தென்னாசியாவில் அநீதித்துறை
அம்பிகா சற்குணானந்தன்
முன்னாள் ஆணையாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணையம்
பிரக்யா நராங்
உசாவலர், தென்னாசிய அமைதிப் பணி வலையம், இந்தியா
அம்பிகா சற்குணானந்தன் ஒரு சட்டவாளராய் இருந்து மனித உரிமையாளராய் மாறியமைக்கு, ஒரு தமிழ்ப்பெண் என்ற வகையில் அவர் பாரபட்சத்துக்கு உள்ளானமையே தலையாய காரணம். இலங்கையில் தமிழருக்கு நேர்ந்துள்ள வன்முறையும், வன்முறைக்கு உள்ளாக நேரும் என்ற அச்சமும் அவர் வாழ்வை என்றென்றும் வடிவமைத்து வந்துள்ளன.
அவர் சட்டம் பயின்று, மனித உரிமை காக்கத் தலைப்பட்ட காரணம் அதுவே. அவரது தனிப்பட்ட வாழ்வு முழுவதும் அரசியலின் தாக்கத்துக்கு உள்ளானபடியால், அவரது வாழ்வே ஓர் அரசியல் ஆகியுள்ளது. பெரும்பாலான இலங்கைத் தமிழரின் கதையும் அதுவே.
இலங்கை மனித உரிமை ஆணையத்தில் தாம் ஆற்றிய பணியை அவர் பெருமையுடன் நினைவுகூருகின்றார். அங்கு கட்டமைப்புவாரியான தடங்கல்களைக் கடந்து, ஆணையத்துக்கும், சமூகத்துக்கும், மனித உரிமை மீறல்களிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களுக்கும் இடையே உறவை வலுப்படுத்துவதில் அவர் வெற்றி கண்டார். ஆணையத்தின் மீது நம்பிக்கை மிகுந்த சூழ்நிலை தோன்றவும், அதை அணுகிப் பரிகாரம் நாடலாம் என்ற எண்ணம் ஓங்கவும் அது உதவியது.
2021 ஆகஸ்ட் 29ம் திகதி தென்னாசிய அமைதிப் பணி வலையம் நடத்திய இணையவெளி அரங்கில் கைதிகளின் உரிமைகள் குறித்து அம்பிகா சற்குணானந்தன் ஆற்றிய உரையின் சுருக்கம்:
அநீதித்துறை
தென்னாசியாவில் நீதித்துறை பக்கச்சார்பாகவும், அகவயமாகவும், பாரபட்சமாகவும், வன்முறையாகவும் இயங்கி வருகின்றது. குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, அவற்றை அது நீட்டித்து வருகின்றது.
தண்டித்து வஞ்சிக்கும் நீதித்துறையும், வன்முறை ஓங்கிய சிறைகளும் குற்றவாளிகளுக்கு மறுவாழ்வளிப்பதை விடுத்து, அவர்களைப் பெருக்கி வருகின்றன.
வன்முறை
தென்னாசியாவில் வன்முறையும் பாரபட்சமும் இடம்பெறும் வழமை நீடித்து வருகின்றது. ஒழுங்கினை நிலைநாட்டுவதற்கு வன்முறை கையாளப்படுகிறது. சிறைபுகுவது முதல் வெளிவருவது வரை ஒருவர் எதிர்கொள்ளும் வன்முறை அவரது தன்மானத்தைப் பலிகொள்கின்றது.
தண்டிப்பு, சிறைவைப்பு என்பவற்றின் மூலம் சமூகப் பிரச்சனைகளை அணுகும் வழமை எமது சமூகங்களிடையே நிலையூன்றியுள்ளது. அதன் விளைவாக நீதித்துறையில் வன்முறையான தண்டனைகள் அளிக்கப்படுகின்றன. ஒருவரைச் சிறையில் அடைத்துவிட்டால், பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நம்பப்படுகிறது. உண்மையில் அதுவே பிரச்சனையை மோசமாக்குகின்றது.
குற்றம்
“குற்றம்” என வரையறுக்கப்படும் செயலின் வேர்க்காரணங்களைக் குறித்து நடவடிக்கை எடுப்பதை விட, வன்முறையைக் கையாள்வது மிகவும் எளிதாக இருப்பதால், தென்னாசியாவில் மேற்படி அநீதி நீடித்து வருகிறது.
“குற்றம்” என்பதன் பொருள் இங்கு மேன்மேலும் மழுங்கி வருகிறது. மனித உரிமையாளர்களும், ஊடகர்களும் தமது சொந்த அரசுகளின் இலக்கிற்கு ஆளாகி, சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றார்கள். அன்று எம்மைக் கட்டியாண்ட மேலைநாட்டவர் கையாண்ட கொடிய சட்டங்களை இன்று எமது ஆட்சியாளர் தூசுதட்டி எடுத்துப் பயன்படுத்தி வருகின்றார்கள். வழக்குகள் துவங்கும்வரை ஆண்டுக் கணக்காக கைதிகளை அடைத்துவைப்பதற்கு அவற்றைக் கையாண்டு வருகின்றார்கள்.
குற்றச்செயலைத் தடுப்பதற்கல்ல, கருத்து மாறுபாட்டைத் தடுப்பதற்காகவே, அரசுகளுக்கு எதிராகக் குரல்கொடுப்பவர்களையும், குடியாட்சியாளர்களையும் அச்சுறுத்துவதற்காகவே சிறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இறப்புத் தண்டனை ஒழிக்கப்பட வேண்டும். அது ஒரு கொடிய, காட்டுமிராண்டித்தனமான தண்டனை. அதனால் குற்றச்செயல்கள் குன்றப் போவதில்லை. பெருந்தீங்கினையே அது விளைவிக்கும். எல்லா உயிர்களும் மேலானவை என்பது இந்து, பெளத்த நெறி அல்லவா!
ஏற்றத்தாழ்வு
நீதித்துறை ஒருவரை எவ்வாறு நடத்துகிறது என்பது, அவரது சமூக நிலையையும் அதிகாரத்தையும் செல்வாக்கையும் பொறுத்தது. கூட்டுத்தாபனங்களை விட தனியாட்களையும், வசதிபடைத்தவர்களை விட வசதிகுறைந்தவர்களையும் பெரிதும் தண்டிக்கும் போக்கு தென்னாசியாவில் காணப்படுகிறது. சூழலைச் சீரழித்த பொறுப்பிலிருந்து தப்புவதற்காக மாபெரும் பன்னாட்டுக் கூட்டுத்தாபனங்கள் தமது பாரிய பொருள்வளங்களையும் சட்ட நுணுக்கங்களையும் பயன்படுத்தி வருகின்றன. அதேவேளை ஒரு பிளகு கஞ்சாவுடன் பிடிபடும் ஒருவர் சிறையில் அடைக்கப்படுகின்றார்!
பெண்கள்
தென்னாசியாவில் பெண்கள் மேன்மேலும் நலிந்து வருகிறார்கள். இலங்கையில் கட்டமைப்புவாரியான வன்முறைக்கு அவர்கள் உள்ளாகின்றார்கள். அவர்களுக்கு விலக்கங்கிகளோ, கருத்தரிப்புகால சுகாதார பராமரிப்போ, மகப்பேற்றுக்கு முன்னரும் பின்னரும் போதிய பராமரிப்போ கிடைப்பதில்லை.
குடும்ப மானம் காக்கும் சுமையையும், மானக்கேட்டை தாங்கும் சுமையையும் பெண்களே பெரிதும் தாங்கி வருகின்றார்கள். சிறையில் அடைக்கப்படும் பெண்கள் தமது குடும்பத்தவர்களதும், வாழ்க்கைத் துணைவர்களதும் ஆதரவை பெரிதும் இழந்து விடுகின்றார்கள். ஆதலால் தமக்காக வாதாட ஒரு சட்டவாளரை அமர்த்த சங்கடப்படுகிறார்கள். அதன் விளைவாக அவர்களின் சிறைவாசம் மேலும் நீடித்து வருகின்றது.
பெண்கள் வடுவுக்கு உள்ளாவதும் அதிகம். சிறைசென்று மீளும் பெண்கள் தமது வாழ்வை மீட்பதில் ஒரு சவாலை எதிர்கொள்கின்றார்கள். அதனால் அவர்கள் சுரண்டி வாழும் நிலைக்கு உள்ளாக நேர்கின்றது. அது அவர்களை மீண்டும் சிறைக்கு இட்டுச் செல்கின்றது. இந்த நச்சு வளையம் ஒரு தொடர்கதை போல் தொடர்கின்றது.
பெண்பாலார் என்பதனாலும் அவர்கள் வன்முறைக்கு உள்ளாகின்றார்கள். சிறுபான்மைச் சமூகங்களைச் சேந்த பெண்கள் மேன்மேலும் வன்முறைக்கு உள்ளாகி வருகின்றார்கள். நீங்கள் வட இலங்கையில் பணியாற்றும் மகளிர் இயக்கத்தவர் என்றால், படைத்துறையினர் உங்களை இடைவிடாது வேவுபார்த்து, வீடுதேடிவந்து, உங்கள் பணிகளை விசாரணைசெய்து, முன்கூட்டியே உங்களைத் தொலைபேசியில் அழைத்து, நிகழ்சிகளிலும் ஆர்ப்பாட்டங்களிலும் பங்குபற்றாவாறு உங்களை மிரட்டுவார்கள்.
சிறுபான்மை
பெரும்பான்மை வாதமும், இனத்துவ தேசிய அரசியலும் தென்னாசியாவைப் பீடித்துள்ளன. இங்கு சிறுபான்மையோருக்குப் பாரபட்சம் காட்டப்படுவது வழமை. எடுத்துக்காட்டாக இலங்கையில் தமிழரும் முஸ்லீங்களும், இந்தியாவில் முஸ்லீங்களும் தலித்துகளும், பாகிஸ்தானில் சீக்கியரும் சியா பிரிவினரும் கிறீஸ்தவரும் இடைவிடாது அச்சுறுத்தப்பட்டு வருகின்றார்கள். பெயரளவில் இல்லாவிடினும், செயலளவில் தென்னாசியா மதச்சார்பற்ற நெறியிலிருந்து மேன்மேலும் வழுகிச் செல்கின்றது.
சமூக அமைப்புகள்
தென்னாசியாவில் ஐக்கியமும் சமூக நீதியும் நிலைபெறுவதற்கு, வெறுமனே சட்டங்களை மாற்றுவதுடன் நாம் நின்றுவிடலாகாது. சட்டங்களைப் பற்றிப் பேசமுன்னர், நாம் விழுமியங்களைப் பற்றிப் பேசவேண்டும்.
தென்னாசிய சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்து, தமது பட்டறிவுகளை - குறிப்பாக ஒரேமாதிரியான இக்கட்டுகளைக் கடப்பதில் தாம் கையாண்ட உத்திகளை - பகிர்ந்துகொள்ள வேண்டும். ஒரே மாதிரியான பிரச்சனைக்கு நாம் ஒரே மாதிரியான தீர்வினை நாடுவதே புத்திசாலித்தனம். நாம் தனித்தனியே முதலாம் வகுப்பிலிருந்து பாடம் படிப்பதை விடுத்து, ஒருவரிடமிருந்து ஒருவர் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
நாம் ஒரு சமூகமாய் அமைந்தவர்கள் என்ற வகையில், குற்றச்செயல்கள் மேலோங்குவதற்கு நாம் அனைவரும் எவ்வளவு தூரம் பொறுபப்பானவர்கள் என்பதை எமக்குள் நாமே எண்ணிப்பார்க்க வேண்டும். சமூகப் பிரச்சனைகளுக்கான வேர்க்காரணங்களையும், சமூகத்துள் ஆழ வேரூன்றியுள்ள ஏற்றத்தாழ்வுகளையும் குறித்து நாம் நடவடிக்கை எடுக்கையில், மனிதாபிமான தண்டனைகளை வகுப்பதில் நாம் அதிக ஆற்றலை விரயம்செய்ய நேராது.
மனித உரிமை இயக்கவினைஞர்கள்
இலங்கையின் இன்றைய அரசினைப் போன்ற எதேச்சாதிகாரமான அரசுகள் வேறு தென்னாசிய நாடுகளிலும் ஆட்சிக்கு வந்துள்ளன. அவற்றிலும் மனித உரிமை வினைஞர்களை மிரட்டி, மாறுபாட்டை ஒடுக்க அரசுகள் முயன்று வருகின்றன. அங்கெல்லாம் ஆணாதிக்கம், மகளிர் மீதான காழ்ப்பு, பால்மைப் பாரபட்சம் என்பன ஓங்கி வருகின்றன.
ஆட்சியாளரால் இலக்குவைக்கப்படும் அல்லது சிறைவைக்கப்படும் மனித உரிமை இயக்க வினைஞர்களுக்கு சமூகம் கைகொடுத்தால், பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும். மனித உரிமை இயக்க வினைஞர்களுடன் வெளிப்படையாகத் தோழமை பாராட்டிக் குரல்கொடுப்பது முக்கியம். ஆட்சியாளரின் நடவடிக்கைகளுக்கு எதிராக வழக்குத் தொடுப்பதும், நாடளாவிய முறையிலும், உலகளாவிய முறையிலும் பரப்புரை செய்வதும் பயனளிக்கும்.
மனித உரிமை இயக்க வினைஞர்களின் குடும்பங்களுக்கு பொருளுதவியும், மற்றும் பிற உதவியும் புரிவது நலம் பயக்கும். சிறைவாசத்தால் உளத்தாக்கம் விளையும். ஆதலால் கைதிளுக்கு தார்மீக ஆதரவு அளித்தே ஆகவேண்டும். சிறைவைக்கப்பட்ட மனித உரிமை இயக்க வினைஞர்களை ஆதரவாளர்கள் சந்தித்து, உணவோ நூல்களோ வழங்கி, அவர்களை நாம் மறந்துவிடவில்லை என்பதைப் புலப்படுத்த வேண்டும். அவர்களின் விடுதலைக்கு ஆதரவாளர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டும்.
_____________________________________________________________
Pragya Narang, eShe, 2021-09-22, translated by Mani Velupillai, 2021-09-29.
https://eshe.in/2021/09/22/ambika-satkunanathan-on-prison-reform
No comments:
Post a Comment