உலக மனித உரிமைப் பிரகடனம்
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை
1948-12-10
உலக மனித உரிமைப் பிரகடனம் என்பது மனித உரிமை வரலாற்றில் ஒரு மைற்கல்லைக் குறிக்கும் ஆவணம். உலகின் எல்லாப் பிராந்தியங்களையும் சேர்ந்த வெவ்வேறு சட்டவியல், பண்பாட்டியல் பிற்புலங்களையும் கொண்ட பிரதிநிதிகளால் வரையப்பட்ட இப்பிரகடனத்தை, அனைத்து மக்களும் நாடுகளும் எய்துவதற்கான நியமமாக 1948 திசம்பர் 10ம் திகதி ஐ. நா. பொதுச்சபை அறிவித்தது (பொதுச்சபை தீர்மானம் 217 அ). உலகம் முழுவதும் பாதுகாக்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகளை இது எடுத்தியம்புகிறது. 500க்கு மேற்பட்ட மொழிகளில் இது பெயர்க்கப்பட்டுள்ளது. 70க்கு மேற்பட்ட மனித உரிமைப் பொருத்தனைகளுக்கு இது வித்திட்டு, வழிவகுத்துள்ளது. இன்று உலக வாரியாகவும், பிராந்திய வாரியாகவும் நிலைபெற்ற முறையில் இது கையாளப்பட்டு வருகிறது.
முகவுரை
மனித குடும்பத்தவர்கள் அனைவரதும் உள்ளார்ந்த மானத்தையும், சரிநிகரான, களையவொண்ணா உரிமைகளையும் அங்கீகரிப்பதே உலகில் சுதந்திரமும், நீதியும் அமைதியும் நிலைபெறுவதற்கு அடிப்படை. ஆதலால்;
மனித உரிமைகளைப் புறக்கணிப்பதாலும், வெறுத்தொதுக்குவதாலும் காட்டுமிராண்டித்தனமான செயல்கள் விளைகின்றன. அவை மனிதகுலத்தின் உளச்சான்றை உறுத்தியுள்ளன. மனிதர்கள் அச்சமோ மிடியோ இன்றி பேச்சுச் சுதந்திரம், நம்பிக்கைச் சுதந்திரம் என்பவற்றைத் துய்க்கும் உலகம் ஒன்றின் வரவு என்பது பொதுமக்களின் உச்ச வேட்கை என்று விளம்பப்பட்டுள்ளது. ஆதலால்;
கொடுங்கோன்மைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான இறுதி முயற்சியாக கிளர்ச்சியில் ஈடுபட எவரையும் நிர்ப்பதிக்கக்கூடாது என்றால், மனித உரிமைகளை சட்ட ஆட்சியின் மூலம் பாதுகாப்பது அத்தியாவசியம். ஆதலால்;
நாடுகளுக்கு இடையே நட்புறவை மேம்படுத்துவது அத்தியாவசியம். ஆதலால்;
அடிப்படை மனித உரிமைகள், மனிதரின் மானம், பெறுமதி, ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரிநிகர் உரிமைகள் என்பவற்றின் மீது தாம் கொண்டுள்ள பற்றுறுதியை ஐக்கிய நாடுகளின் மக்கள் அதன் சாசனத்தின் ஊடாக மீளவும் உறுதிப்படுத்தியுள்ளனர்; சமூக முன்னேற்றத்தையும், பரந்துபட்ட சுதந்திரத்துடன் கூடிய நல்வாழ்வு நியமங்களையும் மேம்படுத்தவும் அவர்கள் உறுதிபூண்டுள்ளனர். ஆதலால்;
மனித உரிமைகளுக்கும் அடிப்படைச் சுதந்திரங்களுக்கும் உலகளாவிய மதிப்பு மற்றும் அவற்றுக்கு அமைந்தொழுகும் தன்மை என்பவற்றை மேம்படுத்தும் இலக்கை எய்துவதில் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் ஒத்துழைக்க அங்கத்துவ அரசுகள் உறுதிபூண்டுள்ளன. ஆதலால்;
இந்த உறுதியை முற்றிலும் நிறைவேற்றுவதற்கு மேற்படி உரிமைகளையும், சுதந்திரங்களையும் பொதுமக்கள் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். ஆதலால்;
இப்பொழுது
பொதுச்சபை
இந்த உலக மனித உரிமைப் பிரகடனத்தை எல்லா மக்களும் நாடுகளும் எய்துவதற்கான பொது நியமம் என்றும், சமூகத்தில் ஒவ்வொருவரும், ஒவ்வொரு தரப்பினரும் இப்பிரகடனத்தை என்றென்றும் உள்ளத்துள் இருத்தி, புகட்டி, கற்பிக்கப் பாடுபடுவதன் மூலம் மேற்படி உரிமைகளுக்கும், சுதந்திரங்களுக்கும் மதிப்புக் கிடைக்கும் விதமாக அவற்றை மேம்படுத்த வேண்டிய நியமம் என்றும், மற்றும் தேசிய, சர்வதேசிய முற்போக்கு நடவடிக்கைகள் மூலம் அவற்றுக்கு அங்கத்துவ அரசுகளின் மக்களிடையேயும், அவற்றின் நியாயாதிக்கத்துக்கு உட்பட்ட ஆள்புலங்களின் மக்களிடையேயும் உலகளாவிய முறையிலும், திட்பமான முறையிலும் அங்கீகாரம் ஈட்டிக்கொடுக்க வேண்டிய நியமம் என்றும் பிரகடனம் செய்கின்றது.
உறுப்புரை 1
எல்லா மனிதர்களும் சுதந்திரமாகவும், சரிநிகர் மானத்துடனும் உரிமைகளுடனும் பிறந்தவர்கள்; பகுத்தறிவும் உளச்சான்றும் படைத்தவர்கள்; ஒருவருடன் ஒருவர் சகோதர உணர்வுடன் உறவாட வேண்டியவர்கள்.
உறுப்புரை 2
இனம், நிறம், பால், மொழி, சமயம், அரசியல் கண்ணோட்டம் அல்லது வேறு கண்ணோட்டம், தேசிய அல்லது சமூகத் தோற்றுவாய், உடமை, பிறப்பு, அல்லது வேறு தகுநிலை போன்ற வேறுபாடு எதுவுமின்றி அனைவரும் இப்பிரகடனத்தில் எடுத்துரைக்கப்பட்ட உரிமைகள், சுதந்திரங்கள் அனைத்துக்கும் உரித்துடையவர்கள். மேலும் ஒருவரது நாடு அல்லது ஆள்புலம் சுதந்திரமானதோ, பொறுப்பாண்மைக்கு உட்பட்டதோ, தன்னாட்சி அற்றதோ, வேறு விதமாக மட்டுப்பட்ட இறைமைக்கு உட்பட்டதோ எதுவாயினும் அதன் அரசியல் தகுநிலை, நியாயாதிக்க தகுநிலை, சர்வதேய தகுநிலை எனப்படும் எந்த அடிப்படையிலும் அவருக்கு வேறுபாடு காட்டலாகாது.
உறுப்புரை 3
ஒவ்வொருவருக்கும் வாழவும், சுதந்திரம் துய்க்கவும், தன்னைக் காக்கவும் உரிமை உண்டு.
உறுப்புரை 4
எவரையும் அடிமைத்தளைக்கு அல்லது தொழும்புக்கு உட்படுத்தலாகாது. எல்லா விதமான அடிமைத்தளையும் தொழும்பும் தடைசெய்யப்பட வேண்டும்.
உறுப்புரை 5
எவரையும் சித்திரவதைக்கு அல்லது கொடிய, மனிதாபிமானமற்ற, இழிவுபடுத்தும் செயலுக்கு அல்லது தண்டனைக்கு உட்படுத்தலாகாது.
உறுப்புரை 6
சட்டத்தின் முன்னிலையில் எங்கும் எவர்க்கும் ஓர் ஆள் என்று அங்கீகரிக்கப்படும் உரிமை உண்டு.
உறுப்புரை 7
சட்டத்தின் முன் அனைவரும் சரிநிகரானவர்கள். அவர்கள் எவ்வித பாரபட்சமும் இன்றி சட்டத்தின் சரிநிகரான பாதுகாப்புக்கு உரித்துடையவர்கள். இப்பிரகடனத்துக்கு மாறாக எவ்வித பாரபட்சமும் இன்றி சரிநிகரான பாதுகாப்புக்கு அவர்கள் உரித்துடையவர்கள். அத்தகைய பாரபட்சதுக்கு உட்படுத்தும்படி தூண்டும் நிலைப்பாட்டுக்கு எதிராக சரிநிகரான பாதுகாப்புக்கு உரித்துடையவர்கள்.
உறுப்புரை 8
அரசியல் யாப்பினால் அல்லது சட்டத்தால் தனக்கு அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறப்படுமிடத்து, தகுதிவாய்ந்த தேசிய தீர்ப்பாயங்களின் திட்பமான பரிகாரத்தை பெறும் உரிமை ஒவ்வொருவருக்கும் உன்டு.
உறுப்புரை 9
எவரையும் விதிமுறையற்ற கைதுக்கு அல்லது, தடுத்துவைப்புக்கு அல்லது நாடுகடத்தலுக்கு உட்படுத்தலாகாது.
உறுப்புரை 10
தனது உரிமைகள், கடப்பாடுகள், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எவற்றையும் தீர்மானிப்பதில் முற்றிலும் சரிநிகரான, செவ்விய, பகிரங்க விசாரணைக்கு உள்ளாகும் உரித்து ஒவ்வொருவருக்கும் உண்டு.
உறுப்புரை 11
தண்டனைக்குரிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் எவரும், தனது பதில்வாதத்துக்கு வேண்டிய உத்தரவாதங்கள் அனைத்துடனும் கூடிய பகிரங்க விசாரணை ஒன்றில் சட்டப்படி குற்றவாளி என எண்பிக்கப்படும் வரை நிரபராதி எனக் கொள்ளப்படும் உரிமை உடையவர்.
தேசிய அல்லது சர்வதேச சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகாத செயல் ஒன்றைப் புரிந்த வேளையில், அதைப் புரிந்ததற்காக அல்லது புரியாததற்காக எவரும் குற்றவாளி என்று கொள்ளப்படலாகாது. தண்டனைக்குரிய குற்றம் புரியப்பட்ட வேளையில் செல்லுபடியான தண்டத்தை விஞ்சிய தண்டம் விதிக்கப்படலாகாது.
உறுப்புரை 12
விதிமுறையின்றி ஒருவரது அந்தரங்கம், குடும்பம், வீடு, கடிதத்தொடர்பு எதிலும் தலையிடவோ, அவரது மானத்துக்கு அல்லது நற்பெயருக்கு பங்கம் விளைவிக்கவோ கூடாது. அத்தகைய தலையீட்டுக்கு அல்லது பங்கத்துக்கு உள்ளாகாவாறு சட்டத்தின் பாதுகாப்பை பெற்றுக்கொள்ளும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.
உறுப்புரை 13
ஒவ்வோர் அரசினதும் எல்லைக்குள் நடமாடும் சுதந்திரமும், வசிக்கும் சுதந்திரமும் ஒவ்வொருவருக்கும் உண்டு.
தனது சொந்த நாடு உட்பட எந்த நாட்டையும் விட்டு வெளியேறும் உரிமையும், தனது நாட்டுக்கு மீளும் உரிமையும் ஒவ்வொருவருக்கும் உண்டு.
உறுப்புரை 14
கொடுமைக்கு உள்ளாகாவாறு பிறநாடுகளில் தஞ்சம் கோரிப் பெறும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.
அரசியல் சாராத குற்றங்களிலிருந்து அல்லது ஐ. நா.வின் நோக்கங்களுக்கும், நெறிகளுக்கும் மாறான செயல்களிலிருந்து எழும் நேரிய வழக்குத்தொடுப்புகளைக் குறித்து இந்த உரிமையைக் கோரலாகாது.
உறுப்புரை 15
ஒவ்வொருவருக்கும் தேசிய உரிமை உண்டு.
ஒருவரது நாட்டுரிமையை விதிமுறையின்றிக் களையவோ, தனது நாட்டுரிமையை மாற்றும் உரிமையை அவருக்கு மறுக்கவோ கூடாது.
உறுப்புரை 16
இனத்தால், நாட்டுரிமையால், சமயத்தாலான வரம்பு எதுவுமின்றி முதிர்ந்த ஆண்களும் பெண்களும் மணம்புரிந்து குடும்பம் அமைக்க உரிமை உண்டு. திருமண விடயத்திலும், மணவாழ்வின் பொழுதும், மணக்குலைவின் பொழுதும் அவர்களுக்கு சரிநிகர் உரிமைகள் உண்டு.
வாழ்க்கைத் துணைவர்களாக மாற எண்ணுவோரின் சுதந்திரமான, முழு இசைவுடன் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும்.
குடும்பமே சமூகத்துன் இயற்கையான, அடிப்படையான குழும அலகு. அது சமூகத்தாலும் அரசினாலும் காக்கப்படும் உரித்துடையது.
உறுப்புரை 17
தனித்தும், பிறருடன் சேர்ந்தும் சொத்து வைத்திருக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. எவரது சொத்தையும் விதிமுறையின்றிக் களையலாகாது.
உறுப்புரை 18
ஒவ்வொருவருக்கும் சிந்தனைச் சுதந்திரம், உளச்சான்றுச் சுதந்திரம், சமய சுதந்திரம் துய்க்க உரிமை உண்டு. தனது சமயத்தை அல்லது நம்பிக்கையை மாற்றிக்கொள்ளும் சுதந்திரமும், தனித்தோ பிறருடன் சேர்ந்தோ, பகிரங்கமாகவோ அந்தரங்கமாகவோ தனது சமயத்தை அல்லது நம்பிக்கையை போதனையிலும், நடைமுறையிலும், வழிபாட்டிலும், அனுசரிப்பிலும் வெளிப்படுத்தும் உரிமையும் இதனுள் அடங்கும்.
உறுப்புரை 19
ஒவ்வொருவருக்கும் கருத்துச் சுதந்திரமும் பேச்சுச் சுதந்திரமும் உண்டு. தலையீடின்றியும், எல்லைகளைப் பொருட்படுத்தாமலும், எந்த ஊடகத்தின் மூலமாகவும், தகவல் நாடி, பெற்று, புகட்டும் உரிமை இதனுள் அடங்கும்.
உறுப்புரை 20
அமைதியாகக் குழுமிச் செயற்படும் சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உண்டு.
ஒரு குழுமத்தில் சேரும்படி எவரையும் நிர்ப்பந்திக்கலாகாது.
உறுப்புரை 21
தனது நாட்டின் அரசாங்கத்தில் நேர்முகமாகவோ சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஊடாகவோ பங்குபற்றும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.
தனது நாட்டின் அரசாங்க சேவையில் சரிநிகரக அமரும் வாய்ப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு.
மக்களின் விருப்பே அரசாங்க அதிகாரத்தின் அடிப்படையாதல் வேண்டும். அந்த விருப்பு அவ்வப்பொழுது நடத்தப்படும் நேரிய தேர்தல்கள் மூலம் வெளிப்படுத்தப்படல் வேண்டும். அனைவரும் சரிநிகர் வாக்குரிமை கொண்டு அந்தரங்கமாக வாக்களிக்க வேண்டும். அல்லது அதற்கு நிகரான சுதந்திர வாக்களிப்பு முறைமைகளின்படி வாக்களிக்க வேண்டும்.
உறுப்புரை 22
சமூகத்தில் அங்கம் வகிப்பவர் என்ற வகையில் ஒவ்வொருவருக்கும் சமூகநல உதவிப்படி பெறும் உரிமை உண்டு. தேசிய அரச முயற்சி அல்லது சர்வதேய ஒத்துழைப்பு மூலம், ஒவ்வோர் அரசின் ஏற்பாட்டுக்கும் வளங்களுக்கும் அமைய தனது மானத்துக்கும், சுதந்திர ஆளுமை விருத்திக்கும் இன்றியமையாத பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகளை எய்தும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.
உறுப்புரை 23
ஒவ்வொருவருக்கும் வேலைசெய்யவும், வேலையை சுதந்திரமாகத் தெரிவுசெய்யவும், நியாயமான மற்றும் அனுகூலமான வேலைச் சூழ்நிலையையும் பெற்றுக்கொள்ளவும், வேலையின்மையிலிருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்ளவும் உரிமை உண்டு.
பாரபட்சமின்றி சரிநிகரான வேலைக்கு சரிநிகரான சம்பளம் பெறும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.
தானும் தனது குடும்பமும் மனித மானத்துடன் வாழ்வதற்கு ஏதுவாக நியாயமான, அனுகூலமான ஊதியத்தையும், தேவைப்பட்டால் மேலதிகமாக வேறு சமூக பாதுகாப்பையும் பெற்றுக்கொள்ளும் உரிமை வேலைசெய்யும் ஒவ்வொருவருக்கும் உண்டு.
தனது நலன்களைப் பாதுகாப்பத்ற்காக தொழிற்சங்கங்களை அமைக்கவும், அவற்றில் இணையவும் ஒவ்வொருவருக்கும் உண்டு.
உறுப்புரை 24
நியாயமான வேலைநேர வரம்புகளுடனும், அவ்வப்பொழுது சம்பளத்துடன் கூடிய விடுமுறைகளுடனும் ஓயவும், திளைக்கவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.
உறுப்புரை 25
தானும் தனது குடும்பமும் உணவு, உடை, உறையுள், மருத்துவ பராமரிப்பு, தேவையான சமூகநல சேவைகள் உட்பட நலமும் சேமமும் கொண்டு வாழ்வதற்குப் போதிய தராதரத்தைப் பெற்றுக்கொள்ளும் உரிமையும்; வேலையின்மை, சுகயீனம், மாற்றுத்திறன், கைம்மை, மூப்பு, தவிர்க்கமுடியாத காரணங்களால் மற்றும் பிற வாழ்வாதாரம் எதையும் இழக்கும் சூழ்நிலைகளில் பாதுகாப்பு பெற்றுக்கொள்ளும் உரிமையும் ஒவ்வொருவருக்கும் உண்டு.
தாய்மையும் சேய்மையும் சிறப்புப் பராமரிப்பும் துணையும் பெற உரித்துடையவை. பெற்றோர் மணம் புரிந்தவராயினும், புரியாதவராயினும் எல்லாப் பிள்ளைகளும் சரிநிகரான சமூகப் பாதுகாப்பினைத் துய்த்தல் வேண்டும்.
உறுப்புரை 26
கற்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. தொடக்கக் கல்வியும் அடிப்படைக் கல்வியுமாவது இலவசமாக அளிக்கப்படல் வேண்டும். தொடக்கக் கல்வி கட்டாயம் அளிக்கப்படல் வேண்டும். தொழினுட்பக் கல்வியும், துறைசார் கல்வியும் பொதுவில் கிடைக்கச்செய்ய வேண்டும். தகுதிப்படி அனைவரும் சரிநிகராக உயர்கல்வி கற்க வகைசெய்ய வேண்டும்.
மனித ஆளுமை முழு விருத்தி எய்தும் வண்ணமும், மனித உரிமைகளுக்கும் அடிப்படைச் சுதந்திரங்களுக்கும் உரிய மதிப்பை வலுப்படுத்தும் வண்ணமும் கல்வி புகட்ட வேண்டும். நாடுகள், இனக்குழுமங்கள் சமயக்குழுமங்கள் அனைத்துக்கும் இடையே புரிந்துணர்வையும், சகிப்புணர்வையும், நட்புணர்வையும் அது மேம்படுத்த வேண்டும். அமைதி பேணும் ஐ. நா. வின் பணிகளை அது முன்னகர்த்த வேண்டும்.
தமது பிள்ளைகளுக்கு புகட்டவேண்டிய கல்வியின் வகையைத் தெரிவுசெய்வதில் பெற்றோருக்கு முன்னுரிமை உண்டு.
உறுப்புரை 27
சமூகத்தின் பண்பாட்டு வாழ்வில் சுதந்திரமாகப் பங்குபற்றி, கலைகளைத் துய்த்து, அறிவியல் சாதனையையும் நன்மைகளையும் பகிர்ந்துகொள்ளும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.
தனது அறிவியல், இலக்கிய, கலைத்துவப் படைப்பு எதன் பெறுபேறாகவும் கிடைக்கும் தார்மீக வளங்களையும் பொருள்வளங்களையும் பாதுகாக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.
உறுப்புரை 28
இப்பிரகடனத்தில் எடுத்துரைக்கப்பட்ட உரிமைகளையும் சுதந்திரங்களையும் முற்றிலும் எய்துவதற்கு ஏதுவான சமூக, சர்வதேய ஒழுங்கினைப் பெற்றுக்கொள்ளும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.
உறுப்புரை 29
எந்தச் சமூகத்தில் தனது ஆளுமை முழு விருத்தி எய்தக்கூடுமோ அந்தச் சமூகத்துக்கு மட்டுமே ஒவ்வொருவரும் கடமைப்பட்டவர்.
ஒவ்வொருவரும் தனது உரிமைகளையும் சுதந்திரங்களையும் கையாள்வதில், பிறரது உரிமைகளுக்கும், சுதந்திரங்களுக்கும் உரிய அங்கீகாரத்தையும் மரியாதையையும் பேணிக்கொள்ளும் நோக்கத்துக்காகவும், ஒரு குடியாட்சிச் சமூகத்தில் நியாயமானளவு ஒழுக்கம், குடியொழுங்கு, பொது நன்னலம் என்பவற்றைப் பேணிக்கொள்ளும் நோக்கத்துக்காகவும் சட்டத்தால் விதிக்கப்பட்ட வரம்புகளுக்கு மட்டுமே அமைந்தொழுக வேண்டும்.
எக்காரணம் கொண்டும் இவ்வுரிமைகளையும் சுதந்திரங்களையும் ஐ. நா. வின் நோக்கங்களுக்கும் நெறிகளுக்கும் மாறாகக் கையாளலாகாது.
உறுப்புரை 30
இங்கு எடுதுரைக்கப்பட்ட உரிமைகள், சுதந்திரங்கள் எவற்றையும் ஒழிக்கும் நோக்குடன் கூடிய எந்தச் செயலையும் எந்த அரசும், குழுமமும், ஆளும் மேற்கொள்ளவோ புரியவோ கூடாது.
____________________________________________________________________
Universal Declaration of Human Rights, UN, translated by Mani Velupillai, 2021-10-02.
https://www.un.org/en/about-us/universal-declaration-of-human-rights
No comments:
Post a Comment