மேற்குலகு பற்றி

 பூட்டின் ஆற்றிய உரை



2022 யூன் 17ம் திகதி “உலக பொருளாதார அரங்கு” எனும் ரஷ்ய மாநாட்டில் அதிபர் பூட்டின் ஆற்றிய உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு அவரது கிரெம்ளின் இணையதளத்தில் முழுமையாக இடம்பெற்றுள்ளது. 


மேற்குலகு


மேலைநாடுகளை வஞ்சப்புகழ்ச்சியுடன் “எமது மேற்கத்தைய பங்காளிகள்” என்று பூட்டின் குறிப்பிட்டுள்ளார், அத்துடன் “பேராசை பிடித்தவர்கள்,  பழங்கால உலக மாயைக்கு உள்ளானவர்கள், உலக வணிக ஒழுங்கினைக் கெடுத்தவர்கள்” என்றும் சாடியிருக்கிறார். 


அமெரிக்கர் தம்மை “பூவுலகத்தின் இறைதூதர்” என்று கருதுகிறார்கள்; மேற்குலகிற்கு பித்துப்பிடித்திருக்கிறது; ரஷ்யா மீதான காழ்ப்பு அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது என்று தெரிவித்திருக்கிறார். 


மேற்குலக ஆட்சியாளர்களை “எமது சகபாடிகள்” என்று நையாண்டி பண்ணிய கையோடு, அவர்களை “ஆளும் மேட்டிமைக் குழாங்கள்”  என்று கண்டித்திருக்கிறார். உலக அரசியலில் மேற்குலகின் ஆதிக்கம் நிலைக்கப் போவதில்லை என்றும் எச்சரித்துள்ளார். 


அவர்கள் மெய்நிலைவரத்தை மறுக்கிறார்கள்; வரலாற்றை எதிர்த்திசையில் திருப்பிவிட எத்தனிக்கிறார்கள்; கழிந்த நூற்றாண்டுக்கான நியதிகளின்படி சிந்திக்கிறார்கள்; மற்ற  நாடுகளை தமது கோடிப்புறங்களாகவும், தாம் கட்டியாளும் நாடுகளாகவும்,  கருதுகிறார்கள் என்று அவர் கருத்துரைத்துள்ளார். 


ரஷ்யச் சொத்துகளை முடக்குவதன் மூலமோ, மேற்குலக நிறுவனங்களை ரஷ்யாவிலிருந்து வெளியேறும்படி நிர்ப்பந்திப்பதன் மூலமோ அவர்களால் ரஷ்யப் பொருளாதாரத்தையும், தொழில்துறையையும், நிதிவளத்தையும், வணிக உறவையும், வாழ்க்கைத் தரத்தையும் ஒடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். 


ரஷ்யப் பேரரசர் மகா பீட்டரின் வழித்தோன்றலாகத் தன்னை நிலைநிறுத்தும் பூட்டின், "எனது சுகயீனம் ஒரு மிகைபடுத்தப்பட்ட செய்தி" என்று நகையாடியிருக்கிறார். “எனது இறப்பு ஒரு மிகைபடுதப்பட்ட செய்தி" என்று நகையாடிய அமெரிக்க மார்க் துவெயினை அவர் மேற்கோள் காட்டியிருக்கிறார். 


கிழக்கு உக்ரேன்


இந்த உரையில் “டொன்பாசில் விசேட படை நடவடிக்கை” எனும் தொடர் 10 தடவைகள் இடம்பெற்றுள்ளது. டொன்பாஸ் என்பது கிழக்கு உக்ரேனில் பெரும்பாலும் ரஷ்யர்கள் வாழும் டொனெற்ஸ்க், லுஹன்ஸ்க் பிரதேசங்களை உள்ளடக்கிய புலம். 


டொன்பாசை விடுவிப்பதற்கான “விசேட படை நடவடிக்கை”க்கும் உலக பொருளாதார நெருக்கடிக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை; மேற்குலகு தாம் புரிந்த அசட்டுத்தனங்களுக்கு நியாயம் கற்பிப்பதற்காகவே “விசேட படை நடவடிக்கையை”ப் பயன்படுத்துகிறது என்பது அவர் வாதம்.  


டொன்பாசில் ரஷ்யப் படையினரும், டொன்பாஸ் குடிப்படையினரும் தமது சுதந்திரத்துக்காக மட்டுமல்லாது பாரிய, பல்லின, சுதந்திர ரஷ்யாவின் வருங்காலத்துக்காகவும் போராடுகிறார்கள். “விசேட படை நடவடிக்கை”யின் குறிக்கோள் எய்தப்பட்டே தீரும் என்பது அவர் முழக்கம். 


நோம் சொம்ஸ்கி


உக்ரேன்-போரைப் பேசித்தீர்க்க கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவற விடக்கூடாது என்கிறார் நோம் சொம்ஸ்கி. இரு தரப்புகளும் தத்தம் இலக்கினை எய்தாவிட்டாலும், எட்டப்படும் தீர்வை அவை சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவரது கருத்துரைகள் கீழே இடம்பெற்றுள்ளன:


நோம் சொம்ஸ்கி


பேசித்தீர்க்காவிட்டால், ஒரு தரப்பு மண்டியிடும் வரை போர் தொடர்தல் திண்ணம். ரஷ்யா மண்டியிடும் என்ற பேச்சுக்கே இடமில்லை. “கடைசி உக்ரேனியர் உள்ளவரை போராடுவது” எனும் அமெரிக்காவின் நிலைப்பாடு உக்ரேனை அழித்தொழித்து வருகிறது.


அமெரிக்காவின் நிலைப்பாடு


ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்படுவதை தடுப்பதே அமெரிக்காவின் கொள்கை. ரஷ்யா திரும்பவும் ஓர் ஆக்கிரமிப்பில் இறங்க முடியாவாறு சேதமடையும் வண்ணம் போரைத் தொடர்வதே அமெரிக்காவின் கொள்கை.


போரைத் தொடர்தல், உக்ரேனியரை வருத்துதல், கொல்லுதல், காலநிலை மாற்ற இலக்குகளை எதிர்த்திசையில் திருப்புதல், அணுவாயுதப் போர் எனும் ஆபத்துக்கு வழிவகுத்தல், கோடிக்கணக்கான உலக மக்களை பட்டினிச் சாவுக்கு இட்டுச்செல்லுதல்… இவை எல்லாம் ரஷ்யாவை ஊறுபடுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள். 


இப்படித்தான் ஜேர்மனி மீண்டும் வலிமை அடையாவாறு, அதனை ஒரு வேளாண்மை நாடாக்கும் நோக்குடன் 1919ல் வேர்சாய்  பொருத்தனை செய்யப்பட்டது. இப்பொழுது ரஷ்யாவை ஒரு பண்ணைச் சமூகமாக மாற்றும் நோக்குடன் போர் புரியப்படுகிறது. 


தீர்வு


சில ஆண்டுகளுக்கு முன்னரே உக்ரேன் அதிபர் செலன்ஸ்கி ஒரு தீர்வினை முன்வைத்தார். கடந்த பங்குனி மாதம் அவர் அதை நினைவுறுத்தினார்: 



செலன்ஸ்கி


(1) ரஷ்யாவுடனோ, நேட்டொவுடனோ சேராமல் உக்ரேன் நடுநிலை வகித்தல்.


(2) ரஷ்யா தன்வசப்படுத்திய கிரிமியா பிரச்சனையை காலப்போக்கில் பேசித்தீர்த்தல். 


(3) மின்ஸ்க் 2 எனப்படும் உடன்படிக்கையில் வகுத்தபடி உக்ரேனின் கிழக்குப் புறத்து தொனெற்ஸ்க், லுஹான்ஸ்க் பிரதேசங்கள் உட்பட தொன்பாஸ் புலத்துக்கு பெல்ஜியத்தில் அல்லது சுவிற்சலாந்தில் அல்லது அமெரிக்காவில் உள்ளது போல் சுயாட்சி அளித்தல். 


ஆனால், உக்ரேன் மீது ரஷ்யா போர்தொடுத்த பிறகு மேற்படி உடன்படிக்கை கைகூடுவது எங்ஙனம்? ஒருவருக்கும் தெரியாது. ஆனாலும் மேற்படி உடன்படிக்கை போன்ற ஓர் உடன்பாட்டை எட்ட முயன்று பார்க்கலாம். 



நேட்டோ


“ரஷ்யா பேரழிவுக்கு உள்ளாகும் வரை போரைத் தொடர்வதற்கு, போர்ச்செருக்கு மிகுந்த அமெரிக்காவும், பிரித்தானியாவும், உறுதி பூண்டுள்ளன. எனினும் ரஷ்யா பேரழிவுக்கு உள்ளாகுமென நான் நினைக்கவில்லை. மாறாக,  உக்ரேனே பேரழிவுக்கு உள்ளாகும்” என்று எச்சரிக்கிறார் நோம் சொம்ஸ்கி.  


பிரான்சு, ஜேர்மனி, இத்தாலி முதலிய நாடுகள் நெகிழ்வுப் போக்குடையவை. அவை ரஷ்யாவுடனும், உக்ரேனுடனும் பேசித்தீர்க்க முயன்றபொழுது, அவற்றை அமெரிக்கா அதட்டி அடக்கிவிட்டது.


“ரஷ்யாவும் பூட்டினும் தோல்வியை ஒப்புக்கொண்டு, வாயைப் பொத்திக்கொண்டு, பின்வாங்கக் கூடுமா? அல்லது உக்ரேனை அழித்தொழிப்பதற்குரிய ஆயுதங்களைப் பயன்படுத்தி, அணுவாயுதப் போருக்கு இட்டுச்செல்லக் கூடுமா?  அதை அறிவதற்காக, போர் எனும் கொடிய சூதாட்டம் தொடர்ந்து ஆடப்படுகிறது” என்கிறார் நோம் சொம்ஸ்கி. 




அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம்


வான சூனிய வலயம் ஒன்றை ஏற்படுத்துவோம் என்பது அமெரிக்கர் சிலரின் படுதீவிர கோரிக்கைகளுள் ஒன்று. உக்ரேன் வான்பரப்பை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கை அது. 


அதற்கு ரஷ்யாவின் உள்ளே நிலைகொண்டுள்ள விமான எதிர்ப்பு பீரங்கிகளை அமெரிக்கா தாக்க நேரும். அத்தகைய தாக்குதலுக்கு ரஷ்யா பதிலடி கொடுத்தே தீரும். அமெரிக்கா அணுவாயுதப் போரில் இறங்க நேரும். நாங்கள் எல்லோரும் அழிந்தொழிய நேரும்.  


சற்று நிதானம் மிகுந்த அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம்  அந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. அந்த வகையில் அது அமெரிக்காவின் அமைதிகாப்புப் படையாக மாறியுள்ளது! எவ்வளவு காலத்துக்கு அத்தகைய கோரிக்கையை  அத்திணைக்களத்தினால்  தடுத்துநிறுத்த முடியும்? இது மிகவும் ஆபத்தான நிலைவரம். முழு உலகையும் பேராபத்துக்கு உள்ளாக்கும் நிலைவரம்.  


நான் நெடுங்காலமாக உயிர்வாழ்ந்து வருபவன். இன்று போல் என்றுமே அமெரிக்காவில் எதேச்சாதிகாரம் ஓங்கியதில்லை. இன்று உளவுப்படை வந்து, என்னை மடக்கிப் பிடித்து, சிறையில் அடைக்கும் என்று நான் கருதவில்லை. அவர்கள் என்னை ஏறெடுத்தும் பார்க்கப் போவதில்லை. ஆனால் ஊடகங்கள் எல்லாவற்றையும் இழுத்துப் பூட்டிவிடுவர்கள். 


ரஷ்யாவின் நிலைப்பாடு


இங்கு ரஷ்ய தொலைக்காட்சி பார்க்க அனுமதி இல்லை. ரஷ்ய நிலைப்பாட்டை அறிவதற்கு நாங்கள் இந்திய தொலைக்காட்சியை அல்லது அல் ஜசீராவைப் பார்க்க வேண்டியுள்ளது. இந்தளவு தணிக்கை இங்கு எந்தக் காலத்திலும் இருந்ததில்லை.  இது ஒரு விசித்திரமான, பித்துப்பிடித்த நிலைப்பாடு. 


அமெரிக்க ஆட்சியாளரின் நிலைப்பாட்டிலிருந்து வழுகுவோர் அனைவரும் படுபாவிகள், பொய்யர்கள், கயிறு திரிப்பவர்கள் என்று தூற்றப்படுகிறார்கள். நாங்கள் ஐரோப்பாவை விட அமெரிக்காவிலேயே அதிகம் தூற்றப்படுகிறோம்.


வெளிப்படையான உண்மைகளை எமது மைய ஊடகங்களில் எடுத்துரைக்க முடியாது. எனது வாழ்நாளில் இந்தளவு தணிக்கையை இதுவரை நான் எதிர்கொண்டதில்லை. இரண்டாம் உலகப் போரின் போதுகூட இவ்வளவு தணிக்கை இடம்பெற்றதில்லை.


உக்ரேனுக்கான நேட்டோவின் ஆயுத விநியோக மார்க்கங்களை ரஷ்யா தாக்கினால், அது நேட்டோ மீதான தாக்குதலுக்கு நிகராகும். அதற்கு நேட்டோ பதிலடி கொடுத்தால், போர் எனும் ஏணியில் இன்னொரு படி எட்டப்படும். 


எடுத்துக்காட்டாக கருங்கடல் வலயத்தில் எல்லா விநியோகங்களும் தடுக்கப்பட்டால், வெளியுலகிற்கு உணவும், உரமும் கிடைக்காமல், கோடிக்கணக்கான மக்கள் பட்டினி கிடந்து உயிர்துறக்க நேரும். 


பொருளாதாரத் தடைகளை நீக்கி உணவு, உர வகைகளைக் கப்பல்களில் ஏற்றிச்செல்லும் யோசனையை ரஷ்யா முன்வைத்துள்ளது. ஆனால் அமெரிக்க மைய ஊடகங்கள் அதை வெளியிடவுமில்லை, கருத்தில் கொள்ளவுமில்லை. ரஷ்யாவின் யோசனையை அமெரிக்கா பொருட்படுத்தவே இல்லை. அவ்வளவு தூரம் இங்கு எதேச்சாதிகாரத்தின் பிடி இறுகியுள்ளது.


அமெரிக்காவின் ஆயுத உதவி

  

ரஷ்ய போர்க்கப்பல்களை மூழ்கடிக்கும் ஏவுகணைகளை உக்ரேனுக்கு அனுப்பிவைக்க அமெரிக்கா எண்ணுவதாகத் தெரிகிறது. ஏற்கெனவே ரஷ்யாவின் முன்னணிப் போர்க்கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டுவிட்டது. அதற்கு ரஷ்யா இன்னும் பதிலடி கொடுக்கவில்லை. 


இன்னும் செப்பநுட்பமான ஏவுகணைகளையும், படைக்கலங்களையும் அமெரிக்கா அனுப்பிவைக்கலாம். அதற்கு ரஷ்யா ஒன்றில் நன்றி தெரிவிக்கலாம்; அல்லது பதிலடி கொடுக்கலாம். அணுவாயுதப் போர் மூளலாம். நாங்கள் அழிந்தொழியலாம். 


“வணிகக் கப்பல்கள் ரஷ்ய முட்டுக்கட்டைகளை தகர்த்தெறிவதற்கு ஏதுவாக அமெரிக்க போர்க்கப்பல்கள் அவற்றுடன் கூடிச்செல்ல வேண்டும்” என்று Wall Street Journal எழுதியுள்ளது! அது சர்வதேயச் சட்டத்துக்கு அமைவான நடவடிக்கை என்றும் அது வலியுறுத்தியுள்ளது! 


அதன் விளைவைக் காண நாங்கள் உயிருடன் இருக்கப் போவதில்லை. இது பித்துப்பிடித்தவர்களின் பேச்சென்று சொன்னால், “நீ பூட்டினை ஆதரிப்பவன்; பூட்டினுக்கு விட்டுக்கொடுப்பவன்” என்று கொக்கரிக்கிறார்கள் என்று கூறி, தமது கருத்துரையைப் பூர்த்திசெய்கிறார் நோம் சொம்ஸ்கி. 

________________________________________

http://en.kremlin.ru/events/president/news/68669

https://www.youtube.com/watch?v=8Jr0PCU4m7M

No comments:

Post a Comment