிறுபான்மையோருக்கு பாதுகாப்பு, சுதந்திர ஊடகம், மக்களீர் சுயாட்சி என்பவற்றை உலகத்திலேயே மிகவும் பாரிய அளவில், மிகவும் துடிப்பான முறையில், மிகவும் சுவையான முறையில் இந்தியா பரீட்சித்துப்பார்த்தது. காஷ்மீரையும், வடகீழ்ப் புலத்தையும் தவிர்த்துப் பார்த்தால், மோதிக்கு முன்னர் பல்வண்மை, பன்மைத்துவம் என்பவற்றின் மீது இந்தியா கொண்டிருந்த பற்றுறுதி மெய்யானதாகவே புலப்படுகிறது.
கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் தாராண்மை நெறிப்பட்ட கருத்தொருமையைக் குலைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை மட்டும் கிரிஸ்தோவ யவர்லோ எமக்கு நினைவூட்டவில்லை. மேற்படி தரவுகளைக் கொண்டு இனத்துவக் குடியாட்சி, மக்களீர் வல்லாட்சியாளர்கள், வலதுசாரி தேசியவாதம், ஆட்கவர்ச்சித் தலைமைத்துவம், அரச கட்டமைப்புகளுக்கு மூடுவிழா நடத்தல், தேர்தல் மூலம் ஆணைபெற்றதாகப் பாவனைசெய்து எதேச்சாதிகாரம் புரிதல், சிறுபான்மையோரை இரண்டாந்தரக் குடிகளாகத் தாழ்த்த இடைவிடாது முற்படல், புதுவித மோதல்களில் ஆட்களை அணிதிரட்டல், ஆதிக்கம் செலுத்தல், ஓரங்கட்டல், சகிப்புத்தன்மையையும் சமத்துவத்தையும் அரவணைப்பையும் உதறித்தள்ளல்… பற்றியெல்லாம் பாரிய புலமையேடுகளையும் கோட்பாட்டுப் பிரமாணங்களையும் அவர் முன்வைத்துள்ளார்.
கருத்தியல்கொண்டு கைப்பற்றல்
மோதியின் பிம்பம் உருவாக்கப்பட்ட முதனிலை அரங்கும், அவரது கையாளாகிய அமித் ஷாவின் பண்பாட்டு நாற்றுமேடையும், இந்தியாவின் மாபெரும் வல்லமை படைத்தை அம்பானி, அதானி வணிக குடும்பங்களின் தோற்றுவாயும் குஜராத் மாநிலமே. அங்கு பெரும்பான்மைவாதிகள் அரசியலைக் கையகப்படுத்தியதையும், அவர்களது கலக அரசியலையும், தமக்குச் சார்பான நீதிபதிகளைப் பதவியில் அமர்த்துவதையும், அரசியற்கூட்டுடன் முதலாளித்துவம் புரிவதையும் சான்றுகளுடன் கிரிஸ்தோவ யவர்லோ முன்வைத்துள்ளார்.
1975 முதல் 1977 வரையான நெருக்கடிகாலத்தை வேறொரு நூலில் அவர் ஆராய்ந்துள்ளார். அதில் இந்திரா காந்தி, நரேந்திர மோதி இருவரதும் தலமைத்துவப் பாணியை அவர் ஒப்பிட்டுள்ளார். ஆர். எஸ். எஸ். அமைப்பு மைய அரசியலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதையும், அதன் ஊடுருவல் முழுவதையும் அவர் விரிவாக ஆய்விட்டுள்ளார். பொதுமக்கள், ஊடகத்துறை, புலமைத்துறை, காவல்துறை, நிருவாகத்துறை, சட்டமன்றம், நீதித்துறை, (ஒருவேளை) முப்படைகளும் கூட கருத்தியல்வாரியாக கைப்பற்றப்பட்டுள்ளதை அவர் விலாவாரியாக ஆராய்ந்துள்ளார்.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநில அரசை வகுப்புவாதமயப்படுத்தி, குடிப்படை கொண்டு ஆட்சிநடத்தி, இஸ்லாமியவிரோதத்தை ஆட்சிக் கொள்கையாகக் கடைப்பிடிக்கும் விதத்தை கிரிஸ்தோவ யவர்லோ ஆராய்ந்துள்ளார்.
யோகி ஆதித்யநாத்
முஸ்லீம் இளைஞர்கள் இந்துப் பெண்களை காதல் வலைவீசி மதம் மாற்றுவதை எதிர்க்க வேண்டும் (love jihad), முஸ்லீங்களிடமிருந்து பசுக்களைக் காப்பாற்ற வேண்டும் (gau raksha), முஸ்லீங்களும் கிறீஸ்தவர்களும் இந்துசமயத்துக்கு மீளவேண்டும் (ghar wapsi) போன்ற பயங்கர முழக்கங்கள் பலவும் அங்கு எழுப்ப்பப்படுகின்றன. சாதிச் சலுகையும், பழமைபேண் சமூகமும், ஆணாதிக்க அமைப்பும் கட்டிக்காக்கப்படுகின்றன. முஸ்லீங்களும் கிறீஸ்தவர்களும் அடாவடிக்கும் மானக்கேட்டுக்கும் உள்ளாக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு வருகிறார்கள். இராஜஸ்தான், ஹரியானா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உட்பட்ட பசுவழிபாட்டுப் புலமும், இந்திமொழி மையப்புலமும் அறவே காவிமயமாகியுள்ளன. தெற்கே கர்நாடகாவினுள்ளும், கிழக்கே அசாமினுள்ளும் காவி கசிந்து வருகிறது.
சவார்க்கர் கோல்வால்க்கர்
பிராந்தியவாரியான காரணங்களினாலும், உள்ளூர்க் கட்சிகள், சாதிக் கூட்டமைப்புகள், அடிமட்டத் தலைவர்கள் ஒருசேர பாரதிய ஜனதா கட்சியை எதிர்ப்பதனாலும் பஞ்சாப், தில்லி, பீகார், மராட்டியம், கோவா, மேற்கு வங்க மாநிலங்கள் இதுவரை மேற்படி காவிமயத்துக்கு இடங்கொடுக்கவில்லை. அதை எதிர்த்து அவ்வப்பொழுது அவை கிளர்ந்தெழுந்ததுண்டு. எனினும் இம்மாநிலங்களில் காவிமயத்துக்கு நிலவும் எதிர்ப்புக் கூட மக்களின் உணர்வலை மோதிக்கு எதிரானது என்பதையோ, வழமையான அரசியல் உணர்வலை மதச்சார்பற்றது என்பதையோ உணர்த்தவில்லை. தெற்கை இனிமேல் மதச்சார்பற்றதென மார்தட்டலாகாது.
வாஜ்பாயி அத்வானி
மோடி, அமித் ஷா இருவருக்கும் முன்னர் சவார்க்கர், கோல்வால்க்கர் முதல் அத்வானி, வாஜ்பாயி வரையான கடந்த நூற்றாண்டுகால இந்துத்துவ கருத்தியலை ஆராயும்பொழுது, தற்பொழுது நாம் பட்டறியும் அரசியற் பூகம்பத்தின் துவக்க அதிர்வுகளைப் பின்னோக்கிச் சென்று பதிவுசெய்ய முடியும் என்பதை கிரிஸ்தோவ யவர்லோ தனது நூல்களில் சுட்டிக்காட்டியுள்ளார். உலகளாவிய முறையில் நோக்கும்பொழுது இஸ்ரவேல், துருக்கி, ஹங்கேரி, பிரேசில் போன்ற நாடுகளில் இனத்துவக் குடியாட்சி மேலோங்கியுள்ளமை தெரிகிறது.
மோதி அமித் ஷா
இரண்டாவது குடியரசும், இந்து அரசும் ஏற்கெனவே எம்மை ஆள்வதாகவே புலப்படுகிறது. எதிரே தெரியும் காலம் முழுவதும் அவை நிலைத்திருக்கப் போகின்றன. அந்த நிலைமையை மோதியின் இந்தியா எமக்கு ஒருசேர நினைவூட்டுவதாகவும், பதிவுசெய்வதாகவும், எச்சரிப்பதாகவும் அமைந்துள்ளது. வரலாறு புகட்டும் பாடங்களுக்கு நாம் செவிசாய்ப்பதாயின், போராட்டத்துக்கான அழைப்பாகவும் அது அமைந்துள்ளது.
____________________________________________________________________________________
Ananya Vajpeyi, ‘Modi’s India: Hindu Nationalism and the Rise of Ethnic Democracy’ review: The collapse of democracy, The Hindu, 2021-12-12, translated by Mani Velupillai, 2021-12-13.
No comments:
Post a Comment