இந்து சீர்திருத்தவாதிகள்
இந்துவிரோதிகளா? இந்துப்பேடிகளா?
யவெட் நக்வி
உலகளாவிய இந்துத்துவத்தை தகர்ப்பது குறித்து சென்ற கிழமை இணையவாயிலாக ஒரு சர்வதேய ஆய்வரங்கு நடந்தது. கொடுந்தேசியவாத (பாசிச) அச்சில் இந்துக்களை வார்த்தெடுக்க இந்துத்துவம் முற்படுவதாக அதில் கண்டனம் தொடுக்கப்பட்டது.
ஏ. கே. இராமானுஜம்
இந்துவும் இந்துத்துவமும்
மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் முன்கூட்டியே விடுத்த எச்சரிக்கை இது: “இந்துசமயத்தை இந்துத்துவத்துக்கு நிகராகக் கொள்வது, ஒரு புனைவுப் பொந்தினுள் வீழ்வதற்கு நிகராகும்; முந்நூறு இராமாயணங்கள் உள்ளதை ஏற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை கவிஞர் ஏ. கே. இராமானுஜம் வலியுறுத்தினார் அல்லவா? எனவே இந்துசமய வழமைகளுள் காணப்படும் வேறுபாடுகளையும், அதன் உள்ளே நிகழும் வாதங்களையும், பிற சமயங்களுடன் அது மேற்கொள்ளும் உரையாடல்களையும் நீக்கி, அதை ஒரு தனிப்பெரும் சமயமாக மயங்கலாகாது. அத்தகைய வலைப்பின்னலை ஒழித்துக்கட்டி ஓர் ஒற்றைப் பாசிசப் பாறையை உருவாக்க இந்துத்துவம் முற்படுகிறது.”
அம்பேத்கர்
பிராமண இந்துக்களின் பிடியிலிருந்து தலித்துக்களுக்கும், ஆணாதிக்கத்தின் பிடியிலிருந்து பெண்களுக்கும் விடுதலை அளித்து, அனைவருக்கும் சரிநிகரான, சமயச்சார்பற்ற உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்றார் அம்பேத்கர். சாதியத்தை ஒழிக்கும்படி அம்பேத்கர் விடுத்த வேண்டுகோள் நிறைவேறும்வரை இந்துத்துவம் மீதான கண்டனம் முழுமை அடையப் போவதில்லை; நாசிகள் ஐரோப்பிய யூதர்களை காழ்ப்புக்கு உள்ளாக்கியது போல், இந்துத்துவவாதிகள் முஸ்லீங்களையும் கிறீஸ்தவர்களையும் காழ்ப்புக்கு உள்ளாக்கும்வரை இந்துத்துவம் மீதான கண்டனம் முழுமை அடையப் போவதில்லை.
யூதர் - தலிபான் - இந்துத்துவம்
இந்துத்துவ இயக்கத்தவர்களுக்கும், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் குடியேறிய யூதர்களுக்கும் இடையே காணப்படும் ஒற்றுமையும் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. இந்துத்துவ மாதர் இயக்கத்தவர்களுக்கும், யூத குடியேற்ற மாதர்களுக்கும் இடையே காணப்படும் ஒற்றுமை மற்றும் தலிபானின் செயல்முறைகளுக்கும் இந்துத்துவத்தின் செயல்முறைகளுக்கும் இடையே காணப்படும் ஒற்றுமை இரண்டையும் அகன்ச மேத்தா சுட்டிக்காட்டினார். கட்டியாளும் திட்டத்துக்கு இந்துத்துவமும், யூதத்துவமும் முண்டுகொடுக்கும் விதத்திலும் ஒற்றுமை கணப்படுகிறது. இவ்விரு தரப்புகளின் உள்ளே பழங்கால சமூக ஏற்றத்தாழ்வுகளும், பால்மைவாரியான ஏற்றத்தாழ்வுகளும் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டு வருவதில் காணப்படும் ஒற்றுமையும் கவனிக்கத்தக்கது.
சாதி
சாதியை விட வேறெதுவும் எதுவும் இந்துசமயத்தை வரையறுக்கவில்லை என்றார் அம்பேத்கர். விக்கிரக வழிபாட்டுக்கு எதிரான சாகைகளும் (சமயப் பிரிவுகளும்) இந்துசமயத்துள் இருந்தன. அணங்குகளையும், சின்னங்களையும், இயற்கையையும் வழிபடுவோர் இந்துசமயத்துக்கு உட்பட்டிருந்தனர். வங்காளத்தில் தீமையை ஒழித்து அடியார்களைக் காக்கும் தெய்வமாக துர்க்கையை வழிபடுகிறார்கள். உத்தர பிரதேசத்தில் அனுமானை வழிபடுகிறார்கள். மராட்டிய மாநிலத்தில் கணவதியை வழிபடுகிறார்கள்.
இந்து - முஸ்லீம்
முஸ்லீங்களின் வழமையைப் பின்பற்றி சுன்னத்துச்செய்து, இறந்தவர்களைப் புதைக்கும் இந்துக்களைப் பற்றி அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். அந்தணக் குருமாரையும், இஸ்லாமியக் குருமாரையும் ஒருசேர அழைத்து திருமணச் சடங்கு செய்விக்கும் முஸ்லீங்களைப் பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்துக்களும் முஸ்லீங்களும் ஒன்றடி மன்றடியாக ஒரே ஞானியரை வணங்குவது மத்தியகாலத்தில் (பொ. யு. 1000-1450) ஓங்கிய வழிபாட்டின் எச்சமிச்சமாகும். அது பெரிதும் பஞ்சாப்பில் நிலைபெற்றுள்ளது.
அந்தணர் - சமணர் - புத்தர் - மகாவீரர்
ஆதி இந்து வேத நெறியிலும், அந்தண நெறியிலும் இறைமறுப்புவாதிகளும் ஓரிறைவாதிகளும் தோன்றினார்கள். இறைமறுப்பு வாதிகள் இம்மைவாழ்வுக்குரிய பொருண்மியக் கண்ணோட்டத்தை ஏற்று, அந்தணச் சடங்குகளை எதிர்த்தார்கள். புத்தரையும் மகாவீரரையும் பின்பற்றியோரைப் போலவே இவர்களும் வேறு பிரிவினராக ஒதுக்கப்பட்டார்கள். சமணரை இந்தியாவின் முதலாவது இறைமறுப்புவாதிகள் என்று கருதுவோரும் இருக்கிறார்கள். மகாவீரர் 24வது தீர்த்தங்கரர் (அருகபதவி அடைந்தவர்) எனப்படுகிறார். அவரும் பொ. யு. முன் 600ம் ஆண்டுவாக்கில் வாழ்ந்த புத்தரும் ஒரே காலத்தவர்கள். ஆதலால் அவர்களுக்குப் பின்னரே இந்துசமயத்துள் இறைமறுப்புவாதிகள் ஓங்கியதாக வலியுறுத்துவோரும் உள்ளனர்.
விவேகானந்தர் கூறியதுபோல் அமைதி, இசைவு எனும் தமது முழுமுதல் நோக்கத்திலிருந்து செந்நெறிவாதமாகவும், மறைஞானமாகவும், படைக்கலம் ஏந்திக் குருதிபாய்ச்சும் சமய சாகைகளாகவும் (பிரிவுகளாகவும்) கிளைவிடும் வேறு சமயங்களைப் போலவே இன்று நாம் காணும் இந்துசமயமும், அது தோன்றிய காலந்தொட்டே நொதித்து வந்துள்ளது.
இந்துசமய சீர்திருத்தம்
ஏறத்தாழ இரு நூற்றாண்டுகளாக இந்து சீர்திருத்தவாதிகள் இந்துசமயத்துக்கு மெருகூட்ட முயன்றுள்ளர்கள். அவர்களுள் வங்காள மறுமலர்ச்சிவாதிகள் (ராம் மோகன் ராய்-1772-1833, தாகூர்-1861-1941) இருவரும் இங்கு குறிப்பிடத்தக்கவர்கள். அவர்கள் விடாது முயன்றும் முழுவெற்றி ஈட்டவில்லை.
ராஜா ராம் மோகன் ராய் தாகூர்
உலகின் மகத்தான சமயங்களுள் ஒன்றாகிய இந்துசமயத்துடன் இந்துத்துவம் தற்பொழுது களவொழுக்கத்தில் ஈடுபட்டுள்ளது. இந்துத்துவவாதிகள் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் தம்மைக் கண்டிக்கும் இந்துக்களை இந்துவிரோதிகள் என்றும், இந்துப்பேடிகள் என்றும் தூற்றி அச்சுறுத்துகிறார்கள்.
வங்காள மறுமலர்ச்சிவாதிகள் கணவரை இழந்தோரின் மறுமணத்தையும் அறிவியல் கல்வியையும் ஆதரித்தும், சிறார் மணத்தையும் உடன்கட்டையேறலையும் எதிர்த்தும் போராடினார்கள். அது அரசியல் தொடர்பின்றி மேற்கொள்ளப்பட்ட போராட்டம்.
காந்தி - சமயம் - அரசியல் - சீர்திருத்தம்
அரசியலும் சமூக சீர்திருத்த இயக்கமும் காந்தியின் போராட்டத்தில் ஒருங்கிணைந்தன. அவர் தென் ஆபிரிக்காவிலிருந்து திரும்பியபொழுது, பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிரான இயக்கம் வங்காளத்திலிருந்து மராட்டியத்துக்கும் பஞ்சாப்புக்கும் பரவியிருந்தது. இந்து சிந்தனை அந்த இயக்கத்தில் முனைப்பாகத் தெரிந்தது.
பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராக சமயத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் போராட்டம் மெளலானா அசாத் போன்ற முஸ்லீம் தலைவர்களை ஈர்த்தது. துருக்கியில் ஓங்கிய போராட்டத்துடன் வங்காளப் போராட்டத்தை ஒப்பிட்டு நோக்கிய மெளலானா, முஸ்லீங்களை காங்கிரசுடன் இணைந்து போராடத் தூண்டினார்.
காந்தி இந்துக்களையும் முஸ்லீங்களையும் ஒருங்கிணைக்க சமயத்தைப் பயன்படுத்த முயன்றார். இந்துசமயத்தை சீர்திருத்த அவர் மேற்கொண்ட முயற்சியை ஒரு வெற்றுவெறிதான முயற்சி என்றும், அது சவர்க்கார், கோல்வால்க்கர் போன்ற தலைவர்களின் கொடுந்தேசிய (பாசிச) திட்டத்துக்கு அமைவாக நலமடித்த முயற்சி என்றும் சாடினார் அம்பேத்கர்.
சவார்க்கர் கோல்வால்க்கர்
இங்கு இரண்டு கேள்விகள் எழுகின்றன: இந்துத்துவவாதிகள் கூறுவதுபோல் இந்து சீர்திருத்தவாதிகள் இந்துவிரோதிகளா அல்லது இந்துப்பேடிகளா? சாதியை ஒழிப்பதில் அம்பேத்கர் தோல்வி அடைந்தார் எனில், நல்லெண்ணம் கொண்ட அறிவார்ந்தோரின் சிந்தனையினால், இந்துத்துவத்தை தகர்க்க முடியுமா?
____________________________________________________________________________________
Jawed Naqvi, Are Hindu reformers anti-Hindu?, Dawn, Pakistan, 2021-09-14,
translated by Mani Velupillai, 2021-09-15.
https://www.dawn.com/news/1646273/are-hindu-reformers-anti-hindu
No comments:
Post a Comment