2016 மார்ச் மாதம் “தமிழினி” பதிப்பாக வெளிவந்த “எழுதித் தீராப் பக்கங்கள்” ஊடாக செல்வம் அருளானந்தம் ஒரு புலம்பெயர்ந்த கதைசொல்லி என்பது பதிவாகியுள்ளது.

1981 முதல் 1987 வரையான “பாரிஸ் வாழ்க்கைதான் என் வாழ்க்கையில் சந்தோசமான காலம். நான் இளைஞனாக, கவிஞனாக, கணவனாக, தந்தையாக...வாழ்கையின் மிகமுக்கியமான கட்டங்களைக் கடந்த இடம்” என்று தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார் செல்வம். இதன் தோற்றுவாயாகிய கனடிய “தாய்வீடு” மாத இதழின் பதிப்பாசிரியர் திலிப்குமார் தனது முன்னுரையில் கூறியவாறு, இது “செல்வத்தின் எள்ளல் இழையோடும் ஆழமான அனுபவப் பதிவே.”  

இலங்கைத் தமிழர் மனமுவந்து புலம்பெயரவில்லை என்பது செல்வத்தின் ஒவ்வொரு கதையிலும் வெளிப்படுகிறது. குடும்பம், ஊர், உறவு, நாடு துறந்து அலைந்துழலும் அதேவேளை, தாம் இழந்த வாழ்வை நினைந்து வருந்தும் அவர்களுக்கு வெளியுலகில் நேரும் பட்டறிவுகளும், படிப்பினைகளும் ஏளிதச்சுவையுடன் அவரிடம் வெளிப்படுகின்றன.  

பொதுவாக பிரஞ்சு நாட்டுக்கு, குறிப்பாக பாரிசு மாநகரத்துக்கு புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழரின் தொடக்க வாழ்வில் கெட்டியாக இறுகியிருந்த ஆற்றாமையும், பாமரத்தனமும் “எழுதித் தீராப் பக்கங்கள்” ஒவ்வொன்றிலும் உருகிவழிகின்றன. புலம்பெயர்ந்த தலைமுறை பாரிசு மாநகர நிலைவரங்களை எதிர்கொண்ட விதங்களும்; தாயக, அயலக, உலக அரசியல் நிலைவரங்களைப் புரிந்துகொண்ட விதங்களும் அவற்றில் மின்னி மறைகின்றன.

கும்மிருட்டில் நாகபாம்பு அதன் இரத்தினக்கல்லை வெளியே கக்கிவிட்டு, அந்த வெளிச்சத்தில் இரைதேடுவதாக ஓர் ஐதீகம் உண்டு. அது போலவே தாயகம் என்ற இரத்தினக்கல்லின் ஒளியில் பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கப்பால் ஒரு தலைமுறை இரைதேடுகிறது:

“இனியும் என்னாலை இஞ்சை இருக்க ஏலாது. கெதியாய் ஊருக்குப் போகப்போறன்” என்றார் (அங்கிள்).
“எப்ப அங்கிள்?” என்று தட்சூண் நக்கலாய்க் கேட்டார்.
“மனுசி எழுதியிருந்தவ. பெடியள் எல்லாம் ரெடியாம். நீ பாரன் சண்டை முடிய நன் போகத்தான் போறன்” என்றார்.
தட்சூண் திரும்பக் கேட்டார்: “எந்தச் சண்டை முடிய?” (51).

***
“இந்த மார்கழி ஊருக்குப் போறன், மல்லிகாவை ஒரு வார்த்தை கேட்கிறன். சரிவந்தால் சரி, இல்லவிட்டால் இயக்கத்திலை குதிக்கிறன்” எனச் சொல்லும் கொய்யாத் தோட்டச் சந்திரன் இன்ரு வரை ஊருக்குப் போகவில்லையாம் (86).
***
“அடுத்த வரியம் தமிழீழத்திலைதான் எங்கட பொங்கல். இதுதான் பாரிசிலை நாங்கல் கடைசியாக் கொண்டாடும் பொங்கல்...” (130).
***
“பாதர், அடுத்த வருடம் நாங்கள் எல்லாம் இங்கை இருப்போமோ தெரியாது. பிரதமர் இந்திரா காந்தி முடிவு எடுத்துவிட்டார் என்று கேள்விப்படுகிறோம். நாடு கிடைச்சால் எங்களில் பலர் ஊருக்குத் திரும்பிப் போய்விடுவோம்” (133).
***
“பாபு சுருக்கமாக ஈழத்தின் அவசியம் பற்றியும், அது கொம்யூனிச நாடாக விரைவில் மலரும் என்றும் அடுத்த பொங்கல் ஈழத்தில்தான் என்றும் கூறி அமர்ந்தான்” (134).  

***
“ஈழம் எப்ப அமையும், எங்கடை துன்பங்கள் எல்லாம் எப்ப தீரும்...” (151)
***
தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்த தலைமுறையுடன் கூடவே அவர்களது குறுகிய மனப்பான்மையுடன் கூடிய சாதிபேதங்களும், பாமரத்தனமான கருத்துமுரண்பாடுகளும், வெகுளித்தனமான அரசியல் நிலைப்பாடுகளும் புலம்பெயர்ந்ததை உணர்த்தும் உரையாடல்களால் இந்நூல் நிரம்பி வழிகிறது:

அமுதன் “தமிழரின் அடிமைத்தனம் நீங்கவேணும் என்றால் முஸ்லீம், தமிழர், மலையகத் தமிழர் என்ற பிரிவினை நீங்க வேண்டும். அதைவிட யாழ்ப்பாணச் சாதி அடக்குமுறை இல்லாமல் போகவேணும்” என்றார்.

சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்தச் சற்று வயது கூடியவர் “பாரிசிலை ஆர் சாதி பார்க்கினம். அதெல்லாம் ஊரிலை தான். ஒரு உதாரணத்திற்கு நான் உங்களோடை இருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறன் தானே. ஊரிலை எவ்வளவு பெரிய ஆசாரக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான்” என்றார். 

அமுதன் திடீரென அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த பீங்கானை வேண்டினார். நாங்கள் நினைச்சோம் ஏதோ கறி போடப் போறார் என்று. அமுதன் “அண்ணே, வெளியே போங்கோ” எனக் கோபமாகச் சொன்னார். நாங்கள் “வேண்டாம், அந்தாள் வெறியிலை ஏதோ சொல்லுது. அவரை விடுங்கோ” என்று சொல்லச் சொல்ல அமுதன் தன் முடிவில் உறுதியாய் இருந்தார்.

மலையகத் தமிழர்களைக் கேவலமாகச் சொல்லும் ஒரு சொல்லைச் சொல்லிக்கொண்டு வயது கூடியவர் வெளியேறினார் (85). 
***
இன்னொருவர், “அவங்களும் வந்திட்டாங்களோ! பாரிஸ் கெட்டுப்போச்சு. கண்டவன் நிண்டவன் ஏறினவன் இறங்கினவன் இழுத்தவன்...” எனவும் சாதிப்பெயர்களும் சொல்லி, “வந்து குவியுறாங்கள். பாரிசிலை இனி இருக்கேலாது, கனடா, ஒஸ்ரேலியாதான்ரா போகவேணும்” எனச் சொல்வது என் காதில் கேட்டது (57).
***
“நான் உங்கட சாதியெல்லாம் அறிஞ்சுகொண்டு உங்களோட ஒண்டா இருந்து, சாப்பிட்டு புளங்கின்னான் தானே!” (144).
***
ரஷ்யாவில் ஆசைதீர அள்ளிக்குளித்து கீழ்மாடியை வெள்ளமாக்கி அம்மணமாகப் பிடிபடும் தறுவாயில் “இந்திரா காந்தி... நேரு... இந்திரா காந்தி” என்னும் மந்திரத்தை ஒருவர் உச்சரிக்க, இன்னொருவர் (நூலாசிரியர்) “எங்கடை வி. பொன்னம்பலமும் அடிக்கடி ரஷ்யா வாறவர். அவற்றை பேரையும் சேர்த்துச் சொல்லனடா... கண்டபடி கதையாதை. சி. ஐ. ஏ. எண்டு சைபீரியாவுக்கு அனுப்பிப் போடுவாங்கள்” என்று  அறிவுறுத்துகிறார் (21).
***
(அருள்நாதர்) சாடையாய் வெட்டியவுடன் இறைச்சியைப் பார்த்துத் திடுக்கிட்டார். “இரத்தம் ஒழுகுது. சனியன்கள் சரியாய்ப் பொரிய விடவில்லைபோல கிடக்கு. இதைக் கொண்டுவந்து வைத்தவளைக் கூப்பிடு” எனச் சத்தம் போட்டார்.

பாலன், “கொம்யூனிச நாடு. கனக்கக் கதையாதையுங்கோ” எனச் சொல்ல அருள்நாதர் “கொம்யூனிச நாடெண்டால் சரியாய்ப் பொரிக்க மாட்டாங்களோ? என்றார் (66-67).
***
 “இண்டைக்கு அமெரிக்கா பெரிய சிக்கலில் இருக்கின்றது. அதுதான்  உலகம் முழுக்க  பிரச்சினைகளை உருவாக்குகின்றது.  இலங்கையிலை ஜெயவர்த்தனாவைக் கையிலை போட்டுக்கொண்டு சோசலிச அணிக்கு பிரச்சனையைக் கொடுக்கப் பார்க்கிறது”.

ஒருவர் இடைமறித்து “அமெரிக்காவையும்  அதன் நேச நாடுகளையும்  நாங்கள் வெல்லமுடியுமா?” என்று கேட்டார்.

அவர் சொண்டுக்குள் சிரித்துக்கொண்டு “உங்களுக்கு பலது விளங்காது. அமெரிக்காவும் மற்ற பணக்கார முதலாளித்துவ நாடுகள் சிலவும் ஒன்று சேர்ந்து நேட்டொ என்று ஒரு அணியைக் கட்டியிருக்கினம். எங்கடை ஆக்கள் வார்சோ என்ற அணியை முற்போக்கு நாடுகளுடன் சேர்ந்து கட்டியிருக்கினம்... முதலாளித்துவம் சரிந்துகொண்டு போகுது... இஞ்சாலை பிலிப்பைன்ஸ் இந்தா முடியப்போகுது. கம்யூனிச ஆட்சி இண்டைக்கோ நாளைக்கோ  எண்டு இருக்கு... சோசலிச தமிழீழத்தை அடைந்து விடலாம் (136).   

1906 முதல் 13 வரை இத்தாலியில் வாழ்ந்த மாக்சிம் கார்க்கி அங்கு தனக்கு நேர்ந்த பட்டறிவுகளை “இத்தாலியக் கதைகள்” என்ற தலைப்பில் வெளியிட்டார். “இத்தாலியின் தரைவண்மை, இத்தாலிய மக்களின் வழமைகள், வாழும் பாங்கு முழுவதும் இரசியாவிலிருந்து அறவே வேறுபடுவதால், சாதாரண இரசிய வாசகர்க்கு இவை கதைகள் போலவே தென்படும். ஆதலால்தான் இவற்றை நான் கதைகள் என்று குறிப்பிடுகிறேன்” என்கிறார் கார்க்கி.

அது போலவே 1981 முதல் 87 வரை பிரான்சில் வாழ்ந்த செல்வம் அருளானந்தம் பாரிசு மாநகரத்தில் தனக்கு ஏற்பட்ட பட்டறிவுகளை சின்னஞ்சிறு கதைகளாக வெளிப்படுத்தியுள்ளார். தமது சொந்தக் கருத்துநிலைப்பாட்டை முன்வைத்து எழுதுவோரிடம் தவிர்க்கவியலாவாறு காணப்படும் “எனது நிலைப்பாடே உத்தமமானது” என்னும் பிடிவாதம் செல்வத்திடம் காணப்படவில்லை. அகவயவாதிகளிடம் காணப்படும் அத்தகைய பிடிவாதம் ஒரு புறவயவாதியான செல்வத்திடம் குடிபுக முடியாது. இனங்கள், மொழிகள், மதங்கள், கட்சிகள், இயக்கங்கள், நிலைப்பாடுகள் அனைத்தையும் ஒரே மக்களின் வெவ்வேறு முகங்களாகவே அவர் இனங்காண்கிறார்.

தமிழர் பரம்பரையில் உதித்தது குறித்து (ஓர் எள்ளலுடன்) பெருமைப்படும் அதேவேளை, பட்டினப்பாலையை (பெருமையுடன்) மேற்கோள்காட்டி பாரிசில் வெறியாடும் நண்பர்களைச் சீண்டுகிறார். இலங்கை, இந்திய, உலக அரசியல் தலைவர்களை வம்புகிழுத்தாலும் கூட, அவர்களை எங்குமே அவர் எள்ளி நகையாடவில்லை. வாசகர்களுக்கு எவர்மீதும்  வெறுப்பை உண்டாக்கும் வண்ணம் ஓர் ஆக்கம் அமையக் கூடாது என்று ஜெயகாந்தன், பி. ஏ. கிருஷ்ணன்  போன்றவர்கள் வலியுறுத்தியதை அறிந்தவர் அவர்.

தனது நண்பர்கள் ஒரு சிங்களப் பொடியனைப் பிடித்து அடிக்கத் தயாராகும்பொழுது, “எடேய், அவனை (சிங்களப் பெடியனை) விடுங்கோடா” (112) என்றும், மலையக மக்களைத் தாழ்த்திப்பேசும் பெரியவர் “வெறியிலை ஏதோ சொல்லுது. அவரை விடுங்கோ” (85) என்றும் கேட்டுக்கொள்ளும் நூலாசிரியர்  சாதிபேதம் பாராட்டுவோரை வெறும் பைத்தியக்காரர்கள் என்று வாய்க்குள் சினந்துவிட்டு அகன்றுவிடுகிறார் (57).

செல்வத்தின் யாழ்ப்பாணப் பேச்சுவழக்கை சரிவரப் புரிந்துகொள்ளும் ஜெயமோகன் “சரளமான மென்மையான  சித்தரிப்பு துயரத்தின்  கனத்தால் கவிதையாக  ஆகும் இடம் இது” என்று தனது முன்னுரையை நிறைவுசெய்வதில் வியப்புக்கிடமில்லை. ஏனெனில், “1992 இல் வெளியான இவரது ‘கட்டடக்காடு’ என்ற கவிதைத் தொகுதியே புலம்பெயர்ந்தோரது வாழ்வியல் சுமந்த முதல் கவிதைத் தொகுதி” (திலிப்குமார், முன்னுரை).   

Dubliners பற்றி ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதியதை முன்மாதிரியாகக் கொண்டு தானும் “லண்டன்காரர்” பற்றி எழுதியாகத் தெரிவிக்கிறார் சேனன். மாக்சிம் கார்க்கி தமது இத்தாலிய அனுபவங்களை எழுதியது போல, தான் பாரிசில் வாழ்ந்த கதை சொல்லுகிறார் செல்வம் அருளானந்தம். தமிழ் எழுத்துலகிற்கு நாடுகடந்த கதைசொல்லிகள் ஈந்த கொடைகளுள் அவரது “எழுதித் தீராப் பக்கங்கள்” தனியிடம் பெறுகிறது.  

மணி வேலுப்பிள்ளை, 2016-04-23.

No comments:

Post a Comment