அன்றொரு நாள்:
முற்பகல், தமது வீட்டில் ஒரு சாய்மானப் பலகையில் சரிந்திருக்கிறார் பெரியார். தலைமாட்டில் சம்பத்தும், கால்மாட்டில் மதியழகனும் அமர்ந்திருந்து அன்று வந்த கடிதங்களையும் நாளேடுகளையும் மாறி மாறி வாசிப்பது பெரியாரின் செவிப்பறையில் மோதுகிறது. எனினும் பெரியார் அவற்றை உள்வாங்குவதாகத் தெரியவில்லை. ஒரு கடித உறையின் இடதுபுறத்து மேல்மூலையில் “கந்த முருகேசன், ஈழம்” என்று பொறிக்கப்பட்டிருக்கிறது. மதியழகன் அதனை வாசிக்கத் தலைப்பட்டதும், காதைத் தீட்டுகிறார் பெரியார்:
19...
தந்தை பெரியார் அவர்களே,
நான் நலமாக இருக்கிறேன். உங்கள் நலம், வாழ்க்கைத் துணை நலம், அண்ணா, தம்பியர் நலம் அறிய ஆவலாய் இருக்கிறேன்.
“நான் நலமாக இருக்கிறேன்” என்று வெறும் ஒப்பாசாரத்துக்காகத் தான் சொன்னேன். உண்மையில் என் இறுதி நாட்களை நான் எண்ணிக்கொண்டிருக்கிறேன். உடனடியாக நான் உங்களிடம் ஓர் அந்தரங்க சேதியைத் தெரிவிக்க வேண்டியுள்ளது. அது தலைமுறை தலைமுறையாக, காதோடு காதாகத் தெரிவிக்கப்படவேண்டிய சேதி.
எனினும், உங்களைப் போலவே நானும் பயணம் செய்யக்கூடிய நிலையில் இல்லை. ஆகவே தம்பியருள் ஒருவரை இங்கு இரகசியமாக அனுப்பி வைக்கும்படி அண்ணாவிடம் சொல்லவும்.
இவ்வண்ணம்
கந்த முருகேசன்
மல்லிகைப் பந்தல்
புலோலி
ஈழம்
கந்த முருகேசனாரின் கடிதம் வாசிக்கப்பட்ட பிறகு கடும் யோசனையில் ஆழ்ந்து கண்களை மூடுகிறார் பெரியார். மெல்ல எழுந்து எட்டி அடி எடுத்து வைக்கிறார் மதியழகன். மூடிய கண்களுடன் மதியழகனின் வேட்டித் தலைப்பை எட்டிப் பிடித்து “திருட்டுப் பயலே! எங்கே கிளம்பிவிட்டாய்?" என்று கர்ச்சிக்கிறார் பெரியார்.
“அண்ணாவுக்கு மூக்குத்தூள் கொண்டுபோய்க் கொடுக்கப் போகிறேன், தந்தையே!".
“அப்படியா? எங்கே மூக்குத்தூளைக் காட்டு பார்ப்போம்!"
“இதோ!" காட்டுகிறார் மதியழகன். மூக்குத்தூளைப் படாரெனப் பறித்தெடுக்கிறார் பெரியார்.
“ஐயோ! அண்ணா காத்துக்கொண்டிருப்பாரே!" அழுகிறார் மதியழகன்.
“கொண்ணாவிடம் போய், மூக்குத்தூள் தேவை என்றால் நெடுஞ்செழியனையும் கூட்டிக்கொண்டு உடனடியாக வரச் சொல்லு!" நிபந்தனை விதிக்கிறார் பெரியார். புலம்பிக்கொண்டு புறப்படுகிறார் மதியழகன். வெளியே ஓடிப்போய் மதியழகனிடம் ஒரு தடலைக் கொடுத்துவிட்டு திரும்பி வந்து நாளேட்டைத் தூக்குகிறார் சம்பத்.
“எனக்குத் தெரியும், நீ உந்த வேலை செய்வாய் என்று. ஆனால் நீ கொண்டுபோய்க் கொடுத்தது வெறும் தடல். நான் மதியழகனிடம் பறித்த தடல் இதோ இருக்கிறது!" சம்பத்திடம் காட்டுகிறார் பெரியார். “திருடப்படாது! கண்டியோ?"
“நீங்கள் அடித்தது பெரும் கொள்ளை. நான் எடுத்தது வெறும் களவு!" சிணுங்குகிறார் சம்பத்.
“எண்ணம் ஒன்று, நடைமுறை வேறு!" ஒப்புக்கொள்ளுகிறார் பெரியார். “நான் கொண்ணாவை வரவழைத்து மூக்குத்தூளைக் கொடுக்க எண்ணினேன். நீ கொண்ணாவுக்கு அதைக் கொடுத்துவிட எண்ணினாய்".
“அண்ணாவை இப்படியா வரவழைப்பது?"
“மற்றும்படி கொண்ணாவைக் கையோடு பிடிக்க முடியுமா?"
***
வெளியே ஆளரவம் கேட்கிறது. “அண்ணா!" என்று கூவிக்கொண்டு வெளியே விரைகிறார் சம்பத்.
“என்ன, தம்பி? வெறும் தடலையா கொடுத்து விடுவது?" முறைக்கிறார் அண்ணா.
“மன்னிக்க வேண்டும், அண்ணா!..." இழுக்கிறார் சம்பத்.
"அண்ணாத்துரை!" சம்பத் சொல்லி முடிப்பதற்குள் கூப்பிடிகிறார் பெரியார்.
“தந்தையே! நெடுஞ்செழியனையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறேன். இனியாவது பொடியைத் தரலாமே!"
“வேறும் யாரோ கதைத்துக் கேட்கிறதே!"
“உடன்பிறப்புகள் பலர் வந்த்திருக்கிறார்கள்!" அறிவிக்கிறார் சம்பத்.
“நல்லது... மணி! எல்லாருக்கும் ஏதாவது கொண்டுவந்து கொடு... எல்லாரும் இப்படி வந்து என் முன்னாடி இருக்கப்படாதோ?"
அண்ணாவின் பின்னாடி அமர்கிறார்கள் தம்பியர் அனைவரும். மூக்குப்பொடியை எடுத்து அண்ணாவிடம் கொடுக்கிறார் சம்பத். சாய்மானப் பலகையில் நிமிர்ந்திருந்து பேசத் தொடங்குகிறார் பெரியார்:
“அண்ணாத்துரை! முருகேசன் கடதாசி அனுப்பியிருக்கிறான்... எங்கே அது?" கேட்கிறார் பெரியார். அதை எடுத்து அண்ணாவிடம் கொடுக்கிறார் சம்பத். அதை வாசித்துவிட்டு மக்கள் திலகத்திடம் கொடுக்கிறார் அண்ணா.
“அண்ணாத்துரை! மற்றக் கடதாசியின் அடியில் நான் ஒப்பம் போட்டிருக்கிறேன். மேலே முருகேசனுக்கு ஒரு பதில் எழுதி, நெடுஞ்செழியனிடம் கொடுத்தனுப்புவோம்.” காதைத் தீட்டுகிறார் நெடுஞ்செழியன். சம்பத்திடம் மற்றக் கடதாசியை வாங்கி அண்ணவிடம் கொடுக்கிறார் மதியழகன்.
“தம்பி நெடுஞ்செழியா! கந்த முருகேசனைப் போய்க் கண்டு வருவாயா?" வினவுகிறார் அண்ணா.
“எந்த முருகேசனை, அண்ணா?" கேட்கிறார் நாவலர். சிரிக்கிறார்கள் உடன்பிறப்புகள்.
“ஈழத்துக் கந்த முருகேசனைப் போய்க் கண்டு வருவாயா?" உறுக்குகிறார் அண்ணா.
“அண்ணா, போய் வருகிறேன், அண்ணா!"
“நெடுஞ்செழியா, எந்த மட்டில் பயணம்?" கேட்கிறார் பெரியார். அண்ணாவைப் பார்க்கிறார் நாவலர். மக்கள் திலகத்தைப் பார்க்கிறார் அண்ணா.
“அடுத்த கிழமை, தந்தையே!" என்கிறார் மக்கள் திலகம்.
“நெடுஞ்செழியா! கொண்ணாவின் பதில் கடிதத்தை முருகேசன் கையில் கொடு. முருகேசனிடம் மறுமொழி கேட்டு வாங்க மறக்கப்படாது... இராமநாதனின் போக்கு எனக்குப் பிடிக்கவில்லை. ஜின்னாவின் பிடி பிடிக்க வேண்டும் என்று கடதாசி அனுப்பினேன். அவன் மறுமொழியே அனுப்பவில்லை. இராமநாதன் முஸ்லீம் தரப்புக்கு எதிராக வழக்காடி வென்று கொடுத்ததற்கு கைமாறாக சிங்களச் சீமான் தனது தலைப்பாவை அவிழ்த்தெடுத்து அவனுக்கு கோவணம் கட்டிப் பல்லக்கில் வைத்து தூக்கியவுடன் அவன் மெய்மறந்து போனான். சட்டம் தெரிந்தவன். அரசியல் ஞானி. அப்படியிருந்தும் எதிர்காலத்தை எண்ணிப் பார்க்கவில்லை. பாவம், நம்ம சாதி! அங்கே அலைக்கழியப் போகுதுகள். அந்த அநாகரிகன் நம்ம சாதியை கள்ளத்தோணிகள்… அவர்களை நாட்டிலிருந்து விரட்ட வேண்டும்… அப்படி எல்லாம் சொல்லித் திரிஞ்சவன்;..."
“அநாகரிகன்?" கண்களைக் கூசுகிறார் நாவலர்.
“அநகாரிக தர்மபாலா!" விளக்குகிறார் அண்ணா.
“அவனைத் தானே சொன்னேன்! நம்ம சாதிக்காரரையும் பாம்பையும் கண்டால் முதலில் நம்ம சாதிக்காரரைக் கொல்ல வேண்டும் என்று சிங்களப் புத்தகங்களிலேயே எழுதி வைத்திருகிறார்கள். வெகு விரைவில் அவர்கள் ஈழத்தில் பாம்புகளைப் பெருக்குவதற்குத் திட்டம் தீட்டியே தீருவார்கள். நாலு வருஷத்துக்கு முந்தியே..."
“நாலு வருஷத்துக்கு முந்தியே..." முணுமுணுக்கிறார் நாவலர்.
“1943-ல்!" கணிக்கிறார் அண்ணா.
“அப்படித்தானே சொன்னேன்!" எரிந்து விழுகிறார் பெரியார். “அந்த வேளையில்தான் ஜயவர்த்தனம் தனிச் சிங்கள மந்திரத்தை உச்சரித்தான்..."
“ஜயவர்த்தனம்?" ஏங்குகிறார் நாவலர்.
“ஜே.ஆர்.ஜெயவர்த்தனா!" விளக்குகிறார் அண்ணா.
“அவனைத் தானே சொன்னேன்!" கத்துகிறார் பெரியார். “என்றோ ஒருநாள் சிங்களச் சீமான் நம்ம சாதியின் தலைப்பாவை அவிழ்த்தெடுத்து கோவணம் கட்டிக்கொண்டு திரிவான். அதற்கு முன்கூட்டியே இராமநாதன் செய்யவேண்டியது என்னவென்றால்..."
“இராமநாதன் இப்பொழுது உயிருடன் இல்லையே!" நினைவூட்டுகிறார் அண்ணா.
“ஏன் இராமநாதனுக்கு என்ன நடந்தது?"
“இராமநாதன் போய்விட்டார். ஜி.ஜி.பொன்னம்பலம் வந்திருக்கிறார்!"
“போய்விட்டார் ... வந்திருக்கிறார் ... இது அடுக்குமொழியா, இடக்குமொழியா?"
“பொன்னம்பலம் இருக்கிறார், இராமநாதன் இல்லையே!"
“சரி, சரி. நான் இராமநாதன் என்று சொன்னேனா? தப்பு, தப்பு! ஜின்னாவின் பிடியை ஏன் பொன்னம்பலம் பிடிக்கக்கூடாது?"
“அதுக்குக் காலம் பிந்திவிட்டதே! அதனால்தான் பொன்னம்பலம் ஐம்பதுக்கு ஐம்பது என்று பிடிப்பதாகத் தெரிகிறது. ஜின்னாவின் பிடியை சுந்தரலிங்கம் பிடிப்பது போல் தெரிகிறதே!"
“ஆ! சுந்தரலிங்கன் அறப் படித்துக் கூழ்ப் பானைக்குள் விழுந்தவன். அவன் ஐம்பது வீதம் ஜின்னா மாதிரி, ஐம்பது வீதம் புத்த பிக்கு மாதிரி. நெடுஞ்செழியா! சுந்தரலிங்கனைச் சந்திக்க வேண்டாம். அவன் உன்னைச் சந்திக்க வந்தால் முருகேசன் வீட்டுக் கோடிக்குள் ஓடிப்போய் ஒளி... கிறுக்குப் பேர்வழி..."
“நானா?" ஏங்குகிறார் நாவலர்.
“நெடுஞ்செழியா! தந்தை உன்னைச் சொல்லவில்லை" விளக்குகிறார் அண்ணா.
“அவனைத் தானே சொன்னேன்! அவன் ஒரு கடதாசியில் ஏதாவது கிறுக்கி நம்ம முகவரியைப் போட்டு முருகேசனிடம் கொடுத்துவிட்டுப் போவான். அவன் போன பிறகு நீ வெளிப்பட்டு வேறொரு கடதாசியில் 'அன்புள்ள சுந்தரலிங்கம்! கடிதம் கண்டு மகிழ்ச்சி. நன்றி. இப்படிக்கு இராமசாமி” என்று எழுதி முருகேசனிடமே கொடுத்துவிடு. முருகேசன் அதை ஒரு மாதம் கழித்து சுந்தரலிங்கனைக் கூப்பிட்டுக் கொடுக்கட்டும். நீ புறப்பட முன்னம் நம்ம கையெழுத்தை வைக்கப் பழகிக்கொள்ளு. சுந்தரலிங்கன் எலிசபெத்து இளவரசிக்கே கணக்கு விட்டவன் என்று கேள்வி. அந்தக் காரணத்தால் அவன் எவருக்கும் கிறுங்கமாட்டான். கள்ளக் கையெழுத்து என்று கண்டு பிடித்தானோ, முருகேசனுக்குத்தான் ஆபத்து. சுப்புரத்தினம்! “குறிஞ்சிப் பந்தல்” என்ற தலைப்பில் முருகேசனுக்கு ஒரு பாட்டு எழுதிக் கொடுத்துவிடு... நெடுஞ்செழியா! அங்கே நின்று மினைக்கெடக் கூடாது. போவதும் வருவதுமாய் வா. புத்த பிக்குகள் படுமோசமானவர்கள். நீ அகப்பட்டால் உன்னைக் கழுவேற்றிப் புண்ணியம் தேடக்கூடியவர்கள். அதுக்கு முதல் இராசரத்தினம் உனது முதுகுத் தோலை உரித்து செருப்பு தைத்து காலில் மாட்டித் திரிவான்..."
“இராசரத்தினம்?" குழம்புகிறார் நாவலர்.
“கே.எம்.பி.ராஜரட்ணா!" விளம்புகிறார் அண்ணா.
“அவனைத் தானே சொன்னேன்! அண்ணாத்துரை! முருகேசனுக்கு நீ என்ன கொடுத்துவிடப் போகிறாய்?" வினவுகிறார் பெரியார்.
“மூக்குத்தூள்!" அண்ணாவை முந்தி விடையளிக்கிறார் பாவலர். சாய்மானப் பலகையில் கையை அறைந்து சிரிக்கிறார் பெரியார்.
“முருகேசனிடம் இதைவிடத் திறமான மூக்குத்தூள் இருக்கும். அவர்களுடைய தாவடிப் புகையிலை உலகப் புகழ் பெற்றது." சுட்டிக்காட்டுகிறார் பெரியார்.
“தாவடிப் புகையிலை, மந்திகை வடை, கூவில் கள்ளு, மாணாண்டிப் பனாட்டு, தோலகட்டி நெல்லிரசம்..." அடுக்குகிறார் பாவலர்.
“ஒட்டகப்புலத்துப் புக்கை....!" தொடுக்கிறார் பெரியார். “சுப்புரத்தினத்துக்கு நல்ல பொது அறிவு இருக்கிறது... அண்ணாத்துரையின் மூக்குப்பொடியை முருகேசன் முட்டவே மாட்டான். நெடுஞ்செழியா! முருகேசனிடம் கொஞ்சம் மூக்குத்தூள் வாங்கிக்கொண்டு வா. ஒரு தடவை நாங்கள் எல்லாரும் உறிஞ்சிவிட்டு மிச்சத்தைக் கொண்ணாவிடம் கொடுப்போம்." பாவலர் விக்கி விக்கிச் சிரிக்கிறார்.
“பொன்னம்பலத்தை தம்பி சந்திக்கலாமா?" சிரித்தபடியே கேட்கிறார் அண்ணா.
“பொன்னம்பலத்தையோ? தம்பியாண்டானைச் சந்திக்க பொன்னம்பலத்துக்கு நேரம் வராது. அவன் ஐம்பதுக்கு ஐம்பது கேட்டு கோடு, கச்சேரி ஏறித் திரிவான். ஒருவேளை செல்வநாயகத்தைப் பிடித்து அனுப்புவான். செல்வநாயகத்துக்கு நல்ல வருத்தமாம்... நெடுஞ்செழியா! செல்வநாயகம் உன்னிடம் வருவது சரியில்லை. நீ போய்ச் செல்வநாயகத்தை வருத்தம் பார். உடம்பைத் தேற்றிகொண்டு ஒரு தடவை இந்தப் பக்கம் வந்து போகச் சொல்லு. பொன்னம்பலத்துக்குத் தெரியாமல் செல்வநாயகத்துடன் கொஞ்சம் நேரிலே பேசவேண்டும். நெடுஞ்செழியா! செல்வநாயகம் உன்னைத் தேடி முருகேசன் வீட்டுக்கு வர முந்தி..."
“முருகேசன் வளவுக்கு செல்வநாயகம் போவதில்லையே!" முணுமுணுக்கிறார் அண்ணா.
“ஏன்?" கத்துகிறார் பெரியார்.
“அவர்களுக்கு ஒருவரை ஒருவர் பிடிக்காது!" என்கிறார் அண்ணா.
“ஏன்?" திரும்பவும் கத்துகிறார் பெரியார்.
“செல்வநாயகம் ஒரு மிதவாதி. முருகேசன் ஒரு தீவிரவாதி..."
“அதனால் என்ன?"
“செல்வநாயகம் காந்தியைப் போல் ஆத்திகம் பேசி ஆட்பலம் சேர்ப்பவர். முருகேசன் எங்களைப் போல் நாத்திகம் பேசி நாத்தழும்பேறியவன்..."
“அண்ணாத்துரை! அடுக்குமொழி வேண்டாம். நடப்புநிலை என்ன?"
“முருகேசன் வளவுக்கு செல்வநாயகம் போவதில்லையே!"
“அது உள்ளூர்ப் பிசகு. போகட்டும். நெடுஞ்செழியா! நீ போய்ச் செல்வநாயகத்தை வருத்தம் பார்" ஆணையிடுகிறார் பெரியார்.
“வெறுங் கையோடு போய் வருத்தம் பார்ப்பது சரியில்லை" நினவூட்டுகிறார் அண்ணா.
“நெடுஞ்செழியா! செல்வநாயகத்துக்கு இனிப்பு ஆகாது. ஒரு மார்மைற்றுப் போத்தில் வாங்கிக்கொண்டு போய்க் கொடு... ஏன் யோசிக்கிறாய்...? இராமச்சந்திரா!"
“தந்தையே!" பணிகிறார் மக்கள் திலகம்.
“நெடுஞ்செழியனுக்கு கொஞ்சம் காசு கொடு. திரும்பி வந்து வட்டியோடு தரட்டும்!" சிரிக்கிறார்கள் உடன்பிறப்புகள்.
“கையோடு செல்வநாயகத்துக்கும் ஒரு கடிதம்?" இழுக்கிறார் அண்ணா.
“செல்வநாயகத்துக்கோ? இப்போதைக்கு வேண்டாம். பொன்னம்பலத்துக்குப் பிடிக்காது."
“அப்போ, பொன்னம்பலத்துக்கு ஒரு கடிதம்?"
“பொன்னம்பலத்துக்கோ? வேண்டாம்! கடிதம் எழுதிக் கொடுத்து... அவன் மந்திரி ஆகும் வாய்ப்பைக் கெடுத்து... நமக்கேன் வம்பு?"
“அப்போ, செல்வநாயகத்துக்கு கடிதம் எழுதுவது எப்போது?"
“பொன்னம்பலம் ஓய்ந்த பிறகு".
“புரியவில்லையே!" என்கிறார் பேராசிரியர்.
“இது வாத்தியாருக்குப் புரியாது!"
“எனக்குப் புரிகிறதே!" என்கிறார் மக்கள் திலகம்.
“இராமச்சந்திரா! தந்தை அன்பழகனைச் சொன்னார்" உணர்த்துகிறார் அண்ணா.
“அவனைத்தானே சொன்னேன்!" கத்துகிறார் பெரியார். “நெடுஞ்செழியா! ஈழத்தில் நல்லூர் உட்பட எந்த ஊருக்குப் போனாலும் அடக்கமாய் நடக்க வேண்டும்!"
“ஏன், தந்தையே?" திகைக்கிறார் நாவலர்.
“ஆறுமுகம்தான் உண்மையான நாவலர். நம்ம தருமபுரம் ஆதீனம்தான் ஆறுமுகத்துக்கு நாவலர் பட்டம் கொடுத்தது. அங்கே போய் 'நான்தான் நாவலர், ஆறுமுகம் வெறும் ஆறுமுகம்' என்று ஏதாவது இசகுபிசகாகச் சொல்லுகிறாய் என்று வைத்துக்கொள்வோம். அப்புறம் நீ நாக்கு இல்லாமல்தான் திரும்பி வருவாய். அதன்பிறகு உனக்கு நாவலர் பட்டம் தந்த கொண்ணாவின் அண்ணாக்கைத் தான் அறுத்து ஒட்டவேண்டி வரும்!" நிலத்தில் கிடந்து உருள்கிறார்கள் உடன்பிறப்புகள். பாவலர் சிரித்து மூர்ச்சித்து விழுகிறார். உள்ளேயிருந்து வெளியே எட்டிப் பார்த்து, தாவணித் தலைப்பினால் பாதி முகத்தை மூடி முறுவலித்து, சம்பத்தைப் பார்த்து தலை அசைத்து வரவழைத்து, சிற்றுண்டித் தாம்பாளத்தைக் கொடுத்து மறைகிறார் மணியம்மை.
“நாவலரே, பயப்படாதீர்கள்! நமது ஈழ இரசிகர் மன்றத்துக்கு ஒரு கடிதம் தருகிறேன். நீங்கள் பத்திரமாய் போய் வரலாம்" தெம்பூட்டுகிறார் மக்கள் திலகம். நாவலரைப் பார்த்து நகைக்கிறார்கள் பெரியாரும் அண்ணாவும்.
சாய்மானப் பலகையில் சரிகிறார் பெரியார். திரும்பவும் உறிஞ்சுகிறார் அண்ணா. பீடா போடுகிறார்கள பேராசிரியரும் பாவலரும். பெரியார் குறட்டை விடத் தொடங்கியதும் அவருடைய தலையை மெல்லத் தூக்கி அதன் கீழே ஒரு தலையணையைச் செருகுகிய பின்னர் அண்ணாவுக்கும் ஒரு கடதாசிப் பெட்டியைக் கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு முழங்கையைக் காட்டிவிடுகிறார் சம்பத். தலைக்கு ஒரு மூலை பிடித்துச் சரிகிறார்கள் உடன்பிறப்புகள். சம்பத்தைக் கைகாட்டிக் கூப்பிட்டு, அண்ணாவைச் சுட்டிக்காட்டி ஒரு தலையணையைக் கொடுத்து விடுகிறார் மணியம்மை. அண்ணாவுக்குத் தலையணை கிடைக்க முன்னரே அவருடைய கடதாசிப் பெட்டியை அபகரிக்கிறார் கலைஞர். அதனை அவதானித்த பிறகு தனது கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு ஓட்டம் எடுக்கிறார் மக்கள் திலகம்.
***
பெரியாரின் இல்லத்தில் கூடியிருக்கிறார்கள் அண்ணாவும் தம்பியரும். நாவலரின் மூட்டை முடிச்சுகளை மக்கள் திலகத்தின் வண்டியில் ஏற்றுகிறார்கள் சம்பத்தும் மதியழகனும்.
“நெடுஞ்செழியா! ஏன் முழியைப் புரட்டுகிறாய்? வாயைத் திறந்து கேள்!" அதட்டுகிறார் பெரியார்.
“ஒரேயொரு ஐமிச்சம், தந்தையே! இங்கே நாங்கள் ஏன் பேரினவாதத்தை எதிர்த்துப் போராடவில்லை என்று அங்கே முருகேசனோ, செல்வாவோ கேட்டால் என்ன பதில் சொல்லுவது?"
“அண்ணாத்துரை! இந்த ஐமிச்சப் பேர்வழிக்கா நாவலர் பட்டம்?" சினக்கிறார் பெரியார்.
“நெடுஞ்செழியா!” அறிவுறுத்துகிறார் அண்ணா: “பாரதத்தில் எந்த ஒரு பிரிவினருக்கும் அறுதிப் பெரும்பானமை கிடையாது. இந்தி மொழியினர் 30 விழுக்காடு மட்டுமே. நாங்கள் உட்பட ஏனைய பிரிவினரின் முழுத் தொகை 70 விழுக்காடு! ஆதலால் பாரதத்தில் பேரினவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இலங்கையில் நிலைமை வேறு. அங்கே சிங்களவர் தொகை 74 விழுக்காடு. அவர்களை இரண்டு கூறுகளாகப் பிளந்தால் கூட ஒவ்வொரு கூறும் 37 விழுக்காட்டைக் கொண்டிருக்கும். அங்கே தமிழர், இஸ்லாமியர் உட்பட ஏனைய இனத்தவரின் கூட்டுத்தொகையே 26 விழுக்காடுதான்! அதாவது இலங்கையில் சிங்களவருக்கு அறுதிப் பெரும்பான்மை இருக்கிறது. ஆதலால்தான் அங்கே பேரினவதம் தலைதூக்கி வருகிறது” என்று விளக்கமளிக்கிறார் அண்ணா.
பெரியாரின் ஒப்பத்துடன் கூடிய அண்ணாவின் கடிதத்தை ஓர் உறையிலிட்டு நாவலரின் கைப்பையினுள் வைக்கிறார் கலைஞர். வண்டியில் ஏறி, சாரதியின் இருக்கைக்குப் பின்புறமாக அமர்கிறார் பேராசிரியர். நாவலருக்கு விடை கொடுக்கிறார்கள் பெரியாரும் அண்ணாவும். வண்டியை நோக்கி நடக்கிறார்கள நாவலரும் மக்கள் திலகமும். வண்டியிலிருந்து வெளியே இறங்கி கதவுகளைத் திறந்து பிடிக்கிறார் சாரதி. பின்னுக்கு ஏறி, பேராசிரியருடன் அமர்கிறார் நாவலர். முன்னுக்கு ஏறி சாரதிக்கு அருகே அமர்கிறார் மக்கள் திலகம். பின்புறம் திரும்பி நாவலரின் கையில் அவருடைய கடவுச் சீட்டையும் விமானச் சீட்டையும் வைக்கிறார் மக்கள் திலகம். நாவலரை அணுகிப் பயணக் காசு கேட்கிறார் பாவலர். பேராசிரியரிடம் ஒரு பீடாவை வாங்கிப் பாவலரிடம் கொடுத்து விடைபெறுகிறார் நாவலர். மீனம்பாக்கம் விமானத்துறையை நோக்கி விரைகிறது மக்கள் திலகத்தின் வண்டி.
விமானச் சீட்டைப் புரட்டிப் பார்க்கிறார் நாவலர். “என்ன இது? எதற்காக நான் மாலைதீவுக்குப் போகவேண்டும்?" கத்துகிறார் நாவலர்.
“அது நமது ஈழ இரசிகர் மன்றத்தின் புத்திமதி!" என்கிறார் மக்கள் திலகம்.
“இரசிகர் மன்றத்தின் புத்திமதியா?"
“ஆமாம்! இரசிகர் மன்றத்துடன் பரிமாறப்பட்ட சேதிகளை அண்ணா பார்வையிட்டார்கள்..."
“பார்வையிட்டு...?
“சென்னை-மாலைதீவு-பலாலி மார்க்கத்தைப் பதியும்படி பணித்தார்கள்."
“அண்ணா பணித்தாரா?"
“ஆமாம்! சென்னையில் இருக்கும் இலங்கைத் தூதரகத்துக்கு உங்கள் வண்டவாளம் தெரியும். ஆகவே அது உங்களுக்கு நுழைவுரிமை மறுக்கும். மாலைதீவில் இருக்கும் இலங்கைச் சாணக்கியர்களுக்கு உங்கள் வண்டவாளம் தெரியாது. ஆதலால் அவர்கள் உங்களுக்கு நுழைவுரிமை தருவார்கள். நமது இரசிகர் மன்றத்தின் இந்தக் கணிப்பை அண்ணா ஏற்றுக்கொண்டார்கள்."
நாவலரை வழியனுப்பி வைத்துவிட்டு வண்டியில் ஏறுகிறார்கள் மக்கள் திலகமும் பேராசிரியரும். அவருடைய விமானம் புறப்படுவதற்கு முன்னதாகவே மக்கள் திலகத்தின் வண்டி, வந்த வழியே திரும்பிப் பறக்கிறது.
_______________________________________________________________________________
மணி வேலுப்பிள்ளை 2008/11/15
No comments:
Post a Comment