சிங்கள பெளத்த தேசியவாதிகள் 

இஸ்ரேலை நேசிப்பது ஏன்?

கலாநிதி புஞ்சர அமரசிங்கா


காசா போரின்பொழுது இலங்கைவாழ் சிங்கள பெளத்த சமூகம் இஸ்ரேலுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது. இலங்கையில் இடதுசாரித்துவ, தாராண்மைவாத, முஸ்லீம் குழுமங்கள் இஸ்ரேலை எதிர்த்து நடத்திய பேரணிகளுக்கு அது நேரெதிர்மாறான நிலைப்பாடு.   


காசாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் படைநடவடிக்கைகளினால், அந்த நாடு உலகளாவிய கண்டனத்துக்கு உள்ளாகிய வேளையில், பெளத்த சிங்களவர் இஸ்ரேலை விடாப்பிடியாக ஆதரிப்பதற்கு கணிசமானளவு கருத்தியல்வாரியான உந்துவிசை உண்டு என்பதை அவர்களின் ஆதரவு உணர்த்துகின்றது.    


இந்தியாவைப் பொறுத்தவரை, இஸ்ரேலுக்குச் சார்பான உணர்வலை என்பது, பெரிதும் இந்துத்துவக் கருத்தியலுடன் தொடர்புடையது. இஸ்லாமிய எல்லையை அகட்டல் என்று கருதப்படும் கொள்கைக்கு எதிரான தடுப்பு வேலியாக இஸ்ரேலை நிலைநிறுத்தும் தந்திரோபாயத்துடன் அது தொடர்புடையது. 


அதேவேளை, இஸ்ரேலிய-யூத அடையாளத்தின் மீது சிங்கள பெளத்த சமூகம் கொண்ட ஈர்ப்பு என்பது, இஸ்லாமிய எல்லையை அகட்டல் தொடர்பான கரிசனைகளுக்கு அப்பால்பட்ட, மிகவும் சிக்கலான, நுட்பமான காரணிகளால் உந்தப்படுவதாகத் தெரிகின்றது. ஆகவே, இஸ்ரேலிய அரசின் மீது சிங்கள பெளத்த சமூகம் கொண்ட வாஞ்சையை உந்தும் காரணிகளை நாம் ஆராய வேண்டியுள்ளது. 


இலங்கையில் யூதர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு, இத்தீவின் பதிவிட்ட வரலாற்றில், மட்டுப்பட்ட சான்றே உள்ளது. எனினும் இலங்கைப் பெளத்த தேசிய இயக்கம், தனக்குப் புத்துயிரூட்டுவதற் காக,யூத தேசிய இயக்கத்தை முன்மாதிரியாக  நோக்கி வருகின்றது. 


இலங்கைப் பெளத்த தேசியத்தின் காவிய நாயகனாகிய அநகாரிக தருமபாலாவே, யூதர்களையும், யூத தேசிய இயக்கத்தையும் முதன்முதல் நயந்த தற்காலப் பெளத்த சிங்களத் தலைவர். அன்றைய ஐரோப்பிய யூதர்களுடன் இலங்கைவாழ் முஸ்லீம் சமூகத்தை ஒப்பிட்டு, அன்றைய ஐரோப்பாவில் நிலவிய இனவாதச் சொல்லாடலை எதிரொலித்து, முஸ்லீங்கள் மீது அவர் அடிக்கடி பகைமை பாராட்டினார்; வெளிப்படையாகவே பகைமை பாராட்டினார். இவை யூதவிரோதக் கருத்துரைகள் என்பது வெளிப்படை. 


அதேவேளை, சிங்களவருக்கும் யூதர்களுக்கும் இடையே வரலாற்று ஒப்புமைகள் உண்டென்ற கருத்து, தருமபாலாவின் நாட்டத்தை ஈர்த்தது. பிரித்தானியர் காலத்து இலங்கையில் வெளிவந்த சிங்கள பெளத்தர் (Sinhala Buddhist) எனும் தேசியவாத ஏட்டில் எழுதிய ஒரு கட்டுரையில், சிங்களவர், யூதர் ஆகிய இரு தரப்பினரும் தத்தம் அடையாளங்களைக் கட்டிக்காப்பதில்  காட்டிய விறல் ஒன்றுக்கொன்று நிகரானது என்று அவர் வலியுறுத்தினார். 


யூத தேசியக் கருத்தியலாளர்களும், பெளத்த சிங்களக் கருத்தியலாளர்களும், தமக்கு நீடித்த மரபுகளில் வேரூன்றிய தனித்துவம் உண்டெனக் கருதுவதும், வலியுறுத்துவதும் அவர்களிடையே காணப்படும் முக்கிய ஒப்புமையாகும். தாங்கள் புறத்தாக்கங்களால் கறைபடாத தனித்துவமான இனத்தவர்கள் என்று  சிங்களவர் தம்மை தொடர்ச்சியாகத் கொண்டாடி வந்துள்ளார்கள்.  


தாங்கள் இறைவன் தேர்ந்தெடுத்த மக்கள் என்று யூதர்கள் கொண்ட கருத்தை சிங்களவரின் மேற்படி நிலைப்பாடு எதிரொலிக்கின்றது. வரலாற்று விவரணங்கள் என்பவை யூத, சிங்கள அடையாளங்களை வடிவமைத்து, தனித்துவமான கூட்டுத் தகுநிலை ஒன்றை வளர்க்கும் விதத்தை, இலங்கை: ஒரு பிளவுண்ட நாடு  எனும் தமது காத்திரமான நூலில் பி. எச். பாமர் (B. H. Farmer) ஆராய்ந்துள்ளார். 


பண்டைய சிங்கள மன்னர்களின் பரம்பரையையும், பெளத்தத்துக்கு அவர்கள் நல்கிய ஆதரவையும் பதிவிடும் தலையாய சிங்கள பெளத்த பதிவேடாகிய மகாவம்சத்தில் காணப்படும் விரிவான விவரங்கள், விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் காணப்படும் மன்னர்குல ஏடுகள் வழங்கும் விவரங்களைப் போன்றவை. பெளத்தத்தை மெய்யாகவே கட்டிக்காக்கும் சிறப்பான பணியை ஆற்றுவதாக மார்தட்டும் மகாவம்சத்தில் காணப்படும் விவரணங்களில் நிலையூன்றிய சிங்கள பெளத்தர்களின் நம்பிக்கை,  தாங்கள் இறைவன் தேர்ந்தெடுத்த மக்களென யூதர் கொண்ட நம்பிக்கைக்கு நிகரானது என்பது தெளிவாகத் தெரிகிறது என்கிறார் பாமர். 


இலங்கை விடுதலை பெற்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட கொந்தளிப்பு மிகுந்த காலப்பகுதியில், சிங்களத் தேசியவாதிகள் சிங்கள, யூத சமூகங்களுக்கு இடையே ஆதாரமற்ற வரலாற்று ஒப்புமைகளை இட்டுக்கட்டி,  தமிழர் மீது பகைவளர்க்கும் தேசிய சொற்சிலம்பத்தை உருவாக்கி, தமது மக்களை உணர்ச்சிப்பெருக்குடன்   அணிதிரட்டினார்கள். 


இலங்கையில் தமிழரின் பிரிவினைவாதத்தை எதிர்கொள்வதற்கு ஆயுதப் படையினரை வலுப்படுத்தும்படி ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கத்துக்கு, தேசியவாதத நோக்குடைய பாதுகாப்புச் செயலாளர் என். கியூ. டயஸ் புத்திமதி கூறினார். வட மாகாணத்தில் தமிழர் தமது எல்லையை அகட்டக்கூடும் என்று தெரிவித்த டயஸ், அதனைத் தடுக்கும் ஏம வலயங்களாக வேளாண்மைக் குடியேற்றங்களைத் தோற்றுவிக்கும்படி தமது தொடக்க அறிக்கைகளில் முன்மொழிந்தார்.  


பெளத்தத்தின் பாதுகாவலர்கள் என்ற வகையில் சிங்கள பெளத்தர்களுக்கு காணி உரித்து உண்டெனும் நம்பிக்கையில் டயஸ் உட்பட சிங்களத் தேசியவாதிகள் பலர் ஆழ மூழ்கியிருந்தார்கள். தமிழர் பெரும்பான்மையோராக வாழும்  வடபுலத்தில் குடியேற்றங்களைத் தோற்றுவிக்கும் எண்ணத்துக்கு, இஸ்ரேலிய அரசு நடைமுறைப்படுத்திய யூதக் குடியேற்றக் கொள்கைகள்  ஓரளவு உந்துவிசை அளித்ததுண்டு. 


மறைநூலில் பதிவிட்ட பழம்பெருமையை மீட்க யூதர்குலம் கொண்ட வேட்கையைப் போன்று, சிங்களத் தேசியவாதிகளும் மகாவம்சத்தில் சித்தரிக்கப்பட்டவாறு, பழம்பெரும் புகழ்வாய்ந்தது எனக் கருதப்படும் சிங்கள நாகரிகத்துக்குப் புத்துயிரூட்ட வேட்கை கொண்டு, வடபுலத்தில் குடியேற்றங்களைத் தோற்றுவிக்க முனைந்தார்கள்.    


வரலாற்றுச் சூழ்நிலையையும், பொறிமுறைகளையும் பொறுத்தவரை யூத தேசிய வேட்கைக்கும், சிங்கள தேசிய வேட்கைக்கும் இடையே வேறுபாடுகள் இருக்கின்றன. எனினும் இரண்டுக்கும் இடையே ஒரு முக்கிய பொதுமை உண்டு: அதாவது, இறைவாக்கின் மூலம் அல்லது வரலாற்றின் மூலம் “தேர்ந்தெடுக்கப்பட்ட” தகுநிலை தத்தம் சமூகங்களுக்கு உண்டென்று இரு தரப்பினரும் காத்திரமாக வலியுறுத்துகிறார்கள்.


இலங்கையில் போர் முடிவுற்ற பிறகு, யூத, சிங்கள அடையாளங்களுக்கு இடையே ஓர் ஒப்புமையை உருவாக்குவதற்கு பெளத்த தேசியவாதிகள் பலர் மேற்கொண்ட முயற்சிகள் ஒரு திருப்பத்தை எடுத்திருப்பதாகத் தெரிகிறது: அதாவது, இரு தரப்புகளுக்கும் இடையே மெய்ப்பிக்கவல்ல வரலாற்றுச் சான்று எதுவுமே இல்லாமல், ஒரு வரலாற்றுத் தொடர்பு இருப்பதாக ஊகித்து, அதை ஏற்றிப் போற்றுகிறார்கள். 


மகாவம்சம் போன்ற வரலாற்றுப் பதிவேடுகளின் தாக்கத்துக்கு உட்பட்ட இலங்கையின் பாரம்பரிய வரலாற்றியலுக்கு மாறான மாற்று வரலாறாக, இராவண மன்னனின்  மரபுவழிக்கதையைப் பரப்ப வேண்டுமென கலாநிதி மிராந்தோ ஒபயசேகரா போன்ற சிங்கள தற்பெருமைவாதிகள், வாதாடியபொழுது மேற்படி திருப்பம் ஏற்பட்டது.  


இலங்கையில் போர் முடிவுற்ற பிறகு தோற்றுவிக்கப்பட்ட போலி அறிவியல் விவரணத்தில் யூதருக்கும், சிங்களவருக்கும் இடையே வரலாற்றுத் தொடர்புகள் இருந்தன என்ற கருத்தை நிலைநிறுத்தும் கதைகள் பலவும்,  காணப்படுகின்றன. தொன்மங்களின்படி இலங்கை மன்னனாக விளங்கிய இராவணன், மத்திய கிழக்கில் ஒரு நாட்டை அமைப்பதற்கு, தனது குடும்பத்தவருள் ஒருவனாகிய “யூதா” என்பவனை  அனுப்பியதாக மார்தட்டும் கருத்தை தமது விற்பனை மிகுந்த நூல் ஒன்றில் ஒபயசேகரா முன்வைத்துள்ளார். 


அப்படி மார்தட்டுவதற்கு ஏதுவாக, திட்டவட்டமான  சான்றெதுவும் முன்வைக்கப்படாதபடியால், அது ஒபயசேகராவின் கற்பனை என்பது  உறுதிப்படுகின்றது. எனினும், இட்டுக்கட்டப்பட்ட இந்தக் கதையின் பெறுபேறாக, நியாயத்துக்கு மாறான முறையில் சிங்களவருக்கும் யூதருக்கும் முடிச்சுப்போடும் சிங்கள தேசியவாதிகள் காத்திரமான தாக்கத்துக்கு உள்ள்ளாகியிருக்கிறார்கள்.   


சிங்களவர் தமது தனித்துவத்தைக் காட்டுவதற்கான ஓர் உத்தியாக, தமது அடையாளத்தை யூத சமூகத்துடன் தொடர்புபடுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் வெளிப்படும் விதத்துக்கு, தொன்மங்களில் நிலைகொண்ட மேற்படி கதை ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டு. இலங்கை விடுதலை பெற்ற பிறகு இஸ்ரேலிய அரசுடன் பூண்ட உறவில் பல முறுகல்களும் திருப்பங்களும் ஏற்பட்டாலும் கூட, சிங்கள பெளத்த தேசியவாதிகளின் உள்ளத்துள் இஸ்ரேல் மீதான பற்று ததும்பி வழிகிறது.  


இஸ்ரேல் மீதான ஈர்ப்புக்கு முற்றிலும் உந்துவிசை அளிப்பவை தொன்மங்களும், பழங்கதைகளும், நம்பிக்கைகளுமே என்பதும், பெளத்தத்தைக் கட்டிக்காப்பதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இனத்தவர் தாமே என்று மார்தட்டும் சிங்கள தேசியவாதிகளுக்கு அவையே அரணாய் அமைபவை என்பதும், தாமே இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்று யூதர்களைப் போல் சிங்கள பெளத்தர்களும் வெறுமனே நம்பிக்கொள்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கவை (Punsara Amarasinghe, Why Sinhalese Buddhist Nationalists Adore Israel, The Colombo Telegraph, 2026-01-08, translated by Mani Velupillai, 2026-01-10).

No comments:

Post a Comment