அரச இனவாதம்
இஸெத் ஹுசெயின்
தமிழரோ, முஸ்லீங்களோ, இந்தியரோ, மேற்குலகத்தவரோ அல்ல சிங்கள மக்களின் மாபெரும் எதிரிகள். சிங்கள அரச இனவாதியே சிங்களவரின் மாபெரும் எதிரி. "இனவாதம் பற்றிய எண்ணச் சிதறல்கள்" என்று தலைப்பிட்டு நான் எழுதிய கட்டுரையில் (The Island, 2013-10-12) விளக்கியவாறு, அரச அதிகார நெம்புகள் சிங்கள அரச இனவாதியின் கைவசம் உள்ளன. அரச வலைப்பின்னலின் அகத்தும் புறத்தும் நிலைகொண்ட தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அரச அதிகாரத்தை அவரால் நிலைநாட்ட முடிகிறது. அரச அதிகாரத்தை அவரால் பாரிய அளவில் கையாள முடிகிறது. ஆதலால் சராசரி சிங்கள இனவாதியை விட அரச இனவாதியே மிகவும் கேவலமான பிறவி ஆகிறார். தமிழரும், முஸ்லீங்களும், இந்தியர்களும், மேற்குலகத்தவருமே தனது எதிரிகள் என்று அவர் வெளியே சொல்லிக்கொள்வார். எனினும் அவர்கள் அனைவரையும் விட சிங்களவருக்கே அவர் அதிக கேடு விளைவித்துள்ளார். தனது அட்டூழியங்களை அகமகிழ்ச்சியுடன் முன்னெடுத்துச் செல்லும் அவரைத் தடுத்து நிறுத்தாவிட்டால், இலங்கையைத் துண்டாடும் நிலைமைக்குக் கூட அவரால் இட்டுச்செல்ல முடியும்.
ஆதலால் அரச இனவாதம் என்னும் அம்சத்தைச் சரிவரப் புரிந்துகொள்வது மிக முக்கியம். நாடு எதிர்நோக்கும் பேரிடரைத் தடுப்பதற்கு, முதற்கண் அப்பேரிடரை நாங்கள் இனங்கண்டு, அதைச் சரிவரப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. அதுவும் இத்தருணத்தில் அப்பேரிடரைப் புரிந்துகொள்வது மிக முக்கியம் என்றே தெரிகிறது. இந்த இறுதிக் கட்டத்திலாவது, இன்று பல தசாப்தங்கள் கழிந்த பின்னராவது, எங்கள் இனப்பிரச்சனையை எங்களால் உடனடியாகத் தீர்க்கமுடியாவிட்டாலும் கூட, தமிழரும் சிங்களவரும் தத்தம் நலன்கருதி, தம்மிடையே ஒத்துமேவி ஒரு தீர்வை நோக்கியாவது நகரத் தொடங்கலாமே! அப்படி ஒரு நம்பிக்கை, கடுகளவு நம்பிக்கை, அறியாத்தனமான நம்பிக்கை, ஏதோவொரு நம்பிக்கை பிறந்துள்ளது. வட மாகாண மன்றத்தின் ஊடாக ஓர் ஒத்துமேவல் மேலோங்கும் வாய்ப்பினையே உண்மையில் இங்கு நான் கருத்தில் கொண்டுள்ளேன். 2009 முதல் ஏறத்தாழ நான்கு ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்ட தந்திரோபாயம் படுதோல்வி அடைந்துள்ளதை - வடபுலத்தைப் படைமயமாக்கி, பாரிய அடிப்படைக் கட்டமைப்பிலும் மற்றும் பிற மடைத்தனங்களிலும் ஈடுபடும் தந்திரோபாயம் படுதோல்வி அடைந்துள்ளதை - வட மாகாண மன்றத் தேர்தல் புலப்படுத்துகிறது. மறுபுறம் தமிழ் – சிங்கள நெகிழ்வுப்போக்கு, ஒத்துழைப்பு என்பவற்றின் அடிப்படையில் வட மாகாண மன்றத்தின் ஊடாக அடிமட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றும் நடைமுறை அனுகூலமான மாற்றங்களுக்கு இட்டுச்செல்லக் கூடும் என்று கருத இடமுண்டு. இத்தகைய சூழ்நிலையில் அரச இனவாதிகள் வட மாகாண மன்றத்துக்கு ஆப்புவைக்க அரும்பாடுபடுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கலாம். அத்துடன் இத்தகைய சூழ்நிலையிலேயே அரச இனவாதம் என்னும் அம்சத்தை நாங்கள் சரிவரப் புரிந்துகொள்வது மிக முக்கியம்.
அதனைப் புரிந்துகொள்ளும் விதத்தை விபரிக்க முன்னர், அரச இனவாதியின் தேசவிரோத அட்டூழிய வரலாறு பற்றி சில குறிப்புகளை நான் முன்வைக்க வேண்டியுள்ளது. குறிப்பாக 100,000 இலங்கையர் இறந்ததற்குப் பொறுப்பேற்க வேண்டியவர் அரச இனவாதியே. போர் முடிவடையும் தறுவாயில் ஏறக்குறைய 40,000 பேர் கண்மூடித்தனமாகக் கொல்லப்பட்டார்கள் என்னும் குற்றச்சாட்டை நாங்கள் நம்புவோமாயின், அந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம். அந்த 100,000 பேருள் ஆயிரக் கணக்கான சிங்களவரும் அடங்குவர். அதிகாரப் பரவலாக்கத்தின் அடிப்படையில் (அது எத்துணை மட்டுப்பட்டதாயினும்) தமிழ் மக்களுடன் ஒத்துமேவும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு நகர்வையும் அரச இனவாதி விடாப்பிடியாக எதிர்த்து நின்றதால், அவர்கள் மடிந்தார்கள். எடுத்துக்காட்டாக, 1981ல் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி மன்றங்களுக்கான தேர்தலையும், அதன் பின்னர் அவற்றின் தொழிற்பாட்டையும் அரச இனவாதிகள் ஒரு கேலிக்கூத்தாக மாற்றிவிட்டார்கள். சிறுபான்மையோரைக் கட்டியாளும் பெரும்பான்மையோரின் சொரணையற்ற உபாதையே அந்த விடாப்பிடிக்கான காரணம்.
1977ம் ஆண்டுக்குப் பின்னர் அரச இனவாத நடவடிக்கையின் பாங்கு மாறியது; அது வன்முறையாக மாறியது. 1977 முதல் 1983 வரை தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதம் பற்றி எனது முந்திய கட்டுரைகளில் நான் குறிப்பிட்டுள்ளேன். 1983 ஆடிக் கரிவெள்ளிக்கிழமை பாமர சிங்கள மக்கள் ஒருசில மணித்தியாலங்கள் பயங்கரவாதத்தில் பங்குபற்றியதுண்டு. மற்றும்படி அக்காலகட்டப் பயங்கரவாதத்தில் பாமர சிங்கள மக்கள் பாரிய பங்கு வகிக்கவில்லை. அக்காலகட்ட அரச பயங்கரவாதம் என்பது ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின், மற்றும் பிற தலைவர்களின் ஆதரவுடன் கூடிய சிங்கள அரச இனவாதிகளின் வேலைப்பாடாகவே அமைந்தது. 1983 ஆடிமாதம் என்ன நடந்தது என்பது பற்றிய விபரங்களை விடுத்து, ஒரேயொரு முக்கிய விபரத்தில் மட்டுமே இங்கு நான் புலனைச் செலுத்தப் போகிறேன்: அப்பொழுது தமிழ் மக்கள் விலங்குகளை விட மோசமாக நடத்தப்பட்டார்கள். இங்கு நான் சொற்சிலம்பம் ஆடவில்லை. நிதானமாகவும் சொற்பொருளின்படியும் தான் கூறுகிறேன். பிரித்தானியரின் ஆட்சிக்காலம் தொட்டு கொழும்பு மாநகரத்தில் தெருநாய்கள் வளைத்துப் பிடிக்கப்பட்டு மயக்கமருந்து ஏற்றப்பட்டு மடியவிடப்பட்டதுண்டு. என்றுமே அவை உயிருடன் எரிக்கப்பட்டதில்லை என்பதையே இங்கு நான் வலியுறுத்துகிறேன். எனினும் 1983 ஆடிமாதம் தமிழர்கள் பலர் உயிருடன் எரிக்கப்பட்டார்கள்!
1983 ஆடிப் படுகொலையை அடுத்து இடம்பெற்ற நிகழ்வுகளும் பயங்கரமானவையே. தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட பயங்கரங்களைப் பெரிதும் நியாயப்படுத்தும் வண்ணம் ஜே. ஆர். ஜெயவர்த்தனா நாட்டு மக்களுக்கு ஆற்றிய பெயர்போன உரை அவற்றுள் முதலாவது. குடிமக்கள் சமூகம் துயரத்துடன் அமைதி காத்தது. ஊடகர் ஆன் அபயசேகரா அந்த அமைதியைக் கலைத்து The Sun செய்தித்தாளுக்கு ஒரு மடல் அனுப்பியதாக அறிகிறேன். அடுத்ததாக ஆயர் லக்ஷ்மன் விக்கிரமசிங்கா எழுதிய அரிய குருத்துவ மடல் ஒன்று. ஜானத் ஒபயசேகராவும் மற்றும் பிறரும் குமுறியெழுந்து எழுதிய கட்டுரைகள் சில. அத்துடன் எல். பியதாசா என்னும் பெயரில் டிக் ஹென்ஸ்மன் எழுதிய தலையாய குறுநூல் ஒன்று. குறிப்பிடும்படியாக வேறு எழுத்துக்கள் அதிகம் வெளிவரவில்லை. அரசதரப்பு, எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் பெரிதும் வாளாவிருந்தனர். அரசியல்வாதிகள் 1958 கலவரத்தின்பொழுது நடந்துகொண்ட விதத்திலிருந்து 1983ல் நடந்துகொண்ட விதம் பயங்கரமான முறையில் வேறுபடுகிறது. அத்தகைய சூழ்நிலையில் எங்கள் தமிழ் மக்கள் இலங்கைத் தீவினுள் யாருடைய உதவியையும் நாட முடியவில்லை என்பதையே இங்கு நான் வலியுறுத்த விரும்புகிறேன். எங்கள் தமிழ் மக்களை ஆயுதம் ஏந்தவும், இந்தியாவை ஆயுதமும் பயிற்சியும் அளிக்கவும் உந்திய சூழ்நிலை அதுவே. அதனைத் தொடர்ந்து மூண்ட போர், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் விடாப்பிடியினால் மனச்சாட்சிக்கு மாறாக இழுத்தடிக்கப்பட்டது உண்மையே. எனினும் சிங்கள அரச இனவாதியே பல தசாப்தங்களாக விடாப்பிடியாகப் போர் புரிந்தார் என்பது கவனிக்கத்தக்கது. பல தசாப்தங்களுக்கு முன்னரே மட்டுப்பட்டளவு அதிகாரப் பரவலாக்கம் கொண்டு இனப்பிரச்சனையை நன்கு தீர்த்திருக்க முடியும். மட்டுப்பட்டளவு அதிகாரப் பரவலாக்கத்துக்கு உடன்படாத சிங்கள அரச இனவாதியே விடாப்பிடியாகப் போர் புரிந்தார். எனவே ஆயிரக் கணக்கான சிங்களவர் மாண்டதற்கு அரச இனவாதியே தலையாய பொறுப்பேற்க வேண்டும். அந்த வகையில் சிங்கள அரச இனவாதியையே சிங்கள மக்களின் மாபெரும் எதிரியாகக் கொள்ளவேண்டியுள்ளது.
அரச இனவாதியே மேன்மேலும் அட்டூழியங்கள் புரிந்து இலங்கை துண்டாடப்படும் நிலைமையைத் தோற்றுவிக்கக் கூடும் என்று ஏற்கெனவே நான் குறிப்பிட்டேன். அது ஒரு தொலைதூர எதிர்கால சாத்தியம்; படுமோசமான எதிர்கால சாத்தியம். எனினும் அது பரதூரமான சாத்தியம் என்பதை நாங்கள் உள்ளத்துள் பதிக்க வேண்டும். அதைப் பற்றி ஏற்கெனவே நான் எழுதியிருக்கிறேன். ஒரேயொரு விடயத்தை மாத்திரம் இங்கு நான் வலியுறுத்த விரும்புகிறேன். இலங்கையில் தமிழ் மக்கள் நடத்தப்படும் விதம் குறித்து இந்தியா கொள்ளும் கரிசனை முற்றிலும் நியாயமானது என்றே சர்வதேய சமூகம் எண்ணிக்கொள்ளும். சில சூழ்நிலைகளில் இலங்கையைத் துண்டாட இந்தியா தலையிடுவதும் நியாயமானது என்றே சர்வதேய சமூகம் எண்ணிக்கொள்ளும். உள்நாட்டு நிகழ்வுகள் வெளிநாட்டில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பது மிகமுக்கிய விடயம். இங்கே என்னால் எண்ணிப் பார்க்கக்கூடிய மிக உறுதியான ஒப்பீடு: தமிழ் நாட்டு அணு உலை. அது கோளாறு பண்ணினால், இலங்கையில் உயிராபத்து விளையக்கூடும். அவ்வாறே எங்கள் தமிழ் மக்கள் பாரதூரமான முறையில் துன்புறுத்தப்பட்டால், தமிழ் நாட்டில் பாரதூரமான கரிசனைகள் எழக்கூடும். அதனால் இந்திய ஐக்கியத்துக்கு ஆபத்து விளைவதாக இந்திய மத்திய அரசு கருதக்கூடும். எனவே இலங்கையில் இந்தியாவின் தலையீடு நியாயமானது என்றே கருதப்படக் கூடும்.
அரச இனவாதியின் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்னும் வாதத்துக்கு மேலும் ஒரு நியாயம் உண்டு: இன்று இலங்கைக்கு ஓரளவு உலகளாவிய மானக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதற்காக உலகம் இலங்கையைத் தனிமைப்படுத்தாவிட்டாலும், உலகின் வலிய தரப்பிலிருந்து, மேற்குலகிலிருந்து அது பெரிதும் புறங்கட்டப்பட்டுள்ளது. இந்தியாவுடன் அது கொண்டாடும் உறவும் பெரிதும் ஈடாடி வருகிறது. இலங்கையின் மானக்குறைவுக்குப் பல காரணங்கள் உண்டு. கடந்த நான்கு ஆண்டுகளிலும் தமிழினப் பிரச்சனையை அது கையாண்ட விதம் மிகவும் இழிவானது. மனித உரிமைகளை அது பேணிய விதமும் மிகுந்த ஐயத்தை ஏற்படுத்துகிறது. மக்களாட்சிக்கு மாறான, நவ-பாசிச திசையை நோக்கிப் பயங்கரமான முறையில் அது அடியெடுத்து வைக்கிறது. அண்மையில் பாரதூரமான குற்றச்செயல் எனப்படும் வண்ணம் அரச ஆதரவுடன் முஸ்லீங்களுக்கு எதிரான இயக்கம் மேற்கொள்ளப்பட்டது தெளிவு. முழு உலகமும் அருவருக்கும் வண்ணம் முஸ்லீங்களுக்கு எதிரான இயக்கம் மேற்கொள்ளப்பட்டது என்று நாங்கள் உறுதிபடக் கூறலாம். அனைத்துக்கும் மேலாக, போர் முடிவடையும் தறுவாயில் பருமட்டாக 40,000 குடிமக்களைப் படுகொலைசெய்த குற்றச்சாட்டு இடைவிடாது முன்வைக்கப்பட்டு வருகிறது. இலங்கை தாக்குண்டுபோகக்கூடிய நிலை தென்படுகிறது. சர்வதேய சமூகம் இலங்கையைத் தண்டிக்கும் நடவடிக்கையில் இறங்கவும் கூடும். ஐ. நா.வும் முட்டுக்கட்டைகளை இடக்கூடும். ஆதலால்தான் அரச இனவாதியின் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியுள்ளது.
அரச இனவாதியின் அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்த இனி நாங்கள் செப்பமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு, அரச இனவாதம் என்னும் அம்சத்தை நாங்கள் சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும். அப்படி இக்கட்டுரையின் இரண்டாவது பந்தியில் நான் வாதித்துள்ளேன். ஒரு பேரிடரைத் தடுப்பதற்கு, அது எத்தகைய பேரிடர் என்பதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கையைப் பொறுத்தவரை அரச இனவாதம் என்பது நடைமுறையில் எவ்வாறு பொருள்பட்டுள்ளது என்பதை எனது முந்திய கட்டுரையில் (Reflections on State Racism, The Island, Colombo, 2013-10-12) நான் விளக்கியுள்ளேன். அரச அதிகார நெம்புகோல்களில் கைவைக்கவல்ல இனவாதிகள் தமது கூட்டாளிகளுடன் சேர்ந்து எங்கள் இனப்பிரச்சனை விடயத்தில் மட்டுமீறிய அதிகாரம் செலுத்தியுள்ளார்கள். சிங்கள மக்களிடையே அவர்களுக்கு அதிக ஆதரவு கிடையாது. அண்மையில் நடைபெற்ற மாகாண மன்றத் தேர்தலில் அவர்களால் ஓர் இருக்கையைக் கூட வெல்ல முடியவில்லை என்பது அதனையே காட்டுகிறது. எனினும் அரசின் உச்ச மட்டத்தில் நிலைகொண்டு அதிகாரம் செலுத்தும் சீமான்களின் ஆதரவு அவர்களுக்கு கிடைத்து வந்துள்ளது. ஆதலால்தான் அவர்கள் மட்டுமீறிய அதிகாரத்தைச் செலுத்தி வந்துள்ளார்கள் என்று நான் கூறுகிறேன். இலங்கையில் உச்சத் தரப்பு பெரிதும் உன்மத்தம் கொண்ட உதிரிகளை நெருங்கியே நிலைகொண்டு வந்துள்ளது. இலங்கை இனத்துவ அரசியலிலில் தென்படும் நூதனம் அது.
இலங்கை அரசியல் எதைக் காட்டுகிறது? அரசாங்கங்களாலும், சட்டபூர்வமான அதிகாரம் கொண்டவர்களாலும் மாத்திரமல்ல, பிரதிநித்தித்துவ தகுதியோ சட்டப்பேறோ அறவே வாய்க்கப்பெறாத சிறு குழுமங்களாலும் அதிகாரம் செலுத்த முடியும். சில வேளைகளில் சட்டபூர்வமான அதிகாரத் தரப்பினரை விட சிறுகுழுமங்கள் பெருமளவு அதிகாரம் செலுத்தி வந்துள்ளன. மக்களாட்சி நீடித்து நிலையூன்றிய அமெரிக்கா போன்ற நாட்டின் கதையும் அதுவே. "படைத்துறை-தொழிற்துறைக் கட்டுக்கோப்பின்" வலுவைப் பற்றி அமெரிக்க ஜனாதிபதி ஐசன்ஹோவர் (1953-1961) அரை நுற்றாண்டுக்கு முன்னரே எடுத்துரைத்தார். யூதர் தாயக இயக்க அணைவுக் குழுமத்தின் (Zionist Lobby) வலுவைப் பற்றி எல்லாம் அண்மைக் காலத்தில் நாங்கள் அதிகம் கேள்விப்பட்டு வந்துள்ளோம். அமெரிக்க மக்களை விட யூதர் தாயக இயக்க அணைவுக் குழுமத்தின் வலு அதிகம் என்றே கூறப்படுகிறது. அமெரிக்க அரசாங்க வரம்புக்கு வெளியே நிலைகொண்ட தரப்புகள் செலுத்தும் அதிகாரத்தின் அகற்சியைப் பற்றி அண்மையில் Christopher Hitchens எழுதிய The Trial of Henry Kissinger என்னும் நூலில் வாசித்து நான் அதிர்ந்து போனேன். ஒருபுறம் சிலி நாட்டுக்கான அமெரிக்க தூதர் தனது நாட்டின் பிரதிநிதி என்ற வகையில் சிலிய அரசியல்வாதி ஒருவருடன் உண்டுகுடிக்க, மறுபுறம் அமெரிக்க மத்திய புலனாய்வு முகவர்கள் அமெரிக்க அரசாங்க வரம்புக்கு வெளியே செயற்பட்டு அந்த அரசியல்வாதியைப் படுகொலை செய்யத் திட்டம் தீட்டினார்கள்.
இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடந்து முடிந்த பின்னர் வட மாகாண மன்றத்துக்கும், அதிகாரப் பரவலாக்கம் ஊடாகத் தமிழினப் பிரச்சனையத் தீர்க்கும் அணுகுமுறைக்கும் எதிராகத் தீவிர நடவடிக்கை எடுக்கப்படலாம். முஸ்லீங்களுக்கு எதிரான இயக்கம் வெஞ்சினத்துடன் புத்துயிர் பெற்றெழக் கூடும். அப்பொழுது நிலவும் சூழ்நிலையைப் பொறுத்தே எத்தகைய தடுப்பு-நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்க முடியும். எனினும் தடுப்பு-நடவடிக்கை எடுக்க வழிகாட்டும் நெறி என்ன என்பது தெளிவு: சிங்கள மக்களை விடுத்து, அவர்களுடைய எதிரியாகிய சிங்கள அரச இனவாதி மீதே நாங்கள் புலனைச் செலுத்த வேண்டும். நான் கருத்தில் கொள்ளும் திட்டவட்டமான எடுத்துக்காட்டு இதுவே: முஸ்லீங்களுக்கு எதிரான இயக்கத்துக்குப் புத்துயிரூட்டப்பட்டால், காவல்துறையினர் திரும்பவும் செயலொழிந்து வெறும் பார்வையாளராக நடந்துகொண்டால், முஸ்லீங்களுக்கு எதிரான சிங்கள மக்களின் இனவாதத்தை விடுத்து, காவல்துறையினரை செயற்படாவாறு ஆணையிடும் அரச இனவாதி மீதே நாங்கள் புலனைச் செலுத்த வேண்டும். இன்னும் திட்டவட்டமாகச் சொல்வதாயின், நிலைமையைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கும்படி ஜனாதிபதியைத் தூண்டுவதாகவே, காவல்துறையினரை வழமைபோல் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் பணியை ஆற்றும்படி தூண்டுவதாகவே தடுப்பு-நடவடிக்கை அமைய வேண்டும்.
Izeth Hussain, Understanding State Racism, The Island, Colombo, 2013-10-18,
translated by Mani Velupillai.
No comments:
Post a Comment