மகத்தான சர்வாதிகாரியின் இறுதி உரை



சார்லி சாப்ளின்

மன்னிக்கவும், நான் ஒரு மாமன்னராக விளங்க விரும்பவில்லை. அது என்னுடைய அலுவலல்ல. எவரையும் நான் ஆளவோ கைப்பற்றவோ விரும்பவில்லை. யூதருக்கும், பிறருக்கும், கருப்பினத்தவருக்கும், வெள்ளையருக்கும், அனைவருக்கும் இயன்றவரை உதவிபுரியவே நான் விரும்புகிறேன். நாங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவிபுரியவே விரும்புகிறோம். மனிதர்கள் அப்படித்தான். ஒருவரின் இன்பத்தில் ஒருவர் இன்புற்று வாழ்வே நாங்கள் விரும்புகிறோம்; ஒருவரின் துன்பத்தில் ஒருவர் இன்புற்று வாழ நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் ஒருவரை ஒருவர் வெறுக்கவோ தாழ்த்தவோ விரும்பவில்லை. இவ்வுலகில் அனைவருக்கும் இடமுண்டு. இந்நல்லுலகு அனைவரையும் ஓம்பவல்லது. இங்கு சுதந்திரமாக, அழகுபட வாழ வழிகாண முடியும். ஆனால் வழிதவறியோர் நாங்களே. பேராசை மனிதரின் அகத்தை நஞ்சாக்கியுள்ளது. வெறுப்பெனும் வேலியிட்டு உலகத்தை அடைத்துள்ளது; துன்பத்துக்கும் குருதிப்போக்கிற்கும் எங்களை இட்டுச்சென்றுள்ளது. 


வேகத்தை நாங்கள் பெருக்கியுள்ளோம். அதேவேளை எங்களை நாங்களே அடைத்து வைத்துள்ளோம். பெருந்தொகையில் உற்பத்திசெய்யும் பொறிவகைகள்  எங்களை ஏழ்மைக்குள் ஆழ்த்தியுள்ளன. எங்கள் அறிவே எங்களை ஏளன உணர்வுடன் பேசவைக்கிறது. எமது கெட்டித்தனத்தில் மென்மையோ, கனிவோ கிடையாது. நாங்கள் சிந்திப்பது மிகவும் அதிகம், உணர்வது மிகவும் குறைவு. பொறிவகைகளை விட மனிதநேயமே எங்களுக்கு அதிகம் தேவை. கெட்டித்தனத்தை விட மென்மையும் கனிவுமே எங்களுக்கு அதிகம் தேவை. அத்தகைய பண்புகள் இல்லையேல், எமது வாழ்வு வன்முறையின் வாய்ப்பட்டு, கைதவறிபோய்விடும். விமானமும் வானொலியும் எங்கள் உறவில் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இத்தகைய கண்டுபிடிப்புகள் இயல்பாகவே மானுட நற்பண்புக்கும், உலகளாவிய தோழமைக்கும், எங்கள் அனைவரின் ஒற்றுமைக்கும் அழைப்பு விடுக்கின்றன.


இப்பொழுது கூட எனது குரல் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைகிறது; உளமொடிந்த கோடிக்கணக்கான ஆண்களையும், பெண்களையும், சின்னஞ்சிறு பிள்ளைகளையும் எனது குரல் சென்றடைகிறது; அப்பாவி மக்களை வதைக்குபடி, சிறையில் அடைக்கும்படி மனிதரை ஏவும் ஒரு கட்டமைப்புக்கு இரையாகும் கோடிக்கணக்கான மக்களை எனது குரல் சென்றடைகிறது.

  

எனது குரலைக் கேட்க வல்லவர்களிடம் “உளமொடிய வேண்டாம்” என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இப்பொழுது எங்களைப் பீடித்துள்ள துன்பம் வெறுமனே பேராசையின் நகர்வையே குறிக்கிறது. மானுட முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சுவோரின் உள்ளக்கசப்பையே அது குறிக்கிறது. மனிதரின் காழ்ப்புணர்வு அகன்று செல்லப்போகிறது. சர்வாதிகாரிகள் மாளப்போகிறார்கள். அவர்கள் மக்களிடமிருந்து கவர்ந்த அதிகாரம் மீண்டும் மக்களையே வந்தடையப்போகிறது. மனிதர்கள் மாளுந்தோறும் சுதந்திரம் மாளவே போவதில்லை.

போர்வீரர்களே! காட்டுமிராண்டிகளுக்கு நீங்கள் அடிபணிய வேண்டாம்; உங்களை இழிவுபடுத்துவோருக்கு, உங்களை அடிப்படுத்துவோருக்கு, உங்கள் வாழ்வைக் கட்டுப்படுத்துவோருக்கு, உங்கள் செயலையும் சிந்தனையையும் உணர்வையும் வரையறுப்பவர்களுக்கு,  உங்களைப் பயிற்றுவோருக்கு, உங்களைப் பத்தியம் உண்ண வைப்பவர்களுக்கு, உங்களை மந்தைகள் போல் நடத்துவோருக்கு, உங்களை விடுதேங்காய்களாகப் பயன்படுத்துவோருக்கு அடிபணிய வேண்டாம்! இத்தகைய வழமைபிறழ்ந்த மனிதர்களுக்கு, இயந்திர உளமும் இயந்திர இதயமும் கொண்ட இயந்திர மனிதர்களுக்கு அடிபணிய வேண்டாம்! நீங்கள் இயந்திரங்கள் அல்ல! நீங்கள் மந்தைகள் அல்ல! நீங்கள் மனிதர்கள்! உங்கள் இதயங்களில் மனிதநேயம் குடிகொண்டுள்ளது! நீங்கள் ஒருவரை ஒருவர் வெறுப்பதில்லை! நேசிக்கப்படாதவர்களே பிறரை வெறுக்கிறார்கள்.  நேசிக்கப்படாதவர்களே,  வழமைபிறழ்ந்தவர்களே பிறரை வெறுக்கிறார்கள்! போர்வீரர்களே! அடிமைகொள்ளப் போராட வேண்டாம்! மாறாக, விடுதலை அளிக்கப் போராடுங்கள்! 

புனித லூக்காவின் 17ம் அத்தியாயத்தில் “ஆண்டவனின் அரசு மனிதருக்குள்ளேயே அமைந்துள்ளது” என்று பொறிக்கப்பட்டுள்ளது. அது ஒருவருக்குள் அல்ல, ஒரு குழுமத்துக்குள் அல்ல, மனிதர்கள் அனைவருக்கும் உள்ளேயே அமைந்துள்ளது. உங்களுக்குள்ளேயே அமைந்துள்ளது! மனிதர்களாகிய உங்களுக்குள்ளேயே அதிகாரம் உள்ளது; இயந்திரங்களை உருவாக்கும் அதிகாரம் உங்களுக்குள்ளேயே உள்ளது! இந்த வாழ்வை சுதந்திரமும் அழகும் மிளிரும் வாழ்வாக மாற்றும்  அதிகாரம்,  இந்த வாழ்வை வியத்தகு துணிகர நிகழ்வாக மாற்றும் அதிகாரம் உங்களுக்குள்ளேயே உள்ளது!

ஆகவே, குடியாட்சியின் பெயரால், இந்த அதிகாரத்தை நாங்கள் பயன்படுத்துவோமாக! நாங்கள் அனைவரும் ஒன்றுபடுவோமாக! புதியதோர் உலகுபடைக்க, மனிதர்கள் செயற்பட வாய்ப்பளிக்கும் செவ்வியதோர் உலகுபடைக்க, இளையோர்க்கு எதிர்காலமும் முதியோர்க்குப் பாதுகாப்பும் அளிக்கும் உலகுபடைக்கப் போராடுவோமாக! காட்டுமிராண்டிகள் இத்தகைய வாக்குறுதிகளை அள்ளிவழங்கியே ஆட்சிபீடத்தில் ஏறி அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் பேசுவது பொய்! தமது வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றுவதில்லை; என்றுமே நிறைவேற்றப் போவதில்லை! 

சர்வாதிகாரிகள் தமக்கு விடுதலை அளிக்கும் அதேவேளை மக்களை அடிமைகொள்பவர்கள்! ஆகவே நாங்களே மேற்படி வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராடுவோமாக! உலகை விடுவிக்கப் போராடுவோமாக! நாட்டு வேலிகளை, பேராசையை, காழ்ப்புணர்வை,  சகியாமையை ஒழிக்கப் போராடுவோமாக! நியாயநெறி காக்கும் ஓருலகை, அறிவியலும் முன்னேற்றமும் அனைவரையும் அகமகிழ்ச்சிக்கு இட்டுச்செல்லும் ஓருலகை உருவாக்கப் போராடுவோமாக! போர்வீரர்களே! குடியாட்சியின் பெயரால், நாம் ஒன்றுபடுவோமாக! 

___________________________________________________

Charlie Chaplin, Final Speech from the Great Dictator, 1940,

translated by Mani Velupillai, 2022-01-18.

https://www.charliechaplin.com/en/films/7-The-Great-Dictator/articles/29-The-Final-Speech-from-The-Great-Dictator-

No comments:

Post a Comment