அந்தப்புரம்
ஹெரொடொட்டஸ்
ஆதிகிரேக்க வரலாற்றறிஞர்
பொ. யு. முன் 484 – 435?
அந்தப்புரம்
(நாடக வடிவம்)
களம்: அன்றைய இலிதிய நாடு (இன்றைய துருக்கியின் மேற்குப் புலம்)
களம் புகுவோர்: கந்துலோஸ் (இலிதிய அரசன்)
அரசி (அரசியின் பெயரை எரொடொட்டஸ் தரவில்லை)
அரசியின் சேடி
கைகேயஸ் (அரசனின் மெய்காவலன்)
காட்சி: 1
பொழுது புலரும் வேளை. அந்தப்புரத்து மஞ்சத்தில் உறக்கம் கலையும் மன்னவன் கந்துலோஸ். மஞ்சத்தில் எழுந்திருக்கும் மன்னனின் தோளிலிருந்து நழுவும் போர்வைத் தலைப்பு. இன்னும் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அரசி. அரசியின்மேல் கவிந்திருக்கும் போர்வையை விலக்கும் மன்னன். ஒருக்களித்துப் படுத்திருக்கும் அரசி. கலைந்த கூந்தலுடன் ஒளிரும் அரசியின் முகத்தை நயந்து முகரும் மன்னன். உறக்கத்தில் புரண்டு மல்லாந்து படுக்கும் அரசி. முழுப் போர்வையையும் விலக்கி, அரசியின் முழுமேனி அழகையும் நயந்துவக்கும் மன்னன். புன்முறுவலுடன் படுக்கை அறையை விட்டு வெளியேறும் மன்னனை, அரைக் கிறக்கத்தில் நோட்டமிட்டு, மீண்டும் உறங்கும் அரசி.
காட்சி: 2
பிற்பகல். தனது ஓய்வுகூடத்துள் அமர்ந்து மதுவருந்தும் மன்னன் கந்துலோஸ். வெளிவாயிலில் ஆயுதபாணியாய் மெய்காவலன் கைகேயஸ்.
கந்துலோஸ்: யாரங்கே?
கைகேயஸ்: (உள்ளே பாய்ந்து) வணக்கம், மாட்சிமை தங்கிய மன்னவர் அவர்களே! தங்கள் கட்டளை என்னவோ?
கந்துலோஸ்: (உரத்த குரலில்) கைகேயஸ்!
கைகேயஸ்: (தணிந்த குரலில்) தங்கள் சித்தம் என்னவோ, மன்னவா?
கந்துலோஸ்: (நிதானமான குரலில்) அரசியைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
கைகேயஸ்: (முழங்கும் குரலில்) மாட்சிமை தங்கிய அரசியார் நீடூழி வாழ்க!
கந்துலோஸ்: (உரத்த குரலில்) அரசியைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
கைகேயஸ்: (தணிந்த குரலில்) மன்னிக்க வேண்டும் மன்னவா! தாங்கள்...
கந்துலோஸ்: இந்த நாட்டரசி ஓர் அழகரசியடா!
கைகேயஸ்: (தாழ்ந்த குரலில்) தாங்கள்...
கந்துலோஸ்: நான் புளுகவில்லையடா! அரசி ஒரு பேரழகியடா! (மீண்டும் மதுக்குவளையை ஏந்துகிறான்)
கைகேயஸ்: (அரசன் திரும்பவும் ஒரு மிடறு பருகும்பொழுது, மெதுவாக
அரசனின் பின்புறம் நகர்ந்து, மதுப்புட்டியை மறைவாக அப்புறப்படுத்துகிறான்).
கந்துலோஸ்: நீ நம்பவில்லையா?
கைகேயஸ்: மன்னிக்க வேண்டும் மன்னவா! தாங்கள் என்னிடம் கேட்கிறீர்களே!
கந்துலோஸ்: உன்னிடமும் கேட்கிறேன், எவரிடமும் கேட்கிறேன், இந்த நாட்டு
மக்கள் அனைவரிடமும் கேட்கிறேன். இலிதிய நாட்டரசி இணையிலா அழகியா, இல்லையா?
கைகேயஸ்: (முழங்கும் குரலில்) மாட்சிமை தங்கிய அரசியார் நீடூழி வாழ்க!
கந்துலோஸ்: ‘மாட்சிமை தங்கிய அழகரசி நீடூழி வாழ்க’ என்று முழங்கடா!
கைகேயஸ்: மாட்சிமை தங்கிய அரசியாரின் மாபெரும் அழகு உலகறிந்த உண்மை, மன்னவா!
கந்துலோஸ்: உலகம் அதை வாய்விட்டுச் சொல்லட்டுமே!
கைகேயஸ்: (அமைதி காக்கிறான்).
கந்துலோஸ்: நீயும் அதை வாய்விட்டுச் சொல்லடா.
கைகேயஸ்: மாட்சிமை தங்கிய அரசியார் மாபெரும் அழகி’ என்று வாய்விட்டுச் சொல்லும் அருகதை தங்களைத் தவிர வேறு எவருக்கும் இருக்கக் கூடாது, மன்னவா!
கந்துலோஸ்: என்ன? மற்றவர்களுக்கு அந்த அருகதை இருக்கக் கூடாதா?
கைகேயஸ்: மாட்சிமை தங்கிய அரசியார் தங்கள் வாழ்க்கைத்துணை மட்டுமல்ல, ஒரு பெண்மணியும் கூட, மன்னவா!
கந்துலோஸ்: அரசி என்றால் பெண்மணி தானே?
கைகேயஸ்: ஆம், அரசி என்றால் பெண்மணி தான் மன்னவா! தங்களுக்கு நான் கூற வந்தது…
கந்துலோஸ்: நீ கூற வந்தது?
கைகேயஸ்: தங்களுக்கு அடியேன் கூற வந்தது... ஒரு பெணமணியின் அழகை, அதுவும் தங்கள் வாழ்க்கைத்துணையின் அழகை, அதுவும் மாட்சிமை தங்கிய அரசியாரின் அழகை ஓர் ஆடவன், அதுவும் தங்கள் மெய்காவலன், அதுவும் இந்த நாட்டுக் குடிமகனாகிய நானோ பிறரோ ஏறெடுத்துப் பார்ப்பது தகாது, மன்னவா!
கந்துலோஸ்: நான் மனந்திறந்து பேசுகிறேன், நீ மனந்திறந்து பேசவில்லையே!
கைகேயஸ்: தாங்கள் மாட்சிமை தங்கிய மன்னர், அடியேன் தங்கள் மெய்காவலன். அடியேன் தங்கள் பாணியில் பேசுவது எங்ஙனம், மன்னவா?
கந்துலோஸ்: (நிதானமான குரலில்) கைகேயஸ், நீ தத்துவம் பேசுகிறாய். மனந்திறந்து பேசவில்லை.
கைகேயஸ்: (தணிந்த குரலில்) தாங்கள் மாட்சிமை தங்கிய மன்னவர். தாங்கள் மனம் திறந்தும் பேசவல்லவர், மனம் மறந்தும் பேசவல்லவர்…
கந்துலோஸ்: (உரத்த குரலில்) நிறுத்து உன் தத்துவத்தை! பேசு மனந்திறந்து!
கைகேயஸ்: மாட்சிமை தங்கிய அரசியாரின் மாபெரும் அழகு நாடறிந்த உண்மையே என்பதை ஏற்கெனவே அடியேன் ஒப்புக்கொண்டேனே, மன்னவா!
கந்துலோஸ்: இல்லை, நீ மனந்திறந்து ஒப்புக்கொள்ளவில்லை.
கைகேயஸ்: மன்னிக்க வேண்டும், மன்னவா! மாட்சிமை தங்கிய மன்னராகிய தாங்கள் மாட்சிமை தங்கிய அரசியாரைப் பற்றி தங்கள் மெய்காவலனுடன் அளவளாவுகிறீர்கள் என்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள்!
கந்துலோஸ்: (உரத்த குரலில்) கைகேயஸ், நான் அரசியைப் பற்றிக் கேட்கவில்லை, அரசியின் அழகைப் பற்றிக் கேட்கிறேன்!
கைகேயஸ்: (முணுமுணுக்கிறான்) தங்கள் மெய்காவலனிடம்…
கந்துலோஸ்: (கர்ச்சிக்கிறான்) கைகேயஸ்!
கைகேயஸ்: தங்கள் சித்தம் என்னவோ, மன்னவா!
கந்துலோஸ்: நீ முணுமுணுப்பதிலிருந்து தெரிகிறது, அரசியின் அழகை நீ எனக்காகத்தான் ஏற்றுக்கொள்கிறாய் என்று! நீ முகத்துக்கஞ்சி வேசையாடுகிறாய்!
கைகேயஸ்: இதென்ன அநியாயம், மன்னவா! இது அடாப்பழி, மன்னவா! தாங்கள் இன்று மட்டுமீறி... அருந்தியிருக்கிறீர்கள்.
கந்துலோஸ்: நீ வாய்க்கு வாய் கதைப்பதிலிருந்து தெரிகிறது, நான் சொல்வதை நீ நம்பவில்லை என்று!
கைகேயஸ்: இது வீண்பழி, மன்னவா!
கந்துலோஸ்: குடிமக்கள் தங்கள் கண்களை விடக் காதுகளை அதிகம் நம்புகிறார்களோ?
கைகேயஸ்: (அமைதி காக்கிறான்).
கந்துலோஸ்: கைகேயஸ்!
கைகேயஸ்: தங்கள் சித்தம் என்னவோ, மன்னவா!
கந்துலோஸ்: நீ அரசியை அம்மணமாய்ப் பார்த்து, அரசியின் பேரழகை ஒப்புக்கொள்வதற்கு, உடனடியாக ஓர் உபாயத்தை வகுத்துக்கொள்!
கைகேயஸ்: (தன் காதுகளைப் பொத்தி) ஐயகோ, மன்னவா! இதென்ன கொடுமை, அநீதி, அநியாயம், அக்கிரமம், மன்னவா! ‘தங்கள் சித்தம், தங்கள் சித்தம்’ என்று கூறித் தங்கள் உத்தரவுகளை ஏற்கும் இந்த மெய்காவலனிடம் இம்மியும் ஏற்கமுடியாத ஓர் உத்தரவைப் பிறப்பிக்கிறீர்களே, மன்னவா! இப்படி ஒரு தண்டனைக்கு உள்ளாக, அடியேன் என்ன பாவம் செய்தேன், மன்னவா, என்ன பாவம் செய்தேன்? (விம்முகிறான்).
கந்துலோஸ்: இது என் கட்டளை!
கைகேயஸ்: ஐயகோ, மன்னவா! தங்கள் கட்டளையை அடியேன் நிறைவேற்றலாமா? இந்தப் பைத்தியக்காரத்தனத்துக்கு தாங்கள் இடங்கொடுக்கலாமா? மாட்சிமை தங்கிய அரசியாரின் பிறந்தமேனியை, தங்கள் வாழ்க்கைத்துணையின் பிறந்தமேனியை, அடியேனுக்கு வாழ்க்கைப்படாத பெண்மணியின் பிறந்தமேனியை அடியேன் கண்கொண்டு பார்க்கலாமா?
கந்துலோஸ்: என் பட்டறிவைக் கொண்டு நான் சொல்லுவேன், எந்தப் பட்டறையிலும் முழங்குவேன், அரசியே மாபெரும் அழகி! நீ அரசியின் பிறந்தமேனியைப் பார்த்து, அரசியின் பேரழகை ஒப்புக்கொள்வதற்கு, உடனடியாக ஓர் உபாயத்தை வகுத்துக்கொள்!
கைகேயஸ்: ஐயகோ, மன்னவா! பிறர் முன்னிலையில் ஒரு பெண்ணின் ஆடை அகலும்பொழுது அப்பெண்ணின் பெருமையும் அகலுமே, மன்னவா!
கந்துலோஸ்: ஆடை அகன்று அழகு துலங்குவதே பெண்ணுக்குப் பெருமை!
கைகேயஸ்: நம் முன்னோர் வகுத்த பண்பும், ஒழுக்கமும் என்னாவது, மன்னவா?
கந்துலோஸ்: அழகை எதிர்கொள்ள அஞ்சிய முன்னோர் வகுத்த பேடி-அறத்தை மறந்துவிடு!
கைகேயஸ்: தலைமுறை தலைமுறையாய் நாங்கள் கைக்கொண்ட இல்லறத்தையும், நல்லறத்தையும் துறப்பதா, மன்னவா?
கந்துலோஸ்: உன் பேடித்தனத்தை மறைக்க இல்லறம், நல்லறம் என்று புதுக்கதை பேசாதே!
கைகேயஸ்: இது பேடித்தனம் இல்லை, மன்னவா!
கந்துலோஸ்: ஆம், ஒரு பெண்ணின் முழுமேனியழகைக் காணத் துணியாத பேடித்தனம்!
கைகேயஸ்: இது பேடித்தனம் இல்லை, மன்னவா, பேராண்மை!
கந்துலோஸ்: பேராண்மை? நான் கேள்விப்பட்டதில்லையே!
கைகேயஸ்: பிறன்மனை நோக்காத பேராண்மை!
கந்துலோஸ்: அப்படி என்றால், அரசியின் உடலழகுக்கு நீ கண்கண்ட சாட்சி ஆவது எப்படி?
கைகேயஸ்: மாட்சிமை தங்கிய அரசியார் மாபெரும் அழகி என்பதால், தாங்கள் ஏற்கெனவே அதற்குக் கண்கண்ட சாட்சியாக விளங்குகிறீர்கள் என்பதால், இனி அடியேனோ வேறு யாருமோ அதற்குக் கண்கண்ட சாட்சியாக விளங்க வேண்டியதில்லை என்பதால், மாட்சிமை தங்கிய அரசியாரின் பெருமைக்கு இழுக்குண்டாகும் விதமாக நடந்துகொள்ளும்படி தாங்கள் பிறப்பித்த கட்டளையை தயவுசெய்து மீட்டுக்கொள்ளுங்கள், மன்னவா!
கந்துலோஸ்: முடியாது, நான் இட்ட கட்டளையை மீட்க முடியாது. அரசி மாபெரும் அழகி என்பதற்கு நீ புறச்சாட்சியாக விளங்க வேண்டும். (குவளையில் மது தீர்ந்தது கண்டு) எங்கே என் மதுப்புட்டி?
கைகேயஸ்: ஐயோ, அடியேன் அறியேன்! என்ன செய்வேன்? எங்கு செல்வேன்? என்ன ஆவேன்?
கந்துலோஸ்: உன்னைச் சோதித்துப் பார்ப்பதற்காக நான் இதைச் சொல்லவில்லை. நீ கவலைப்பட வேண்டியதில்லை. என்னையோ அரசியையோ எண்ணி நீ அஞ்சத் தேவையில்லை. நானோ அரசியோ உனக்குத் தீங்கு விளைவிக்கப் போவதில்லை.
கைகேயஸ்: (அமைதி காக்கிறான்).
கந்துலோஸ்: பயப்படாதே, கைகேயஸ்! நானே ஓர் உபாயம் தீட்டி வைத்திருக்கிறேன்.
கைகேயஸ்: அபாயம், மன்னவா, அபாயம்!
கந்துலோஸ்: அபாயம் இல்லையடா, கைகேயஸ், உபாயம்!
கைகேயஸ்: (அமைதி காக்கிறான்).
கந்துலோஸ்: அரசிக்குத் தெரியாமல்...
கைகேயஸ்: ஐயோ!
கந்துலோஸ்: அரசியின் உடலழகை...
கைகேயஸ்: ஐயகோ!
கந்துலோஸ்: நீ அவதானிக்க...
கைகேயஸ்: அவமானம்!
கந்துலோஸ்: அவமானமா?
கைகேயஸ்: எங்கள் ஆண்மைக்கும் அரசியின் பெண்மைக்கும் அவமானம், மன்னவா, அவமானம்!
கந்துலோஸ்: மண்ணாங்கட்டி! நீ அவதானிப்பது அரசிக்குத் தெரியவே தெரியாது. இன்று அந்தி சாயும் வேளை, வழமைக்கு மாறாக, அந்தப்புரத்துப் படுக்கை அறைக்குள் அரசி அடியெடுத்து வைக்க முன்னரே, நான் அங்கே போய்ப் படுத்துவிடுவேன்.
கைகேயஸ்: (அமைதி காக்கிறான்).
கந்துலோஸ்: நீயும் வழமைக்கு மாறாகப் படுக்கை அறைக்குள் அடியெடுத்து வைக்கப் போகிறாய்!
கைகேயஸ்: ஐயையோ, மன்னவா, ஐயையோ!
கந்துலோஸ்: நான் கதவைத் திறந்தபடியே விட்டுவைப்பேன். திறந்த கதவின் பின்புறம் நீ பதுங்கியிருப்பாய்.
கைகேயஸ்: ஐயையோ!
கந்துலோஸ்: அப்புறம் அரசி உள்ளே வந்து, தனது ஆடைகளையும் அணிமணிகளையும் களையும்பொழுது, அரசியின் முன்னழகை நீ கண்டுகொள்வாய்.
கைகேயஸ்: ஐயையோ, மன்னவா, ஐயையோ!
கந்துலோஸ்: அரசி மஞ்சத்தை நோக்கித் திரும்பும்பொழுது, அரசியின் பின்னழகை நீ அவதானிப்பாய்.
கைகேயஸ்: ஐயையோ, மன்னவா, ஐயையோ!
கந்துலோஸ்: அரசி மஞ்சத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் அதே சமயத்தில் நீ அரசியின் கண்ணில் விழாமல் வெளியே அடியெடுத்து வைப்பாய். வெளியே எவர் கண்ணிலும் படாமல் நீ நழுவிப் போய்விடுவாய். நாளை காலை ஓய்வுகூடத்தில் உன் கண்கண்ட சாட்சியத்தை நீ தெரிவிக்கலாம். அரசி ஒப்பற்ற அழகி என்பதை நீ வாயார ஒப்புக்கொள்வதை நான் காதாரக் கேட்கலாம் (இருக்கை விட்டெழுந்து புறப்படுகிறான்).
கைகேயஸ்: ஐயையோ! ஐயையோ! (அரசனைப் பின்தொடர்கிறான்).
காட்சி: 3
இருளுந் தறுவாயில் எழில்கொஞ்சும் அந்தப்புரம். மன்னன் கந்துலோஸ் வழமைக்கு மாறாக வேளைக்கே அந்தப்புரத்தை வந்தடைகிறான். படுக்கையறைக் கதவைத் திறந்து மஞ்சத்தில் விழுந்து குப்புறப் படுத்து, போர்வையை வாரி மேனியை மூடுகிறான். ஒரு நாழிகை கழித்து வெளிப்படும் கைகேயஸ் அரவமின்றி அறைக்குள் புகுந்து, கதவின் பின்புறம் பதுங்கிக்கொள்கிறான். ஐந்தாறு நொடிகள் கழித்து வெளிப்படும் அரசி அழகுசிந்த நடைபயின்று அறைக்குள் நுழைகிறார். கதவையும் மஞ்சத்தையும் ஒருதடவை நோட்டம் விட்டுக்கொண்டே ஆடைக்கூடத்தை அடைந்து, ஆடைகளையும் அணிமணிகளையும் களைந்து வைக்கிறார். அரசி மஞ்சத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் அதேவேளையில் கைகேயஸ் மின்னி மறைந்துவிடுகிறான். அரசி ஒருநொடி திரும்பி வாயிலை நோக்கி, மறுபடி திரும்பி மஞ்சத்தில் அமர்ந்து, மல்லாந்து படுத்து, போர்வையை வாரி மேனியை மூடுகிறார்.
காட்சி: 4
அந்தப்புரத்தில் அமர்ந்திருக்கும் அரசி. பின்புறம் நிற்கும் சேடி.
சேடி: மாட்சிமை தங்கிய அரசியார் அவர்களே! தாங்கள் ஆணையிட்டவாறு மாட்சிமை தங்கிய மன்னரின் மெய்காவலர் கைகேயஸ் இங்கு வரவழைக்கப்பட்டுள்ளார். தங்கள் கட்டளைப்படி அவரது உடைவாள் அகற்றபட்டுவிட்டது. தங்களிடம் சேதி தெரிவிக்குமாறு எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் உத்தரவை எதிர்பார்த்து அவர் வெளியே காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசி: கைகேயஸை உடனடியாக உள்ளே அனுமதிக்கும்படி சொல்லி அனுப்பு. அவன் உள்ளே அனுமதிக்கப்பட்டவுடன், அவனுடன் நான் அந்தரங்கமாய் உரையாட ஏற்பாடு செய்!
சேடி: உத்தரவு, மாட்சிமை தங்கிய அரசியார் அவர்களே! (வெளியேறுகிறாள்).
கைகேயஸ்: (உள்ளே அடியெடுத்து வைத்தபடி) மாட்சிமை தங்கிய அரசியார் நீடூழி வாழ்க!
அரசி: (கடுகடுக்கும் முகத்துடன்) ம்!
கைகேயஸ்: வந்தனம், மாட்சிமை தங்கிய அரசியார் அவர்களே!
அரசி: (உரத்த குரலில்) கைகேயஸ்!
கைகேயஸ்: (தாழ்ந்த குரலில்) தங்கள் சித்தம் என்னவோ, மாட்சிமை தங்கிய அரசியார் அவர்களே!
அரசி: (நிதானமான குரலில்) ஒருத்திக்கு ஒருவன்!
கைகேயஸ்: (அமைதி காக்கிறான்).
அரசி: (முழங்கும் குரலில்) ஒருத்திக்கு ஒருவன்!
கைகேயஸ்: மன்னிக்க வேண்டும், மாட்சிமை தங்கிய அரசியார் அவர்களே! தாங்கள்...
அரசி: (உரத்த குரலில்) கைகேயஸ்!
கைகேயஸ்: (தணிந்த குரலில்) தங்கள் சித்தம் என்னவோ, மாட்சிமை தங்கிய அரசியார் அவர்களே!
அரசி: (உரத்த குரலில்) ஒன்றில் அவன் அல்லது நீ.
கைகேயஸ்: (தாழ்ந்த குரலில்) தாங்கள்...
அரசி: (முழங்கும் குரலில்) ஒன்றில் கந்துலோஸ் அல்லது கைகேயஸ்!
கைகேயஸ்: (அதிர்ந்துபோய் நிற்கிறான்).
அரசி: (உரத்த குரலில்) ஒன்றில் நீ கந்துலோஸைக் கொன்று...
கைகேயஸ்: ஐயோ! ஐயகோ!
அரசி: ... என்னையும் நாட்டையும் அடைய வேண்டும்...
கைகேயஸ்: ஐயோ! ஐயையோ!
அரசி: ... அல்லது நீ பார்த்த காட்சியை இனி என்றுமே பர்க்காமல் இருக்கும் வண்ணம் இக்கணமே நீ கொல்லப்பட வேண்டும்.
கைகேயஸ்: (அதிர்ச்சியில் உறைந்துபோய் நிற்கிறான்).
அரசி: (முழங்கும் குரலில்) ஒருத்திக்கு ஒருவன்! ஒன்றில் நீ அல்லது அவன்! ஒன்றில் அவனை நீ கொல்லவேண்டும், அந்த இழிந்த செயலைத் திட்டமிட்டதற்காக; அல்லது நீ கொல்லப்பட வேண்டும், அவனுக்கு அடிபணிந்து என்னை அம்மணமாய்ப் பார்க்கும் இழிந்த செயலைப் புரிந்ததற்காக!
கைகேயஸ்: (அதிர்ச்சியும், அச்சமும், பதகளிப்பும்) என்னை மன்னித்துவிடுங்கள், மாட்சிமை தங்கிய அரசியார் அவர்களே!
அரசி: மாட்சிமை தங்கிய அரசியார்! நீ பதுங்கியிருந்து என் பிறந்தமேனியைப் பார்த்தபொழுது என் மாட்சிமை முழுவதையும் நீ அழித்துவிட்டாயே! மாட்சிமை தங்கிய அரசியார்!
கைகேயஸ்: அடியேன் மாட்சிமை தங்கிய மன்னரின் ஆணைக்குக் கட்டுண்ட காவலன், மாட்சிமை தங்கிய அரசியார் அவர்களே!
அரசி: மாட்சிமை தங்கிய மன்னர்! தான் மட்டுமே பார்க்கவேண்டிய காட்சியை உனக்குக் காட்டியபொழுது தன் மாட்சிமை முழுவதையும் அவன் இழந்துவிட்டானே! மாட்சிமை தங்கிய மன்னர்!
கைகேயஸ்: (அமைதி காக்கிறான்).
அரசி: (உரத்த குரலில்) ஒன்றில் கந்துலோஸ் அல்லது கைகேயஸ்! இருவருள் ஒருவன் வாழவேண்டும்; இருவருள் ஒருவன் மாளவேண்டும். நீ அவனைக் கொன்று என்னையும் நாட்டையும் அடையலாம்; அல்லது நீயே கொலையுண்டு மாளலாம். இரண்டில் ஒன்றை நீயே தேர்ந்தெடுக்கலாம்!
கைகேயஸ்: ஐயோ! ஐயகோ!
அரசி: இரண்டில் ஒன்றை நீயே தேர்ந்தெடுக்க வேண்டும்.
கைகேயஸ்: (ஒரு முடிவுக்கு வந்தவனாக, தன் வெறும் வாளுறையைத் தடவுகிறான்).
அரசி: (குறிப்பறிந்து, தனது கட்டாரியை உருவுகிறார்).
கைகேயஸ்: (சிவந்து கலங்கிய கண்களுடன், இடது கை முண்டுகொடுக்க வலது கையை நீட்டுகிறான்).
அரசி: (கைகேயஸை உற்றுநோக்கியபடி தனது கட்டாரியை அவன் கையில் வைக்கிறார்).
கைகேயஸ்: (தனது மார்பை நோக்கி கட்டாரியை ஓங்குகிறான்).
அரசி: (சடாரென எழுந்து தனது கையை உயர்த்தியபடி) முதலாவது குற்றவாளி உயிருடன் இருக்க, இரண்டாவது குற்றவாளி உயிர்துறக்கக் கூடாது). கொலைத் தண்டனைக்கும் ஓர் ஒழுங்குமுறை உண்டு!
கைகேயஸ்: (ஓங்கிய கையைப் பதித்து விம்முகிறான்).
அரசி: முதலாவது குற்றவாளி, இரண்டாவது குற்றவாளியால் கொல்லப்பட வேண்டும்.
கைகேயஸ்: மெய்காவலனே மன்னரைக் கொல்வதா, அரசியார் அவர்களே?
அரசி: (வெகுண்டெழுந்து) கந்துலோஸ் ஒரு மன்னனும் அல்ல, நீ ஒரு மெய்காவலனும் அல்ல. கந்துலோஸ் ஒரு பொன்னையன். நீ ஒரு பொய்காவலன். நீ அவனுடைய மெய்காவலன் என்ற வகையில் அவனுக்கு அடிபணிந்தது நியாயமே என்று உனக்குத் தென்பட்டால், நீ பார்க்கக்கூடாத காட்சியைப் பார்க்க நேர்ந்தது நியாயமே என்று உனக்குத் தென்பட்டால், உடனடியாக அவனைக் கொன்று உன் நியாயத்தை மெய்ப்பி!
கைகேயஸ்: (விம்முகிறான்).
அரசி: உன்னை எங்கே நிறுத்தி என் பெண்மையை அவன் அம்பலப்படுத்தினானோ, உன்னை அங்கே நிறுத்தியே அவன் ஆண்மையை நான் அம்பலப்படுத்துவேன். நீ எங்கே பதுங்கியிருந்து என்னைப் பார்த்தாயோ, அங்கே பதுங்கியிருந்துதான் நீ அவன்மீது பாய்வாய்! எந்த மஞ்சத்தில் அவன் போலி உறக்கம் கொண்டானோ, அந்த மஞ்சத்தில்தான் அவன் மீளாத்துயில் கொள்வான்! அதற்கு எனது கட்டாரியே உனக்குப் பயன்படட்டும்!
கைகேயஸ்: (விம்மிவிம்மி அரசி கையளித்த கட்டாரியை முகத்தில் ஒற்றி, இடையில் செருகுகிறான்).
அரசி: எத்தனை தடவைகள் அவன் குறி என்னுள் ஊடுருவியதோ, அத்தனை தடவைகள் என் கட்டாரி அவனுள் ஊடுருவட்டும்! ஒருத்திக்கு ஒருவன் என்பதை நாடு கற்கட்டும்! பிறன்மனை நோக்காத பேராண்மை நிலைநிற்கட்டும்! கொலையும் செய்வாள் பத்தினி என்பது மெய்யாகட்டும்!
காட்சி: 5
பொழுது சாயும் வேளை. இருள் சூழும் அந்தப்புரம்.
அரசி: (படுக்கையறைக்குள் விரைந்து, மஞ்சத்தில் விழுகிறார்).
கைகேயஸ்: (அறைக்குள் புகுந்து கதவின் பின்புறம் பதுங்கிக்கொள்கிறான்).
கந்துலோஸ்: (அறைக்குள் வந்து மஞ்சத்தில் அமர்ந்து, அரசியை அரவணைக்கிறான்).
கைகேயஸ்: (அரசி கையளித்த கட்டாரியை உருவியபடி, மின்னல் வேகத்தில் பாய்ந்து, ஓலமிட்டபடி மன்னனின் மார்பிலும் கழுத்திலும் வயிற்றிலும் மாறிமாறிக் குத்துகிறான்).
கந்துலோஸ்: ஆ! ஐயோ! கைகேயஸ்! நீயா? ஆ! ஐயோ! ஐயோ! (விக்கி வலித்து இறக்கிறான்).
அரசி: (முழங்கும் குரலில்) ஒருத்திக்கு ஒருவன்!
கைகேயஸ்: (குருதிசிந்தும் தன் கைகளையும், அரசனின் குருதிதோய்ந்த உடலையும் பார்த்து விம்மிவிம்மி) என்னை மன்னித்துவிடுங்கள், மாட்சிமை தங்கிய மன்னவா, என்னை மன்னித்துவிடுங்கள்!
அரசி: (மன்னனின் உடலை விளித்து முழங்குகிறார்) கொலையும் செய்வாள் பத்தினி! (கைகேயஸை விளித்து முழங்குகிறார்) மாட்சிமை தங்கிய மன்னவர் கைகேயஸ் அவர்களே, ஒருத்திக்கு ஒருவன் என்பதை தாங்கள் நிலைநாட்டிவிட்டீர்கள்! பிறன்மனை நோக்காத பேராண்மையை தாங்கள் நிலைநிறுத்திவிட்டீர்கள்! என்னையும் இலிதிய நாட்டையும் தாங்கள் அடைந்துவிட்டீர்கள்! (வாயிலை நோக்கி) யாரங்கே?
சேடி: (அறைக்குள் பாய்ந்துவந்து) மாட்சிமை தங்கிய அரசியார் அவர்களே... (மன்னனையும், கைகேயஸையும் குருதிதோய்ந்த கோலத்தில் கண்டு) ஐயோ, மன்னவா, ஐயையோ, யாரங்கே? காப்பாற்றுங்கள்! மன்னரைக் காப்பாற்றுங்கள்! அரசியைக் காப்பாற்றுங்கள்! யாரங்கே? கொலை! கொலை!
அரசி: ‘ஒழிக, கந்துலோஸ்!’ என்று முழங்கடி சேடி!
சேடி: (தயக்கத்துடன்) ஒழிக...
அரசி: ‘ஒருத்திக்கு ஒருவன்’ என்று முழங்கடி சேடி!
சேடி: ‘ஒருத்திக்கு ஒருவன்.’
அரசி: ‘ஓங்குக, பிறன்மனை நோக்காத பேராண்மை’ என்று முழங்கடி சேடி!
சேடி: ஓங்குக, பிறன்மனை நோக்காத பேராண்மை!
அரசி: ‘வாழ்க, இதிலிய நாட்டு மன்னர் மாட்சிமை தங்கிய கைகேயஸ்’ என்று முழங்கடி சேடி!
சேடி: வாழ்க, இதிலிய நாட்டு மன்னர் மாட்சிமை தங்கிய கைகேயஸ்!
___________________________________________________________________________
Herodotus, The Histories, Translated by Andrea L. Purvis, Edited by Robert B. Strassler,
Pantheon Books, New York, 2007, pages: 8-9.
தமிழ் நாடக வடிவம்: மணி வேலுப்பிள்ளை
No comments:
Post a Comment