கண்களை விற்று சித்திரம் வாங்கி 

16 ஆண்டுகள் கழிந்துவிட்டன

லயனல் பொபகே

இலங்கையில் 30 ஆண்டுகள் நீடித்த ஆயுத மோதல் 2009 வைகாசி மாதம் முடிவடைந்தது. அதை ஒரு வெற்றியாகக் கொண்டாட வேண்டுமா? போரினால் தாக்குண்ட மக்களைத் துக்கம் கொண்டாட அனுமதிக்க வேண்டுமா? இப்படி ஒவ்வோராண்டும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

1949 முதல் வடக்கு-கிழக்குவாழ் தமிழ்மக்கள் தமக்கு ஓரளவு தன்னாட்சி நாடி விடுத்த அரசியற் கோரிக்கைக்கு இலங்கை அரசும், தேசியவாத அமைப்புகளும் மறுப்புத் தெரிவித்து வந்துள்ளன. அப்புறம் இனப்பிரச்சனை ஓர் ஆயுத மோதலாய் மாறியது. மாறிய பிறகு “பிரிவினைப் பயங்கரவாதம்” என்று அதற்கு முத்திரை குத்தப்பட்டது. 30 ஆண்டுகளாக நீடித்த போருக்கு ஒரு கொடிய படைபலத் தீர்வு காணப்பட்டது. 

அந்த அருவருப்பான காலகட்டத்தில் இடம்பெற்ற கொலைகள், காணாமல் போக்கடிப்புகள், வதைகள், உரிமை-மீறல்களுக்கு அரச ஆயுதப் படைகள், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள், பல்வேறு துணைப்படைகள்  அனைத்துமே பொறுப்பு.

 தென்னிலங்கையில் என்றுமிலாவாறு தேசியவாத-பேரினவாத அமைப்புகளின் மாபெரும் கூட்டமைப்பைக் கட்டியெழுப்பிய மக்கள் விடுதலை முன்னணி (ஜே. வி. பி.), அப்போதைய அரசுகளும், பாதுகாப்புப் படைகளும் முன்னெடுத்த போரை மும்முரமாக ஆதரித்து வந்தது. 

தேசிய மக்கள் சக்தி எனும் தனது பரந்துபட்ட அமைப்பினைக் கொண்டு எமது நாட்டையும், சமூகங்களையும் ஒருங்கிணைவை, ஒற்றுமையை, மீளிணக்கத்தை நோக்கி நகர்த்துவது ஜே. வி. பி. யின் இன்றைய பாரிய பொறுப்பாகும். அதற்கு, வெறும் வாக்குறுதிகளை அளிப்பதை விடுத்து, நாட்டின் வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு தேசிய மக்கள் சக்தி உருப்படியான நடவடிக்கைகளைத் துணிந்து மேற்கொள்ள வேண்டும்.  

நீடித்து நிகழ்ந்த கொடிய போரில் கொல்லப்பட்ட தமது குடும்பத்தவர்களை நினைந்து துக்கம் கொண்டாடுவதற்கே வடபுல மக்களை அனுமதிக்க விரும்பாத சிலர் தென்புலத்தில் இருக்கிறார்கள். அவ்வளவு தூரம்  வடக்கும் தெற்கும் இன்னமும் ஆழமாய் பிளவுண்டு கிடக்கின்றன.  

தமிழ்மக்களை துக்கம் கொண்டாடாவாறு தடுத்து நிறுத்தி அடக்கி ஒடுக்கும் உரிமை தமக்கு உண்டு என, ஆயுதப் போராட்டதை தோற்கடிப்பதில் பங்குபற்றியோர் எண்ணக்கூடும். பல சமூகங்கள் வாழும் ஒரு நாட்டில், ஒரு சமூகம் துன்பம் கொண்டாட, இன்னொரு சமூகம் இன்பம் கொண்டாட முடியுமா? 

தெற்கில் நிகழ்ந்த ஆயுதக் கிளர்ச்சிகளால் தாக்குண்டவர்கள் ஒன்றுகூடித் துக்கம் கொண்டாடி வருகிறார்களே! பொதுமக்களாகவோ, போராளிகளாகவோ விளங்கிய தமது குடும்பத்தவர்களும், நண்பர்களும் இறந்த திகதிகூடத்  தெரியாதவர்கள் வாழும் வடக்கிலும் கிழக்கிலும் தாக்குண்டவர்களுக்கு அதே வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் அல்லவா?

  ஆயுத மோதல் முடிவடைந்ததையிட்டு  நாங்கள் பலரும் மகிழ்ச்சி அடைகின்றோம். ஆயுத மோதல் முடிவடைந்ததைக் கொண்டாட எவர்க்கும் இருக்கும் உரிமையை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அதேவேளை, நாட்டுமக்கள் என்ற வகையில் சில முக்கிய வினாக்களை இனியாவது நாம் எழுப்ப வேண்டும். 

16 ஆண்டுகளாக நடந்துவரும் போர்வெற்றிக் கொண்டாட்டங்களும், போரில் மடிந்த தம்மவரை நினைவுகூராவாறு தமிழ்மக்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகளும், பிளவுண்ட சமூகங்களிடையே ஒற்றுமையையும், மீளிணக்கத்தையும், ஒருங்கிணைவையும் ஏற்படுத்த  உதவியுள்ளனவா?   

 போரில் மடிந்த பொதுமக்களையோ, போராளிகளையோ நினைந்து இரங்காவாறு, துக்கம் கொண்டாடாவாறு அடக்கி ஒடுக்குவதும், போரில் வீழ்ந்துபட்டவர்களின் கல்லறைகளை இயந்திர சாதனங்களைக் கொண்டு தரைமட்டமாக்குவதும், நாட்டை மீண்டும் ஒன்றுபடுத்தி, நீடித்த அமைதியை ஏற்படுத்த எவ்வாறு உதவியுள்ளன?

 கடந்த காலத்தில் ஆயுத மோதலுக்கு இட்டுச்சென்ற தவறுகளை ஒப்புக்கொள்ள வேண்டும். அத்தவறுகள் மீண்டும் நிகழாவாறு தடுக்க நடைமுறைப்படுத்தக்கூடிய வலிய நடவடிக்கைகளை  மேற்கொள்ள வேண்டும். ஒற்றுமையை, மீளிணக்கத்தை, ஒருங்கிணைவை நோக்கி எமது பிளவுண்ட சமூகங்களை நகர்த்துவதற்கு ஏதுவாக நடைமுறைப்படுத்தக்கூடிய சட்டப் பொறிமுறைகளை உருவாக்க வேண்டும். அதற்கு,  இன்றைய போர்வெற்றிக் கொண்டாட்டங்களைப் பயன்படுத்தி, ஒற்றுமைக்கும், மீளிணக்கத்துக்கும், ஒருங்கிணைவுக்கும் பாடுபடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே சிறந்த வழியாகும்.

ஒரு போர்வெற்றிக் கொண்டாட்டத்தில் அமைதி, மீளிணக்கம் பற்றிப் பேசும்பொழுது, போரிட்டோரின் தியாகங்களை மட்டுமல்ல, போரின் நீடித்த தாக்கங்களைத் தணித்து, தாக்குண்டோரை ஆற்றித்தேற்றி, அவர்களைப் புரிந்துணர்ந்துகொள்ள வேண்டிய தேவையையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.   

கொண்டாட்டங்களுக்கு அப்பால், மோதலில் கற்ற பாடங்களையும்,  மோதலற்ற நல்லதோர் எதிர்காலத்தை எய்துவதற்கு அரசாங்கம் பூண்ட உறுதியையும் தேசிய மக்கள சக்தி அரசாங்கம் எண்ணிப்ப்பார்க்க வேண்டும். வீழ்ந்துபட்டவர்களையும், அவர்கள் புரிந்த தியாகங்களையும் மாண்புறுத்த வேண்டும். போரிட்டோருக்கும், அவர்களது குடும்பங்களுக்கும், சமூகங்களுக்கும்  நேர்ந்த வேதனை, மெய்வருத்தம், இழப்புகள் அனைத்தையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.   

வேறு வழியில்லை என்று எண்ணி ஆயுதம் ஏந்தித் தோற்றுப் போனவர்களின் வேதனையையும் ஒருகணம் பகிரவேண்டிய தருணம் இது. எல்லாத் தரப்புகளுக்கும் நேர்ந்த உயிரிழப்புகளையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். மோதலினால் ஆட்களுக்கும், சமூகம் முழுவதற்கும் விளைந்த தாக்கத்தையும் எண்ணிப்பார்க்க வேண்டும். நல்லதோர் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் வண்ணம் அமைதி, நீதி, ஒத்துழைப்பு என்பவற்றை வலியுறுத்த வேண்டும். பகைவர்களாய் செயற்பட்டிருக்கக் கூடியவர்களை மன்னித்து, புரிந்துணர்ந்து, ஆற்றித்தேற்றும் உளப்பாங்கை ஊக்குவிக்க வேண்டும். அதேவேளை, எதிர்காலத்தில் மோதல்கள் நிகழாவாறு தடுத்து, அமைதிமிகுந்த நாட்டைக் கட்டியெழுப்பும் வண்ணம் நம்பிக்கையையும் மனவுறுதியையும் ஊட்ட வேண்டும். 

இத்தகைய ஒரு நாளில், போரின் சிக்குப்பிக்குகளை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். போர் என்பது ஆயுதப் படைகளும், குழுமங்களும் புரியும் வெறும் மோதல் அல்ல; மனிதருக்கு நேரும் அதிரடிகளும், எதிர்மறை அனுபவங்களும், தாக்கங்களும் பின்னிப்பிணைந்ததே போர் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  

அரவணைக்கும் மொழியின் முக்கியத்துவத்தை அனைவரும், குறிப்பாக அரசியல் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எதிரியை வெற்றிகொண்டதாக, அந்த வெற்றியயைக் கொண்டாடுவதாக, அல்லது வீழ்ந்துபட்ட எதிரிகளை விலங்குநிலைக்குத் தாழ்த்துவதாக, போரைக் கொண்டாடுவதாகப் பொருள்கொள்ளப்படக்கூடிய சொற்களை அவர்கள் தவிர்க்க வேண்டும். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நலம்பயக்கும் விதமாக இணக்கம், மீள்திறம், துணிவு, கருணை, வலிமை, மானுடப்பண்பு மிகுந்த குறிக்கோள் ஒன்றை வகுப்பதில் மனித அனுபவங்களை முதன்மைப்படுத்துவதே முக்கியம்.

ஓர் ஒற்றுமைப்பட்ட நாட்டை உருவாக்க நாம் பாடுபடுவதாக வலியுறுத்துகிறோம். எனவே, தேசிய மக்கள் சக்தியும், அதன் தலைவர்களும் வெற்றி-தோல்விகளின் உயர்வு-தாழ்வுகளைத் தணித்து, சமூகத்தில் காணப்படும் தேசியவாத பதற்றங்களை எதிர்கொண்டு, “பொன்னான வாழ்வையும் செழிப்பான நாட்டையும்” உருவாக்குவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டிய தருணம் இது.  

அமைதி, நீதி, மீளிணக்கம் முதலியவற்றை முதன்மைப்படுத்தும் எதிர்காலத்தை உருவாக்கும் நடவடிக்கையையும் கடப்பாட்டையும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் ஊக்குவிக்க வேண்டும். என்னதான் சொன்னாலும், கடந்தகாலத்தைப் பற்றி வெளிப்படையாகவும், நேர்மையாகவும் கலந்துரையாடுவதை ஊக்குவிக்காமல், கடந்தகாலத் தவறுகளிலிருந்து பாடம் படிக்காமல், கடந்தகால மோதல்கள் போன்ற மோதல்கள் எதிர்காலத்தில் இடம்பெறாவாறு தடுக்காமல், ஒருங்கிணைந்த நாட்டை நோக்கி நடைபயில முடியாது.  

                             ___________________________________________

Dr. Lionel Bopage, 16 Years After A Pyrrhic Victory: 

It’s Time For Reflection, Not Only Celebration, Colombo Telegraph, 2025-02-20,

translated by Mani Velupillai, 2025-05-28.