மூர்க்கத்தனத்தின் அத்திவாரம்

விக்டர் ஐவன்
_____________________________________________________________________________________
இன்று இலங்கை நெருக்கடியையும்தோல்வியையும் எதிர் நோக்கியுள்ளது.  அதற்கான தலையாய காரணங்களுள் ஒன்று: இங்கு மேம்பட்ட அரசியலுணர்வோ குடியாட்சி ஒழுக்கமோ இல்லை. இலங்கை சுதந்திரம் பெற்றதுமுதல் இற்றைவரை இதுவே நிலைவரம்.
காத்திரமான சமூகப் போராட்டம் எதையும் மேற்கொள்ளாமலேயே இலங்கை சுதந்திரம் பெற்றது. நவீன ஊழியுள் நாடு புகுந்தறுவாயில் மேலோங்கிய முன்னோடி அரசியல்-தலைவர்களுள் எவரும் தாராண்மை அரசியற் கருத்தியலை அறிந்திருக்கவோ புரிந்திருக்கவோ இல்லை.
சிங்களத்தில் மார்க்சியம் குறித்து நுற்றுக்கணக்கான நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனினும் பழம்பெரும் தாராண்மைவாத மெய்யியலாளர்களின் நூல் எதுவும் இற்றைவரை சிங்களத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை.  
80-களின் இறுதியில் கலாநிதி சானக அமரதுங்கா தாராண்மைக் கட்சி (Liberal Party) என்னும் ஓர் அரசியற் கட்சியை அமைத்தார். அது ஆங்கிலம் பேசும் ஒருசிலருக்குள் ஒடுங்கிய ஓர் அரசியல் இயக்கமாகவே விளங்கியது. 
இலங்கைத் தேசிய பேரவையின் தலைவர்கள் பலர் மேல்நாட்டில் கல்வி பயின்றவர்கள். எனினும் தாராண்மைக் கோட்பாடுகளைத் தெளிவாகப் புரிந்துகொண்ட ஒரு தலைவரேனும் அவர்களிடையே காணப்படவில்லை. அவர்களுள் மிகவும் கல்விகற்ற பொன்னம்பலம் அருணாசலத்தைக் கூட ஒரு தாராண்மைத் தலைவர் என்று கொள்ளமுடியாது.   

(1) இலங்கை சமசமாசக் கட்சி (LSSP)
இலங்கை சமசமாசக் கட்சியால் துவக்கப்பட்ட அரசியல் இயக்கம் அன்றைய பல்வேறுபட்ட தலைசிறந்த அறிவார்ந்தோரைக் கொண்டிருந்தது. அது நுழைபுலமும் புலமையும் படைத்தவர்களின் இயக்கமாக விளங்கியது என்கிறார் மிக் முவர் (Mick Moore). இவர்கள் ஒரு சர்வதேய குழுமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுள் பலர் வெளிநாட்டில் கற்றவர்கள். சிலர் தமது சாதிக்கு அல்லது சமூகத்துக்கு வெளியே மணம் முடித்தவர்கள். மற்றும்படிஅவர்கள் கலப்புமணத்தின் வழித்தோன்றல்கள். இவர்களுள் பெரும்பான்மையோர் கொவிகம (வேளாளர்) அல்லாத சாதிகளைச் சேர்ந்தவர்கள். சமய நம்பிக்கைகளோ சடங்குமுறைகளோ அற்றவர்கள். 
அவர்கள் அறிவார்ந்த செம்மல்களாக மாத்திரமன்றி திறமைவாய்ந்த தலைவர்களாகவும்வாக்குவன்மை படைத்தவர்களாகவும்நாடாளுமன்ற ஆட்சி முறைமையில் நிபுணர்களாகவும் விளங்கினார்கள். எனினும் அவர்களைப் பொறுத்தவரை மிகவும் ஓர் அவப்பேறான சங்கதி உண்டு: அவர்கள் ஒரு மார்க்சிய குழுமத்தைச் சேர்ந்தவர்களே ஒழியதாராண்மைவாதிகள் அல்லர். அரசையும் நாடாளுமன்றத்தையும் லெனின் எவ்வாறு புரிந்துகொண்டாரோ அவ்வாறே அவர்களும் புரிந்துகொண்டார்கள்தேசத்தை விட வர்க்கமே மிகவும் முக்கியம் என்று கருதினார்கள்.   
அனகாரிக தர்மபாலாவை சிங்கள மக்களின் சிந்தையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்று கொள்ளலாம். ஆறுமுக நாவலர் அதே போன்ற தாக்கத்தை தமிழர் சமூகத்தில் ஏற்படுத்தினார். சிங்களவரும் தமிழரும் முறையே தர்மபாலாவையும் நாவலரையும் மகத்தான தலைவர்களாக நோக்கினார்கள். எனினும் இந்திய சமய மறுமலர்ச்சி இயக்கத்தைச் சேர்ந்த ராம் ராஜ் மோகன் ராய்அஹ்மெட் கான் போன்ற விறல்படைத்த தலைவர்களிடம் காணப்பட்ட அறிவார்ந்த அகநோக்குடன் ஒப்பிடுமிடத்துதர்மபாலாவையும் நாவலரையும் குறுங்குரவர்கள் என்றே கொள்ள முடியும்.    
இந்திய சுதந்திரத்துக்கான இயக்கம் முதலில் இந்திய மக்களது சமூக உணர்வின் எல்லையை அகட்டும் பணியை நிறைவேற்றிய பின்னரே சமய மறுமலர்ச்சிக்கான இயக்கத்தை நிறைவுக்கு இட்டுச்சென்றது. 1936-ம் ஆண்டிலேயே இந்திய சுதந்திர இயக்கம் ஒரு மனித உரிமைப் பட்டயத்தைக் கடைப்பிடித்தது. ஐ.நா.வே தோன்றாத காலம் அது! குடியாட்சியையும்குடியாட்சி விழுமியங்களையும் இந்திய மக்களிடம் சேர்ப்பித்த இயக்கம் என்று இந்திய சுதந்திரத்துக்கான இயக்கத்தைக் கொள்ளலாம்இம்மைநெறியை (சமயச்சார்பின்மையை) கைக்கொள்ள முற்றிலும் உறுதிபூண்ட இயக்கம் என்று கொள்ளலாம்எல்லா வகையான இனசமயசாதி வேறுபாடுகளுக்கும் எதிராக வலுவான கருத்தியற் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கம் என்று கொள்ளலாம். 
காந்தி வலுவான சமயக் கண்ணோட்டம் கொண்டவராயினும்உண்மையில் ஒரு சமயச்சார்பற்ற அரசையே அவர் வேண்டிநின்றார். சமயச்சார்பான அரசை அவர் வேண்டியதில்லை. சமயம் என்பது பள்ளிக்கூடத்தில் கற்பிப்பதற்குரிய பாடம் என்று அவர் நம்பியதில்லை. சமயக் கல்வி என்பது சமய அமைப்புகளுக்கு மட்டும்  இருக்கவேண்டிய கரிசனை என்பதே அவர் நிலைப்பாடு. 

(2) அறிவார்ந்த தன்மை இல்லாமை
இலங்கையின் சுதந்திரத்துக்கான இயக்கம் ஒரு தொலைநோக்கினால் வழிநடத்தப்படவில்லை. நாட்டின் சமூக உணர்வில் அந்த இயக்கம் ஒரு தாக்கத்தை விளைவித்தது என்று சொல்வதற்கில்லை.
பிரித்தானிய ஆட்சியாளரிடம் முன்வைக்கப்படுவதற்கான அரசியல்யாப்பினை ஐவர் ஜெனிங்சைக் கொண்டு வரைவித்தார் டி. எஸ். சேனநாயக்கா. யாப்புவரைவில் மனித உரிமைப் பட்டயம் சேர்க்கப்படுவதை டி. எஸ். சேனநாயக்கா எதிர்த்ததாகக் கூறப்படுகிறது. மனித உரிமைப் பட்டயத்தின் முக்கியத்துவத்தை ஜி. ஜி. பொன்னம்பலம் நன்கு புரிந்துகொண்டிருந்தால்அவர் ஒருவேளை 50-க்கு 50 (பெரும்பான்மையோருக்கும் சிறுபான்மையோருக்கும் சரிநிகர்) பிரதிநிதித்துவம் கோருவதை விடுத்துமனித உரிமைப் பட்டயத்தையே கோரியிருப்பார். இந்தியாவோ 1936ம் ஆண்டிலேயே மனித உரிமைகளை அறிந்திருந்தது. இலங்கை 70-களிலேயே மனித உரிமைகள் பற்றிப் பேசத்துவங்கியது. 
அரசியலுணர்வைப் பொறுத்தவரை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலவிய வேறுபாட்டை இது புலப்படுத்துகிறது. சுதந்திரப் போராட்டத்தின் பொழுதும்அதற்குப் பின்னரும் இந்தியாவில் நிலவியது போன்ற மேம்பட்ட அரசியலுணர்வு இலங்கையில் நிலவியிருந்தால்இங்கும் மேம்பட்ட மனித உரிமைப் பட்டயம் ஒன்றை உருவாக்கி இனசமயசாதிப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டிருக்கலாம். இலங்கையில் காணப்பட்ட பின்னோக்கிய அரசியலுணர்வினால் எல்லா வகையான அரசியல்-தலைமைகளும்அரசும்நிறுவனங்களும்குறிப்பாக நீதித்துறையும்  தாக்குண்டு போயின.   
தாராண்மையை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். நவீன குடியாட்சி முறைமையும்அதனுடன் சேர்ந்தவை அனைத்தும்தாராண்மைக் கருத்தீடுகளிலேயே தங்கியுள்ளன. தாராண்மையே நவீன அரசியல்யாப்பின் தோற்றுவாய். ஆகவே அதில் முதலாளித்துவக் கருத்தீடுகள் உள்ளடங்கியிருக்கவே செய்யும். ஆனாலும் கூட தாராண்மையே குடியாட்சியின் அரசியல்-நெறி என்று கொள்ளலாம். 
 இலங்கை மக்களால் இரசியசீனகியூப புரட்சிகளை நினைவுகூர்ந்து கதைக்க முடிந்தது. ஆனால் பிரித்தானியஅமெரிக்கபிரஞ்சுப் புரட்சிகளை அவர்கள் போதியளவு அறிந்திருக்கவில்லை. இவற்றைக் குறித்து சாதாரண வரலாற்று நூல்களில் காணப்படும் விவரங்களை மாத்திரமே அவர்கள் அறிந்திருந்தார்கள். இரசியசீனகியூப புரட்சிகள் பற்றி பற்பல நூல்கள் சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளன அல்லது மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால் பிரித்தானியஅமெரிக்கபிரஞ்சுப் புரட்சிகள் பற்றி சிங்களத்தில் ஒரு நூல் எழுதப்பட்டதோ மொழிபெயர்க்கப்பட்டதோ அரிது. மார்ட்டின் விக்கிரமசிங்கா போன்ற புலமையாளர்கள் கூட மார்க்சியம்சமூகவுடைமை பற்றி எல்லாம் எழுதினார்களே ஒழியதாராண்மை பற்றி எழுதவில்லை. அதாவது இலங்கையில் அறிவார்ந்த தன்மை போதியளவு ஓங்கவில்லை. அது இலங்கையின் தோல்வியுடன்  பெரிதும் சம்பந்ததப்பட்ட ஒரு காரணி.

(3) அரசியல்யாப்பு
அரசியற்கண் கொண்டு நோக்குமிடத்துஅரசியல்யாப்பு என்பது மிகவும் புனிதமானது என்றும்அதைப் பேணி மதித்து நடக்கவேண்டும் என்றும் நாகரிகம் அடைந்த நாடுகள் கருதுவது புலனாகும். அத்தகைய யாப்பு மீறப்படுவதை பாரிய படுகொலை போன்ற பாரதூரமான பயங்கரக் குற்றங்களுக்கு நிகரான ஒன்றாகவே அவை கருதுகின்றன. எப்பொழுதாவது யாப்பு அல்லது நல்லாட்சி மரபுகள் மீறப்பட்டால்நாகரிகம் அடைந்த நாடுகள் இயன்றளவு விரைவாக அத்தவறுகளைத் திருத்த முனைகின்றன. 
1976-ல் இந்தியப் பேரமைச்சர் இந்திரா காந்தி நாடாளுமன்றத்தில் தமக்கிருந்த பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்தி, 42ம் திருத்தத்தை இயற்றிஇந்திய யாப்பின் கட்டமைப்பையும் உள்ளியல்பையும் மாற்றினார். நீதித்துறை அதற்கு வன்மையாக மறுப்புத் தெரிவித்தும் கூடஅவர் அதை எதிர்த்து தமது இலக்கை ஈட்டினார். 
இந்திய சமூகம் இந்திரா காந்தியின் பாரதூரமான செயலை மும்முரமாக எதிர்த்துக் கிளம்பியது. 1977-ம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலில் அவரது காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்வியில் மேற்படி நடவடிக்கை தீர்க்கமான பங்கு வகித்தது. அவரை அடுத்து ஆட்சியேற்ற ஜனதா கட்சி 1977-ம், 78-ம் ஆண்டுகளில் முறையே 43-ம், 44-ம் திருத்தங்களை இயற்றி, 42-ம் திருத்தத்தின் ஊடாக யாப்பில் ஏற்பட்ட திரிவுமுரண்பாடு என்பவற்றைச் சரிப்படுத்தியது. அதேவேளை யாப்பின் அகநோக்கையும்அடிப்படைக் கட்டமைப்பையும் மாற்றக்கூடிய திருத்தங்கள் சட்டவிரோதமானவை என்ற தீர்மானத்தை இந்திய உச்ச நீதிமன்று வெளியிட்டது. உச்ச நீதிமன்றின் 13 நீதிபதிகள் எடுத்த மேற்படி தீர்மானத்துக்கு ஆட்சியாளர்கள் வன்மையாக மறுப்புத் தெரிவித்தும் கூடஎவராலும் இதுவரை அதை மாற்ற முடியவில்லை. 
யாப்பின் காவல்தெய்வமாக விளங்கவேண்டியது உச்ச நீதிமன்றின் கடன். அந்த வகையில்இந்திய உச்ச நீதிமன்று அதன் கடமையைச் செவ்வனே ஆற்றியுள்ளது எனவும்எழுத்துப் பிசகாமல் அதன் பொறுப்புகளை நிறைவேற்றியுள்ளது எனவும் கொள்ளலாம்.   

(4) அரசியல்யாப்பை மீறும் நடவடிக்கைகள்
அரசியல்யாப்பை மீறுவதில் பேர்போன நாடுகளின் பட்டியலில் இலங்கையே முதலாவது இடத்தில் இருக்கவேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. இங்கு பற்பல தடவைகள் யாப்பு மீறப்பட்டுள்ளது. எனினும் இங்கு எந்த மீறலையும் மக்கள் வன்மையாக எதிர்க்கவில்லை. 
இலங்கையில் யாப்பை மீறும் நடவடிக்கைளில் இன்னொரு முக்கிய தன்மை புலப்படுகிறது: இங்கு நிறைவேற்றுத்துறையும்நாடாளுமன்றமும்நீதித்துறையும் கூட்டுச்சேர்ந்து யாப்பை மீறியுள்ளன. வேறொரு தன்மையும் இங்கு குறிப்பிடத்தக்கது: அத்தகைய மீறல்களால் விளைந்த தவறுகளையும்திரிவுகளையும் திருத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் இங்கு எடுக்கப்பட்டவில்லை. எமது நாட்டில் நிலவும் அரசியற்பண்பின் அளவை இது நன்கு புலப்படுத்துகிறது. 
1956-ல் சிங்கள ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்டுமுதன்முறையாக யாப்பு மீறப்பட்டது. இனக்குழுமம் அல்லது சமயக்குழுமம் எதற்கும் சாதகமாகவோ  பாதகமாகவோ சட்டம் இயற்றுவதை சோல்பரி யாப்பின் பிரிவு 29 (111) தடைசெய்திருந்தது. தாம் யாப்பை மீறியே ஆட்சிமொழிச் சட்டத்தை இயற்றுகிறோம் என்பதை பேரமைச்சர் பண்டாரநாயக்காவோதலைமைச் சட்டவாளரோசபாநாயகரோ அறியாமல் இருந்திருக்க முடியாது.  
சிங்கள ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு சிங்கள மொழித் தேர்ச்சித் தேர்வில் சித்தி எய்தத் தவறிய கோடீசுவரன் என்னும் தமிழ் எழுதுநர்  சிங்கள ஆட்சிமொழிச் சட்டத்தையும்தனக்குப் பதவியுர்வுகள்சம்பள அதிகரிப்புகள் மறுக்கப்பட்டதையும் தட்டிக்கேட்டு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார். ஓர் அரசாங்க சேவகர் அரசுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கமுடியாதுஆதலால் அவருடைய வழக்கைத் தள்ளவேண்டும் என்று அரச சட்டவாளர் வாதிட்டார். எனினும் மாவட்ட நீதிபதிகோடீசுவரனுக்குச் சார்பாகவே தீர்ப்பளித்தார். ஆனால் தலைமைச் சட்டவாளரோ மாவட்ட நீதிபதியின் தீர்ப்பைத் தட்டிக்கேட்டுஅந்த வழக்கை  மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு கொண்டுபோனார்.  ஈற்றில் மேன்முறையீட்டு நீதிமன்று மாவட்ட நீதிபதியின் தீர்ப்பை நீக்கியது. கோடீசுவரன் தமிழரசுக் கட்சியின் உதவியுடன் தனது வழக்கை கோமறை மன்றுக்கு கொண்டுசென்றார். சிங்கள ஆட்சிமொழிச் சட்டம் யாப்புக்கு மாறானது என்று கோமறை மன்று தீர்ப்பளித்தது. 
கோமறை மன்று தீர்ப்பளித்த பிறகும் கூடயாப்பை மீறி வகுத்த அதே மொழிக் கொள்கை மாற்றப்படவில்லை. மாறாக, 1972-ல் இயற்றப்பட்ட யாப்பிலும் அது சேர்க்கப்பட்டது. ஈற்றில் தவறைத் திருத்தியது ஜே. ஆர். ஜெயவர்த்தனாவே. 1978-ல் இயற்றப்பட்ட யாப்பின் 18-ம், 19-ம்உறுப்புரைகளின் ஊடாக சிங்களத்துக்கும் தமிழுக்கும் ஆட்சிமொழிதேசியமொழி என்னும் இரு  தகுநிலைகளையும்  ஜே. ஆர். வழங்கினார். எவ்வாறாயினும்தமிழ் இளைஞர்கள் தனித் தமிழ் ஈழம் கோரிப் போராடும் நிலைப்பாட்டில் இறங்கிய பின்னரே மேற்படி பிழை திருத்தப்பட்டது! 
தனிச் சிங்களக் கொள்கைக்காக வாதாடிய சிங்களமொழிப் பற்றாளர்கள் ஜே. ஆர். புகுத்திய மாற்றத்தை தட்டிக்கேட்கவில்லை. வேளைக்கே தவறைத் திருத்த முடிந்திருந்தால்வழக்கு நீதிமன்றுக்கு வந்தபொழுது நீதித்துறை அதன் பொறுப்பை நிறைவேற்றியிருந்தால்நீடித்த கிளர்ச்சி மேற்கொள்ளாவாறு தமிழ் இளைஞர்களைத் தடுத்திருக்கலாம். 

(5) ஜே. ஆர். ஜெயவர்த்தனா
அடுத்தபடியாக ஜனாதிபதி ஜெயவர்த்தனாவின் ஆட்சியிலேயே அரசியல்யாப்பு பெருமெடுப்பில் மீறப்பட்டது. நாடாளுமன்றத்தில் தனக்கிருந்த 5/6 பெரும்பான்மையைப் பயன்படுத்தி அதே நாடாளுமன்றத்தின் தவணைக்காலத்தை மேலும் ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் யாப்புத் திருத்தத்தை அவர் நிறைவேற்றினார்.  ஊழல்நிறைந்த ஓர் ஒப்பங்கோடல் ஊடாக அதை அவர்  சாதித்தார். . 
நாட்டை வன்செயலில் ஆழ்த்திய ஒரு முக்கிய காரணியாகயாப்புக்கு மாறான இந்த நடவடிக்கையை நோக்கலாம். ஊழல்நிறைந்த ஒப்பங்கோடலுக்குப் பதிலாகயாப்பில் விதிக்கப்பட்டவாறு ஒரு பொதுத்தேர்தல் நடத்தப்பட்டிருந்தால்மக்கள் விடுதலை முன்னணி (JVP) உட்பட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதித்துவம் அதிகரித்திருக்கும்அதனால் அந்த முன்னணி புரட்சிகர வன்முறைப் பாதையை நோக்கி நகரும் வாய்ப்பு குறைந்திருக்கும்.  
அவ்வாறே வன்முறைப் பாதையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த வடபுல இளைஞர்களின் அரசியல் இயக்கங்களை குடியாட்சிநெறிநின்ற தமிழ் அரசியல் இயக்கங்களினால் தோற்கடிக்க முடிந்திருக்கும். வன்முறைக் கிளர்ச்சியை நாடிய இளைஞர் இயக்கங்களுட் சில  மைய அரசியல் நீரோட்டத்தையும்நாடாளுமன்ற முறைமையையும் நாடியிருக்கும். அந்த வகையில்நாட்டின் தெற்கிலும் வடக்கிலும் எழுந்த பயங்கரக் கிளர்ச்சிகள் இரண்டுக்கும் 4-வது திருத்தமே வித்திட்டது எனலாம்.
யாப்புக்கு மாறான மேற்படி திருத்தத்தை அனுமதித்ததற்கு நீதித்துறையும் பொறுபேற்க வேண்டும்.  ஏழு நீதியரசர்களைக் கொண்ட குழாம் அதை விசாரித்தது. அது  யாப்புக்கு மாறானது என்று தலைமை நீதியரசர் உட்பட மூன்று நீதியரசர்கள் தீர்மானித்தார்கள். ஏனைய நான்கு நீதியரசர்களும் திருத்தத்தை அனுமதித்தார்கள். அது நாட்டை வன்செயலில் ஆழ்த்தியது. யாப்பின் காவல்தெய்வமே அதைக்  கெடுத்த துயரம் அது!

(6) ஆர். பிரேமதாசா
மக்கள் விடுதலை முன்னணி வன்முறைக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த காலத்தில்  ஜனாதிபதிக்கான தேர்தல் வந்தது. 1989ல் நடக்கவிருந்த அத்தேர்தலில் பங்குபற்ற வேண்டாம் என்று மக்களை அது எச்சரித்தது. அதனால் மிகவும் பதட்டமான சூழ்நிலை எழுந்தது. வன்செயல் நிகழ்கையில்குருதி பாய்கையில் தேர்தல் நடந்தது. தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த பலரும் கொல்லப்பட்டார்கள். வாக்களிப்போரின் தொகை பெருவீழ்ச்சி கண்டது. வாக்குச் சாவடிகள் பலவற்றில் வாக்களிப்பு நடக்கவில்லை.     
கிளர்ச்சியாளர்கள் விதித்த தடையைப் பொருட்படுத்தாமல் தேர்தல் நடத்தியதை நல்ல நடவடிக்கை என்று கொள்ளலாம். ஜனாதிபதிக்கான தேர்தலில் பிரேமதாசா  வென்றார்.  அதற்கெதிராக நீதிமன்றில் மனுத்தாகல் செய்யப்பட்டது. நீதித்துறை என்ன தீர்ப்பளிக்கும் என்பதில் பிரேமதாசா மிகுந்த கரிசனை காட்டினார். தேர்தல் மனுவைக் கருத்தில் கொண்ட நீதித்துறைவென்றவரின் தகுநிலையைப் பாதுகாக்கும் நிலைப்பாட்டையே எடுத்ததுவன்முறை நிகழும் சூழ்நிலையில் நடத்தும் தேர்தலை நீதியானநியாயமான தேர்தலாகக் கொள்ள முடியாது என்பதில் அது போதியளவு கவ்னம் செலுத்தியதாகத் தெரியவில்லை.  
வென்றவரின் தகுநிலையைப் பாதுகாக்கும் நிலைப்பாட்டை விடுத்துகிளர்ச்சி தோற்றபின்னர் நிலவிய அமைதியைக் கருத்தில்கொண்டுபுதுக்கத் தேர்தல் நடத்த நீதித்துறை முடிவுசெய்திருந்தால்எவர் தேர்தலில் வென்றாலும்அத்தகைய முடிவினால் நாட்டின் குடியாட்சிக் கட்டுக்கோப்பு வலுப்பெற்றிருக்கும். பிரேமதாசாஅத்துலத்முதலி இருவரும் கொடூரமான படுகொலைக்கு உள்ளாவதையும் ஒருவேளை அது தடுத்திருக்கக் கூடும். அதேவேளை மேற்படி மனுவின்மீது நீதித்துறை எடுத்த முடிபு ஒரு முன்தீர்ப்பாக விளங்குவதால்ஜனாதிபதிக்கு எதிராக மேற்கொண்டு மனுச்செய்து வெல்வது மிகவும் கடினமாகியுள்ளது. 
பிறகு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது நாடாளுமன்ற இருக்கையை இழக்காமல் அரசாங்கத்தில் இணைய இடங்கொடுக்கும் முறைமை தோற்றுவிக்கப்பட்டது. அதை சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் இழைக்கப்பட்ட படுமோசமானபடுபயங்கரமான யாப்புமீறல்களுள் ஒன்று எனலாம். தலைமை நீதியரசர் சரத் நந்த சில்வாவின் ஆதரவுடன் சந்திரிகாவினால் அப்படிச் செய்ய முடிந்தது. ஆட்சி முறையையும்யாப்பையும் திரிவுபடுத்தியாப்பின் அத்திவாரத்துக்கு வெடிவைத்த கொடிய செயல் அது.
இலங்கையின் முதலாவது தலைமை நீதியரசியாகிய சிரானி பண்டாரநாயக்கா சட்டவிரோதமான முறையிலும்கேவலமான முறையிலும் பதவிநீக்கப்பட்டார்நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அவர்மீது விசாரணை நடத்தியதுமேன்முறையீட்டு நீதிமன்று அந்த விசாரணையை நீக்கி ஒரு பதிவேட்டுப் பேராணையைப் பிறப்பித்ததுஅப்பேராணையை தெரிவுக்குழு நிராகரித்ததுமகிந்த ராஜபக்சாவின் ஆட்சிக்காலத்தில் இழைக்கப்பட்ட அறக்கொடிய யாப்புமீறல் என்று  அந்த நிராகரிப்பை எடுத்துக்கொள்ளலாம். இங்கிலாந்தில் அதிகாரபூர்வமான முடியாட்சி நிலவிய காலத்தில் கூட நீதிமன்று பிறப்பித்த பேராணைகளுக்கு மன்னர்கள் மதிப்பளித்தார்கள்.  
யாப்புக்கான 19-வது திருத்தம் எதுவித உறுத்தலுமின்றியாப்பையும் நீதித்துறையின் வழிமுறைகளையும் மீறி இயற்றப்பட்டது. அதை நல்லாட்சிக் காலத்தில் இழைக்கப்பட்ட மிகக்கடுமையான யாப்புமீறல் என்று கொள்ளலாம். நல்லாட்சி அரசு சீனிதடவிய தோட்டாக்களைப் பயன்படுத்தி அரசியல்யாப்பை தீர்த்துக்கட்டியது.  
அவ்வப்பொழுது யாப்புமீறல்கள் மூலம் பாரிய கேடுகள் இழைக்கப்பட்டன. அதன்பிறகு நிறைவேற்றுத்துறையோநாடாளுமன்றமோநீதித்துறையோ அவற்றை ஆராய்ந்துசரிப்படுத்தியதாகத் தெரியவில்லை. அத்தகைய தவறுகள் இழைக்கப்படும்பொழுது அவை ஒதுங்கிவிடுகின்றனஅதன் மூலம் அத்தவறுகள் நிலைநின்றுகெட்டிபட அவை வழிவிடுகின்றன.   
தவறான முன்தீர்ப்புகளுக்கு இட்டுச்செல்லும் சட்டவிரோதமான வழக்குகளையும்யாப்புக்கு மாறான வழக்குகளையும் நிராகரிக்கும் பொறுப்பு நீதித்துறைக்கு உண்டு. எனினும் தலைமை நீதியரசர் எவரும்தலைமைச் சட்டவாளர் எவரும் அதில் நாட்டம் காட்டியதில்லை என்பதைக் கூறத்தான் வேண்டும். அந்த வகையில்இந்த நாடு சீரழிவுக்கும் பேரழிவுக்கும் உள்ளாகி வருவதில் நிறைவேற்றுத்துறைநாடாளுமன்றம்நீதித்துறை ஆகிய அதிகாரத் தூண்கள் மூன்றுக்கும் சரிநிகர் பொறுப்புண்டு.
_____________________________________________________________________________
Victor Ivan, Foundations of Incivility, Daily FT, 2020-01-25, translated by Mani Velupillai, 2020-02-01.

No comments:

Post a Comment