மறவர் மாட்சி

  
பெரிக்கிளிஸ்
(பொ. யு. மு. 494-429)

இங்கே எனக்கு முன்னர் உரையாற்றியோருள் பெரும்பாலானோர் எங்கள் சட்டவிதிஞர்களைப் போற்றினார்கள். எமது ஏனைய ஈமவழமைகளுள் இந்த உரையையும் எமது சட்டவிதிஞர்கள் சேர்த்து விதித்தார்கள். களப்பலியானோரை நல்லடக்கம் செய்யும்பொழுது, அவர்களை இவ்வாறு மாண்புறுத்துவது தகும் என்று அவர்களுக்குத் தோற்றியிருக்கிறது.  


எனினும் வீரதீரம் புரிந்தோரை செயலில் மட்டுமே மாண்புறுத்த வேண்டும் என்று நான் விரும்பினேன்; இப்பொழுது நீங்கள் காண்பதுபோல் மக்கள் முன்னிலையில் இடம்பெறும் இத்தகைய ஈமவினை மூலம் மட்டுமே அவர்களை மாண்புறுத்த வேண்டும் என்று நான் விரும்பினேன்.


வீரதீரம் புரிந்தோரை செயலில் மட்டுமே மாண்புறுத்தும் பொழுது ஒருவரது நாவன்மையாலோ அல்லது அவருக்கு நாவன்மை இல்லாமையாலோ பலரின் மாண்புக்கு கேடு விளைவது தவிர்க்கப்படுகிறது. அவர் நன்றாகவோ மோசமாகவோ உரையாற்றும் பொழுது அவர்களது நற்பண்புகள் மீது நம்பிக்கையோ அவநம்பிக்கையோ ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. கூட்டியோ குறைத்தோ பேசுவதைத் தவிர்ப்பது கடினம் அல்லவா?


இனி, மிதமான உரை எதுவும் உண்மையான உரையாக உள்ளத்தில் பதியாது போகவும் கூடும். இறந்தவரின் நண்பர் விவரம் அறிந்தவர் என்றால், நண்பருக்குத் தெரிந்த அளவுக்கு, நண்பர் விரும்பிய அளவுக்கு அப்பேச்சாளர் பேசவில்லை என்று நண்பர் நினைக்கக் கூடும்; அந்த அளவுக்கு நன்கு விவரம் அறியாத ஒருவர் தான் அறிந்ததைவிட அதிகமாக எதைக் கேட்டாலும் இறந்தவர் மீது பொறாமைப்பட்டு, மிகைபடப் பேசப்படுவதாக ஐயுறக்கூடும்.


புகழுரையைச் செவிமடுக்கும் எவரும், தன்னாலும் அவ்வாறு நன்றாகப் போராட முடியும் அல்லது கிட்டத்தட்ட அவ்வாறு போராட முடியும் என்று எண்ணும்வரை அதைச் சகித்துக்கொள்வார். ஆனால், ஒருவர் இவரை விஞ்சி இறந்தவரைப் புகழ்ந்துரைத்தால், இவர் பொறாமைக்கும் அவநம்பிக்கைக்கும் உள்ளாவதுண்டு. மனிதர்கள் அப்படித்தான்!


போகட்டும்! எமது முன்னோர் இவ்வாறு அஞ்சலி செலுத்தி உரையாற்றும் வழமைக்குத் தமது ஒப்புதலை அளித்துள்ளபடியால், அதற்கு நான் அமைந்தொழுக வேண்டியுள்ளது; எனது உரையைச் செவிமடுக்கும் அனைவரது விருப்புக்களையும் நம்பிக்கைகளையும் நிறைவேற்ற நான் என்னால் இயன்றவரை முயல்வேன்; இயன்றவரை பாடுபடுவேன்.


முதற்கண் எமது முன்னோரைப் பற்றி நான் எடுத்துரைக்கப் போகின்றேன். களப்பலியானோரை நினைந்து நாம் புலம்பும் இவ்வேளையில் எமது முன்னோரை நினைந்தும் நாம் அஞ்சலி செலுத்துவது தகும்; அஞ்சலி செலுத்துவது பொருந்தும். இந்த அரசில் எமது முன்னோர் என்றென்றும் வாழ்ந்து வந்தார்கள். தமது வீரத்தின் பெறுபேறாகவும், தலைமுறை தலைமுறையாகவும் அவர்கள் கையளித்து வந்த சுதந்திர அரசை அவர்களிடமிருந்து நாங்கள் பெற்றுக்கொண்டுள்ளோம். எமது முன்னோர் புகழுக்கு அருகதை உடையவர்கள் என்றால், அவர்கள் கையளித்த அரசினை அகட்டி, போராட்டத்துக்கு மேல் போராட்டம் நடத்தி, ஈற்றில் தமது புதல்வர்களாகிய எம்மிடம் இந்த மகத்தான பேரரசைக் கையளித்த எமது தந்தையரும் மிகுந்த புகழுக்கு அருகதை உடையவர்களே.


இன்று இங்கு குழுமியிருக்கும் எங்களுள் பெரும்பாலானோர் இன்னமும் எங்கள் வாழ்நாளில் விறல்மிகுந்த பராயத்தில் இருக்கின்றோம். எங்கள் அரசை நாங்கள் மேலும் செம்மைப்படுத்தியுள்ளோம். அமைதி நிலவும் காலத்திலும், போர் நிகழும் காலத்திலும் எங்கள் அரசு தன்னிறைவுடன் விளங்கும் வண்ணம் அதன் வளத்தை எல்லா வகைகளிலும் நாங்கள் பெருக்கியுள்ளோம்.


எனினும் எங்கள் சொத்துக்கள் பலவற்றை ஈட்டிக்கொள்வதற்கு நாங்கள் படைபலம் கொண்டு புரிந்த வீரதீரங்களைப் பற்றி இங்கு நான் எடுத்துரைக்கப் போவதில்லை; எஞ்சிய கிரேக்கத்திலிருந்து அல்லது வெளியுலகிலிருந்து படையெடுத்து வந்தவர்களை விரட்டியடிப்பதில் நாங்களோ எங்கள் தந்தையரோ காட்டிய விறலைப் பற்றி இங்கு நான் எடுத்துரைக்கப் போவதில்லை. அது நீண்ட கதை; உங்களுக்குத் தெரிந்த கதை.


எனினும், களப்பலியானோரைப் புகழ்ந்துரைக்க முன்னர், நாங்கள் எத்தகைய நெறிகளின்படி செயற்பட்டு வல்லமை ஈட்டினோம்;  எத்தகைய கட்டமைப்புகளுக்கமைய, எத்தகைய வாழ்க்கைப் பாங்கின் ஊடாக எங்கள் பேரரசு பெருமை எய்தியது என்பதை நான் உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அத்தகைய சிந்தனைகள் இத்தருணம் பொருந்துமெனக் கருதுகிறேன்; அவற்றைச் செவிமடுப்பது இங்கு குழுமியிருக்கும் எண்ணிறந்த குடிமக்களுக்கும் வெளியாருக்கும் நலம்பயக்கக் கூடும்.


எங்கள் அரச முறைமை பிறரது அரச கட்டமைப்புகளுடன் போட்டி போடுவதில்லை. எங்கள் அரசு எங்கள் அயலவர்களின் அரசுகள் போல் செயற்படுவதில்லை. மாறாக, அவற்றுக்கு எங்கள் அரசு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. எங்கள் அரச நிருவாகம் பெரும்பான்மையோரின் கையில் இருக்கிறது; அது சிறுபான்மையோரின் கையில் இல்லை; ஆதலால் எங்கள் அரசு ஒரு குடியாட்சி அரசு எனப்படுவது உண்மையே.


தத்தம் சொந்தப் பிணக்குகளைப் பொறுத்தவரை அனைவருக்கும் இங்கு சரிநிகர் நீதி பாலிக்கப்படுகிறது. அதேவேளை சிறப்புக் கோரிக்கையும் ஏற்கப்படுகிறது. குடியாளர் ஒருவர் எந்த வகையிலாவது சிறந்தவர் என்றால், அரச சேவையில் அவருக்கு முதன்மை அளிக்கப்படுகிறது; சலுகையாக அல்ல, திறமைக்குக் கைமாறாகவே அவருக்கு முதன்மை அளிக்கப்படுகிறது. வறுமை எவர்க்கும் தடங்கல் விளைவிக்கப் போவதில்லை. ஒருவர் எவ்வளவு தாழ்ந்தவராயினும், தனது நாட்டுக்கு அவர் நன்மை புரியலாம்.


எங்கள் பொதுவாழ்வில் எவரையும் நாங்கள் ஒதுக்கிவைப்பதில்லை. எங்கள் சொந்த வாழ்வில் நாங்கள் ஒருவர்மீது ஒருவர் ஐயப்படுவதில்லை. தான் விரும்பியதைச் செய்யும் எங்கள் அயலவர்மீது நாங்கள் சீற்றம் கொள்வதில்லை. அவரை உளங்கசந்து நோக்குவதில்லை; உளங்கசந்து நோக்குவதில் தீங்கில்லை என்றாலும், அது இனிதில்லை என்பதால் நாங்கள் உளங்கசந்து நோக்குவதில்லை.


எங்கள் சொந்த அலுவல்களில் நாங்கள் கட்டிறுக்கமானவர்கள் அல்ல. அதேவேளை, எங்கள் பொது அலுவல்களில் ஒரு பற்றுறுதி கவிந்துள்ளது. அதிகாரிகளையும், சட்டங்களையும் நாங்கள் மதித்து நடக்கிறோம். பாதிக்கப்பட்டோரைக் காக்க இடப்பட்ட விதிகளையும், அவற்றை மீறுவோரைப் பொதுமக்களின் கண்டனத்துக்கு உள்ளாக்கும் விதமாக அமைந்துள்ள எழுதப்படாத சட்டங்களையும் நாங்கள் கருத்தூன்றி மதித்து நடக்கிறோம். ஆதலால் நாங்கள் தவறிழைக்காவாறு தடுக்கப்படுகிறோம்.  


உழைத்துக் களைத்த எங்களுக்கு ஓய்வு கொடுக்க நாங்கள் மறக்கவில்லை. ஆண்டு முழுவதும் ஒழுங்கான முறையில் விளையாட்டுகள், வேள்விகள் நடத்தி வருகிறோம். எங்கள் வீடுகள் அழகானவை, நேர்த்தியானவை. நாங்கள் அன்றாடம் இவை அனைத்திலும் மகிழ்ந்து திளைப்பதால், கவலை எங்களை அணுகுவதில்லை. எங்கள் மாநகர அரசின் பெருமையினால் முழு உலகினதும் நற்பலன்கள் எங்களை வந்தடைகின்றன. பிறநாடுகளின் நன்னலங்களை எங்கள் சொந்த நன்னலங்களாகவே நாங்கள் துய்த்து வருகிறோம்; தாராளமாக நாங்கள் துய்த்து வருகிறோம். 


எங்கள் பகைவரின் படைப்பயிற்சியை விட எங்கள் படைப்பயிற்சி பல  விதங்களிலும் மேம்பட்டது. உலகத்துக்கு எங்கள் மாநகர அரசு திறந்து விடப்பட்டுள்ளது. அந்நியர் எதையாவது பார்த்து அல்லது அறிந்து, அதை எதிரிக்கு வெளிப்படுத்தி ஆதாயம் அடையலாம். எனினும் அந்நியரை நாங்கள் தடுப்பதுமில்லை, வெளியேற்றுவதுமில்லை. உத்தியையும் சூழ்ச்சியையும் விடுத்து எங்கள் சொந்த இதயத்தையும் கைகளையும் நம்பியிருப்பவர்கள் நாங்கள். கல்வித்துறையை எடுத்துக்கொள்வோம். மாணவர்கள் தமது பாலப்பருவத்திலிருந்தே கடும்பயிற்சிகளுக்கு உள்ளாகிறார்கள். அது அவர்களுக்கு விறலூட்டுகிறது. நாங்கள் இதம்பட வாழும் அதேவேளை இளையோர்க்குச் சரிநிகராக நாங்களும் பேரிடர்களை எதிர்நோக்கத் தயாராக இருக்கிறோம்; அவர்கள் எதிர்நோக்கும் அதே பேரிடர்களை எதிர்நோக்க, நாங்களும் தயாராக இருக்கிறோம். அதற்கான சான்று இது:


ஸ்பாட்டாகாரர் தமது கூட்டணியினர் பின்தொடர அதென்சின் ஆள்புலத்துக்கு வருகிறார்கள். நாங்கள் ஓர் அயல்நாட்டுக்குத் தனியே போகிறோம். எமது எதிரிகள் தமது தாயகங்களில் போராடுகிறார்கள். நாங்கள் அந்நிய மண்ணில் போராடுகிறோம். எனினும் அவர்களை வெல்வதில் நாங்கள் சிரமப்பட்டதரிது. எங்கள் எதிரிகள் எங்கள் ஒருமித்த வலிமையை என்றுமே உணர்ந்ததில்லை. எங்கள் கடற்படையையும் நாங்கள் கவனிக்க வேண்டியுள்ளது. எங்கள் குடிமக்களைத் தரைப்படையினராக எல்லா இடங்களுக்கும் அனுப்ப வேண்டியுள்ளது. எதிரிகள் எங்கள் தரைப்படையில் ஒரு பகுதியை எதிர்கொண்டு தோற்கடித்தால், எங்கள் படைகள் அனைத்தையும் தோற்கடித்தவர்கள் போல் பெருமைப் படுகிறார்கள். எதிரிகள் தோற்கடிக்கப்படும்பொழுது, எங்கள் படைகள் அனைத்தாலும் தோற்கடிக்கப்பட்டவர்கள் போல் பாசாங்கு செய்கிறார்கள்.  


நாங்கள் கடும்பயிற்சியின்றி மெத்தனமான முறையில் ஆபத்தை எதிர்கொள்ள விரும்புகிறோம் அல்லவா? சட்டத்தால் திணிக்கப்படாமல் பழக்கத்தால் ஈட்டிய வீரத்துடன் ஆபத்தை எதிர்கொள்ள விரும்புகிறோம் அல்லவா? நாங்கள் அந்த வகையில் மிகவும் சிறந்தவர்கள் அல்லவா? துன்பத்தை நாங்கள் எதிர்பார்க்காதபடியால், குறித்த வேளை வரும்பொழுது, என்றென்றும் ஓயாது போராடுவோரைப் போல் எங்களால் வீரத்துடன் போராட முடிகிறது.


அந்த வகையில் எங்கள் மாநகர அரசு அமைதி நிலவும் காலத்திலும் போர் நிகழும் காலத்திலும் சரிநிகராக நயக்கத்தக்கதாகத் திகழ்கிறது. நாங்கள் அழகைச் சுவைத்து நேசிப்பவர்கள். எங்கள் வலிமை எங்கள் உள்ளக்கருத்தில் தங்கியுள்ளது; வெறுமனே கூடி ஆய்வதிலும், கூடி உரையாடுவதிலும் அது தங்கியிருக்கவில்லை; நடவடிக்கை எடுக்க ஆயத்தம் செய்யக் கூடி உரையாடி ஈட்டும் அறிவிலேயே எங்கள் வலிமை தங்கியுள்ளது. நாங்களோ செயற்பட முன்னர் தனித்துவமான முறையில் சிந்திக்கும் வல்லமையும், செயற்படும் வல்லமையும் படைத்தவர்கள். அறியாமை வழிவந்த வீரம்கொண்ட பிறரோ சிந்திக்கும்பொழுது தயக்கம் கொள்பவர்கள். வாழ்வின் இன்ப துன்பங்களைத் தெள்ளத்தெளிவாகப் புரிந்துகொண்டவர்கள் ஆபத்தைக் கண்டு கூனிக் குறுகுவதில்லை. அவர்கள் மாபெரும் வீரர்களாக ஏற்றிப்போற்றப்பட வேண்டியவர்கள் என்பதில் ஐயமில்லை.


நன்மை புரிவதிலும் நாங்கள் தனித்துவம் வாய்ந்தவர்களே. நாங்கள் ஈந்து நட்புறவு பூண்பவர்கள்; ஏற்று உறவு பூண்பவர்கள் அல்ல. ஈயும் நண்பர் உறுதியான நண்பர். கனிவுகொண்டு ஈயும்பொழுது, கடப்பாடு நினைவில் நிலைக்கிறது. அன்பளிப்பை ஏற்றவரோ தனக்கு மற்றவர் புரிந்த தயாளத்துக்கு கைமாறு செய்வதன் மூலம் தனது கடனை மட்டுமே செலுத்துவார் என்பதும், நன்றியுணர்வை ஈட்டமாட்டார் என்பதும் அவருக்குத் தெரியும். ஆதலால் அவர் கனிவுகுன்றியவராகவே விளங்குவார். நாங்கள் மாத்திரமே எங்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல், மனந்திறந்து, அச்சமின்றி, சுதந்திரத்தில் நம்பிக்கை வைத்து எங்கள் அயலவர்களுக்கு நன்மை புரிகிறோம்.


அதாவது, அதென்சு மாநகர அரசே கிரேக்கரின் பள்ளிக்கூடம். பல்வேறு நடவடிக்கைகளுக்கும் ஏற்ப மிகுந்த செப்பநுட்பத்துடனும் நேர்த்தியுடனும் தன்னை நெகிழ்த்தியமைக்கும் வல்லமை அதென்சு மாநகரவாசி ஒவ்வொருவருக்கும் இருப்பதாகவே தெரிகிறது. இது போகடி போக்காகக் கூறப்படும் வீண் கூற்றாகாது. இது மெய்யான கூற்று;உண்மையான கூற்று. மேற்படி பண்புகளால் எங்கள் அரசு எய்திய இந்த உயர்நிலையே அக்கூற்றுக்குச் சான்று பகர்கிறது. ஆபத்து வேளையில் அதென்சு மாநகர அரசே பிற அரசுகளை முந்தி அறைகூவி எழுந்தது. அத்தகைய அதென்சு மாநகர அரசுமீது போர்தொடுக்கும் பகையரசு எதுவும் அதென்சினால் பின்னடைவுகளுக்கு உள்ளாகினாலும் சீற்றம் கொள்வதில்லை. தங்கள்  ஆட்சியாளர்களாக விளங்கும் அருகதை தங்கள் ஆட்சியாளர்களுக்கு இல்லை என்று எங்கள் குடிமக்கள் எவரும் முறையிடுவதில்லை.


எல்லாவற்றுக்கும் எங்களிடம் கண்கண்ட சாட்சிகள் உண்டு என்பது உறுதி. இந்த ஊழியிலும், எதிர்வரும் ஊழிகளிலும் எங்கள் அரசை ஒரு வியத்தகு அரசாக நிலைநிறுத்தும் வண்ணம் எங்கள் வலிமைக்கு நினைவுச் சின்னங்கள் நாட்டப்பட்டுள்ளன. கணப்பொழுது இனிக்கும் கவிதை பாடும் ஹோமரின் புகழாரமோ வேறு வைதாளிகரின் புகழாரம் எதுவுமோ எமக்கு வேண்டியதில்லை. அவர்கள் விவரங்களை எடுத்துரைத்து இயற்றும் பாக்கள் வெளிவரப் போவதில்லை.


புலங்கள் முழுவதும், கடல் முழுவதும் எங்கள் வலிமைக்கு வழிவிடும்படி செய்துள்ளோம். எல்லா இடங்களிலும் எங்கள் நட்புக்கும் பகைக்கும் நிரந்தர நினைவுச் சின்னங்கள் நாட்டியுள்ளோம். அத்தகைய மாநகர அரசுக்காக இவ்வீரர்கள் மாண்புடன் போராடி மடிந்தார்கள். தமது அரசு தம்மிடமிருந்து பறிபோகக் கூடும் என்பதை அவர்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. ஆதலால் எஞ்சியுள்ள நாங்கள் அனைவரும் எங்கள் அரசுக்காக அகமகிழ்ந்து போராட வேண்டும்.


அத்தகைய பேறுகள் எவற்றையும் துய்க்காதவர்கள் நாடும் பரிசை விட உயர்ந்த பரிசை நாடியே நாங்கள் மல்லாடுகிறோம் என்பதை உங்களுக்குச் சுட்டிக்காட்டவும், இப்பொழுது நான் நினைவுகூரும் வீரர்களின் தகுதியை வெளிப்படையான சான்றின் மூலம் மெய்ப்பிக்கவும்  விரும்பியே அதென்சின் பெருமையை நான் எடுத்துரைத்தேன்.


அவர்களது புகழின் உச்சம் ஏற்கெனவே எடுத்துரைக்கப்பட்டுவிட்டது. எங்கள் மாநகர அரசைப் பெருமைப்படுத்தும்பொழுது, அவர்களையும் அவர்களைப் போன்றவர்களையும் நான் பெருமைப்படுத்தினேன். அவர்களுடைய நற்பண்புகளால் எங்கள் அரசு புகழடைந்தது. அவர்கள் புரிந்த செயல்களை எடைபோட்டுப் பார்க்கும்பொழுது, அவர்களது புகழுக்கு அவை நிகராவது தெரிந்தது. ஒருசில கிரேக்கரையே அவர்களுடன் ஒப்பிட முடியும்!


அவர்களுக்கு நேர்ந்த இறப்பு, ஒருவரின் பெறுமதியைக் கணிப்பதற்கு வேண்டிய மெய்யான அளவுகோல் என்று நான் நம்புகிறேன். இப்பொழுதே முதல் தடவையாக அவர்களது நற்பண்புகள் வெளிப்பட்டும் கூட, அவர்களது நற்பண்புகளுக்கு இப்பொழுது இறுதி முத்திரை குத்தப்பட்டுவிட்டது.


வேறு வழிகளில் குறைவாகச் சாதித்தவர்களும் தமது நாட்டுக்காகத் தாங்கள் போராடிய தீரத்தை முன்வைத்து வாதாடுவது நியாயமே. அவர்கள் நல்லது கொண்டு தீயதைத் துடைத்துள்ளார்கள்; தமது சொந்தச் செயல்களின் மூலம் அரசுக்குத் தீங்கிழைத்ததை விட, தமது பொதுப்பணி மூலம் அரசுக்கு அதிக நலம் புரிந்துள்ளார்கள். அவர்களுள் எவரும் தமது செல்வத்தால் ஊக்கம் இழக்கவில்லை; வாழ்வின் இன்பங்களை இழக்கத் தயங்கவில்லை; தான் ஒருநாள் செல்வர் ஆகலாம் என்றோர் ஏழை நம்புவதுண்டு; அவர்களுள் எவரும் அத்தகைய நம்பிக்கையில் போருக்குப் புறப்படும் நாளைப் பின்போடவில்லை. அவை அனைத்தையும் விடத் தங்கள் எதிரிகளைத் தண்டிப்பதே மிகவும் இனிமை பயக்கும் என்று கருதினார்கள்; அதில் களப்பலியாவதை விடப் பெருமை மிகுந்த வேறு பணி கிடைக்காது போகலாம் என்று கருதினார்கள்; தமது உயிரைப் பணயம் வைத்துப் போராடினார்கள்; தங்கள் சகாக்கள் எதிரியைப் பழிதீர்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களை விட்டுப் புறப்பட உறுதி பூண்டார்கள். தாங்கள் காணாத இன்பம் எங்களுக்கு வாய்க்கும் என்று அவர்கள் நம்ப வேண்டியதாயிற்று. எனினும் தாங்களாகவும் தனித்தும் இறப்பை எதிர்கொள்ள அவர்கள் உறுதி பூண்டார்கள்.  குறித்த வேளை வந்தபொழுது உயிர்தப்பி ஓடுவதை விட, உடல்வருந்தி எதிர்த்துநிற்க முடிவு செய்தார்கள்.  இகழ்ச்சியை விரட்டியடித்து ஓடினார்கள்; எனினும் போர்க்களத்தில் அடிபதித்து நின்றுபிடித்தார்கள்; கணப்பொழுதில், தங்கள் நற்பேறின் உச்சத்தில், அச்சத்தை விடுத்து, புகழை ஏற்று, களப்பலியானார்கள்.


அதென்சு மாநகரக் குடிமக்கள் என்ற அருகதைக்குரிய எங்கள் வீரர்களுக்கு நேர்ந்த முடிவு அதுவே. அதைவிடவும் கடுமை குறைந்த உயிரிழப்பு வேண்டி நாங்கள் துதிக்கக் கூடும். எனினும்  அவர்களது வீரத்தை விட மிகுந்த வீர உணர்வு, உயிர்வாழும் எங்களுக்கு வேண்டியதில்லை. அந்த வீர உணர்வு, சொற்களில் எடுத்துரைப்பதற்குரியதல்ல.


வீரத்துடன் எதிர்த்துநிற்பதில் உள்ள அனுகூலங்கள் குறித்து எவரும் உங்களுக்கு ஓயாது உரையாற்றக் கூடும். அதெல்லாம் உங்களுக்கு ஏற்கெனவே தெரியும். எனவே அத்தகைய ஒருவரின் உரையைச் செவிமடுப்பதை விடுத்து, உங்கள் உள்ளத்துள் அதென்சுமீது நேயம் நிறையும்வரை அதன் பெருமையை ஒவ்வொரு நாளும் நீங்கள் கண்ணுறுவதையே நான் விரும்புகிறேன். அதென்சின் புகழ் உங்கள் உள்ளத்துள் பதிந்த பிறகு, இதை எண்ணிப் பாருங்கள்: தமது கடமையை அறிந்தவர்களால், தமது கடமையைப் புரியத் துணிந்தவர்களால், மோதல் மூண்ட வேளைகளில் எல்லாம் இகழ்ச்சிக்கு உள்ளாக அஞ்சியவர்களால், என்றாவது ஒரு தாக்குதலில் தாங்கள் தோல்வி அடைந்தாலும் கூட தமது நற்பண்புகளின் பலாபலன் தமது தாயகத்துக்குக் கிடைக்காமல் போவதைத் தடுத்தவர்களால், தமது தாயகத்து விருந்தில் செவ்விய காணிக்கையாகும் வண்ணம் தாராளமாகத் தமது இன்னுயிரை ஈந்தவர்களால் இப்பேரரசு ஈட்டிக்கொள்ளப்பட்டது என்பதை எண்ணிப்பாருங்கள்.


அவர்கள் கூடிப் புரிந்த தியாகத்துக்கு தனிதனியாக கைமாறு செய்யப்பட்டுள்ளது.அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இற்றுவிழாத கல்லறை அது; கல்லறைகளுள் எல்லாம் தலைசிறந்த கல்லறை அது. அவர்களின் யாக்கை இடப்பட்ட கல்லறையை அல்ல, அவர்களின் புகழ்பாடும் கல்லறையைக் குறித்துப் பேசுகிறேன்;  ஒவ்வொரு வேளையிலும், ஒவ்வொரு நிகழ்விலும் சொல்லிலும் செயலிலும் முழங்கப்படும் புகழெனும் கல்லறையைக் குறித்துப் பேசுகிறேன். முழு உலகமும் புகழ்படைத்தோரின் கல்லறையே. அவர்களின் தாயகத்தில் தூபிகள் நாட்டியும், கல்வெட்டுகள்  பொறித்தும் அவர்கள் நினைவு கூரப்படுகிறார்கள். அத்துடன் வெளிநாடுகளிலும் அவர்களுக்கு எழுதப்படாத நினைவுச் சின்னங்கள் எழுப்பப்பட்டுள்ளன; கல்லில் அல்ல மக்களின் இதயத்தில் பொறிக்கப்பட்ட சின்னங்கள் அவை. அவர்களை உங்களுக்கு எடுத்துக்காட்டாகக் கொண்டு, வீரத்தை சுதந்திரமாகவும், சுதந்திரத்தை இன்பமாகவும் மதியுங்கள்.


போரின் பேரிடர்களை மிகவும் மெத்தனமாக எடைபோட வேண்டாம். வளம்பட்டோர் உயிர்தப்பினால் அவர்களின் நிலைமை எப்பொழுதும் மோசமடைய நேரும். அத்தகையோர் தற்செயலாக வீழ்ந்துபட்டாலும் கூட அவர்களது நிலைமை பாரதூரமாக மாறும். அவர்களை விட, நல்ல திருப்பம் ஏற்படும் என்று நம்பாது அவப்பேறுக்கு உள்ளாகியோர் உயிர்நீப்பதற்கு நியாயம் குறைவு.  வீரத்தில் தோய்ந்து, பொது உணர்வில் உந்தியெழும் வீரனுக்கு நேரும் எதிர்பாரா இறப்பைவிடப் பேடிமையும் பேரழிவும் பெருமளவு கசக்கும்.


மாண்டவர்களின் பெற்றோர் இங்கு வந்திருக்கிறார்கள். அவர்களைக் கண்டு இரங்குவதை விடுத்து, அவர்களை ஆற்றித்தேற்றவே நான் விரும்புகிறேன். உங்கள் புதல்வர்கள் பற்பல களநிலைவரங்களுள் சிக்குண்டு மாண்டவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் மடிவும்,உங்கள் துயரும் சரிக்குச்சரி மாண்புடையதாகலாம்; அவர்கள் வாழும் காலமே அவர்கள் மகிழும் காலம் என்று விதிக்கப்பட்டுள்ளது; எனினும் அவர்கள் புகழின் உச்சத்தை தொடும் பேறு பெற்றவர்களாகக் கொள்ளத்தக்கவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்கள் புதல்வர்களின் புகழை உங்களுக்கு உணர்த்துவது எத்துணை கடினம் என்பதை நான் அறிவேன். இதுவரை உங்கள் இதயம்பொலிய நீங்கள் அடைந்த மகிழ்ச்சியை  மற்றவர்களின் நற்பேறுகள் இனி அடிக்கடி உங்களுக்கு நினைவுபடுத்தும். அத்தகைய அருட்பேறுகளை நீங்கள் அவாவும்பொழுது உங்களுக்குத் துயரம் ஏற்படும். அவை முன்னொருபொழுதும் ஒருவர் அறியாத அருட்பேறுகள் அல்ல; அவருடைய முன்னைய வாழ்வில் ஓர் அங்கமாக விளங்கிய பின்னர் அவரிடமிருந்து அகற்றப்பட்ட அருட்பேறுகள் அவை. 


உங்களுள் சிலர் இன்னும் பிள்ளைகள் பெறக்கூடிய வயதில் இருக்கிறீர்கள். உங்கள் துயரை நீங்கள் செவ்வனே தாங்கிக்கொள்ள வேண்டும். இனிமேல் உங்களுக்குப் பிறக்கப்போகும் பிள்ளைகள், நீங்கள் இழந்த பிள்ளைகளை மறக்கச் செய்யலாம்; அத்துடன் எங்கள் தாயகத்துக்கும் அது இருமடங்கு நலம்பயக்கும். எங்கள் தாயகம் கைவிடப்பட்ட தரிசாகாமல், மிகவும் பத்திரமான தாயகமாக விளங்கும். தாயகத்தை ஆபத்து சூழ்கையில் களமிறக்கப் பிள்ளைகள் அற்றவரின் உள்ளக்கருத்துக்கு சரிநிகரான கனதியோ பெறுமதியோ கிடைக்க முடியாது. 


முதியோர்க்கு நான் கூறுவது இதுவே: உங்கள் வாழ்நாளில் பெரும்பகுதியை நீங்கள் மகிழ்ச்சியுடன் கழித்திருப்பதை எண்ணிப் பெருமைப்படுங்கள். உங்கள் துயரவாழ்வு நீடிக்காது என்பதை நினைவில் வைத்திருங்கள். மாண்டவர்களின் புகழில் ஆறித்தேறுங்கள். சிலர் கூறுவது போல் செல்வத்தின்மீது கொண்ட நேயமல்ல, மாண்பின்மீது கொண்ட நேயமே என்றென்றும் இளமை வாய்ந்தது. மூப்படைந்து, பயன்படாது வாழும் காலத்தில் மாட்சியே மனிதருக்கு மகிழ்வூட்டும்.


மாண்டவர்களை விஞ்சும் வண்ணம் போராடுவதற்கு, அவர்களின் புதல்வர்களும், சகோதரர்களும் அரும்பாடு படநேரும் என்றே எனக்குத் தோன்றுகிறது. மாண்டவர்களை அனைவரும் புகழ்வர். உங்கள் நற்பண்புகள் எத்துணை மேம்பட்டதாயினும், மாண்டவர்களை அணுகும்படி கூட உங்களுக்கு நான் கூறவில்லை. அவர்களுடன் போட்டியிடுவதையோ, அவர்களைத் தாழ்த்துவதையோ தவிர்த்துக் கொள்ளுங்கள். ஒருவர் மடியும்பொழுது, அவருக்கு கிடைக்கும் மாட்சியும், அவரைப் பற்றிய நல்லெண்ணமும் அப்பழுக்கற்றவை.


இனிமேல் கணவரின்றி வாழப்போகும் பெண்களின் நற்பண்புகள் பற்றியும் நான் கூறத்தான் வேண்டும் என்றால், அவர்களைச் சிறுது கடிந்து, அவற்றை இப்படிச் சுருக்கி உரைப்பேன்: தனது பாலுக்கு இயல்பான பலவீனத்தை விட அதிக பலவீனம் காட்டாதிருப்பதும், ஆடவரின் பேச்சில் நல்ல விதமாகவோ கெட்ட விதமாகவோ அடிபடாதிருப்பதும் ஒரு பெண்ணுக்குப் பெரும்புகழ் சேர்க்கும்.


இதுவரை சட்டத்துக்கமைந்து எனது புகழாரத்தை நான் சூட்டிவிட்டேன். எனக்குத் தென்பட்டபடி உகந்த சொற்களைக் கையாண்டு விதிக்கப்பட்ட புகழாரத்தை நான் சூட்டிவிட்டேன். வீரச்செயல்களுக்கும் போதியளவு புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. மாண்டவர்களின் வீரச்செயல்களே அவர்களுக்குப் புகழாரம் ஆகும். அவர்களது பிள்ளைகளுக்கு வயது வரும்வரை அரச செலவில் அவர்களைப் பராமரிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.


எங்கே நற்பண்புகளுக்கான கைமாறுகள் மகத்தானவையாக விளங்குகின்றனவோ அங்கே பெருங்குடிமக்கள் தாயகப் பணியில் அமர்த்தப்படுகின்றனர். மாண்டவர்கள் எத்தகைய போராட்டத்தை மேற்கொண்டார்களோ அத்தகைய போராட்டத்தின் பின்னர் தனது வாழும் புதல்வர்களுக்கும், மாண்ட புதல்வர்களுக்கும் அதென்சுத் தாயகம் மாலைசூட்டுவது போல் சூட்டும் திண்ணிய பரிசு எனத்தக்க புகழாரம் இதுவே.


இனி நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் ஒவ்வொருவரதும் இழப்பை எண்ணி உரியமுறைப்படி அழுதுபுலம்பிய பின்னர் இங்கிருந்து புறப்படலாம்.  

__________________________________________________________

Pericles (495-429 BCE), Funeral Oration, 

at the end of the first year of the Peloponnesian War (431-404 BCE), 

Thucydides (460-395 BCE), History of the Peloponnesian War. 

தமிழ்: மணி வேலுப்பிள்ளை


No comments:

Post a Comment