தொடரும் இனச்சிக்கல் 

இஸெத் ஹுசெயின்

“ஒருபுறம் மாறுந்தோறும் மறுபுறம் மாறாத நிலைவரம்” என்று பிரஞ்சுக்காரர் கூறுவதுண்டு. எங்கள் கண்ணுக்குப் புலப்படும் மாற்றங்கள் வெறுமனே மேலோட்டமான மாற்றங்களாக விளங்கும் அதேவேளை, எங்கள் பிரச்சனை தொடர்ந்தும் நீடிப்பதைக் கருத்தில் கொண்டு பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் ஒரு கட்டுரை எழுதினேன். எங்கள் தமிழ்-சிங்களப் பிரச்சனையை ஒரு “சிக்கல்” என்று அதில் நான் விவரித்திருந்தேன். எத்தகைய மாற்றங்கள் பிறவும் நிகழ்ந்தாலும், உள்ள பிரச்சனை மாற்றமின்றித் தொடர்வதைக் குறிப்பதற்கு உகந்த சொல் அது என்பது வெளிப்படை. ஆதலால், “சிக்கல்” என்னும் சொல் அண்மைக் காலத்தில் பெரிதும் பரவலாக எடுத்தாளப்பட்டு வந்துள்ளது. ஒரு மாபெரும் மாற்றம் எனும்படியாக முப்பதாண்டுப் போர் இங்கு முடிவுக்கு வந்துள்ளது. அதைவிட மாபெரும் மாற்றம் எனும்படியாக தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு தீர்க்கமான, திட்டவட்டமான தோல்வி நேர்ந்துள்ளது. இனி எங்கள் இனப்பிரச்சனை வெகுவிரைவில் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை ஓங்குவதற்கு அது வழிவகுத்தது. எனினும் அது மாற்றமின்றியே தொடர்கிறது.

அதேவேளை, மாற்றமும் நிகழ்ந்து வருகிறது என்பது உண்மையே. அதற்கு நல்ல வரலாற்றுச் சான்று உண்டு என்பதில் ஐயமில்லை. எனினும் இங்கே ஒரு கேள்வி எழுகிறது: இனப்பிரச்சனையில் நாங்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவது எங்ஙனம்? “சிக்கல்” என்னும் சொல்லுக்கு அகராதி முன்வைக்கும் வரையறை, அதற்கு விடைகாண உதவக்கூடும்: “ஒரு குழப்பக் குவியல்; சிக்கலான (குறிப்பாக அரசியல் சார்ந்த அல்லது திடீர்த்திருப்பங்களுடன் கூடிய) நிலைவரம்” என்பது அதன் பொருள். அத்தகைய சிக்குப்பாடுகள் அனைத்துடனும் ஒருங்குசேர்த்து விளங்கிக்கொள்ள முடியாவாறு குழப்பமளிக்கும் பிரச்சனை அது என்பதால், அது மாற்றமின்றி, தீர்வின்றித் தொடர்கிறது என்பதை இது உணர்த்துகிறது. எனினும் சிக்கலைத் தீர்க்கும் அணுகுமுறை ஒன்று இருக்கிறது: அச்சிக்கலுடன் தொடர்புடைய குழப்பம், சிக்குப்பாடுகள் முழுவதன் அடிப்படைகளையும் கண்டறியும் அணுகுமுறையே அது.

இங்கு நாங்கள் ஒரு பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது: எங்கள் அடிப்படைகளாக அமைபவை, உங்கள் அடிப்படைகளாக அமையாது போகலாம். தமிழ் மக்களால் அடிப்படைகளாக ஏற்றுக் கொள்ளப்படுபவை, எத்தகைய வாதங்களுக்கும் இடங்கொடுக்காத அடிப்படைகளாக ஏற்றுக் கொள்ளப்படுபவை சிங்கள மக்களால் அடிப்படைகளாகவே ஏற்கப்படாதவை ஆகலாம். இங்கு வேறொரு கேள்வி எழுகிறது: இனப்பிரச்சனையின் அடிப்படைகள் எவை என்பதைத் தீர்மானிப்பதில் நீதிபதியாக அல்லது நடுத்தீர்ப்பாளராகச் செயற்படுபவர் யார்? இது கோட்பாடு சார்ந்த வினா அல்ல. நடைமுறை அரசியல் சார்ந்த வினா இது. ஆதலால் எமது விடையும் நடைமுறைக்கு அமைய வேண்டியுள்ளது.  அதற்கு நான் இறுக்கும் விடை: சர்வதேய சமூகமே நீதிபதியாக அல்லது நடுத்தீர்ப்பாளராகச் செயற்பட வேண்டியுள்ளது. எனது விடை கண்டு சில வாசகர்கள் வெகுண்டெழக்கூடும்; அவர்கள் அமர்ந்திருந்தபடி தாமாகவே அந்தரத்தில் மூன்றடி கிளம்பக்கூடும் (ஆங்கில நகைச்சுவை எழுத்தாளர் Wodehouse அப்படித்தான் கூறியிருப்பார்). தமக்கொரு நியாயமும் பிறர்க்கொரு நியாயமும் பேசுவதில் தலைசிறந்த காவாலி, கடைப்புலிகளால் கட்டியாளப்படும் வல்லரசுகளைக் கொண்ட குழுமமே இடக்கரடக்கலாக “சர்வதேய சமூகம்” என்று குறிப்பிடப்படுகிறது என்பது படுமூடரைத் தவிர ஏனைய அனைவருக்கும் தெரியும் என்பதில் ஐயமில்லை. அதேவேளை “சர்வதேய சமூகம்” என்னும் பதம் செல்லுபடியாகத்தக்க விதத்திலும் பயன்படுத்தப்படுவது கண்கூடு. ஐ. நா. வில் அங்கம் வகிக்கும் நாடுகள் அனைத்தையும் அது குறிக்கிறது; அந்த அங்கத்துவத்தின் மூலம் ஐ. நா. பட்டயத்தில் பொறிக்கப்பட்டுள்ள நியமங்களையும், விழுமியங்களையும், மனித உரிமைப் பிரகடனங்களையும், சட்டப்படி பிணிக்கும் ஒப்பந்தங்களையும் கடைப்பிடிக்க உறுதிபூண்ட அங்கத்துவ நாடுகளையும் அது குறிக்கிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவானதற்குப் பிற்பட்ட தசாப்தங்களில் சர்வதேய சமூகம் மனித உரிமைகளுக்கும் மக்களாட்சிக்கும் மேன்மேலும் பெறுமதி அளித்து வந்துள்ளது என்பது இக்கட்டுரையின் நோக்கத்தைப் பொறுத்தவரை மிக முக்கிய விடயம். ஆகவே மனித உரிமை நியமங்களுக்கும் மக்களாட்சி நியமங்களுக்கும் எங்கள் அடிப்படைகள் எவ்வளவு தூரம் உடன்படுகின்றன அல்லது முரண்படுகின்றன என்பதை வைத்தே அவை எடைபோடப்படும்.

இனப்பிரச்சனையின் அடிப்படைகளை எங்கள் தமிழ் மக்கள் எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதை இனி நான் எடுத்துரைக்கப் போகிறேன். இலங்கையில் சிங்கள மக்கள் வாழ்ந்து வந்துள்ள காலம் முழுவதும் அல்லது அதனைவிட நீண்ட காலத்துக்கு தாங்களும் இங்கு வாழ்ந்து வந்துள்ளதால், சிங்கள மக்களைப் போலவே தாங்களும் இலங்கைத் தேசிய ஆள்புலத்தின் தொல்குடிமக்கள் என்பதை தமிழ் மக்கள் வலியுறுத்துகிறார்கள். அவர்கள் பல நூற்றாண்டுகளாக யாழ்ப்பாண அரசைக் கொண்டிருந்தவர்கள். எது எப்படியாயினும், வடக்கு-கிழக்கில் நன்கு நிலைபெற்ற பாரம்பரிய தாயகம் கொண்டவர்கள் அவர்கள். அதாவது அவர்களுக்கொரு தாயகம் உண்டு. அதன் அடிப்படையில் தாங்கள் (இலங்கைவாழ் முஸ்லீங்களைப் போல் வெறும் சிறுபான்மையோர் அல்லர்), தேசிய சிறுபான்மையோர் என்பதை அவர்கள் வலியுறுத்துகிறார்கள். அதன் அடிப்படையில் ஐ. நா. பட்டயத்திலும், ஐ. நா.வின் வேறு சட்ட ஆவணங்களிலும் பொறிக்கப்பட்டுள்ள சுயநிர்ணய உரிமையை (self-determination) அவர்கள் கோருகிறார்கள். சுயநிர்ணய உரிமை என்பதற்கு, தனியரசு (separate state) அமைக்கும் உரிமையை அவர்களிடமிருந்து களையமுடியாது என்றும், அதனை ஏற்கத் தவறினால், அக சுயநிர்ணய உரிமை (internal self-determinationநெறிக்கமைய அவர்களுக்கு பரந்தளவு தன்னாட்சி (autonomy) உரிமை உண்டு என்றும் பொருள்கொள்ளப்படுகிறது. அரசாங்கத்தை அடிமட்ட மக்களிடம் கொண்டுசேர்ப்பிப்பதே தற்கால மக்களாட்சியின் அடிப்படைப் போக்கு என்ற வகையில், அதிகாரப் பரவலாக்கம் (devolution) ஊடாகக் கைகூடக்கூடிய தன்னாட்சி என்பது தற்கால மக்களாட்சியின் அடிப்படைத் தன்மைக்கு இயைபுடையதாகிறது.

தமிழ் மக்கள் வலியுறுத்தும் அத்தகைய அடிப்படைகளில் புதிய சுழிப்பு எதுவுமில்லை. அவை பல தசாப்தங்களாக தமிழ் மக்களின் உள்ளத்தை ஆட்கொண்ட அடிப்படைகளே. அவை 1975ம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கும் முற்பட்டவை.  இனி அவற்றில் இம்மியும் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. அண்மையில் நடந்துமுடிந்த வட மாகாண மன்றத் தேர்தலில் தமிழர் தேசியக் கூட்டணி அடைந்த அமோக வெற்றியில் அது மிகவும் வெளிப்படையாகவே புலப்படுகிறது. தேர்தல் பிரசாரம் இடம்பெற்ற காலப்பகுதியில் தமிழர் தேசியக் கூட்டணி பிரபாகரனை இன்னமும் ஒரு வீரனாகக் கருதுகிறது, அது இன்னமும் ஈழத்தை நாடுகிறது என்பதற்கான அறிகுறிகளைக் கண்டு தெற்கத்தைய கடும்போக்காளர்கள் மாத்திரமல்லாது பிரதான ஊடகங்களும் பொங்கியெழுது கூக்குரலிட்டன. அதை எல்லாம் கண்டு தமிழ் மக்கள் மனங்குழம்பவில்லை. காரணம்: தமிழர் தேசியக் கூட்டணியுடன் சேர்ந்து ஒன்றில் அதிகாரப் பரவலாக்கம் அல்லது முழுப் பிரிவினை என்னும் நெறிக்கு அவர்கள் தங்களை அர்ப்பணித்துள்ளார்கள். நான்கு ஆண்டுகளாக தமிழ் மக்களை சமாதானப்படுத்துவதற்கு அரசாங்கம் பொருளாதார தந்திரோபாயத்தை நம்பியிருந்தது. பாரிய செலவில் அடிப்படைக் கட்டுமானத்தை மேற்கொள்ளும் தந்திரோபாயத்தை அது நம்பியிருந்தது. அரசாங்கத்தின் தந்திரோபாயம் படுதோல்வி அடைந்ததை நடந்துமுடிந்த தேர்தல் அம்பலப்படுத்துகிறது. மேலே நான் கூறிய அடிப்படைகளுக்கே தமிழ் மக்கள் தங்களை அர்ப்பணித்துள்ளார்கள். உண்மையில் அது விட்டுக்கொடுப்புக்கு இடங்கொடாத அறுதி நிலைப்பாடாகும். அந்த அறுதி நிலைப்பாடு இதுவே: அதாவது தமிழ் மக்கள் கோருவது கூட்டாட்சி (joint rule); தமிழ் மக்களை சிங்கள மக்கள் ஆளுவது என்பது தமிழ் மக்களுக்கு என்றுமே நிறைவு தரப்போவதில்லை.

இனப்பிரச்சனையின் அடிப்படைகள் குறித்து தமிழ் மக்களிடையே ஓர் உறுதியான கருத்தொருமை, ஏறத்தாழ ஏகமனதான கருத்தொருமை பரந்துபட்ட முறையில் நிலையூன்றியுள்ளது. ஆனால் சிங்கள மக்களிடையே இனப்பிரச்சனையின் அடிப்படைகள் குறித்து பாரதூரமான பிளவு இன்றும் காணப்படுகிறது; என்றும் காணப்பட்டு வந்துள்ளது. அவர்களிடையே நிலவும் வழமையான நிலைப்பாட்டின்படி தமிழ் மக்களின் வரலாற்றுக் கோரிக்கைகள் எல்லாம் வெறும் மண்ணாங்கட்டி; சுயநிர்ணய உரிமைக்கோ அதிகாரப் பரவலாக்கத்துக்கோ செல்லுபடியாகத்தக்க ஆதாரம் கிடையாது; அதிகாரப் பரவலாக்கம் என்பது என்றோ ஒருநாள் தனியரசுக்கு இட்டுச்செல்லும்... ஆதலால், சிங்கள மக்கள் என்றுமே அதனை ஏற்றுக்கொண்டதுமில்லை, ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை. அது அவர்களிடையே நிலவும் வழமையான நிலைப்பாடு. அது தவறான எண்ணம் என்பதை எமக்குக் கிடைக்கும் விவரம் உறுதிப்படுத்துகிறது. கடந்த காலத்தில் சிங்கள மக்கள் பரந்தளவு அதிகாரப் பரவலாக்கத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு  ஆதாரம் உண்டு.  

கடந்தகால நிலைமை எவ்வாறாகவும் இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அதிகாரப் பரவலாக்கத்தால் ஏற்படக்கூடிய தீய விளைவுகள் பற்றிய ஐயுறவு சிங்கள மக்களிடையே பரவியிருப்பதை நான் ஒப்புக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். மட்டுப்பட்ட அதிகாரப் பரவலாக்கம் கூட நேரடியாகவே தனியரசுக்கு இட்டுச்செல்வதைத் தவிர்க்கவியலாது என்று சிலர் கருதுகிறார்கள். அதிகாரப் பரவலாக்கம் எதிர்பார்க்கவியலாத படிமுறைகளை முடுக்கிவிடும் என்று கருத இடமிருக்கிறது; ஆகவே அத்தகைய படிமுறைகள் பிரிவினைக்கோ, அதனை அண்மித்த ஒன்றுக்கோ இட்டுச்செல்லக்கூடும் என்று பிறர் கருதுகிறார்கள். இரண்டில் எதுவாயினும், மிகவும் மட்டுப்பட்ட அதிகாரப் பரவலாக்கத்தை அனுமதிப்பதற்கு மாத்திரமே - அதாவது  13 + ஏற்பாட்டை விடுத்து, காணி - காவல்துறை அதிகாரங்களற்ற 13 – ஏற்பாட்டை அனுமதிப்பதற்கு மாத்திரமே - சிங்கள் மக்கள் கருத்தொருமைப்படத் தயாராக இருக்கிறார்கள். அந்த வகையில் இனப்பிரச்சனையின் அடிப்படைகளைப் புரிந்துகொள்வதைப் பொறுத்தவரை  தமிழ், சிங்கள மக்களிடையே வலுத்த வேறுபாடு காணப்படுகிறதுதமிழ் மக்கள் மிகவும் விரிவான அதிகாரப் பரவலாக்கத்தை அல்லது பிரிவினையையே கூட நாடுகிறார்கள். மாறாக, என்றுமே தமிழ் மக்களுக்கு நிறைவுதராத, மிகவும் மட்டுப்பட்ட அதிகாரப் பரவலாக்கத்தை அனுமதிப்பதற்கு மாத்திரமே சிங்கள் மக்கள் தயாராக இருப்பார்கள்.

அந்த வகையில் இனச்சிக்கல் தொடர்வதையே நாங்கள் எதிர்பார்க்க வேண்டியுள்ளது. இச்சிக்கலிலிருந்து நாங்கள் விடுபடுவது எங்ஙனம்? அதிகாரப் பரவலாக்கத்தால் ஏற்படக்கூடிய தீய விளைவுகள் குறித்து அஞ்சுவதற்கு அறவே நியாமில்லை என்பதை சிங்கள் மக்களுக்கு உணர்த்துவது மட்டுமே அதற்கான ஒரே வழி என்று நான் நம்புகிறேன். இங்கு ஓர் எளிய, நேரிய வாதம் என் உள்ளத்துள் எழுகிறது. அதனை எவரும் மறுத்துரைக்க முடியாது என்று நான் நம்புகிறேன். இரு காரணங்களால் மட்டுமே ஒரு நாடு பிரிவது சாத்தியம்: (1) ஓர் அரசாங்கம் பிரிவினையை அனுமதிக்க விரும்புவது ஒரு காரணம்; (2) ஓர் அரசாங்கத்தால் பிரிவினையைத் தடுக்க முடியாது போவது மறு காரணம். எதியோப்பியா, இந்தோனேசியா, சூடான் அரசாங்கங்கள் பிரிவினையை அனுமதிக்க விரும்பியபடியால், முறையே எரித்திரியா, கிழக்கு தீமோர், தென் சூடான் மூன்றும் தனியரசுகள் ஆயின. அத்தகைய ஆள்புலங்கள் மீது அந்நாடுகளுக்கு சட்டமுறைப்படியான உரித்துக் கிடையாது என்பதை அவை ஏற்றுக்கொண்டமை அதற்கான காரணம் ஆகலாம். நேட்டோவின் படைபலத்துக்கு சேர்பியரால் தாக்குப்பிடிக்க முடியாது போனதால், கொசொவோ தனியரசாவதை அவர்களால் தடுக்க முடியவில்லை. இலங்கையைப் பொறுத்தவரை வடக்கு-கிழக்கு மீது என்றுமே தமக்கு சட்டமுறைப்படியான உரித்து இருந்ததில்லை என்ற நியாயத்தை ஏற்று எந்த அரசாங்கமும் அந்த ஆள்புலத்தின் மீது தாம் கொண்ட இறைமையைக் கைவிட விரும்பும் என்று எதிர்பார்ப்பது அசாத்தியம். புறச்சக்தி ஒன்றுக்குத் தாக்குப்பிடிக்க முடியாது போனால் மாத்திரமே இலங்கை பிரியக்கூடும். அதாவது, வெறும் அதிகாரப் பரவலாக்கம் என்றுமே இலங்கையைப் பிரிவினைக்கு இட்டுச்செல்லாது என்பதே இங்கு முக்கிய விடயம்.

பொது அறிவின் பாற்பட்ட வினா ஒன்றை இங்கு நான் எழுப்ப வேண்டியுள்ளது: அதிகாரப் பரவலாக்கம் பிரிவினைக்கு இட்டுச்செல்லும் அல்லது அதனை மேம்படுத்தும் என்றால், பிரபாகரன் அதனை ஏன் விடாப்பிடியாக எதிர்த்து நின்றார்? அதிகாரப் பரவலாக்கம் பிரிவினையத் தடுக்கும், பிரிவினைக்கு இட்டுச்செல்லாது என்று அவர் உறுதிபட நம்பினார் என்பது வெளிப்படையாகவே புலப்படுகிறது. இந்தியா பிரிவதை இந்திய அரசு தடுத்த வரலாற்று அனுபவம் புகட்டிய பாடம் அவர் உள்ளத்தில் பதிந்திருத்தல் கூடும். இந்திய ஆள்புலத்துள் ஏறத்தாழ மூன்றிலொரு பங்கு  மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. எனவே இந்தியா என்றுமே, பிரித்தானியரின் ஆட்சியிலும் கூட, ஒரே அரசியல் அலகாக விளங்கிய வரலாறு கிடையாது. 1947ம் ஆண்டின் பின்னரே இந்தியா முற்றிலும் ஐக்கியப்பட்டது. அந்த ஐக்கியத்தைக் கட்டிக்காக்கும் ஒரேயொரு மிகமுக்கிய சாதனம் – ஒரு வலிய சாதனை – அதிகாரப் பரவலாக்கமே. ஆதலால்தான் 13A ஏற்பாட்டை இந்தியா எங்கள் மீது திணித்தது: இலங்கையிலும் ஐக்கியத்தைக் கட்டிக்காக்க அதிகாரப் பரவலாக்கமே சிறந்த வழியாக இந்தியாவுக்குத் தென்பட்டது.  

புறச்சக்தி ஒன்றுக்குத் தாக்குப்பிடிக்க முடியாது போனால் மாத்திரமே இலங்கை பிரியக்கூடும் என்று ஏற்கெனவே நான் குறிப்பிட்டேன். ஆகக்கூடிய தீர்வாக சைப்பிரஸ்-மாதிரியான தீர்வொன்றை இலங்கை மீது இந்தியா திணிக்கக்கூடும் என்று எனது கட்டுரைகள் சிலவற்றில் நான் குறிப்பிட்டுள்ளேன். முன்னர் எனது வாதங்கள் தமக்கு சற்று கற்பனாவாதங்களாகத் தென்பட்டதாகவும்,  பின்னர் அவற்றைத் தாம் கருத்தூன்றி மீள்நோக்கியதாகவும் எச். எல். டீ சில்வா (இறப்பதற்கு ஒருசில மாதங்களுக்கு முன்னர்) எழுதியதுண்டு. அதே வாதங்களை இங்கு நான் மீண்டும் கிளப்பப் போவதில்லை. மாறாக, உச்ச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயத்தை இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்: இந்தியாவை எங்கள் இனப்பிரச்சனையோடு இணைந்த ஒரு கூறாகவே கொள்ள வேண்டியுள்ளது; உண்மையில் இந்தியாவை எங்கள் இனப்பிரச்சனையின் அடிப்படைகளுள் ஒன்றாகவே கொள்ள வேண்டியுள்ளது. இந்தியா எங்கள் தமிழ் மக்கள் மீது காட்டும் அக்கறை முற்றிலும் நியாயமானதே என்பதையும் இங்கு நான் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இந்தியா எங்கள் தமிழ் மக்கள் மீது அக்கறை காட்டாவிட்டால், எஞ்சிய உலகம் எங்கள் வேலைப்பாடுகளைக் கண்டுகொள்ளப் போவதில்லை; வேண்டாத எதிர்விளைவுகள் எங்கள் அரசாங்கத்தை அணுகாத சூழ்நிலையில் எங்கள் அரசாங்கத்தால் தமிழ் மக்களை வெறுமனே வெற்றிகொள்ளப்பட்ட மக்களாக நடத்த முடிந்திருக்கும்.

இரண்டு சூழ்நிலைகளில் மாத்திரமே இந்தியா இலங்கையில் தலையிடும் என்று நான் நம்புகிறேன்: (1) தமிழ் மக்கள் இங்கு துன்புறுத்தப்படுவதால் தமிழ் நாட்டில் பாரதூரமான விளைவுகள் தோன்றுவது  அங்கு பிரிவினை இயக்கங்கள் தோன்றுவது போன்ற சூழ்நிலை ஒன்று. சர்வதேய நிலைவரம் மாறிவருவதையும், அதனால் இலங்கைக்கு நேரக்கூடிய தாக்கத்தையும் நாங்கள் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. அவற்றை எல்லாம் எங்களால் என்றுமே மிகவும் உறுதிபடக் கூறிவிட முடியாது. எடுத்துக்காட்டாக இலங்கையில் சீனாவின் செல்வாக்கு ஓங்குவதால் இலங்கை-இந்திய உறவுக்கு நேரக்கூடிய தகாத தாக்கத்தை இங்கு நான் எண்ணிப் பார்க்கிறேன். இங்கு சம்பந்தப்படும் கொள்கையின்படி, இலங்கையில் தமிழ் மக்கள் துன்புறுத்தப்படுவதால், இந்தியாவின் இன்றியமையா நலன்களுக்கு, அடிப்படை நலன்களுக்கு ஆபத்துச் சூழ்கிறது என்று கருதித் தலையிடுவது முதலாவது சூழ்நிலை. (2) எங்கள் தமிழ் மக்கள் இங்கு நடத்தப்படும் விதம் அறநியதிகளின்படி அதிர்ச்சி ஊட்டுவது, சகிக்கமுடியாதது என்று தமிழ் நாடு மட்டுமல்லாது, சர்வதேய சமூகமும் கருதுவது இரண்டாவது சூழ்நிலை. இக்கட்டுரையில் ஏற்கெனவே நான் கூறியதுபோல், எங்கள் தமிழ் மக்கள் இங்கு நடத்தப்படும் விதம் எவ்வளவு தூரம் மனித உரிமை நியமங்களுக்கும் மக்களாட்சி நியமங்களுக்கும் உடன்படுகிறது  அல்லது முரண்படுகிறது என்பதை வைத்தே எடைபோடப்படும். சர்வதேய சமூகத்தின் பரந்துபட்ட ஆதரவு தனக்கு இருக்கிறது என்று கருதினாலொழிய இந்தியா இலங்கையில் தலையிடும் என்று நான் எண்ணவில்லை.

இந்த இனச்சிக்கலிலிருந்து விடுபட ஏதாவது வழி உண்டா? ஏதோ சில சட்டங்களை இயற்றுவதை விடுத்து, ஏதோ சில நிறுவனங்களை உருவாக்குவதை விடுத்து தானாகவே மலரும் ஓர் அரசியல் தீர்வை நாங்கள் கருத்தில் கொள்வோமானால், எமக்கு ஏதாவது வழி தென்படக் கூடும். வட மாகாண மன்றம் தோற்றுவிக்கக்கூடிய வாய்ப்புகளை இங்கு நான் எண்ணிப் பார்க்கிறேன். தமிழ் மக்கள் நாடுவதை 13 ஏற்பாட்டினால் ஈடுகட்ட முடியாது என்பது உறுதி. அதேவேளை காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் துண்டிக்கப்பட்ட இன்றைய நிலையிலும் கூட அம்மாகாண வரம்பினுள் தமிழ் மக்களுக்கு அதிகமாக வழங்க முடியும். வட மாகாண மன்றத்தை நடத்துவதில் தமிழ்த் தேசியக் கூட்டணி வெற்றிபெறுவதாக வைத்துக்கொள்வோம். அப்படி என்றால், இதுவரை பெரிதும் பயன்படாத அமைப்புகளாக விளங்கும் ஏனைய மாகாண மன்றங்கள் வட மாகாணத்துக்கு ஈடுகொடுக்க முயலக்கூடும். ஆனாலும் வட மாகாண மன்றத்தின் வெற்றிக்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பு தேவைப்படும். அனைத்துக்கும் மேலாக இனவாதிகளையும் நவ-பாசிசவாதிகளையும் கட்டுப்படுத்த வேண்டியிருக்கும். தமிழ் மக்களின் வெற்றியை அவர்களால் சகித்துக்கொள்ள முடியாது. 
           ____________________________________________________________  
Izeth HussainThe Ethnic Imbroglio, The Island, Colombo, 2013-09-28, 
translated by Mani Velupillai.

No comments:

Post a Comment