“எங்கள் சரித்திரத்தை எங்களைப் போலொத்த ஓர் ஏழைப்பெண் எங்கள் மேல் அனுதாபங்கொண்டு எழுத ஏவப்படுவாளேயல்லாமல், இதில் ஓர் ஆண்பிள்ளை நேரம்போக்க ஏதொன்றுமில்லை” என்கிறாள் இந்நாவலின் தலைமகள் கண்மணி. இறக்குந் தறுவாயில் அவள் வாய்ப்பிறப்பு அது. எனினும், இந்நாவலாசிரியரோ “புகழ் பூத்த நியாயதுரந்தராகவும் பூஜ்யராகவும் அறிஞராகவும் திகழ்ந்த கலாநிதி ஐசாக் தம்பையாவின் மனைவியாரான மங்களநாயகம் தம்பையா” ஆவார்.
பருத்தித்துறை ஜே.ரி. அப்பாப்பிள்ளை “நூற்பிரயோகம்” என்று தலைப்பிட்டு இந்நாவலுக்கு எழுதிய முன்னுரையில், “தின்னத் தின்னத் தெவிட்டாத தெள்ளமுதுபோல, இந்நூலும் வாசிப்போர்க்கு எஞ்ஞான்றும் பிரீதியே கொடுக்குமென்றும், வாசிக்கும் பொருட்டு இதனைக் கையிலேந்தினோர், முற்றும் வாசியாது கைநெகிழவிடுதல் கூடாதென்றுஞ் சற்றுமையமின்றித் துணிகின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார். இத்துணிபு முற்றிலும் உண்மை என்பது எமது சொந்த அனுபவம்.
நாவலின் கருவை அப்பாப்பிள்ளை ஒரே வசனத்தில் எடுத்துரைத்துள்ளார்: “தம்முடைய அரிய உதரக்கனிகளாகிய பெண்பிள்ளைகளைத் தெய்வ பயமற்ற துட்டர்கையில் மனைவியராகக் கொடுக்கும்படி பெரும்பாலுமேவி விடுகின்ற பொருளாசையென்னுங் கொடியநோய்வாய்ப்பட்டு வருந்துந் தந்தைகளது நிலமையைக்கண்டு பரிதாபித்து அரிய சற்போதகமாகிய மருந்தை இனிய சரித்திர ரூபத்துட் பொதிந்து ஆசிரியர் கொடுத்திருக்கின்றார்.”
ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் (1914-ல்) வெளிவந்த இந்த நாவலின் பிரதி ஒன்றை, இலங்கை முழுவதும் அப்பழுக்கற்ற காட்டுமிராண்டித்தனம் மேலோங்கிய அண்மைக் காலகட்டத்தில், பேராயர் கலாநிதி எஸ். ஜெபநேசன் அரும்பாடுபட்டுக் கட்டிக்காத்து வந்துள்ளார். பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா, யாழ்ப்பாணம் “புனைவகம்” ஊடாக அதனை மீளப்பதிப்பித்துள்ளார். விலை ரூபா 475.
எத்துணை அரிய காலகட்டத்தில் இந்த நாவல் தலைகாட்டியது என்பதற்கு, அதன் முதற் பந்தியே சான்று பகர்கிறது: இலங்கையின் முடியாய் இலங்கும் யாழ்ப்பாண நாட்டிலே கல்விச்சாலைகளும் செல்வப்பிரபுக்களும் மலிந்து பொலிந்து விளங்குமோர் சிறு கிராமம் உண்டு. இக்கிராமத்தில் பசுமையான புற் கம்பளத்தால் மூடப்பட்ட மைதான வெளிகளையும் குளிர்ந்த நிழல்கொடுக்குஞ் சோலைகளையும் ஆங்காங்கே பலவகைக் கனிகொடுக்கும் ஏராளமான விருட்சங்களையும் இவ்விருட்சங்களின் கனிகளைக் களிப்போடுண்டு சந்தோஷத்துடன் பாடும் பலவர்ணப் பட்சிசாலங்களையும் அழகிய தாமரைத் தடாகங்களையும் அத்தடாகங்களில் குருவியினங்கள் வந்து மிகு மகிழ்ச்சியோடு கூடுவதையும் அரிய சுகந்தங்கொடுக்கும் மல்லிகை, முல்லை, செவ்வந்தி, செண்பகம், மகிழ், மருக்கொழுந்து, திருவாத்தி, றோசா முதலியன நிறைந்த பூங்காவனங்களையும் அப்பூங்காவனங்களில் இனிய கீதங்களை இசைக்கும் வண்டினங்களையும் அவை செடிக்குச்செடி புட்பத்திற்குப்புட்பம் பறந்து பலவர்ணமாய் இலங்கிக்கொண்டிருப்பதையும் எந்நேரமும் இன்பமான குளிர்காற்றுப் பூங்காவனங்களிலும் விருட்சங்களிலும் செடிகளிலும் வீழ்ந்து கிசுகிசுவென்று வீசிக்கொண்டிருப்பதையும் காணலாம். அரிய பெரிய தேவாலயங்களும் கோயில்களும் கல்விச்சாலைகளும் வீடுகளும் மற்றும் பாரிய கட்டடங்களும் இக்கிராமத்திற் கூடாகச் செல்பவர்களின் கண்ணைகவராதுவிடா. செழிப்புஞ் சிறப்பும் நிறைந்தோங்கும் இக்கிராமத்திலுள்ள விருட்சங்களுக்கும் பயன்களுக்கும் மழைத்தாழ்ச்சியான காலத்திற் கமக்காரர் நீர் பாய்ச்சுவார்கள். சுருக்கிக்கூறின் இக்கிராமம் ஏதேன் தோட்டத்தை நிகர்த்ததென்னலாம்.”
இந்த நாவலில் “யாழ்ப்பாணம்” திரும்பத் திரும்ப “யாழ்ப்பாண நாடு” என்று குறிப்பிடப்படுகிறது. இது யாழ்ப்பாண வரலாற்றின் தனித்துவத்தை உணர்த்தும் மொழிவழக்கு. அத்தகைய நாட்டில் மக்களை வேட்டையாடும் நோக்குடன் பல்வேறு தரப்புகள் தம் படைக்கலங்களுடன் பல திசைகளுக்கும் சென்றுவந்துள்ள அண்மைக் காலகட்டத்தில், “சிலர் வேட்டையாடும் நோக்கமாய்ப் பல திசைகளுக்குந் தம் துப்பாக்கிகளுடன் சென்ற” அன்றைய காலகட்டத்தை விதந்துரைக்கும் இந்நாவலை நயந்துவக்க நேர்ந்தமை எத்துணை முரண்நகை!
“கண்மணியைக் கண்ணுற்றது” என்னும் முதலாம் அத்தியாயத்தில், அரசாங்க உத்தியோகம் சார்ந்த சமூக ஏற்றத்தாழ்வு வெளிப்படுகிறது. தகப்பன் சுப்பிரமணியர் அரசாங்க உத்தியோகதிலிருந்து நீக்கப்பட்டது குறி த்து மகள் கண்மணி கூறுகிறாள்: “ஐயா! ...நாங்கள் உத்தியோகத்தை இழந்துவிடச் செய்ததும், மனுஷர் பார்வையில் தங்களைக் கடவுள் மானபங்கப்படுத்தியதும், பெருந்துக்கமும் வெட்கமுமாயிருக்கின்றது.” அதற்கு, “கண்மணீ! ... உலகத்தவர்களின் கண்முன் நான் மானவீனப்பட்ட பொழுதிலும்...” கடவுள் தன்னைக் கைவிடவில்லை என்று அவளுக்கு ஆறுதல் கூறூகிறார் தகப்பன்.
“அருளப்பா” என்னும் 2ம் அத்தியாயத்தில் அருளப்பாவின் தகப்பன் கைலாசபிள்ளை இடும் முழக்கத்தில் புலப்படும் உடைமை, உத்தியோகம், குலம் சார்ந்த ஏற்றத்தாழ்வுகள் இன்றும் செல்லுபடியாகும்:
“நீ சுப்பிரமணியரின் மகளை விவாகஞ்செய்ய நினைத்திருக்கிறா யென்பதாகக் கேள்விப்பட்டேன். உன்னைப்போல் மடையனை நான் காணவில்லை. சுப்பிரமணியரின் குலமென்ன? அவரிடம் என்ன சீதனம் பெறலாமென்று எண்ணியிருக்கிறாய்? அவர் அரசாட்சி உத்தியோகத்திலிருந்து விலக்கப்பட்டுச் ‘சாணும் வளர்க்க அடியேன் படுந்துயர் சற்றல்லவே’ என்று திரிந்து சிறிது காலத்திற்கு முன் சொற்ப முதலுடன் வியாபாரத்தில் கையிட்டார். உனக்கு சீதனம் தருவதற்கு அவருக்கு வழிவகையாது? முதலாவதாக நீ அவரின் குடிகுலத்தையும், எங்கள் குலத்தையுமெண்ணாது பெண்ணைக்கண்டு இன்னற்பட்டு எல்லாவற்றையும் மறந்து என்னெண்ணப்படி நடவாது அவளை மணம் முடிக்கத் தீர்மானித்தது எனக்கு நூதனமாயிருக்கிறது. ஆகா! பெருங் கெட்டிக்காரனாகவிருக்கிறாய். உன் மைத்துனி சற்குணவதிக்கு உன்னை மணஞ்செய்துவைக்க நான் தீர்மானித்திருப்பதையும், உனக்கோர் மைத்துனி இருப்பதையும் முற்றாய் மறந்து ‘மாடு நினைத்த இடத்தில் பட்டியடைக்கலாம்’ (என்று) எண்ணினாய் போல் விளங்குகின்றது. பெற்று வளர்த்த உன் பெற்றாரின் விருப்பத்தைச் சற்றும் வினாவாது, சுப்பிரமணியரின் மகளை விவாகஞ்செய்யவா யோசித்து இவரிடம் தூதுசொல்லிவிட்டாய்? மடத்தனமான எண்ணங்களை விட்டுப்போட்டு என்முன் நில்லாது போய்விடு.”
மகன் அருளப்பாவின் நிலைப்பாடு அதற்கு நேரெதிர்மாறானது மட்டுமல்ல, என்றென்றும் செல்லுபடியாக வல்லது. அவன் தாயிடம் சொல்லுகிறான்: “அம்மா! ... சுப்பிரமணியரை அரசாட்சியார் உத்தியோகத்திலிருந்து அநியாயமாய் விலக்கியது எனக்கு நல்லாய்த் தெரியும். அவர் களவெடுத்ததால் அல்லது இழிவான செய்கையைச் செய்ததால் விலக்கப்படவில்லை. தம் துரைமாருக்குச் சாஷ்டாங்கஞ்செய்து அடிபணியாததால் விலக்கப்பட்டவரென்றும், நீதி, நெறி நேர்மை நிறைந்தவராதலால் துரைமாருடன் நியாயமாய் எதிர்த்து வாதாடி வந்தவரென்றும் விசாரணையில் அறிந்தேன். அப்படிப்பட்ட குணம் வியக்கப்படதக்கதன்றி இழிபானதல்ல. அவர் இப்போது வியாபார முயற்சியிற் கையிட்டு முன்னிருந்ததிலும் நேர்த்தியாகவிருக்கிறார். சீதனம் மோசமில்லாமற் தருவார். எனக்குச் சீதனத்தைப் பற்றிக் காரியமில்லை. அவரின் மகளை நான் கண்டு அவள் அழகானவளென்றும், அவள் முகத்தோற்றத்திலிருந்து நற்குணசாலியென்றும் நன்றாய் மட்டிட்டுக் கொண்டேன். அவளுக்குச் சாதாரண கல்வியறிவு உண்டென்றும் விசாரணையில் அறிந்தேன். இம்மூன்று இலட்சணங்களுமிருப்பதால் அப்பெண்ணை நான் விவாகம் முடிப்பதற்கு நீங்கள் தடைசொல்ல நியாயமில்லை. சீதனத்தை ஒரு பெருங் காரியமாய்க் கவனிக்கலாமா? ஐயா சுப்பிரமணியரின் குடிகுலத்தையிட்டு இரண்டாந் தரமாகப் பேசினார். சாதி பார்ப்பதைப் போல் மடைமை ஒன்றுமில்லை. ‘குலத்தளவேயாகுங் குணம்’ என்றபடி ஒவ்வொருவரின நடையினாலேயே அவரவர் குலம் விளங்கும். சுப்பிரமணியரின் விஷேஷமான குணத்தையிட்டு வியந்து பேசாதார் யார்? எவரும் அவரையொரு நற்குணசாலியென நன்குமதித்து நடத்துகிறார்கள். அவரோர் சிறு வியாபாரியாயிருந்த போதிலும் அவருக்கு நடக்கும் மதிப்புப் பெரிய உத்தியோகத்தர்களுக்கில்லை. இதை நீங்கள் விசாரித்தறிந்து கொள்ளலாம். இன்னும் எங்களுக்கெத்தனைபேர் வசை சொல்லுகிறார்கள்; எந்தக் குடும்பத்தைத்தான் குற்றஞ் சொல்லாதும் வசை சொல்லாதும் விட்டிருக்கிறாகள். எங்களுக்கு வசை சொன்னதை என் காதாரக் கேட்டிருக்கிறேன். சுப்பிரமணியருக்கும் அப்படியே யாதும் வசை சொன்னதை ஐயா கேட்டிருக்கிறபடியால்தான் அவரையிட்டு இழிவாய்ப் பேசினாராக்கும். ஆண்சாதி பெண்சாதியென இருசாதிகளன்றி வேறுசாதிகளிருப்பதை நான் விசுவாசிக்கவில்லை. அப்படித்தான் சாதியென நீங்கள் நின்றாலும், சுப்பிரமணியரையும் வேளாளரென்றுதான் யாவரும் ஒத்துக்கொள்ளுவார்கள். நாங்களும் வேளாளர்தான், அவரும் வேளாளர்தான். நாங்கள் அவரிலும் உயர்வென்று எப்படிச் சொல்லலாம்? நான் முன்சொல்லியபடி உலகத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் பலரும் வசை சொல்வது எம் ஊர் வழக்கம். ஆனபடியால் சாதியை முக்கியமாய்க் கவனிப்பதை நாங்கள் விட்டுப்போடவேண்டும்.”
வேறொரு தருணத்தில் “...ஆஸ்தி இல்லாக்குறை ஒன்றைத்தவிர மற்ற விஷயங்களில் அவள் ஒன்றாலுந் தாழ்ச்சியற்றவளென்பதற் கையமில்லை...” என்கிறான் அருளப்பா.
அருளப்பா-கண்மணி திருமணம் கண்டு வெகுண்டெழுந்து, தன் மகள்வீடு சென்று தங்கியிருந்த கைலாசபிள்ளையிடம் செல்லும் கண்மணி, “அவரை வீட்டுக்கு வரும்படி தயவாய்க் கேட்டாள். அவளின் தயாள குணத்தையும் ஆதரவையும், பரிதாப கோலத்தையும் கண்டு, அவள்மேல் மனமிரங்கி மறுத்துக்கொள்ள இயலாதவராய்த் தாம் வருவதாய் வாக்கிட்டு, அவளை அனுப்பி வைத்தார். அன்றே அவர் கண்மணியை முதன்முறை கண்டார். அருளப்பா சொல்லை மீறித்தன்னெண்ணத்திற்கு ஆஸ்தி பணங்குறைந்த ஒரு பெண்ணை மணம் முடித்தபோதிலும், அவள் குணம் ஆஸ்தியிலும் மேலானதென்றெண்ணிப் புறப்பட்டுப்போய், அன்று முதலாக அவரும் அவர் மனைவியும் அருளப்பாவுடன் வசித்து வந்தார்கள்.” மாமனாரின் நிலைப்பாடு சற்று மாறியமை கண்மணியைப் பொறுத்தவரை சாதகாமான ஒன்று. அதேவேளை கணவனின் நிலைப்பாடு உடனடியாகவே அவளுக்குப் பாதகமாய் மாறுகிறது:
“...தான் எவ்வளவோ தன் புருஷனை நேசித்து, தன்னை அவனுக்கு முற்றாய் ஒப்புக்கொடுத்தும், தன்னைப் புறத்திபண்ணித் தங்களிரகசியங்களை மறைத்துக்கொள்வதை நினைத்து (அவள்) மிகத் துன்புற்றாள்... தன் நிலைமையிலும் தன் மனைவியின் நிலைமை மிகக்கீழானதென்று அருளப்பா எண்ணி அவளை ஒருபோதும் அவளின் தகப்பனார் வீட்டுக்குக் கூட்டிப்போவதில்லை... சில சமயங்களிற் கண்மணி தன் நிலைமைக்கேற்ற பெண்ணல்லவென்றும், தான் ஒரு ஐசுவரியவானின் மகளை மணஞ்செய்யத் தகுதியுள்ளவனென்றுஞ் சொல்வதுண்டு... ‘என் தகப்பனாரின் விருப்பத்திற்கு மாறாய் உன்னை நான் விவாகஞ் செய்துகொண்டதால், அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பல நயங்களையுமிழந்தேன். என் ஒரேயொரு சகோதரியின் ஒற்றுமையையுமிழந்தேன். உன்னை விவாகஞ்செய்து கொண்டதால் எனக்கு ஒரு நயஞ்சுகமில்லை... உனக்கு மனுஷர் முகத்தில் முழிக்க வெட்கமில்லையா? பூரணத்தோடு நீயுஞ் சரிவந்தவள்போல் எதிர்த்துப் பேசத் துணிந்ததெப்படி?” கண்மணியின் தமையன் பொன்னுத்துரையையும் அருளப்பா ஏசுகிறான்:
“...உன் எளிய குலத்துக்கடுத்த குணம் வெளித்தோற்றப்படாது போகுமா? ... எங்கள் குலத்துக்கீனமான செய்கையை நான் மதிமயங்கிச் செய்து கொண்டதாலடையும் இலச்சை இம்மட்டென்றில்லை. உன் தங்கை தன் குலத்துக்கேற்கக் களவு முதலிய இழிவான செய்கைகளைச் செய்து என்னையும் மனுஷர் கண்ணில் விழிக்காமல் செய்கிறாள். என்னைப் பிடித்த சனியன் எப்போது தொலையுமோ அறியேன்... இச்சமயமே நீங்களிருவரும் என் வீட்டைவிட்டுப் புறப்பட்டு விடாதிருந்தாற் தகுந்த ஆக்கினைக்குள்ளாவது நிச்சயம்.”
கண்மணி தன் கணவனிடம் அடியுண்டு, உதையுண்டு, இதயம் நொறுங்குண்டு இறக்குந் தறுவாயில் அவன் மனமாற்றத்துக்கு உள்ளாகி, தான் இழைத்த கொடுமைகளுக்காக அவளிடம் மன்னிப்புக் கோருகிறான். அவள் இறந்தபின் அவளுடைய உடலைப் பார்த்து, “... உனக்குத் துயரமே ஆடையாகவும் கண்ணீரே ஆகாரமாகவும் தந்தேன்...” என்று அலறுகிறான். அரியதொரு பதுமை போன்ற கண்மணியின் “நொறுங்குண்ட இருதயம்” எந்த ஒரு வாசகரின் உள்ளத்தையும் கசிந்துருகச்செய்யும்.
குலோத்துங்கரின் மகள் பொன்மணி கைலாசபிள்ளையின் அடுத்த மகன் அப்பாத்துரையை மணம் முடிக்க மறுப்புத் தெரிவித்த வீராங்கனை ஆவாள். அப்பாத்துரை கொடுத்தனுப்பிய “ஓர் சுகந்த வாசனைக் குப்பியும், இன்னுஞ் சில சாமான்களும்... தங்கக் காப்பும் ... with my fondest love” என்று பொறித்த கடதாசித் துண்டும் குலோத்துங்கர் கண்ணில் படவே, “வலியவந்த சீதேவியைக் காலாற்தள்ளும் மூதேவியை என்ன செய்யலாம் என விசனத்துடன் சொன்னார்.”
பொன்மணி அதற்கு மசியவில்லை: “நான் என் மானத்தைக் காக்கவேண்டியது மிக அவசியம்... ஐசுவரியத்தை நான் பெரிதாயெண்ணவில்லை. ஐசுவரியம் ஓடும் புகையையும், எழும்பும் நீர்க்குமிழியையும் நிகர்த்தது... ஐசுவரியவானிலும் குணசாலியே ஆயிரம் மடங்கு விஷேஷித்தவன்... அப்பாத்துரையின் ஐசுவரியத்தையிட்டு நாங்கள் அகந்தை கொள்வோமானால், எங்களுக்கும் அழிவுகாலம்...” என்று முழங்குகிறாள்.
தகப்பனோ, “பொன்மணி சொல்வதெல்லாம் நியாயமா யிருக்கின்றதே!” என்று முணுமுணுக்கிறார். நிலைமையை அறிந்த சம்பந்திகளோ, “ஆடு நினைத்த இடத்திலா பட்டியடைக்கிறது? ... பெண்ணுக்குமொரு மூச்சா? வெட்கமான வார்த்தையை வெளியில் விடாதேயும். பெண்புத்தி கேட்பவரிற் பேதையரில்லை... இவ்வாறு ஒவ்வொருவரும் பகிடிபண்ணத் தொடங்கினார்கள்...” உரோசம் கொண்ட குலோத்துங்கர் சட்டுப்புட்டென்று திருமணைத்தை ஒப்பேற்ற உத்தரவு பிறப்பிக்கிறார்.
கடவுள்மீது கொண்ட நம்பிக்கை ஆட்களையும், சமூகத்தையும் நெறிப்படுத்திய விதம் இந்நாவல் முழுவதும் இடைவிடாது விதந்தோதப்பட்டுள்ளது. அதாவது, இன்பமும் துன்பமும் இறைவன் வகுத்த விதிப்படி நிகழ்பவை. அவற்றைத் திறனாயும் அருகதை மாந்தருக்கில்லை! “...பாதிரியாரின் எழுப்புதலான பிரசங்கம்... எழுப்புதலான போதனை...” எத்தகைய தாக்கத்தை விளைவித்தாலும், கண்மணி எந்த மொழி கொண்டு கடவுளிடமும் தெய்வத்திடமும் முறையிட்டாளோ அந்த மொழி கொண்டே தேவனிடமும் கர்த்தரிடமும் முறையிடுகிறாள்! அதேவேளை “யாழ்ப்பாண நாட்டில்” வாழும் முகம்மதியரையும் நாவலாசிரியர் நினைவூட்டத் தவறவில்லை: (அருளப்பா) “பொன்னுத்துரைக்கு சலாம் சொல்லிப் புறப்பட்டான்.”
இந்த நாவலில் கண்மணி என்னும் பதுமைக்கு நேரும் கதி எந்த ஒரு மங்கைக்கும் நேரக்கூடாது என்பதை எந்த வாசகரும் ஒப்புக்கொள்வர். கண்மணி ஒரு பழைமைப்பெண் என்றால், அவளுடைய உயிர்த் தோழியாகிய பொன்மணி ஒரு புதுமைப்பெண். நங்கையர் எவரும் பொன்மணிபோல் விளங்கவும் இலங்கவும் விழைவர் என்பதில் ஐயமில்லை. கண்மணியின் தமையன் பொன்னுத்துரையும் பொன்மணியும் ஒருவரை ஒருவர் உளமார நேசிக்கிறார்கள். தொடக்கத்தில் இரு குடும்பங்களும் அதை ஏற்றுக்கொண்டன. காலப்போக்கில் சொத்துப்பத்தில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வினால், குலோத்துங்கர் பொன்னுத்துரையை விடுத்து, (“மேட்டிமையுங் கெறுவமும்” மிகுந்த) அப்பாத்துரை தனக்கு மருமகனாகுவதை வரவேற்கிறார். அதுவே தனக்கு மானம் என்பது அவர் நிலைப்பாடு. அதற்குப் பொன்மணி இம்மியும் விட்டுக்கொடுக்கவில்லை. பொன்னுத்துரையை மணப்பதே தனக்கு மானம் என்பது அவள் நிலைப்பாடு. மனச்சாட்சிக்கு மாறாகச் செய்யும் தியாகத்துக்கு அவளுடைய அகராதியில் இடமில்லை. அப்பாத்துரைக்குத் தாலிகட்டக் குறித்த வேளைக்குச் சற்று முன்னதாக அவள் ஆண்வேடம் பூண்டு, வீட்டை விட்டு நழுவி, திருமண வண்டிகளோடு வண்டியாக (பொன்னுத்துரையாலும், நவரத்தினத்தாலும்) நிறுத்தப்பட்டிருந்த வண்டியின் “முன் அணியத்தில் வீற்றிருந்து கடிவாளவார் பிடித்து மரியாதையாய்த் தங்கள் கரத்தையை எல்லா வண்டிகளுக்கும் பின் செலுத்திப் போனாள்.”
பொன்னுத்துரை, பொன்மணி, கண்மணி, நவரத்தினம் அனைவரும் மண்டைதீவு சென்று தங்கியிருக்கும்பொழுது, பொன்னுத்துரையின் முதலாளியார் வந்து பொன்மணியை விளித்துச் சொல்லுகிறார்: “மகளே! உனது விலையேறப் பெற்ற நிதானத்தையும் நிதார்த்தத்தையும் நான் மிகவும் மெச்சிக்கொள்கிறேன். நான் உனது தகப்பனாயிருப்பேனேயாகில், உன் செய்கைகளையிட்டுப் பெருமையுடையவனாயிருப்பேன்...”
“உன்னுடைய செய்கைகள் படிப்பினைக்குரியனவல்லவா?” என்று வினவும் நவரத்தினத்துக்கு இப்படி விடையளிக்கிறாள் பொன்மணி: “உலகம் என்னைப் பற்றி நன்மையாய்ப் பேசிக் கொள்ளுமென்பது ஐயமான காரியம். சிலருக்கு எனது செய்கை மிகவுங் கூடாததாகத் தோற்றக்கூடும். ஆனால் நான் என்னுடைய மனதிற்கு நீதியென்று கண்டதைச் செய்தேன்.” நவரத்தினத்தின் பதிலில் ஒரு திறனாய்வாளரின் தொனி பிறக்கிறது: “பொன்மணி! உன்னுடைய செய்கைகள் மெத்த அபூர்வமானவைகள். நீதி, நிதார்த்தம், நிதானம், மொழி தவறாத வாக்கு இவையென்பதை உனது துணிகரமான செய்கையால் எல்லாருக்கும் நல்லாய் விளக்கியிருக்கிறாய். ஆரும் மடையர் உன்னிற் குற்றஞ் சொல்வார்களேயல்லாமல், காரியத்தை விளங்கக்கூடிய புத்தியுள்ளவர்கள் ஒருக்காலுங் குற்றஞ் சொல்ல மாட்டார்கள். உன்னுடைய மேன்மையானவும் துணிகரமானவுஞ் செய்கை என்னை மெத்தவும் பெருமைக்குட்படுத்துகிறது.” அதற்குப் பொன்மணியின் அடக்கமான பதில்: “கண்மணியின் பொறுமையே மிகவும் அபூர்வமானது. எனது செய்கைகள் எல்லாம் அவளுடைய பொறுமைக்கு எம்மாத்திரம்?”
இந்த நாவலில் ஆசிரியர்-கூற்றுகள் மட்டுமல்ல, உரையாடல்களும் எழுத்துத் தமிழில் அமைந்துள்ளன. அதில் பால்படு சமத்துவம் மிளிர்கிறது: “...இதைக்கேட்ட தாயார் ‘பிச்சை வேண்டாம் நாயைப்பிடி’ என்றவன் சீலமாய்ப் பயந்து, என்ன செய்யலாமென்று தெரியாது திகைப்புற்றுத் தம் கணவனிடம் சென்று அருளப்பாவின் தீர்மானங்களையிட்டு விபரித்துப் பேசினார்...” மேலும்: “...அருளப்பாவை அவன் மாமியார் விருந்துக்கழைத்தார்...” அத்துடன், தேவைப்படும் இடங்களில் மரியாதையான யாழ்ப்பாணப் பேச்சுவழக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. கண்மணியை மணம்புரிய முன்னர் அவளுடைய தமையன் பொன்னுத்துரையிடம் அருளப்பா வினவுகிறான்: “உமது சகோதரியுடைய சுகமெப்படி? அவ அறிவு மயங்கிக் கிடந்தா. இப்போ அறிவு தெளிந்து எழுந்திருக்கிறாவா?”
ஈழத்தில் என்றென்றும் நிலையூன்றிய மரியாதையான பேச்சுவழக்குகள் “அம்மா வந்தா, அக்கா போனா” என்றெல்லாம் அமைந்திருந்தும் கூட, ஈழத்துப் புனைகதையாளர்கள் அவற்றை அவ்வாறு எழுதுவது அரிது. அவர்கள் தமிழ்நாட்டுப் புனைகதையாளர்களைப் பின்பற்றி, பெரிதும் “அம்மா வந்தாள், அக்கா போனாள்” என்றே எழுதி வந்துள்ளார்கள். எனினும் அ. முத்துலிங்கம் உட்பட, தற்பொழுது ஈழத் தமிழில் எழுதும் புனைகதையாளர்கள் சிலர் ஆசிரியர்-கூற்றுகளில் “அம்மா வந்தார், அக்கா போனார்” என்று மரியாதையும், பால்படு சமத்துவமும் புகுத்தி எழுதி வருவது கவனிக்கத்தக்கது.
“ஆங்கிலத்திலும், தமிழிலும் மிகுந்த ஆற்றலுடையவராகத் திகழ்ந்த மங்களநாயகம் தம்பையா” அவர்களின் உள்ளக்கிடக்கை அவ்வப்பொழுது ஆங்கிலத்தில் கிளர்ந்தெழுந்து தமிழுக்குள் புதையுண்டுள்ளது. அந்திமாலைப் பொழுதை அவர் “... ஒரு அஸ்தமனநேர வெளிச்சம், ... சூரிய அஸ்தமனநேர வெளிச்சம்...” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் தோற்றுவாய்: twilight. உலகத்தில் உள்ளவை அனைத்தையும் அவர் “...சூரியன் கீழ்க் கண்டதெல்லாம்...” என்று குறிப்பிட்டுள்ளார் (everything under the sun). உயிர்ப்பூட்டும் போதனையை “எழுப்புதலான போதனை... எழுப்புதலான பிரசங்கம்” என்று குறிப்பிட்டுள்ளார் (inspiring sermon அல்லது discourse). உன்னுடைய மேன்மையான, துணிகரமான செய்கை என்பதை (ஆங்கில சொல்தொடரியலால் ஆட்கொள்ளப்பட்டு) “...உன்னுடைய மேன்மையானவும் துணிகரமானவுஞ் செய்கை...” என்று அவர் குறிப்பிட்டது, your noble and bold action போன்ற ஓர் ஆங்கிலத் தொடரையே.
பொன்னுத்துரையும் பொன்மணியும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். எனினும் அதனை “காதல்” என்று நாவலாசிரியர் குறிப்பிடவில்லை. இந்நாவலில் “காதல்” என்னும் சொல் ஒரே ஒரு தடவையே எடுத்தாளப்பட்டுள்ளது. அதுகூட, பொருளாசை என்னும் கருத்துப்படவே: “... அருளப்பாவின் கேள்விப்படி அவனுக்கென்று விடப்பட்ட பங்கையும் கொடாதபடி (தகப்பன்) பின்போட்டுக்கொண்டு வந்தார். ஆயின் அருளப்பா அதே காதலாயிருந்து நெடுகலும் தொந்தரவு செய்துகொண்டு வந்ததால்...”
ஏற்கெனவே “வண்டி, திருக்கல், ஒற்றை மாட்டு வண்டி, இரட்டை மாட்டு வண்டி” போன்ற சொற்கள் வழங்கும் அதேவேளை, cart என்னும் ஆங்கிலச் சொல் “கரத்தை” என்னும் உருவில் தமிழுக்குள் புகுந்து இந்த நாவலிலும் பிற படைப்புகளிலும் இடம்பெற்றுள்ளமை கவனிக்கத்தக்கது.
இந்த நாவலின் தலையாய பாத்திரங்கள் அனைத்தும் சைவத்தை விடுத்து கிறிஸ்தவத்துக்கு மாறுகின்றன. அருளப்பா “கிறிஸ்துமார்க்கத்தைத் தழுவிப் பூரண விசுவாசத்துடன் உத்தம சீவியம் நடத்தி ஆறுதலடைந்தான்.” எனினும் அவன் மதம் மாற முன்னரே மனம் மாறிவிட்டான். கண்மணி தாய்மனைக்கு மீண்ட பின்னர் அருளப்பாவின் மனச்சாட்சி அவனை இடைவிடாது உறுத்துகிறது. மனச்சாட்சியே இந்நாவலின் பாத்திரங்கள் உட்பட அனைவரையும் பெரிதும் நெறிப்படுத்துகிறது. மனச்சாட்சி உடையோர்க்கு எம்மதமும் சம்மதம். எனினும் இந்நாவலாசிரியர் வாசகர்க்கு ஈயும் பரிகாரம் வேறு: “அரிய சற்போதகமாகிய மருந்தை இனிய சரித்திர ரூபத்துட் பொதிந்து ஆசிரியர் கொடுத்திருக்கின்றார்.”
அத்தகைய பரிகாரத்தை ஏற்கெனவே ஆண்டவர் ஈந்ததுண்டு. எனினும், “மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் ஆண்டவர் கண்டார். மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது. அப்பொழுது ஆண்டவர், ‘...இவற்றை உருவாக்கியதற்காக நான் மனம் வருந்துகிறேன்’ என்றார்”
“...ஆண்டவர் நறுமணத்தை நுகர்ந்து, தமக்குள் சொல்லிக்கொண்டது: ‘மனிதரின் இதயச் சிந்தனை இளமையிலிருந்தே தீமையை உருவாக்குகின்றது...” (திருவிவிலியம், பழைய ஏற்பாடு, பொது மொழிபெயர்ப்பு, TNBCLC, திண்டிவனம், 1999, ப: 8 - 11).
நாவலசிரியர் மங்களநாயகம் தம்பையா ஈயும் பரிகாரம் எதுவாயினும், “நொறுங்குண்ட இருதயம்” ஓர் அரிய நாவல் என்பதில் ஐயமில்லை (தடித்த எழுத்துகள் எம்முடையவை).
_________________________________________________________________________
மணி வேலுப்பிள்ளை 2011-03-06
No comments:
Post a Comment