இலங்கை இனக்கலவரம்: 1983-07-25

1983 யூலை 25 பகல் 11 மணி இருக்கும். கொழும்பு–2, கும்பனித் தெரு (Slave Island) குறிச்சியில் அமைந்திருந்த கைத்தொழில் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சின் மொழிபெயர்ப்பு அலுவலகத்தில் நான் வழமைபோல் கடமையில் ஈடுபட்டிருந்தேன். திடீரென அக்கம் பக்கத்து அலுவலகங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் குரலை உயர்த்தியும் தாழ்த்தியும் கதைப்பது என் காதில் விழுந்தது. 

எழுந்து வெளியே போனேன். அவர்களுக்கு அப்பால் பெருந்தொகையான அதிகாரிகளும் பணியாளர்களும் அமைச்சுக்கு வெளியே போவதும் வருவதுமாக இருந்தார்கள். சிலர் சாளரங்கள் ஊடாக வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நானும் இடையில் புகுந்து எட்டிப் பார்த்தேன். வானத்தில் ஆங்காங்கே புகை மண்டலங்கள் தெரிந்தன. அமைச்சினைச் சூழ்ந்த தெருக்களில் ஆட்களும் ஊர்திகளும் தாறுமாறாக ஓடுவது தெரிந்தது. 

     

மொழிபெயர்ப்புக் கூடத்துக்குத் திரும்பி, எனது இருக்கையில் அமர்ந்தேன். உடன் பணியாற்றியோர் என்னுடன் எதுவும் கதைக்கவில்லை. என் உள்ளம் புண்படக் கூடாது என்பதில் அவர்கள் சிரத்தை எடுப்பதாக எண்ணிக் கொண்டேன். உள்ளம் கனத்தது. சொற்கள் மரத்தன. கடமையில் புலனைச் செலுத்தவோ, அவர்களுடன் உரையாடவோ என்னால் முடியவில்லை. அவர்களாலும் என்னுடன் உரையாட முடியவில்லை என்றுதான் எண்ணினேன்.  

     

ஊரில் (யாழ்ப்பாணத்தில்) இருந்துகொண்டு கொழும்பில் இருந்த என்னை எண்ணிக் கலங்கக்கூடிய எனது குடும்பத்தவர்களின் நினைவு வந்ததும் பல்லைக் கடித்துக்கொண்டு  மெல்ல எழுந்தேன். சக மொழிபெயர்ப்பாளர்கள் என்னைப் பார்த்த பார்வையில் ஓரளவு பரிவு தென்பட்டது. ‘புறப்படுகிறேன்’ என்றேன். அவர்கள் தலை அசைத்தார்கள். நான் புறப்படுவதை அவர்கள் விரும்பினார்களா, விரும்பவில்லையா என்பதை, அவர்களின் தலையசைப்பைக் கொண்டு என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதில் அக்கறை எடுக்கக்கூடிய நிலையில் நான் இருக்கவும் இல்லை. 

     

தெருவில் அடி எடுத்து வைத்தேன். அதன் பெயர்: ஸ்ரீ ஜினரத்தினா வீதி. அறைகூவிக்கொண்டும், ஓலமிட்டுக்கொண்டும் குறுக்கு மறுக்காக ஆட்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள்; கார்களும் பேருந்துகளும் தாறுமாறாக ஓடிக்கொண்டிருந்தன. வழமைபோல் ஒரு பேருந்தில் ஏறிப் புறப்பட நான் தெண்டித்திருக்கலாம். ஆனால், அகப்பட்டுக்கொண்டால், பிடிகொடுத்துவிடுவேன், இனங்காணப்படுவேன் என்ற அச்சம் என்னைப் பீடித்தது. ஆகவே ஆட்களோடு ஆளாக என் வசிப்பிடத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாகப் போக எத்தனித்தேன்.

     

வடக்கே கும்பனித்தெரு குறிச்சியில் இருந்த என் வேலைத்தலத்துக்கும், தெற்கே பம்பலப்பிட்டி குறிச்சியில் இருந்த என் வாடகை வசிப்பிடத்துக்கும் இடைப்பட்ட தூரம் ஏறத்தாழ 6 கிலோமீட்டர். நான் நடந்தே ஆகவேண்டிய தூரம் அது. நான் கடந்தே ஆகவேண்டிய கண்டம் அது! 

     

கிழக்கு மேற்காகச் செல்லும் ஸ்ரீ ஜினரத்தினா வீதியைக் கடந்து, வடக்குத் தெற்காகச் செல்லும் தெருவை அடைந்தேன் (அதன் பெயரை மறந்துவிட்டேன்). அதன் இரு திசைகளிலும் ஆட்களும் வாகனங்களும் நெருக்கி அடித்துக்கொண்டு, முட்டி மோதிக்கொண்டு போவதைப் பார்த்த எனக்கு, அவற்றை எல்லாம் ஊடறுத்து என் இருப்பிடம் சேர்வது ஒரு மாபெரும் சவாலாகவே தென்பட்டது. 

     

அந்தத் தெருவிலிருந்து கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கொள்ளுப்பிட்டியை அடைவதற்கு ஒரு குறுக்குத் தெரு இருந்தது (அதன் பெயரும் நினைவில் இல்லை). எனது வேலைத்தலத்துக்கு கிழக்கே இருந்த எம்பையர் திரையரங்கிலிருந்து, அந்தக் குறுக்குத்தெரு வழியே, கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்த லிபேட்டி திரையரங்கைச் சென்றடையலாம். லிபேட்டி திரையரங்கைத் தாண்டினால், காலி வீதியை அடையலாம்.

     

அந்தத் தெருவழியே நடந்து லிபேட்டி திரையரங்கை நான் நெருங்கியபொழுது  அண்ணளவாக 1,000 பேர் கொள்ளுப்பிட்டி சந்தியில் குவிந்திருப்பது தெரிந்தது. நான் அலுவலகத்தை விட்டு வெளியேறியது புத்திசாலித்தனமா, அல்லவா என்ற கேள்வி உள்ளத்துள் எழுந்தது. அதேவேளை, அலுவலகத்துக்குத் திரும்பி ஓடுவது என்பது, ஏதோ எனக்குப் பின்வாங்குவதாகவே புலப்பட்டது. அத்தகைய சூழ்நிலையிலும் கூட, அது அவமானமாகவும் மடைத்தனமாகவும் பட்டது. ஆதலால் நடை தளராது தொடர்ந்தேன். பென்னம்பெரிய கும்பலை ஊடறுத்து, தன்னந்தனியாக நான் நடந்தே ஆகவேண்டும்.

     

கொள்ளுப்பிட்டிச் சந்தியின் தென்கிழக்கு மூலையில் ஒரு பெரிய மதுபானக் கடை அமைந்திருந்தது. அந்த மதுபானக் கடை கொள்ளை அடிக்கப்படுவது கண்ணில் பட்டது. அரையில் ஒரு சாரமும், தலையில் ஒரு கைக்குட்டையும் வரிந்துகட்டிய சில காடையர்கள் பெட்டி பெட்டியாகவும், புட்டி புட்டியாகவும் கொள்ளை அடித்தார்கள். துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் இடைக்கிடை அந்தக் காடையரை அதட்டுவதும், கும்பலோடு கும்பலாக நின்று வேடிக்கை பார்ப்பதுமாய் இருந்தார்கள். 

     

காவல் துறையினர் ஒரு காடையனை விரட்டுவது என் பார்வையில் விழவே செய்தது. அவன் கையில் வைத்திருந்த ஏதோ ஒன்று எரிந்துகொண்டிருந்தது. அது ஒரு தீக்குச்சியோ, தீமூட்டியோ, தீப்பந்தமோ, எரிகுண்டோ… என்னால் திட்டவட்டமாகக் கூறமுடியாது. மதுபானக் கடையில் தீப்பற்றியபொழுது, அதனை வேடிக்கை பார்த்த அந்தக் கும்பலுக்குள் நான் ஊடுருவியிருந்தேன். 

     

அப்பொழுது எனக்கோர் உண்மை பளிச்சிட்டது: காடைத்தனம் புரிவோர் சிலர், அதனை வேடிக்கை பார்ப்போர் பலர். அந்த உண்மை எனக்கு வியப்பூட்டவில்லை, தெம்பூட்டியது! விளாசி எரிந்துகொண்டிருக்கும் மதுபானக் கடையே அந்தக் கும்பலின் கவர்ச்சி மையமாக விளங்கியது. ஆதலால் அந்தக் கும்பலை விட்டு விலகி நகர்ந்து காடையர்களின் கவனத்தை ஈர்ப்பதைவிட, கும்பலோடு கும்பலாகச் சேர்ந்து, அதே கும்பலை ஊடறுத்துச் செல்வதே எனக்குப் பாதுகாப்பு.  

     

வடக்குத் தெற்காகச் செல்லும் காலி வீதியை நான் கடந்தபொழுது எனது பாதிக் கண்டம் கழிந்தது! அப்பொழுது மதியம் 12 மணி கடந்திருக்கும் என்று நினைக்கிறேன். தெற்கு நோக்கி இன்னும் 3 கிலோமீட்டர் நான் நடந்தே தீரவேண்டும். அப்பொழுது காலி வீதியின் இரு திசைகளிலும் அரச கூட்டுத்தாபன சுமையூர்திகளின் நடமாட்டம் தெரிந்தது. அவசர அவசரமாக அவை நகர்ந்து கொண்டிருக்கையில், காடையர்கள் அவற்றில் ஏறுவதும், இறங்கவதுமாக இருந்தார்கள். காலி வீதி நெடுக அமைந்திருந்த வியாபார நிலையங்கள் பெரும்பாலானவற்றில் தமிழ், ஆங்கில பெயர்ப்பலகைகள் தொங்குவது எனக்கு ஏற்கெனவே தெரியும். காலி வீதியில் நடப்பதா, அல்லது மேற்கே ஏறக்குறைய 300 மீட்டர் தூரத்தில் கடற்கரையை அண்டி, தண்டவாளத்தை ஒட்டிச்செல்லும் நடைபாதையை நாடுவதா என்பதை நான் முடிவுசெய்ய வேண்டியிருந்தது.

     

காலி வீதிக்கும் கடற்கரைக்கும் இடைப்பட்ட இடம் வீடுவளவுகள் நிறைந்தது. சந்து பொந்துகள் மிகுந்தது. கடற்கரையில் மக்கள் நடமாட்டம் குறைந்த மதிய வேளை அது. தண்டவாளத்தில் எதுவும் நடக்கலாம். கடலும் ஒத்துழைக்க வல்லது. அங்கு நிகழக்கூடிய காடைத்தனத்தை வேடிக்கை பார்ப்பதற்கே ஆட்கள் பற்றாது! எனவே, ஏற்கெனவே கைகொடுத்த உபாயத்தையே நான் மீண்டும் தேர்ந்தெடுத்தேன்: வேடிக்கை பார்க்கும் கும்பலோடு கும்பலாக, அதே கும்பலை ஊடறுத்து நடக்க முடிவெடுத்தேன். 


எனினும் காலி வீதியின் இரு மருங்கிலும் எரியும் கட்டடங்களும், வாகனங்களும் மட்டுமே என் கண்ணில் பட்டன. ஆட்கள் தாக்கப்படுவதோ கொல்லப்படுவதோ என் கண்ணில் படவில்லை. உடல்களையோ, இரத்தத்தையோ நான் காணவில்லை. என்னை எவரும் தீண்டவுமில்லை. அதற்கு எனது உபாயமே காரணமாகலாம், அல்லது நான் வீணாக அஞ்சியிருக்கலாம். எதுவென்று என்னால் திட்டவட்டமாகக் கூறமுடியாது. எப்படியோ காலி வீதியோரமாக 3 கிலோமீட்டர் நடந்து நான் பம்பலப்பிட்டியை அடைந்தேன். ஒரு கண்டம் கழிந்தது


பம்பலப்பிட்டி, சாதாசிவம் வீதியில் (St.Alban’s Place) எனது உறவினர் ஒருவருக்குச் சொந்தமான இரண்டு வீடுகள் இருந்தன. முதலாவது வீடு 2 கூறுகளாகவும், இரண்டாவது வீடு 3 கூறுகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. முதலாவது கூறில் வீட்டுச் சொந்தக்காரர், இரண்டாவது கூறில் அவருடைய விருந்தினர்கள், மூன்றாவது கூறில் ஒரு குடும்பம், நான்காவது கூறில் நாங்கள், ஐந்தாவது கூறில் ஒரு குடும்பம்… வீட்டுச் சொந்தக்காரரும், நாங்கள் 12 பேரும் உறவினர்கள். எங்களுக்கு கடைச் சாப்பாடு.  

     

நான் வீடு திரும்பியபொழுது, எங்கள் கூறில் ஒருசிலரும், ஏனைய கூறுகளில் முழுப்பேரும் நிற்கக் கண்டேன். நண்பர்கள் சிலர் எங்களுடன் வந்து சேர்ந்து கொண்டார்கள். பக்கத்துக் கூறிலிருந்து என்னைக் கூப்பிட்டார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து எங்கள் உறவினர் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நடப்பு நிலைவரத்தை அறிந்துகொண்டார் (எங்கள் வாடகை வீட்டில் தொலைபேசி இல்லை). அதே கூறிலிருந்து மதிய உணவு வந்தது. நின்றவர்கள் பகிர்ந்துண்டோம்.  

     

பம்பலப்பிட்டி காவல்நிலையம் காலி வீதியை அண்டி இருந்தது. காவல் நிலையத்தின் பின்வளவு வெற்றுவெளியாக எங்கள் வீட்டின் தெற்குப்புறம் வரை நீண்டிருந்தது. எங்கள் வளவுக்கும், காவல்நிலைய வளவுக்கும் இடைப்பட்ட எல்லையாக நீண்டு கிடந்தது ஒரு மதில். எங்கள் தெற்குப்புறத்துச் சாளரம் வழியே கிழக்குப் புறமாகப் பார்த்தால், ஏறத்தாழ 100 மீட்டர் தூரத்தில் இருக்கும் காவல் நிலையத்தின் பின்புறம் தெரியும். 

     

நாங்கள் வசித்த கூறு மிகவும் பழையது, மேல்தட்டு, கீழ்தட்டுக் கிடையாது. நாங்கள் எல்லோரும் ஆண்கள் என்பதால் காவல்துறையினர் ஏற்கெனவே எங்கள் வீட்டில் திடீர்ப் பரிசோதனைகள் நடத்தியிருந்தனர். நாங்கள் காவல்துறையினருக்குத் தெரிந்தவர்கள். அதனை எங்களுக்குச் சாதகமாகவும் நாங்கள் எடுத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அன்றைய சூழ்நிலையில் அதை நாங்கள் பாதகமாகவே எடுத்துக்கொண்டோம். நாங்கள் காவல்துறையினருக்கு தேவைப்படுவோர் ஆகக்கூடும்! 

     

பொழுது சாயுந் தறுவாயில், வேளைக்கே வாயிலைப் பூட்டி, வீட்டுக்குள் அமைதி காத்தோம். அடிக்கடி கதவு தட்டப்பட்டது. நாங்கள் பயந்து பயந்து கதவைத் திறந்த ஒவ்வொரு தடவையும், தப்பி வந்த நண்பர் ஒருவர் உள்ளே ஊடுருவினார். மாலை 6 மணி வானொலிச் செய்தியில் காடைத்தனம் பற்றிய அதிகாரபூர்வமான தகவல் காதில் விழுந்தபொழுது, நாங்கள் மேற்கொண்டு அதிர்ச்சி அடையவில்லை. எனினும், இருள் சூழச் சூழ, எங்கள் தொகை பெருகப் பெருக, நாங்கள் பீதி அடைந்தோம். ஆகவே வீட்டுச் சொந்தக்காரரின் சம்மதத்துடன், எங்கள் கூறைக் கைவிட்டு, அவருடைய இரண்டாவது கூறுக்கு நாங்கள் மாறிச் சென்றோம். மாறிச் செல்லும்பொழுது, எங்கள் வீதியில் இன்னும் நாலைந்து வீடுகள் தள்ளி நிறுத்தப்பட்ட ஒரு காரிலிருந்து இறங்கிய ஒரு குடும்பம் அயல்வீடு ஒன்றினுள் நுழையக் கண்டோம்.  

     

வீட்டுச் சொந்தக்காரரால் வாடகைக்கு விடப்படாத புதிய மாடிவீட்டினுள் எனது குறுவானொலிப் பெட்டியுடன் நாங்கள் நுழைந்தபொழுது, அவருடன் இன்னும் இரண்டு பேர் இருந்தார்கள்: ஒருவர் குவைத்து நாடு போகவந்த உறவினர், மற்றவர் ஏ.ஈ.மனோகரன். மக்களீர் பாடகர் ஏ.ஈ.மனோகரனும், குவைத் செல்லும் உறவினரும் அங்கே தங்கியிருந்த வேளையில் காடைத்தனம் ஓங்கியதே ஒழிய, காடைத்தனம் ஓங்கியதால் அவர்கள் அங்கே ஒதுங்க வரவில்லை. குடித்து, புகைத்து ஆரவாரம் பண்ணிக்கொண்டிருந்த அந்த மூன்று பேரையும் பார்க்குந்தோறும் எங்களுக்கும் தெம்பு பிறந்தது. 

     

வெலிக்கடைச் சிறையில் 35 கைதிகள் கொல்லப்பட்ட செய்தி இரவு 9 மணிக்கு ஒலிபரப்பப்பட்டது. கொல்லப்பட்டவர்களின் பெயர்கள் செய்தியின் பின்னர் வாசிக்கப்பட்டன. அவர்களுள் இருவர் எங்கள் எல்லோருக்கும் தெரிந்தவர்கள்: குட்டிமணி, தங்கத்துரை. உடன் ஆரவாரம் அடங்கியது. வெளியே இருந்து ஏதோ ஒன்று வெடித்த சத்தம் கேட்டது. தலையை நீட்டிப் பார்த்தபொழுது, நாலைந்து வீடுகள் தள்ளி வீதியில் நிறுத்திவைக்கப்பட்ட காரில் தீப்பற்றுவது தெரிந்தது. அது நெடு நேரமாக வெடித்துச் சிதறி எரிந்த வெளிச்சம் அவ்வப்பொழுது எங்கள் சாளரங்கள் வரை நீண்டதுண்டு.    

     

கொஞ்சம் பொறுத்து எங்கள் கதவு தட்டப்பட்டது. மூன்றாவது வீட்டுக் கூறில் வசித்த (எங்களுக்கு மதிய உணவு தந்த) குடும்பத்தவர்கள் (பெற்றோரும் மூன்று பிள்ளைகளும்) அலறிக் கேட்டது. நாங்கள் கதவு திறக்கவில்லை. ஒருசில நிமிடங்களுள் தட்டலும் அலறலும் ஓய்ந்தது. அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை, கொஞ்சம் பொறுத்து எங்களால் கண்டறிய முடிந்தது. எங்கள் வளவின் தெற்குப்புறம் வரை நீண்டிருந்த (காவல் நிலையத்துடன் சேர்ந்த) வெற்றுக் காணியிலிருந்து, அந்த வீட்டின்மீது எரிகுண்டு வீசப்பட்டது. குண்டு வீசப்பட்டவுடன் அவர்கள் அலறிக்கொண்டு ஓடிவந்து எங்கள் கதவைத் தட்டியிருக்கிறார்கள். நாங்கள் கதவு திறக்காதபடியால், அவர்கள் திரும்பி ஓடிப்போய், தீயை அணைத்து, நிலைகொண்டிருக்கிறார்கள். அங்கே எரிகுண்டு வீசியது காடைத்தனம் என்றால், நாங்கள் கதவு திறக்கத் தவறியது பேடித்தனம், இரண்டகம் என்று நான் அடித்துக் கூறுவேன்.  

     

அதேவேளை, குண்டெறிந்தவர்களின் உண்மையான இலக்கு எது என்றொரு கேள்வி எழவே செய்தது. அன்றைய நிலைமையில், ஆடவர் கூடமாக விளங்கிய எங்கள் வீட்டுக் கூறுதான் அவர்களின் உண்மையான இலக்கு என்ற எண்ணம் ஓங்கியதில் வியப்பில்லை. வடக்கே கார்மீது எரிகுண்டுவீச்சு, தெற்கே வீடுமீது எரிகுண்டுவீச்சு. எங்கள் வளவுக்கு வடக்கிலும் தெற்கிலும் காடையர் நடமாடும் சிலமன் உள்ளத்தை உறுத்தியது. எப்படியாவது அங்கிருந்து தப்பி, ஓர் அகதி முகாமை அடையவே நாங்கள் விரும்பினோம். நள்ளிரவு. அகதி முகாம் எங்கே இருக்கிறது? அங்கே எப்படிப் போய்ச் சேர்வது? 


பம்பலப்பிட்டி காவல்துறையினரின் உதவியை நாடும் யோசனையை ஏ.ஈ.மனோகரன் முன்வைத்தார். 

      ‘விதானையாரின் வீட்டுக்குள் போய் ஒளிப்பதா?’ என்று கேட்டார் குவைத் பயணி!  

     ‘பம்பலப்பிட்டி பொலீசாரை எனக்குத் தெரியும்’ என்றார் மனோகரன்.

   ‘மனோ, உங்கள் யோசனைப்படியே செய்யுங்கள்’ என்றார் வீட்டுச் சொந்தக்காரர். 

      ‘தெருவில் கால் வைப்பது ஆபத்து’ என்றார் மனோகரன். ‘காடையரை எனக்குத் தெரியாது’.

      ‘நான் துணைக்கு வருகிறேன்’ என்றார் குவைத் பயணி.

      ‘மடையா!’ என்று அவரை உறுக்கினார் வீட்டுச் சொந்தக்காரர். 

     

மனோகரன் எழுந்து மேல்மாடி சென்றார். தெற்குப் பக்கச் சுவருடன் சேர்த்து செங்குத்தாகப் பொருத்தப்பட்டிருந்த பீலிக் குழாயை எட்டிப் பிடித்தார். சரசரவென்று கீழே வழுகிச் சென்றார். காவல்நிலைய வளவினுள் தொப்பென்று குதித்தார்! 

     

பொழுது விடிவதற்குள் இரண்டு காவலக ஜீப்புகள் வெளியே வந்து நின்றன. மனோகரனும் காவல்துறையினரும் கீழே இறங்கினார்கள். மனோகரன் எங்கள் விபரங்களை அவர்களிடம் சிங்களத்தில் தெரிவித்தார். அவர்கள் அவற்றைக் குறித்துக் கொண்டார்கள். இரண்டு ஜீப்புகளிலும் நாங்கள் ஏற்றப்பட்டோம். ஒரு ஜீப் காலி வீதியில் வடக்கு நோக்கித் திரும்பியது. நான் இருந்த ஜீப் தெற்கு நோக்கித் திரும்பி, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியைச் சென்றடைந்தது. கதிரேசன் கோயிலையும், சரஸ்வதி மண்டபத்தையும் அடுத்து அமைந்திருந்த அந்தக் கல்லூரி ஓர் அகதி முகாமாக மாற்றப்பட்டிருந்தது. எனது குறுவானொலிப் பெட்டியுடன் நான் இறங்கியபொழுது, பல்லாயிரக் கணக்கான அகதிகளால் அது நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. 


அன்று முதல் இன்று வரை மனோகரனை நான் அடிக்கடி எண்ணிப் பார்ப்பதுண்டு: அவர் எந்த வண்டியிலும் ஏறி, எந்த முகாமுக்கும் போகவில்லை என்றுதான் நினைக்கிறேன். அவர் தொடர்ந்தும் எங்கள் வீட்டுக்காரரின் விருந்தாளியாக, அவருடைய வீட்டில் தங்கியிருப்பார் என்பதில் ஐயமில்லை. அந்த நள்ளிரவு வேளையில், ஆயிரக் கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் கொலையுண்ட சூழ்நிலையில், தனது சொந்த உயிரையும் பொருட்படுத்தாது, தன்னந்தனியனாக, சமயோசிதமாகச் செயற்பட்ட மக்களீர் பாடகர் ஏ.ஈ.மனோகரன் அவர்களுக்கு நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டவர்கள். 

     

திரும்பவும், யூலை 27ம் திகதி, 18 பேர் சிறையில் வைத்துக் கொல்லப்பட்ட செய்தி வெளிவந்தது. அவர்களுள் எங்கள் எல்லோருக்கும் தெரிந்தவர்: கலாநிதி இராஜசுந்தரம் அவர்கள். இலங்கையில் இடம்பெற்றுவந்த படுகொலைகளின் எதிரொலியாக  தமிழ்நாட்டில் ஆங்காங்கே தீக்குளிப்புகள் இடம்பெறத் தொடங்கிய செய்திகள்  வெளிவந்த வண்ணம் இருந்தன. அந்த வேளையில் முதல்வர் எம். ஜி. ஆர். அவர்கள் ஆற்றிய உரையைக் கேட்பதற்கு மக்கள் ஆங்காங்கே வானொலிப் பெட்டிகளை மொய்த்தார்கள். தீக்குளிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, தீக்குளிக்கத் தலைப்பட்டவர்களை விளித்து மக்கள் திலகம் இடித்துரைத்த சொற்கள் இன்றும் என் காதில் ஒலிக்கின்றன: ‘அந்த மிருகங்களுக்கு உங்கள் தியாகம் புரியாது!’   

     

கப்பல் கப்பலாக வட, கீழ் மாகாணங்களுக்கு அனுப்பப்படும் வரை குழந்தைகள், பெண்கள், முதியோர், நோயாளிகள் உட்படப் பல்லாயிரக் கணக்கான மக்கள், உடுத்த உடையுடன், அரைப் பட்டினியுடன், இயற்கைக் கடன் கழிக்கவும், ஆறியமரவும், படுத்துறங்கவும்… பரிதவித்த கோலத்தை இங்கு நான் விரித்துரைக்க வேண்டியதில்லை. இன்று அதைவிடப் பன்மடங்கு மோசமான நிலையில் அதே மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். தன்மானம் மிகுந்த எங்கள் மக்கள் அந்த அகதி முகாமில் படுகேவலமான நிலையில் பரிதவித்தது முற்றிலும் உண்மை. எனினும் (1968 முதல் 1983 வரை) நான் கொழும்பில் வசித்த 15 ஆண்டுக் காலப்பகுதியுள் அடையாத உளநிறைவை, அந்த அகதி முகாமில் நான் 2 கிழமைகள் மட்டுமே வாழ்ந்த வாழ்வு எனக்கு அள்ளித் தந்தது. அதற்கான காரணத்தை (பிரெஞ்சுப் புரட்சியாளர்களின் மொழியில்) மூன்றே மூன்று சொற்களில் எடுத்துரைக்கலாம்: சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்.   

     

அகதி முகாமுக்கு வெளியே அடைய முடியாத சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மூன்றையும் அந்த அகதி முகாமில் என்னால் அடைய முடிந்தது. அகதி வாழ்வில் என் உள்ளம் பூரித்த காரணம் அதுவே. 

__________________________________

 2008-08-02

No comments:

Post a Comment