ஜெனீவா சர்ச்சை
இலங்கை வெளியுறவு அமைச்சுக்கு
அம்பிகா பதிலடி
அம்பிகா சற்குணானந்தன்
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மனித உரிமைகளுக்கான உபகுழுவிடம் நான் சமர்ப்பித்த கூற்றில், பல்வேறு சர்ச்சைகளை எடுத்துரைத்தேன். அவற்றுள் பலவற்றைக் குறித்து ஏற்கெனவே துணைச்சான்றுகளுடன் எழுதியிருக்கிறேன். வெளியரங்கில் அவை கிடைக்கின்றன. வேறு குடியியற் சமூக அமைப்பினரும் செயலர்களும் பல்லாண்டுகளாக இத்தகைய சர்ச்சைகளைக் கிளப்பியும், ஆவணப்படுத்தியும் வந்துள்ளார்கள். அப்படியிருக்க, அரசாங்கம் எனது கூற்றுக்கு “ஏய்க்கும் கூற்று” என முத்திரை குத்தியுள்ளது. எம்மால் கிளப்பப்படும் சர்ச்சைகளை அரசாங்கம் அடக்கி வாசித்து வருகிறது. இது மக்களை ஏமாற்றும் முயற்சியாகவே தென்படுகிறது.
அரசாங்கம் அதன் சர்வதேய மனித உரிமைக் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக, GSP+ எனப்படும் பொதுமைப்படுத்திய முன்தெரிவுத் திட்ட ஊக்குவிப்பை ஒரு கருவியாகப் பயன்படுத்தும்படி ஐரோப்பிய ஒன்றியத்திடம் நான் வேண்டிக் கொண்டேன். அதனால் அரசாங்கம் விசனம் அடைந்துள்ளது. அது எனக்கு திகைப்பூட்டுகிறது. ஒரு நாடு அதன் மனித உரிமைக் கடப்பாடுகளை நிறைவேற்றினால் மட்டுமே பொதுமைப்படுத்திய முன்தெரிவுத் திட்ட ஊக்குவிப்பை பெற்றுக்கொள்ள முடியும். அவை இலங்கை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் கடப்பாடுகள். ஐ. நா.வில் அங்கம் வகித்து, ஐ. நா.வின் பல்வேறு பொருத்தனைகளில் ஒப்பமிட்ட இந்நாட்டின் அரசாங்கம் என்ற வகையில், மேற்படி மனித உரிமைக் கடப்பாடுகளை நிறைவேற்றுவது அதன் கடமை.
ஐரோப்பிய ஒன்றியம்
பொதுமைப்படுத்திய முன்தெரிவுத் திட்ட ஊக்குவிப்பு நியதிகளை ஒரு நாடு நிறைவேற்றத் தவறுமிடத்து, அத்திட்டம் மீள்நோக்கப்படும்பொழுது அந்த நாடு பாதிப்புக்கு உள்ளாக நேரும். அதை அரசாங்கம் ஒப்புக்கொள்ள மறுப்பது வருத்தம் அளிக்கிறது. பாதிப்புக்கு உள்ளாகும் பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை விடுத்து, தவறுகளை சுட்டிக்காட்டுவோரை அதற்கு பொறுப்பாக்கக் கூடாது.
சுதந்திர வர்த்தக வலய தொழிலாளிகள் போல், ஓரங்கட்டப்பட்ட தரப்பினருக்கு பாதுகாப்பு கோரி வாதாடுவோர் அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டி வருகிறார்கள். பொருளாதாரத்துக்கு நேரக்கூடிய பாதிப்புக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்ற தொனிப்பட அரசாங்கம் கருத்துரைத்து வருகிறது. இது குற்றச்சாட்டை திசைதிருப்பும் முயற்சியாகும்.
பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய சமூகங்ளுக்கு பாதிப்பு நேராவாறு பார்க்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. அரசாங்கம் மக்களின் நன்னலங்களை கருத்தில் கொள்ளாமல், குறைபாடான கொள்கை முடிபுகளை எடுத்தபடியால்தான் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதை அரசாங்கம் முதற்கண் ஒப்புக்கொள்ள வேண்டும்.
ஆயுத மோதலுக்கான மூலகாரணங்களை, அதாவது பாரபட்சங்கள் காட்டப்படுவதை, மறுப்பதன் மூலம், இலங்கையில் நீடித்த அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு ஆப்பு வைக்கப்படுகிறது. மூலகாரணங்கள் பற்றிய கருத்தாடலுக்கு புலிப்பரப்புரை என்று வெளியுறவு அமைச்சு முத்திரை குத்துகிறது. பல தசாப்தங்களாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை தமிழருக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தும் ஆட்சியாளரின் தந்திரோபாயத்தை கருத்தில் கொள்ளும்பொழுது, அவை துர்க்குறிகளாகவே தென்படுகின்றன.
மேற்படி கருத்தாடல் சமூக ஒற்றுமைக்கு ஆபத்து விளைவிக்கும் என்ற தொனிப்பட வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த வகையில் சர்வதேய குடியியல்-அரசியல் உரிமைகள் தொடர்பான உடன்பாடுகளை ஆயுதமாகப் பயனபடுத்தி, மாற்றுக்கருத்தை ஒடுக்கமுடியும். அரசாங்கம் பயன்படுத்தும் சொற்றொடர்கள் குடிமைச் செயலர்களிடையே, குறிப்பாக வடக்கு-கிழக்கில், அச்சத்தை தோற்றுவித்து, குடிமை வெளியை மேலும் குறுக்கிவிடும். அரசாங்கம் அளிக்க மறுக்கும் அதே வெளி அங்கு மேலும் குறுகி வருகிறது.
வெளியுறவு அமைச்சு விடுத்த கூற்றில் எனக்கு ஆபத்து விளையும் வண்ணம் என்மீது களங்கம் கற்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் கூற்று வெளிவந்த பிறகு, புலிகளுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக பொய்த் தகவல் பரப்பும் கட்டுரைகள், சமூக ஊடகங்களில் இடம்பெற்றுள்ளதாக அறிகிறேன். இனவாத கருத்தியல் கொண்டவர்களால் நான் தொந்தரவுக்கும், வன்முறைக்கும், இணைய வன்முறைக்கும் உள்ளாக வழிபிறக்கக் கூடும்.
குடியியற் சமூக அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், ஐ. நா., இலங்கை உச்ச நீதி மன்று, மனித உரிமை ஆணையம் என்பன, இந்த நாட்டில் குற்றம்புரிவோர் தண்டனைக்கு உள்ளாகாமல் தப்பிக்கொள்வதை நன்கு ஆவணப்படுத்தியுள்ளன. 2020 முதல் அரச அதிகாரிகள் புரிந்த வன்செயல்கள் வெளியரங்கமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. எனினும், இற்றைவரை ஒருசிலரே தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் காவல்துறையின் விதிமுறையற்ற கைதுகளையும், தடுப்புக் காவல்களையும், நீதிமுறையற்ற கொலைகளையும் நியாயப்படுத்துவதற்கு "போதை மருந்துகளுக்கு எதிரான போர்" எனும் சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது. அதையிட்டு இலங்கை சட்டவாளர் சங்கமும் கவலை தெரிவித்துள்ளது. போதைமருந்து விநியோகத்தையும், சர்வதேய போதைமருந்து வியாபாரத்தையும் கட்டுப்படுத்துவது முக்கியமே. ஆனாலும், மனித உரிமை நியமங்களுக்கு அமையவே அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கை ஒரு மதச்சார்பற்ற நாடென்று வெளியுறவு அமைச்சு வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் இலங்கை அரசதிபர் தனது கூற்றுகள் பலவற்றில், கதையோடு கதையாக, "சிங்கள பெளத்தர்களைப் பாதுகாப்பதே எனது தலையாய பொறுப்பு" என்றும், "அந்த மைய சமூக-பண்பாட்டுத் தளத்தினுள், இந்த நாட்டின் மேம்பட்ட பெளத்த விழுமியங்களின் அடிப்படையில் ஒன்றுபட்டு வாழ விரும்பும் மற்றவர்கள் அனைவரும் உள்வாங்கப்பட வேண்டும்" என்றும் தெரிவித்திருக்கிறார். எனது கூற்றில் நான் தெரிவித்த சிங்கள பெளத்த தேசியவாதத்தை இது புலப்படுத்துகிறது.
இன்னோர் எடுத்துக்காட்டாக, கிழக்கு மாகாண தொல்லியல் பாரம்பரிய முகாமை தொடர்பான அரசதிபர் செயலணியை சுட்டிக்காட்டலாம். அதில் பெளத்த குருமார்கள் அங்கம் வகிக்கிறார்கள். அதன் தலைவரும் ஒரு பெளத்த பிக்குவே. "ஒரே நாடு-ஒரே சட்டம்" என முழங்கும் செயலணிக்கு தலைமை வகிக்கும் ஞானசார தேரர், கொதிப்பூட்டும் பாரபட்சமான கூற்றுகளை பகிரங்கமாக வெளியிட்டு, முஸ்லீம் சமூகத்துக்கு எதிராக வன்முறையைத் தூண்டியுள்ளார். சமூக ஒற்றுமை பேணுவதில் அரசாங்கத்துக்கு கரிசனை உண்டா எனும் வினாவை அவரது நியமனம் எழுப்புகிறது.
படைமயமாக்கும் படிமுறை வேறு; காணியில் படையை நிலைநிறுத்துவது வேறு; இவை இரண்டையும் வெளியுறவு அமைச்சு குழப்பியடித்துள்ளது. படைமயமாக்கம் என்பது, குடித்துறை அமைப்புகளின் செயல்வரம்பினுள் படைத்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளாக இருந்தவை, இருக்க வேண்டியவை. படைமயமாக்கும் படிமுறையை குடியியற் சமூகமும், நானும் நுணுக்கமாகப் பதிவிட்டுள்ளோம். எமது பதிவுகளை எவரும் வெளியரங்கமாகவே பார்த்தறியலாம்.
குடியியற் சமூகத்தவர்களை அரசாங்கம் பங்காளிகளாகவே நோக்குகிறது, எதிராளிகளாக நோக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சு வலியுறுத்துகிறது. எனினும் ஐரோப்பிய சமூகத்துக்கு நான் விடுத்த கூற்றினை அது தேர்ந்தெடுத்து, கண்டித்துள்ளது. மாற்றுக்கருத்தை அரசாங்கம் சகித்துக்கொள்ளப் போவதில்லை என்பதற்கு அது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இது எனக்கு வருத்தம் அளிக்கிறது.
மேலும், குடியியற் சமூக அமைப்பினர்கள் மற்றும் செயலர்கள், குறிப்பாக வடக்கு-கிழக்கை சேர்ந்தவர்கள் பலரையும் பயங்கரவாத புலன்விசாரணைப் பிரிவு கடந்த ஆண்டு விசாரணைக்கு உட்படுத்தியது. அவர்கள் தவறிழைத்தார்கள் என்பதற்கு முதற்படியான சான்று தென்படாத நிலையிலும் கூட, அவர்கள் "வழமையான பாதுகாப்பு விசாரணைகளுக்கு" உள்ளாக்கப்படுகிறார்கள். எனவே குடியியற் சமூகத்தை தாம் பங்காளிகளாக நோக்குவதாக ஆட்சியாளர் வலியுறுத்துவது குறித்து எமக்கு ஐயமே எழுகிறது.
இந்த நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளினால் நலிபடவல்ல சமூகங்கள் வேதனைக்கும், புறக்கணிப்புக்கும் உள்ளாகி வருகின்றன. அவற்றைக் குறித்து வினா எழுப்புவதும், அவற்றுக்குப் பொறுப்புக்கூறும்படி கேட்பதும், இந்த நாட்டின் குடிமகள் என்ற வகையில், எனது உரிமையும் குடியியற் கடமையும் ஆகும். இந்த உரிமையை மதிக்கும் நாட்டையே உண்மையான சுதந்திர, குடியாட்சி நாடாகக் கொள்ளமுடியும்.
வெளியுறவு அமைச்சர் ஜி. எல். பீரிஸ்
இலங்கை வெளியுறவு அமைச்சு விடுத்த அறிக்கையில் எண்ணிறந்த விவரங்கள் தவறாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. முறைப்பாடு முன்வைப்போர் மீது களங்கம் கற்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும், செய்கைகளுக்கும் எதிரான கண்டனக் குரல்வளை நெரிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சின் கூற்றில், எனது பதவி நீலன் திருச்செல்வம் அறநிலையத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிரதிநிதி என்ற வகையிலோ, அதில் பதவி வகிப்பவர் என்ற வகையிலோ, ஐரோப்பிய சமூக உபகுழுவின் விசாரணையில் எனது கூற்றினை நான் முன்வைக்கவில்லை. மனித உரிமைகளுக்காகப் பரிந்துரைப்பவர் என்ற வகையிலேயே எனது கூற்றினை நான் முன்வைத்தேன். அதற்கும் அறநிலையத்துக்கும் எதுவித தொடர்பும் இல்லை.
____________________________________________________________________________________
Ambika hits back hard at Foreign Ministry, The Island, Colombo, 2022-02-12,
translated by Mani Velupillai, 2022-02-15.
https://island.lk/geneva-controversy-ambika-hits-back-hard-at-foreign-ministry/
No comments:
Post a Comment