போரில் உயிர்தப்பிய முள்ளிவாய்க்கால் மக்கள் 

ரொஹிங்கியா அகதிகளுக்கு புரியும் உதவி


ருக்கி பர்னாந்து


இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் அந்தலையில் அமைந்திருக்கும் கடலோரக் கிராமம் முள்ளிவாய்க்கால். பெரிதும் தமிழ்மக்கள் வாழும் கிராமம். 30 ஆண்டுகளாக நிகழ்ந்த உள்நாட்டுப் போர் குருதிக்களரியில் முடிவடைந்த இடம். 

இறுதிப்போரில் இங்கு படையினரிடம் சரணடைந்தோர் கொல்லப்பட்டதாக அல்லது காணாமல் போக்கடிக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. மேலும் பல்லாயிரக் கணக்கானோர்க்கு நேர்ந்த கதி இன்னும் தெரியவரவில்லை. 

போரின்பொழுது முள்ளிவாய்க்கால் கிராமம் உட்பட முல்லைத்தீவு மாவட்ட மக்கள் முற்றுமுழுதாக இடம்பெயர்ந்தனர். எஞ்சியோர் தடுப்பு முகாங்களில், முள்ளுக்கம்பி அடைப்புக்குள் மாதக் கணக்காக தடுத்து வைக்கப்பட்டனர்.

ஆண்டுதோறும் மே 18ம் திகதி (போர் முடிவடைந்த நாளில்) பெருந்தொகையான தமிழ்மக்கள் ஒன்றுகூடி, தமது இழப்புகளை நினைந்து, வருந்தி, போரில் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கோரும் இடமாகவும் முள்ளிவாய்க்கால் விளங்குகிறது. தமிழர்கள் சிலர் பயன்படுத்தும் “முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக் கிழமை”  முதலிய சொற்றொடர்களின் தோற்றுவாயும் இதுவே.

மியன்மாரில் இழைக்கப்படும் கொடுமையிலிருந்து உயிர்தப்பி, வெளிநாட்டில் தஞ்சம் கோரும் ரொஹிங்கியா மக்கள் நிரம்பிய படகொன்று 2024 திசம்பர் 19ம் திகதி முள்ளிவாய்க்கால் கடற்கரையில் தென்பட்டது. முதன்முதல் அந்தப் படகைக் கண்டு, அவர்களுக்கு உதவியோர் முள்ளிவாய்க்காலைச் சேர்ந்த தீபனும், மற்றும் பிற கடலாளர்களுமே.  

அவர்கள் தீபனின் சிறிய மீன்பிடி படகில் சென்று பார்த்தபொழுது, அந்தப் படகில் சிறுவர்கள் உட்படப் பலர் இருப்பதைக் கண்டார்கள். ஒருசிலர் நிற்பதையும், பலர் சாய்ந்து கிடப்பதையும் கண்டார்கள். படகு வாந்தியும் குருதியுமாய் காணப்பட்டது. மொழித்தடங்கலால் இவர்களை அவர்களோ, அவர்களை இவர்களோ புரிந்துகொள்ள முடியவில்லை. எனினும் அவர்களுள் பலர் “hospital!” என்று கத்தியது இவர்கள் காதில் விழுந்தது. 

“அந்தப் படகில் இருந்தவர்கள், குறிப்பாகச் சிறுவர்கள், கரைக்கு கரையிறங்க விரும்புவது போல் தென்பட்டது; நானும் கிராமவாசிகள் பலரும் படகில் இருந்தவர்களை கரைக்கு கொண்டுவந்து பராமரிக்க விரும்பினோம்; எனது படகில் பத்துப் பத்துப் பேராக  அவர்களை கரைசேர்த்திருக்க முடியும்; ஆனால் சட்ட விளைவுகளை எண்ணிக் கவலைப்பட்டேன்”  என்கிறார் தீபன். 

முல்லைத்தீவைச் சேர்ந்த கடலாளர் பாஸ்கரனும் படகில் சென்று ரொஹிங்கியா மக்களைச் சந்தித்தார். அடைக்கலப் படகில் இருந்தவர்களை கரைக்குக் கொண்டுவரும்படி தீபனும் பாஸ்கரனும் கடற்படையினரிடம் கேட்டார்கள். அதற்கு தமது மேலதிகாரிகளின் அனுமதி இல்லை என்று சொல்லி கடற்படையினர் கைவிரித்துவிட்டானர்.

தீபன் ஒரு மருத்துவரையும், இரு பொது சுகாதார பரிசோதகர்களையும் தனது படகில் ஏற்றி, அவர்களையும் தமது படகில் வந்த கடற்படையினரையும் அடைக்கலப் படகுக்கு இட்டுச்சென்றார். ஒரு நோயாளர் ஊர்தியும் கரையில் காத்திருந்தது. அடைக்கலப் படகிலிருந்து எவரும் கரைக்கு கொண்டுவரப்படாதபடியால், அந்த நோயாளர் ஊர்தி பயன்படுத்தப்படவில்லை.

கடலாளர்கள் அடைக்கலப் படகில் இருந்தவர்களுக்கு உணவும், தண்ணீரும் குளுக்கோசும் எடுத்துச்சென்றார்கள். பட்டினிகிடப்பவர்கள் போல் தென்பட்ட அடைக்கலப் படகினர் உணவுப்பொருட்களை நன்றியுணர்வோடு பெற்றுக்கொண்டதாகவும் கடலாளர்கள் தெரிவிக்கிறார்கள் .   

தீபனும் மற்றும் சிலரும் கிட்டத்தட்ட 20 தடவைகள் ரொஹிங்கிய மக்களைச் சென்று சந்தித்திருக்கிறார்கள். அடைக்கலப் படகுச் செய்தி அறிந்து தூரத்து மக்களும் உணவு கொண்டுவரத் துவங்கினார்கள். 

கடற்படியினர் தஞ்சப் படகை திருகோண்மலைக்கு இட்டுச்செல்ல முற்பட்டபொழுது, புதுக்குடியிருப்பிலிருந்து சிலர் கொண்டுவந்த உணவை   தீபன் எடுத்துச்சென்று கடற்படையினரிடம் கையளித்தார். 

தமது பிழைப்பைக் கெடுக்கும் இந்திய இழுவைப்படகுகள் குறித்து தீபனும் பாஸ்கரனும் மனத்தாங்கல் கொண்டிருக்கிறார்கள். எனினும் ரோஹிங்கியா மக்கள் கொடுமையிலிருந்து தப்பியோடி வந்தவர்கள், அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது என்ற நம்பிக்கையில் தீபனும் பாஸ்கரனும் அவர்களை அரவணைத்து, பராமரித்தார்கள்.   



அடைக்கலம் தேடிப் புறபட்ட ரொஹிங்கிய மக்கள் ஏற்கெனவே இரண்டு மூன்று கிழமைகளாக கடலில் தத்தளித்தவர்கள். எனினும் திசம்பர் 19ம் திகதி அன்று பெரிதும் கடலில்தான் அவர்கள் விட்டுவைக்கப்பட்டார்கள். அன்றிரவு கடற்படையினர் அடைக்கலப் படகை திருகோண்மலைக்கு இட்டுச்சென்றார்கள். திசம்பர் 20ம் திகதி காலை அவர்கள் தரையிறங்க அனுமதிக்கப்பட்டார்கள். 

திருகோணமலையில் பணியாற்றும் அரசாங்க அதிகாரிகளும், பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் உணவு, உடை, உடனல சேவை அளித்தார்கள். ஒருசில ரொஹிங்கியர்களுடன் உரையாடும் வாய்ப்பு உள்ளூர் ஊடகர் அமரஜீவாவுக்கு கிடைத்தது. அவர்கள் பசித்துக் களைத்து அலுத்துப்போய் இருப்பதாகவும், சில பெண்களும், சிறுவர்களும் நாவறண்டு, நடக்க முடியாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அவர்கள் 16 நாட்கள்  துப்புரவு குன்றிய படகில் தத்தளித்தவர்கள் அல்லவா?  

“நாங்கள் மூன்று படகுகளில் புறப்பட்டோம்; இரண்டு தகர்ந்துபோயின; அவற்றில் இருந்தவர்களும் எங்கள் படகில் ஏறிக்கொண்டார்கள். இடைவழியில் 6 பேர் இறந்துவிட்டார்கள். இறந்தவர்களின் உடல்கள் கடலில் வீசப்பட்டன” என்றார் அகதி ஒருவர்.

“மியன்மாரில் இனப்பிரச்சனை நடப்பதால் நான் வீட்டைவிட்டு வெளியேறினேன். மியன்மார் படையினருக்கு இலஞ்சம் கொடுத்து, சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேறினேன்” என்றார் இன்னோர் அகதி.

“எனது கிராமத்தின்மீது குண்டு பொழியப்பட்டதால், நான் உயிர்காக்க நாட்டைவிட்டு வெளியேறினேன்” என்றார் மற்றோர் அகதி. 

“எனது கிராமத்தில் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்ட பிறகு, என் உயிருக்கு ஆபத்து விளையும் என அஞ்சி வெளியேறினேன்” என்றார் வேறோர் அகதி.

வெவ்வேறு நாடுகளில் குடிபுகுந்துள்ள ரொஹிங்கியா நண்பர்களும், யாழ்ப்பாணக் கடல் வலயத்தில் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு, ஏறத்தாழ ஈராண்டுகளாக இலங்கையில் தற்காலிகமாக வசிக்கும் ரொஹிங்கியா அகதிகளும் ஏற்கெனவே இலங்கையில் என்னிடம் தெரிவித்த கதைகளுடன் இக்கதைகளும் ஒத்துப்போகின்றன. 

ஏற்கெனவே இலங்கையில் பருமட்டாக 100 ரொஹிங்கியா அகதிகள் இருக்கின்றார்கள். வங்காளதேசத்தில் கிட்டத்தட்ட 10 இலட்சம் ரொஹிங்கியர்கள் தங்கியிருக்கிறார்கள். தற்பொழுது சர்வதேய நீதிமன்றில் ஓர் இனப்படுகொலை வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. மியன்மாரில் ரொஹிங்கியர்கள்  கொடுமைக்கு உள்ளாவதாகக் குற்றஞ்சாட்டி கம்பியா தொடுத்த வழக்கு அது. 


தடுத்துவைப்பும், திருப்பியனுப்பும் சாத்தியமும்


அடைக்கலம் கோரிய ரொஹிங்கிய மக்களை திருகோணமலையில் 3 நாட்கள் தடுத்து வைத்திருந்து, திசம்பர் 23ம் திகதி முல்லைத்தீவுக்கு திருப்பிக் கொண்டுவந்து, ஒரு வான்படை முகாமில் அடைத்து வைத்திருக்கிறார்கள். 

தானும் கிராமவாசிகளும் அவர்களைச் சந்திக்க விரும்புவதாகவும், அதற்கு அதிகாரிகளின் அனுமதியை எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவிக்கிறார் தீபன். தான் பல தடவைகள் அவர்களைக் கடலில்  சந்தித்தபடியால், அகதிகள் சிலருக்கு தன்னை நினைவிருக்கும் என்றும் கூறினார். 

முல்லைத்தீவு வியாபாரிகள் அவசர பொருளுதவி புரியத் துணைநின்றதாக உள்ளூர் செஞ்சிலுவைச் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உள்ளூர் வாசிகள் சிலர் தடுப்பு நிலையத்துக்கு சென்று, அகதிகளுக்குத் தேவைப்படுபவற்றை விசாரித்தபொழுது, அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.   

நானும் வேறு சில ஊடகர்களும் தடுப்பு நிலையத்துக்குச் சென்றபொழுது, குடிவரவு அதிகரிகளின் அனுமதியின்றி தஞ்சக் கோரிக்கையாளர்களை சந்திக்க முடியாது என்று  வான்படை அதிகாரிகள் தெரிவித்தார்கள். குடிவரவு அதிகரிகள் அங்கே இல்லை. அவர்களது அதிகாரபூர்வமான இணையதளத்தில் உள்ள தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி தொடர்பு கொண்டபொழுதும் பதில் கிடைக்கவில்லை. 

அதற்குப் பல நாட்களுக்கு முன்னரே குடிவரவு ஆணையாளருக்கும், பொது பாதுகாப்பு அமைச்சுக்கும் நாங்கள் எழுத்தில் தகவல் தெரிவித்திருந்தோம். பல தடவைகள் தொலைபேசியிலும் அழைத்தோம். பதில் இல்லை. 

திசம்பர் 26ம் திகதி இலங்கை மனித உரிமை ஆணையத்தின் அதிகாரிகள் தடுப்பு நிலையத்துக்குச் சென்றபொழுது, அகதிகளைச் சந்திக்க அவர்கள் கூட அனுமதிக்கப்படவில்லை. படகில் வந்தவர்களைப் பதிவுசெய்து, அவர்களது அடைக்கலக் கோரிக்கைகளைப் பரிசீலிக்க அனுமதியை எதிர்பார்த்து ஐ. நா. அகதிகள் உயர் ஆணையாளர் கூடக் காத்திருக்க்கிறார். 

“ரொஹிங்கியர்களின் இலக்கு மலேசியாவாக அல்லது இந்தோனேசியாவாக இருக்ககலாம்; வானிலை அவர்களை இலங்கையை நோக்கித் தள்ளியிருக்கலாம்” என்றார் கடற்படையின் தகவலாளர். “நாங்கள் திக்குத் திசை தெரியாமல் போய்க்கொண்டிருந்தோம். அப்பொழுது பயணத்தைப் பத்திரமாக முடிப்பதே  எங்களது ஒரே நோக்கமாய் இருந்தது” என்று திருகோணமலையில் வைத்து ஊடகர் அமரஜீவாவிடம் கூறினார் ஒரு தஞ்சக் கோரிக்கையாளர்.  

இதற்கிடையே, “ரொஹிங்கியர்களின் வருகை ஓர் ஆட்கடத்தல் அலுவல்; அவர்களை அகதிகள் (அல்லது தஞ்சக் கோரிக்கையாளர்கள்) என்று கொள்ள இதுவரை ஆதாரம் கிடைக்கவில்லை” என பொது பதுகாப்பு அமைச்சர் தெரிவித்ததாக ஜனவரி 3ம் திகதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 

அவர்கள் மியன்மாருக்கு திருப்பி அனுப்பப்படலாம்; அவர்களின் விபரங்கள் கூட மியன்மார் அரசாங்கத்துடன் பகிரப்பட்டன; அந்த அரசாங்கத்துடன் கலந்துரையாடல் நடக்கின்றது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

 எதிர்க்கட்சித் தலைவரும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், மற்றும் பிற தரப்பினரும் அமைச்சரின் கூற்றினைக் கண்டித்து, கேள்வி எழுப்பியுள்ளார்கள். ஜனவரி 9ம் திகதி காலை வட-கீழ் ஒருங்கிணைப்புக் குழுவும், பொது அமைப்புகளும். மக்களும் ஒருங்கிணைந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு வெளியே கூடி, ரொஹிங்கியர்களை திருப்பியனுப்ப வேண்டாம் என்றும், அவர்களை சர்வதேய சட்டத்தின்படி நடத்தவேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். 

அவர்களை வான்படை முகாமில் வைத்திருப்பதை விட, குடித்துறை நிருவாகத்தின்  மேற்பார்வையில் வைத்திருப்பதே நல்லது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். ரொஹிங்கியர்களைத் திருப்பியனுப்புவதையும், படைமுகாமில் தடுத்து வைத்திருப்பதையும் ஆட்சேபித்து ஜனவரி 10 ம் திகதி கொழும்பிலும் ஓர் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஜனவரி 10ம் திகதி திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் அந்த வழக்கு கூப்பிடப்பட்டபொழுது, காவல்துறையினர் புலன்விசாரணைக்கு அவகாசம் கேட்டார்கள். தடுத்துவைக்கப்பட்ட மக்களைச் சந்திக்க சட்டவாளர்கள் அனுமதி கோரினார்கள். ஜனவரி 31ம் திகதி அடுத்த தவணைக்கு வரும்படி வான்படை அதிகாரிகளுக்கும், குடிவரவு அதிகாரிகளுக்கும் நீதிவான் அழைப்பாணை விடுத்துள்ளார். 

தடுத்துவைத்து திருப்பியனுப்புவதா?

 மனிதாபிமான அடிப்படையில் ஆதரித்து  பராமரிப்பதா?


எவரும் அடைக்கலம் கோரும் உரிமைக்கு உலகளாவிய மனித உரிமைப் பிரகடனத்தின் 14ம் உறுப்புரை உத்தரவாதம் அளிக்கின்றது. தகுந்த ஆதாரங்களுடன் தமது தாயகத்தில் கொடுமைக்கு அஞ்சுவோரை அங்கு திருப்பி அனுப்புவதை சர்வதேய வழமைச் சட்ட நெறிகள் தடுக்கின்றன.     

கொடுமைக்கு உள்ளாகுவதிலிருந்து தப்பிப்பிழைத்து பாதுகாப்பு தேடி வந்தவர்களாகவே ரொஹிங்கிய மக்களை திலீபனும், பாஸ்கரனும், உள்ளூர் மக்களும் கருதுகிறர்ர்கள். அரசாங்கம் அவர்களைப் பராமரிக்க வேண்டும் என்று அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தார்கள்.  அப்படி ஓர் இலட்சம் மக்கள் வரக்கூடும் என்று அமைச்சர் அஞ்சுவது பற்றி  வினவியபொழுது, “உயிர்காக்க எங்கிருந்து வருவோர்க்கும் உதவிபுரிய வேண்டும்” என்றார் பாஸ்கரன்.  

முள்ளிவாய்க்கால் கிராமவாசிகளால் இவர்களுக்கு இடவசதி கொடுத்து உணவளிக்க முடியும்; ஆனாலும் உடனலம் உட்பட மற்றைய தேவைகளை அரசாங்கமே கவனிக்க வேண்டும் என்றார் திலீபன். போரின்பொழுது தரைப்படை, வான்படைகளின் குண்டுவீச்சிலிருந்து உயிர்தப்ப முயன்று, நிலவரண்களில் பதுங்கி, இடம்பெயர்ந்து, பட்டினிகிடந்து, தாங்கள் பட்டறிந்தை எல்லாம் வேதனையுடன் அவர்கள் நினைவுகூர்ந்தார்கள்.  

இலங்கை வந்த ரொஹிங்கிய மக்களின் துன்பத்தைப் புரிந்துகொள்வதற்கு தமது பட்டறிவு உதவுவதாகவும்,  அவர்களுக்கு பரிவவுகாட்ட ஊக்குவதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள். ரொஹிங்கிய மக்களை கடலில் சந்தித்து, பரிவுடன் செய்தி வெளியிட்ட உள்ளூர் ஊடகர்களும் போரின்பொழுது தாம் பட்ட பாடுகளை நினைவுகூர்ந்தார்கள். 

கொடுமையிலிருந்து உயிர்தப்பி தமது கடற்கரைக்கு வந்த முன்பின்தெரியாதவர்களை வரவேற்ற முள்ளிவய்க்கால் மக்களின் உணர்வும், கனிவும், இதயமும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், நாட்டு மக்கள் அனைவரும் கடைப்பிடிக்கத்தக்க எடுத்துக்காட்டுகளாய் அமையத்தக்கவை.

           ________________________________________________________________________

Ruki Fernando, Mullivaiakkal supports Rohingya Refugees, Daily Mirror, 2025-01-11

https://www.dailymirror.lk/opinion/Residents-of-Mullivaikkal-provide-support-and-show-solidarity-to-Rohingya-asylum-seekers/172-299957, 2025-01-11, translated by Mani Velupillai, 2025-01-12.

No comments:

Post a Comment