மொழிபெயர்ப்பாளர்
நான் பறந்து வந்த விமானம் ரொறன்ரோவில் தரையிறங்கியபோது எனது கடிகாரம் காட்டிய நேரம்... அது வன்னி நேரம்... கண்ணாடிச் சாளரத்தின் ஊடாக வெளியே எட்டிப் பார்த்தேன். ஓடுபாதையிலும் அதற்கு அப்பாலும் எரியும் மின்விளக்குகள், கிளம்புவதற்காக அல்லது இறங்குவதற்காக வலம்வரும் விமானங்கள், விமானத்துறையின் எல்லைக்கு வெளியே மின்னிமறையும் வாகனங்கள், மண்ணுலக வாழ்வை ஒரு சொட்டும் சட்டை செய்யாது கொட்டும் பனியின் வெண்மை...
‘உன்னுடைய புத்தகம் என்னிடமே இருக்கட்டும்... அது எனக்குத் திரும்பவும் தேவைப்படும்’ என்று துரை அண்ணா காதோடு காதாகச் சொல்லிய சேதி நினனவுக்கு வந்தது. அவருக்கு என்னில் எள்ளளவும் நம்பிக்கை ஏற்படவில்லை. எனக்குத் தெரிந்த கொஞ்சநஞ்ச ஆங்கிலத்தைக் கொண்டு என்னால் ஓரளவு சமாளிக்கமுடியும் என்று சொல்லி அவருக்கு நான் தெம்பூட்டினேன்.
‘முட்டாள், இங்கிலிஷில் ஒரு சொல்லும் உன்னப்படாது. நீ பச்சைத் தமிழ் கதைத்தால் தப்பிப் பிழைப்பாய். கொச்சை இங்கிலிஷ் கதைத்தால் பிடிகொடுத்துவிடுவாய்’ என்று சொல்லி அவர் என்னை அச்சுறுத்தினார்.
அவர் கடைசியாக என்னைப் பார்த்த பார்வையில் அருவருப்பு தெரிந்தது. எனது சிற்றறிவுக்கு எட்டியவரை என்னைப் பார்த்து வேறெவரும் அவ்வளவுதூரம் அருவருக்கவில்லை. ஆதலால் அவருடன் மேற்கொண்டு பேச்சுக் கொடுக்காமல் தூங்குவது போல் பாசாங்கு செய்தேன்.
காற்றிடைவெளிகளில் விமானம் விழுந்து கிளம்பிப் பறந்தது. கல்லொழுங்கையில் ஏறிவிழும் மாட்டு வண்டியைப் போல... அந்த ஒற்றுமை என்னை வியக்க வைத்தது. விண்ணில் பறக்கும் நினைப்பே ஏற்படவில்லை... அப்புறம் விழித்துக்கொண்டேன். அப்பொழுதுதான் நான் உண்மையிலேயே தூங்கிவிட்டேன் என்பது புரிந்தது. ஐயோ... துரை அண்ணாவைக் காணவில்லை! நான் அவரைக் காணாமல் தவித்ததை அவதானித்த யாரோ ஒருவர், நான் இடம்தலை தெரியாமல் தவிப்பதாக நினைத்தாரோ என்னவோ, ‘வான்கூவர்!’ என்று கூவினார்... வன்னியில் தோன்றிய துரை அண்ணா வான்கூவரில் மறைந்த மாயத்தை எண்ணியவாறு நான் கண்களை மூடினேன்.
ரொறன்ரோ விமான நிலையத்தில் என்னைப் புடைசூழ்ந்த கண்காணிகளைக் கடைக்கண்ணால் நோட்டம் விட்டேன். காட்டுக்குள் இருந்து வெளிப்பட்டு நாட்டுக்குள் புகுந்த ஒரு விலங்கினைக் கைப்பற்றிய வீறாப்பு அவர்களுடைய நடமாட்டத்தில் புலப்பட்டது. ஒன்றுக்குமேல் ஒன்றாக அணிந்த உடுப்புகளின் உள்ளே உப்பிய உடம்புடன் கூடிய அந்தக் கனடியர்களைப் பார்க்க எனக்கு விசித்திரமாய் இருந்தது.
ஒரு கோடியில் இருந்த கூடத்துக்கு அவர்கள் என்னை அழைத்துச் சென்றார்கள். அங்கே பல்வேறு அடைப்புகள் போடப்பட்டிருந்தன. என்னை ஓர் அடைப்புக்குள் தள்ளிவிட்டார்கள். அங்கே ஒரு மேசையும் மூன்று நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. மேசையில் இருந்த ஒரு தகட்டில் குடிவரவு அதிகாரி என்று பொருள்படும் பதவி ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருந்தது. மேசையில் வைக்கப்பட்டிருந்த ஒரு மணிக்கூடு நேரத்தை இலக்கத்தில் காட்டியது... அதிகாலை மூன்றே முக்கால் மணி.
அவர்கள் அடைப்புக்கு வெளியே நின்று என்னை வேவுபார்த்தபடி தங்களுக்குள் குசுகுசுத்தார்கள். ஒருவர் தனது கைத்தொலைபேசியில் யாரையோ அழைத்து ‘Sri Lankan… Tamil...’ என்று சொல்லிக் கதைத்தது எனது காதில் விழுந்தது. என்னிடம் ஒரு சொல்லும் கதைக்காமலேயே அவர்கள் என்னை இன்னார் என்று இனம்கண்ட விதத்தை எண்ணி நான் பீதியடைந்தேன்.
உடம்பு வெடவெடத்தது. பற்கள் கிடுகிடுத்தன. விரல்கள் குறாவின. கனடாவில் ஒருவர் ஒரே சமயத்தில் பல உடுப்புகளை அணியவேண்டிய நிர்ப்பந்தம் நியாயமானதே என்பது படிப்படியாகப் புரிந்தது. ‘ஒரு மிடறு விஸ்கி… ஒரு தம் சிகரட்... குளிர் கிட்டவும் வராது…’ என்று துரை அண்ணா வகுத்த பரிகாரம் அப்பொழுது நினைவுக்கு வந்து என்னை வாட்டியது.
ஒருவன் சட்டுப்புட்டென்று வந்து எனது அடைப்புக்குள் புகுந்தான். அவன் நிறத்தாலும் திரட்சியாலும் முற்றிக்கனிந்த தக்காளிப்பழம் போலவே இருந்தான். ஒரு கையில் ஒரு கோப்பு. மறு கையில் ஒரு நீற்றுப்பெட்டி போன்ற கடதாசிக் குவளை. உரலில் குத்திநிற்கும் உலக்கையைப் போல அதில் ஓர் உறிஞ்சுகுழல் வேறு! அடைப்புக்குள் ஏற்கெனவே ஒரு மனிதப் பிறவி நிற்பதை அவன் சட்டை செய்யவில்லை. தனது இருக்கையில் அமர்ந்த கையோடு தனது பதவியை அறிவிக்கும் தகட்டை எனக்கு நேரே தள்ளிவிட்டான். அவன் கோப்பினை எடுத்தெறிந்த விதம் என்னைத் தூக்கிவாரிப் போட்டது. அது என் மூஞ்சியில் பட்டும் படாமலும் ஒரு கரையிலிருந்து மறு கரைக்குத் தாவியது. பிறகு அதனை எட்டி எடுத்து விரித்து வைத்துக்கொண்டு, என்னை நிமிர்ந்து பார்க்காமலேயே அமரும்படி சைகை காட்டினான். அவன் வாய் திறக்காதபடியால் எனக்குக் கரவு வந்துவிட்டது. துரை அண்ணாவைப் போல வேறு சில பேர்வழிகள் ஈழநாட்டு அகதிகளின் ஆட்சிமொழி பற்றி எல்லாம் குடிவரவு அதிகாரிகளின் காதில் இதமாக ஒரு வார்த்தை போட்டு வைத்திருக்கிறார்களோ என்ற ஏக்கம் என்னைப் பீடித்துக்கொண்டது.
‘You need an interpreter, don’t you?’ என்று அவன் உறுமினான்.
‘தமிழ்...’ என்று இழுத்தேன்.
‘Yes, you know English, but you speak only Tamil, don’t you?’ என்று உறுக்கினான்.
‘தமிழ்...’
‘Yes, yes, a Tamil interpreter is on his way here to help you out.'
‘தமிழ்...’
‘He’ll be here shortly’ என்று சொல்லிவிட்டு தனது நெற்றியில் அடித்துக் கொண்டான்.
‘தமிழ்...’
எனது தமிழ் முழக்கத்தை அவன் மேற்கொண்டு பொருட்படுத்தவில்லை. குவளையில் ஒரு மிடறு உறிஞ்சுவதும், கோப்பில் ஆங்காங்கே கிறுக்குவதுமாக இருந்தான். எனது மனத்தில் கொந்தளிப்பு. ஆனால் அலவாங்கு விழுங்கிய ஆளைப் போல நான் அசையாமல் இருந்தேன். அந்த ஆள் அந்தக் குளிருக்குள் அவ்வளவு குளிர்பானம் குடிக்கிறானே, நீரிழிவு வந்து சாகப்போகிறானே என்று என்னால் அங்கலாய்க்காமல் இருக்க முடியவில்லை. அவன் உறிஞ்சித் தள்ளியதைப் பார்த்ததாலோ என்னவோ எனக்குத் திடீரென முடுக்கியது. அப்பால் போய்ப் பெய்துவிட்டு, சுடச்சுடத் தேநீர் பருகவேண்டும் போலிருந்தது. அதையெல்லாம் போய் அவனிடம் சொல்லிப் பரிகாரம் தேடுவது மரியாதையாய் இருக்காது என்று பட்டதால், அடக்கிக்கொண்டேன்.
திடீரென ஓர் உருவம் அடைப்புக்குள் நுழைந்தது. அந்த உருவத்துக்கும் கத்தரி வெருளிக்கும் இடையே ஒரேயொரு வித்தியாசம்: முகமூடி! இங்குமா தலையாட்டிகள்? ஒரு கணம் மனம் பதறியது. முகமூடிக்குள் அகப்பட்ட மூக்குக் கண்ணாடியின் ஊடாகத் தெரிந்த கண்களைத் தவிர வேறோர் அங்கமும் எனக்குத் தெரியவில்லை. தலையை ஓர் இறப்பர் தொப்பி கவ்வியிருந்தது. கழுத்தைச் சுற்றி ஒரு சேலை வரியப்பட்டிருந்தது. உச்சந்தலையிலிருந்து கணுக்கால்வரை நீண்டு தொங்கிய வெளிப் பாவாடையில் உலகப் படம் கீறிய மாதிரிப் பனித்துகளின் சுவடு படிந்திருந்தது. தாறு ஊற்றுவோர் அணியும் சப்பாத்தும் கையுறையும்... உள்ளே ஓர் இளக்கமான அங்கி, அதற்குள்ளே ஒர் இறுக்கமான அங்கி, அதற்குள்ளே ஒரு முழுக்கைச் சட்டை... அவர் முகமூடியைக் களைந்து தனது கோலத்தைக் கலைத்துக்கொண்டே அந்த அதிகாரியிடம் சொன்னார்:
‘Hi, Robin, I’m sorry for being late’
‘Oh, it’s OK. Freezing outside, isn’t it, Kanaa?’
‘Yea, Robin, that’s the only thing I hate in Canada.’
‘Were you driving?’
‘In this weather? No way… TTC.’
இ.போ.ச.வின் (இலங்கைப் போக்குவரத்துச் சபையின்) கனடியப் பதிப்புத்தான் TTC என்றும், கணாதான் எனது மொழிபெயர்ப்பாளர் என்றும், கணவதி அல்லது கணவதிப்பிள்ளை என்ற பெயரை அவர் கணா என்று குறுக்கிவிட்டார் என்றும் கற்பனை பண்ணிக்கொண்டேன். அவர் தனது வெளிப் பாவாடைக்குள்ளிருந்து ஒரு வெந்நீர்க் குடுவையை வெளியே எடுத்து, மேசைக்குக் கீழே பிடித்து, மூடியை முக்கித் திறந்து, குடுவையைச் சாடையாகச் சரித்து, கொஞ்சத்தைப் பக்குவமாய் ஊற்றி, ஒரே மிடறில் குடித்துவிட்டு, திரும்பவும் குடுவையை மூடி ஒளித்து வைத்தார். றொபின் அதனைக் கண்டும் காணாதவன் போல் இருந்தான்.
அவர்கள் தொடர்ந்தும் காலநிலையைப் பற்றியே கதைத்தார்கள். அப்புறம் திரும்பவும் எப்பொழுது தாங்கள் இருவரும் அந்த அடைப்புக்குள் சந்திப்பது என்பதையும் குறித்துக்கொண்டார்கள். நான் ஒருவன் அங்கே இருக்கிறேன் என்ற நினைப்பு அவர்கள் இருவரிடத்திலும் இருப்பதாகத் தெரியவில்லை.
அப்பொழுது பக்கத்து அடைப்புக்குள் கோப்பித்தூள் நிறத்தில் ஒரு பெண்ணைக் கொண்டுவந்து தள்ளிவிட்டார்கள். நான் அவளை ஓரக்கண்ணால் நோட்டம் விட்டதைக் கணா அவதானித்திருக்க வேண்டும். அவர் என்னைத் திரும்பிப் பார்க்காமலேயே ‘என்னடா பொடியா, புழுத்த மீனைப் பூனை பார்த்த மாதிரிப் பார்க்கிறாய்!’ என்று சீண்டினார். வம்பும் ஏளனமும் எச்சரிக்கையும் கலந்த அந்த அதிரடித் தாக்குதல் என்னை குலைநடுங்க வைத்தது.
குனிந்த குனியில் கோப்பினைப் புரட்டிக்கொண்டிருந்த றொபின் என்னையும் கணாவையும் நிமிர்ந்து பார்க்காமலேயே ‘Shall we start?’ என்று கேட்டான். கணாவும் என்னைப் பார்க்காமலேயே ‘கூத்து துவங்கப் போகிறது’ என்றார். நான் உடம்பை நெளித்து முறுவலித்து கடைக்கண்ணால் கணாவைப் பார்த்தேன். றொபின் என்னைப் பார்க்காதபடியால் கணாவும் என்னைப் பார்க்கவில்லையோ, இதுவும் ஒரு மொழிபெயர்ப்பு நுட்பமோ என்று வியந்தேன். கணா றொபினைப் பார்த்து உன்னிப்பான குரலில் ‘OK, Robin. Let’s start’ என்றார். றொபினும் கணாவும் சொல்லப்போவது எனக்கு விளங்கினால் என்ன, விளங்காவிட்டால் என்ன, அவற்றை எல்லாம் ஒன்றும்விடாமல் கேட்பதற்கு நான் காதைத் தீட்டி வைத்துக்கொண்டேன்.
றொபின் தனது கோப்பிலிருந்து ஒரு கடதாசியை எடுத்து அதன் முதலாவது வரியை அறுத்துறுத்து வாசித்தான். கணா வாய் திறக்க முன்னரே அந்த ஆங்கில வசனத்தின் கருத்து எனக்கு ஓரளவு புரிந்தது: ‘கேட்கப்படும் கேள்விகளுக்கு நீர் மறுமொழி சொல்லாவிட்டால், உமது அகதிக் கோரிக்கையை நீர் கைவிட்டுவிட்டீர் என்று முடிவுசெய்யப்படும்...’
கணாவோ றொபினை இடைமறித்து, அவனையே பார்த்துக்கொண்டு, ‘இவன் ஒரு பனியன். முழுப் பனியும் இவன் தலையில்தான் கொட்டியிருக்கிறது. அவ்வளவு பனி கொட்டியும் இவனுக்கு ஒரு பனிக்கட்டியும் விளங்கவில்லை. இவன் ஆசைதீர வாசிக்கட்டும். இவன் சொல்லுவது நடக்கவே நடக்காது. நீ மறுமொழி சொல்லாமல் வாயைப் பொத்திக்கொண்டு இருப்பதுதான் புத்தி...’ என்று சொல்லி எனக்கு வாய்ப்பூட்டுப் போட்டுவிட்டார்.
றொபின் தொடர்ந்து வாசித்தான்: ‘ஆள்விபரப் படிவத்தை 28 நாட்களுக்குள் நிரப்பி அனுப்பாவிட்டால், உமது அகதிக் கோரிக்கையை நீர் கைவிட்டுவிட்டீர் என்று முடிவுசெய்யப்படும்...’ கணா மீண்டும் குறுக்கிட்டார்: ‘இது ஒரு வேடிக்கையான வாடிக்கை. ஏன் வாடிக்கையான வேடிக்கையும்கூட. ஒரு மாதத்துக்குள் என்று சுகமாகவும் இதமாகவும் சொல்லியிருக்கலாம்... ஒரு மாதம் 30, ஒரு மாதம் 31, மாசி மாதம் 28... இப்படி மாத நாட்கள் மாறுவதால்தான் 28 நாட்களுக்குள் என்று வந்தது. இந்தக் காலக்கெடு அவ்வளவு முக்கியமில்லை. முந்திப் பிந்தி அனுப்பலாம். அது இவனுக்குத் தெரியாது. இவன் ஒரு விடுபேயன். இவனுடைய கதையைக் காதில் விழுத்தக்கூடாது...’ என்றார்.
‘படிவத்திலுள்ள அறிவுறுத்துரைகளையும் வினாக்களையும் சரிவர விளங்கி அதனை நிரப்பி அனுப்ப வேண்டும்...’ இதற்கும் கணா உடன்படவில்லை: ‘இவனே அதை வாசித்ததோ விளங்கியதோ கிடையாது. அதை எல்லாம் உன்னால் எப்படி வாசிக்கவோ, விளங்கவோ, நிரப்பவோ முடியும்? நீ இதை எல்லாம் சரிவர விளங்கி நிரப்பி அனுப்பத் தேவையில்லை. என்னைப் போல ஆட்கள்தான் அதை எல்லாம் நிரப்பி அனுப்புவது வழமை – தேச வழமை! எங்களால்தான் அது முடியும். இதனைச் சரிவரப் புரிந்துகொண்டால், நீ உருப்படுவது நிச்சயம்...’
‘படிவத்தை நிரப்புவதற்கு ஒரு மொழிபெயர்ப்பாளரின் உதவி தேவைப்பட்டால்...’ கணா றொபினை இடைநிறுத்தினார்: ‘படுமுட்டாள்! என்னை முன்னுக்கு வைத்துக்கொண்டு... வெண்ணெயை முன்னுக்கு வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதைப் பற்றிக் கதைக்கிறான். நீ அப்படி அலையப் போவதுமில்லை. அது இவனுக்குப் புரியப் போவதுமில்லை...’
‘உமது மறுமொழிகள் மொழிபெயர்ப்பாளருக்கு விளங்குகிறதா என்று பார்க்க வேண்டும்...’ றொபின் தானாகவே இடைமறித்து கணாவை நிமிர்ந்து பார்த்துவிட்டு ஒரு மிடறு உறிஞ்சினான். அதற்குப் பழக்கப்பட்டவர் போல கணா தொடர்ந்தார்: ‘இவன் தனக்கே விளங்காததை என்னைப் போல ஒருவருக்கு விளங்கப்படுத்தும்படி எதுவுமே புரியாத உனக்குச் சொல்லுகிறான். இவனுக்கு ஒரு பனிக்கட்டியும் தெரியாது. என்னைப் போல வேலைசெய்து பிழைக்கும் ஆட்களுக்குத்தான் எல்லாம் விளங்கும். அவர்கள் உனது படிவத்தில் சரியான மறுமொழிகளைப் போட்டு நிரப்பித் தருவார்கள். அந்த மறுமொழிகள் உனக்கு விளங்கவும் போவதில்லை, விளங்கவும் தேவையில்லை. அதைப் பற்றி எல்லாம் நீ அலட்டிக் கொள்ளவும் கூடாது... என்ன? நான் சொல்வது உனக்கு விளங்குகிறதா?...’
‘உமது கைவசமுள்ள உண்மையான, போலியான அடையாளப் பத்திரங்கள் அனைத்தையும் ஆள்விபரப் படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். அவை கைவசம் இல்லாவிட்டால், அவை எங்கே இருக்கின்றன, அவற்றைத் தருவிக்க முடியுமா, அவை அழிக்கப்பட்டனவா...’ கணா மிகுந்த எரிச்சலுடன் சொன்னார்: ‘யாரோ மூளை பிசகி எழுதி வைத்ததைத்தான் இவன் பாவி வாசித்துக் கொண்டிருக்கிறான். இவன் நல்லவன். ஆனால் மடையன். அகதிகளின் அகராதியில் மெய்யும் பொய்யும் ஒத்த சொற்கள் என்பதோ, உன்னுடைய கடவுச்சீட்டை எல்லாம்வல்ல முகவர் பத்திரமாக எடுத்துக்கொண்டு மறைந்துவிட்டார் என்பதோ, உன் கைவசம் எஞ்சிய பத்திரங்களை நீ தின்பண்டங்களுடன் சேர்த்துத் தின்றிருப்பாய் அல்லது மலசலத்துடன் சேர்த்துக் கழித்திருப்பாய் என்பதோ, முகவரிடமிருந்து கடவுச்சீட்டைத் தருவித்தால் அவர் கையோடு அடுத்த ஆளை அனுப்பமுடியாது என்பதோ இவனுக்குத் தெரியாது. அசல் மடையன். இவனுக்கு அசலும் நகலும் ஒரே சாமான் என்பதுகூடத் தெரியாது. குடிவரவு அதிகாரி என்ற பதவித் தகடு வேறு!...’
‘அத்தகைய பத்திரங்கள் உமது கைவசம் இல்லாவிட்டால், நீர் அதற்குத் தகுந்த நியாயம் காட்டி விளக்கமளிக்க வேண்டும்...’ கணா பொறுமை இழந்து பொரிந்து தள்ளினார்: ‘நியாயமோ விளக்கமோ அளிக்கத் தேவையில்லை. ஆகவே தகுந்த நியாயமும் விளக்கமும்... என்ற பேச்சுக்கே இடமில்லை. சுத்த மட்டி. உனக்கு அடையாள அட்டையோ பிறப்புக் கடதாசியோ இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, எதையும் அஞ்சலில் எடுப்பிக்கலாம். நீ அஞ்சத் தேவையில்லை...’ கணா ‘சுத்த மட்டி’ என்று றொபினைத்தான் திட்டினார். ஆனால் அவர் என்னைத் திட்டியது போலவே பட்டது.
‘உமது விசாரணையை வேறொரு மாநகரத்தில் வைத்துக்கொள்ள விரும்பினால்...’ றொபின் மீண்டும் ஒரு தடவை உறிஞ்சியபெழுது பானம் தீர்ந்து சத்தம் கேட்டது. கணா ஒரு தடவை தொண்டையைச் செருமிவிட்டுத் தொடர்ந்து பேசினார்: ‘இவனுக்கு இந்த மண்ணுலகில் நடப்பது எதுவுமே தெரியாது. மொன்றியலில் முழுப்பேரையும் உள்ளுக்கு விட்ட காலம் போய் ஆண்டுக் கணக்கு ஆகிவிட்டது. இப்போ எல்லாம் மொன்றியலிலும் வான்கூவரிலும் ரொறன்ரோவிலும் ஒரே கதைதான். 9/11க்குப் பிறகு கொஞ்சம் கடுவல். அவ்வளவுதான். என்னைப் போல ஆட்கள் உனக்கு எழுதித் தருவதும் ஒரே கதைதான். நானே பேரையும் ஊரையும் இடத்தையும் தேதியையும் கச்சிதமாய் மாற்றி அற்புதமாய் எழுதித் தருவேன். அதற்கு அதிகம் செலவு பிடிக்காது. கனடாக் காசில் ஒரு நூறு, இருநூறு, முன்னூறு ரூபா பிடிக்கும்.... எல்லாம்வல்ல முகவருக்கு இலட்சக் கணக்கில் வாரி வழங்கிய உனக்கு நான் போய்க் கடலைக்கொட்டை வாங்கிற காசைப் பற்றிச் சொல்லி... சரி, அதெல்லாம் பிறகு. நீ இடம் மாறப்போவதில்லை. உனது விசாரணை ரொறன்ரோவில்தான் நடக்கும். வேறு கதை தேவையில்லை. என்னுடைய கதைதான் செல்லும்...’ கணா மேசையில் குத்தாத குறை! சிலேடையில் பேரம் பேசும் சீமான் என்று மனம் சொல்லியது. அவர் தனது சப்பாத்துக் காலால் எனது சப்பாத்துக் காலில் ஒரு தட்டுத் தட்டி அந்தப் பேரத்தை வலியுறுத்தினார்.
‘வெளிப்படல் அறிவித்தலில் உமது பெயர் எவ்வாறு எழுதப்பட்டுள்ளதோ அவ்வாறே இடமாற்ற விண்ணப்பத்திலும் எழுதப்பட வேண்டும்...’ கணா இப்பொழுதுதான் எனது பெயரைக் கேட்டார். நான் சாம்பசிவமூர்த்தி என்றேன். அவர் சொன்னார்: நீ இடமாற்ற விண்ணப்பத்தை நிரப்பி அனுப்பப் போவதில்லை. அதற்கான காரணம் உனக்கும் தேவையில்லை, இவனுக்கும் தேவையில்லை. மற்றது, அலுவல் எல்லாம் முடிந்த பிறகு... நீ அகதி விசாரணையில் வென்ற பிறகு... நீ ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். நான் வென்று தருகிறேன். உனக்கு வெற்றி நிச்சயம்... அதற்குப் பிறகு உனது பெயரைக் குறுக்கி வைத்திரு. நான் கணநாதமுருகவேள் என்ற பெயரை கணா என்று குறுக்கிய பிறகுதான் கனடியன் என்னுடன் பேசிப் பறைந்து என்னை இந்த வேலைக்கு வைத்துக்கொண்டான். நீயும் உனது பெயரை சாம் என்று குறுக்கினால்தான் கனடியன் உனக்கு வேலை தருவான். ஆனால் உனக்கு நான் பார்க்கிற வேலை வேண்டாம். இது ஒரு பீத்தல் வேலை. இந்த வேலை என்னைப் போல மதியம் திரும்பின ஆட்களுக்குத்தான் சரிவரும். உன்னுடைய வயதுக்கு... போராளிகளே உன்னைச் சேர்க்கமாட்டார்கள்… உனக்கு கனடாவில் நல்ல வேலை கிடைக்கும்…
‘நீர் குறித்த இடத்திலும் தினத்திலும் நேரத்திலும் உமது விசாரணைக்குத் தோற்றத் தவறினால், உமது அகதிக் கோரிக்கை கைவிடப்பட்டுவிட்டது என்று கருதப்படும்...’ கணா தொடர்ந்து பேசினார்: ‘சாம், இவன் பாவி நல்லவன். ஆனால் விடுபேயன். யாரோ ஒரு பித்துப்பிடித்த பேர்வழி அச்சடித்து வைத்த கடதாசியை அப்படியே வாசித்து முடித்துவிட்டான். இவனுக்கு எழுத்துக்கும் கருத்துக்கும் வித்தியாசம் தெரியாது. சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் தெரியாது. அகதிகள் விசாரணைக்குத் தோற்றாமல் இருப்பதும் தலைமறைவாகுவதும் நடப்பதுதான். ஆனால் அகதிக் கோரிக்கை எதுவும் கைவிடப்பட்டதாக வரலாறு கிடையாது. இவன் வரலாறு படிக்கவில்லை. ஒருவேளை History Channel பார்த்திருப்பான். அதுதான் இவனுடைய வரலாறு. நான் ரொறன்ரோவில்தான் இருக்கிறேன். நான்தான் உனக்குக் கதை எழுதித் தரப்போகிறேன். உனது விசாரணை ரொறன்ரோவில்தான்; நடக்கும். அதற்கு நீ போகத்தான் போகிறாய். போய் வெல்லத்தான் போகிறாய்...’
‘மேலதிக விபரங்களுக்கு அகதிகளுக்கான வழிகாட்டியைப் பார்க்கவும்...’ றொபின் கோப்பினுள்ளிருந்து வேறொரு படிவத்தை எடுத்து கணாவின் மூஞ்சியில் பட்டதும் படாததுமாக வீசிவிட்டு எழும்பி அடைப்புக்கு வெளியே போனான். இப்பொழுது கணாவின் பாணி மாறும் என்று எதிர்பார்த்தேன். அவர் சொன்னார்: ‘இந்த ஒட்டகப் பிறவி குடித்ததை எல்லாம் பெய்துமுடித்துவிட்டு மேலும் குடிப்பதற்கு வாங்கிக்கொண்டு வரப் போயிருக்கிறான். அவன் கிடந்தான்... அவன் சொன்னது உன்னை மாட்டிவிடக்கூடிய வழிகாட்டி... நீ முழியைப் புரட்டி என்னைப் பயப்படுத்த முடியாது... அகதிகளுக்கான வழிகாட்டி என்றால், தொடர்ந்தும் அகதிகளாய் இருப்பதற்கான வழிகாட்டி என்பதுதான் கருத்து. அது உனக்கு விளங்கவில்லையோ? அல்லது தமிழ் விளங்கவில்லையோ? மேலதிக விபரங்களுக்கு என்னைப் போல ஆட்களைத்தான் பிடிக்க வேண்டும். உனக்கு அந்த இந்தக் கதை தேவையில்லை? உனக்குத் தோதான கதை என் கைவசம் இருக்கிறது. உனக்கு...’ இந்த இடத்தில் இடைநிறுத்திய கணா முன்னர் ஒளித்துவைத்த வெந்நீர்க் குடுவையைத் திரும்பவும் தேடியெடுத்து அண்ணாந்தபடியே குடித்து முடித்துவிட்டு, ‘…முழி புரளத் தேவையில்லை’ என்று சொல்லி முடித்தார்.
கணா அந்தப் படிவத்தை எட்டி எடுத்து, என்னை எழுத்துக்கூட்டச் சொல்லாமலேயே அதில் எனது பெயரை எழுதி, அதனை மளமளவென்று நிரப்பித் தள்ளினார். அதன் அடியில் ஒப்பமிட்டு, அதில் ஒரு புள்ளடி போட்டு, தனது பேனையை அதற்கு மேலே வைத்து அதனை எனக்கு நேரே தள்ளிவிட்டார். ‘சாம், புள்ளடி போட்ட இடத்தில் ஒப்பம் போடு, மகனே’ என்றார். அவர் திடீரெனக் குழையவே நான் எச்சரிக்கை அடைந்தேன். ஆனாலும் மறு பேச்சில்லாமல் அவர் புள்ளடி போட்ட இடத்தில் ஒப்பம் வைத்துக் கொடுத்தேன்.
அப்பொழுது றொபின் கையில் வேறொரு நீற்றுப்பெட்டியுடன் வந்து சேர்ந்தான். அவன் படிவத்தை எடுத்துப் புரட்டிப் பாரத்துவிட்டு, ‘ஓ, சம்பாசீவா... என்று என்னை விளித்தான்.
‘No, no, Robin, சாம்பசிவா..., சாம்பசிவா...’ என்று சொல்லிக்கொடுத்தார் கணா.
‘May I call you Sam?’ இப்பொழுதுதான் றொபின் என்னைப் பார்த்துக் கதைத்தான். கணா என்னை முந்திப் பதில் சொன்னார்: ‘Oh yes, why not? Call him Sam. He’s going to be known as Sam in Canada.’
‘That’s good…’ என்று சொல்லிவிட்டு றொபின் தனது கோப்பினையும் கணா நிரப்பிய படிவத்தையும் தூக்கிக்கொண்டு போய்விட்டான். கணா என்னைப் பார்த்து ‘பார்த்தாயா, சாம், சாமின் மகிமையை?’ என்று கேட்டார்.
காலை ஆறே கால் மணி ஆகியிருந்தது. எழும்பி நின்று உளைவெடுத்துக்கொண்டே பக்கத்து அடைப்பை எட்டிப் பார்த்தேன். அந்தக் கோப்பித்தூள் நிறத்தவள் நிமிர்ந்த நிலையில் கண்களை மிருதுவாய் மூடியிருந்தாள். பொன்கீற்றுப் போன்ற கூந்தல் அவள் தோளை வருடியது. கழுத்திலிருந்து நாவல் நிறத்தில் மடிந்து தொங்கிய பட்டுத்துணி அவள் மார்பில் துவண்டது. திடீரென விழித்து என்னைப் பார்த்துவிட்டு மீண்டும் கண்களை மிருதுவாய் மூடிக்கொண்டாள்... கணாவின் சொற்கள் என் காதில் விழுந்தன: ‘அவள் பிறேசில்காரி, சாம். அது கோப்பித்தூளுக்குப் பேர்போன தேசம். அவளுடைய உடம்பு கோப்பித்தூள் பட்ட உடம்பு... றொபின்தான் அவளையும் விசாரிக்கப் போகிறான்...’
கணா திரும்பவும் கத்தரி வெருளி வேடம் தரித்து புறப்படும்பொழுது ஒரு கடதாசி அட்டையை எடுத்து நீட்டினார். அதில் இப்படி அச்சிடப்பட்டிருந்தது:
கணா
மொழிபெயர்ப்பாளர்
905 874 2106
கணா விடைபெறும்பொழுது என்னிடம் கேட்டார்: ‘சாம், மாதகலில் எனக்கொரு மருமகள் இருக்கிறாள்... உனது முகவருடன் என்னைத் தொடர்புபடுத்தி விடுவாயா?’
__________________________________________________________________
மணி வேலுப்பிள்ளை, 2002/10/23 (பல்வேறு இதழ்களில் வெளிவந்த கதை)
No comments:
Post a Comment