பொலிகுதிரை ஈந்த அரியணை

ஹெரொடொட்டஸ்

சித்தரிக்கும்

பொலிகுதிரை ஈந்த அரியணை

    குடியாட்சி குறித்த உடன்பாடும் முரண்பாடும் மானுட வரலாற்றில் அருகருகே இழையோடியுள்ளன. பொது ஊழிக்கு முன் ஏறத்தாழ 7ம் நூற்றாண்டிலிருந்து இற்றைவரை கிரேக்கத்தில் குடியாட்சி ஒங்கி வந்துள்ளது. அத்தகைய குடியாட்சிபாமரத்தனமான ஆட்சிக்கு வழிவகுக்கும் என்று அஞ்சிஅதனை ஏற்கப் பின்னடித்தவர்களின் நிரலில் மாபெரும் கிரேக்க மெய்யியலாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். அவர்களுள் சாக்கிரத்தீஸ் (பொ. ஊ. மு. 469–399)பிளேட்டோ (பொ. ஊ. மு. 427–347) இருவரும் தலையாயவர்கள். குடியாட்சி ஓங்கிய அதென்ஸ் மாநகரத்தில் வாழ்ந்துகுடியாட்சியைத் துய்த்த இம்மாபெரும் மெய்யியலாளர்களைப் பெரிதும் ஈர்த்தது சர்வாதிகாரமே. பிரித்தானிய குடியாட்சியுள் வேரூன்றிய எச். ஜி. வெல்ஸ்பேர்ணாட் மற்றும் ஜேர்மனியிலிருந்து பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்த மார்க்ஸ்ஏங்கெல்ஸ் உட்பட்ட மேதைகள் பலரும் சர்வாதிகாரத்தால் பெரிதும் ஆட்கொள்ளப்பட்டவர்களே.  

        ஏறத்தாழ 2533 ஆண்டுகளுக்கு முன்னர்குடியாட்சி என்றால் என்ன நிறம் என்று வினவும் நிலையில் வெளியுலகம் இருந்த வேளையில்திட்டவட்டமாகச் சொல்வதாயின் பொ. ஊ. மு. 522 செப்டெம்பர் 29ம் திகதி, பாரசீகத்தின் அன்றைய தலைநகர் சூசாவில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் குடியாட்சி, செல்வராட்சிமுடியாட்சி... பற்றி எல்லாம் ஆராயப்பட்ட விதத்தை ஆதிகிரேக்க வரலாற்றறிஞரும்மேல்நாட்டு வரலாற்றின் பிதாமகருமாகிய எரொடொட்டஸ் (பொ. ஊ. மு. 484–425) வியக்கத்தக்க முறையில் எடுத்துரைத்துள்ளார்.

      அன்றும்இன்றும்என்றும் எதிரொலிக்கும் வண்ணம் மேற்படி மாநாட்டில் ஆற்றப்பட்ட உரைகளைஅவற்றுக்கு இட்டுச்சென்ற நிகழ்வுகளுடன்அவர் எடுத்துரைக்கும் பாங்கு நயந்துவக்கத்தக்கது. எத்தகைய ஆட்சியும் அதற்கு உட்பட்ட வெகுளிகளாலும்புரளிகளாலும் அபத்தத்துக்கு உள்ளாவதை எரொடொட்டஸ் மிகுந்த சுவைபடப் பிழிந்து கொடுத்துள்ளார். அதற்கு நாம் இடும் தலைப்பு: பொலிகுதிரை ஈந்த அரியணை.

   பாரசீக மாமன்னன் சைரஸ் (பொ. ஊ. மு. 600–529)அவனுடைய மூத்த மகன் கம்பைசஸ் (பொ. ஊ. மு. 530–523) அடுத்தடுத்து ஆட்சி புரிந்த காலத்தில் தமது பேரரசை மேன்மேலும் அகட்டும் நோக்குடன் அதன் எல்லைப்புறத்தில் நிலைகொண்டுஅதற்கு அப்பால் ஓங்கிய நாடுகளைக் கைப்பற்றுவதில் புலனைச் செலுத்தி வந்தார்கள்.

Happy Cyrus Day -The King Of Persia- – Iran Territory

     மாமன்னன் சைரஸ் பபிலோனியாவைக் கைப்பற்றிய பின்னர் அங்கேயே மாண்டான். மன்னன் கம்பைசஸ் எகிப்தைக் கைப்பற்றிஅங்கேயே நிலைகொண்டிருந்தான். அப்பொழுது அவன் இம்மியும் எதிர்பாராத உளவுச்செய்தி ஒன்று அவன் காதில் விழுந்தது. அது கேட்டு வெகுண்டெழுந்த கம்பைசஸ் தன் தலைநகர் சூசா நோக்கிப் புறப்பட்டான். இடைவழியில் அவன் விபத்துக்குள்ளாகிநோய்வாய்ப்பட்டு மடியுந் தறுவாயில் தன் பரிவாரத்துக்கு ஆற்றிய உரை:    


   பாரசீக மக்களேஎனது அலுவல்கள் அனைத்துள்ளும் மிகவும் இரகசியமான சங்கதியை உங்களிடம் தெரிவிக்க வேண்டிய கட்டத்தை நான் நெருங்கிவிட்டேன். நான் எகிப்தில் வாழ்ந்த காலத்தில் ஒரு நாள்,  உறக்கத்தில் ஓர் ஆவி எனக்குத் தென்பட்டது – ஐயோஎன்றுமே அதை நான் கண்டிருக்கக் கூடாது என்று எவ்வளவு தூரம் நான் இறைஞ்சுகிறேன் தெரியுமா! தாயகத்திலிருந்து ஒரு தூதுவன் வர நான் கனவு கண்டேன். தம்பி சிமேடிஸ் அரியணையில் வீற்றிருப்பதாகவும்அவன் தலை விண்ணைத் தொட்டிருப்பதாகவும் தூதுவன் என்னிடம் தெரிவித்தான். சிமேடிஸ் என் ஆட்சியை அபகரிப்பான் என்று அஞ்சிநான் அவசரப்பட்டுமதிகெட்டுச் செயற்பட்டேன். மனித வாழ்வில் விதியைத் தடுக்க முடியாது என்றே தோன்றுகிறது. நான் ஒரு மூடன் ஆனேன். சிமேடிசைக் கொல்ல பிரெக்சாஸ்பெசை  அனுப்பி வைத்தேன்.

     அந்தப் பாவம் இழைக்கப்பட்ட பின்னர்நான் அச்சமின்றி வாழ்ந்தேன். சிமேடஸ் உயிருடன் இல்லை என்றால்வேறெவனும் என்னை எதிர்த்துக் கிளம்புவான் என்று நான் எண்ணியதே இல்லை. நடக்கப்போவதைப் பற்றி எல்லாம் நான் தவறாக எண்ணியபடியால்தகுந்த நியாயம் எதுவுமின்றிஎன் சொந்தத் தம்பியையே நான் கொன்றுவிட்டேன். கொன்றும் கூடஎன் அரியணையை நான் பறிகொடுத்து நிற்கிறேன். தானே சிமேடிசிஸ் என்று ஆள்மாறாட்டம் செய்யும் ஒரு குருத்துவன் என்னை எதிர்த்துக் கிளம்புவான் என்றுதான் எனது கனவில் அந்த இறையாற்றல் ஆரூடம் கூறியது (அதை இப்பொழுதுதான் நான் புரிந்துகொண்டேன்). ஆகவே என் தம்பி சிமேடிசை நான் கொன்றது குற்றமே. மிகவும் கேவலமான முறையில் நடந்துகொண்ட அந்தக் குருத்துவனை எதிர்த்து என்னைக் காக்கும் கடப்பாடு மிகுந்த சிமேடிஸ், (என் தந்தை) மாமன்னர் சைரசின் மகன் சிமேடிஸ்என் தம்பி சிமேடிஸ்அவனுடைய உடன்பிறப்பாகிய என்னால் மிகவும் இழிவான முறையில் கொல்லப்பட்டுவிட்டான். அவன் இப்பொழுது உயிருடன் இல்லை. எனது அரண்மனையின் முகாமையாளனாக நான் அமர்த்திய அந்தக் குருத்துவன்அவனுடைய தம்பியாகிய அந்தப் போலி சிமேடிஸ் ஆகிய இருவருமே உங்கள் அரசை இப்பொழுது கட்டி ஆள்கிறார்கள். உண்மையான சிமேடிஸ் ஆகிய என் தம்பி இப்பொழுது உயிருடன் இல்லை. 

 பாரசீக மக்களே, எனது வாழ்வு முடிவடையும் இத்தறுவாயில், உங்களுக்காகவும், உங்கள் எதிர்காலத்துக்காகவும், எனது இறுதி விருப்பை உங்களிடம் தெரிவிக்க நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். உங்களிடம் – உங்கள் அனைவரிடமும், குறிப்பாக இங்கு வீற்றிருக்கும் எங்கள் அரச பரம்பரையினரிடம் இக்கோரிக்கையை நான் முன்வைக்கும் இந்த வேளையில், எங்கள் அரச பரம்பரையின் குலதெய்வங்களிடமும் அவ்வண்ணமே நான் வேண்டிக் கொள்கிறேன்:

  முன்னொருகால் நிகழ்ந்தது போல் திரும்பவும் எங்கள் அரசிறைமை அக்குருத்துவர்களிடம் சென்றடைய அனுமதிக்காதீர். அவர்கள் சூழ்ச்சியால் அதனை ஈட்டிக்கொண்டுள்ளார்கள் என்றால்நீங்களும் சூழ்ச்சியால் அதனை மீட்டுக்கொள்ள வேண்டும். அவர்கள் ஏதேனும் முரட்டுவலு கொண்டு அதனை ஈட்டிக்கொண்டுள்ளார்கள் என்றால்நீங்களும் முரட்டுவலு கொண்டு அதனை மீட்டுக்கொள்ள வேண்டும். உங்கள் முழுப் பலத்தையும் கொண்டு அதனை மீட்டுக்கொள்ள வேண்டும். நீங்கள் அதனை மீட்டுக்கொண்டால்இந்த நிலம் நலம் பயக்குமாக! உங்கள் மனைவியரும் பட்டிகளும் குலக்கொழுந்துகளை ஈன்றெடுப்பார்களாக! நீங்கள் என்றென்றும் சுதந்திரமாக வாழ்வீர்களாக! ஆனால்எங்கள் ஆட்சியை நீங்கள் மீட்கத் தவறினால்அல்லது அதனை மீட்க முயலவே தவறினால்நான் கூறியதற்கு நேரெதிர்மாறான கதிக்கு நீங்கள் ஆளாகுவீர்களாக என்றும்பாரசீகர் ஒவ்வொருவரின் வாழ்வும் என்னுடைய வாழ்வினைப் போல் முடிவடையுமாக என்றும் நான் சபிக்கிறேன்.

  கம்பைசஸ் மடிந்த பின்னர் அமைக்கப்பட்ட எழுவரைக் கொண்ட ஆட்சிமீட்புக் குழுவில் இடம்பெற்றோர்: ஒட்டேனஸ், அஸ்பதைன்ஸ், கோபிறையஸ், இந்தபிறீனஸ், மெகபைசஸ், ஐடானஸ், டேரியஸ்.  

 அடாவழியில் ஆள்மாறாட்டம் செய்து ஆட்சி புரியும் குருத்துவ உடன்பிறப்புகள் இருவரும் மேற்படி ஆட்சிமீட்புக் குழுவினால் ஓர் அதிரடித் தாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர்எத்தகைய ஆட்சிமுறையை வகுத்துக்கொள்வது என்பது பற்றி ஆராய்வதற்காகக் கூட்டப்பட்ட மாநாட்டில் ஆற்றப்பட்ட உரைகள்:   

    ஒட்டேனஸ்இனிமேல் எங்களுள் ஒருவர் எங்களை ஒரு மன்னரைப் போல் கட்டியாளாமல் விடுவதே சிறந்தது என்று நான் கருதுகிறேன். முடியாட்சி நல்லதுமல்லஅது இன்பம் தருவதுமல்ல. மன்னன் கம்பைசஸ் இறுமாந்து புரிந்த அட்டூழியங்களுக்கு நீங்கள் உள்ளானதுண்டு. சூழ்ச்சியால் அரசைக் கைப்பற்றிய குருத்துவன் செருக்குண்டு புரிந்த கொடுமையை நீங்கள் அனைவரும் பட்டறிந்ததுண்டு. ஆட்சியாளர் தாம் விரும்பிய எதையும் செய்வதற்கும்அதனைக் குறித்து எவர்க்கும் அவர்கள் மறுமொழி கூறாமல் இருப்பதற்கும் அனுமதிக்கும் முடியாட்சி என்பது எப்படி ஓர் ஏர்சீரானஇன்னிசைவான ஆட்சிமுறையாய் அமைய முடியும்அத்தகைய அதிகாரம் படைத்த பதவியில் அமர்த்தப்படுபவர் ஒரு தலைசிறந்த ஆளாக விளங்கினாலும் கூடஅவர் தனக்குக் கைகூடும் இன்பங்கள் அனைத்தையும் துய்க்குந்தோறும்அவர்தம் உள்ளத்துள் இறுமாப்பும்மானுட இயல்பின் அடிப்படைக் கூறு எனத்தக்க பொறாமையும் தலைதூக்கிதனது இயல்பான மனநீதியை அவர் இழந்து விடுவார். அத்தகைய ஆட்சியாளரில் பொறாமையும் இறுமாப்பும் வெளிப்பட்டே தீரும். இவ்விரு தன்மைகளுமே தீமை முழுவதற்கும் அடிப்படை. அவர் பொறாமையால் உந்தப்பட்டுஇறுமாந்து வெறிகொண்டுதறிகெட்டுச் செயற்பட்டுமேன்மேலும் அட்டூழியம் புரிதல் திண்ணம். மன்னர் அரும்பேறுகள் அனைத்தும் படைத்தவர். ஆனபடியால் அவர் பொறாமைக்கு உள்ளாகாமல் இருக்கக் கடமைப்பட்டவர். ஆனால் அதற்கு எதிர்மாறாகவே அவர் மக்களை நடத்துவார். நாட்டில் உள்ள கேடுகெட்ட ஆட்களுடன் கூடி இன்பம் துய்க்கும் அதேவேளைதன்னைச் சூழ்ந்து உயிர்வாழும் தலைசிறந்த ஆட்கள்மீது அவர் பொறாமை கொள்ளுவார். அவர் தன்னைத் தானே தலைசிறந்த ஆள் என்றே கொண்டாடுவார். ஆனபடியால் அநீதி எதற்கும் அவர் பழி ஏற்கப்போவதில்லை. நீங்கள் அவரைப் பருமட்டாக நயந்தால்நீங்கள் தன்மீது போதிய பற்றுறுதி கொள்ளவில்லை என்று அவர் விசனப்படுவார். மாறாகநீங்கள் அவருக்கு அடிபணிந்து நடந்தால்உங்கள் அடிவருடித்தனம் அவருக்கு எரிச்சலூட்டும். அத்தகைய குணம் அவருடைய முன்பின் முரண்பட்ட தன்மையையே புலப்படுத்தும். எங்கள் முன்னோரின் வழமைகளைத் தலைகீழாக்குவதே அவருடைய செய்கைகள் எல்லாவாற்றுள்ளும் படுமோசமானது. மிருக பலம் கொண்டு பெண்களை இரைகொள்வதும்கேட்டுக்கேள்வியின்றி ஆண்களைக் கொல்வதும் அதற்குள் அடங்கும். மாறாகபெரும்பான்மை-ஆட்சியோ பெருவிறலும் பேரழகும் வாய்ந்த சமத்துவம் என்னும் பெயர்பெற்றது. அது மட்டுமல்லபெரும்பான்மை-ஆட்சி என்றுமே ஒரு முடியாட்சியைப் போல் நடந்துகொள்வதில்லை. அத்தகைய ஆட்சியில் பெரும்பான்மைத் தரப்பினரே திருவுளச்சீட்டு மூலம் நீதிவான்களைத் தேர்ந்தெடுப்பர். அத்தகைய அதிகாரிகள் அனைவரும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவர். தீர்மானங்கள் அனைத்தும் பொதுமக்களின் அங்கீகாரத்துக்கு சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு பெரும்பான்மை என்பது முழுமையுள் அடங்குவதால்நாங்கள் முடியாட்சியைக் கைவிட்டுபெரும்பான்மைத் தரப்பை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவதே சாலச்சிறந்தது என்று நான் முன்மொழிகிறேன்.”      

   மெகபைசோஸ்கொடுங்கோன்மைக்கு முடிவுகட்டும் நோக்கில் ஒட்டேனஸ் கூறும் சங்கதிகளை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால்ஆட்சியதிகாரத்தைப் பெரும்பான்மைத் தரப்பிடம் ஒப்படைக்கும்படி அவர் கேட்டுக்கொள்கையில்அவர் நல்-நிதானம் தப்பி நெடுந்தூரம் போய்விடுகிறார். ஓர் உதவாக்கரையானகையாலாகாத கும்பலைவிட மதிகெட்டஇறுமாந்த தரப்பு வேறு எதுவுமே இல்லை. நாங்கள் ஒரு கொடுங்கோலரின் இறுமாப்புக்கு இரையாகாது தப்பவேண்டும் என்பதற்காககட்டுப்பாடற்ற பொதுமக்களின் இறுமாப்புக்கு இரையாக வேண்டும் என்று கூறுவதை எள்ளளவும் ஏற்க முடியாது. ஒரு கொடுங்கோலர் என்னதான் செய்தாலும்தான் என்ன செய்கிறார் என்பதாவது அவருக்குத் தெரியும். ஆனால் பொதுமக்களுக்கோ தாங்கள் என்ன செய்கிறோம் என்பதே புரிவதில்லை. கல்வி கற்காதநலமான எதையும் கண்டறியாதசிறப்பான எதையும் கேட்டறியாத எவரும் எந்த விடயத்தைப் பற்றியும் அறிவுடையவராக விளங்குவது எங்ஙனம்சீறிப்பாயும் வெள்ளம் போல் அவர் ஆட்சியலுவல்களுள் நிதானமிழந்துஆட்களை இழுத்துத் தள்ளிதடக்கி விழுவதுண்டு. ஆகவே பாரசீகத்தின்  பகைவர்களையே அவர்களுடைய மக்கள் ஆளட்டும்! நாங்களோ ஒரு கூட்டாட்சி அணியாக அமையத்தக்க தலைசிறந்த ஆட்களைத் தேர்ந்தெடுத்துஅந்த அணியிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைப்போம். நாங்கள் இந்தக் கூட்டணியில் (சிலராட்சியில்) இடம்பெறுவது இயல்பான ஒன்றே. தலைசிறந்தவர்கள் பெரிதும் தலைசிறந்த முடிபுகளை எடுக்கவே வாய்ப்புள்ளது.”

    டேரியஸ்பெரும்பான்மை-ஆட்சி பற்றி மெகபைசோஸ் தெரிவித்த சங்கதி எனக்குச் சரி என்றே படுகிறது. ஆனால், சிலராட்சி பற்றி அவர் கூறிய சங்கதி எனக்குப் பிழையாகவே தெரிகிறது. சிறந்த குடியாட்சிசிறந்த சிலராட்சிசிறந்த முடியாட்சி ஆகிய ஆட்சிவகைகள் மூன்றினதும் சிறந்த எடுத்துக்காட்டுகளைக் கோட்பாட்டுவாரியாக ஒப்பிடுவோமாயின் - முடியாட்சியே மற்றிரு ஆட்சிவகைகளையும் விடத் தலைசிறந்தது என்று நான் முழங்குவேன். தலைசிறந்த ஒருவரைவிட வேறு தரப்பினர் எவரும் சிறந்தவராக அமைய முடியாது என்பது வெளிப்படை. அவர் நிதானத்தில் சிறந்தவர் என்றபடியால்அவர் பெரும்பான்மையோரைப் பிசகின்றிப் பரிபாலிப்பார். பகைவர்களுக்கு எதிரான தனது திட்டங்களின் இரகசியத்தை அவரால் சிறந்த முறையில் காக்கவும் முடியும். மாறாக, சிலராட்சி புரிவோருள் பலரும் மேன்மை எய்தப் பாடுபடுதுண்டு. அவர்களுக்கு இடையேயான அந்தரங்கமான போட்டி பகிரங்கமான பகையாக மாறுவதுண்டு. அவர்களுள் ஒவ்வொருவரும் ஆட்சியலுவல்களில் தலைமை வகிக்க ஆசைப்பட்டுதத்தம் கருத்துக்கள் மேலோங்குவதையே விரும்புவதுண்டு. ஈற்றில் அவர்கள் ஒருவரை ஒருவர் அறவே பகைப்பர். உட்பகை ஓங்கும். குருதி சிந்தும்... அது முடியாட்சிக்கு இட்டுச்செல்லும். ஏனைய ஆட்சிவகைகளை விட முடியாட்சி எத்துணை சிறந்தது என்பதையே மேற்படி வரலாற்றுக் கட்டங்கள் உணர்த்துகின்றன. பொதுமக்கள் புரியும் ஆட்சியில் என்றுமே திறமையீனம் நேர்தல் திண்ணம். தேர்ச்சியற்ற பொதுமக்கள் ஒருவரை ஒருவர் பகிரங்கமாக எதிர்ப்பதை விடுத்துஒருவருடன் ஒருவர் ஆழ்ந்த நட்புக்கொண்டுதிறமையற்ற முறையில் சமூகத்தைப் பரிபாலிப்பர். அவர்களுள் ஒருவர் மக்களின் தலைவராக முன்வந்துஅத்தகைய செய்கைகளை மற்றவர்கள் தொடர்ந்து மேற்கொள்ளாவாறு தடுக்கும்வரை அந்த நிலைவரம் நீடிக்கும். அதன் பிறகு பொதுமக்கள் இவரை நயப்பார்கள். பொதுமக்கள் இவரை நயப்பதால்இவர் செயலளவில் ஒரு மன்னர் என்றே  முழங்கப்படும். இம்மூவகை ஆட்சிகளுள் முடியாட்சியே தலைசிறந்தது என்பதை இதுவும் மெய்ப்பிக்கிறது. எவ்வாறாயினும்ஒரே கூற்றில் எனது வாதத்தை என்னால் சுருக்கி உரைக்க முடியும்: எங்கள் சுதந்திரம் எங்கிருந்து வந்ததுஅதை எங்களுக்கு யார் தந்ததுஅது பொதுமக்களிடமிருந்தாஒருசிலரிடமிருந்தாஒரு மன்னரிடமிருந்தா வந்ததுசரிஇதுவே எனது கருத்து: எங்களை விடுவித்தது ஒருவரே. அத்தகைய ஒருவரின் ஆட்சியையே நாங்கள் பேணிக்கொள்ள வேண்டும். அத்துடன்எங்கள் முன்னோரின் மரபுகள் என்றென்றும் நேர்த்தியானவை. அவற்றை நாங்கள் உதறித்தள்ளக் கூடாது. உதறித்தள்ளுவது நல்லதல்ல.”     

 மேற்படி மூவரும் உரையாற்றிய பின்னர்எஞ்சிய நால்வரும் டேரியசின் வாதத்தை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார்கள். தனது வாதம் தோல்வி அடைந்ததை அடுத்துஒட்டேனஸ் மீண்டும் ஆற்றிய உரை.

 ஒட்டேனஸ்: என்னருமைத் தோழர்களே! எங்களுள் ஒருவன் அரசனாகவேண்டும் என்பது இப்பொழுது தெளிவாகிவிட்டது. இனிஅரசாட்சியில் அமர்த்தப்படவுள்ளவனைத் திருவுளச்சீட்டுக் கொண்டாபாரசீக மக்களின் பெரும்பான்மையைக் கொண்டாவேறொரு முறையைக் கொண்டா தேர்ந்தெடுப்பதுஎதிலுமே உங்களுடன் நான் போட்டியிடப் போவதில்லை. ஏனென்றால்நான் ஆளவோஆளப்படவோ விரும்பவில்லை. ஆதலால்பின்வரும் நிபந்தனையின்படிஇந்தப் போட்டியிலிருந்து நான் விலகிக்கொள்கிறேன்: அதாவது நானோ எனது வழித்தோன்றல்களோ உங்கள் குடிமைகள் அல்லர்!” 

 மேற்படி நிபந்தனையை ஏனைய அறுவரும் ஏற்றுக்கொண்டனர். எனவே ஒட்டேனஸ் போட்டியில் கலந்துகொள்ளவில்லை. அவன் எவரையும் ஆதரிக்காதுநடுநிலை வகித்துஒதுங்கிக்கொண்டான். தம்முள் ஒருவரை மிகவும் செவ்விய முறையில் அரியணையில் அமர்த்துவது பற்றி எஞ்சிய அறுவரும் கூடி ஆராய்ந்தார்கள். அவர்களிடையே ஏற்பட்ட இணக்கங்கள்:


1. ஆட்சிமீட்புத் திட்டத்தை வகுத்தவனும்ஆட்சிமீட்புக் குழுவை அமைத்தவனும் ஒட்டேனசே என்பதால்தம்முள் எவன் அரசன் ஆகினாலும்ஆண்டுதோறும் ஒட்டேனசுக்கும்அவன் வழித்தோன்றல்களுக்கும் மீதியா (Media) புலத்து ஆடைகளும்பாரசீகத்தின் தலைசிறந்த கொடைகளும் வழங்கப்பட வேண்டும்.

2.  அரசன் ஒரு பெண்ணுடன் படுத்திருக்கும் வேளை தவிர வேறெந்த வேளையிலும் ஒட்டேனஸ் உட்பட எழுவருள் எவரேனும் வாயில்காப்போர் ஊடாக அறிவித்தல் கொடுக்காமலேயே அரண்மனைக்குள் புகலாம்.

3.    தமது குடும்பங்களைச் சேராத வேறொரு குடும்பத்தில் அரசன் மணம் முடிக்கக் கூடாது.

4.    காலையில் அறுவரும் தத்தம் குதிரைகளில் ஏறி நகரத்துக்கு வெளியே செல்ல வெண்டும். அப்பொழுது யாருடைய குதிரை முதலில் கனைக்கிறதோஅவனே அரசனாக வேண்டும்.

     அன்றிரவு டேரியசுக்கும்ஒரு விண்ணன் என்று பெயர்பெற்ற அவனுடைய குதிரைப்பாகனாகிய ஒய்பறசுக்கும் இடையே இடம்பெற்ற இரகசிய உரையாடல்:

  டேரியஸ்: “ஒய்பறஸ்அரசபதவி பற்றி நாங்கள் இப்படித்தான் முடிவெடுத்தோம்: காலையில் நாங்கள் அறுவரும் எங்கள் குதிரைகளில் ஏறிப் புறப்படப் போகிறோம். அப்பொழுது எவனுடைய குதிரை முதலில் கனைக்கிறதோஅவனே அரசனாவான். இனி, குதிரைச் சங்கதியில் உனக்கு ஏதாவது கெட்டித்தனம் உண்டானால்மற்றவர்களை விடுத்து நாங்களே பரிசைத் தட்டிக்கொள்வதற்கு உடனடியாக ஓர் உபாயத்தை வகுத்துக்கொள். 

     ஒய்பறஸ்: “எசமான்தாங்கள் அரசன் ஆகுவீர்களா அல்லவா என்பது இப்படித்தான் தீர்மானிக்கப்படும் என்றால்தாங்கள் கலவரம் அடைய வேண்டியதில்லை. வேறெவரும் அல்லதாங்களே அரசனாதல் திண்ணம். இந்த நிலைவரத்துக்கு வேண்டிய பரிகாரம் எனக்குத் தெரியும்.”  

       டேரியஸ்: “சரிஅப்படி ஓர் உபாயம் உனக்குத் தெரியும் என்றால்அதற்கு வேறொரு நாளைக் காத்திருக்க வேண்டாம். இப்பொழுதே அதனைப் பயன்படுத்த வேண்டும். காலை விடிந்தவுடன் எங்கள் போட்டி இடம்பெறும்.”

     அன்றிரவு, நன்கு இருட்டிய பிறகு, ஒய்பறஸ் தனது எசமானுக்கு மிகவும் உவப்பான பெண்குதிரையை நகரத்துக்கு வெளியே கொண்டுபோய் ஓரிடத்தில் பத்திரமாய்க் கட்டிவைத்தான். பிறகு எசமானின் பொலிகுதிரையைக் கொண்டுபோய், திரும்பத் திரும்ப அந்தப் பெண்குதிரையைச் சுற்றுவித்தான். சுற்றுவிக்கும்பொழுது, பெண் குதிரையுடன் அதனை உரசுவித்தான். ஈற்றில் பொலிகுதிரையைப் பெண்குதிரைமீது ஏற விட்டான்.

           வைகறையில் எழுந்த அறுவரும், தாங்கள் இணங்கிக்கொண்டபடி, தத்தம் குதிரைகளில் ஏறி நகருக்கு வெளியே புறப்பட்டார்கள். இராத்திரி பெண்குதிரை கட்டப்பட்ட இடத்தை அவர்கள் அணுகியதும், டேரியசின் பொலிகுதிரை அந்த இடத்துக்குப் பாய்ந்து சென்று கனைத்தது! ஏனைய ஐவரும் உடனடியாகத் தத்தம் குதிரைகளை விட்டிறங்கி, டேரியசின் முன்னே நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்தார்கள்!

Darius the Great

 டேரியஸ் அரியணையில் அமர்ந்துமுதன்முதல் பிறப்பித்த ஆணையின்படிகுதிரையில் அமர்ந்த ஒருவனின் உருவம் ஒரு பாறையில் செதுக்கப்பட்டுஅதன் கீழ் “ஹிஸ்தாபெசின் மகன் டேரியஸ், (... என்னும் பெயர்கொண்ட) தன் குதிரையின் திறமையாலும்தனது குதிரைப்பாகன் ஒய்பறசின் திறமையாலும் பாரசீகர்களின் அரியணையை ஈட்டிக் கொண்டான்” என்று பொறிக்கப்பட்டது! (Herodotus, The Histories, Edited by Robert B. Strassler, Pantheon Books, New York, 2007, p. 239-250).   

   முடியாட்சி ஓங்கிய அன்றைய காலகட்டத்தில் குதிரையைக் கனைக்க வைத்து கதிரையில் அமர்ந்த அதே தரப்புகளின் வழித் தோன்றல்கள்குடியாட்சி ஓங்கிய இன்றைய காலகட்டத்தில் மக்களை இளிக்க வைத்து ஆட்சியை அபகரித்து வருகிறார்கள் - மக்களை ஒரு கும்பலாக்கிஇளிக்க வைத்து ஆட்சியை அபகரித்து வருகிறார்கள்.

   "ஒரு கும்பலை மகிழ்விப்பது ஓர் எளிதானஆனால் இழிவான செயல். அவர்களை வியக்கவைப்பது அத்துணை கடினமல்ல. அவர்களுக்கு நன்மை புரிந்துஅவர்களை மேம்படுத்தும் பணியே தொல்லையும் ஆபத்தும் மிகுந்தது (Caleb Colton). 
_________________________________________________________________________
மணி வேலுப்பிள்ளை   2011-11-25

No comments:

Post a Comment