தீவகம்

ஜோன் பென்றி லூவிஸ் 


ஜோன் பென்றி லூவிஸ் (John Penry Lewis) Topographical Notes on the Jaffna Islands (யாழ் தீவக இடவிபரக் குறிப்புகள்) எனும் தலைப்பில் எழுதிய குறிப்புகள் Spolia Zeylanica (இலங்கை மரஞ்செடிகொடிகள்) எனும் திரட்டில் இடம்பெற்றுள்ளன. இலங்கை அரசாங்க அச்சகத்தில் அச்சிடப்பட்ட இத்திரட்டு 1908ல் இலங்கை அரும்பொருளகத்தால் வெளியிடப்பட்டது

இலங்கை நிருவாக சேவை அதிகாரியாக விளங்கிய ஜோன் பென்றி லூவிஸ் இரணைதீவு, கச்சைதீவு, நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, புங்குடுதீவு, அனைலைதீவு, எழுவைதீவு, காரைதீவு, நைனாதீவு அனைத்தையும் பார்வையிட்டு எழுதிய குறிப்புகள் பின்வருமாறு: 

நைனாதீவு

புங்குடுதீவுக்கு மேற்கே நைனாதீவு அமைந்துள்ளது. நீளம் 2 மைல், அகலம் ½ மைல். வடக்கே கோயிலும், அரசாங்க வங்களாவும் அமைந்துள்ளன. தெரு நீளப்பாடாக அமைந்துள்ளது. 3 குறுக்குத் தெருக்கள் அதை ஊடறுத்துச் செல்கின்றன. ஆடிமாதம் 10 நாட்கள் நடைபெறும் திருவிழா இத்தீவைச் சிறப்பிக்கிறது. அதில் 7,000 முதல் 23,000 பேர் கலந்துகொள்வார்கள். இத்தீவின் சுழியோடிகளும், சுழியோடும் இந்திய முகமதியர்களும்  வெளிக்கொணரும் சங்குகளுக்கும் இது பேர்போன தீவு. 1902 ஆடிமாதம் ஊர்காவற்றுறையிலிருந்து இங்கு நான் வந்து போயிருக்கிறேன். 

1902 யூலை 14ம் திகதி மாலை கோயில் திருவிழாவுக்கு நான் போயிருந்தேன். திருவிழா காலை 9 மணிக்கே துவங்கிவிட்டது.  வலதுபுறம் ஐந்துதலை நாகம் எனும் குடையின்கீழ் பிள்ளையாரும், இடதுபுறம் ஒரு காளையில் கார்த்திகேயரும் அமர்ந்திருக்க, கையில் சவுக்குடன் ஒரு வெண்மரக் குதிரையில், நன்கு உடுத்துப் படுத்து வீற்றிருக்கும் நாகபூசணி அம்மன் மேளதாளங்களுடனும், குழலோசையுடனும், சங்கொலியுடனும் கோயிலை சுற்றி இழுத்துச் செல்லப்பட்டார். 3 அல்லது 5 அல்லது 7 பந்தங்கள் கொண்ட கம்பங்கள் முன்னே கொண்டுசெல்லப்பட்டன. திருவிழா வேளைக்கே துவங்கியபடியால், அதிக மக்கள் திரளவில்லை. காற்றெழுந்து வீசியபடியால் அதிக அடியார்களை எதிர்பார்க்கவும் முடியாது. காற்று தணிந்தால், 19ம், 20ம் திகதிகளில் மக்கள் அலை அலையாகத் திரள்வார்கள்.  20ம் திகதி நிறைமதி அன்று இத்திருவுருவங்கள் அமைதிபட எடுத்துச்செல்லப்படும். கோப்பாய் வடக்கிலும், நவாலியிலும் உள்ள அம்மன் கோயில்கள் தவிர, இது மட்டுமே யாழ் மாவட்டத்தில் நாகதம்பிரான் குடிகொண்டுள்ள ஒரே கோயில். அதேவேளை அண்மையில் யாழ் குடாநாட்டில், அதாவது சண்டிலிப்பாயில் ஒரு நாகதம்பிரான் கோயில் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. 

நாகபூசணி அல்லது நாகேஸ்வரி அல்லது நாகதம்பிரான் எனும் இறைமகள் பார்வதியின் அவதாரம் எனப்படுகிறது. சிவன், பார்வதி இருவருக்கும் நாகம் ஓர்  அணிகலன். நாகம் திருமாலின் ஊர்தி. மக்கள் வழிபடுவது நாகத்தை அல்ல, நாகபூசணியை.

எனக்கு தரப்பட்ட விளக்கம் மங்கலாக இருக்கிறது. முக்குவர் குலத்து மன்னன் வெடி அரசனின் ஆட்சிக்காலத்தில் ஓர் அந்தணர் இத்தீவுக்கு அப்பால் இருக்கும் கடலில் சுருண்ட பாம்பின் உருவம் பொறித்த ஒரு கல்லைக் கண்டார். அவரே இந்த வழிபாட்டை இங்கு துவக்கியவர். அந்தக் கல்லை தான் பார்த்ததாக மணியகாரர் தெரிவிக்கிறார். தீவின் வடக்குப் பக்கத்தில் கடல் வற்றும்பொழுது அது புலப்படுவதாகக் கூறுகிறார்.  

இராமேசுவரத்தைச் சேர்ந்த நயினார் சாதியினர் உடைகலப்பட்டு இங்கு கரையொதுங்கியபடியால், இதற்கு நயினார் தீவு என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள். நைனாதீவு அதன் திரிபாகலாம். கோயிலில் குடியிருப்பவர்கள் அவர்களே. 

யாழ்ப்பாணத் தமிழரின் புனித நாகபாம்பு வெளுத்த நிறம் அல்லது பெரிதும் வெள்ளை நிறம் கொண்டது. 18 அங்குலத்தை விட நீளமானது. வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே வெளிப்படுவது. யாழ்ப்பாணத்தார் அதற்கு பாலும் வைப்பதுண்டு. இதுவே புனித நாகம். ஏனைய நாகங்களைக் கொல்ல யாழ்ப்பாணத்தார் பின்னிற்பதில்லை.  

திருவிழாக் காலத்தில் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு கோயிலிலிருந்து அரை மைல் சுற்றுவட்டாரத்துள் சிறுவர்களுக்கு மொட்டை அடிப்பதை அரசாங்கம் தடைசெய்துள்ளது. இந்தத் திருவிழாவின்பொழுது மட்டும் அத்தகைய தடை விதிப்பது புதுமையாக இருக்கிறது. வட மாகாணத்தில் வேறு திருவிழாக்களின் பொழுது இத்தகைய தடை விதிக்கப்படுவதாக நான் நினைக்கவில்லை.  

இரணைதீவு

1904 நவம்பர் 30ம் திகதி காலை 11 மணிக்குப் புறப்பட்டு, மாலை 3 மணிக்கு இரணைதீவை அடைந்து, கடலோரமாக எமது கூடாரத்தை அமைத்தோம். அரசாங்க அதிபரும், அதிகாரிகளும் தங்குவதற்காக உள்ளூர்வாசிகள் கிடுகுவேலி அடைப்புகளை இட்டிருந்தார்கள். 

தீவின் தோற்றம் எம்மை மகிழ்வித்தது. பசும்புல்தரையில் அங்கும் இங்கும் செறிந்திருந்த  சூரியா மரங்களின் கீழ் தீவக மக்களின் குடிசைகள் காணப்பட்டன. அவர்கள் அனைவரும் கட்டுடல் படைத்த கடலாளர்கள். அவர்கள் அணிந்திருந்த மலிவான, நேர்த்தியான பனையோலைத் தொப்பிகள், அவர்களுக்கு எடுப்பான தோற்றத்தை அளித்ததன.    

நேர்த்தியான வானிலை வந்து வாய்த்தது. தீவின் கிழக்கில் கடலட்டைகள் பதனிடும் இடங்களைப் பார்க்கச் சென்றேன். ஓரிடத்தில் ஒரு முகமதிய வணிகரையும், வேறிடத்தில் ஒரு சீனக் கடலட்டை வல்லுநரையும் கண்டோம். கடலாளர்களிடம் கடலட்டையை வாங்கி, அது பதனிடப்படுவதை மேற்பார்வை செய்யும் சீன வல்லுநருக்கு கடலட்டை வணிகர்கள் மாதந்தோறும் 10 ரூபா சம்பளம் கொடுத்தார்கள். 

சீன வல்லுநர் யாழ்ப்பாணத்தில் மிகவும் பேர்போனவர். ஒருகாலத்தில் அவர் மிகுந்த செல்வந்தராக இருந்தவர். செட்டிமாரினால் வஞ்சிக்கப்பட்டு தனது செல்வம் முழுவதையும் இழந்தவர். அவருடைய மகன் தற்பொழுது கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகத்  தெரிகிறது.

முகமதிய வணிகர் சின்னஞ்சிறு பனையோலை உமல்களில் வெல்லம் வைத்திருந்தார். ஒரு கடலட்டைக்கு நாலு உமல் வெல்லத்தை அவர் பண்டமாற்றாகக் கொடுப்பதாகத் தெரிவித்தார். ஆனால் கடலாளர்கள் அவருடைய கூற்றை மறுத்தார்கள். ஓர் உமல் வெல்லத்தின் பெறுமதி ஒரு சதம் மட்டுமே. அவர் நாலு உமல் வெல்லம் கொடுப்பதாகத் தெரிவிப்பது, சிறந்த கடலட்டைக்கு மாத்திரமே என்பதுதான் உண்மை என்று பட்டது. 

ஒரு குடிசையில் ஓர் எண்ணெய்ச் சிரட்டை தொங்குவதைக் கண்டேன். அது சுறா ஈரல் எண்ணெய். கடலில் அட்டை தேடும்பொழுது நீரைத் தெளிய வைப்பதற்காக அதனை அவர்கள் பயன்படுத்துவதாக அறிந்தேன். அதனைத் தேர்விட்டுப் பார்த்தபொழுது, அரைவட்டத்தில் நீர் படிப்படியாகத் தெளிவது தெரிந்தது.  

இரணைதீவு ஆண்கள், பெரியோரும் சிறியோரும், அணிந்த பனையோலைத் தொப்பி அல்லது தலைக்கூடை “தலைவரைப்பட்டை” எனப்பட்டது. மாரிகாலத்தில் சாவகச்சேரி போன்ற குடாநாட்டுக் குறிச்சிகளிலும் அது பயன்படுத்தப்பட்டது. சிறிய உமலாகவும் அது பயன்பட்டது. ஒன்றை வாங்கிப் பார்த்தபொழுது, அதற்குள் 2 அங்குல நீளமும், 1 அங்குல அகலமும் கொண்ட ஒரு சிறிய முகக்கண்ணாடியும், வெற்றிலை பாக்குச்சீவலும், சிறிய கொட்டைப்பாக்கு உமலும், பிறவும் காணப்பட்டன. 

வடகீழ்ப் பருவப்பெயர்ச்சிக் காலத்தில் மாத்திரமே மக்கள் இங்கு வாழ்வார்கள். தென்மேற் பருவப்பெயர்ச்சிக் காலத்தில் அவர்கள் குடாநாட்டுக்குப் போய், அறுவடைத் தொழில் செய்வார்கள். ஆண்கள் கட்டுடல் படைத்தவர்கள். நான் கண்ட பெண்கள் பெரிதும் பொலிவிழந்து நடமாடினார்கள். 

மாலையில் ஊரைச் சுற்றிப் பார்த்தேன். வன்னியில் உள்ள குடிசைகளைப் போல் இங்கும் தாழ்ந்த குடிசைகளில் மக்கள் வாழ்ந்து வந்தார்கள். தீவை விட்டுப் புறப்படும்பொழுது, குடிசைகளுக்கு மரப்பூட்டுப் போட்டுவிடுவார்கள். இத்தகைய மரப்பூட்டுகளை கொழும்பு அரும்பொருளகத்தில் நான் பார்த்திருக்கிறேன்.  

இரணைதீவில் காணப்படும் மரஞ்செடிகொடிகள் பற்றி விறைற் (Wright) இப்படி எழுதுகிறார்: “இந்தியாவில் பயிரிடப்படும் கற்பூரப்புல் இங்கு கிடைக்கிறது. இலங்கையில் வேறு தாழ்ந்த புலங்களில் கிடைக்கும் கற்பூரப்புல்லை விட இது சிறந்தது. இப்புற்செய்கையை ஊக்குவிக்க வேண்டும். எளிய, மலிவான பொறிவகை கொண்டு புல்லெண்ணெய் வடிக்கப்படுகிறது. ஆமணக்கு, எருக்கலை, அவுரிச்செடிகள் இங்கு மாறிமாறிப் பயிரிடப்பட வேண்டும்.” 

தூம்புக்கட்டைகள் பொருத்தப்படாத வள்ளங்களையே இரணைதீவு மக்கள் பயன்படுத்துகிறார்கள். இவை கொச்சியிலிருந்து தருவிக்கப்படும் வள்ளங்கள். யாழ்ப்பாண வள்ளங்ளின் சுக்கானைப் போல் இவற்றின் சுக்கானும் பழம்பெரும் உருவில் அமைந்துள்ளது.

கிழக்கில் இரண்டும், மேற்கில் ஒன்றுமாக மூன்று உரோமக் கத்தோலிக்க தேவாலயங்கள் இங்கு காணப்படுகின்றன. மூன்றும் பவளக்கல் கொண்டு கட்டப்படவை. இரண்டு ஓட்டுக்கூரை கொண்டவை. எனினும் அவற்றின் கட்டுமானம் கரடுமுரடானது. 

பெரிய உரோமக் கத்தோலிக்க தேவாலயத்தில், சதுரவடிவில் எழுந்து கூம்பி 40, 50 அடி உயர்ந்த  கோபுரம் காணப்படுகிறது. ஆனாலும் மேலே ஏறுவதற்கு ஏணியோ, படிக்கட்டோ கிடையாது. கோபுரத்திலிருந்து கண்காணிக்க வேண்டுமானால், அதைச் சுற்றி மேடையமைக்க வேண்டியிருக்கும். பின்னர் வெட்டுப் பவளக்கல் கொண்டு மேடை அமைக்கப்பட்டது. எனினும் அது கண்ணைக் கவரும் வண்ணம் அமையவில்லையே என்ற ஏக்கம் ஏற்படுகிறது. அளவைத் திணைக்களம் அலங்கோலத்தைக் குறைத்து நிலையான கோபுரங்களை அமைக்கக் கூடாதா? மேற்படி கோபுரம் முற்றிலும் ஒரு புகைபோக்கி போலவே தென்படுகிறது. இன்னும் கொஞ்சச் செலவுடன் இக்கோபுரத்துக்கு சரிவர மெருகூட்டியிருக்கலாம். மேற்படி கோலத்தில்தான் இக்கோபுரம் இரணைதீவின் நிலைத்த சின்னமாய் விளங்குகிறது.

கடலோரத்துக்கு அப்பால், மேற்படி உரோமக் கத்தோலிக்க தேவாலயத்திலிருந்து கிட்டத்தட்ட 200 யார் தொலைவில், கட்டிமுடிக்கப்படாத குட்டிப் பவளக்கற் குகை ஒன்று காணப்படுகிறது. அதை ஏற்கெனவே குறிப்பிடத் தவறிவிட்டேன். 

எழுவைதீவு

எழுவைதீவின் வடக்கு எல்லையில் ஊர்காவற்றுறையை நோக்கி அமைந்துள்ள இடத்தில் நாங்கள் தரையிறங்கினோம். தென்மேற்குப் பருவப்பெயர்ச்சிக் காற்றுக் காலத்தில் இறக்குமதி, ஏற்றுமதி அதிகாரி தங்குவதற்கான  ஓட்டுக்கூரையுடன் கூடிய வங்களா அங்கே காணப்பட்டது. அவர் இப்பொழுது மண்டைதீவில் இருக்கிறார்.

எழுவைதீவின் கிழக்குப் பக்கத்தில் மணலும், மேற்குப் பக்கத்தில் பவளக்கல்லும் காணப்படுகின்றன. எழுவைதீவு ஒரு பனந்தீவு. தீவு முழுவதும் பனைகள் நிற்கின்றன. ஆதலால் இது அனலைதீவைப் போல் நேர்சீரானதல்ல. 

பனையே மக்களுக்கு வாழ்வளிக்கிறது. ஓலையும் நாரும் கொண்டு அவர்கள் இழைக்கும் பனங்கூடைகள் மிகவும் வன்மையானவை, எனினும் மலிவானவை. ஒரு கூடையின் விலை 6 சதம் மட்டுமே! 

இங்கு தெரு இல்லாதபடியால், அவர்கள் தெருவரி செலுத்துவதில்லை. இப்பொழுது இங்கு வறுமை இல்லை. பனம்நார்க் கைத்தொழில் மூலம் அவர்கள் மடிநிறையப் பணம் சம்பாதித்துள்ளார்கள். அந்தக் கைத்தொழில் இப்பொழுது இடம்பெறுவதில்லை. தீவின் வடக்கு கிழக்காக ஒரு தெருவை அமைத்தால் இங்கு விருத்தி ஏற்படும். தற்பொழுது தாறுமாறான நிலையே காணப்படுகிறது. ஒரு கரையிலிருந்து மறு கரைக்குப் போவதென்றால், வளவுகளைச் சுற்றிச் செல்லவேண்டும். பவளக்கற்களுக்கும், முட்செடிகளுக்கும் ஊடாக,   மணலில் புதையுண்டு, வளைந்து நெளிந்து பனைகளைக் கடந்து செல்ல வேண்டும்.

இங்கு வளரும் சில உடைமரங்களைக் கண்டு வியந்தேன். இது மன்னாருக்குரிய மகத்தான மரங்கள். யாழ், முல்லைத்தீவு மாவட்டங்களில் இவற்றைக் காண முடியாது. மன்னாரிலும், அங்கிருந்து 25வது மைற்கல் துவங்கி மதவாச்சி தெருவோரத்திலும் இவை காணப்படுகின்றன. அது எனக்குப் புதுமையாக இருந்தது. யாழ் மாவட்டத்தில் வேறிடங்களில் வளராத உடைமரங்கள் எழுவைதீவில் வளரும் காரணம் என்னவாயிருக்கும் என்று வியக்கிறேன். 

பனை, தென்னை, உடை மரங்களை விட வேம்பு, பூவரசு, தில்லை மரங்களும் காணப்படுகின்றன. ஆராய்ச்சியாரின் வளவில் ஒரு பலாமரமும், அவர் நட்ட மாமரங்களும் நிற்கின்றன.

ஆண்பனைகள் சிலவேளைகளில் பெண்பனைகளாக மாறுவதாக மணியகாரர் தெரிவிக்கிறார். அது உண்மை என்றால், ஒரு புதுமையாகும். உடையாரும் தனது அனுபவத்தைக் கொண்டு அதை உறுதிப்படுத்துகிறார். குடித்தொகை 1881ல் 227 ஆக இருந்து 1901ல் 43 விழுக்காடு அதிகரித்து 324 ஆகியது. 

டிசம்பர் 10ம் திகதி காலை ஊர்காவற்றுறை திரும்பினோம். வடக்கிலிருந்து அல்லது வடமேற்கிலிருந்து காற்றெழுந்து வீசியபடியால், விரைந்து தரையிறங்கினோம். மாலையில் வடகிழக்கிலிருந்து காற்றெழுந்து வீசும் என்று படகோட்டி தெரிவித்தார். இடதுபுறம் கடலிலிருந்து வெளிப்பட்ட கோட்டை கண்கொள்ளாக் காட்சியாய் இருந்தது. 

காரைதீவு

டிசம்பர் 11: காரைதீவே யாழ் மாவட்டத்தின் வட்டிக்கடை. யாழ் மாவட்ட மக்களுள் காரைதீவு மக்களே மிகவும் சிக்கனமானவர்கள் — யாழ்ப்பாணத்தாருள் காரைதீவு மக்களே யாழ்ப்பாணத்தனம் மிகுந்தவர்கள். யாழ் மாவட்டத்தின் ஏனைய குறிச்சிகளைப் போலன்றி இங்கு செல்வந்தக் குடும்பத்துப் பெண்களும்  வறிய குடும்பத்துப் பெண்களைப் போல் வயல்களில் இறங்கி வேலை செய்கிறார்கள். காரைதீவு மக்கள் மலாயா, சிங்கப்பூர் உட்பட எல்லா இடங்களுக்கும் சென்று ஒவ்வொரு சல்லிக்காசையும் சேமிப்பதால், யாழ்ப்பாணத்தில் காரைதீவு மிகவும் வளம்கொழிக்கும் தீவாக விளங்குவதில் வியப்பில்லை.  

கச்சைதீவு

1904 டிசம்பர் 2ம் திகதி காலை 11 மணிக்குப் புறப்பட்டு மாலை 2:30 மணிக்கு கச்சைதீவை அடைந்தோம். இது நெடுந்தீவுக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடைப்பட்ட தீவு. நெடுந்தீவுக்கு தென்கிழக்காக 11 மைல் தொலைவில் அமைந்துள்ளது. மக்கள்   வாழாத தீவு. 

காலையிலிருந்தே காற்றெழுந்து வீசியது. தென்புறத்தில் ஆழ்நீர் சூழ்ந்தது. எமது சட்டகம் செப்பமானதல்ல என்பது புரிந்தது. சட்டகத்தில் ஆழம் குறைத்துக் காட்டப்பட்டுள்ளது. உண்மையில் ஆழம் அதிகம். 

நாங்கள் கரையிறங்கி எமது கூடாரத்தை அமைத்தோம். இங்கிலஸ் உடனடியாகவே அளப்பனவில் இறங்கினார். அந்தி சாய முன்னரே அரைவாசி அளப்பனவை அவர் முடித்துவிட்டார்.

இங்கு காணப்படும் மரங்களுள் கண்டல் மரம் முக்கியமானது. வலை, கப்பற்பாய் என்பவற்றுக்கு கண்டல்மரச் சாயம் பூசப்படுகிறது. கூழைச் சூரியா மரங்களும், கொடிவகைகளும், பூச்செடிகளும் இங்கு காணப்படுகின்றன. இன்னொன்று கார்த்திகைப் பூச்செடி. கார்த்திகையில் மலர்வதால் இதற்கு யாழ்ப்பாணத்தில் இப்பெயர் வழங்கி வருகிறது.  

எமது கூடாரம் ஒரு மரத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்தது. பணியாளர்கள் அதை எருக்கலை என்கிறார்கள். ஏற்கெனவே ஒரு செடியளவில் இதை வேறிடங்களில் நான் கண்டிருக்கிறேன். இப்படி மரமாக வளர்ந்ததை முன்னர் நான் கண்டதில்லை. அது வேறொரு மரத்தினுள் வளர்ந்திருந்தது. இரண்டின் இலைகளும் ஒன்றை ஒன்று ஒத்திருந்தன. ஆனால் பூக்கள் வேறுபட்டன. அரச தாவரத் தோட்டத்தில் இனங்காணவென அதன் கிளை ஒன்றை எடுத்துச் சென்றேன். இலவங்கப்பூ போல் தென்பட்ட வேறொரு செடியையும் எடுத்துச் சென்றேன். 

கச்சைதீவில் கரணைகிழங்கு பெருவாரியாகக் கிடைக்கிறது. அவித்து உண்ணப்படுகிறது. அதிலிருந்து மாவும் ஆக்கப்படுகிறது. 1904 பங்குனி, சித்திரை மாதங்களில் கச்சைதீவிலிருந்து 12 தொன் கரணைக்கிழங்கு நெடுந்தீவுக்கு ஏற்றி அனுப்பப்பட்டது.  

தீவின் கிழக்கு மூலையில்தான் நாம் நங்கூரமிட்டிருந்தோம். சிறிய பவளக்கற் கோவளம் இங்கு காணப்படுகிறது.  அதில் ஓர் அளவைக்கூம்பு அமைந்திருந்த தடயங்களை  இங்கிலஸ் சுட்டிக்காட்டினார். இந்திய அரச கடல் அளவைத் துறை அதை அமைத்திருக்கலாம். ஆனாலும் என்றுமே கச்சைதீவு முழுமையாக அளக்கப்படவில்லை.  

இங்கு நன்னீர் கிடையாதபடியால் மக்கள் வாழ்வதில்லை. தீவின் எதிர்ப்பக்கத்தில் சேதமடைந்த வள்ளம் ஒன்றையும் அவர் சுட்டிக்காட்டினார். எரிந்த விறகும் எமக்குத் தெரிந்தது. கடலாளர்கள் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் வந்து போயிருக்க வேண்டும்.  

இது ஒரு மைல்ல் நீளமும், அரை மைல் அகலமும் கொண்டது. மேற்குப்புறத்தில் ஒரு புல்வெளி காணப்படுகிறது.  இரணைதீவிலும், கச்சைதீவிலும் பாம்புகள் இல்லை என்று எம்மிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அது தவறு என்பதை, இரணைதீவில் ஓர் உரோமக் கத்தோலிக்க தேவாலயத்திலும், கச்சைதீவிலும் காணப்பட்ட பாம்புச்செட்டைகளை வைத்து நாம் கண்டறிந்தோம். டிசம்பர் 3ம் திகதி இரவு விட்டுவிட்டு மழை கொட்டியது. படிப்படியாக காற்றுக் கிளம்பி வீசுவது போல் தென்பட்டது.  அத்துடன் எம்மிடம் ஓரளவு தண்ணீரே இருந்தது. இன்று காலை உப்புத்தண்ணீர் கொண்டே முகங்கைகால் கழுவினோம். நாங்கள் இயன்றளவு விரைவாகப் புறப்படுவதே புத்தி என்று தெரிந்தது. ஆனால் இங்கிலஸ் தனது அளப்பனவை முடிக்கும்வரை நாங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அவருக்கு இன்னும் 3 மணித்தியாலங்கள் தேவைப்பட்டன. கிட்டத்தட்ட காலை 11:30 மணிக்கு நாங்கள் புறப்பட்டபொழுது காற்று கிளம்பி வீசியது. கடல் கொந்தளித்தது. கடற்கலத் தலைவர் எங்கள் பாதுகாப்பை எண்ணிப் பதைபதைத்தார். செரந்தீப் (Serendib) எனப்பட்ட எமது கடற்கலம்  துறைமுக ஓடமாகவே உருவாக்கப்பட்டது. அந்த ஒடுங்கி, நீண்ட ஓடம் கனத்த முகப்புக் கொண்டது. அன்று நாங்கள் கண்ட கடலுக்கு அது சற்றும் உகந்ததல்ல.  

நாங்கள் நெடுந்தீவுக்குப் புறப்படுவதே நல்லதென்று நான் முடிவு செய்தேன். நெடுந்தீவின் தென்புறத்தை நோக்கிச் சென்றால், காற்றின் தாக்கத்திலிருந்து தப்பிவிடலாம். அதன்படி கடல்-அலையின் திசைக்கு 90 பாகை எதிர்த்திசையில் பயணித்து, மாலை 2:16 மணியளவில் நெடுந்தீவை அடைந்தோம். நாங்கள் யாழ்ப்பாணத்தை விட்டுப் புறப்பட்டபொழுது, கடல் மிகவும் அமைதியாகவே இருந்தது. எனினும் மாரிகாலத்தில் இத்தகைய திடீர்த் திருப்பங்கள் எதிர்பார்க்கத்தக்கவையே.   என்னென்ன எல்லாமோ நடந்தும் இருக்கலாம், நடக்காமலும் இருக்கலாம். 

வெல்லை என்ற இடத்தில், குதிரைக் கொட்டிலுக்கு அருகில், எமது கூடாரத்தை அமைத்தோம். அந்த ஓலைக்கொட்டில் மிகவும் வசதிவாய்ந்தது. எஞ்சிய நாள் முழுவதும், இரவு முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்தது. அது 1884ல் யாழ்ப்பாணத்தில் வீசிய புயல் போன்றது. இலச்சதீவிலிருந்து வேளைக்கே புறப்பட்டதை எண்ணி எங்களை நாங்களே மெச்சிக்கொண்டோம். மற்றும்படி அத்தீவின் பாலைநிலத்தில் ஏறத்தாழ இரண்டு, மூன்று நாட்கள் அகப்பட்டிருப்போம்

நெடுந்தீவு

1904 டிசம்பர் 4ம் திகதி காலை 8 மணியளவில் “செரந்தீப்” கடற்கல மாலுமி எமக்கொரு சேதி அனுப்பினார்: 

“வடகிழக்கு நோக்கி வீசிய காற்று இராத்திரி கிழக்கு நோக்கித் திரும்பிவிட்டது; இன்னோர் இரவை இங்கு கழிப்பது ஆபத்து. எனது நங்கூரத்தின் குறுக்குப்பாளம் அலையில் அடியுண்டு போய்விட்டது. காற்று பிறகும் தெற்கு நோக்கித் திரும்பி எனது கடற்லகலத்தை கரையொதுங்கச் செய்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். தயவுசெய்து வெறுங்கையுடன் கடற்கலத்துக்கு வரவும். இந்தக் கணத்தில் சில முடிவுகளை நாங்கள் எடுக்கவேண்டியுள்ளது.”

இந்தச் சூறாவளியிலும் புயல்மழையிலும் அவசர அவசரமாக, உடுத்த உடையுடன் கூட யாழ்ப்பாணம் செல்வது நல்லதல்ல என்று நாங்கள் முடிவெடுத்தோம். கடற்கலம் அகன்று செல்ல, நாங்களும் தீவின் குறுக்கே  மூன்றரை மைல் நடந்து அரசாங்க வங்களாவுக்குச் சென்றோம். கடற்கலத்தை கடைசியாக நாங்கள் பார்த்தபொழுது, அது  கிழக்கு நோக்கி நகராமல் நிற்பதுபோல் தெரிந்தது. 

வானிலை மேம்பட்டவுடன் திரும்பிவரும்படி மாலுமியிடம் நான் கூறியிருந்தேன். அந்தியில் வானிலை சற்று மேம்பட்டாலும்,  காற்று தணியவில்லை. எனினும், மங்களூர்-ஓடு வேய்ந்த எமது வங்களாவின் கூரை இந்த மாரியில் எமக்கு இதமளித்தது. கோடையில் வங்களா புழுங்கி அவியும். 

வங்களாவை மொய்த்த கொசுக்கள் எங்களை வதைத்தன. அவை நுளம்புகளை விட மோசமானவை.  அவற்றின் கடி மிகுந்த எரிச்சலூட்டும். அவை நடமாடுவது கண்ணுக்குப் புலப்படாது. கடியுண்ட பிறகுதான் அது தெரியவரும். அன்றிரவு  நாங்கள் கண்ணயரவில்லை. முதல்நாள் இரவும் வெல்லாய் என்ற இடத்தில், ஓர் ஓலைக்கொட்டிலில் நான் உறங்கவில்லை. கூரை காற்றோடு போய்விடுமோ, நான் மழையில் நனைய நேர்ந்திடுமோ என்று நடுங்கியபடி விழித்திருந்தேன்.  

டிசம்பர் 6ம் திகதி மாலை காற்று அறவே தணிந்துவிட்டது. ஆனால் “செரந்தீப்” கடற்கலம் திரும்பிய அறிகுறி தெரியவில்லை. 

போர்த்துக்கேயர் கட்டிய கோட்டையை காலையில் நண்பர் இங்கிலிசு அளந்தார். மாலையில் சாரப்பிட்டியில் இருக்கும் கிணறுகளை பார்வையிட நண்பர் கோனல் போனார். அங்கே 92 கிணறுகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவை போர்த்துக்கேயராலோ, ஒல்லாந்தராலோ வெட்டப்பட்டவை அல்ல, அவை வரலற்றுக் காலத்துக்கு முற்பட்டவை என்பது கோனலின் கருத்து. 

அவர் இரணைதீவில் கண்ட சிறந்தவகை பீர்க்கு கொடிகளை நெடுந்தீவில் காணவில்லை. நெடுந்தீவு வயல்களில் வரகு, சாமைப் பயிர்கள் செழித்து வளர்ந்துள்ளன. 

வங்களாவை அண்டிய கடற்கரையில் காய்ந்து கிடக்கும் சாணியால்தான் நெடுந்தீவில் கொசுக்கள் பெருகியிருப்பதாக பூநகரியிலிருந்து எங்களுடன் திரும்பிவந்த மணியகாரர் தெரிவிக்கிறார். சாணி காய்ந்து குவிந்து கிடக்கிறது. யாழ் மாவட்டத்தின் ஏனைய இடங்களில் எல்லாம் சாணியை கவனமாகச் சேகரித்து எருவாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் நெடுந்தீவுவாழ் உழவர்கள் எருவைப் பயன்படுத்தவில்லை. சாணி நல்ல எருவல்ல என்பது அவர்கள் எண்ணம். ஆனால் அது வெறும் சோம்பேறித்தனத்துக்கு ஒரு சாட்டு. ஏற்றியிறக்கும் செலவு கட்டுபடியாகும் என்றால், இந்த எரு யாழ்ப்பாணத்துக்கு ஏற்றிச் செல்லப்பட்டிருக்கும். இங்கிருந்து காவிளாய் அனலைதீவுக்கு பசளையாக ஏற்றிச் செல்லப்படுகிறது. செலவு கட்டுபடியாகாது என்றபடியால் அது யாழ்ப்பாணத்துக்கு ஏற்றி அனுப்பப்படவில்லை. 

கச்சைதீவில் பாம்புக்கடியால் தீங்கில்லை என்கிறார் உடையார். அங்கு முளைக்கும் சீந்தில் என்ற மூலிகையே அதற்கான மருந்து என்பது உடையாரின் வாதம். ஆனல் ஒரு யோகியால்தான் அந்த மூலிகையைக் கண்டுபிடிக்க முடியும். 

இரணைதீவில் அஞ்சாலைகள் (அல்லது கடற்பாம்புகள்) அதிகம். ஆனால் ஏனைய தீவுகளில் உள்ளவை போலவே இவையும் மந்தம் பிடித்தவை என்கிறார்கள். ஆதலால் இவை யாரையாவது கடிப்பது குறைவு. “கடித்தாலும் பரவாயில்லை. மூன்று தடவைகள் கடல்நீரைக் குடித்தால் அது சரிப்பட்டுவிடும்” என்று இரணைதீவுக் கடலாளர் ஒருவர் தெரிவித்தார். ஆனால் எமர்சன் தெனன் அவர்களோ அவை உயிர்குடிக்கும் பாம்புகள் என்கிறார்.

வெடுந்தீவில் ஏறத்தாழ 20 கட்டுமரங்கள் இருக்கின்றன. நேற்று சில கட்டுமரங்கள் கொந்தளிக்கும் கடலில் சென்றன. அவற்றுள் ஒன்று ஊர்காவற்றுறைக்கு புறப்பட்டது. அதன்மூலம் நான் ஒரு சேதி அனுபினேன். 

இரணைதீவுக்காரர் அணியும் தொப்பி வேறு வகையானது. நெடுந்தீவுக்காரர் தமது சொந்த தொப்பியை ஆக்கி அணிவதை அவதானித்தேன். இதுவும் பனை ஓலையால் ஆனது,  குல்லாய் போன்றது. காதுக்கும் நாடிக்கும் கீழே முடியப்படுவது. கொழும்பில் நடக்கும் பொருட்காட்சியில் வைக்கவென ஒரு தொப்பியை நான் பெற்றுக்கொண்டேன். இது தலைவரைப்பட்டை எனப்படுகிறது. இதை நாங்கள் தலைக்கூடை எனலாம்.  

சாரைப்பிட்டியில் 92 கிணறுகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது என்று மணியகாரர் தெரிவிக்கிறார். ஆனால் "ஒல்லாந்தர் திண்ணிய பாறை ஊடாக 400 கிணறுகளை வெட்டுவித்தார்கள்" என்று "கொழும்பு ஜேர்ணல்" இதழை மேற்கோள் காட்டி, காசிச்செட்டி தனது "கசற்றியர்" சஞ்சிகையில் எழுதியுள்ளார். 

டிசம்பர் 6ம் திகதி காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து "செரந்தீப்" வருவது புலப்பட்டது. இதற்கு முன்னர் நான் நெடுந்தீவு வந்துசென்ற பிறகு மாவில்துறை எனப்படும் துறையில் அமைந்திருந்த மேடை, கடல் அலையில் தாக்குண்டு தகர்ந்து போய்விட்டது. ஆதலால், அலைமோதும் கடலில் ஒரு நெடுந்தீவுப் படகுமூலம் கடற்கலத்தைச் சென்றடடைய, எனக்கு ஏறக்குறைய 2 மணித்தியாலம் பிடித்தது.  

சனிக்கிழமை நாங்கள் ஐயுற்றது போல்  காற்றை எதிர்கொண்ட  கடற்கலம் ஒரு அடியேனும் நகர முடியாமல் நிலைகொண்டது. ஆதலால் எமது மாலுமி மண்டைதீவு செல்லும் எண்ணத்தைக் கைவிட்டு, ஊர்காவற்றுறைக்குச் செல்ல நேர்ந்தது. 

புங்குடுதீவு 

1905 டிசம்பர் 7ம் திகதி பிற்பகல் 2 மணிக்கு ஊர்காவற்றுறையிலிருந்து ஒரு படகில் புறப்பட்டு, 4:30 மணிக்கு புங்குடுதீவை அடைந்தோம். 6 மணிக்கு நான் பார்வையிட வேண்டிய மருந்தகத்தை சென்றடைந்தோம். தெருவை நோக்கியபொழுது, எதிர்ப்புறத்து உரோமன் கத்தோலிக்க தேவாலயத்துக்கு அப்பால், ஒல்லாந்தரின் அல்லது போர்த்துக்கேயரின் பழைய தேவாலயம் சிதைந்து குவிந்து கிடந்தது. ஒரு சிறிய  சதுர வடிவக் கட்டிடத்தை ஓர் ஆலமரம் மூடி வளர்ந்திருந்தது. அது ஒரு கோபுரத்தின் அத்திவாரம் ஆகலாம். 

மருந்தகத்தை அண்டி ஒரு குளமும், அரசமரமும், மருதமரமும் நிற்கின்றன. இத்தீவில் இருக்கும் ஒரேயொரு மருத மரம் இதுவே என்று சொல்லப்படுகிறது. புளியடி எனப்படும் இறங்குதுறையில் பச்சைப்பசேலென்று எள்ளுச்செடி வளர்ந்து பரந்துள்ளது. 

மருந்தகம் அமைந்துள்ள இடம் பெருங்காடு எனப்படுகிறது. தற்பொழுது இங்கு காடெதுவும் காணப்படவில்லை. நெல்வயல்களும் தோட்டங்களும் காண்ப்படுகின்றன. அப்பால் அமெரிக்க ஆதீன தேவாலயம் காணப்படுகிறது. அதைச்சுற்றி மதில் கட்டப்பட்டுள்ளது. செங்கோணச் சுவரில் பனையோலைக் கூரையுடன் முக்கோண மணிக்கூண்டு நிலைகொண்டுள்ளது. 

புங்குடுதீவின் குடித்தொகை 1881ல் 3499, 1891ல் 4098, 1901ல் 5201. அதாவது 20 ஆண்டுகளுள் குடித்தொகை 60 விழுக்காடு அதிகரித்துள்ளது. 

அனலைதீவு 

1905 டிசம்பர் 8ம் திகதி காலை 9:30 மணிக்கு ஒரு கடற்கலத்தில் அனலைதீவுக்கு புறப்பட்டோம். மருதடி வரை புங்குடுதீவை சுற்றிச்சென்று, பிறகு கடலின் குறுக்கே சென்று மாலை 1:30 மணிக்கு அனலைதீவை அடைந்தோம். இறங்குதுறையிலிருந்து ஏறத்தாழ முக்கால் மைல் தூரத்தில் உள்ள ஓர் இந்துப் பாடசாலையில் தங்கினோம். இந்த இடத்தின் பெயர் நடவுத்திருத்தி. புங்குடுதீவுக்கும் அனலைதீவு இறங்குதுறைக்கும் இடையே தென்கிழக்காக ஏறத்தாழ 4 மைல் தூரம் இருக்கும்.  

அனலைதீவு ஒரு வளமான தீவு. இங்கு பெருமளவு புகையிலை பயிரிடப்படுகிறது. புங்குடுதீவைப் போல் இங்கும் கிளுவை வேலிகள் நேர்சீராக அமைந்துள்ளன. யாழ் குடாநாட்டில் உள்ள வலிகாமம் மேற்கு, வடமராட்சி போன்று இங்குள்ள கிராமங்கள் மண்வளம் படைத்தவை. அதனால்  வளம்கொழிப்பவை.  வயல்களிலிருந்து சல்லிக்கற்களை தோண்டியெடுத்து அப்புறப்படுத்தியவுடன் மண்வளம் கைகூடிவிடுகிறது.  

அனலைதீவின் நீளம் 2 மைல், அகலம் 1 மைல்.  நெடுக்கும் குறுக்குமாகச் செல்லும் இரண்டு தெருக்கள் ஒன்றை ஒன்று சந்திக்கின்றன. தீவின் வடமேல் மூலையில் வடலிக்குளம் எனும் குளத்தை நான் கடந்து சென்றேன். அது சுனைநீர் தேங்கும் குளம் என்கிறார்கள். சந்திக்கருகில் கைவிடப்பட்ட ஓர் உவர்நீர்க் கேணி காணப்படுகிறது.   

புங்குடுதீவுக்கும், நைனாதீவுக்கும் இடையே குறிக்கட்டுவான் எனும் குறுந்தீவு காணப்படுகிறது. அது குறி காட்டுவான் என்பதன் திரிபு. குறி காட்டும் இடம் என்பது அதன் பொருள். நைனாதீவுக்குப் போக விரும்புவோர் தமக்கு ஒரு வள்ளம் தேவை என்பதைத் தெரிவிக்க இத்தீவில் உள்ளவர்களுக்கு ஒரு குறி காட்டுவார்கள். அதுவே இப்பெயரின் தோற்றுவாய். 

இத்தீவுகளில் அணில்களோ, நரிகளோ இல்லை என்கிறார்கள். எனினும் வேலணைக்கும் புங்குடுதீவுக்கும் இடையே ஆழம் குறைந்த கடலை நரிகள் கடந்து செல்வதாக நம்புகிறேன். அனலைதீவில் தெருநாய்கள் இல்லை. ஆதலால் இரவில் அமைதி நிலவுகிறது. 

அனலைதீவில் 9 உரிம வண்டிகளும், 6 பண்ணை வண்டிகளும் உள்ளன. அதன் குடித்தொகை 1871ல் 1064, 1881ல் 1296, 1891ல் 1411, 1901ல் 1643. அதாவது 30 ஆண்டுகளில் குடித்தொகை 45 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதே காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு 21.8 விழுக்காடு  மாத்திரமே. 

இத்தீவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அதேவேளை இத்தீவக மக்களுள் சிலர் யாழ்ப்பாணத்து யூதர்களாகிய காரைதீவு வட்டிக் கடைக்காரர்களிடம் கடன்பட்டுள்ளார்கள். 

டிசம்பர் 9ம் திகதி முக்கால் மைல் தூரம் நடந்து கோட்டையடி என்ற இடத்துக்குப் போனோம். அங்கிருந்துதான் ஊர்காவற்றுறைக்கும், வடக்கே எழுவைதீவுக்கும் படகுகள் புறப்படும்.  கோட்டையடி என்பது மண்ணும் கல்லும் கொண்ட மேடு. அது பறங்கிக் கோட்டையின் சிதைவுகள் கொண்ட மேடு. பறங்கி என்பது போர்த்துக்கேயரைக் குறிக்கும்.  

அனலைதீவுக்கும் எழுவைதீவுக்கும் இடையே பருத்தித்தீவு எனும் குறுந்தீவு காணப்படுகிறது. அங்கு தண்ணீர் இல்லாதபடியால், மக்கள் வசிப்பதில்லை. 

John Penry Lewis, Topographical Notes on the Jaffna Islands, 1908, 

translated by Mani Velupillai, 2022-12-09. 

No comments:

Post a Comment