பூட்டினை தோற்றுவித்த அமெரிக்கா


1990 மாசிமாதம் சோவியத் அதிபர் கோர்பச்சேவை (1985-1991) சந்திக்க அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் பேக்கர் (James Baker) மாஸ்கோ சென்றார். ஜேர்மனியின் ஐக்கியம் பற்றிப் பேசுவதற்கான சந்திப்பு அது.


கோர்பச்சேவ்


“ஜேர்மனியின் ஐக்கியத்துக்கு (அதாவது பேழின் மதிலை தகர்த்து, மேற்கு ஜேர்மனியும், கிழக்கு ஜேர்மனியும் ஐக்கியப்படுவதற்கு) சோவியத் ஒன்றியம் இசைந்தால், நேட்டோ கிழக்கு நோக்கி ஓர் அங்குலமேனும் நகராது” என்று கோர்பச்சேவிடம் உறுதியளித்தார் பேக்கர். 


பேக்கர்


“நேட்டோவின் ஆள்புலத்தினுள் முன்னைய கிழக்கு ஜேர்மனியை நாம் உள்ளடக்க மாட்டோம்” என்று ஜேர்மன் அதிபர் கோல் (Helmut Kohl, 1982-1998) உறுதிகூறினார். ஓராண்டினுள் சோவியத் ஒன்றியமும், வார்சோ ஒப்பந்த அணியும் நிலைகுலையும் என்று சோவியத் அணியோ, நேட்டோ அணியோ எதிர்பார்க்கவில்லை. ஆதலால் அந்த உத்தரவாதத்தை எழுதி ஒப்பமிடுவது பற்றி இரு தரப்புகளும் அலட்டிக்கொள்ளவில்லை. 


கோல்


எனினும் அமெரிக்க அதிபர் மூத்த புஷ் (1989-1993), ஜேர்மன் அதிபர் கோல் இருவரும் அந்த உத்தரவாதத்தை அடியொற்றிச் சென்றார்கள். கிளின்டன் தனது முதலாவது பதவிக்காலத்தில் (1993-1996) அதை முன்னெடுத்துச் சென்றார்.


மூத்த புஷ்


1992ல் அமெரிக்க பாதுகாப்பு துணைச் செயலாளர் வோல்வோற்ஸ் (Paul Wolfowitz) ஓர் ஆவணத்தை வரைந்தார். பிறகு அது “புஷ் ஆவணம்” என்பதுள் சேர்க்கப்பட்டது. நியு யோர்க் டைம்ஸ் (1992-03-07) அதை அம்பலப்படுத்தியது:


“...இனிமேல் அமெரிக்காவுக்கு வேறெந்த நாடும் சவால் விடுக்கக் கூடாது; இனி அமெரிக்காவே உலகின் தனிப்பெரும் வல்லரசாக விளங்க வேண்டும். எமது நட்பு நாடுகள் தமது பாதுகாப்புக்கும், படைக்கலத் தேவைகளுக்கும் இனி அஞ்ச வேண்டியதில்லை; அவற்றை நாங்களே பார்த்துக்கொள்வோம். அதேவேளை ரஷ்யாவை நாங்கள் தொடர்ந்து  கண்காணித்துவர வேண்டும். ரஷ்யக் கரடி திரும்பவும் பின்னங்காலில் எழுந்துநின்று உறுமக்கூடும்…” 


வோல்வோவிற்ஸ்

கிளின்டனின் இரண்டாவது பதவிக்காலத்தில் (1996-2001) மேற்படி ஆவணத்தில் உள்ளபடி அமெரிக்காவின் நிலைப்பாடு மாறியது. “ஏறத்தாழ அரை நூற்றாண்டாக அணுவாயுத படைபலம் கொண்டு எங்களை நீங்கள் அச்சுறுத்தினீர்கள்; இப்பொழுது நீங்கள் தோற்றுப்போனீர்கள்; இனி நீங்கள் தண்டனைக்கு உள்ளாக வேண்டும்…” என்ற விதமாக அமெரிக்கா நடக்கத் துவங்கியது.


எட்வேர்ட் கெனடி

எட்வேர்ட் கெனடி போன்ற தாராண்மைவாதிகள் மேற்படி ஆவணத்தை “ஓர் ஏகாதிபத்திய ஆவணம்” என்றும், “எந்த நாடும் இதை ஏற்கவும் மாட்டாது, ஏற்கவும் கூடாது” என்றும் முழங்கினார்கள். ஆதலால் அமெரிக்க துணை அதிபர் சேணி (Dick Cheney) பாதுகாப்புச் செயலாளர் பவல் (Colin Powell), வெளியுறவுச் செயலாளர் ரைஸ் (Condoleezza Rice) முதலியோர் அந்த ஆவணத்தை செப்பனிட்டார்கள்.


சேணி


அமெரிக்கா தனிப்பெரும் வல்லரசாக நிலைக்க வேண்டும் என்பதை அதில் அவர்கள் இடக்கரடக்கலாகத் தெரிவித்தார்கள். அந்த இடக்கரடக்கல் பலராலும் ஏற்கப்பட்டது! அடிப்படையில் இரண்டு ஆவணங்களின் உள்ளடக்கமும் ஒன்றே. இரண்டும் ரஷ்யாவைப் பார்த்து, “நீங்கள் ஓர் இரண்டாந்தர நாடு; தயவுசெய்து வாயைப் பொத்திக்கொண்டு இருங்கள்!” என்று தெரிவித்தன. 


பவல்


அப்புறம் பேக்கரின் வாய்ப்பிறப்புக்கு மறுவிளக்கங்கள் எழுந்தன: “ஐக்கிய ஜேர்மனி விரும்பினால் மட்டுமே நேட்டோ அணி அங்கு நிலைகொண்டிருக்கும்; அங்கே அது தொடர்ந்தும் நிலைகொண்டிருந்தாலும் கூட, அது கிழக்கு நோக்கி நகராது, அதாவது முன்னைய கிழக்கு ஜேர்மன் புலத்தை நோக்கி நகராது!” ஒரு மறுவிளக்கம் அது.


ரைஸ்


“நேட்டொ முன்னைய கிழக்கு ஜேர்மன் புலத்தை நோக்கி நகராது என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது உண்மையே; ஆனாலும், கிழக்கு ஐரோப்பாவை நோக்கி நகராது என்று வாக்குறுதி அளிக்கப்படவில்லையே!” இது வேறொரு மறுவிளக்கம். 


“அது சோவியத் ஒன்றியத்துக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி அல்லவா! ரஷ்யாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி அல்லவே!” மிகவும் நயவஞ்சகமான விளக்கம் அது.


அப்புறம் 1994ல் ஐ. நா. வின் ஆணையின்றி யூகோசிலாவியா மீது வான்தாக்குதல்  தொடுப்பதற்கு கிளின்டனும் சக தலைவர்களும் நேட்டோவை பயன்படுத்தினார்கள். யூகோசிலாவியா சிதறுண்டது. பிறகு கொசொவோ பிரிவினைக்கு துணைநிற்கும் வண்ணம் சேர்பியா மீது தாக்குதல் தொடுப்பதற்கு நேட்டோ பயன்படுத்தப்பட்டது. கொசோவோ தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது. 


கிளின்டன்


அண்மையில் தன் கைப்பட எழுதிய கட்டுரை ஒன்றில் அத்தகைய அத்துமீறலை கிளின்டன் அப்பட்டமாக ஒப்புக்கொண்டுள்ளார்: “நான் ரஷ்யாவை இன்னொரு பாதையில் செலுத்த முயன்றேன். மிகச்சிறந்த நிலை ஒன்றை நாடிப் பாடுபடும் அதேவேளை, படுமோசமான நிலை எதையும் எதிர்கொள்ளத் தயாராக நேட்டோவை விரிவாக்குவதே எனது கொள்கை. ரஷ்ய பொருளாதாரத்தையும், குடியாட்சியையும் மேம்படுத்த யெல்ற்சின் மேற்கொண்ட முயற்சிகளை நான் ஆதரித்த அதேவேளை, முன்னைய வார்சோ ஒப்பந்த நாடுகளையும், சோவியத் ஒன்றியத்துக்குப் பிற்பட்ட அரசுகளையும் உள்ளடக்கி நேட்டோவை விரிவாக்கும் முயற்சியையும் நான் ஆதரித்தேன். மிகச்சிறந்த நிலையை நாடிப் பாடுபடும் அதேவேளை, படுமோசமான நிலையை எதிர்கொள்ளத் தயாராகுவதே எனது கொள்கை. ரஷ்யா பொதுவுடைமைக்கு மீளும் வாய்ப்பினைக் குறித்து நான் அஞ்சவில்லை. அது மகா பீட்டர், மகா கதரின் போல் பேரரச வேட்கை கொண்டு, குடியாட்சியையும் ஒத்துழைப்பையும் கைவிட்டு, தீவிர தேசியவாதத்துக்கு மீளும் வாய்ப்பினைக் குறித்தே அஞ்சினேன். யெல்ற்சின் அப்படிச் செய்வார் என்று நான் நம்பவில்லை. ஆனால் அவருக்குப் பிறகு என்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும்?” (The Atlantic, 2022-04-07).


1999ல் போலாந்து, செக் குடியரசு, ஹங்கேரி ஆகிய (முன்னையை வார்சோ ஒப்பந்த) நாடுகள் மூன்றும் நேட்டோவில் சேர்க்கப்பட்டன. “இது புதிய அமெரிக்க-இரசிய பகைமையின் துவக்கம் என்று நினைக்கிறேன். இது ரஷ்யர்களின் கொள்கையில் தாக்கத்தை விளைவிக்கும். ரஷ்யர்கள் படிப்படியாக பாதகமான முறையில் பதில் நடவடிக்கை எடுப்பார்கள். இது ஒரு பேரிடிக்கு இட்டுச்செல்லும் தவறு. இவ்வாறு தவறிழைக்க எதுவித நியாயமும் இல்லை” என்று கருத்துரைத்தார் அரசியலறிஞர் கெனன் (George F. Kennan).


கெனன்


2000ல் பூட்டின் ரஷ்ய அதிபராகப் பதவியேற்ற கையோடு ரஷ்யாவுக்கு நேட்டொவில் அங்கத்துவம் கேட்டார்: “சோவியத் ஒன்றியத்திலிருந்து (மேற்கு) ஐரோப்பவை காப்பாற்ற நேட்டோ அமைக்கப்பட்டது; சரி, இப்ப சோவியத் ஒன்றியம் இல்லை. வார்சோ ஒப்பந்த அணியும் இல்லை; ஆகவே ரஷ்யாவும் அங்கம் வகிக்கக்கூடிய ஓர் அமைப்பை உருவாக்குவோம். நாங்கள் அனைவரும் சேர்ந்து அமைதி காப்போம்; ஏதாவது ஆக்கிரமிப்பு நேர்ந்தால் ஒருமித்து எதிர்கொள்வோம்…” என்ற எண்ணத்தை முன்மொழிந்தார் பூட்டின். பூட்டினின் முன்மொழிவு பொருட்படுத்தப்படவில்லை.


அப்புறம் ஐரோப்பிய ஒன்றியத்தில் ரஷ்யாவுக்கு அவர் அங்கத்துவம் கேட்டார். “இல்லை, ரஷ்யா மிகப்பெரிய நாடு. ரஷ்யா இதில் பங்குவகிக்க முடியாது” என்று மேற்குலகு கைவிரித்தது. அதாவது ரஷ்யா அப்படி ஒன்றும் முக்கியமான நாடல்ல; ரஷ்யாவை நாங்கள் பொருட்படுத்துவதில்லை… என்றெல்லாம் ரஷ்யாவுக்கு  உணர்த்த்தப்பட்ட்டது!


மேற்குலகு ரஷ்யாவை ஒரு பொருட்டாக மதிக்காமல் இழிவுபடுத்துவதாக எண்ணி சராசரி ரஷ்யர்கள் சீறியெழுந்தார்கள். தமது சீற்றத்தை (பதவிதுறந்த) கொர்பச்செவ் மீது திருப்பினார்கள். கோர்பச்சேவ் அமெரிக்காவை எதிர்த்து நிற்காமல், நாட்டை விலைபேசி விற்றுவிட்டதாகச் சாடினார்கள். அவ்வாறே (பதவிதுறந்த) யெல்ற்சினையும் தூற்றினார்கள். இன்று ரஷ்யாவில் 5% தொகையினரே கோர்பச்சேவையோ, யெல்ற்சினையோ நினைந்துருகுவோர்.


இளைய புஷ்


9/11 தாக்குதல் நிகழ்ந்த கையோடு பூட்டின் இளைய புஷ்ஷுடன் தொடர்புகொண்டு, அமெரிக்காவுக்கு உதவ முன்வந்தார். ஆவ்கானிஸ்தானில் அமெரிக்க படையினருக்கு துணைநிற்க முன்வந்தார். அமெரிக்கப் படையினர் மத்திய ஆசியாவில், ரஷ்ய அல்லது ஜோர்ஜிய ஆள்புலத்தில் நிலைகொண்டு தமது தீவிரவாத எதிரிகளை ஒடுக்குவதற்கு துணைநிற்க விரும்புவதாகத் தெரிவித்தார். ரஷ்யாவும் அமெரிக்காவும் சேர்ந்து பயங்கரவாதத்தைதை எதிர்க்கும் யோசனையை முன்வைத்தார்… எதற்குமே பயன் கிடைக்கவில்லை.


மாறாக, ஐ. நா. வையும் ரஷ்யாவையும் பொருட்படுத்தாமல் அமெரிக்க அணி 2003ல் ஈராக் மீதும், 2011ல் லிபியா மீதும், 2015ல் சீரியா மீதும் போர் தொடுத்தது. 2004ல் (முன்னைய) வார்சோ ஒப்பந்த நாடுகள் இரண்டும், (சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த) தனியரசுகள் ஐந்தும், 2009ல் மேலும் இரண்டும், 2017ல் ஒன்றும், 2020ல் ஒன்றுமாக மொத்தம் 18 நாடுகள் புதிதாக நேட்டோவில் சேர்க்கப்பட்டன. 


சின்னஞ்சிறிய நாடுகளை தவிர்த்துப் பார்த்தால், இன்று ஆஸ்திரியா, சுவீடன், பின்லாந்து, சேர்பியா, சுவிற்சர்லாந்து, அயர்லாந்து ஆகிய ஐந்து நாடுகள் தவிர, ஏனைய ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் நேட்டொவில் அங்கம் வகிக்கின்றன - 12 நாடுகளுடன் துவங்கிய நேட்டொவில் இன்று 30 நாடுகள் அங்கம் வகிக்கின்றன! நேட்டோ அகல, அகல பூட்டினின் விசனமும் ஓங்கியது. 2007ல் (மியூனிக்கில்) நடைபெற்ற 20 நாட்டுக் குழும மாநாட்டில் பூட்டின் ஆற்றிய உரையில் அவரது விசனம் வெளிப்பட்டது: 


“நேட்டோவை அகட்டல், நவீனமயப்படுத்தல் என்பதற்கும் ஐரோப்பாவில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இடையே எதுவித தொடர்பும் இல்லை என்பது வெளிப்படையாகப் புலப்படுவதாக நான் கருதுகிறேன். இது பாரதூரமான் முறையில் ஆத்திரமூட்டும் நடவடிக்கை ஆகும். இரு தரப்புகளுக்கும் இடையே இது நம்பிக்கையை குறைக்கிறது. யாருக்கு எதிராக இந்த அகட்டல் என்று கேட்க எமக்கு உரிமை உண்டு. வார்சோ ஒப்பந்த அணி குலைந்த பிறகு, எமது மேற்குலக பங்காளிகள் எமக்களித்த வாக்குறுதிகளுக்கு என்ன நடந்தது. எங்கே அந்த முழக்கங்கள்? எவருக்கும் நினைவில்லை! நான் இந்த அவையில் அதை நினைவூட்ட விரும்புகிறேன்: ‘ஜேர்மன் ஆள்புலத்துக்கு வெளியே நேட்டோ படையை நிலைநிறுத்த நாங்கள் ஆயத்தப்படுத்தவில்லை. சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்…’ என்று 1990 மே 17ம் திகதி பிரசல்ஸ் மாநகரில் வைத்து நேட்டோ தலைமைச் செயலாளர் வேர்னர் வாக்குறுதி அளித்தார். எங்கே அந்த வாக்குறுதிகள்? உங்களை நம்பியதே நாங்கள் இழைத்த பிழை, நாங்கள் இழைத்த பிழையைப் பயன்படுத்தியதே நீங்கள் இழைத்த பிழை!”    


அமெரிக்க கொள்கையே இன்றைய பூட்டினை உருவாக்கியது. இன்றைய பூட்டின் மேற்குலகை, குறிப்பாக அமெரிக்காவை இம்மியும் நம்பவில்லை. அப்புறம் அவர் தலைமையில் ரஷ்யா படுமோசமான முறையில் படையெடுப்புகளை மேற்கொண்டு, முன்னைய ரஷ்ய (சோவியத்) ஆள்புலங்களை மீண்டும் கைப்பற்றியது. 2000ல் செச்னியா, 2008ல் தென் ஒசெற்றியா, 2009ல் டகெஸ்தான், 2014ல் கிரிமியா… என பல்வேறு புலங்களை அது கைப்பற்றியது. 


2014ம், 15ம் ஆண்டுகளில் முறையே மின்ஸ்க் 1, மின்ஸ்க் 2 எனப்படும் உடன்படிக்கைகள் மூலம் உக்ரேனில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ரஷ்யா, உக்ரேன், பிரான்சு, ஜேர்மனி, ரஷ்ய-சார்பு (டொனெற்ஸ்க், லுஹான்ஸ்க்) பிரிவினை இயக்கங்கள் என்பவற்றின் பிரதிநிதிகள் பெலரஸ் தலைநகர் மின்ஸ்கில் கூடி அவற்றில் ஒப்பமிட்டனர். 13 ஏற்பாடுகள் கொணட போர்நிறுத்தம் அது. டொனெற்ஸ்க், லுஹான்ஸ்க் புலங்களுக்கு இடைக்கால தன்னாட்சி வழங்கும் ஏற்பாடு அவற்றுள் ஒன்று.  எனினும் போர்நிறுத்தத்தில் ஒப்பமிட்ட மை காய்வதற்குள் சம்பந்தப்பட்ட தரப்புகள் அனைத்தும் அதை மீறிச் செயற்பட்டன.


2022 மாசிமுதல் உக்ரேனில் இடம்பெற்றுவரும் போர் வெறுமனே ரஷ்ய-உக்ரேனிய மோதல் அல்ல. அடிப்படையில் இது ரஷ்ய-அமெரிக்க மோதல். பழைய சோவியத்-அமெரிக்க பகைமையின் புதிய பரிமாணம். உக்ரேனிய நாடும், மக்களும் இந்த மோதலுக்குப் பலியாகி வருவதை வெறும் பிரசாரத்துக்கு மட்டுமே சம்பந்தப்பட்ட தரப்புகள் அனைத்தும் பயன்படுத்தி வருகின்றன. எந்த ஒரு தரப்பின் வெற்றியும் 4½  கோடி உக்ரேனிய மக்களதும், ½ கோடி உக்ரேனிய அகதிகளதும் தியாகத்துக்கு எள்ளளவும் ஈடாகப் போவதில்லை. 


செலன்ஸ்கி


உக்ரேனிய அதிபர் செலன்ஸ்கி உலக ஆட்சிமன்றங்களில் தோன்றி ஆயுத உதவி நாடி விடுக்கும் மன்றாட்டங்களுக்கு கைமேல் பலன் கிடைத்து வருகிறது. அதேவேளை ரஷ்யா எதிர்பார்ப்பது போல் (1) உக்ரேன் நேட்டோவில் சேரப்போவதில்லை; (2)  டொனெற்ஸ்க், லுஹான்ஸ்க் புலங்களுக்கு மாநில சுயாட்சி; (3) உக்ரேனிய, ரஷ்ய மொழிகளுக்கு சமத்துவம் குறித்த ஏற்பாடுகளை யாப்பில் பொறித்து ரஷ்யாவுடன் ஓர் உடன்பாட்டுக்கு வர அவர் முயன்றிருக்கலாம். எம் கண்முன்னே உக்ரேன் எதிர்கொளும் பாரிய உயிரிழப்புகளுடனும், பேரழிவுகளுடனும் ஒப்பிடுமிடத்து மேற்படி ஏற்பாடுகள் ஒரு பொருட்டன்று. 


வாழை முள்முருக்கில் பட்டாலும், முள்முருக்கு வாழையில் பட்டாலும் வாழைக்கே கேடு விளையும். ஆதலால், உக்ரேனே தற்பாதுகாப்புக்கு அதிக முயற்சி எடுத்திருக்க வேண்டும். அமெரிக்காவின் அல்லது நேட்டோவின் பகடையாக மாறுவதை உக்ரேன் தவிர்த்திருக்க வேண்டும்.


அமெரிக்கா பல தசாப்தங்களாக சர்வதேய சட்டத்தையும், ஐ. நா. சாசனத்தையும், ஐ. நா. மனித உரிமைப் பிரகடனத்தையும் மீறி பிறநாடுகள் மீது படையெடுத்து வந்துள்ளது. ரஷ்யாவும் கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக அமெரிக்காவைப் பின்பற்றி வந்துள்ளது. இன்று உக்ரேனை மையப்படுத்தி உக்கிரமடையும் ரஷ்ய-அமெரிக்க மோதல் ஏதோ ஓர் உச்சத்தை எட்டிய பின்னரே தணிய முடியும். அந்த உச்சம் அணுவாயுதப் போராகவோ, 3ம் உலகப் போராகவோ ஓங்கவும் கூடும் என்று எச்சரிக்கிறார் சொம்ஸ்கி (Noam Chomsky).  


கோரிங்


ஹிட்லரின் வான்படைத் தளபதி கோரிங் (Hermann Göring) உதிர்த்த உண்மை ஒன்று இக்கட்டுரையின் முடிவுரையாக அமையத்தக்கது:


“பொதுமக்கள் போரை விரும்புவதில்லை. அது இயற்கை தானே! எனினும், நாட்டின் தலைவர்களே கொள்கையை வகுப்பவர்கள். குடியாட்சி, பாசிச சர்வாதிகாரம், நாடாளுமன்ற குடியாட்சி, பொதுவுடைமவாத சர்வாதிகாரம் முதலிய ஆட்சிமுறை எதிலுமே போரை ஆதரிக்கும்படி மக்களைத் தூண்டுவது மிகவும் எளிதான காரியம். முழங்கியோ, முழங்காமலோ மக்களை எப்பொழுதுமே தலைவர்களின் ஆணைகளுக்குப் பணியவைக்க முடியும். அது மிகவும் எளிதான காரியம். மக்கள் தாக்கப்படுகிறார்கள் என்று மக்களிடமே சொல்லிவிட வேண்டும்; அமைதிநாடுவோரை நாட்டுப்பற்று அற்றவர்கள் என்றும், நாட்டை ஆபத்துக்கு உள்ளாக்குவோர் என்றும் சாடினாலே  போதும். போர் கைகூடுகிறது! இப்படி எந்த நாட்டிலும் ஒரே விதமகவே போர் கைகூடுகிறது!” 

________________________________

மணி வேலுப்பிள்ளை, 2022-04-09.

https://www.youtube.com/watch?v=8X7Ng75e5gQ

https://www.theatlantic.com/ideas/archive/2022/04/bill-clinton-nato-expansion-ukraine/629499 

No comments:

Post a Comment