ராஜபக்சாவின் ஆட்சி
தோற்றத்தில் பலம் ஆட்டத்தில் பலவீனம்
போருக்குப் பின்னர் இலங்கை அரசு
ராஜபக்சாவின் ஆட்சிபீடத்தை சூழ்ந்த வினை
காமினி கீரவெலா
ரதுபஸ்வலா: 2013 யூலை மாதத்துக்கு முன்னர் ரதுபஸ்வலா கிராமத்தை அறிந்தவர்கள் வெகுசிலரே. வளர்ந்துவரும் வெலிவெரிய நகரை அண்டிய கிராமம் அது. ரதுபஸ்வலா கிராமத்திலும், ஒருசில அண்டைக் கிராமங்களிலும் நிலநீர் மாசுபட்டு வந்தது. இயற்கை இறப்பரைப் பதனிட்டு கையுறைகள் உற்பத்திசெய்யும் தொழிற்சாலை ஒன்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவினால் தமது நிலநீர் மாசுபடுவதாக அவர்கள் முறையிட்டார்கள். தமது அவசர பிரச்சனையில் பராமுகம் காட்டிய அதிகாரிகளுக்கு எதிராக கிராமவாசிகள் ஒன்றுகூடி வன்முறையின்றி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள். 2013 யூலை மாதம் நடந்த ஆர்ப்பாட்டம் அது.
யூலை 16ம் திகதி மத்திய சூழல் அதிகாரசபையின் கம்பகா மாவட்ட அலுவலகத்தில் தமது முறைப்பாட்டை கிராமவாசிகள் முறைப்படி முன்வைத்தார்கள். தமது அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் அவசர பிரச்சனையில் அதிகாரிகள் அசண்டையாய் இருந்தது கண்டு வெகுண்டெழுந்த கிராமவாசிகள் யூலை 27ம் திகதி தமது ஆர்ப்பாட்டத்தை தீவிரமாக முன்னெடுத்தார்கள். ஆர்ப்பாட்டம் மும்முரமடைந்த சூழ்நிலையில் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் கிராமவாசிகளுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. சம்பந்தப்பட்ட தரப்புகள் ஏற்கத்தக்க இணக்கம் எதையும் எட்டத் தவறியதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் மேலும் தீவிரமடைந்தது. ஆகஸ்ட் 1ம் திகதி கிராமவாசிகள் பிரதான தெருவில் இறங்கி போக்குவரத்தை மறிக்கத் தொடங்கினார்கள்.
அந்தக் கட்டத்தில் சிறப்பு அதிரடிப் படையையும், தரைப் படையையும் களமிறக்க அரசாங்கம் முடிவுசெய்தது. ஆர்பாட்டக்காரர்களைக் கலைக்க பலவந்தத்தில் இறங்கிய படையினர் அவர்கள்மீது தண்ணீர் பாய்ச்சி, துவக்குச்சூடு நடத்தினார்கள். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராகப் படைபலம் பிரயோகிக்கப்பட்டதன் விளைவாக, அவர்களுள் மூவர் கொல்லப்பட்டார்கள். நூற்றுக்கணக்கானோர் சிறிய காயங்களுக்கும் பெரிய காயங்களுக்கும் உள்ளானார்கள்.
கட்டுநாயக்கா: போருக்குப் பின்னர் தென்னிலங்கையில் அத்தகைய சம்பவம் இடம்பெற்றது இது முதல் தடவை அல்ல. 2011 யூன் மாதம் கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்கள் தமது ஓய்வூதியம் தொடர்பான உத்தேச சட்டவாக்கம் ஒன்றை மீளப்பெறும்படி கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். வன்முறையின்றி இடம்பெற்ற அரசியல் ஆர்ப்பாட்டம் அது. அவர்களுக்கு எதிராக அரசாங்கம் காவல்துறையினரை அணிதிரட்டியது. காவல்துறையினர் அவர்கள்மீது தண்ணீர் பாய்ச்சி, கண்ணீர்க் குண்டடித்து, பொல்லடியும் துவக்குச்சூடும் நடத்தினார்கள். சுதந்திர வர்த்தக வலயத்தைச் சேர்ந்த 21 வயது நிரம்பிய தொழிலாளி ஒருவர் துவக்குச்சூட்டுக்குப் பலியானார். பெருந்தொகையானோர் காயங்களுக்கு உள்ளானதாக அறிவிக்கப்பட்டது. அந்த சம்பவத்தை அடுத்து உத்தேச சட்டவாக்கத்தை அரசாங்கம் மீளப்பெற்றது.
சிலாபம்: 2012 பெப்ரவரி மாதம் சிலாபம் பகுதியில் சில்லறை மீனவர்கள் எரிபொருள் விலையேற்றத்தை எதிர்த்து தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தபொழுது, காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக கண்ணீர்க் குண்டடித்து, தண்ணீர் பாய்ச்சி, துவக்குச்சூடு நடத்தி, ஒருவரைக் கொன்று, மூவரைக் காயப்படுத்தினார்கள். ஆர்ப்பாட்டம் தடுக்கப்பட்டது. ஆயினும் பலப்பிரயோகம் குறித்து மக்களின் சீற்றம் மேலோங்குவதை தடுக்க முடியவில்லை.
பலரின் உயிரிழப்புக்கு இட்டுச்சென்ற மேற்படி நிகழ்வுகளின் தொடர்ச்சியை நோக்கும் எவரும் ராஜபக்சாவின் ஆட்சிபீடம் நடந்துகொண்ட விதத்தைக் குறித்து இரு வினாக்களை எழுப்புதல் திண்ணம்: (1) மக்களின் ஆர்ப்பாட்டங்கள் கட்டுப்படுத்தவியலாவாறு கைமீறிப்ப்போக முன்னர் அவர்களின் பிரச்சனைகளை அரசியலதிகாரிகள் ஏன் பேசித்தீர்க்கத் தவறினார்கள்? (2) ஆயுதம் ஏந்தாது, வன்முறையில் இறங்காது, ஆர்ப்பாட்டம் நடத்திய குடிமக்களுக்கு எதிராக, குடியாட்சிநெறிநின்று நியாயபூர்வமான அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்ட குடிமக்களுக்கு எதிராக, மட்டுமீறிய படைபலத்தை அரசாங்கம் ஏன் பயன்படுத்தியது?
ஆயுதம் ஏந்தாது நியாயபூர்வமான அரசியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு எதிராகப் படைபலம், பலவந்தம் பிரயோகிப்பது உரனும் உறுதியும் வாய்ந்த அரசின் குணமல்ல, வெருண்டு வலுவிழந்த அரசின் பாவனையையே அது புலப்படுத்துகிறது என்று அடித்துக் கூறலாம். எனினும் ராஜபக்சாவின் ஆட்சிபீடம் (குறிப்பாக போருக்குப் பின்னர்) தன்னை வலிமைபடைத்த அரசாகவே காட்டிக்கொண்டது. போர் முடிந்த பின்னர் நாடெங்கும் எக்களிப்பு எதிரொலித்த தருணத்தில், பயங்கரவாதத்தை ஒழித்து, பிரிவினைவாத சித்திரவதையிலிருந்து நாட்டை மீட்டெடுத்த பெருமை முழுவதையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா தனதாக்கிக் கொண்டார்.
தற்போதைய விகிதாசார பிரதிநிதித்துவ முறைமைப்படி எந்தக் கட்சியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஈட்டமுடியாது என்று கருதப்பட்ட காலத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆட்சிபீடம் தம்பக்கம் ஈர்த்து நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஈட்டிக்கொண்டது. அறவே பிளவுண்ட எதிர்க்கட்சிகள் தம்மிடையே மோதுண்டு, அதிகாரப் போட்டியில் ஆட்சிபீடம் இச்சைப்படி காய்நகர்த்த வாய்ப்பளித்தன.
ரதுபஸ்வலா கிராமத்திலும், அண்டைக் கிராமங்களிலும் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் ராஜபக்சா அரசின் நிலைபேற்றுக்கு இம்மியும் கேடுசூழவில்லை. எந்த அரசியற் கட்சியின் பின்னணியுமின்றி, குடிமக்கள் தாமாகவே முன்னெடுத்த நடவடிக்கை அது. உரனும், உறுதியும் வாய்ந்த முகத்தைக் காட்டிய ராஜபக்சாவின் ஆட்சிபீடம் அமைதிவழியில் பிணக்குகளுக்கு தீர்வு நாடுவதை விடுத்து, ஏன் ஒடுக்குமுறையைப் பயன்படுத்த நேர்ந்தது? ஆட்சிபீடத்தின் முரண்புதிர் இங்கு புலனாகிறது: அரசியல்வாரியாக அனுகூலமான நிலைமைகள் அனைத்தும் காணப்பட்டும் கூட, தாம் பத்திரமாக இருக்கும் உணர்வு ஆட்சிபீடத்தின் அடிமனத்தில் ஏற்படவில்லை. முற்றுகைக்கு உள்ளான எண்ணமே அதனிடத்தில் காணப்பட்டது. ஆயுதம் ஏந்திய, சீருடை அணிந்த, சீருடை அணியாத படையினரை அணிதிரட்டுவதும், வன்முறையின்றி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட சொந்த மக்களைச் சுட்டுத்தள்ளுவதும் பலவீனமான ஆட்சிபீடத்தின் நடைமுறை என்பதில் ஐயமில்லை. போருக்குப் பின்னர் இலங்கையில் மெய்யாக இடம்பெற்ற ஆட்சிக்கும், அதன் வெளித்தோற்றத்துக்கும் இடையே காணப்பட்ட முரண்பாட்டைக் கருத்தில் கொண்டே ஆட்சிபீடத்தைச் சூழ்ந்த வினையை நாம் ஆராய வேண்டும்.
மெய்நிலைக்கும் வெளித்தோற்றத்துக்கும்
இடையேயான முரண்பாடு
அரசும் ஆட்சிபீடமும்: மெய்நிலைக்கும் வெளித்தோற்றத்துக்கும் இடையேயான முரண்பாட்டைப் புரிந்துகொள்வதற்கு, இலங்கை அரசின் முக்கிய அம்சங்கள் சிலவற்றில் நாம் புலன்செலுத்த வேண்டும். பன்னெடுங் காலமாக விருத்தியடைந்த அம்சங்கள் அவை. எனினும், போருக்குப் பின்னரே ராஜபக்சாவின் ஆட்சியில் அவை மிகுந்த முனைப்பும் துலக்கமும் எய்தின. அரசியல்வாரியான விளைவுகளைப் பொறுத்தவரை, அரசுக்கும் ஆட்சிபீடத்துக்கும் இடைப்பட்ட எல்லை மறைந்தமையே அவற்றுள் மிகவும் அடிப்படையான அம்சம். அரசின் தீர்க்கமான அங்கம் ஆட்சிபீடமே. எனினும் ஆட்சிபீடத்துக்கு அப்பாற்பட்டது அரசு. அரசுக்கும் ஆட்சிபீடத்துக்கும் இடையே முக்கிய, நுண்ணிய வேறுபாடு உண்டு. அந்த வேறுபாட்டைப் பேணுவது, குடியாட்சி நெறிப்படியான அரசியற் படிமுறைக்கு மிகவும் முக்கியம்.
நல்லாட்சியின் அடிப்படைகளான சட்ட ஆட்சி, அரசியல்யாப்பு நெறி மற்றும் பிற தீர்க்கமான குடியாட்சி நெறிகளின் அத்திவாரம் அந்த வேறுபாடே. அரசு, ஆட்சிபீடம் என்னும் சமாந்தர அமைப்புகள் இரண்டுக்கும் உரிய களங்களை இனங்கண்டு எல்லைகுறிக்கத் தவறியபடியாலும், ஒரு தரப்பின் களங்களை மறு தரப்பு மதிக்கத் தவறியபடியாலும், குடியாட்சிப் பொறிமுறைகளின் சமநிலை குழம்பியது. ராஜபக்சாவின் ஆட்சியில் அரச கட்டமைப்புகள் அப்பட்டமாகவே அதற்கு அடிபணிய வைக்கப்பட்டன; அவற்றின் தன்னாண்மை அப்பட்டமாகவே மீறப்பட்டது; அரசும் ஆட்சிபீடமும் ஒரே உருப்படி ஆக்கப்பட்டன; ஆட்சிபீடத்தின் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்புடன் பிணைக்கப்பட்டது; ஆட்சிபீடத்தின் உள்ளூர்ப் பாதுகாப்பு தேசிய பாதுகாப்புடன் பிணைக்கபட்டதால், தேசிய பாதுகாப்பை நிலைநிறுத்துவதாக நியாயம் கற்பித்து நியாயபூர்வமான, அரசியல்வாரியான ஆர்ப்பாட்டத்தை அடக்குவதற்கு பலவந்தம் பயன்படுத்தப்பட்டது; அரசுக்கும் ஆட்சிபீடத்துக்கும் இடைப்பட்ட எல்லை மழுங்கடிக்கப்பட்டது. ராஜபக்சாவின் ஆட்சிபீடம் அதன் குறுகிய அரசியல் நலன்களை எய்துவதற்கு ஒருபுறம் அரச கட்டமைப்புகளைப் பயன்படுத்தியது; மறுபுறம் அவற்றுக்கு ஆப்பு வைத்தது.
அரச அதிகாரமும் அரசியலதிகாரமும்: அரசுக்கும் ஆட்சிபீடத்துக்கும் இடைப்பட்ட எல்லை மறைந்ததால் இன்னொரு விளைவு ஏற்பட்டது. அதாவது, அரசியலதிகாரம், அரச அதிகாரத்துடன் சேர்க்கபட்டது. அரசியலதிகாரம், செயலளவிலும் பெயரளவிலும் அரச அதிகாரமாக மாறியது. அது வேறு பாரதூரமான விளைவுகளுக்கு இட்டுச்சென்றது: (1) ஆட்சிபீடத்தில் அரசியலதிகாரம் கொண்டோர் தாம் கையாளும் அதிகாரத்துக்கு எல்லை இல்லை என்பதைக் கண்டுகொண்டனர். அரச கட்டமைப்புகள், ஆட்சிபீடத்தின் குறுகிய அரசியல் நலன்களுக்கு அடிபணிய வைக்கப்பட்டன. அரச அதிகார கட்டமைப்புகள், ஆளும் கூட்டமைப்பின் அதிகாரக் கட்டமைப்புகளாக மாறின. (2) அரச கட்டமைப்புகளைக் கட்டியாளும் வல்லமை, ஆளும் கட்சியின் ஊடாக அதன் பரந்துபட்ட அரசியல் முகவர்களைச் சென்றடைந்தது.
அரச கட்டமைப்புகள் மீதும், நிர்வாகிகள் மீதும் அதிகாரம் செலுத்தியோர் சட்டவாக்க கட்டமைப்பு எதிலும் தவறாது அங்கம் வகிக்க வேண்டி இருக்கவில்லை; மாறாக, ஆட்சிபீடத்தின் அரசியலதிகாரத்தைச் செலுத்தும் பிரதிநிதிகளாக மட்டுமே விளங்க வேண்டியிருந்தது. அரச கட்டமைப்புகள் அனைத்திலும் அரசியலதிகாரமே மேலோங்கியது. காவல்துறை நிலையங்கள், பிரதேச செயலகங்கள், பள்ளிக்கூடங்கள் போன்ற உள்ளூர் அரச கட்டமைப்புகளின் தலைமையைத் தீர்மானிப்பதில் உள்ளூர் அரசியல் தலைமையின் குரலே தீர்க்கமான பங்கு வகித்தது. திணைக்களங்கள், கட்டமைப்புகள், நடைமுறைகள் ஆகியவற்றின் உள்ளகத் தொழிற்பாடுகள் அனைத்தும் அரசியல் விருப்புக்கு அடுத்தபடியானவையாக மாறின.
அதிகாரப் படிநிலை: முழுவல்லமை படைத்த நிறைவேற்று ஜனாதிபதிபீடம் அதன் அதிகாரத்தைச் செலுத்துவதில் அரசியல்யாப்புவாரியாக எதிர்கொண்ட ஏனைய தடைகள், கட்டுப்பாடுகள், மட்டுப்பாடுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டன. 2010 புரட்டாதி மாதம் அரசியல்யாப்பில் புகுத்தப்பட்ட 18வது திருத்தத்துடன் அப்படிமுறை உச்சத்தை எட்டியது. அரசியல்யாப்புவாரியான கடுங்கோன்மைக்கு வேண்டிய அடுக்கணியங்கள் அனைத்தையும் ஆட்சிபீடம் படிப்படியாக உருவாக்கிக் கொண்டது. அரச கட்டமைப்பிலும், நீதிபரிபாலனத்திலும் மக்கள் நம்பிக்கை இழக்குமிடத்து, சட்டத்தை மீறிச் செயற்படுவதை விட அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை.
அரசியல்-வரலாற்று அரங்கில் மேற்படி அம்சங்களை நாம் இனங்காண்பதற்கு, அரசியல் நிகழ்வுகளை நாம் கவனிக்க வேண்டும். அவை ஒன்றுடன் ஒன்று முரண்படுபவை போல் தோன்றினாலும், உண்மையில் அவை ஒன்றுடன் ஒன்று இரண்டறக் கலந்தவை. மத்தியில் நிலைகொண்ட நிறைவேற்று ஜனாதிபதியின் கைகளில் அரச அதிகாரம் மேன்மேலும் குவிந்துவருவதே எமது கவனத்தை ஈர்க்கும் முதலாவது அம்சம். அரச அதிகாரத்தின் இடைநிலை அடுக்கில் பெருந்தொகையான அரசியல் முகவர்களை உள்வாங்குவது இரண்டாவது அம்சம். இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று முரண்படுபவை போல் தோன்றும். உண்மையில் அப்படி அல்ல. அவை முரணியக்கவாரியாக ஒருமைப்படும் இருமைகள்.
அரசியலின் ஊடாகவும், அரசியல்யாப்பின் ஊடாகவும் என்றுமிலாவாறு மட்டுமீறிய அதிகாரம் படைத்த நிறைவேற்று ஜனாதிபதிக்கு மத்தியிலும், மாவட்டங்களிலும், கிராமங்களிலும் அதிகாரம் செலுத்துவதற்கு பற்பல அலுவலர்களும், முகவர்களும் தேவை. பல்வேறு மட்டங்களிலும் "அரசுக்கு சொந்தக்காரர்கள்" பலர் இருக்கிறார்கள். தத்தம் பிரதேசங்களில் "நானே அரசு" என்று வலியுறுத்தும் பேர்வழிகள் பலர் இருக்கிறார்கள். அதாவது: (1) மத்தியில் மட்டுமீறிய ஆட்சியதிகாரம், (2) பிராந்தியங்களில் உப-ஒப்பந்திகளாக உள்வாங்கப்பட்ட அரசியற் பொறுப்பாளர்கள் செலுத்திய அதிகாரம்.
அவை ஒரே ஆட்சிபீடத்தில் இரண்டறக் கலந்தவை. அத்தகைய அட்சிபீடம் இயங்கிய விதத்தை வைத்துப் பார்க்கும்பொழுது, அது நவீன குடியாட்சியிலிருந்து நெடுந்தூரம் விலகி நிலைகொண்ட அரசியல் முறைமை என்பது புலனாகும். உண்மையில் அது குடியாட்சி உடை அணிந்த "நவ அரசியல் மானியமுறைமை" ஆகும். அதில் அரச அதிகாரம் செலுத்தியோர், அரசு தமக்குச் "சொந்தம்" என்றும், அதை அப்படியே கட்டிக்காப்பது தமது தலையாய கடமை என்றும் நம்பினார்கள். தமக்கு அரச அதிகாரம் கிடைப்பது, முற்றிலும் தமது அரசியலதிகாரத்திலேயே தங்கியிருக்கிறது என்பதால், அரச அதிகாரத்தில் நிலையூன்றுவதற்காக அவர்கள் எதையும் செய்யத் தயாராக இருந்தார்கள். அவர்களுக்கு அது வாழ்வதா, மாள்வதா என்ற பிரச்சனை. அவர்கள் துய்த்த சமூக அங்கீகாரம், ஆதிக்கம் முழுவதும் அரசியலதிகாரத்திலேயே தங்கியிருந்தது. அரசியலதிகாரம் இல்லையேல் அவர்களுட் பலர் வெறும் பதர்களாய் மாறிவிடுவர்.
மாகாண மன்ற முறைமை: அதிகாரப் பரவலாக்கத்தை மேம்படுத்தும் பொருட்டு, அரசாங்கத்தின் இரண்டாம் மட்டத்தில் நிலைகொள்ளும் வண்ணம், மாகாண மன்ற முறைமை 1987ல் புகுத்தப்பட்டது. எனினும் அதிகாரப் பரவலாக்கத்துக்கு உசிதமான அரசியற் பண்பாடும், நல்லாட்சி வழமைகளும் கைக்கொள்ளப்படவில்லை. ஏற்கெனவே மேலோங்கியிருந்த அரசியற் பண்பாட்டினாலும், வழமைகளினாலும் மாகாண மன்ற முறைமை முழுவதும் கருவறுக்கப்பட்டது; ஒட்டுண்ணி "அரசியல் வர்க்கம்" அரச வளங்களை ஈட்டுவதற்கு இன்னொரு வழிவகையாக மாகாண மன்ற முறைமை பயன்படுத்தப்பட்டது.
மேற்படி நிகழ்வுகளுடன் தொடர்புடைய பொருளாதார, அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு அரசுத் துறையைத் தொடர்ச்சியாக விரிவாக்க வேண்டியிருந்தது. பொருளாதார விருத்திக்குத் துணைநின்று, நியாயபூர்வமான விநியோகத்தை நிலைநாட்டுவதற்கு பொருளாதார அலுவல்களில் நேரடியாகத் தலையிட வேண்டும் என்ற கருத்து 1956ம் ஆண்டின் பின்னர் முன்வைக்கபட்டது. அரசுத் துறையை விரிவாக்கினால், அதிகாரம் செலுத்துவோரது கட்டுப்பாட்டின் கீழ் தேசிய பொருளாதார வளங்களும், பொருளாதார செயற்பாடுகளும் பல்கிப் பெருகும் என்னும் உணர்வு கடுகதியில் மேலோங்கியது.
அரச கூட்டுத்தாபனங்கள்: அரசின் நேரடித் தலையீடு தொடர்ச்சியாக விரிவடைய, அரசே மாபெரும் உருப்படியாக மாறி மக்களை அமுக்கி வந்தது. எவருமே தொடத்துணியாத பரிசுத்த பசுவாக அது மாறியுள்ளது. ராஜபக்சாவின் ஆட்சியில் அரசினால் நிர்வகிக்கப்படும் சேவைத்தாபனங்கள் பலவும் செயலளவில் வாடகை அறவிடும் தாபனங்களாகவே விளங்குகின்றன. அரச தொழிலக குழு (COPE) விடுத்த அறிக்கையின்படி அவற்றுட் பல வெறுமனே துர்நிர்வாகத்தாலும், அரசியல் ஊழல்களாலும், நிர்வாக ஊழல்களாலும் பாரிய இழப்புக்கு உள்ளாகி வந்துள்ளன. ஆய்வுக்கு உட்பட்ட அரச நிறுவனங்களில் கோடிக்கணக்கான ரூபா வரையான அரச நிதி எண்ணிறந்த தடவைகள் விரயத்துக்கும், ஊழலுக்கும், துர்நிர்வாகத்துக்கும் உள்ளானதை அந்த அறிக்கை அம்பலப்படுத்தியது. அத்தகைய தவறுகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை, அல்லது எடுக்கப்பட்டது அரிது. இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மிகின் லங்கா என்பன நட்டப்பட்டமை விதிவிலக்கல்ல, வழமை.
அரசியலதிகாரமே சொர்க்கத்தின் சாவி. அரசியலதிகாரத்தின் ஊடாகவே அரச வளங்கள் கையுக்கு எட்டின. அரசியலதிகாரம் ஓங்குந்தோறும் பல்வேறு மட்டங்களிலும் அரச வளங்களைச் சுரண்டுவதற்கு எண்ணிறந்த வாய்ப்புகள் "அரசியல் வர்க்கத்தை" வந்தடைகின்றன. அரசியலதிகாரத்தின் ஊடாகவே சமூகத்தில் அவர்கள் அங்கீகாரம் துய்த்தார்கள். அது மாத்திரமன்றி, அதனூடாகவே அரச வளங்களை உறிஞ்சுவதற்கும் அவர்கள் அதிக வாய்ப்புகளைப் பெற்றார்கள். சில ஆண்டுகளாக ஆளும் கூட்டமைப்புடன் இணைந்திருந்தோர் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு ஈட்டிய செல்வத்துக்கு வேறு விளக்கம் அளிக்க முடியாது.
கட்சியும் தலைமையும்: ஒருபுறம் ஆளும் கூட்டமைப்பின் உயர்மட்டத்தவர்களுக்குரிய சலுகைகளும், சிறப்புரிமைகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பெருங்கட்டுமானத் திட்டங்கள் அனைத்திலும் ஒப்பந்தங்களையும், உப-ஒப்பந்தங்களையும் பெற்றுக்கொள்வது யார் யார் என்பதை உயர் அரசியல் தலைமைப்பீடமே தீர்மானித்தது. மறுபுறம் இரண்டாம், மூன்றாம் மட்டங்களில் நிலைகொண்ட அரசியல் முகவர்களுக்கு சிறிய அரச ஒப்பந்தங்கள், உப-ஒப்பந்தங்கள் ஊடாக இழப்பீடு வழங்கப்பட்டது. இப்படி வடிகட்டாமல் மேற்படி ஆட்சிபீடத்தைப் பேணமுடியாது. இந்நிகழ்வுகள் அனைத்தும் சேர்ந்து அரசையும், ராஜபக்சாவின் ஆட்சிபீடத்தையும் குறித்து மக்களின் எண்ணப்போக்கில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தின.
அரசின் தன்மை, தொழிற்பாடுகள் சார்ந்த மேற்படி புதிய நிகழ்வுகளுக்குச் சமாந்தரமாக முழு அரசியல் முறைமையும் படிப்படியாக மாற்றப்பட்டது; கட்சியை மையப்படுத்திய அரசியல் முறைமை ஆளை மையப்படுத்திய அரசியல் முறைமையாக மாற்றப்பட்டது. கட்சியின் அதிகாரப் படிநிலைக்கும் உறுப்பினர்களுக்கும் இடைப்பட்ட வெளி ஆழந்து பரந்து விரிந்தது. கட்சித் தலைவர் தனது கட்சி என்னும் அமைப்பை உறுதிபட விஞ்சிச் செயற்பட்டார். கட்சியைத் தனக்கு வெறும் ஒட்டுத்தொங்கலாக மாற்றினார். கட்சி என்னும் அமைப்பல்ல, சொந்த மதியுரைஞர்களின் புத்திமதிப்படி செயற்படும் தனியாளாகிய தலைவரே கட்சியின் கொள்கை, நெறிகளைத் தீர்மானித்தார். கட்சி அலுவல்களைப் பொறுத்தவரை ஏனைய காரணிகள் எல்லாம் தலைவரின் விருப்புக்கு அடுத்தபடியானவை. கட்சி மீதான விசுவாசத்தை விட, தலைவர் மீதான விசுவாசமே மிகவும் முக்கியமானது. அரச சாணக்கியம், அரசியல் முறைமை முழுவதும் தலைவரைச் சுற்றியே சூழன்றன. அரசின் அங்கங்கள் அனைத்தும் அவர் விருப்புக்கு அமைந்தொழுகின. அத்தகைய சூழ்நிலையில் கொள்கையோ, கருத்தியலோ அல்ல, தலைவர் மீதான விசுவாசமே பொருட்படுத்தப்பட்டது. ஆதலால் கட்சி விட்டுக் கட்சி மாறுவது மிகவும் எளிதானது.
இன முரண்பாடு: அரச நெருக்கடியின் முக்கிய அம்சம்
2009ம் ஆண்டு ஈழப்போர் முடிவடையவே, குடியாட்சிக் கட்டமைப்புகள், படிமுறைகள் என்பன மேற்கொண்டும் சிரைக்கப்படாவாறு திட்பமான அரசியற் சீர்திருத்தங்களை மேற்கொண்டு, கட்டமைப்புவாரியான உருக்குலைவைத் தடுக்கவேண்டிய தேவை இலங்கை அரசுக்கும், அரசியல் முறைமைக்கும் ஏற்பட்டது. போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் கழிந்த பின்னர், குடியாட்சி நெறிநின்று உருப்படியான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில், அரசியல் முறைமை முழுவதும் பற்பல அரசியற் பிணிகளால் பீடிக்கப்பட்டன.
வெற்றிச்செருக்கு: புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஓங்கிய வெற்றிச்செருக்கு பரவிய சூழ்நிலையில் குடியாட்சிநெறிக்கு அமைவாக அரசியற் சீர்திருத்தங்களை மேற்கொள்வது பற்றிய சர்ச்சையைப் பொருட்படுத்தாத மக்களாக தென்னிலங்கை மக்களை வைத்திருக்கலாம் என்று ராஜபக்சாவின் ஆட்சிபீடம் எண்ணியது. தெற்கில் குடியாட்சிநெறிக்கு அமைவான சீர்திருத்தங்களை மேற்கொள்வது பற்றிய சர்ச்சையும், வடக்கில் நிலவிய இனத்துவ சர்ச்சையும் அரசு எதிர்நோக்கிய நெருக்கடியின் கூறுகள் என்ற வகையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய அம்சங்களே; எனினும் அவை வெவ்வேறு அம்சங்களைக் கொண்ட சர்ச்சைகள் என்பதை ஆட்சிபீடம் புரிந்துகொள்ளத் தவறியது.
கூட்டிக் கழித்துப் பார்த்தால், இலங்கையில் தாராண்மைநெறிக்கு அமைவான குடியாட்சித் திட்டம் அடைந்த தோல்விகளின் விளைவாகவே இனத்துவ நெருக்கடியும், அதன் பெறுபேறாகவே ஈழப்போரும் ஏற்பட்டன. இலங்கையில் உள்நாட்டுப் போரின் முடிவு, இனத்துவ நெருக்கடியின் முடிவைக் குறிக்கவில்லை. அதேவேளை, இனப்பிரச்சனைக்கு எல்லாச் சமூகங்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வைக் காண்பதற்கான புதிய அரசியல் விவாதம் இடம்பெறுவதற்கு உகந்த புதிய அரசியல் வெளியை அது தோற்றுவித்தது.
போரின் முடிவுடன் நாடு தீர்க்கமான வரலற்றுக் கட்டம் ஒன்றை அடைந்தது. பல வாய்ப்புகளையும், சாத்தியங்களையும் அது நாட்டுக்கு ஈந்தது. அதேவேளை புதிய சவால்களுக்கும், பிரச்சனைகளுக்கும் அது வித்திட்டது. முரண்பட்ட சமூகமாயிருந்து முரண்பாடுகடந்த சமூகமாய் மாறுவது எப்படி என்பதே நாடு எதிர்நோக்கிய சவால். அந்த நிலைமாற்றம் பீரங்கிகள் ஓய்ந்தவுடன் முடிந்துபோன சங்கதி அல்ல. அது ஒரு நீண்ட படிமுறை. பல அடுக்குகள் கொண்ட படிமுறை. போரினைக் கடந்த அரசு எதிர்காலத்தில் செல்லவேண்டிய திசையைத் தெளிவாகக் குறித்துவைத்து, அதை நோக்கி கண்ணுங்கருத்துமாய் நகரவேண்டிய படிமுறை அது. அரசினை மீளக்கட்டமைக்கும் நோக்குடன் கூடிய பரந்துவிரிந்த கட்டுக்கோப்புவாரியான அரசியற் சீர்திருத்தங்களுடன் ஒருங்கிணைந்த அங்கமாய் மேற்கொள்ளவேண்டிய படிமுறை அது. கடந்த ஐந்து ஆண்டுகளிலும் ராஜபக்சாவின் ஆட்சிபீடம் கடைப்பிடித்த செயல்முறையிலிருந்து, மேற்படி திசையில் செல்வதற்கான அரசியற் திடசித்தமோ நோக்கமோ அதனிடம் கிடையாது என்பது தெளிவாகப் புலனாகியது.
தேசிய பாதுகாப்பு: போரை அடுத்து வடக்கில் இன்னொரு நிலைவரம் துலங்கியது: அங்கு ராஜபக்சாவின் ஆட்சிபீடம் போர்க்கால பாதுகாப்புக் கட்டுக்கோப்பையும், பொறிமுறையையும் விடுத்து போருக்குப் பின்னரான கட்டுக்கோப்புக்கு நகரத் தவறியது. அங்கும் அரசின் பாதுகாப்பே தொடர்ந்தும் உச்ச முதன்மை பெற்றது. போர் முடிந்த சூழ்நிலையில் படையினர் வகிக்கும் பங்கு பற்றிய தெளிவான இலக்குடனும், நோக்குடனும் களநிலை உண்மைக்கு உகந்த புதிய பாதுகாப்பு அம்சங்களை உருவாக்க வேண்டும். பிரிவினைவாதம் மீண்டும் தலையெடுத்தால், அதனை அரசியற்களத்தில் வைத்து தடுக்க வேண்டும். பாதுகாப்புக்குத் தேவைப்படும் ஏற்பாடுகளை மெய்ந்நிலைப்படி கணிப்பிட்ட பின்னர் பாதுகாப்பினைப் பேணும் புதிய பொறிமுறைகளைப் புகுத்த வேண்டும். வடக்கின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் படையினர் நிலைகொள்வது பெரிதும் எதிர்விளைவை உண்டாக்கும். பாதுகாப்பு பற்றிய புதிய கண்ணோட்டத்துடன் நன்கு பயிற்றப்பட்ட, வீறும் விறலும் வாய்ந்த படையினர் சற்று அடக்கமாக நடமாடி அரசின் பாதுகாப்பு நலன்களைக் கவனிக்க முடியும்.
படைபலம் கொண்டு புலிகளை வென்றமை, அரசை மையப்படுத்திய தேசிய பாதுகாப்பு என்னும் குறுகிய கண்ணோட்டத்தை வலுப்படுத்தியது. உண்மையில் தேசிய பாதுகாப்பு என்பது அரசின் படைபல-தந்திரோபாய பாதுகாப்புக்கு அப்பாற்பட்டது. பொது கட்டமைப்புகளின் பாதுகாப்பும் தனியாட்களின் பாதுகாப்பும் தேசிய பாதுகாப்பில் ஓர் அங்கமாக விளங்க வேண்டும். போர் முடிந்த சூழ்நிலையில் இலங்கை அரசு அதன் சொந்த மக்களுள் ஒரு பிரிவினரை ஆபத்தானவர்கள் என்று கொள்ளமுடியாது. கருத்து மாறுபாட்டுக்கும், கருவறுப்பதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை இனங்காண வேண்டும். கருத்து மாறுபாடு என்பது நலமான குடியாட்சிக்குத் தேவையான, முக்கியமான, பத்திரமான பொறிமுறை. ஆட்சிபீடம் அந்த வேறுபாட்டை ஏற்று, அதன்படி செயற்படத் தவறும்பொழுது, நாட்டு மக்கள் குடியாட்சிநெறிக்கமைய கருத்து மாறுப்பாட்டைத் தெரிவிக்கவோ, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் சேயவோ மேற்கொள்ளும் நடவடிக்கை எதுவும் பாதுகாப்புக்கு ஏற்பட்ட ஆபத்தாகவே கொள்ளப்பட்டது; அது அரசியற் களத்தில் வைத்துக் கையாளவேண்டிய நடவடிக்கையாகக் கொள்ளப்படவில்லை; மாறாக, பலவந்தம் கொண்டு அடக்கவேண்டிய நடவடிக்கையாகவே கொள்ளப்பட்டது. போருக்குப் பின்னரான மீளிணக்கம் குறித்த தொலைநோக்கு எதையும் ஆட்சிபீடம் கொண்டிருக்கவில்லை. ஆதலால் ஆளும் கூட்டணியை ஆதரிக்காத வடபுலத் தரப்பினரை அது அரசுக்கு ஆபத்து விளைவிப்பவர்கள் என்று கருதியது.
படைபலம் கொண்டு புலிகளை எதிர்த்து கடும் போரிட்டு ஈட்டிய வெற்றியை நீடித்த சமாதானத்துக்கான அடித்தளமாக மாற்ற ராஜபக்சாவின் ஆட்சிபீடம் தவறிவிட்டது. போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் கழிந்த பின்னர் அத்தவறு தெட்டத்தெளிவாகப் புலப்பட்டது. போரை அடுத்த வரலாற்றுக் கட்டத்தில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கு தெளிவான அரசியற் குறிக்கோளும், இனப்பிரச்சனைக்கு அரசுயல்-தீர்வு காண்பதற்கான திடசித்தமும் வேண்டும். அதைக் குறித்து எடுக்கவேண்டிய முதலாவது நடவடிக்கை என்ன? தீர்மானம் எடுக்கும் படிமுறையிலிருந்தும், அதிகாரம் செலுத்தும் கட்டமைப்பிலிருந்தும் இனத்துவ அடிப்படையில் புறங்கட்டப்பட்ட உணர்வு படைத்தவர்களை உள்வாங்கும் வண்ணம் குடியாட்சிவெளியை முதற்கண் விரிவாக்க வேண்டும்.
குடியாட்சியையும், தேசிய மீளிணக்கத்தையும் மேம்படுத்துவதற்கு வேண்டிய சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான அரசியற் திடசித்தத்தையும், துணிவையும் ஆட்சியாளரால் ஈட்டிக்கொள்ள முடியவில்லை. அதன் இறுதி விளைவாக ஒருங்கிணைந்த சமூகத்தையும், நலமான அரசையும் அமைப்பதற்குக் கிடைத்த அரிய வாய்ப்பு படிப்படியாக கைநழுவிப் போயிற்று. அரசியலதிகாரத்தை பரந்துபட்ட முறையில் மக்களுக்கு உரித்தாக்கும் நோக்குடனேயே அரசியற் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தகைய கண்ணோட்டத்துடனேயே அதிகாரப் பரவலாக்கம் நோக்கப்பட வேண்டும். அதற்குரிய குடியாட்சி அரசியல் வழமைகளும், உளப்பாங்கும் இல்லாவிடத்து அதிகாரப் பரவலாக்கம் பயனளிக்காது. இன்று தேவைப்படும் குடியாட்சி சார்ந்த சீர்திருத்தங்கள், நல்லாட்சி என்பவற்றின் முக்கியத்துவத்தை இது புலப்படுத்துகிறது.
குடியாட்சி சார்ந்த சீர்திருத்தங்களுக்கான கோரிக்கையை நிராகரிப்பதற்கு ஒரு மாற்றுப் பணி ராஜபக்சாவின் ஆட்சிபீடத்துக்கு தேவைப்பட்டது. அதற்காகவே "தாயகம் காக்கும் பணி"யை ஆட்சிபீடம் மேற்கொண்டது. "தாயகம் காக்கும் பணி"க்கு ஓர் எதிரி தேவைப்பட்டது. புலிகளைத் தோற்கடித்த பின்னரும் கூட, அரசின் "எதிரிகள்" நாடெங்கும் நடமாடினர்! மூலைமுடுக்கெல்லாம் அரசுக்கெதிரான சதிகள் இடம்பெற்றன! நாட்டைக் குலைத்து, பிளக்க தருணம்பார்த்திருக்கும் உள்நாட்டு, வெளிநாட்டு எதிரிகளை இனங்கண்டு, அவர்களை எதிர்கொள்வதே அரசின் தலையாய பணி ஆனது. எதிரிகளைத் தோற்கடிக்க அல்லது கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்ட வழிவகை எதற்கும் நியாயம் கற்பிக்கப்பட்டது. ஈற்றில் நாட்டுப்பற்றாளர்கள், நாட்டுப்பற்று அற்றவர்கள் என்னும் இருவகையினராக நாட்டுமக்கள் பிரிக்கபட்டார்கள். அப்படிப் பிரிப்பதற்கான பிரமாணம் மிகவும் எளியது: ஆட்சிபீடத்தை ஆதரிப்பவர்களே நாட்டுப்பற்றாளர்கள்! அது நாட்டில் பீதியைக் கிளப்பவே, பரந்துபட்ட அரசியல், பொருளாதாரப் பிரச்சனைகள் வெளியரங்கமாக விவாதிக்கப்படுவது குன்றிக் குறுகியது.
பலவீனம்: உலகின் மிகக்கொடிய, நன்கு கட்டமைத்த பயங்கரவாத இயக்கங்களுள் ஒன்றினைப் படைபலம் கொண்டு தோற்கடித்த பின்னரும் கூட, நாட்டுக்குத் தேவையான அரசியற் சீர்திருத்தத்தை ஆட்சிபீடம் மேற்கொள்ளத் தவறியதன் நேரடி விளைவாக, இலங்கை தொடர்ந்தும் வலுவிழந்த அரசாக விளங்கியது விசித்திரமே. புலிகளின் நிலைகுலைவினால் ஏற்பட்ட அரசியல்வெளியைப் பயன்படுத்தி, இலங்கையை நீடித்த உள்நாட்டுப் போருக்குள் வீழ்த்திய இனத்துவ-அரசியல் நெருக்கடியில் கவனம் செலுத்தி, அரசியற் சீர்திருத்தங்களை முன்னெடுத்து, அரசை வலுப்படுத்துவதற்கான புதிய அரசியற்பாதையை வகுத்திருக்கலாம். அரசின் பலம் அல்லது பலவீனம் பெரிதும் சமூக-அரசியல் ஒருங்கிணைவின் அளவுடன் தொடர்புபடுவது; எல்லா வேளைகளிலும் அது படைபலத்துடன் தொடர்புபடுவதில்லை. தாம் படைவலு படைத்தவை என்று மார்தட்டும் சில நாடுகள் உண்மையில் பலவீனமாவை. பலமான அரசு, பலவீனமான அரசு என்னும் கருத்தீடு அரசின் கட்டமைப்புக் கூறினை அடிப்படையாகக் கொண்டது. பலமான அரசுக்கும், பலவீனமான அரசுக்கும் இடைப்பட்ட வேறுபாட்டை வரையறுப்பதற்கு தனியொரு அளவுகோல் கிடையாது. பலவீனமான அரசுகளில் காணப்படவல்ல நிலைமைகள் பலவற்றை பரி புசன் (Barry Buzan) இனங்காட்டியுள்ளார்: அரசியல் வன்முறை ஓங்கியிருத்தல்; மக்களின் அன்றாட வாழ்வில் அரசியற் காவல்துறையினர் அப்பட்டமாகத் தலையிடல்; எந்தக் கருத்தியலைப் பயன்படுத்தி அரசை ஒழுங்கமைப்பது என்பது குறித்து அரசியல் முரண்பாடு ஓங்கியிருத்தல்; ஒருங்கிணைந்த தேசிய அடையாளம் ஏற்படாதிருத்தல்; அரசுக்குள் வெவ்வேறு தேசிய அடையாளங்கள் மல்லாடுதல்; அரசியலதிகாரப் படிநிலையைத் தெளிவாக அவதானிக்க முடியாதிருத்தல்; ஊடகங்களை மிகவும் கட்டுப்படுத்தி வைத்திருத்தல்.
அச்சம்: அரசின் முக்கிய கூறுகள் எவை? அரசு என்னும் கருத்தீடு, அதன் ஆள்புலம், கட்டமைப்புகள், குடிமக்கள் – என்பனவே அரசின் முக்கிய கூறுகள். பலவீனமான அரசில் அம்முக்கிய கூறுகளுக்கு உள்நாட்டிலேயே சவால் கிளம்பும். வெவ்வேறு உருவங்களில் பல்வேறு சவால்கள் கிளம்பும். எடுத்துக்காட்டாக, மட்டுமீறிய அரசியல்மயமாக்கம், அரசியல் தலையீடு, சுயகுடும்பநலம் என்பவற்றால் அரசின் செயல்திறனும், சட்டதிட்பமும் அழிக்கப்படுகின்றன. அதன் பெறுபேறாக நாட்டு மக்களுக்கு அரச கட்டமைப்புகளில் அவநம்பிக்கை உண்டாகும். அரச கட்டமைப்புகள் பெரிதும் மக்களின் சீற்றத்துக்கு உள்ளாகும். அத்தகைய சூழ்நிலையில் பலவீனமான அரசு உள்நாட்டு அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டே தேசிய பாதுகாப்பை வரையறுக்கும். அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் ஆட்சிபீடம் விட்டுக்கொடுத்து ஒத்துமேவுவதை விடுத்து, பலவந்தத்தில் இறங்கும். பலவீனமான அரசில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் ஆட்சிபீடம் அரசியல்வாரியாக வலிமைபடைத்ததாகத் தோற்றினாலும் கூட, அது எந்த விதமாக நடந்துகொள்ளும் என்பதற்கு ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டாக ராஜபக்சாவின் ஆட்சிபீடம் குடிமக்களின் வேட்கைகளைக் கையாண்ட விதம் அமைந்துள்ளது. ராஜபக்சாவின் ஆட்சிபீடத்தைச் சூழ்ந்த வினையை அது புலப்படுத்துகிறது.
அரசியற் சீர்திருத்தம்: இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வும், அரசியற் சீர்திருத்த விடயமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த இரு அம்சங்கள் - காலனித்துவத்துக்குப் பின்னரான அரசு எதிர்நோக்கும் ஒரே நெருக்கடிக்கான தீர்வுகளின் பின்னிப்பிணைந்த இரு அம்சங்கள். இலங்கையில் இடம்பெறவேண்டிய விரிவான அரசியற் சீர்திருத்தங்களுள் இனத்துவ மீளிணக்கம் உள்ளடங்க வேண்டும். அத்துடன் வடக்கும்-கிழக்கும் எஞ்சிய நாட்டுடன் அரசியல்வாரியாக ஒருங்கிணைக்கப்படுவதும் அவற்றுள் அடங்க வேண்டும். தெற்கின் அரசியற் சீர்திருத்தங்கள் ஒருபுறம்; வடக்கின் மீள்நிர்மாணம், மறுவாழ்வு மறுபுறம். எனினும் இவை இரண்டையும் பிரித்து நோக்க முடியாது. வடக்குவாழ் மக்கள் அரசியலதிகாரம் படைத்திராத சூழ்நிலையில் உண்மையான தேசிய ஒற்றுமை கைகூடப் போவதில்லை. எனவே நல்லாட்சி ஓங்கும் வண்ணம் குடியாட்சிநெறிநின்று விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அரசியல், சமூக, பொருளாதார வாரியாக வடக்கை மீளநிர்மாணிப்பதற்கு ஏதுவாக தெற்கில் குடியாட்சிநெறி சார்ந்த அரசியற் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
போரின் பின்னர் மாறிய அரசியற் சூழ்நிலையில் குடியாட்சிநெறிநின்று அரசியற் சீர்திருத்தங்களை மேற்கொண்டு, அரசை மீளக்கட்டமைத்து, அரசியலுக்குப் புதிய திசை வகுப்பதற்கு ராஜபக்சாவின் ஆட்சிபீடத்துக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்புக் கிடைத்தது. வடக்கில் இனப்பிரச்சனை தொடர்பான நிலைமைகள் மாறியிருந்தன. தெற்கில் பல்வகை அரசியல் நெருக்கடிகள் தோன்றியிருந்தன. போருக்குப் பின்னரான அரசியல் ஆய்வரங்கில் குடியாட்சிநெறி சார்ந்த அரசியற் சீர்திருத்தங்கள் ஒரு முக்கிய விடயமாக விவாதிக்கபட்டு வந்தது. ஆனால் ராஜ்பக்சாவின் ஆட்சிபீடம் நாட்டுக்கு வேண்டிய அரசியற் சீர்திருத்தங்களை முன்னிலைப்படுத்துவதற்குப் பதிலாக, "தேசிய பாதுகாப்பு அரசு" என்னும் திட்டத்தை முன்னெடுத்து வந்தது. எனினும் குடியாட்சி விழுமியங்களால் உந்தப்பட்ட சமூகமும், நல்லாட்சி - சட்ட ஆட்சி நாடிய மக்களும் கொடுத்த நிர்ப்பந்தத்தால் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, ராஜ்பக்சாவின் ஆட்சிபீடத்தை சூழ்ந்த வினைக்கு வீறூட்டின.
Prof. Gamini Keerawella, Strong in Appearance but Weak in Conduct: The Post-war Sri Lankan State and the Nemesis of Rajapaksa Regime, The Island, Colombo, 2015-01-17,
translated by Mani Velupillai.
No comments:
Post a Comment