சமூக ஊடகம்

மக்களின் நடத்தையை மாற்றியமைத்து வருகிறது;

வல்லாட்சியாளர்கள் அதை பயன்படுத்தி வருகிறார்கள்.



மரியா ரேசா

ஊடகவியலுக்கான நோபல் பரிசு பெற்ற இருவருள் ஒருவர் (2021)


“இன்று போல் என்றுமே ஊடகத் துறைஞரின் பணி முக்கியம் பெற்றிருந்ததில்லை.”



சுகாசினி ஹைடர்

செவ்வியாளர், இந்து, 2021-10-24

உங்களுக்கும் (இரசிய ஊடகர் திமித்திரி முரத்தோவுக்கும்) பரிசளித்ததன் மூலம் நோபல் குழு விடுத்துள்ள செய்தி என்ன?

இப்பொழுது உலக தகவல் துறையில் ஓர் அணுகுண்டு வெடித்த மாதிரி எனக்குப் படுகிறது. எவ்வாறு இரண்டாம் உலகப் போரை அடுத்து ஐ. நா. அமைக்கப்பட்டதோ, உலக மனித உரிமை பிரகடனம் விடுக்கப்பட்டதோ, அவ்வாறே உலகளாவிய முறையில் நாம் ஒருங்கிணைந்து பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேண்டியுள்ளது.

இந்த நோபல் பரிசு ஊடகர்கள் அனைவருக்கும் உரியது. தொழினுட்பம் கொண்டு எவரும் பொருளீட்ட முடியும். எனினும் பொருளீட்டலுக்கு அப்பாற்பட்ட தொழினுட்ப விழுமியங்கள் உண்டு. மக்களரங்கின் வாயில்காப்போராக விளங்கும் பணியை ஊடகர்கள் கருத்தூன்றி மேற்கொள்ள வேண்டும். ஊடக விழுமியங்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை தகர்த்தெறிவதன் மூலம், அதாவது ஆக்கபூர்வமான அழிப்புகள் மூலம் இன்றைய நிலைமையை நாம் மேம்படுத்தலாம். 

ஊடகர்கள் கொலையுண்ட அல்லது இலக்குவைக்கப்பட்ட நாடுகளின் பட்டியலின் உச்சத்தில் உள்ள 10 நாடுகளுள் பிலிப்பைன்சும் இந்தியாவும் இடம்பெற்றுள்ளன. உலகம் முழுவதும் குடியாட்சி நெறிப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளால், மக்களை ஈர்க்கும் விதமாக வாதிக்கும் அரசுகளால், மேன்மேலும் எதேச்சாதிகார அரசுகளால் ஊடகர்களுக்கு ஆபத்து அதிகரித்து வருகிறது. இத்தகைய மக்களீர்வாதம் ஓங்கிய காரணம் என்ன? 

தொழினுட்பவியல்! ஊடகர்கள் மக்களரங்கின் வாயில்காப்பவர்கள். மக்களரங்கின் வாயில்காக்கும் தமது வலுவை அவர்கள் சமூக ஊடகங்களிடம் பறிகொடுத்துவிட்டார்கள்! கடந்த தசாப்தத்தில் அது நடந்தது. சமூக ஊடகங்கள் கையாளும் தொழினுட்ப வலு அத்தகையது. 

இரசிய படைத்துறையினால் நெறிப்படுத்தப்படும் சமூக ஊடகங்கள் உக்ரேன் குறித்து மாற்று விவரங்களை வெளியிட்ட சங்கதி முதன்முதல் எமக்குத் தெரியவந்தது. 2014ல்  இந்திய தேர்தல் பரப்புரையின் பொழுதும் அவ்வாறு நடந்தது. 

சமூக ஊடகங்களின் தாக்கத்தால் மைய ஊடகங்களின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை குன்றிவிட்டது. சமூக ஊடகங்களால் ஆட்டிப்படைக்கப்படும் மக்கள் எல்லாவற்றிலும் நம்பிக்கை இழந்து வருகிறார்கள். “81 நாடுகளில் தரம்தாழ்ந்த சமூக ஊடகப் படைகள் குடியாட்சியை பின்னகர்த்தி வருகின்றன” என்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வொன்று கூறுகிறது.  

நிரலீடு (algorithm) ஊடாக எம்மை, எமது செயலை, உணர்வை, சிந்தனையை சமூக ஊடகங்கள் ஆட்டிப்படைத்து வருகின்றன; எமது நடத்தையை மாற்றியமைக்கும் சாதனங்களாக மாறியுள்ளன; மிகுந்த ஆதாயம் ஈட்டி வருகின்றன; அவற்றுக்கு பொறுப்புக்கூறும் கடப்பாடு கிடையாது; எமது தரவுகளைக் கவர்ந்து, எம்மைக் ஆட்டிப்படைக்கும் வணிகத் தரப்புகளாய் அவை ஓங்கியுள்ளன.

பெருந்தொழினுட்ப நிறுவனங்கள் பேச்சுச் சுதந்திரத்தை மக்கள்மயப்படுத்தியுள்ளன, மக்கள் அனைவருக்கும் களம் அமைத்துக் கொடுத்துள்ளன என்றெல்லம் சொல்லப்படுகிறதே! அவை மக்களின் தகவல் சுதந்திர உரிமைக்காக குரல் கொடுப்பதை விடுத்து, எதேச்சாதிகாரத்தின் கையாட்களாக விளங்குவதற்கான காரணம் என்ன? 

சரி! 2011ல் என்ன நடந்தது? அறபு வசந்தம் அறபு இருளாக மாறியது எங்ஙனம்? துவக்கத்தில் சமூக ஊடகங்கள் அறபு வசந்தத்தை வலுப்படுத்தின. பிறகு அரசாங்கங்கள் அதிலிருந்து ஒரு பாடத்தை கற்றுக்கொண்டன. அதாவது தனியாட்களையும் குழுமங்களையும் இலக்குவைத்து, உற்பத்திப் பொருட்களை விலைப்படுத்தும் உத்திகளையும் சாதனங்களையும் கையாண்டு, தமது அரசியல் நோக்கத்தை அவை எய்திக்கொண்டன. பெரிதும் பேச்சுச் சுதந்திரத்தை மறுப்பதற்கே ஆட்சியாளர் அவற்றைக் கையாண்டு வருகிறார்கள் என்கிறார் மார்க் சுகர்பேர்க் (Mark Zuckerberg). “இது மக்களைச் சென்றடையும் சுதந்திரம்!” என்று எள்ளி நகையாடுகிறார் பரன் கோகன் (Sacha Baron Cohen). 

இது நிரலீடு ஊடான சொற்பெருக்கும் விநியோகமும் ஆகும். ஓர் எளிய மெய்யை விட சினத்துடன் கூடிய ஒரு பொய் மிகவும் வேகமாகப் பரவும் என்பது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. ஊடகத்துறை உண்மைகளை நாடுவது. ஒரு சமூக ஊடகத்துக்கு உண்மை கசந்தால், அந்த சமூக ஊடகம், ஊடகத்துறைக்கு எதிரானது என்று பொருள். இத்தகைய மெய், பொய் போட்டியால் சமூகம் பிளவுபட்டுள்ளது.  

எடுத்துக்காட்டாக பிலிப்பைன்சில் எங்கள் அரசியல் கண்ணோட்டம் எதுவாயினும், நாங்கள் உண்மைகளைப் பற்றி வாதிட்டதில்லை. 2016ல் துதெர்த்தே (Duterte) அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அவருக்கு சார்பானவர்கள் என்றும், எதிரானவர்கள் என்றும் மக்கள் பிளவுபட்டார்கள். அமெரிக்காவில் திரம்புக்கு (Trump) சார்பானவர்கள் / எதிரானவர்கள் என்று பிளவுபட்டது போல.  இது நிரலீடு ஊடாக மக்களைப் பிளவுபடுத்திக் கையாளும் உத்தி. உண்மை என்பது மக்கள் அனைவருக்கும் பொதுவானது. அனைவருக்கும் பொதுவான உண்மையிலிருந்து மக்களைப் பிடுங்கி எறியும் உத்தியே சார்பானவர்கள் / எதிரானவர்கள் என்ற பிளப்பு. 

பேச்சுச் சுதந்திரம் என்றால், எவரும் தண்டனைக்கு உள்ளாகும் அச்சமின்றி உண்மையப் பேசும் சுதந்திரம், எண்ணுவதைப் பேசும் சுதந்திரம் என்று பொருள்.   வல்லாட்சியாளர்கள் சமூக ஊடகங்களை வேவுபார்த்து காய்நகர்த்துவதால், பேச்சுச் சுதந்திரம் இக்கட்டுக்கு உள்ளாகிறது. இணைய ஊடகங்கள் நாசவேலைகளில் ஈடுபடுவதற்கு வல்லாட்சியாளர்கள் இடங்கொடுக்கிறார்கள். அதன் மூலம் கேடுகெட்ட மனித இயல்பை அவர்கள் வெளிக்கொணர்ந்துள்ளார்கள்! 

நீங்கள் பில்ப்பைன்சு அதிபர் துதெர்த்தேயை எதிர்த்துப் போராடி, 2019ல் கைது செய்யப்பட்டது பற்றிக் கூறுங்கள்! 

பிலிப்பன்சில் அதிபர் துதெர்த்தே குடியாட்சி நெறிப்படி தேர்தலில் வென்று பதவியில் அமர்ந்தார். அவ்வாறு பதவியில் அமர்ந்த பிறரைப் போலவே அவரும் ஆட்சியின் நெம்புகோல்களை பற்றிக்கொண்ட கையோடு ஆட்சிபீடத்தை உள்ளூர மாற்றியமைத்தார். அவரது ஆட்சியில் 19 ஊடகர்களும், 63 சட்டவாளர்களும், 400 மனித உரிமையாளர்களும் கொல்லப்பட்டுள்ளார்கள். அப்புறம் போதைமருந்துப் போர் தொடுக்கப்பட்டு, குருதியாறு பாய்ச்சப்பட்டுள்ளது.

உண்மையைக் கண்டறியும் போராட்டத்தில் குதித்த எங்களுக்கு, போதைமருந்துப் போரில் மாண்டவர்களின் எண்ணிக்கையை கணிப்பதே முதலாவது சவாலாக அமைந்தது. காரணம், முதலில் ஓர் எண்ணிக்கையை முன்வைக்கும் காவல்துறை பிறகு அதை மீட்டுக்கொள்ளும் வழக்கத்தை நாங்கள் கண்டுகொண்டோம். 2012ல் 20 இளம் பணியாளர்களுடன் எங்கள் அமைப்பை தோற்றுவித்தோம். போதைமருந்துப் போர் குறித்து ஒருவர் கேள்வி எழுப்பிய கையோடு அவர் சமூக ஊடகங்களில் வசைபாடப்படுவது எங்களை எச்சரிக்கை அடைய வைத்தது. ஆதலால் அரச தகவல்துறை தெரிவிக்கும் விவரங்களை நாங்கள் முதலில் அம்பலப்படுத்தினோம். தகவல்துறையின் விவரங்கள் இணைய வாயிலாக காறுபாறு பண்ணப்படுவதை எங்கள் மக்களுக்கு சுடிக்காட்டினோம். 

“இணையத்தை ஆயுதமாக்கல்” என்னும் தலைப்பில் நான் ஒரு கட்டுரைத் தொடரை எழுதினேன். சமூக ஊடகங்களின் பொறிமுறை ஒருவரைப் பாதிக்கும் விதத்தை நான் சுட்டிக்காட்டினேன். இட்டுக்கட்டப்படும் உண்மைகளை (போலி விவரங்களை) ஆராய்ந்து பார்த்தபொழுது, 26 போலித்தளங்கள்  சமூக ஊடகங்கள் வாயிலாக 30 இலட்சம் பயனாளர்களைச் சென்றடவது தெரியவந்தது.  

என்னைக் கைதுசெய்வார்கள் என்றோ, ஈராண்டுகளில் 10 கைதாணைகள் என் வீடுதேடி வரும் என்றோ நான் எண்ணியிருக்கவில்லை. அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல், நாங்கள் தொடர்ந்து பணியாற்றினோம். எங்கள் அமைப்பின் சகநிறுவனர்கள் நால்வர். ஒரே சமயத்தில் எங்களுள் ஒருவர் மட்டுமே அஞ்சுவது, ஏனைய மூவரும் அஞ்சாமல் பணியாற்றுவது என்று நாங்கள் உடன்பட்டுக் கொண்டோம். அப்படி மாறிமாறி அஞ்சினோம், செயற்பட்டோம்! (சிரிக்கிறார்). 

அரும்பும் ஊடகர்களுக்கு உங்கள் புத்திமதி என்ன? முரண்டுபிடிக்கும் அரசை எதிர்கொள்ளும் விதங்கள் பற்றிய கைநூல் எதுவும் உண்டா? 

முதலாவது, ஊடகர்களும் செய்தியகங்களும் ஒருவருடன் ஒருவர் அல்லது ஒன்றுடன் ஒன்று போட்டியிடும் நெடுங்காலப் பொந்திலிருந்து வெளிவர வேண்டும். நாங்கள் எல்லோரும் ஒரே தரப்பினர். உண்மைகளைக் கண்டறியும் போராட்டத்தில், குறிப்பாக சமூக ஊடகங்களில், நாங்கள் அனைவரும் ஒரே தரப்பினர். உண்மைகளுக்கான போராட்டத்தில் ஒத்துழைப்பதே முன்னேற்றத்துக்கான வழி. ஓர் ஊடகராக விளங்குவதற்குரிய மகத்தான காலம் இது. இன்று போல் என்றுமே ஊடகத் துறைஞரின் பணி முக்கியம் பெற்றிருந்ததில்லை

Maria Ressa, Suhasini Haidar, The Hindu, 2021-10-24, translated by Mani Velupillai, 2021-10-24.

https://www.thehindu.com/news/international/interview-social-media-has-become-a-behaviour-modification-system-manipulated-by-strongmen-governments-maria-ressa/article37147673.ece?homepage=true

No comments:

Post a Comment