சகியாமை என்பது பன்மைத்துவத்தை நிராகரிப்பதாகும்
"இலங்கையின் வரலாறோ, வருங்கலமோ எந்த ஒரு குழுமத்துக்கும் சொந்தமானதல்ல" –முன்னாள் ஜனாதிபதி ரணசிங்கா பிரேமதாசா (1990-11-12)
திசராணி குணசேகரா
எவ்வாறு ஆட்களின் குணம் அவர்களின் தலைவிதி ஆகக்கூடுமோ, அவ்வாறே குழுமங்களின் குணமும் அவற்றின் தலைவிதி ஆகக்கூடும். இலங்கை எந்த திசையில் சென்றுகொண்டிருக்கிறது என்னும் வினாவுக்கான விடை, இலங்கை எப்படிப்பட்டது என்பதில் தங்கியுள்ளது; ஓரளவுக்காவது.
இலங்கை ஒரு சிங்கள நாடு என்னும் எண்ணம் 1956ல் சிங்கள மக்களிடையே ஓங்கியிருந்தது. அதனை எதிர்க்கும் நிலைப்பாடு தமிழ் மக்களிடையே இரு தசாப்தங்களாக ஓங்கியிருந்தது. அதன் பின்னர் தமிழ் மக்கள் சமத்துவத்துக்கான தமது போராட்டத்தைக் கைவிட்டு, இலங்கை ஒரு சிங்கள நாடு என்னும் எண்ணத்தை ஏற்றுக்கொண்டு, அதன் அடிப்படையில் தனிநாடு கோரினார்கள்.
இலங்கை, தமிழருக்கான நாடல்ல என்னும் கட்டுக்கதையை வேலுப்பிள்ளை பிரபாகரனைக் காட்டிலும் அதிக வேட்கையுடன் வேறெவரும் பற்றிக்கொண்டதில்லை. 1956ல் பண்டாரநாயக்கா தமிழ்ப் பூச்சாண்டி காட்டி ஆட்சிக்கு வந்தார். இன்று ராஜபக்சாக்கள் முஸ்லீம் பூச்சாண்டி காட்டி தமது ஆட்சியை நிலைநிறுத்தி வருகிறார்கள்.
சிங்கள பெளத்த மேலாதிக்கவாதிகள் இலங்கைவாழ் முஸ்லீம் ஒவ்வொருவரையும் பிறப்பினால் செளதி அரேபியராக, இருநாட்டுப் பிரசையாக நடத்தி வருகிறார்கள். அவர்களின் அரசியல்-சித்தாந்த மூதாதையர்கள் இலங்கைத் தமிழரை இந்தியாவுக்கு / தமிழ்நாட்டுக்கு திரும்பிச் செல்லும்படி கூறியது போல.
அதில் பொதிந்துள்ள நச்சுத்தனத்தை ஜெசிமா இஸ்மாயில் நினைவுகூரும் அனுபவம் ஒன்று, அவர் எம்முடன் பகிர்ந்துகொள்ளும் அனுபவம் ஒன்று புலப்படுத்துகிறது: "சில ஆண்டுகளுக்கு முன்னர் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஒரு விரிவுரை அமர்வில் பங்குபற்றிய ஒரு பேராசிரியர் இலங்கை பற்றி தமது உள்ளத்துள் குடிகொண்ட உணர்வுகள் குறித்தும், தமக்கான ஒரேயொரு நாடு இலங்கை மாத்திரமே என்பது குறித்தும் கவித்துவம் சொட்ட எடுத்துரைத்தார். அந்த விரிவுரையின்பொழுது என்னை நோக்கித் திரும்பிய பேராசிரியர், இங்கு எதிர்பாராத விபரீதம் எதுவும் ஏற்பட்டால், நீ தாராளமாக செளதி அரேபியாவிலோ மத்திய கிழக்கிலோ தஞ்சம் புகமுடியும் என்று தெரிவித்தார்". இந்த நச்சுத்தனமான விழற்பேச்சின் உச்சத்தை வேறெதுவும் எட்டப் போவதில்லை.
இலங்கைவாழ் ஆசிரியர் எவரையும் போலவே ஜெசிமா இஸ்மாயிலும் ஓர் ஆசிரியர். பல தசாப்தங்களாக அவர் தனது நாட்டுக்கும் சமூகத்துக்கும் தொண்டாற்றியவர். அத்துணை திட்பமும், சாதனையும் எய்திய ஒரு பெண்ணை நோக்கியே அவ்வாறு கூறப்பட்டது. வகாபியத்துள் அல்லது சலாவியத்துள் உழலும் செளதிமோக தீவிரவாதி எவரையும் நோக்கி அவ்வாறு கூறப்படவில்லை. அப்படிக் கூறியவர் பெளத்த பலசேனாவைச் சேர்ந்த, சன்னிபிடித்த ஒரு பிக்குவும் அல்ல, சாமானிய சண்டியரும் அல்ல. அவர் ஒரு பேராசிரியர்; மிகுந்த புலமை அற்றவராயினும், ஒரு கல்விமான்.
இலங்கையில் 'உடையவர் - புகுந்தவர்' என்னும் கருத்தீடு ஒருசில வெறியர்களின் தனியுடைமை அல்ல என்பது தெளிவு. இலங்கையின் பன்மைத் தன்மையை நிராகரிக்கும் போக்கிலிருந்து வேறொரு போக்கு மேலோங்குகிறது: சிறுபான்மையோர் இந்த நாட்டின் கூட்டுடைமையாளர்கள் என்பதை மறுக்கும் போக்கு இங்கு மேலோங்குகிறது. சிறுபான்மையோர் இலங்கையை தமது தாயகம் என்று கொள்வதில்லை, அவர்கள் பற்பல நாடுகள் மீது பற்றுடையவர்கள், அவர்களை நம்பக்கூடாது என்ற எண்ணத்தை அது வலுப்படுத்துகிறது. அரிஸ்டாட்டிலின் நியாயத்தொடை கொண்டு அந்த மனப்பான்மையை இப்படி விளக்கியுரைக்கலாம்:
1) சிங்கள பெளத்தர்களால் மட்டுமே இலங்கையை நேசிக்க முடியும்;
தமிழர்கள்/முஸ்லீங்கள்/கிறீஸ்தவர்கள் ஆகியோர் சிங்கள பெளத்தர்கள் அல்லர்;
ஆகவே தமிழர்களால்/முஸ்லீங்களால்/கிறீஸ்தவர்களால் இலங்கையை நேசிக்க முடியாது.
2) அந்நியர் இலங்கையை அழிக்க எண்ணுகிறார்கள்;
தமிழர்கள்/முஸ்லீங்கள்/கிறீஸ்தவர்கள் அனைவரும் அந்நியர்;
ஆகவே தமிழர்கள்/முஸ்லீங்கள்/கிறீஸ்தவர்கள் அனைவரும் இலங்கையை அழிக்க எண்ணுகிறார்கள்;
சிறுபான்மையோர் அனைவரும் நம்பத்தகாத அந்நியர்கள், 'எங்கள்' நாட்டை 'எங்களிடமிருந்து' பறித்தெடுக்க என்றென்றும் சதிசெய்பவர்கள் என்னும் எண்ணத்திலிருந்தே இலங்கை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது, வெளியுலகப் பகைவர்களால் கைப்பற்றப்படும் ஆபத்தை அல்லது உள்நாட்டு எதிரிகளால் கருவறுக்கப்படும் ஆபத்தை அது என்றென்றும் எதிர்நோக்கியுள்ளது என்னும் கருத்து முன்வைக்கப்படுகிறது. இந்த வெருட்சி ஒரு மருட்சிக்கு இட்டுச்செல்கிறது. உலகில் அருகிவரும் ஆபத்தை அதிகம் எதிர்நோக்கியுள்ள உயிரினம் சிங்கள பெளத்த இனமே என்னும் மருட்சிக்கு அது இட்டுச்செல்கிறது. மாபெரும் மதபீடங்களும் உலகியற் பீடங்களும் சற்றே ஓர் அடி எடுத்துவைத்து, இன்னும் ஒரேயொரு அடி எடுத்துவைத்து எங்களைக் கருவறுக்க உறுதிபூண்டுள்ளன என்னும் மருட்சிக்கு அது இட்டுச்செல்கிறது.
இங்குதான் உலகச்சதி என்னும் கோட்பாடு ஊற்றெடுக்கிறது. அப்படி எண்ணுபவரின் அரசியற் சித்தாந்த கண்ணோட்டங்களைப் பொறுத்து, அது ஏகாதிபத்திய சதியாகவோ, கிறீஸ்தவ சதியாகவோ, இந்திய/தமிழக சதியாகவோ, இஸ்லாமிய சதியாகவோ அமையக்கூடும். பகையாளி அவ்வப்பொழுது மாறக்கூடும். ஆனால் சதியோ என்றென்றும் தொடரும். சிங்கள பெளத்தர்களின் ஒரேயொரு நாட்டைப் பறித்தெடுக்க எப்பொழுதும் எவரோ ஒருவர் சதிசெய்தபடியே இருக்கிறார்! அப்படி எண்ணுபவர் கொண்ட நம்பிக்கையின்படி அதற்கான 'காரணம்' வேறுபடும். அது எமது கேந்திர மையமாகிய திருகோணமலையில் ஒரு தரப்பு கண் வைத்திருப்பதாகலாம்; இந்தியாவை நிலைகுலைய வைக்கவேண்டிய தேவை ஒரு தரப்புக்கு இருப்பதாகலாம்; பெளத்தத்தை அழிக்க ஒரு தரப்பு முற்படுவதாகலாம். தத்தம் கண்ணோட்டங்களை வெள்ளிடைமலை போன்ற உண்மைகளாக, வெளிப்படையான உண்மைகளாக, மறுக்கமுடியாத உண்மைகளாக, பிணக்கிற்கும் விவாதத்துக்கும் அப்பாற்பட்ட உண்மைகளாக அவர்கள் கருதுகிறார்கள்.
என்றென்றும் தயாளசிந்தை படைத்த சிங்கள பெளத்தர்கள் அந்நிய இனங்களையும், மதங்களையும் தமது தாயகத்துக்கு வரவேற்று, வாழ்ந்து வளம்பெருக்க இடமும் வாய்ப்பும் அளித்த கதைக்கு முற்றிலும் வலிய பிற்குறிப்பு ஒன்று உண்டு. 'குடிபுகுந்த சிறுபான்மையோர்' சிங்களவரை 'காட்டிக்கொடுத்து விட்டார்கள்' என்று சிங்களவர்கள் உணரும் வேளையில், 'சிறுபான்மையோரின் வரம்புமீறல்கள்' கண்டு சிங்களவர்கள் 'பொறுமை' இழக்கும் வேளையில், சிங்களவர்கள் வெறிகொண்டெழுவர். ஆடிப்படுகொலைகள் நிகழும். 'நாங்கள் தயாளசிந்தை படைத்தவர்கள், நம்பி நடப்பவர்கள்' என்னும் எண்ணத்துக்கு நேர்மாறான எண்ணம்: 'நாங்கள் காட்டிக் கொடுக்கப்பட்டுவிட்டோம்' என்னும் எண்ணமே.
இந்த நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் அதற்கு நேர்ந்த கெடுதிகள் பலவற்றின் தோற்றுவாய் மேற்படி கட்டுக்கதைகளே, மருட்சிகளே, வெருட்சிகளே; அவற்றின் கூட்டுத் தாக்கத்தால், அவற்றின் நச்சுத் தாக்கத்தால் சிங்கள சமூகத்துள் ஒரு கூறு ஆடும் பித்தலாட்டமே.
ஜெசிமா இஸ்மாயிலுக்கு செளதி அரேபியாவில் / மத்திய கிழக்கில் தாயகம் உண்டு என்று கூறிய பேராசிரியர், பெளத்தபலசேனா / ஜாதிக்க ஹெல உரிமைய பயன்படுத்தும் அதே பச்சை மொழியை என்றுமே பகிரங்கமாகப் பயன்படுத்தப் போவதில்லை. அவரைப் போன்றவர்கள் என்றுமே (முஸ்லீங்களை) 'ஹம்பையா' (என்னும் வடுச்சொல் கொண்டு) குறிப்பிடப் போவதில்லை. கத்திக்குளறி அச்சுறுத்தப் போவதில்லை. ஆனால் பெளத்தபலசேனா / ஜாதிக்க ஹெல உரிமைய இடும் அதே தவறான, ஆபத்தான விழல்முழக்கத்தை இவர்கள் மரியாதை தொனிக்கும் மொழியில், தமது குரலை நன்கு இசைவுபடுத்தி எடுத்துரைப்பார்கள். விளையப்போகும் நாசத்துக்கு இவர்கள் மிகுந்த வலுவுடன் துணைநிற்பார்கள். பெளத்தபலசேனாவின் வெறிமுழக்கங்கள் காதில் விழுந்தோறும் கலைந்துசெல்லும் சிங்களவர் பலர் இத்தகைய போலிமிதவாதிகளின் 'அபிப்பிராயங்களுக்கு' இரையாகுவார்கள். பெரும்பான்மையோர் 'வெகுண்டெழுந்து' சிறுபான்மையோரை தாக்கும்பொழுது மேற்படி பேராசிரியரும் அவரைப் போன்றவர்களும் அந்தக் கும்பலுடன் சேர்ந்துகொள்ள மாட்டார்கள். கவலையுடன் தலையசைத்து மறுப்புத் தெரிவிப்பார்கள். எனினும் பெரும்பான்மையோரின் சீற்றத்துக்கும், சீற்றத்தின் விளைவுகளுக்கும் நேரிய நியாயம் உண்டு என்று கூறுவார்கள்.
விளையும் நாசத்தால் இந்த நாடு நிரந்தர நரகமாய் மாறும்பொழுது அவர்கள் மேல்நாடு சென்று பத்திரமாய் வாழ்வார்கள். அங்கு பத்திரமாகவும், செளகரியமாகவும் வாழ்ந்துகொண்டு தமது நாட்டுப்பற்று மிகுந்த பிதற்றல்களை இணையத்தளங்களில் இட்டு நிரப்புவார்கள். மேற்படி பேராசிரியர் போன்ற மதிப்புவாய்ந்த மத்திய வர்க்கத்தவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சாதகமான சூழ்நிலைகளிலேயே புலிகளும், தலிபான்களும், சிவசேனாக்களும், பெளத்தபலசேனாக்களும் செழித்தோங்கி வருகிறார்கள்.
ஊக்குவிக்கும் பைத்தியக்காரர்கள்
பெளத்தபலசேனாவின் இனவாதச் சன்னியில் ராஜபக்சாக்களுக்கு நம்பிக்கை உண்டோ, இல்லையோ, அதனால் விளையும் உணர்ச்சிப்பெருக்கை தமது நலனுக்குப் பயன்படுத்தி, தமது சிங்களத் தளத்தை வலுப்படுத்தி, நியாயப்படுத்த முடியாத தமது (பாதுகாப்புச் செலவு, பணவிரயம், விலையேற்ற) நடவடிக்கைகைகளை நியாயப்படுத்தி, அமெரிக்க / மேற்கத்தைய நல்லெண்ணத்தை சம்பாதிக்க அவர்கள் திடசித்தம் பூண்டிருத்தல் திண்ணம். The Sunday Times உறுதிப்படுத்தியவாறு, அண்மையில் இலங்கைத் தூதர் ஜாலியா விக்கிரமசூரியா மேற்கொண்ட முன்முயற்சிகளில் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை புதிய திசையில் செல்லும் சாத்தியம் புலப்படுகிறது. ராஜபக்சாவின் இலங்கைக்கு நட்புறவுச் சாயம்பூசி, அதை அமெரிக்க மக்களுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும் காட்டுவதற்கு பொதுசன உறவு நிறுவனங்கள் பயன்படுத்தப்படுவதாக வேறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தாங்கள் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் இலக்காகக் காணப்படுவது, தங்களுக்கு நலம்பயக்கும் என்று ராஜபக்சாக்கள் எண்ணியிருப்பார்கள். அம்பாந்தோட்டையில் பொதுநலவாய மாநாட்டை நடத்தவும், மேற்குலகை வென்றெடுக்கவும், என்றென்றும் ஆட்சிபுரியவும் அது உதவும் என்று அவர்கள் எண்ணியிருப்பார்கள்.
இலங்கை, ஆசியாவின் சேர்பியாவாக மாறக்கூடும் என்னும் சங்கதி, ஆளும் உடன்பிறப்புகளின் மட்டுப்பட்ட சிந்தனைக்கு எட்டப்போவதில்லை.
அடுத்த தாக்குதல் எப்பொழுது நேரும், எப்படி நேரும் என்பது தெரியாமல் முஸ்லீங்கள் ஏற்கெனவே அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். மக்களாட்சி நெறிநிற்கும் முஸ்லீம் தலைவர்களால் இந்த சவாலுக்கு, இனவாதத்துக்கு உட்படாத மிதமான பதில்வினை எதையும் வகுக்க முடியவில்லை. இதனால் பயங்கரமான பாழ்வெளி ஒன்று தோன்றப்போகிறது. சித்தநலம் வாய்ந்த சிங்கள பெளத்தர்கள் இலங்கைவாழ் முஸ்லீங்களுடன் அணிசேரத் தவறினால், சிங்கள பெளத்தர்களின் பேரால் பெளத்தபலசேனாவை அதன் எண்ணப்படி காய்நகர்த்தி சூறையாட அனுமதித்தால், புலிகளை விடவும் பயங்கரமான முறையில் முஸ்லீங்களின் எதிர்த்தீவிரவாதம் மேலோங்கக் கூடும்.
Tissaranee Gunasekara, Colombo Telegraph, 2013-04-13, தமிழ்: மணி வேலுப்பிள்ளை
No comments:
Post a Comment