மார்க்சுக்கு அஞ்சலி

எங்கெல்ஸ்  

Image result for engels at marx funeral
நிகழ்காலத்தின் மாபெரும் சிந்தனையாளர் (1883) மார்ச் 14ம் திகதி பிற்பகல் 2:45 மணிக்கு சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார். இரு நிமிடங்களுக்குக் கூட நாங்கள் அவரைப் பிரிந்திருக்கவில்லை. நாங்கள் திரும்பிச் சென்று பார்த்தபொழுதுதனது கைநாற்காலியில் அவர் அமைதியாக அமர்ந்திருக்கக் கண்டோம்மீளா உறக்கத்தில் ஆழ்ந்திருக்கக் கண்டோம்.
அவரது இறப்பினால் ஐரோப்பியஅமெரிக்க கண்டங்களைச் சேர்ந்த தீவிர பாட்டாளி வர்க்கத்துக்கும்வரலாற்று அறிவியலுக்கும் அளப்பரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.  இந்த வல்லுநரின் மறைவினால் தோன்றிய இடைவெளி மிகவிரைல் உணரப்படும்.
உயிரினங்கள் விருத்தியுறும் விதியை டார்வின் கண்டுபிடித்தது போலவேமானிட வரலாறு விருத்தியுறும் விதியை மார்க்ஸ் கண்டுபிடித்தார்; இதுவரை கருத்தியலில் புதையுண்டிருந்த எளிய உண்மையை அவர் கண்டுபிடித்தார். அதாவது: மனிதகுலம் முதற்கண் உண்டுகுடித்துஉடுத்துஉறையும் நிலையை அடைய முடிந்த பின்னரே அரசியலிலும்கலையிலும்சமயத்திலும் பிறவற்றிலும் ஈடுபட முடியும்; உடனடியாகத் தேவைப்படும் பொருள்வகைகளது உற்பத்தியின் விளைவாககுறித்த ஒரு மக்கள்திரளினால் அல்லது குறித்த ஒரு காலகட்டத்தில் ஈட்டப்படும் பொருளாதார விருத்தியின் அளவை அடித்தளமாகக் கொண்டே சம்பந்தப்பட்ட மக்களின் அரச கட்டமைப்புகளும்சட்ட திட்டங்களும்கலையும்ஏன் சமயக் கருத்துக்களும் கூடஉருவாக்கப்பட்டுள்ளன; ஆதலால் அந்த அடித்தளத்தைக் கருத்தில் கொண்டே அவற்றுக்கு விளக்கமளிக்க வேண்டும்இதுவரை செய்யப்பட்டவாறு மறுதலையாக நோக்கி விளக்கமளிக்கக் கூடாது என்பதை அவர் கண்டுபிடித்தார்.       
அது மாத்திரமல்லதற்கால உற்பத்தி முறையையும்அந்த உற்பத்தி முறையினால் தோற்றுவிக்கப்பட்ட முதலாளித்துவ சமுதாயத்தையும் நெறிப்படுத்தும் தனி இயக்க விதியையும் மார்க்ஸ் கண்டுபிடித்தார். முதலாளித்துவ பொருளியலாளர்கள்சமூகவுடைமைவாத திறனாய்வாளர்கள் ஆகிய இரு தரப்பினரும் எந்தப் பிரச்சனையைத் தீர்க்கும் முயற்சியில் இதுவரை மேற்கொண்ட ஆய்வுகள் அனைத்தும் இருளில் தடவித் தேடுவதாக அமைந்ததோ, அந்தப் பிரச்சனையை அவர் கண்டுபிடித்த மேல்மிகைப் பெறுமதி திடுமெனத் தெளிவுபடுத்தியது.  
ஓர் ஆயுளுக்கு அத்தகைய இரு கண்டுபிடிப்புகளும் போதும். ஒருவர் அத்தகைய கண்டுபிடிப்பு ஒன்றையேனும் நிகழ்த்தியவர் என்று கொள்ளப்படுவது கூட அவருக்கு மகிழ்ச்சியே. எனினும் மார்க்ஸ் பற்பல துறைகளை ஆராய்ந்தார்; அவை எவற்றையும் அவர் மேலோட்டமாக ஆராயவில்லை; அதேவேளை, அவர் ஆராய்ந்த ஒவ்வொரு துறையிலும், கணிதவியலிலும் கூட, அவர் சுயமாகவே கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். 
அத்தகைய அறிவியலாளர் அவர். ஆனாலும் இது அவரைப் பற்றி அரைவாசி கூடக் கூறியதாகாது. மார்க்சைப் பொறுத்தவரை அறிவியல் என்பது வரலாற்று வீறுகொண்ட புரட்சிகர விசை ஆகும். கோட்பாட்டு அறிவியல் எதிலும் ஒரு புதிய கண்டுபிடிப்பை அவர் எத்துணை மகிழ்ச்சியுடன் வரவேற்றாலும் கூட, செயல்முறையில் அதன் பிரயோகத்தை பெரிதும் கற்பனைசெய்து பார்ப்பது அசாத்தியமாய் இருக்கக்கூடிய நிலையிலும் கூட, சம்பந்தப்பட்ட கண்டுபிடிப்பினால் கைத்தொழில் துறையிலும், பொதுவாக வரலாற்று விருத்தியிலும் உடனடியான புரட்சிகர மாற்றங்கள் ஏற்பட்டபொழுது அவர் வேறொரு வகையிலும் மகிழ்ச்சி அடைந்தார். மின்சாரத் துறையில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகளையும், அண்மையில் மார்செல் தெப்பிரே (Marcel Deprez) நிகழ்த்திய கண்டுபிடிப்புகளையும் அவர் உன்னிப்பாக அவதானித்து வந்தமை அதற்கோர் எடுத்துக்காட்டு.
மார்க்ஸ் ஒரு புரட்சிவாதி என்பதே அதற்கான தலையாய காரணம். முதலாளித்துவ சமுதாயத்தையும், அதனால் தோற்றுவிக்கப்பட்ட அரச கட்டமைப்புகளையும் கவிழ்ப்பதற்கு ஏதோ ஒரு வழியில் துணைநிற்கும் பணியை ஆற்றுவதற்காக, தற்காலப் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்குத் துணைநிற்கும் பணியை ஆற்றுவதற்காக அவர் வாழ்ந்தார் என்பதே உண்மை. பாட்டாளி வர்க்கத்துக்கு அதன் சொந்த நிலைவரத்தையும் தேவைகளையும், பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான நிலைமைகளையும்  முதன்முதல் உணர்த்தியவர் அவரே. போராடுவது அவரது இயல்பு. வேட்கையுடன், விடாப்பிடியாக, வெற்றிகரமாக அவர் போராடினார். அவருடன் போட்டியிடக் கூடியோரைக் காண்பதரிது.
Rheinische Zeitung (1842) செய்தியேட்டின் முதலாவது வெளியீடு, Paris Vorwarts (1844), Deutsche Brusseler Zeitung (1847), Neue Rheinische Zeitung (1848-49), New York Tribune (1852-61) ஆகிய செய்தியேடுகள், மற்றும் பல தீவிர செய்திமடல்கள்;    பாரிஸ், பிரசல்ஸ், இலண்டன் மாநகரங்களில் இயங்கிய அமைப்புகளைப் பொறுத்தவரை அவர் ஆற்றிய பணிகள் ஒருபுறம்; ஈற்றில் எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தால் போன்று, சர்வதேய தொழிலாளர் சங்கத்தை அமைப்பதில் அவர் ஆற்றிய பணி இருக்கிறதே! உண்மையில் அது ஒரு சாதனையே; அதன் நிறுவனர் வேறெதையும் சாதித்திருக்காவிட்டாலும் கூட, அந்த ஒரேயொரு சாதனை, அவர் நன்கு பெருமைப்பட்டிருக்கக்கூடிய சாதனையே.      
அவற்றின் விளைவாக, மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் அவரே நன்கு வெறுக்கப்பட்ட, மிகவும் தூற்றப்பட்ட ஆளாக விளங்கினார். தனியாட்சி அரசுகள், குடியரசுகள் ஆகிய இரு தரப்புகளுமே தத்தம் ஆள்புலங்களிலிருந்து அவரை வெளியேற்றின. பழமைபேண்வாத முதலாளித்துவ வர்க்கம், அதிகுடியாட்சிவாத முதலாளித்துவ வர்க்கம் இரண்டுமே அவருக்கு வசைகற்பிக்க ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டன. அதை எல்லாம் ஒரு சிலந்திவலை போல் எண்ணி அவர் ஒதுக்கித் தள்ளினார்; புறக்கணித்தார். மட்டுமீறிய தேவை ஏற்பட்டால் மட்டுமே அவர் பதிலளித்தார். சைபீரியா முதல் கலிபோர்ணியா வரை உள்ள சுரங்கங்கள் உட்பட ஐரோப்பிய, அமெரிக்க கண்டங்களின் எல்லாப் பகுதிகளையும் சேர்ந்த இலட்சக் கணக்கான சக புரட்சிகர தொழிலாளிகளால் நேசிக்கப்பட்டவராக, பூசிக்கப்பட்டவராக அவர் இயற்கை எய்தினார்; அவரை இழந்து அவர்கள் வருந்தும் வண்ணம் அவர் இயற்கை எய்தினார்; அவரைப் பலரும் எதிர்த்திருக்கலாம்; எனினும் அவருக்குத் தனிப்பட்ட முறையில் எதிரி என்று ஒருவர் கூட இருந்ததில்லை என்று நான் துணிந்து கூறுவேன்.
அவரது பெயரும், அவரது பணியும் காலங்கள் தோறும் நீடித்து நிலைக்கும். 
Frederick Engels' Speech at the Grave of Karl MarxHighgate Cemetery, London. March 171883
தமிழ்: மணி வேலுப்பிள்ளை.

No comments:

Post a Comment