வழக்குரை (6)
சாக்கிரத்தீஸ்
(பொ. ஊ. மு. 469-399)
பிளேட்டோ
(பொ. ஊ. மு. 427-347)
சாக்கிரத்தீசின் வழக்குரை (6)
(பிளேட்டோவின் பதிவு)
500 நடுவர்களின் தீர்ப்பு:
குற்றவாளி: 280 வாக்குகள்
நிரபராதி: 220 வாக்குகள்
பெரியோர்களே, இப்பெறுபேறு குறித்து, நீங்கள் என்னைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது குறித்து, நான் வருத்தப்படவில்லை. அதற்குப் பற்பல காரணங்கள் உண்டு. தலையாய காரணம், இது எதிர்பார்க்கப்படாத பெறுபேறு அல்ல. அதேவேளை, எனக்குச் சார்பாகவும் எதிராகவும் அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையே என்னை வியக்க வைக்கிறது. எண்ணிக்கை வேறுபாடு இவ்வளவு குறுகும் என்று நான் என்றுமே நம்பியிருக்கவில்லை. வெறுமனே 30 வாக்குகள் மாறி விழுந்திருந்தால், நான் விடுதலை செய்யப்பட்டிருப்பேன் என்பது இப்பொழுது தெரிகிறது. எவ்வாறாயினும், மெலிட்டசின் குற்றச்சாட்டிலிருந்து நான் விடுவிக்கப் பட்டுள்ளதாகவே கருதுகிறேன். அது மாத்திரமன்று; அனைட்டசும், லைக்கனும் என்மீது குற்றஞ்சுமத்த முன்வந்திராவிட்டால், 1/5 வாக்குகளைப் பெறத்தவறியதற்கு தனது 1,000 வெள்ளி கட்டுப்பணத்தை மெலிட்டஸ் இழந்திருப்பார்.
*
சாக்கிரத்தீசுக்கு இறப்புத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பது மெலிட்டசதும் மற்ற இருவரதும் கோரிக்கை. சாக்கிரத்தீசின் மாற்றுக் கோரிக்கை:
*
மெத்த நல்லது, பெரியோர்களே! எனக்கு இறப்புத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று மெலிட்டஸ் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு எத்தகைய மாற்றுக் கோரிக்கையை நான் முன்வைக்க வேண்டும்? தகுந்த மாற்றுக் கோரிக்கையை நான் முன்வைக்க வேண்டும் என்பது வெளிப்படை. சரி, நான் செய்த வேலைக்கு நான் என்ன தண்டம் செலுத்த வேண்டும் அல்லது நான் என்ன தண்டனை அனுபவிக்க வேண்டும்?
நான் என்றுமே வழமையான, அமைதியான வாழ்வு வாழ்ந்ததில்லை. எங்கள் மாநகரத்தில் பெரும்பாலோர் அக்கறை கொள்ளும் சங்கதிகளில், பணம் சம்பாதிப்பதில், வசதியான வீடுவளவு தேடிக்கொள்வதில், படைத்துறையில் அல்லது குடித்துறையில் உயர்பதவி வகிப்பதில், மற்றும் பிற அலுவல்களில், அரசியல் நியமனங்களில், தலைமறைவுச் சமாசங்களில், கட்சி அமைப்புகளில் நான் அக்கறை கொண்டதில்லை. உயிர்வாழ்வதை விட எனது நெறிகளிலேயே நான் மிகவும் அக்கறை கொண்டிருந்தேன். எனது நெறிகளிலேயே நான் கருத்தூன்றி இருந்ததாக நினைத்தேன். ஆதலால் உங்களுக்கோ எனக்கோ நலம் பயக்காத நெறி எதையும் மேற்கொள்வதை விடுத்து, உங்களுக்கு தனித்தனியாக, அந்தரங்கமாகப் புரியக்கூடிய மாபெரும் பணி என்று நான் கருதும் பணியை ஆற்றத் தலைப்பட்டேன். உளநலத்தையும் அறநலத்தையும் விட நடைமுறை அனுகூலங்களை அதிகம் கருத்தில் கொள்ளாதிருக்க உங்கள் ஒவ்வொருவரையும் நான் தூண்ட முயன்றேன். பொதுவாக அரசு விடயத்தில் அல்லது வேறு விடயம் எதிலும் அனுகூலத்தை விட நன்னலத்தை அதிகம் கருத்தில் கொள்ள உங்கள் ஒவ்வொருவரையும் நான் தூண்ட முயன்றேன்.
இப்படி நடந்து கொண்டதால், நான் எதைப் பெறும் தகுதி உடையவன்? அதை நானே தெரிவிக்க வேண்டும் என்றால், எனக்குத் தகுந்த கைமாறு ஏதாவது என்று வைத்துக்கொள்ளுங்கள், பெரியோர்களே! அதைவிட அதிகமாக வேறு எதுவுமில்லை. சரி, பொதுநலம் புரிந்த ஓர் ஏழைக்கு, அறநெறிநிற்க உங்களை ஊக்குவித்த ஓர் ஏழைக்கு, ஓய்வில் திளைக்க வேண்டிய ஓர் ஏழைக்குத் தகுந்த கைமாறு என்ன? அரசின் செலவில் இலவச பராமரிப்பை விட மிகவும் தகுந்த கைமாறு வேறெதுவும் இருக்க முடியாது. ஒலிம்பிய பந்தயத்தில் ஒரு குதிரை கொண்டு, அல்லது ஒரு சோடி குதிரைகள் கொண்டு, அல்லது நான்கு குதிரைகள் கொண்டு ஓடி வெற்றிவாகை சூடிய எவரையும் விட இந்த ஏழைக்கே அதைப் பெறும் தகுதி மிகவும் அதிகம். இவர்கள் உங்களுக்கு வெற்றியின் சாயலை அளிப்பவர்கள். நானோ உங்களுக்கு மெய்ம்மையை அளிப்பவன். அவர்களுக்கு பராமரிப்பு தேவையில்லை. எனக்கே அது தேவை. ஆதலால், கண்டிப்பான நீதிநெறிப்படி தகுந்த தண்டத்தை நானே முன்வைக்க வேண்டும் என்றால், அரசின் பராமரிப்பையே நான் முன்வைக்கிறேன்.
இப்படிக் கூறும்பொழுது நான் வேண்டுமென்றே வக்கிரத்தனம் காட்டுவதாக நீங்கள் எண்ணக்கூடும். நடுவர்களைப் பரிவுகொள்ள வைப்பதற்காக உணர்ச்சிததும்ப மன்றாடுவது பற்றி நான் ஏற்கெனவே கருத்துரைத்த பொழுதும் இப்படிக் கூறியிருந்தேன். இது வக்கிரத்தனம் அல்ல, பெரியோர்களே! இதுவே எனது உண்மையான நிலைப்பாடு: நான் வேண்டுமென்றே எவருக்கும் தீங்கிழைக்கவில்லை என்று உறுதிபட நம்புகிறேன். ஆனால் நீங்கள் அதை நம்பும்படி செய்ய என்னால் முடியாது. காரணம், நாங்கள் கலந்துரையாடுவதற்கு கிடைத்த அவகாசம் மிகவும் குறுகியது. பிறநாடுகளில் ஒதுக்கப்படுவது போல் இறப்புத் தண்டனைக்குரிய வழக்கு விசாரணைகளுக்கு ஒரு நாள் அல்ல, பல நாட்களை ஒதுக்கும் வழக்கத்தை நீங்கள் கைக்கொண்டிருந்தால், உங்களை என்னால் நம்பவைக்க முடிந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் கிடைக்கும் குறுகிய அவகாசத்துள் பாரதூரமான குற்றச்சாட்டுகளை முறியடிப்பது எளிதல்ல.
நான் எவருக்கும் தீங்கிழைப்பதில்லை என்று உறுதிபட நம்புகிறேன். எனவே நான் ஏதாவது கெடுதிக்கு உள்ளாக வேண்டியவன் என்று வலியுறுத்துவதன் ஊடாகவோ, மாற்றுத் தண்டனையை முன்மொழிவதன் ஊடாகவோ எனக்கு நானே தீங்கிழைப்பேன் என்று கொஞ்சமும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. நான் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? மெலிட்டஸ் முன்மொழியும் (இறப்புத்) தண்டனைக்கு உள்ளாக அஞ்சியா? அது நல்லதா கெட்டதா என்பது எனக்குத் தெரியாது என்று கூறினேனே! மாற்று முன்மொழிவை இடுவதன் ஊடாக, கெட்டது என்று எனக்கு நன்கு தெரிந்த ஏதோ ஒன்றை நான் தேர்ந்துகொள்வேன் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? சிறைவாசம்? எனது வாழ்நாளை நான் ஏன் சிறையில் கழிக்க வேண்டும்? அவ்வப்பொழுது அமர்த்தப்படும் சிறை அதிகாரிகளுக்கு நான் ஏன் அடிபணிய வேண்டும்? அபராதம்? அபராதம் செலுத்தும்வரை சிறைவாசம்? என்னைப் பொறுத்தவரை அபராதமும் சிறையும் ஒரே தாக்கத்தையே விளைவிக்கும். காரணம், அபராதம் செலுத்த என்னிடம் வக்கில்லை. என்னை நாடுகடத்தும்படி நான் யோசனை கூறவேண்டுமா? அந்த யோசனையை நீங்கள் பெரிதும் ஏற்கக்கூடும்.
பெரியோர்களே, அப்படிச் செய்வதற்கு நான் வாழ்வில் கடுங்காதல் கொண்டவனாக இருக்க வேண்டும். எனது சக குடிமக்களாகிய நீங்கள் எனது வாதங்களையும், உரையாடல்களையும் செவிமடுத்து, உங்கள் பொறுமையின் எல்லைக்கு வந்துவிட்டீர்கள் என்பதைக் கண்டுகொள்ள முடியாத குருடன் அல்ல நான். அவை உங்களுக்கு ஆக்கினையும் எரிச்சலும் ஊட்டியது கண்டு, அவற்றை இப்பொழுது நீங்கள் ஒழித்துக்கட்ட முயல்கிறீர்கள். பிறநாட்டு மக்கள் எவர்க்கும் அவற்றைச் சகித்துக்கொள்வது எளிதாகுமா? அதற்குப் பெரிதும் வழியில்லை, பெரியோர்களே!
நான் இந்த வயதில் இந்த நாட்டைத் துறந்து, மாநகரத்துக்கு மாநகரம் பெயர்ந்து, ஒவ்வொரு தடவையும் விரட்டப்பட்டவனாக எஞ்சிய எனது வாழ்நாளைக் கழிக்க நேர்வது எத்துணை சிறந்த வாழ்வு! எனது உரையாடலை இளையோர் இங்கு செவிமடுப்பது போல் நான் செல்லும் இடமெல்லாம் செவிமடுப்பார்கள் என்பது எனக்கு நன்கு தெரியும். நான் அவர்களை அப்புறப்படுத்த முயன்றால், தமது மூத்தோரைக் கொண்டு என்னை அவர்கள் விரட்டியடிப்பார்கள். நான் இளையோரை அப்புறப்படுத்தாவிட்டால், இளையோர் நலன்கருதி அவர்களது தந்தையரும் மற்றும் பிற உறவினரும் தாமாகவே முன்வந்து என்னை விரட்டியடிப்பார்கள்.
"ஆனாலும், சாக்கிரத்தீஸ், நீ எங்களைத் துறந்த பிறகு உன் சொந்த அலுவலில் புலனைச் செலுத்தி எஞ்சிய உன் வாழ்நாளை அமைதியாகக் கழிக்க முடியும் என்பது உறுதி அல்லவா?" என்று எவராவது வினவக்கூடும்.
உங்களுள் சிலருக்கு மற்றெல்லாவற்றையும் விட இதைப் புரியவைப்பது மிகவும் கடினம். நான் "எனது சொந்த அலுவலில் புலனைச் செலுத்த முடியாது;" காரணம், அது கடவுள் இட்ட ஆணைக்குப் பணிய மறுப்பதாகும் என்று நான் கூறினால், நான் கருத்தூன்றித்தான் அப்படிக் கூறுகிறேன் என்பதை நீங்கள் நம்பமாட்டீர்கள். மறுபுறம், நன்னலம் குறித்தும், உங்கள் காதில் விழும் வண்ணம் நான் பேசும் மற்றெல்லா விடயங்கள் குறித்தும், என்னையும் பிறரையும் நான் ஆராயும் விடயங்கள் குறித்தும் ஒவ்வொரு நாளும் தவறாது ஆராய்வதே ஒரு மனிதன் செய்யக்கூடிய தலைசிறந்த செயல்; அவ்வாறு ஆராயாது வாழும் வாழ்வு ஒரு வீண் வாழ்வு என்று நான் உங்களிடம் கூறினால், நீங்கள் இன்னும் குறைவாகவே என்னை நம்ப முனைவீர்கள்.
உங்களை நம்பவைப்பது எளிதல்ல, பெரியோர்களே! எனினும் நிலைமை அதுவே. அதை ஏற்கெனவே நான் வற்புறுத்திக் கூறினேன். அத்துடன், நான் தண்டிக்கப்பட வேண்டியவன் என்று கருதும் வழக்கம் என்னிடம் இல்லை. என்னிடம் பணம் இருந்தால், நான் செலுத்தக்கூடிய அபராதத்தை தெரிவித்திருப்பேன். அபராதம் செலுத்துவதால் எனக்கு எதுவித தீங்கும் விளையாது. என்னிடம் பணம் இல்லாதபடியால், அபராதத்தை என்னால் நிர்ணயிக்க முடியாது. ஆனாலும், நீங்கள் விரும்பினால், நான் செலுத்தக்கூடிய அபராதத்தை நீங்களே நிர்ணயிக்கலாம். என்னால் 1 மினா (65 வெள்ளி) செலுத்த முடியும் என்று நினைக்கிறேன். ஆம், எனக்கு ஒரு மினா கட்டணம் விதிக்கவும்!
ஒரு நொடி பொறுத்துக்கொள்ளுங்கள், பெரியோர்களே! இங்கே பிளேட்டோ, கிறித்தோ, கிறித்தோபியூலஸ், அப்போலோதொரஸ் கூடி, தமது பொறுப்பில் 30 மினா கட்டணம் செலுத்தும் யோசனையை முன்வைக்கும்படி கேட்கிறார்கள். மெத்த நல்லது, பெரியோர்களே, அவ்வளவு தொகை செலுத்த நான் உடன்படுகிறேன். கொடுப்பனவுப் பொறுப்பை இவர்களிடம் சுமத்தவும்.
500 நடுவர்களின் தீர்ப்பு:
இறப்புத் தண்டனையை
ஆதரித்து 360 வாக்குகள்
எதிர்த்து 140 வாக்குகள்
நல்லது, பெரியோர்களே, ஒரு குறுகியகால வெற்றிக்காக சாக்கிரத்தீசை, "அந்த ஞானவானை," சாகடித்த புகழையும், எங்கள் மாநகரத்தை இகழ விரும்புவோர் சுமத்தும் பழியையும் நீங்கள் ஈட்டப் போகிறீர்கள். நான் ஞானமற்றவன் என்றாலும் கூட, உங்களைக் குறைகூற விரும்புவோர் என்னை ஞானவான் என்றே கூறுவார்கள். இன்னும் கொஞ்சக்காலம் நீங்கள் தாமதித்திருந்தால், இயற்கை வழியிலேயே உங்கள் எண்ணம் கைகூடியிருக்கும். நான் பெரிதும் வாழ்ந்து முடிந்து, மாளும் வயது நெருங்குவதை உங்களால் காண முடிகிறதே! இதை உங்கள் எல்லோருக்கும் நான் கூறவில்லை; எனது இறப்புத் தண்டனைக்கு வாக்களித்தவர்களுக்கே கூறுகிறேன். அவர்களுக்கு நான் வேறொன்றையும் கூறவேண்டியுள்ளது:
பெரியோர்களே, எனது விடுதலையை ஈட்டிக்கொள்வதற்கு வேண்டிய அனைத்தையும் சொல்வதும், செய்வதும் தகும் என்று நான் எண்ணியிருந்தால் எத்தகைய வாதங்களைக் கையாண்டிருப்பேனோ அத்தகைய வாதங்களைக் கையாளாதபடியால் நான் குற்றத்தீர்ப்புக்கு உள்ளானதாக நீங்கள் கருதுகிறீர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் அது சற்றும் உண்மை அல்ல. வாதங்கள் அற்றநிலையில் நான் குற்றத்தீர்ப்புக்கு உள்ளாகவில்லை. அகந்தையும் துடுக்கும் அற்ற நிலையிலேயே நான் குற்றத்தீர்ப்புக்கு உள்ளாகியிருக்கிறேன். உங்களுக்குப் பேரின்பம் பயக்கும் வண்ணம் உங்களை விளித்து நான் உரையாற்ற மறுத்தேன். நான் சொல்லவும் செய்யவும் தகாதவை என்று கொள்பவை அனைத்தையும் கூறி, மற்றவர்களிடம் நீங்கள் கேட்டுப் பழகியவை அனைத்தையும் கூறி அழுது புலம்புவதைக் கேட்க நீங்கள் ஆசைப்பட்டிருப்பீர்கள். எனினும் ஆபத்தை எதிர்நோக்கிய காரணத்துக்காக நான் கூனிக்குறுகி மண்டியிட வேண்டும் என்று அப்பொழுது நான் நினைக்கவுமில்லை; எனது பதில்வாதத்தை நான் முன்வைத்த விதம் குறித்து இப்பொழுது நான் வருந்தவுமில்லை. வேறு வகையான பதில்வாதத்தின் பெறுபேறாக வாழ்வதை விட, இத்தகைய பதில்வாதத்தின் பெறுபேறாக மாள்வதையே நான் பெரிதும் விரும்புகிறேன்.
போர்க்களத்தைப் போலவே நீதிமன்றத்திலும் நானோ பிறரோ எந்த வழியிலும் உயிர்தப்புவதற்காக அவரவர் சாமர்த்தியத்தைப் பயன்படுத்தக் கூடாது. போர்க்களத்தில் உங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, உங்களைப் பின்தொடரும் எதிரிகளிடம் மண்டியிட்டு, நீங்கள் உயிர்தப்பி ஓடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பது தெரிந்ததே. நீங்கள் உளவுறுத்தலின்றி நெறிபிறழ்வோர் என்றால், எல்லா வகையான ஆபத்துகளிலிருந்தும் உயிர்தப்பி ஓடுவதற்கு பெருமளவு உபாயங்கள் உங்களுக்கு கிடைக்கும். உயிர்தப்பி ஓடுவது அத்துணை கடினமல்ல, பெரியோர்களே! தவறிழைக்காமல் தப்பியோடுவதே மிகவும் கடினம். மிகவும் வேகம்கூடிய ஓட்டம் அது! தற்போதைய ஓட்டப் பந்தயத்தில் பங்குபற்றும் இரு அணிகளுள் வேகம்குறைந்த என் முதிய அணியை வேகம்குன்றிய அணி தாண்டிவிட்டது. என்மீது குற்றஞ்சுமத்தியோர் விரைவாகவும் கெட்டித்தனமாகவும் ஓடவல்லவர்கள். எனினும் வேகம்கூடிய அநீதி அவர்களைத் தாண்டிவிட்டது.
உங்களால் இறப்புத் தண்டனை விதிக்கப்பட்ட கைதியாக இந்த நீதிமன்றத்தை விட்டு நான் புறப்படப் போகிறேன். அவர்கள் வன்மமும் வக்கிரத்தனமும் புரிந்த குற்றவாளிகள் என்று மெய்யுலகினால் தீர்ப்பளிக்கப்பட்டவர்களாகப் புறப்படப் போகிறார்கள். எனது தண்டனையை நான் ஏற்கும் அதேவேளை தமது தண்டனையை அவர்கள் ஏற்பார்கள். அப்படி நிகழ்தல் திண்ணம்; அதில் ஐயமில்லை; இது பெரிதும் செவ்விய பெறுபேறு என்றே கருதுகிறேன்.
இறக்குந்தறுவாயில் நிற்கும் நான், மானுடர்க்கு தீர்க்கதரிசனம் எனும் கொடை கைகூடும் தறுவாயில் நிற்கும் நான், எனக்கெதிராக வாக்களித்த உங்களுக்கு, என்னைச் சாகடிக்கும் உங்களுக்குச் சொல்வேன்: நான் இறந்தவுடன், வஞ்சம் உங்களைத் தாக்கும்; நீங்கள் என்னைக் கொல்வதை விடவும் வேதனைமிகுந்த தண்டனையை உங்களுக்கு அளிக்கும். என்னைச் சாகடிப்பதன் ஊடாக உங்கள் நடத்தைக்கு நீங்கள் கண்டனத்துக்கு உள்ளாகாமல் தப்பலாம் என்ற நம்பிக்கையில் என்னைச் சாகடிக்கத் தீர்மானித்தீர்கள். அதன் பெறுபேறு எதிர்மாறாய் அமையப் போகிறது. உங்களை இன்னும் பலர் கண்டிக்கப் போகிறார்கள். உங்களுக்குத் தெரியாமலேயே அவர்களை இதுவரை நான் கட்டுப்படுத்தி வைத்துள்ளேன். அந்த இளைஞர்கள் உங்களுடன் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளப் போகிறார்கள். உங்களுக்கு மிகவும் எரிச்சலூட்டப் போகிறார்கள். ஆட்களைச் சாகடிப்பதன் ஊடாக உங்கள் தகாத வாழ்க்கைப் போக்கிற்கு எதிரான கண்டனத்தை முடக்கலாம் என்று நீங்கள் எதிர்பார்த்தால், உங்கள் நியாய விளக்கத்தில் ஏதோ ஒரு தவறுண்டு என்பது பெறப்படுகிறது. இவ்விதமாக நீங்கள் தப்பிக்கொள்வது கைகூடப் போவதில்லை; அதைப் பிறர் மெச்சப் போவதில்லை. மற்றவர்களின் வாயைப் பொத்தாமல், உங்களால் இயன்றவரை உங்களை நல்லவர்களாக மாற்றிக்கொள்வதே மிகவும் எளிதான தலைசிறந்த வழி. இதுவே என்னைச் சாகடிக்க வாக்களித்தவர்களுக்கு நான் விடுக்கும் இறுதிச் செய்தி.
அதிகாரிகள் தமது அலுவல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். நான் சாகவேண்டிய இடத்துக்குப் புறப்பட இன்னும் நேரம் இருக்கிறது. ஆதலால் என்னை விடுதலைசெய்ய வாக்களித்த உங்களுக்கும் ஒருசில சொற்களை உதிர்க்க விரும்புகிறேன்: பெரியோர்களே, வழக்கின் பெறுபேற்றை ஏற்றுகொள்ளுங்கள்! கிடைத்த சில நொடிகளில் என்னைத் திளைக்க விடுங்கள்! சட்டம் அனுமதிக்கும் இத்தருணத்தைப் பயன்படுத்தி நாங்கள் உரையாடி மகிழக்கூடாது என்பதற்கு எதுவித நியாயமும் இல்லை. உங்களை என் நண்பர்களாகவே நான் நோக்குகிறேன். எனது தற்போதைய நிலைமையைச் சரிவர விளங்கிக்கொள்ளும்படி உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
நடுவர்-குழாத்துப் பெருமக்களே! நீங்கள் அப்படி விளிக்கப்பட வேண்டியவர்களே! எனக்கு கிடைத்துள்ள பட்டறிவு வியக்கத்தக்கது. கடந்த காலத்தில் நான் செவிமடுத்துப் பழகிய தெய்வக்குரல், என்றென்றும் என்னுடன் கூடி வலம்வந்தது. மிகவும் அற்ப விடயங்களில் கூட நான் தவறாக வழிநடக்கத் தலைப்பட்டால், என்னை அது தடுத்தாட்கொண்டு வந்தது. இப்பொழுது எனக்கு ஏதோ நடந்துவிட்டது; நீங்களும் அதைக் காண முடிகிறதே! அதைப் பேரிடி என்று கருதலாம்; பெரிதும் பேரிடி என்றே கொள்ளப்படுகிறது.
இன்று காலை வீட்டிலிருந்து நான் புறப்படுந் தறுவாயிலோ, இங்கே நீதிமன்றில் எனக்குரிய இடத்தில் நான் அமருந் தறுவாயிலோ, எனது உரையின் எந்தக் கட்டத்திலோ மேற்படி தெய்வக்குரல் என்னைத் தடுத்ததில்லை. வேறு கலந்துரையாடல்களில் பெரிதும் ஒரு வசனத்தின் இடையில் அது குறுக்கிட்டதுண்டு. ஆனால் இப்பொழுது இந்த வழக்காடலின் எந்தக் கட்டத்திலும் நான் கூறிய அல்லது செய்த எதிலுமே அது குறுக்கிட்டதில்லை. அதற்கான நியாயவிளக்கம் என்ன? நான் கருதுவதை உங்களுக்கு சொல்லிவிடுகிறேன்: எனக்கு நேர்ந்தது ஓர் அருட்பேறே என்பது எனது ஊகம். நாங்கள் இறப்பை ஒரு கேடு என்று கொள்வது மிகவும் தவறு. அப்படி நான் நினைப்பதற்குத் தகுந்த ஆதாரம் உண்டு: நான் புரியப்போகும் செயலினால் நல்ல பெறுபேறு எதுவும் விளையாது என்பது உறுதி என்றால், நான் செவிமடுத்துப் பழகிய தெய்வக்குரல் என்னத் தடுத்தாட்கொள்ளத் தவறியிருக்க முடியாது!
இறப்பு ஒரு கேடல்ல
இனி, இறப்பு என்பது உணர்வற்ற ஒன்று என்றால், அது கனவற்ற வெறும் உறக்கம் என்றால், அது ஓர் அற்புதப்பேறாதல் வேண்டும். ஒருவர் கனவே காணாவண்ணம் நன்கு உறங்கிய இரவைச் சுட்டிக்காட்டும்படியும், அவரது வாழ்நாளின் ஏனைய இரவுபகல்கள் அனைத்துடனும் அதை ஒப்பிட்டுப் பார்க்கும்படியும், அவற்றை உரியமுறைப்படி கருத்தில் கொண்டு, அவரது வாழ்நாளில் அவர் நலம்பட மகிழ்ந்து கழித்த இரவுபகல்கள் எத்தனை என்று கூறும்படியும் கேட்டால், (பாரசீக) மாமன்னன் கூட அத்தகைய நாட்களை ஏனைய நாட்களுடன் எளிதில் ஒப்பிட்டுக் கூறிவிடுவான்; குடிமகன் எவரிடமும் கேட்கத் தேவையில்லை. இறப்பும் அது போன்றதே என்றால், அதை நான் ஓர் ஆதாயமாகவே கருதுவேன். காரணம், காலம் முழுவதையும் வெறுமனே ஒரு தனியிரவாகக் கருதமுடியும் அல்லவா?
மறுபுறம் இறப்பு என்பது இவ்விடம் விட்டு வேறிடம் பெயர்வது என்றால், இறந்தவர்கள் அனைவரும் அவ்விடம் வாழ்வதாக எங்களிடம் கூறப்படுவது உண்மை என்றால், அதைவிட மகத்தான அருட்பேறு வேறென்ன கிடைக்க முடியும்? எமது பெயரளவிலான நீதியின் கைக்கு அகப்படாத மறுவுலகைச் சென்றடையும் எவரும் அவ்வுலக நீதிமன்றுகளில் தலைமை வகிப்பவர்கள் எனப்படும் மினோஸ், ரதமந்தஸ், ஏக்கஸ், திரித்தொலெமஸ் ஆகிய மெய்நீதிபதிகளையும், மண்ணுலக வாழ்வில் நெறிநின்ற மற்றும் பிற தேவர்களையும் கண்டுகளிப்பர். அங்ஙனமாயின் மறுவுலகப் பயணம் பலன்தராத பயணமாவது எங்ஙனம்?
இன்னொரு விதமாகவும் வினவுகிறேன்: ஓவியஸ், மியுசேயஸ், எசியோட், ஹோமர் ஆகிய புலவர்களைச் சந்திக்க உங்களுள் ஒருவர் எவ்வளவு கட்டணம் செலுத்துவார்? உண்மையில் அவர்களைச் சந்திக்கலாம் என்றால், நான் திருமபத் திரும்ப பத்து தடவைகள் இறக்கத் தயார். அங்கே அவர்களுடன் இணைந்து பலடெஸ், தெலமனின் மகன் ஏஜாக்ஸ், அநீதியான விசாரணையின் ஊடாகச் சாகடிக்கப்பட்ட வேறு பழைய வீரர்கள் அனைவரையும் சந்தித்து, எனது நற்பேறை அவர்களது நற்பேறுடன் ஒப்புநோக்குவது எனக்கு அருஞ்சுவையூட்டும் அனுபவமாகும், கேளிக்கை மிகுந்த அனுபவமாகும் என்று நினைக்கிறேன்.
அனைத்துக்கும் மேலாக, இங்குபோல் அங்கும் மக்களின் உள்ளங்களைத் துருவி ஆராய்ந்து, அவர்களுள் யார் உண்மையில் ஞானவான் என்பதையும், உண்மையில் தன்னை ஞானவான் என்று வெறுமனே கருதுபவர் யார் என்பதையும் கண்டறிவதில் எனது பொழுதைக் கழிக்க ஆசைப்படுகிறேன். துரோய் மீது போர்தொடுத்த (கிரேக்கப்) படையின் மாபெரும் தலைவன் (மன்னன் அகமெம்னன்), ஒடிசியஸ், சிசிபஸ், ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் ஆகியோரிடம் வினவுவதும், அவர்களுடன் பேசுவதும், கூடி விவாதிப்பதும் கற்பனைக்கும் எட்டாத இன்பம் பயக்கும். அத்தகைய செயலுக்கு அங்கு எவரும் சாகடிக்கப்படுவதில்லை என்று எண்ணுகிறேன். ஏனெனில், எங்களிடம் கூறப்படுவது உண்மை என்றால், அவர்களது உலகு வேறுபட்ட இன்பம் துய்ப்பதில் எங்களது உலகை விஞ்சியுள்ளது; அதைவிட அவர்கள் எஞ்சிய காலம் முழுவதும் இறவாப்பேறு பெற்றுள்ளார்கள்.
நடுவர்-குழாத்துப் பெருமக்களே, நீங்களும் இறப்பை நம்பிக்கையோடு எதிர்பார்க்க வேண்டும். உங்கள் உள்ளத்துள் இந்த உறுதியான நம்பிக்கையை ஊட்டவேண்டும். நல்லவனுக்கு வாழ்விலோ மாள்விலோ எதுவுமே தீங்கிழைக்க முடியாது. அவனது நற்பேறுகளைக் கடவுளர் புறக்கணிப்பதில்லை. தற்பொழுது எனக்கு ஏற்பட்டுள்ள பட்டறிவு தன்பாட்டில் ஏற்பட்டதல்ல. நான் இறந்து, எனது பராக்குகளிலிருந்து விடுபடுவதற்கு எந்தக் காலம் நல்லதோ, அந்தக் காலம் வந்துவிட்டது என்பது எனக்கு மிகவும் தெளிவாகத் தெரிகிறது. ஆகவேதான் எனது தெய்வக்குரல் என்னைத் தடுக்கவே இல்லை. என்மீது குற்றஞ்சுமத்தியோர், என்னைக் குற்றத்தீர்ப்புக்கு உள்ளாக்கியோர் கனிவான நோக்கத்துடன் அப்படிச் செய்யவில்லை. என்னை ஊறுபடுத்துவதாக எண்ணியே அப்படிச் செய்தார்கள். அந்த வகையில் அவர்கள் குற்றம் இழைத்தவர்கள் ஆகிறார்கள். ஆனாலும் கூட அவர்கள் மீது நான் இம்மியும் உளத்தாங்கல் கொள்ளவில்லை.
எவ்வாறாயினும், எனக்கோர் உதவிபுரிய இணங்கும்படி அவர்களிடம் நான் வேண்டிக்கொள்கிறேன். எனது புதல்வர்கள் வளர்ந்த பிறகு, அவர்கள் நன்னலத்தை விடப் பணத்துக்கோ வேறு எதற்குமோ முதன்மை கொடுப்பதாக நீங்கள் எண்ணினால், நான் உங்களுக்குத் தொல்லை கொடுத்தது போல் அவர்களுக்குத் தொல்லை கொடுத்து வஞ்சம் தீர்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் நியாயமின்றிக் கொட்டமடித்தால், முக்கிய சங்கதிகளைப் புறக்கணித்தால், எதிலுமே கையாலாகாதவர்களாக இருந்துகொண்டு எதிலோ கையாலானவர்கள் என்று எண்ணினால், நான் உங்களைக் கடிந்தவாறு அவர்களைக் கடியுங்கள். நீங்கள் அப்படிச் செய்தால், உங்கள் கையினால் எனக்கும், எனது பிள்ளைகளுக்கும் நீதி கிடைத்ததாகும்.
நாங்கள் புறப்படவேண்டிய நேரம் இது; நான் மாளவும், நீங்கள் வாழவும் புறப்படவேண்டிய நேரம் இது. ஆனாலும் எங்களுக்குள் யாருக்கு மிகுந்த இன்பம் கிடைக்கும் என்பது கடவுளைத் தவிர வேறெவருக்கும் தெரியாது.
_____________________________________________________________________
Apologia de Socrates, as recorded by his pupil Plato, The Last Days of Socrates,
translated from Greek to English by Hugh Tredennick, 1954,
translated by Mani Velupillai.
http://faculty.sgc.edu/rkelley/The%20Apology%20of%20Socrates.pdf
https://www.sjsu.edu/people/james.lindahl/courses/Phil70A/s3/apology.pdf
No comments:
Post a Comment