சீமான் பொன் இராமநாதன் 

இலங்கை சுதந்திரப் போராட்டத்தில் 

வகித்த பங்கும், அதன் பெறுபேறும்

 

An artist’s impression of Sir Ponnampalam Ramanathan being drawn in a chariot by Sinhala leaders, including D.S. Senanayake, F.R. Senanayake, A.E. Gunasinghe, E.W. Perera, and others, upon his return to Ceylon from London, after representing the Ceylonese. Courtesy: JRJ Centre Library.


இலங்கையரின் பிரதிநிதியாக இலண்டன் சென்ற சீமான் பொன் இராமநாதன் நாடுதிரும்பியபொழுது, டி. எஸ். சேனநாயக்கா, எவ். ஆர். சேனநாயக்கா, ஏ. ஈ. குணசிங்கா, ஈ. டபிள்யூ. பெரெரா உட்பட்ட சிங்களத் தலைவர்கள் அவரை ஒரு வண்டியில் ஏற்றி இழுத்துச்சென்றதை உள்ளத்தில் பதித்து ஓர் ஓவியர் வரைந்த படம். (நன்றி: ஜே. ஆர். ஜெயபவர்த்தனா நிலைய நூலகம்).

கே. கே. எஸ். பெரெரா


சுதந்திரத்துக்கான அறைகூவல்


இலண்டனில் நீதிகேட்டு வாதாடி வெற்றிபெற்ற சீமான் பொன்னம்பலம் இராமநாதன், இலங்கை திரும்பியபொழுது, ஒரு வெற்றிவீரராக வரவேற்கப்பட்டார்.

பிரித்தானிய ஆட்சியாளரின் ஒடுக்குமுறைகளை அம்பலப்படுத்த, குறிப்பாக 1915ம் ஆண்டுக் கலவரத்தை அடுத்து, தேசிய இயக்கத் தலைவர்களையும், மதுவிலக்கு இயக்கத் தலைவர்களையும் அநீதியான முறையில் கைதுசெய்து, அடைத்துவைத்து, துன்புறுத்தியதை அம்பலப்படுத்த, அயராது பாடுபட்ட இராமநாதனை மக்கள் நன்றியுணர்வோடு நயந்து கொண்டாடினார்கள். 

நீதியை நிலைநிறுத்துவதில் அவர் தலையாய பங்கு வகித்ததை ஏற்றிப்போற்றிய சிங்களத் தலைவர்களும் மக்களும், அதைக் குறித்து அவரை மாண்புறுத்தும் வண்ணம், ஒரு மாபெரும் வரவேற்பு விழாவை ஏற்பாடு செய்து, துறைமுகத்துக்குச் சென்று, அவரை மாண்புற வரவேற்று அழைத்து வந்தார்கள். 

அவர் ஏறிவந்த வண்டியை, நாடறிந்த சிங்களத் தலைவர்கள், தெருவழியே இழுத்துச் சென்றமை ஒரு கண்கொள்ளாக் காட்சியாய் அமைந்தது. வழமையை விஞ்சிய அந்த உணர்வெழுச்சி, அவரது பொதுநலப் பணியையும், இன-அரசியல் பேதங்களைக் கடந்து மக்களது  நன்மதிப்பை அவர் ஈட்டிய சிறப்பையும் திட்பமுற மெச்சும் விதமாய் அமைந்தது. 

வரவேற்பு விழாவைக் கண்டுகளிக்க, ஆயிரக் கணக்கானோர் திரண்டுவந்து, தெருமருங்கில் நின்று, ஆரவாரம் செய்து, மரியாதை செலுத்தினார்கள். அவரது மீள்வரவு தமிழ், சிங்கள சமூகங்கள் ஒன்றுபடும் தருணமாய் மாறியது. கட்டியாள்கைக்கும், அநீதிக்கும் எதிராக அவர்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட போராட்டத்தை வலியுறுத்துவதாய் அமைந்தது. 

பிரித்தானியர் இலங்கைவாழ் சமூகங்களுக்கிடையே பதற்றங்களை ஏற்படுத்தி, நாட்டைப் பிரித்தாள முயன்றாலும் கூட, இராமநாதன் போன்ற தலைவர்கள் தேசிய நீதியை நிலைநாட்டும் போராட்டத்தில் இனத்துவ பேதங்களைத் தணிக்க வல்லவர்களாக விளங்கியதையும் அது எடுத்துக்காட்டியது.  

அந்த மாபெரும் வரவேற்பு நாடுமுழுவதும் தேசியத் தீயை மூட்டியது.  பிரித்தானியரின் ஒடுக்குமுறைக்கு எதிராக இலங்கையின் எல்லாப் பண்பாட்டு மக்களும்  அணிதிரள வேண்டிய தேவையை வலியுறுத்தியது. 

ஹென்றி பீதிரிஸ் போன்ற மற்றும் பிறர் புரிந்த தியாகங்களுடன் ஒருசேர இராமநாதன் மேற்கொண்ட முயற்சிகள், இலங்கையில் தன்னாட்சிக் கோரிக்கை களைகட்ட வழிவகுத்தன. அடுத்தடுத்த தசாப்தங்களில் வலுப்பெற்ற சுதந்திரப் போராட்டத்துக்கு அவை அடிக்கல் நாட்டின.  


கலவரங்கள், வன்செயல்கள் பற்றி ஏ. இரத்நாயக்கா முன்வைத்த விபரம்


தனது 14 வயதிலேயே ஓர் அமைச்சராக விளங்கிய வாசல முதியன்சலாகே அபயரத்தின இரத்நாயக்கா (1900 – 1977) இலங்கையில் மூண்ட பயங்கர சமூக வன்முறைக்கு ஒரு கண்கண்ட சாட்சி. 

ஒரு விதிவசப்பட்ட மாலைவேளையில், நத்தார்ச் சிந்து ஒலிக்கும் ஒரு வண்டியின் அருகில், அவர் நின்றபொழுது, திடீரெனப் பதற்றம் மூண்டதைக் கண்டார். மக்கள்திரளுக்குள் இருந்து வீசப்பட்ட ஒரு புட்டி, நொருங்கி விழுந்த மறுகணம், ஒரு பள்ளிவாசலுக்கு அருகில் குழுமிநின்ற சிலர் தாக்கத் துவங்கவே,  களேவரம் மூண்டது. 

அந்த வன்முறை கையோடு வலுத்த பதிலடிக்கு உள்ளானது. வெகுண்டெழுந்த கும்பல்கள் தமது சீற்றத்தை அந்தப் பள்ளிவாசலின் மீது திருப்பின. கொஞ்ச நேரத்துள் பள்ளிவாசல் கட்டிடம் தகர்க்கப்பட்டது. பேரழிவு தொடர்ந்து நிகழ்ந்தது. 

இருண்ட வானம் ஒளிரும் வண்ணம் முஸ்லீங்களுக்குச் சொந்தமான கடைகள், வீடுகள், ஆதனங்கள் கொளுத்தப்பட்டன. எங்கேயோ நிகழ்ந்த மோதல் ஒரு சமூகக் கலவரமாய் ஓங்கிப் பரவி, அழிவை விளைவித்து, சமூக பேதங்களை ஆழமாக்கியது. அதன் எதிர்விளைவுகள் நெடுங்காலம் நீடித்தன.  

 

1818, 1848 கிளர்ச்சிகள்


20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இலங்கை சமூகப் பதற்றங்களை  எதிர்கொண்டது. அதற்கு முன்னரே தம்மைக் கட்டியாண்ட பிரித்தானியருக்கு எதிராக இலங்கையர் மேற்கொண்ட போராட்டம், நெடுங்காலமாய் குருதியில் தோய்ந்து வரலாற்றில் படிந்தது. 

1818ல் ஒரு பெருங்கிளர்சி மூண்டது. பிரித்தானியரை விரட்டி, இறைமையை மீட்க உறுதிபூண்ட உள்ளூர் மூப்பர்களின் தலைமையில், ஊவா-வெலசை குறிச்சியில், மூண்ட கிளர்ச்சி அது. எனினும், மேம்பட்ட படைக்கலங்களை ஏந்திய பிரித்தானியர், விரைந்துசென்று, கொடூரமான முறையில், அக்கிளர்ச்சியை அடக்கினர். ஆயிரக் கணக்கானோர் கொன்று குதறப்பட்டார்கள். ஊர்கள் துடைத்தெறியப்பட்டன. ஊர்வாசிகள் அனைவரும் பேரழிவுக்கு உள்ளாகினர். 

30 ஆண்டுகள் கழித்து, 1848ல், இன்னும் பெரிய, பரந்த கிளர்ச்சி மூண்டது. பிரித்தானிய அரசு அதிர்ச்சி அடைந்தது.  வரி உயர்வு, பொருளாதார இன்னல்கள், கட்டியாளப்படுவதற்கு எதிரான உள்ளக்கொதிப்பு எல்லாம் ஒன்றுசேர, தீவுமுழுவதும் கிளர்ச்சித்தீ மூண்டு, விளாசிப் பரவியது. கண்டி முதல் மாத்தளை வரை மட்டுமல்லாது, கொழும்பு மாநகரப் புறங்களிலும் கிளர்ச்சித்தீ பற்றியெரிந்தது. 

கட்டியாண்ட பிரித்தானியர் கிளர்ச்சியின் பருப்பம்கண்டு, தமது ஆதிக்கத்தை இழந்துவிடுவோம் என்று ஏக்கம்கொண்டு, பதிலடியில் இறங்கினர்கள். குறிப்பாக ஊவா, சப்பிரகமூவா, மத்திய, வடமேல் மாகாணங்களில் கொடூரமான அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டார்கள். மக்கள் திரள்திரளாகக் கொல்லப்பட்டர்கள். பொதுவெளிகளில் தூக்கிலிடப்பட்டார்கள். படைபலம் கொண்டு அடிதடி நடத்தினர்கள். பாரிய உயிரிழப்புகள் நேர்ந்தன. 

ஈற்றில் கிளர்ச்சிகள் அடக்கப்பட்டாலும் கூட, தேசிய விடுதலை வித்துக்களை அவை ஊன்றவே செய்தன. கட்டியாளப்படுவதற்கு எதிராக ஓங்கிய உணர்வுத்தீயுக்கு அவை எண்ணெய் வார்க்கவே செய்தன. 

அதன் பிறகு, குறிப்பாக 1870களில் பாணந்துறை விவாதம் நிகழ்ந்த பிறகு,  ஏற்பட்ட பெளத்த மறுமலர்ச்சி, இலங்கையின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு தீர்க்கமான திருப்புமுனையாய் அமைந்தது. 


1915ல் வலுத்த கலவரங்கள் 


சமூகங்களைக் கட்டுப்படுத்தி, பிளவுபடுத்தும் கொள்கைகள் மூலம் அவற்றிடையே பதற்றத்தை ஓங்கச்செய்வதில், இலங்கையைக் கட்டியாண்ட பிரித்தானிய அரசு மும்முரமாய் ஈடுபட்டது.  

கண்டி எசல பெரகரா ஊர்வலம், காசிள் ஹில் பள்ளிவாசலை அண்டிக் கடந்து செல்லத் தடை விதித்தபொழுது, நிலைமை ஆட்டம் கண்டது. தடைவிதித்த முடிபை, தமது பெளத்த மரபுகளுக்கு நேர்ந்த இழிவாகக் கருதி, சிங்கள மக்கள் வெகுண்டெழவே இன, மத பேதங்கள் தீவிரமடைந்தன. வதந்திகள் விரைந்து பரவிய அதேவேளை, தலதா மாளிகையில் உள்ள புத்த தந்தக் கோயிலை, முஸ்லீங்கள் தாக்கியதாகப் பொய்க் குற்றஞ்சாட்டுகள் எழுந்தன. 

இவ்வாறு புனையப்பட்ட கூற்றுக்களால் சமூகங்களுக்கிடையே ஐயுறவு மூண்டு, அச்சமும் பகைமையும் தலைகாட்டின. தவறான தகவல்களால் சமூகங்களுக்கிடையே  அவநம்பிக்கை ஓங்கி, கலவரங்கள் மூளவே, நிலைமை கடுகதியில் கட்டுப்பாட்டை மீறியது. 

கட்டியாண்ட பிரித்தானியர் காலந்தாழ்த்தி, அரைகுறை நடவடிக்கை எடுத்தார்கள். தடுப்பு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, வன்முறை ஓங்க இடங்கொடுத்த பிறகு, படைச்சட்டத்தைப் பறைசாற்றினார்கள். படைத் தலையீட்டுக்கு உத்தரவிட முன்னரே, பெருவாரியான உயிரிழப்புகளும், சொத்துச் சேதங்களும் விளைந்தன. பிரித்தானிய ஆட்சியாளர் மீது, மக்கள் கொண்ட சீற்றத்தை, அது மேலும் பெருக்கியதுடன்,  தன்னரசுக் கோரிக்கைக்கும் வலுவூட்டியது.


கொடிய மரண தண்டனைக்கு உள்ளான ஹென்ரி பீதிரிஸ்


அக்காலகட்ட அரசியலில் அறவே திட்பமான பங்குவகித்து, சோகமான முடிவுக்கு உள்ளானோருள் கொழும்பு நகர காவல் துறையச் சேர்ந்த, மதிப்புவாய்ந்த, இளம் அதிகாரி எட்வேட் ஹென்ரி பீதிரிஸ் (1888–1915) அடங்குவார். 1915ல் கலவரம் மூண்டபொழுது, அடாவடிக் கும்பல்களைக் கட்டுப்படுத்தி, முஸ்லீங்களின் கடைகளைப் பாதுகாக்கும் பணி  அவருக்கு ஒதுக்கப்பட்டது. பதற்றத்தை தணிக்க அவர் முயற்சி எடுத்தும் கூட, முஸ்லீம் சமூகத்துக்கு எதிராக, வன்முறையைத் தூண்டியதாக,  அவர்மீது பிரித்தானிய ஆட்சியாளர் பொய்க்குற்றம் சுமத்தினார்கள். அவசர அவசரமாக அவரைப் படைவிசாரணைக்கு உள்ளாக்கி, மரணதண்டனை விதித்து, நீதிபாலிப்பை ஒரு கேலிக் கூத்தாக்கினார்கள். கொடூரமான முறையில் அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

அவருக்கு நேர்ந்த கதியை உள்ளூர் மக்களிடம் சுட்டிக்காட்டி, அவர்களை அச்சுறுத்தி, அவர்களிடையே ஓங்கிய தேசிய உணர்வை ஒடுக்க, பிரித்தானிய ஆட்சியாளர் முயற்சி எடுத்தனர். சேனநாயக்கா சகோதரர்கள் போன்ற மதுவிலக்கு இயக்கத் தலைவர்களை, அநீதியான முறையில் அடைத்துவைத்த சிறைக்கூடத்துள், பீதிரிசின் குருதிதோய்ந்த கதிரையை இட்டுவைத்தனர். பிரித்தானியரின் ஆட்சியை எதிர்க்கத் துணிந்தோர்க்கு விடுக்கப்பட்ட பயங்கர எச்சரிக்கை அது.

எனினும், பீதிரிசுக்கு நேர்ந்த கதியினால் போராட்டம் தணியவில்லை. மாறாக,  அவரது தியாகம் விடுதலைக்கே அறைகூவல் விடுத்தது. தியாகம், எதிர்ப்பு, நாட்டுப்பற்று போன்ற சொற்களுக்கு அவரது பெயர் ஒத்த சொல்லாகி, நாடுமுழுவதும் நாட்டுப்பற்றாளர்களை எழுச்சியுற வைத்தது. 


சீமான் பொன்னம்பலம் இராமநாதனின் வாதாட்டம்


கலவரங்களைத் தொடர்ந்து, பிரித்தானியரின் அடக்குமுறை உச்சத்தை எட்டவே, பொன்னம்பலம் இராமநாதன் எழுந்து, களத்தில் குதித்து, நீதிக்கான போராட்டத்தில் ஓங்கிக் குரல்கொடுத்தார். அவர் ஒரு தமிழர்-தலைவராய் விளங்கியும் கூட, சிங்களவருடன் தோழமை பூண்டு, பிரித்தானியரின் கொடுமையையும் கொடுங்கோன்மையையும்  சாடினார். கட்டியாளப்பட்டு, அடக்கி ஒடுக்கப்பட்டோரின் சத்தியக் கடதாசிகளையும், அவர்கள் பட்டறிந்த இன்னல்களின் பதிவுகளையும் தொகுத்து, பிரித்தானிய ஆட்சியாளரால் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு மறுக்கமுடியாத சான்றுகளைத் திரட்டினார்.  

நீதிநாட உறுதிபூண்டு, இராமநாதன் இங்கிலாந்து சென்றார். கட்டியாண்ட அரசின் பெரும்புள்ளிகள் உட்பட, பிரித்தானிய அதிகாரிகளையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்தித்தார். இலங்கை ஆளுநர் சாமேர்சின் துர்ச்செயல்களை அம்பலப்படுத்தினார். மட்டுமீறிய பலவந்தம், சட்டத்தை மீறி அடைத்துவைப்பு, படைச்சட்டம் பிறப்பித்து சிங்கள மக்களை அடக்கி ஒடுக்கியமை பற்றி எல்லாம் விலாவாரியாக எடுத்துரைத்தார். 

தமது இலக்கினை எய்துவதில், அவர் கொண்ட தளராத உறுதியால் நெருக்குண்ட பிரித்தானிய அரசாங்கம், நடவடிக்கை எடுக்கத் தலைப்பட்டது. ஈற்றில் படைச்சட்டம் நீக்கப்பட்டது. ஆளுநர் சாமேர்ஸ் திருப்பி அழைக்கப்பட்டார். 


சுதந்திரப் போராட்டத்தில் ஏற்பட்ட தாக்கம்


1917 வாக்கில் இளம் இலங்கை இளையோர் கழகம் (Young Lanka Youth League), இலங்கை தேசிய பேரவை (Ceylon National Congress) போன்ற, நாட்டுப்பற்றுக் கொண்ட, குழுமங்கள் தோன்றி,  பெருமளவு தன்னாட்சியையும், அரசியற் சீர்திருத்தங்களையும் கோரி வாதாடின. டி. எஸ். சேனநாயக்கா, எவ். ஆர். சேனநாயக்கா போன்ற பெரும்புள்ளிகளும், தேசிய வேட்கை கொண்ட மற்றும் பிற தலைவர்களும் அரசியல்யாப்பில் மாற்றங்கள் கோரி நெருக்குதல் கொடுத்து, இலங்கையின் சுதந்திரப் பயணத்துக்கு வழிகோலினார்கள். கட்டியாண்டோரின் ஒடுக்குமுறையை எதிர்கொண்ட இலங்கை மக்களது மீள்திறன், ஒற்றுமை என்பவற்றின் வலிய சின்னங்களாய் பீதிரிசும் இராமநாதனும் விளங்கினர். அவர்கள் ஆற்றிய தொண்டு இலங்கை வரலாற்றில் ஒரு திட்பமான அத்தியாயமாய் அமைந்து, நாட்டின் சுதந்திரப் பயணத்துக்கு வழிகோலியது.  

“இராமநாதன் இந்நாட்டின் வாழ்வுக்கு ஆற்றிய தொண்டின் ஊடாக, சிங்கள மக்களின் நெஞ்சத்துணர்வு, குறிப்பாக அவர்களது சமயம், மொழி, தன்னாட்சி உணர்வுகள் யாவும் புத்துயிர் கொள்ளத் துணைநின்றார். இலங்கையின் முதலாவது பிரதம மந்திரி அதிமாண்புமிகு டி. எஸ். சேனநாயக்கா கூட, இதே உணர்வை வெளிப்படுத்தினார். ‘என்றென்றும் மகத்தான இலங்கையர்களுள் இராமநாதன் ஒருவர்’ என சேனநாயக்கா மெச்சினார்’” என்று 1991 நவம்பர் 30ம் திகதி, சுவாமி விவேகானந்தர் நிலையத்தில், “சீமான் பொன்னம்பலம் இராமநாதன் - சிங்கள மக்களின் வளர்ப்புத் தந்தை” எனும் தலைப்பில் உரையாற்றியபொழுது ஜே. ஆர். ஜெயவர்த்தனா குறிப்பிட்டிருந்தார். 

(K. K. S. Perera, Sir Ponnampalam Ramanathan’s Legacy in the Struggle for Ceylon’s Freedom, Rallying Cry for Freedom, Daily News, 2025-02-04. Extract from the full speech, preserved in a booklet at the JRJ Centre Library, translated by Mani Velupillai, 2025-02-08).

No comments:

Post a Comment