இன்று

இடதுசாரித் தரப்பு

முதலாளித்துவத்தை தழுவ வேண்டுமா? 

அஜித் ராஜபக்சா

சமவுடைமைச் சமூகத்தை நிறுவுவது இடதுசாரிகளின் வேட்கை என்பதும், அதற்கு மாறாக, முதலாளித்துவப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது வலதுசாரிக் கருத்தியல்களின் நோக்கம் என்பதும் எமக்குத் தெரிந்த சங்கதிகள். 

தம்மை சமவுடைமையாளர்கள் என்றும் மார்க்சியர்கள் என்றும் வலியுறுத்தி, நீண்ட கலமாகப் போராடிவந்த ஒரு குழுமம் இலங்கையில் ஆட்சி ஏற்றுள்ள இத்தருணத்தில், ஒரு நியாயமான கேள்வி எழுகின்றது: புதிய அரசாங்கம் சமவுடைமைக்கு அமையவா, முதலாளித்துவத்துக்கு அமையவா செயற்படும்?

நிதி, பொருளாதாரம், பாதுகாப்பு, வெளியுறவு, காணி, நலவாழ்வு, வேளாண்மை, தொழில், உற்பத்தி, துறைமுகங்கள், போக்குவரத்து சார்ந்த முக்கிய அமைச்சுக்கள் எல்லாம் இந்த இடதுசாரிக் குழுமத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளன. 

இதே போன்று 1970ல் இலங்கைச் சுதந்திரக் கட்சியுடன் (SLFP) கூடி அமைக்கப்பட்ட ஐக்கிய முன்னணி (UF) அரசாங்கத்திலும் மார்க்சியர்களை உள்ளடக்கிய ஓர் இடதுசாரிக் கூட்டணி முக்கிய அமைச்சுக்களைப் பெற்றுக்கொண்டது. குறிப்பாக இலங்கை சமசமாசக் கட்சியின் தலைவர் கலாநிதி என். எம். பெரெரா வல்லமை மிகுந்த நிதி அமைச்சராக விளங்கினார். அது சிறிய கூட்டணியாக இருந்தாலும் கூட, உலகளாவிய சமவுடைமை நெறியின் செல்வாக்கினால், குறிப்பாக சோவியத் ஒன்றியம் செலுத்திய செல்வாக்கினால், சமவுடைமைப் பொருளாதாரக் கொள்கைகளை செயற்படுத்த வாய்ப்புக் கிடைத்தது. 

மத்திய மேட்டுக்குடி வர்க்கத்தைச் சேர்ந்த கல்விகற்ற, பெரிதும் மேலைக்கல்வி கற்ற அறிவார்ந்தோர், இடதுசாரிக் குழுமத்தின் பிரதிநிதிகளாக விளங்கிய காலம் அது. எனினும், இடதுசாரித்துவக் கொள்கைகள் மூலம் உள்நாட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்த அவர்கள் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. அவற்றால் கணிசமானளவு உணவு நெருக்கடி உண்டாகியது. பண்டங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. வேலையின்மை அதிகரித்தது. பொருளாதாரம் தேக்கநிலை அடைந்தது. அதன் விளைவாக, கட்டுப்பாடற்ற சந்தைப் பொருளாதாரத்தை ஏற்றிப்போற்றிய ஐக்கிய தேசியக் கட்சி 1977ல் முன்றில் இரண்டு பெரும்பான்மை வலுவுடன் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது.

பல தசாப்தங்களாக முதலாளித்துவத்துக்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும், கட்டுப்பாடற்ற சந்தைப் பொருளாதார முறைமைகளுக்கும் எதிராகப் போராடிய மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) தலைமையில் தேசிய மக்கள் சக்தி (NPP) 47 ஆண்டுகள் கழித்து, ஆட்சி ஏற்றுள்ள இத்தருணத்தில் இந்தக் கேள்வி எழுகின்றது: சமவுடைமைக் கொள்கைகளில் வேரூன்றிய ஒரு கட்சியினால், பொருளாதார நிலைகுலைவின் தாக்கத்திலிருந்து நாட்டை வெற்றிகரமாக மீட்க முடியுமா? இந்த வினாவுக்கு விடையிறுக்க சமவுடைமை, முதலாளித்துவம் என்பவற்றின் வரலாற்றை மீள்நோக்குவது நல்லது.

 சமவுடைமையின் எழுச்சியும் வீழ்ச்சியும்

சமவுடைமை முதலில் சோவியத் ஒன்றியத்தில் தோன்றி, பிறகு கிழக்கு ஐரோப்பா, சீனா, கியூபா, வட கொரியா, வியற்நாம் ஆகிய நாடுகளுக்குப் பரவியது. உலகம் முழுவதும் முதலாளித்துவத்தைப் பரப்ப முனைந்த அமெரிக்காவுக்கும், சமவுடைமையைப் பரப்ப முனைந்த சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே கெடுபிடிப் போர் நிகழும் வேளையில் அவ்வாறு சமவுடைமை பரவியது. 

எனினும்காலப்போக்கில்  சோவியத் ஒன்றியத்தின் நிலைப்பாடு மாறியது. உலகம் முழுவதும் சமவுடைமையைப் பரப்பும் கொள்கையைக் கைவிட்டு, தனது சொந்த நலன்களைப் பேணுவதில் மாத்திரம் அது புலனைச் செலுத்தியது. உலகளாவிய சமவுடைமை அணி எதுவுமின்றி சமவுடைமையால் தன்னை நிலைநிறுத்த முடியாது என்ற மார்க்சிய எண்ணத்தை ஸ்டாலின் நிராகரித்தமை ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 

அவரது ஆட்சியில் சோவியத் ஒன்றியம் நிலையிழிந்து கொடுங்கோன்மையாய் மாறியது. மாற்றுக்கருத்து கொண்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். 1917ல் முழுமுதற் புரட்சிக்குத் துணைநின்றவர்களே மரண தண்டனைக்கு உள்ளானார்கள்.   மெக்சிக்கோவுக்குத் தப்பியோடிய முன்னாள் சோவியத் பாதுகாப்பு அமைச்சர் துரொஸ்கி கூட ஸ்டாலினது கையாட்களால் படுகொலை செய்யப்பட்டார். ஸ்டாலினது ஆட்சியில் 10 இலட்சத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள். இன்னும் பல இலட்சக் கணக்கானோர் பஞ்சத்தால் தாக்குண்டு மடிந்தார்கள். சமவுடைமைப் பொருளாதாரம் வலுவிழக்கவே சோவியத் ஒன்றியத்தின் மீது தங்கியிருந்த சிறிய சமவுடைமை நாடுகளும் வலுவிழந்தன.  

அமெரிக்காவின் தலைமையில் முதலாளித்துவம் உலகெலாம் பரவ, சோவியத் ஒன்றியத்திலும், கிழக்கு ஐரோப்பாவிலும் சமவுடைமைப் பொருளாதார முறைமைகள் நிலைகுலையலாயின. அந்நிலைகுலைவு மக்களின் கிளர்ச்சிகளுக்கு இட்டுச்சென்றது. சமவுடைமைப் பொருளாதார முறைமைகள் ஈற்றில்  முதலாளித்துவத்துக்கு அடிபணிய நேர்ந்தது. 

கியூபா, வட கொரியா போன்ற நாடுகள் கடுங்கோன்மை கொண்டு சமவுடைமைப் பொருளாதார முறைமைகளைப் பேணிவந்தாலும் கூட, அந்நாடுகளில் வாழும் மக்கள் குடியாட்சிச் சுதந்திரங்களின்றி, கடுமையான பொருளாதார இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றார்கள். சீனாவும் வியற்நாமும் பொதுவுடைமைக் கட்சியின் வன்கோன்மையைப் பேணிக்கொண்டு, சமவுடைமையைக் கடந்து, முதலாளித்துவத்தை தழுவிக்கொண்டுள்ளன. 

வேலைவாய்ப்புகள், வீட்டுவசதி, மேம்பட்ட வாழ்க்கைப் பாங்கு போன்ற நன்மைகள் சிலவற்றை முதலாளித்துவம் அளிக்கின்றது. எனினும் ஒரு சிறு மேட்டிமைக் குழாத்திடம் செல்வத்தைக் குவிப்பது முதலாளித்துவத்தின் உள்ளியல்பு. ஆதாயத்துக்காக பிறரது உழைப்பை அது சுரண்டும். செல்வந்த மேட்டிமைக் குழாத்துக்கும் தொழிலாள வர்க்கத்துக்கும் இடைப்பட்ட வெளியை அகட்டும். ஆதலால் மனித விழுமியங்கள், பத்திரமான வாழ்வு, நலவாழ்வு, சூழல். சுதந்திரம் என்பன  முதலாளித்துவத்தின் விடாப்பிடியான ஆதாயத் தேட்டத்துக்குப் பெரிதும் பலியாகி வருகின்றன. 

எடுத்துக்காட்டாக ஐரோப்பா, அமெரிக்கா உள்ளடங்கிய உலகளாவிய சந்தைகளுக்குப் பண்டங்களை உற்பத்திசெய்யும் சீனத் தொழிலாளிகள் தொழிற்சங்கங்களோ சுதந்திர ஊடகங்களோ இல்லாமல் பெரிதும் கடூரமான நிலைமைகளை எதிர்கொண்டு வருகின்றார்கள். வேலைத்தலங்களை பத்திரமாகப் பேணும் கடப்பாடும், நலவாழ்வு நியமங்களும் பெரிதும் அங்கு புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் பொதுவுடைமைக் கட்சியில் பணியாற்றும் அதிகாரிகளின் உடந்தையுடன் உற்பத்தித்துறையில் ஈடுபட்டுள்ள கோடாதிபதிகளைக் கொண்ட புதிய வர்க்கம் ஒன்று சீனாவில் மேலோங்கியுள்ளது. 

சீனாவில் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைகள் இலட்சக் கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளன. அதேவேளை பாரிய பொருளாதார ஏற்றத்தாழ்வையும் அவை தோற்றுவித்துள்ளன. இத்தகைய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாதிருந்தால், சோவியத் ஒன்றியத்துக்கு நேர்ந்த அதே கதி சீனப் பொதுவுடைமைக் கட்சிக்கும் நேர்ந்திருக்கக் கூடும். 

அந்த வகையில், இந்த வினா இன்னமும் ஒலிக்கின்றது: எத்தகைய ஏற்றத்தாழ்வுகளை முதலாளித்துவம் நிலைநிறுத்துகின்றதோ அத்தகைய ஏற்றத்தாழ்வுகளை ஓர் இடதுசாரித்துவ வேடம் பூண்ட முதலாளித்துவத்தினால் உண்மையிலேயே களைய முடியுமா?

 முதலாளித்துவம்

ஒரு பொருளாதார முறைமை என்ற வகையில் முதலாளித்துவம் என்பது சமவுடைமையை விட வினைத்திறனும் ஆக்கத்திறனும் மிகுந்தது என்று பரவலாகக் கருதப்படுகின்றது. 

முதற்கண் ஒரு முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தின் ஊடாகவே பொருளாதார விருத்தி ஏற்பட வேண்டும் என்று சோவியத் ஒன்றியம் அரும்பிய காலத்தில் லெனின் வாதிட்டார். பொருளாதார விருத்தி குன்றி, பின்னடைந்த நிலையில் இருக்கும்பொழுது, உற்பத்தியைப் பெருக்கி, சமவுடைமையை நோக்கி நகர்வதற்கு முதற்கண் அத்திவாரம் இடவேண்டும் என்று அவர் வாதிட்டார். இரசியா இன்னும் சமவுடைமைக்குத் தயாராகவில்லை என்று கருதிய லெனின், அரச முதலாளித்துவமே  மாறுகாலகட்ட பொருளாதார முறைமையாக அமைய வேண்டும் என்று வாதாடினார். அப்பொழுது ஜேர்மனியில் காணப்பட்ட பொருளாதார முறைமையே இரசியாவுக்கு பெரிதும் பொருத்தமானது என்று அவர் கருதினார். 

அப்பொழுது இரசிய பொருளாதாரம் கடுமையான இடர்ப்பாடுகளை எதிர்நோக்கியது. பங்கீட்டுமுறை மூலம் உணவு விநியோகிக்கப்பட்டது. எனினும் துரொஸ்கி போன்ற கடும்போக்காளர்கள் அந்த அணுகுமுறையை எதிர்த்து, முதலாளித்துவ பொருளாதார கட்டுக்கோப்பினை நிராகரித்து, (நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின்படி) சமவுடைமையை நோக்கி புரட்சிகரப் பாதையில் தங்குதடையின்றி நேரடியாக முன்னகர வேண்டும் என்று வாதாடினார்கள். 

சோவியத் ஒன்றியத்தில் சமவுடைமைக் கொள்கைகளுக்கு அமைய படிப்படியான பொருளாதார வளர்ச்சி எய்தப்பட்டாலும் கூட, அந்த வளர்ச்சியைப் பேணிக்கொள்வது ஒரு சவாலாய் அமைந்தது. அலுவலக சிக்கல்கள், வினைத்திறன் இன்மை, போட்டியில்லாச் சந்தை, உலகளாவிய நெருக்குதல்கள் மேன்மேலும் தீவிரமடைந்தன. பொருளாதாரம் தேக்கநிலை அடைந்தது. விலையேற்றமும் பற்றாக்குறைகளும் பெருகின. 

ஒருமுகப்படுத்திய பொருளாதாரத் திட்டம் பெரிதும் வினைத்திறனற்றது. எடுத்துக்காட்டாக, மாஸ்கோ மாநகரம் முழுவதற்குமான பாண் உற்பத்தியை ஒழுங்குவிதிக்கு உட்படுத்த நடுவண் அரசு எடுத்த முயற்சிகள் ஒன்றில் மேலதிக உற்பத்திக்கு அல்லது தட்டுப்பாட்டுக்கு இட்டுச்சென்றன. 

மாறாக, கட்டில்லா முதலாளித்துவ சந்தை இயங்கிய பாரிஸ் மாநகரில் சுதந்திரமாக செயற்பட்ட தனியார் வெதுப்பகங்கள் பாணுக்கான கிராக்கியை வெற்றிகரமாக நிறைவேற்றின. எவ்வளவு பாண் தேவை என்பதை தீர்மானிப்பதில் அரசாங்கமோ அரசியற் கட்சிகளோ தலையிடவில்லை. பதிலாக, கிராக்கியையும் வழங்கலையும் வைத்து வெதுப்பகர்களே சரியான தொகையைக் கணித்தார்கள். 

கட்டில்லா போட்டிச் சந்தையுடன் ஒப்பிடுகையில் ஒருமுகப்படுத்திய சமவுடைமைப் பொருளாதார முறைமைகளில் காணப்படாத வினைத்திறன்களைப் புரிந்துகொள்வதற்கு மேற்படி சிறிய எடுத்துக்காட்டே போதும். ஒருமுகப்படுத்தி திட்டமிடும் முறைமைகளை விட சந்தைப் பொருளாதார முறைமைகள் நன்கு செயற்படுவதாக வலியுறுத்துகிறார்கள் முதலளித்துவவாதிகள்.   

 முதலாளித்துவம் மீதான கண்டனங்கள் 

முதலாளித்துவம் கணிசமான பொருளாதார வளர்ச்சியை கைகூடச் செய்துள்ளது. அதேவேளை செல்வந்தர்க்கும் வறியோர்க்கும் இடையே ஒரு பாரிய வெளியையும் அது தோற்றுவித்துள்ளது. சமூகத்துள் ஒரு சிறு தரப்பினரிடமே செல்வம் குவிந்துள்ளது. அதற்கு நிகராக சாதாரண தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் மேம்படவில்லை. 

அமெரிக்காவில் ஒருவரின் சராசரி வருமானம் 1917ல் பருமட்டாக $7,500 ஆக இருந்து,  2023ல் $82,000க்கு மேற்பட உயர்ந்தது. அதேபோல மொத்த தேசிய வருமானம் $9.8 பில்லியனாக இருந்து, $27 திரில்லியனாக உயர்ந்தது. எனினும் அமெரிக்காவில் செல்வம் மிகுந்த 1 விழுக்காட்டினர் வசமே தேசிய செல்வத்துள் 30 விழுக்காட்டுக்கு மேற்பட்ட தொகை  இருக்கிறது. தேசிய செல்வத்துள் 2.5 விழுக்காடு மாத்திரமே கீழ்மட்டத்து 50 விழுக்காட்டினர் வசம் இருக்கிறது. இவர்கள் பெரிதும் கிழமைக் கூலி பெற்றுப் பிழைப்பவர்கள். இந்த ஏற்றத்தாழ்வு உலகளாவிப் பரந்துள்ளது. செல்வம் மிகுந்த 1 விழுக்காட்டினர் வசமே எஞ்சிய 99 விழுக்காட்டினரது சொத்துக்களின் இரட்டி மடங்கு இருக்கிறது.   

உலக வங்கியின் கணக்குப்படி, உலக மக்களுள் 44 விழுக்காட்டினர் நாள் ஒன்றுக்கு $7க்கும்  குறைந்த வருவாய் பெற்று வாழ்பவர்கள். 8.5 விழுக்காட்டினர் நாள் ஒன்றுக்கு $2.5க்கும் குறைந்த வருவாய் பெற்றுப் பிழைப்பவர்கள். 

ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த  பொருளியலர் அதம் சிமித் (Adam Smith) தற்கால முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தின் தந்தை எனறு கருதப்படுபவர். கிராக்கி, வழங்கல் என்பவற்றால் இயக்கப்படும் போட்டிச் சந்தையை அவர் முன்மொழிந்தார். துவக்கத்தில் அந்த முறைமையில் அனுகூலமான அறிகுறிகள் தென்பட்டன. அப்புறம் கட்டுப்பாடற்ற போட்டி, ஆதாயத் தேட்டம் இரண்டும் ஏகபோகங்களுக்கும், பல்தேசியக் கூட்டுத்தாபனங்களுக்கும், பங்குச் சந்தைகளுக்கும், பெறுமதி வழிவரும் நிதி ஒப்பந்தங்களுக்கும், உண்டியற் சந்தைகளுக்கும் வழிவகுத்தன. எல்லாமே பண்டமயமாக்கப்பட்டன. போட்டியும் சுரண்டலும் மும்முரமடைந்தன. கடுமையான பொருளாதாரத் தளம்பல்களுக்கும், உலகளாவிய  சர்ச்சைகளுக்கும் அவை துணைபோயின. இப்பெறுபேறுகள் முதலாளித்துவத்தின் இருண்ட சந்துகளைப் புலப்படுத்ததின. சிமித் இவற்றை எதிர்பார்க்கவில்லை. 

 மாற்றுவழி என்ன?

செல்வம் பெருக்குவதற்கு சமவுடைமை முதன்மை அளிக்கவில்லை; சமத்துவத்தையும், சகவாழ்வையும், மனித நன்னலத்தையுமே அது வலியுறுத்துகின்றது. அரசை மையப்படுத்திய முறைமை ஒன்றை அது முன்மொழிகின்றது. எனினும் பொருளாதாரத்தை விருத்திசெய்து, செல்வத்தைப் பெருக்குவது அதற்கொரு சவாலாய்  அமைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு சுதந்திர சந்தைப் பொருளாதாரம் இன்றியமையாதது. சுதந்திரமான சந்தைகளையும் ஒப்புரவான செல்வப் பரம்பலையும் ஒருங்கிணைக்கும் புதிய பொருளாதார முறைமை ஒன்று அதற்குத் தேவைப்படுகின்றது.   

உச்சத்தை எட்டிய உலகளாவிய முதலாளித்துவம் இன்று அதன் வரம்புகளை எதிர்கொண்டுள்ளது. இந்த நெருக்கடி ஓர் உலகளாவிய அரசியல், சுற்றாடல், சமூகவியல் நெருக்கடியாய் ஓங்கியுள்ளது. இது உலகளாவிய சர்ச்சைகளுக்கு இட்டுச்செல்லக் கூடும். நெடுங்காலமாக உலகின் மிகவலிமை வாய்ந்த அரசாகக் கருதப்படும் அமெரிக்கா கூட கணிசமானளவு சவால்களை எதிர்நோக்கி வருகின்றது. அமெரிக்கா ஒரு காலத்தில் விதந்துரைத்த சுதந்திரம், குடியாட்சி, மனித உரிமைகள் போன்ற உலகளாவிய விழுமியங்கள் தற்பொழுது முன்பின் முரண்படுகின்றன. அதேவேளை அமெரிக்காவுக்கு அறைகூவல் விடுக்கும் சீனாவும் இவ்விழுமியங்களைக் கைக்கொள்ளத் தவறுகின்றது. பதிலாக, தனது சொந்த பொருளாதார, அரசியல் நிகழ்ச்சிநிரலில் அது புலன் செலுத்துகின்றது.  

முதலாளித்துவம், சமவுடைமை இரண்டினதும் தவறுகளைக் கருத்தில் கொண்டு, உற்பத்தியையும் ஒப்புரவான செல்வப் பரம்பலையும் சமநிலைப்படுத்தும் புதிய சந்தைப் பொருளாதாரம் ஒன்றைத் தோற்றுவிப்பதே இன்று உலகம் எதிர்நோக்கும் சவால்.  

 யனிஸ் வரோவகிசின் கண்ணோட்டம்

கலாநிதி யனிஸ் வரோவகிஸ் (Dr. Yanis Varoufakis) ஓர் அறிவார்ந்த மார்க்சியர்; ஐரோப்பிய குடியாட்சி இயக்கத்தின் தலைவர்; இப்பொழுது சுதந்திர போட்டிச் சந்தை கிடையாது; முதலாளித்துவம் முடிந்துவிட்டது; Amazon, Facebook, YouTube, Netflix, Microsoft, Alibaba, Walmart, Google, TikTok போன்ற உலகளாவிய கூட்டுத்தாபனங்கள் உலகின் தரவுகளையும், நிரலிகளையும் (algorithms), மென்பொருட்களையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன; இந்நிலைவரம் ஒரு புதுவகை நிலப்பிரபுத்துவத்தை தோற்றுவித்துள்ளது; மத்தியகாலத்து குடியானவர்கள் நிலக்கிழாருக்கு வாடகை செலுத்தியது போல் தற்காலத்தில் இந்நிறுவனங்களுக்கு நாம் வாடகை செலுத்துகின்றோம்… என்பது அவர் வாதம்.   

சுரண்டும் இயல்புடைய முதலாளித்துவத்தின் தலையீடுகளை ஒழித்து, தொழினுட்ப விருத்தியும் தாராண்மைக் குடியாட்சியும் பொதிந்த ஒரு சமவுடைமைச் சமூகத்தைக் கடியெழுப்ப வேண்டும் என்று வரோவகிஸ் வாதாடுகின்றார். மக்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் முதலாளித்துவத்துக்கு ஒரு மாற்றுக் கண்ணோட்டத்தை முன்வைக்க இடதுசாரிகள் தவறிவிட்டதாகவும், அதன் விளைவாக அவர்கள் செல்லாக்காசு ஆகிவிட்டதாகவும் அவர் கருதுகின்றார். எனவே, ஏகபோக முதலாளித்துவத்தைக் கடந்து, குடியாட்சியுடன் கூடிய ஓர் ஒப்புரவான பொருளாதார முறைமையை நோக்கி  நகர்வதே உலகம் எதிர்நோக்கும் சவால். 

இலங்கை

மேற்கண்ட சவால்கள் இலங்கை போன்ற சிறிய நாடுகள் மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றை எதிர்கொள்வதற்கான ஆற்றல் பெரிதும் மட்டுப்பட்டுள்ளது. வலிமை வாய்ந்த உலகளாவிய அமைப்புக்களே பெரிதும் தீர்மானங்களை எடுக்கின்றன. உலகளாவிய ஆதிக்க அமைப்புக்களின் அதிகார நகர்வுகளுக்குள் சிறிய நாடுகள் பெரிதும் அகப்பட்டுக் கொள்கின்றன. 

அத்தகைய எண்ணிறந்த சவால்களுடன்  இலங்கையும் இன்று மல்லாடி வருகின்றது. தான் பட்ட கடனை தானே இறுக்கத் தவறி, படுகடன் பொறியில் அகப்பட்டுள்ள ஒரு நாட்டில் பொருளாதார வளர்ச்சியை எய்துவது எப்படி என்பதே தலையாய கேள்வி.  எத்தகைய உபாயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்? எத்தகைய அரசியற் கருத்தியலைப் பின்பற்ற வேண்டும்

உலகளாவிய முதலாளித்துவ பொருளாதார முறைமையினுள் நாம் வாழ்கின்றோம். அதனுள் அமெரிக்கா, இரசியா, இந்தியா, சீனா போன்ற வலிய நாடுகள் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போதைய நெருக்கடிகளுக்கு சமவுடைமைத் தீர்வுகள் கிடையா என்பது வெளிப்படை. இத்தகைய சூழ்நிலையில் ஓரளவுக்கேனும் பொருளாதா வளர்ச்சியை ஈட்டுவதற்கான ஒரே வழி முதலாளித்துவத்தை மேம்படுத்துவதே. 

அதற்கு பல்வேறு கூட்டுத்தாபனங்களையும், பல்தேசிய வணிக நிறுவனங்களையும், முதலீட்டாளர்களையும் சுரண்டுவதற்கு அனுமதிக்க நேரும்; அதாவது உள்நாட்டுத் தொழிலாளர்களையும், சந்தைகளையும் சுரண்டுவதற்கு மேற்படி தரப்புக்களை அனுமதிக்க நேரும். வணிக நிறுவனங்களைத் திறக்கும்படி முதலீட்டாளர்களை ஊக்குவிக்க நேரும். சந்தைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த நேரும்.  வரிச்சலுகைகளையும் மற்றும் பிற உதவிப் பொறிமுறைகளையும் அளிக்க நேரும். அரசுத் துறையைச் சிறுப்பிக்க நேரும். தனியார் துறையைப் பெருப்பிக்க நேரும். இந்த அணுகுமுறை வேலைவாய்ப்புகளைத் தோற்றுவிக்கும். செல்வத்தைப் பெருக்கும். வாழ்க்கைத் தரத்தை பெரிதும் உயர்த்தும். 

அதேவேளை அத்தகைய நன்மைகளுடன், முதலாளித்துவம் அதன் உள்ளியல்புக்கமைய உண்டாக்கும் விளைவுகளும் சேர்ந்துகொள்ளும். அவற்றை ஓரளவு சமாளிக்க நேரும். இதை ஏற்காவிட்டால், ஒரேயொரு மாற்றுவழிதான் உண்டு: நாட்டு மக்கள் அனைவரையும் ஆகக்குறைந்த வாழ்க்கைப் பாங்கிற்கு  உடன்பட வைக்க வேண்டும்.

எனினும், நுகரும் வேட்கைக்கு உள்ளூரப் பழக்கப்பட்ட மக்கள் தமது பல்வேறு வேட்கைகளையும் அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று கோருகின்றார்கள். அவர்கள் கோருவது முதலாளித்துவத்தையே. முதலாளித்துவத்தை மேம்படுத்தும் அலுவல் இயல்பாகவே வலதுசாரிக் கருத்தியல்களைச் சார்ந்தது. அதே அலுவலை இடதுசாரிகள் ஆற்ற முயன்றால், அது பெரிதும் திரிபுகளுக்கும் பேரழிவுடன் கூடிய தோல்விகளுக்கும் இட்டுச்செல்லும். 

தற்பொழுது மக்கள் விடுதல முன்னணியின் தலைமையைக் கொண்ட தேசிய மக்கள் சக்தி இந்த இக்கட்டை எதிர்நோக்கியுள்ளது. சமவுடைமைத் திட்டங்களை முன்னெடுப்பது, பொருளாதார நிலைகுலைவுக்கு இட்டுச்செல்லக் கூடும்; சர்வதேய நாணய நிதியம் உட்பட வெளியுலக முதலீட்டாளர்களை அது உறுத்தக் கூடும். மறுபுறம், முதலாளித்துவத்தை தழுவிக்கொள்வது, கட்சித் தோழர்களை உறுத்தக் கூடும். 

மக்கள் விடுதல முன்னணி துவக்கத்திலிருந்தே மார்க்சிய நெறிகளிலிருந்து விலகி வந்ததை அவர்களது வரலாறு புலப்படுத்துவதாக சில மார்க்சியர்கள் வாதிக்கிறார்கள். பெரிதும் தேசியவாதத்தின் பக்கம் சாய்ந்து, தேசியவாதப் போர்வைக்குள்   முதலாளித்துவக் கொள்கைகளை நிலைநாட்டிய தலைவர்களைக் கூட அது ஆதரித்ததாகவும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள். 

எனவே அத்தகைய ஒரு போலி மார்க்சியக் கட்சிக்கு முதலாளித்துவத்தை தழுவிக்கொள்வது அப்படி ஒன்றும் மிகுந்த சவாலாக அமையாது போகலாம். எனினும் அதன் கணிசமான ஆதரவாளர்கள் இன்னமும் சமவுடைமைக் கனவு கண்டு வருகின்றார்கள். விளம்பரத்தட்டி இடுதல், பேரணிகளுக்கு ஏற்பாடு செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்வோர் அவர்களே. விரைவில் ஏமாற்றத்துக்கு உள்ளாகக் கூடியோர் அவர்களே. எனினும் தேசிய மக்கள் சக்தி அதன் பரம்பரைத் தோழர்களின் வேட்கைகளுடன் ஒன்றியிருப்பதைக் காட்டிலும், தாராண்மைவாத மத்திய வர்க்க கருத்தியல்களின் பக்கம் சாயும் வாய்ப்பே அதிகமாகத் தெரிகின்றது.   

முதலாளித்துவத்தை நடைமுறைப்படுத்த களத்தில் இறங்குவதற்கு இன்றியமையாத தரப்புகளுள் முதலாளித்துவ வர்க்கம், முதலீட்டாளர்கள், முகாமையாளர்கள், ஆலைத் தொழிலாளிகள், மற்றும் பிற தரப்பினர் அடங்குவர்.  இவர்களை எப்படிக் கவர்வது என்பது அடுத்த சவால். அதற்கு பரம்பரைத் தோழர்களையும், விவசாயிகளையும், தொழிலாளிகளையும், ஆசிரியர்களையும், தொழிற்சங்கத் தலைவர்களையும் விட்டுவிலகி, முதலீட்டாளர்களுடனும், தொழில்முனைவர்களுடனும், மேட்டிமைக் குழாத்துடனும் உறவுபூண நேரும். அத்துடன் வணிகநேய சூழ்நிலை ஒன்றையும் தோற்றுவிக்க நேரும்.  

இன்றைய காலகட்டத்தில் முதலாளித்துவத்தைக் கவிழ்ப்பதைக் காட்டிலும், பெரிதும் முதலாளித்துவத்தினுள் குடியாட்சிப்படியான சீர்திருத்தங்களுக்காக வாதாடுவதுடன் மார்க்சியர்கள் அமைதி காண்கிறார்கள். 

பொருளாதார, சமூக வாரியாகப் பின்னடைந்த இலங்கை போன்ற சிறிய நாடுகளில் முதலாளித்துவத்துக்கு மெய்யான மாற்றுவழிகள் எழ வாய்ப்பில்லை. அவை முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் எழவே வாய்ப்புகள் அதிகம். ஆகவே, வருங்காலத்தில் இந்தியா போன்ற பாரிய பொருளாதார வல்லரசுகளில் அத்தகைய வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம்.    

அத்தகைய சமூகத்தை எய்த கணிசமான காலம் எடுக்கக் கூடும். இந்திய துணைக்கண்டத்தில் அத்தகைய சமூக இலக்கை எய்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாகத் தெரிகின்றன. எனவே இலங்கைவாழ் முற்போக்காளர்கள் இந்திய துணைக்கண்டம் எங்கும் இயங்கும் ஒத்த கருத்துடைய குழுமங்களுடன் அணிதிரள்வது அத்தியாவசியம். 

_______________________________________________________________________________

Ajith Rajapaksa, Should the Left Embrace Capitalism Today?, Colombo Telegraph, 2024-12-05,

translated by Mani Velupillai, 2024-12-11.

https://www.colombotelegraph.com/index.php/should-the-left-embrace-capitalism-today/

No comments:

Post a Comment