இன முரண்பாடு

 

லக்சிறி பர்னாந்து 

மானுட சமூகத்தில் இனத்துவ முரண்பாடுகள் மிகவும் சிக்குப்பிக்கானவை என்பதில் ஐயமில்லை. இலங்கையில் நிலவும் "இனத்துவ முரண்பாட்டை" எம்மால் முற்றிலும் புரிந்துகொள்ள இயலாமல் போவதற்கு, நாம் ஏதோ ஒரு வகையில் அந்த முரண்பாட்டில் உணர்ச்சிவசப்பட்டு ஈடுபடுவது ஒரு காரணமாகலாம். எனினும், உணர்ச்சிவசப்படாமல் ஈடுபடுவதால் மட்டும் அந்த முரண்பாட்டை சரிவரப் புரிந்துகொள்ளலாம் என்பதற்கில்லை. உணர்ச்சிவசப்படாமல் ஈடுபடுவது ஒருபுறமிருக்க, இனத்துவ முரண்பாட்டின் சிக்குப்பிக்குகளைப் புரிந்துகொள்வதற்கு ஓரளவு அறிவும் தேவைப்படலாம்.
உணர்ச்சிவசப்பட்டு ஈடுபடும் தன்மையை எமது சின்னஞ்சிறு பருவத்தில் நாம் ஈட்டிக் கொண்டிருப்போம். அல்லது எமது வாழ்வனுபவங்கள் வாயிலாக வளர்த்துக் கொண்டிருப்போம். அது சந்தர்ப்பவசத்தால் ஆனது. அதைக் களைவது கடினம். ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு ஈடுபடும் தன்மைக்கு, தனது பண்பாட்டையோ, மொழியையோ, சமயத்தையோ, வரலாற்றையோ, குழுமத்தையோ அவர் ஏற்றுப்போற்றுவதாகவோ, அவற்றுக்குத் தன்னை அர்ப்பணிப்பதாகவோ நான் பொருள்கொள்ளவில்லை. மற்றவர்களின் பண்பாடு, மொழி, சமயம், வரலாறு, குழுமம் எதையும் எதிர்க்கும் உளப்பான்மை, மற்றவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதை ஏற்கும் உளப்பான்மை என்ற வரையறைக்குள் தான் அதற்கு நான் பொருள்கொள்கிறேன். 
உணர்ச்சிவசப்பட்டு ஈடுபடும் போக்கினைச் செவ்வனே களையும் விதத்தை வரையறுப்பது கடினம். எனினும் குறித்த விடயம் பற்றிய தனது அறிவைப் பெருக்கும் எவரும் உணர்ச்சிவசப்பட்டு பக்கச்சார்பாக நடந்துகொள்வதை தவிர்க்கக்கூடும். அந்த வகையில் இங்கு முதலாவது அம்சத்தைக் கருத்தில் கொள்வதற்கு முன்னரே இரண்டாவது அம்சத்தை வலியுறுத்த வேண்டியுள்ளது!
இதற்குப் பல்வேறு அணுகுமுறைகள் உள்ளன. அண்மையில் கலாநிதி இராசசிங்கம் நரேந்திரன் எழுதிய ஒரு கட்டுரையில் "குடிமக்கள், இனங்கள், அரசு" என்னும் சொற்களுக்கு கொள்ளப்படும் கருத்துக்களை ஆராய்ந்துள்ளார். அதற்கு நாங்கள் உடன்படலாம் அல்லது முரண்படலாம். அது முக்கியமல்ல. குறித்த விடயம் பற்றிய எமது அறிவை அது பெருக்குவதாய் அமைந்துள்ளது. வாதம்புரியாத தொனியில் தனது கண்ணோட்டங்களையும் ஆய்வுகளையும் அவர் முன்வைத்துள்ளமை முக்கியமானது. உணர்ச்சிவசப்படாமல் புரிந்துகொள்வதற்கும், ஈடுபடுவதற்கும், கலந்தாராய்வதற்கும் அது எமக்கு உதவுகிறது. அவருடைய கட்டுரைக்கு வந்த பதில்வினைகளைக் கருத்தில் கொண்டபொழுது, அவற்றில் அத்தகைய தன்மை முற்றிலும் புலப்படவில்லை.
 "முழுப்பரிமாணம்" என்று நாம் வழமையாகக் குறிப்பிடுவதை இனிப் புரிந்துகொள்ளுவோம். அதாவது மரங்களை விடுத்து, அம்மரங்களால் ஆன காட்டினைக் கண்டுகொள்வோம். இங்கு இரு அடிப்படை விடயங்கள் சம்பந்தப்படுகின்றன: உலகளாவிய முறையில் எமது கண்ணோட்டத்துள் வேறு நாடுகளை உட்படுத்துவது ஒருபுறம். வரலாற்றுக் கண்ணோட்டத்துள் அல்லது படிமுறைவிருத்திக் கண்ணோட்டத்துள் எமது பிரச்சனையை நாம் புரிந்துகொள்வது மறுபுறம். வரலாற்றுக் கண்ணோட்டத்தை இலங்கை வரலாற்றுக்குள் நான் ஒடுக்கவில்லை. மானுட வரலாறு முழுவதையுமே இங்கு நான் கருத்தில் கொள்கிறேன்.
இன்றைய உலகில் 7,000க்கு மேற்பட்ட இனக்குழுமங்களை இனங்காணலாம். எனினும் ஏறத்தாழ 200 அரசுகளே அல்லது நாடுகளே இருக்கின்றன. இன்னும் நுணுக்கமாகச் சொல்வதாயின், ஐ, நா. கட்டுக்கோப்பில் அங்கம் வகிக்கும் அரசுகள் 193; அவதானிக்கும் அரசுகள் 2; மற்றைய நாடுகள் 11. அவற்றுள் பத்துப் பன்னிரண்டு அரசுகளையே அல்லது நாடுகளையே சில வரையறைகளுடன் ஓரின நாடுகளாகக் கொள்ளலாம். பல்லினச்சிக்கல் மிகுந்த நாடுகள் பலவும் தென் ஆசிய, தென்கிழக்கு ஆசிய, ஆபிரிக்க, கிழக்கு ஐரோப்பிய, மத்திய கிழக்குப் பிராந்தியங்களில் அமைந்துள்ளன.
உலக இனக்குழுமங்கள் அனைத்துமே தம்முள் மோதிக்கொள்ளாமல் இருப்பது ஒரு நற்பேறே ஆகும். அவை அனைத்தும் தம்முள் மோதிக்கொண்டால், உலகமே ஒரு நரகமாகிவிடும். பெரிதும் சகிப்புத்தன்மை, சகவாழ்வு, ஒருங்கிணைவு, பல்பண்பாடு, அதிகாரப் பகிர்வு கொண்டே அவை தம்மிடையே மோதல்களைத் தவிர்த்து வந்துள்ளன.
வெளிப்படையான இனமோதல்கள் அவ்வப்பொழுது கூடிக்குறைந்து வந்துள்ளன. 1990களில் 50க்கு மேற்பட்ட இனமோதல்கள் இடம்பெற்று வந்தன. தற்பொழுது அவை 20 மோதல்களாகக் குறைந்துள்ளன. பல நிறுவனங்களும் ஆய்வாளர்களும் கைக்கொள்ளும் பிரமாணங்களின்படி இலங்கையில் தற்பொழுது வெளிப்படையான இனமோதல் இல்லை. எனினும் வெளிப்படையான இனமோதல் இன்றியே பதற்றம் அல்லது தீர்க்கப்படாத சர்ச்சைகள் நீடிக்கக்கூடும். எந்தக் கணத்திலும் அவை தீப்பற்றி எரியக்கூடும். அரசியற் காரணிகளும், அரசியலாளர்களும் மோதல்களில் பெரிதும் முதன்மை பெறுவதுண்டு. எனினும் பக்கச்சாய்வு, அச்சம், வெறுப்புடன் கூடிய தன்னலம் கருதி சாதாரண மக்களும் பல்வேறு மட்டங்களில் சம்பந்தப்படுவதுண்டு.
பிற குழும அமைப்புகளைப்  போலவே இனத்துவமும் மோதலுக்கு இட்டுச்செல்ல வல்லது. குழும அமைப்பினால் "எங்களுக்கும்", "அவர்களுக்கும்" இடையே ஐயமும், சிலவேளைகளில் வெறுப்பும் தோன்றுவது ஓர் இக்கட்டாகும். இந்த இக்கட்டையும், பேதத்தையும் விளக்குவதற்கு கிப்பிளிங் (Rudyard Kipling) எழுதிய "வெளியாள்" (The Stranger) என்னும் கவிதையில் ஒரு கூறினை இங்கு நான் மேற்கோள்காட்ட விரும்புகிறேன்:   

என் வாயிலில் ஒரு வெளியாள்; அவர்,
கனிவு, கண்ணியம் படைத்தவராகலாம்.
எனினும்அவர் என்மொழி பேசாதவர்.
அவர் மனத்தை நான் காண்பதில்லை.
அவர் முகத்தையும், கண்ணையும், வாயையும்
நான் காண்கிறேன்; எனினும்,  
அவர் அகத்தை நான் காண்பதில்லை. 

"மற்றவர்" மீது ஐயத்தை, அச்சத்தை, வெறுப்பைத் தோற்றுவிப்பது எது என்பதைக் கூறுவது கடினம். "மற்றவர்களின்" அகத்தை நாம் காணத்தான் வேண்டுமா? காணவேண்டிய தேவை இல்லை என்றும் கொள்ளலாம். "மற்றவர்களை" வெறுக்க முற்படாதோர் பலர் உளர். சிலர் நடுநிலை வகிப்பவர்கள். வேறு சிலர் "மற்றவர்களால்" கவரப்படுவதும் உண்டு. மற்றும்படி, உலகில் நிகழும் கலப்பின மணங்கள் பலவற்றுக்கு விளக்கமளிப்பது எங்ஙனம்?
உலகில் இனப்பிரிவினை மட்டும் காணப்படவில்லை. சமூகத்தில் இனத்துவம் சார்ந்தோ சாராமலோ வர்க்கம், சமயம், கருத்தியல் போன்ற வேறு சிலவும் இணைந்து பிணைந்துள்ளன. உலகளாவி அல்லது நாட்டுக்கு நாடு இணைந்து பிணைந்தவை வேறு சிலவும் உள்ளன. வர்க்கம் என்பது தனி இயக்கமும் ஆழமும் கொண்டது. வர்க்கம் இன இடைவெளியையே குறுக்க வல்லது. கிடையான அச்சில் இடம்பெறும் இனத்தகராறுகள் பெரிதும் அழிவு விளைவிப்பவை. வர்க்கத் தகராறுகள் (அல்லது போராட்டங்கள்) செங்குத்தான அச்சில் நிகழ்பவை. காலப்போக்கில் அவை விருத்திக்கும் முன்னேற்றத்துக்கும் இட்டுச்செல்லும் என்று பெரிதும் வாதிக்கப்படுவதுண்டு.
இனம் வேறு, இனத்துவம் வேறு. இனம் என்பது பெரிதும் அறிவியல் அடிப்படையற்ற உயிரியல் உரு அல்லது உருவம் என்று கொள்ளப்படுவது. இனத்துவம் என்பது ஒரு சமூக உரு அல்லது சமூகத்துவ உருவம். இனத்துவத்துக்கு ஓர் அறிவியல் அடிப்படை உண்டா? ஆம், அது சமூகவியலிலும், சமூக அறிவியல் துறைகளிலும் உண்டு. 1950ம், 72ம் ஆண்டுகளில் ஐ.நா.கல்வி சமூக பண்பாட்டு அமைப்பின் (UNESCO-வின்) ஆதரவில் இனப்பிரச்சனையை ஆராயக் கூடிய இயற்கை அறிவியலாளர்கள் உலகில் இனத்துவத்துடன் தீர்க்கமான தொடர்பற்ற மூன்று, நான்கு பாரிய இனக்குழுமங்கள் (மஞ்சள், கருப்பு, வெள்ளை இனக்குழுமங்கள்) இருப்பதாகக் கொள்வதற்கு அதிக வாய்ப்புண்டு என்று முடிவுகட்டினார்கள்.
எனினும் "இனம்" என்பது இனக்கருத்தியலின் செல்வாக்கிற்கு உட்பட்டு மக்களின் உள்ளத்தில் நிலைகொள்வது. தம்மில் ஏதோ ஒரு "சிறப்பு" அல்லது "மேன்மை" உண்டு என்று நம்பியே மக்கள் அவ்வாறு கற்பித்துக் கொள்வதாகத் தெரிகிறது.
இவை எவ்வாறு தோன்றியிருக்க வேண்டும்? அதற்குரிய காலநிரலை நோக்குவோம்: பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள் (கதையோடு கதை, தமிழரோ சிங்களவரோ அப்பொழுது இல்லை!). இன்னும் ஒரு மானுடப் பிறவியாகாமால் மனிதக்குரங்குப் பிறவியாக இருந்த எங்கள் கொள்ளுப்பாட்டியின் கொள்ளுப்பாட்டியை எண்ணிப் பார்ப்போம் (ஏன், நாங்களே இன்னமும் மானுடப் பிறவிகளா என்றும் ஒருவர் வினவக்கூடும்!) எங்கள் கொள்ளுப்பாட்டியின் கொள்ளுப்பாட்டிக்கு முன்னைய பிறவி ஒரு வாலில்லாப் பெருங்குரங்காக இருந்தது. 30 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் அது எதியோப்பிய அவாசுப் பள்ளத்தாகில் (Awash Valley of Ethiopia) வசித்து வந்தது.
"மானுடப் பிறவிகள் ஆபிரிக்காவிலிருந்து பரவிய கோட்பாட்டின்படி" எங்கள் கொள்ளுப்பாட்டியின் கொள்ளுப்பாட்டிக்கு பிறகு அவருடைய வழித்தோன்றல்களே (2½ இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்) மானுடரை (Homo sapiens) பெற்றெடுத்தனர். மானுடர் உலகெங்கும் அலைந்து திரிந்து வெவ்வேறு கண்டங்களில் குடியமர்ந்தனர். ஏறத்தாழ 1 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆபிரிக்காவிலிருந்து குடிபெயர்ந்த மானுடர் முதற்கண் மத்திய கிழக்கில் குடியமர்ந்தனர். 70 ஆயிரம் அண்டுகளுக்கு முன்னர் அவர்கள் சைபீரியாவுக்கும், சீனாவுக்கும் பெயர்ந்தனர். 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவுக்கு நகர்ந்தனர். 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தென்னாசியாவுக்கும், பிறகு ஆஸ்திரேலியாவுக்கும் பெயர்ந்தனர். 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யப்பானையும், பிறகு அமெரிக்க கண்டத்தையும் அடைந்தனர்.
அவர்கள் வெவ்வேறு பிராந்தியங்களில், வெவ்வேறு காலநிலைகளில் (NeanderthalsHomos போன்ற) மற்றும் பிற மானுடப் பிறவிகளை அகற்றியோ அவற்றுடன் ஒன்றுசேர்ந்தோ பாரிய இனக்குழுமங்களைத் தோற்றுவித்திருக்கலாம். அவை அனைத்தையும் நாம் மானுடமாகவோ மனுக்குலமாகவோ கொள்ளல் தகும்.
 மேற்படி கோட்பாடு எமது சொந்த தொல்பொருளியற் சான்றுடன் நன்கு பொருந்துகிறது. எமது "பலாங்கொடை மனிதர்" (Balangoda Man) 38 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர். அவர் தமிழரா, சிங்களவரா என்று வினவுவதில் பயனில்லை!
மானுடர் முதற்கண் தமது தாயகத்துள்  இயற்கையை ஒட்டி சிறு குழுமங்களாகவோ அலைந்துதிரியும் ஆட்களாகவோ சோடிகளாகவோ வாழ்ந்தனர். காலப்போக்கில் அவர்கள் பிராந்தியத்துக்கு பிராந்தியம் அல்லது நாட்டுக்கு நாடு பெயருந்தோறும் அவர்கள் வாழும் விதங்களும் மாறலாயின. பிறகு முழுமுதல் அடையாளங்கள், கிளைமொழிகள் என்பவறுடன் செவ்வனே உருவான குலங்கள் ஓங்கின.
பற்றுறுதி கொண்ட எமது மக்கள் இன்புறும் வண்ணம் காலநிரல் ஒன்றை இங்கு நான் முன்வைக்க முயல்கிறேன். தொல்பொருளியற் சான்றுகளின்படியும், மற்றும் பிற சான்றுகளின்படியும் புராதன இலங்கையில் தொல்குடிமக்கள் வாழ்ந்து வந்தார்கள். தற்காலம் வரையும் வாழ்ந்து வந்துள்ளார்கள். தொல்குடி வேடர் அதற்குச் சான்று.
கால ஏடுகளின்படியும், சாசனங்களின்படியும் "அங்கிருந்து" வந்து இங்கு குடிபுகுந்த குலங்கள் மேலோங்கி வந்தன. அவற்றின் பெயரை நான் கூறினால், அது தேவையற்ற சர்ச்சைக்கு இட்டுச்செல்லக் கூடும். அவை எண்ணிறந்த குலங்கள். அவற்றின் பெயர்கள் சில இந்தியா, நேபாளம், கம்போடியா, இந்தோனேசியா முதலிய நாடுகளில் வாழ்ந்த குல / இனக் குழுமங்களின் பெயரை ஒத்தவை. அவற்றுட் சில நாடோடிக் குழுமங்கள் என்பது வெளிப்படை.
உலகின் முதலாவது அரசு 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய கிழக்கில் தோன்றியது. அமுராபி மன்னனின் (Hammurabi, கி. மு. 1792-1750) ஆட்சிக் காலத்தில் அது நன்கு அமையப்பெற்ற அரசாக மலர்ந்தது. கால ஏடுகளின்படி இலங்கையில் அரசாட்சி தொடங்கிய ஆண்டு கி. மு. 543. எனினும் சாசனங்களின்படி கி. மு. 3ம் நூற்றாண்டிலேயே அரசாட்சி தொடங்கியது. பிற அரசுகள் பலவற்றைப் போலவே இலங்கை அரசும் சமயத்துடன் அல்லது சமய நம்பிக்கைகளுடன் நெருங்கி உறவாடியது. எனினும் குலங்களை சாதிகளாக உருமாற்றி, மக்களுக்கு வேண்டிய சேவைகளையும், தொழில்களையும் வழங்கி அவர்களுக்கு வாழ்வளிப்பதே அரசின் தலையாய பணியாக இருந்தது. அதற்கு நீர்ப்பாசனம் வீறூட்டியது.
பிறகு மொழியை அடிப்படையாகக் கொண்ட இனத்துவம் ஓங்கியது (மொழிகளை அடிப்படையாகக் கொண்ட இனத்துவங்கள் ஓங்கின). அவை ஓங்கிய காலங்கள், ஓங்கிய முறைகள் குறித்து வரலாற்றிஞர்கள் சர்ச்சைப்பட்டு வருகிறார்கள். தொடக்கத்தில் சமய அடிப்படையில் பேதங்கள் ஓங்கியிருக்கலாம். வெவ்வேறு சமயங்களும், சாகைகளும் அவ்வப்பொழுது முரண்பட்டாலும், அவற்றிடையே சகவாழ்வும், ஒருங்கிணைவும் காணப்பட்டன.
"சிங்கள" இனத்துவம் பின்வரும் படிமுறையில் தோன்றியிருக்க வேண்டும்: வமிசம்-> மொழி-> மக்கள். இது தொல்குடித் தமிழ் மக்கள் உட்படப் பல்வேறு குழுமங்களை உட்படுத்திய (உட்கொண்ட) படிமுறை ஆகலாம். 10ம் நூற்றாண்டின் இறுதியில் அப்படிமுறை உச்சம் பெற்றிருக்கலாம். அப்படிமுறையில் வேடுவ சமூகம் உள்வாங்கப்படாது போயிருக்கலாம். ஆனாலும் மொத்தத்தில் சிங்கள சமூகம் பன்மைச் சமூகமாகவே விளங்கியது. சிங்கள இனத்தோற்றத்தின் முதற் சுழற்சி அது.
இலங்கையில் தமிழ் அடையாளம் / இனத்துவம் எப்பொழுது, எப்படி நிலையூன்றியது? அது 11ம் நூற்றாண்டு முதல் 15ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் எனலாம். அதற்கு முன்னரே தென்னிந்தியாவில் தமிழ் இனத்துவம் நிலையூன்றியிருந்தது. சோழ, பாண்டிய மன்னர்கள் அடுத்தடுத்து இலங்கைக்குள் தமது ஆட்சியை விரிவுபடுத்தியதன் பெறுபேறாக இங்கு தமிழ் இராச்சியம் ஒன்று தோன்றியது. அது முற்றிலும் சுதந்திரமான இராச்சியமா, இத்தீவில் பேராதிக்கம் செலுத்திய இராச்சியத்துக்கு கட்டுண்ட இராச்சியமா என்பது குறித்து மிகுந்த சர்ச்சை நிலவுகிறது. எனினும் சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் வாழ்ந்த சிங்களத் தோற்றுவாய் கொண்ட மக்களை அது உள்வாங்கியிருக்கலாம். முன்னர் சிங்கள இனத்துவம் உருவாகிய விதமாகவே தமிழ் இனத்துவமும் உருவாகியிருக்கலாம். இலங்கையில் இடம்பெற்ற இரண்டாவது சுழற்சி அது. பெரிதும் முதலாவது சுழற்சியை ஒத்ததே இரண்டாவது சுழற்சியும்: வமிசம்-> மொழி-> மக்கள்.
16ம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் இலங்கை வந்தபொழுது இங்கு சிங்களவர், தமிழர், வேடர் தவிர முஸ்லீங்களும் இருந்தார்கள். இங்கு மானுட சமூகம் பெரிதும் முரண்படாமல் மெய்யான பன்மைச் சமூகமாகவே விளங்கியது. குறிப்பாக தமிழ், சிங்கள மன்னரிடையேயும், மக்களிடையேயும் கலப்புமணம், ஒட்டுறவு, பரிவர்த்தனை இடம்பெற்று வந்தன.
சாதாரண பேச்சுவழக்கில் இனத்துவம் என்பது பெரிதும் தேசியம் எனப்படுவதுண்டு. உண்மையில் இனத்துவம் என்பது ஒரு சமூக உரு. தேசியம் என்பது ஓர் அரசியல் உரு. தேசியம் என்பது இனத்தேசியம், குடிமைத்தேசியம் என இருவகைப்படலாம். இனத்துவமும் அரசியலும் சேர்ந்து ஒரு தேசத்தையும், தேசியவாதத்தையும் உருவாக்கக் கூடும். ஓர் இனத்துவ தேசியத்தை அல்லது இனத்துவ தேசியவாதத்தை அது உருவாக்காமல் விடவும் கூடும்.
இனத்துவங்கள் உருவான பிறகு, சமூகங்கள் நவீன குடிமைத் தேசங்களாக அல்லது தேசிய இன அரசுகளாக ஓங்கின. முதலாளித்துவமும், குடியாட்சியும் அப்படிமுறைகளைத் தீவிரப்படுத்தின. மேற்கைப் பொறுத்தவரை, குறிப்பாக பிரஞ்சு, அமெரிக்கப் புரட்சிகளுக்குப் பிறகு இத்தகைய படிமுறைகள் ஓங்கியதைக் காணலாம். தென்னாசிய நாடுகள் சிலவற்றில் முளைவிட்ட அத்தகைய படிமுறைகள் காலனித்துவ ஆட்சியால் குழப்பியடிக்கப் பட்டதையும் காணலாம். காலனித்துவ ஆட்சிக்குப் பிறகு பிரிவினைச் சக்திகள் எழுந்தன. அதற்கு காலனித்துவ ஆட்சி மட்டுமே காரணம் என்பதற்கில்லை. அதில் பற்பல காரணிகள் சம்பந்தப்பட்டுள்ளன. அவற்றுள் அபிவிருத்திக் குறைவு தலையாய காரணி ஆகும். கிழக்கு ஐரோப்பா, முன்னாள் சோவியத் நாடு, ஏன் சீனாவிலும் கூட, காலம் கனியமுன்னரே சமூகவுடைமையைப் புகுத்த அல்லது சமூகவுடைமையத் திரித்துப் புகுத்த எத்தனித்தபடியாலும் நலமான குடிமைத் தேசங்கள் உருவாகும் படிமுறை குழப்பியடிக்கப்பட்டது. இவ்வரசு முறைமைகள் குலைந்தபடியாலும் பாரிய இனமுரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
அண்மையில் மேலை நாடுகளிலே குடியாட்சித் தேசங்களும், குடிமைத் தேசங்களும் உருவான பிறகு மீண்டும் இனத்துவம் மேலோங்கியது. அதற்கு கனடா, பெல்சியம், பிரித்தானியா, இஸ்பெயின் என்பன சில எடுத்துக்காட்டுகள். தொல்குடிமக்கள் குலங்களாகவும், குலங்கள் இனத்துவங்களாகவும் (இலங்கையில் சாதிகளாகவும்), இனத்துவங்கள் தேசங்களாகவும் ஓங்கியதை இங்கு நாம் சுருக்கி உரைத்துள்ளோம். இது நேரொழுங்கில் இடம்பெறவில்லை. வளைந்துநெளிந்து, ஒன்றன்மேலொன்றாக இடம்பெற்றுள்ளது. இவ்வாறுதான் அன்றும் நிகழ்ந்தது, இன்றும் நிகழ்கிறது.
இன்னமும் தேசங்கள் உருவாகும் ஊழியில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம் என்று வைத்துக்கொண்டால், இன்றைய சமூகங்கள் பலவும் பாரிய இக்கட்டு ஒன்றை எதிர்கொள்ள நேரும் என்பது தெளிவு. அது இனத் தேசியத்துக்கும், குடிமைத் தேசியத்துக்கும் இடையே  எழும் நெருக்கடி ஆகும். குடியாட்சி, நீதி, சமத்துவம், மனித உரிமைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட "அதிகாரப் பகிர்வு"ப் பொறிமுறைகளும், "பல்பண்பாட்டுக் கொள்கை"களுமே இனமோதல்களுக்கு அல்லது பாரிய இனத்துவப் பிணக்குகளுக்கு தலைசிறந்த தீர்வாகும்.
Dr. Laksiri Fernando, Colombo Telegraph, 2014-06-08. தமிழ்: மணி வேலுப்பிள்ளை

No comments:

Post a Comment