தாதாபாய் நவரோஜி

 இந்திய பிதாமகர்

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினராய் ஓங்கிய 
முதலாவது ஆசிய கண்டத்தவர்

தாதாபாய் நவரோஜி
(1825-1917)

தினயர் படேல்

1892-ல் ஓர் இந்தியர் எவ்வாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்? அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இன்று எமக்கு எவ்வளவு தூரம் பொருந்துகிறது?
இன்று தாதாபாய் நவரோஜி பலரும் அறியாத பெயர்.
அவர் பிரித்தானிய மக்களவையில் அமர்ந்த முதலாவது ஆசிய கண்டத்தவர் மட்டுமல்ல; காந்தி அடிகளுக்கு முன்னர் இந்தியாவில் ஓங்கிய மிக முக்கிய தலைவர்; உலகளாவிய முறையில் இனவாதத்துக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் எதிராகச் செயற்பட்டவர் என்ற முக்கியத்துவமும் அவருக்கு உண்டு.  
எக்காலத்தையும் விட இக்காலத்தில், இன்றைய உலகளாவிய நெருக்கடிகளிடையே, பெரிதும் நினைவு கூரப்படுவதற்குரிய அருகதையும் அவருக்கு உண்டு.
முற்போக்கு அரசியலின் வலுவுக்கும், அத்தகைய அரசியலை திடசித்தத்துடன் கைக்கொண்டால் வரலாற்றின் மிக இருண்ட அத்தியாயங்களைக் கூட துலக்க முடியும் என்ற நிலைப்பாட்டுக்கும்  அவர் வாழ்வு விறுவிறுப்பான முறையில் சான்று பகர்கிறது.
பம்பாயில், சற்று ஏழ்மைக்குள் பிறந்தவர் நவரோஜி. பொது இலவச பாடசாலைக் கல்வி எனப்பட்ட ஒரு புதிய பரீட்சார்த்த திட்டத்தின் துவக்கத்திலேயே அவர் பயனடைந்தவர். தான் பயின்ற கல்விக்கான தார்மீக கடனைத் தீர்ப்பதற்கு பொதுத்தொண்டு ஆற்றுவதே தலைசிறந்த வழி என்று நம்பியவர்.
பெரிதும் இகழ்ச்சிக்கு உள்ளாகிய முற்போக்கான குறிக்கோள்களுக்காக அவர் இளவயது முதலே போராடி வந்தார்.
1840-களின் பிற்கூறில் இந்திய மகளிர்க்கான பாடசாலைகளைத் திறந்து இந்திய வைதீக சமயத்தவர்களின் சீற்றத்துக்கு ஆளானார். எனினும் விடாது முயன்று அபிப்பிராய அலையைத் திசைதிருப்பும் திறம் படைத்திருந்தார்.
ஐந்து ஆண்டுகளுக்குள் பம்பாய் மகளிர் பாடசாலைகளில் மாணவிகள் நிரம்பி வழிந்தனர். ஆதலால் பாடசாலைகளில் அனுமதிக்கப்படுவதற்கான தராதரத்தை அவர் உயர்த்தினார். அதேவேளை பால்படு சமத்துவத்தை நாடிக் கோரிக்கை விடுத்தார். “இந்த உலகில் ஆண் துய்க்கும் உரிமைகள், சலுகைகள், கடமைகள் அனைத்தையும் துய்க்கும் உரிமை பெண்ணுக்கும் உண்டு என்பதை இந்தியர்கள் என்றோ ஒருநாள் புரிந்துகொள்வார்கள்” என்று முழங்கினார்.
1855-ல் நவரோஜி பிரித்தானியாவுக்கு தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டார்.
அங்கு அவர் கண்ட செல்வமும் செழிப்பும் அவரை முற்றிலும் வியக்க வைத்தன. தனது தாயகம் மிகவும் வறுமைப்பட்டிருக்க என்ன காரணம் என்று சிந்தித்தார்.
அதனை அடுத்து அவர் மேற்கொண்ட பொருளாதார ஆய்வுகள் இருபது ஆண்டுகளாக நீடித்தன. அத்தகைய பொருளாதார ஆய்வுகளின் முன்னோடி அவரே. அவற்றைக் கொண்டு பிரித்தானிய பேரரசின் அதிபுனித விழலை, அதாவது தன்னால் கட்டியாளப்படும் மக்களை ஏகாதிபத்தியம் வளங்கொழிக்க வைக்கிறது என்ற கருத்தை, அவர் மறுத்துரைத்தார்.   
அதற்கு நேரெதிர்மாறான கருத்தே உண்மை என்பதை எண்ணிறந்த ஆய்வுகளின் மூலம் எண்பித்தார்.
பிரித்தானிய ஆட்சி இந்தியாவை பஞ்சத்தில் ஆழ்த்தி, அதன் குருதியை உறிஞ்சி சாகடிப்பதாக அவர் வாதிட்டார்.  அது கேட்டுச் சீறியெழுந்த பிரித்தானியர் பலர் நவரோஜியை ஒரு கலகக்காரர் என்றும், விசுவாசமற்றவர் என்றும் சாடினார்கள். கட்டியாளப்படும் ஒரு குடிமகன் அவ்வாறு பகிரங்கமாக வாதிட முடிந்ததை அவர்களால் நம்பவே முடியவில்லை.     
அதேவேளை கட்டியாளும் சிந்தனைக்கு எதிரான அவரது முன்னோடி ஆய்வுகளால் பிறர் பயனடையவே செய்தனர்.
கட்டியாளப்படும் நாடுகளின் செல்வத்தை ஏகாதிபத்தியம் சூறையாடுவது குறித்து அவர் தெரிவித்த கருத்து ஐரோப்பிய சமூகவுடமைவாதிகள் மீதும், வில்லியம் ஜெனிங்ஸ் பிரையன் போன்ற அமெரிக்க முற்போக்குவாதிகள் மீதும், ஒருவேளை காழ் மார்க்சின் மீதும் கூட ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதாய் அமைந்தது. இந்திய மகளிர் கல்வியில் நிகழ்ந்தது போல், இந்த விடயத்திலும் அபிப்பிராய அலை திசைதிரும்புவதற்கு நவரோஜி துணைநின்றார்.
ஏனைய விடயங்கள் அனைத்தையும் விட இந்திய வறுமையை பெரிதும் முன்னிறுத்தியே நவரோஜி தமது நாடாளுமன்ற அரசியற் பரப்புரையை மேற்கொண்டார்.
பிரித்தானியாவால் கட்டியாளப்படும் குடிமகன் என்ற வகையில், அவர் பிரித்தானியாவில் மட்டுமே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியும்.
அயர்லாந்திய தேசியவாதிகள் சிலரின் முன்மாதிரியைப் பின்பற்றி இந்தியர்களும் பிரித்தானிய நாடாளுமன்றத்திலேயே அரசியல் மாற்றம் நாடி கோரிக்கை விடுக்க வேண்டும் என்று கருதினார். இந்தியாவில் அத்தகைய வாய்ப்புகள் இல்லை. ஆகவே 1886ல் கால்போண் (Holborn) என்ற பிரித்தானிய தேர்தல்தொகுதியில் தமது முதலாவது பரப்புரையை அவர் மேற்கொண்டார்.  தேர்தலில் அவர் படுதோல்வி அடைந்தார்.
ஆனாலும் நவரோஜி தமது முயற்சியைக் கைவிடவில்லை. அடுத்த சில ஆண்டுகளில் இந்திய தேசியவாதத்துக்கும், பிரித்தானியாவில் இயங்கிய முற்போக்கு இயக்கங்கள் பலவற்றுக்கும் இடையே இணைப்புகளை ஏற்படுத்தினார். பெண்களுக்கு வாக்குரிமை கேட்டு முழங்கினார்.
அயர்லாந்தக்கு சுயாட்சி கோரி வாதிட்டார். அவர் அயர்லாந்திலிருந்தே பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடும் என்று கொள்ளத்தக்க சூழ்நிலை கூட உருவாகியது. முதலாளித்துவத்தை சாடினார். தொழிலாளிகளுக்கு முற்றுமுழுதான உரிமைகள் கோரினார். தொழிலாளர்களுடனும் சமூகவுடமைவாதிகளுடனும் தோழமை பூண்டார்.
தனது விடாமுயற்சியை மட்டுமே கொண்டு, இந்தியாவுக்கு அவசர சீர்திருத்தம்  வேண்டும் என்பதை – பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்பதை, தொழிலாளிகளுக்கு எட்டு மணித்தியால வேலை வேண்டும் என்பதை பலதரப்பட்ட பிரித்தானியரும் ஏற்றுக்கொள்ளும்படி செய்தார். தொழிலாளிகள், தொழிற்சங்க தலைவர்கள், உழவர்கள், பெண்ணியவாதிகள், குருமாரிடமிருந்து அவருக்கு ஆதரவு மடல்கள் வந்து குவிந்தன.
ஓர் இந்தியர் நாடாளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பையிட்டு எல்லா பிரித்தானியரும் மகிழ்ச்சி அடையவில்லை. அவரை ஒரு வந்தான்வரத்து (carpetbagger) என்றும் பட்டிக்காட்டான் (Hottentot) என்றும் சிலர் பழித்தார்கள்.
நவரோஜி என்பவர் “ஓர் ஆங்கிலேயனின் வாக்கினைப் பெறும் அருகதையற்ற கருப்பர்” என்று ஆனானப்பட்ட பிரித்தனிய பிரதமர் சலிஸ்பரி பிரபுவே ஏளனம் பண்ணினார். 
ஆனாலும் தனக்கு பருமட்டாகப் போதுமானளவு வாக்காளர்களின் ஆதரவை அவர் ஈட்டிக்கொண்டார்.  
1892-ல் இலண்டன் மத்திய பின்ஸ்பெரி (Finsbury) தொகுதியிலிருந்து ஐந்தே ஐந்து பெரும்பான்மை வாக்குகளால் அவர் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார். அதனை அடுத்து தாதாபாய் குறும்பான்மை (Dadabhai Narrow-majority) என்று அவர் பட்டம் தொலிக்கப்பட்டார்.
நாடாளுமன்றம் சென்ற கையோடு தனது நிலைப்பாட்டை அவர் முன்வைத்தார்.  
பிரித்தானிய ஆட்சி “தீயது” என்றும், அது தமது இந்திய உடன்பிறப்புகளை அடிமைப்படுத்டும் விசை என்றும் முழங்கினார். கட்டியாளும் அதிகாரபீடத்தை சீரமைத்து, அதை இந்தியர்களின் கையில் ஒப்படைப்பதற்கான சட்டங்கள் ஆக்கப்படவேண்டும் என்று வாதாடினார்.
நவரோஜியின் முயற்சிகள் பயனளிக்கவில்லை. நாடாளமன்ற உறுப்பினர்கள் அவரது மன்றாட்டங்களை பெரிதும் புறக்கணித்தார்கள். 1895 தேர்தலில் அவர் தோல்வியடைந்தார்.
நவரோஜியின் மிக இருண்ட காலம் அது.
1890-களின் பிற்கூறிலும், 1900-களின் முற்கூறிலும் இந்திய உபகண்டத்தில் பிரித்தானியரின் ஆட்சி மேலும் கொடூரமாகியது. பஞ்சமும், கொள்ளைநோயும் இலட்சக்கணக்கான மக்களை பலிகொண்டன. தமது குறிக்கோளுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுவிட்டதாக இந்திய தேசியவாதிகள் பலரும் எண்ணினார்கள்.
எனினும் நவரோஜி தமது நம்பிக்கையை தளரவிடவில்லை. இன்னும் முற்போக்கான தரப்புகளை–ஆரம்பகால தொழிற்கட்சி வாதிகள், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான அமெரிக்கர், பிரித்தானிய கருப்பின வினைஞர்களை-அரவணைத்து தமது கோரிக்கைகளை அவர் முன்னெடுத்தார்.
அதன்பிறகு இந்தியாவுக்கு அவர் சுயாட்சி கோரினார். கட்டியாளுவோரின் கொள்ளையடிப்புக்கு அது ஒன்றே மாற்றுமருந்து என்று முழங்கினார்.
ஏகாதிபத்திய தீவினையால் இந்தியாவுக்கு நேர்ந்த இழப்புக்கு சுயாட்சி ஒன்றே ஈடாகும்  என்று பிரித்தானிய பிரதமர் ஹென்றி கம்பெல் பனமனிடம் அவர் தெரிவித்தார்.  
இக்கூற்றுகளும் கருத்துகளும் உலகம் முழுவதும் எதிரொலித்தன. ஐரோப்பிய சமூகவுடைமைவாத தரப்புகளும், ஆபிரிக்க-அமெரிக்க ஊடகங்களும், தென் ஆபிரிக்காவில் காந்தி அடிகளின் தலைமையில் இயங்கிய இந்திய அணிகளும் அவற்றை வரவேற்றன.
சுயாட்சி என்பது ஒரு துணிகரமான கோரிக்கை. மானுட வரலாற்றிலேயே அதிவலுபடைத்த பேரரசிடமிருந்து அடிமைப்பட்ட மக்கள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவது எங்ஙனம்?
நவரோஜி தமது குணவியல்பின்படி தளரா நம்பிக்கையோடு செயற்பட்டார்.  
தாம் மேற்கொண்ட அரசியற்பணியில் தாம் எதிர்கொண்ட ஏமாற்றங்களை-“எந்த இதயத்தையும் தகர்த்து, எவரையும் உளமுறிவுக்கு மட்டுமல்ல கலகத்துக்கே இட்டுச்செல்லப் போதிய ஏமாற்றங்களை”-தமது 81-வது வயதில் ஆற்றிய ஓர் உரையில் அவர் ஒப்புக்கொண்டார்.
எனினும் விடாமுயற்சி, திடசித்தம், முற்போக்கு கருத்துக்களில் நம்பிக்கை என்பனவே அவரது மெய்யான தெரிவுகளாய் அமைந்தன. “நாங்கள் முன்னகரும் ஒவ்வொரு கட்டத்திலும் தகுந்த வழிவகைகளைக் கையாளலாம். ஆனால் இறுதிவரை நாம் விடாது முயலவேண்டும்” என்று இந்திய தேசிய பேரவை உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.
அத்தகைய கூற்றுக்கள் இன்றைய அரசியல் விவாதங்களில் எத்தகைய தாக்கத்தை விளைவிக்கக் கூடும்?
ஒரு நூற்றாண்டுக்கு மேல் கழிந்த இக்காலப்பகுதியில்-மக்களீர்வாதமும்,  கடுத்த எதேச்சாதிகாரமும்,  தடித்த கட்சிச்சார்பும் ஓங்கிய இக்காலப்பகுதியில்-நவரோஜியின் உணர்வலைகள் வெகுளித்தனமானவையாக, ஒரு நூதனமான காலவழுவாகப் புலப்படக்கூடும்.  
இன்றைய காலகட்டம் அறவே  வேறுபட்டது.
இன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஆசிய கண்டத்தவர்களை கூட்டிக் கழித்து இப்படிக் கூறலாம்: பிரித்தானியாவின் ஏகாதிபத்திய வரலாறு பற்றிய குழப்பமான கண்ணோட்டங்கள் கொண்டு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என்று முரண்டுபிடித்தவர்கள் அவர்களுள் அடங்கியிருக்கிறார்கள் என்று கூறலாம்.
இந்து தேசியவாதம் இந்தியாவை இன்று பீடித்துள்ளது. அது இந்தியாவின் அத்திவார நெறிகளுக்கு–நவரோஜியின் துணையுடன் பொறிக்கப்பட்ட நெறிகளுக்கு முற்றிலும் எதிர்மாறானது.
விரிவான ஆய்வுகளை பொறுமையோடு மேற்கொண்டு தனது அரசியல் திட்டத்தை முன்வைத்த நவரோஜி, இன்று போலிச் செய்திகளுடனும், பொய்த் தரவுகளுடனும் இழுபட்டு மிதக்கும் இவ்வுலகை எவ்வாறு புரிந்துகொள்வார் என்பதைக் கற்பனைசெய்தே பார்க்க முடியாது.
எனினும் அவரது பணியை அணிசெய்த விடாமுயற்சி, எதிர்நீச்சல், முன்னேற்றத்தில் நம்பிக்கை என்பன எமக்கு வழிகாட்ட வல்லவை.
1900-களின் முற்கூறில் நவரோஜி பகிரங்கமாக சுயாட்சி கோரத் துவங்கியபொழுது, அதை எய்த குறைந்தது 50 முதல் 100 ஆண்டுகள் வரை பிடிக்கும் என்று எதிர்பார்த்தார்.
அப்பொழுது பிரித்தானிய பேரரசு அதன் உச்சத்தில் இருந்தது. சுயாட்சி போன்ற உயரிய குறிக்கோள்களைக் கருத்தில்கொள்ள முடியாவாறு பெரும்பாலான இந்தியர்கள் ஏழ்மையிலும் பட்டினியிலும் உழன்ற காலம் அது.
தமது பேரப்பிள்ளைகள் சுதந்திர இந்தியாவில் வாழ்ந்துகொண்டு, பிரித்தானிய பேரரசு சேடம் இழுப்பதை தொலைவிலிருந்து செவிமடுப்பர் என்பதை அவர் உணர்ந்திருந்தால் வியந்திருப்பார்!
சில முக்கிய பாடங்கள்: பேரரசுகள் விழும்; தனியாட்சியாளரின் பதவிக்காலம் மட்டுப்பட்டது; மக்கள் கருத்து சடாரெனத் திரும்பும்.
இன்று வலதுசாரி மக்களீர்வாதமும் எதேச்சாதிகாரமும் ஓங்கியிருக்கலாம். ஆனாலும், நெடுங்காலக் கண்ணோட்டத்தைக் கைக்கொள்ளுமாறு நவரோஜி எமக்கு மதியுரைத்தாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.
முற்போக்கான குறிக்கோள்களில் நம்பிக்கை வைக்குமாறு, குறிப்பாக விடாமுயற்சி எடுக்குமாறு எம்மை அவர் ஊக்குவித்ததாகவும் கொள்ளலாம்.
விடாமுயற்சியும், திடசித்தமும் முற்றிலும் எதிர்பாரா பெறுபேறுகளை ஈயக்கூடும்–ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் ஓர் இந்தியர் பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் வெற்றி ஈட்டியதை விடவும் சிறந்த எதிர்பாரா பெறுபேறுகளை ஈயக்கூடும்.
__________________________________________
Dinyar PatelNaoroji: Pioneer of Indian Nationalism, Harvard University Press and HarperCollins India, May 2020; BBC, 2020-07-05, translated by Mani Velupillai, 2020-07-06.

No comments:

Post a Comment